நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Tuesday, March 07, 2006

தவமாய் தவமிருந்து

"வணக்கம். வசந்தி எழுதுகிறேன். "தவமாய் தவமிருந்து" பார்த்துவிட்டுப் பலரிடமிருந்தும் பாராட்டு மழைகள். "கட்டிய கணவனின் உணர்வுகள் புரிந்து அவன் தாய் தந்தையரைக் கவனித்துக் கொண்ட மகராசி நீ உனக்கு ஒரு குறையும் வராது", "எங்க, நீயும் பெரிய மருமக மாதிரி இருந்து முத்தையாவையும், சாராதாவையும் புறக்கணிச்சிருவியோன்னு
பயந்தோம், நல்லவேளை", "சென்னைக்குப் போன உடனே நீ அழுததைப் பாத்து மனசே ஒடைஞ்சு போச்சு", "படிச்சிருந்தாலும் மாமனார், மாமியாருக்குப் பணிவிடை செய்தியே அதுவும் அவ்வளவு அடக்கமா" இதுபோலவும் இன்னும்
பலவும் வந்தவண்ணம் உள்ளன எனக்கு. புன்னகைத்துக் கொள்கிறேன். நூறாண்டுகளின் படிகளில் ஏறிவந்திருந்தாலும் இங்கு
வசந்திகள் குறித்து சமூகம் வைத்திருக்கும் எதிர்பார்ப்புகளை எண்ணி. அந்த மூன்று மணி நேரத்தில் வாழ்வைத் தொடங்கி முடித்த ஒரு தகப்பன் குடும்பத்தில் நான் வந்துபோகும் காட்சிகளில் நான் பேசுகிற காட்சிகள் மிகக்குறைவு. என் மௌனங்களை "அடக்கம்" என்ற அடைமொழிக்குள் அர்த்தப்படுத்தி அழகுபார்ப்பவர்கள், தந்தை மகனுக்காற்றும் நன்றியையும்,
மகன் தந்தைக்காற்றும் உதவியையுமே மாற்றி மாற்றிப் பேசுகிறவர்கள், மகள் தந்தைக்காற்றமுடியாக் கடமைகளை எப்போதாவது எண்ணியதுண்டா?

முத்தையா நல்ல தகப்பன், சாரதா நல்ல தாய், இராமலிங்கம் நல்ல மகன், வசந்திதான் நல்ல மருமகள் என்ற ஓயாத புராணத்தில் புரண்டு கொண்டிருப்பவர்களிடம், என் தந்தைக்கு நான் நல்ல மகளாயிருக்க முடியாமல்போன வலி சொன்னால் புரியுமா? காதல் உயிரியற்கை. காதலித்தோம். காமமுற்றோம். கருச்சுமந்தேன். கைவிடமாட்டாயல்லவா எனக்
கதறியபோது மணந்துகொள்ளப்பட்டேன். தாய்மையில் எனக்குத் தாயான கணவன், வறுமையிலும் அவரைவிட்டு விலகாத நான்,
நல்ல தாம்பத்யம்தான் எங்களுடையது. மகனால் அவமானங்கள் சுமந்த பெற்றோர் அருகில் வருகிறார்கள். அணைத்துக்கொள்ளப்பட்டோம். அதன்பின் துவங்குகிறது என் பயணம், முழுக்க முழுக்க இராமலிங்கத்தின் பொறுப்புக்களைப் பகிரந்தபடி, பொதிகளைச் சுமந்தபடி. இராமலிங்கத்தின் தந்தைபோலவே தனக்குத் தன் மகளால் கிடைத்த தலைக்குனிவைத்
தாடியால் மூடிக்கொண்டிருந்த என் தந்தையைப் பச்சைப் பிள்ளையைக் கையில் ஏந்தியபடி போய்ப் பார்த்ததோடு சரி. அதற்குப் பிறகு நான் அவரைச் சந்திக்கிறேனா என்பதெல்லாம் சொல்லப்படாமலே போனதற்கு நேரக்குறைபாடு காரணம் என்பது சரி. அதைவிடக் கதைக்கு முக்கியமில்லை என்பது மிகச் சரி. அதையும்விட இச்சமூகத்திற்கும் முக்கியமில்லை
என்பது மிகமிகச் சரி.

எப்போது வழங்கப்படும் எங்களுக்கான பாராட்டுப்பத்திரம்? நீளும் சிறகுகளைக் கத்தரித்துக்கொண்டு எங்களுக்கெனத் தயாரிக்கப்பட்ட கூண்டுகளுக்குள் அமர்ந்துகொள்ளும்போதுதானே? அன்னியன் இருப்பிடத்தில் இருந்ததால் தேய்ந்துபோன கற்பைக் கணவன் சொன்னவுடன் கனலில் இறங்கிப் புதுப்பித்துக் கொடுத்தால்தான் இங்கு சீதைக்கு இடப்படும் சிம்மாசனம்.
நடுத்தெருவில் விட்டுவிட்டோடும் கோவலனுக்காகக் கண்ணீர் மல்கக் காத்திருந்து, வந்தவுடன் அவன் வாழும்வழிசெய்யக்
கால்சிலம்பு கழற்றினால்தான் கண்ணகிக்குக் கிடைக்கும் இங்கு காப்பியநாயகி அந்தஸ்து. பண்பாட்டு நெறிகளின்
வரையறைப்படி பெண்களைப் பதிவிரதைகளாய் வேண்டுகிற சமூகம் சுட்டிக்காட்டிய இன்னுமொரு உதாரணம் நான்
என்பதன்றி என்னிலும் வேறு என்ன இருக்கிறது?

தன் பெற்றோருக்கு இராமலிங்கம் தான் செய்த அநீதியைச் சரிசெய்ய நினைத்தார். அவர் மதுரையில் இருந்தாலும் நான் அவர் பெற்றோரோடு இருந்தேன். நானும் அதற்குச் சம்மதித்ததைப் பெருமையோடு சொன்னார்.
முத்தையாவால் தன் முதல் பேத்திக்கு வைக்கமுடியாமல் போன பெயரை ஆசையாகத் தன் குழந்தைக்கு வைக்கட்டும் என இராமலிங்கம் ஆசைப்பட்டதற்கும் நான் மறுப்பெதுவும் சொல்லவில்லை. என் தந்தையும் தன் மகள் வயிற்றில் பிறக்கும் குழந்தைக்காக ஏதேனும் பெயர் யோசித்திருந்திருப்பாரோ? இருந்தாலும் இப்போது மகள் இன்னொரு வீட்டு மருமகள் அல்லவா? எதற்கு வம்பு?

மதுரையில் எங்கள் இரண்டு பேருக்கும் வேலைகிடைத்தபின் இராமலிங்கத்தின் அடுத்த ஆசை துளிர்விட்டது.
நியாயம்தானே? தன்னை வளர்த்து ஆளாக்கிய வயதான தாய் தந்தையரை மகன் தன்கூட வைத்துக்கொள்ள நினைப்பது தவறா
என்ன? நான் அதைப் புரிந்துகொண்டு வேலைக்குப் போகும் அவசரத்திலும் மாமனாருக்குக் காபி கலந்து கொடுத்துச் செல்வதையும்கூட விட்டுவிடாமல் காட்டி என்னை ஒரு சரியான மருமகளாய்ப் பெருமைப்படுத்தி விட்டார்கள். வேகமான எங்கள் வாழ்வின் வளர்ச்சி ஓடும்போதும் புகுந்த வீட்டில் எனக்கான கடமைகளைச் சரியாகவேதான் செய்துகொண்டிருந்தேன்.
அத்தை மரணத்திற்குப் பின் தனியாக இருக்கும் மாமாவுடன் குழந்தைகளின் விடுமுறையைக் கழிக்க, நினைத்தவுடன் விடுப்பு
எடுத்துச் செல்லும் வசதியான வேலைதான் எனக்கு. கடைசியில் அடிபட்டவுடன் அவரை மருத்துவமனையில் சேர்க்கும்வரை
காதலித்த இராமலிங்கத்தின் காரியங்கள் யாவிலும் கைகொடுத்த திருப்தியுடன் விடைபெற்றுக்கொண்டேன். இந்தத்
திருப்தியும், கணவனின் வெற்றிக்காக ஓடிஓடி உழைத்ததற்காக சில மகுடங்களும் பெற்றுக்கொண்ட எனக்கு என் பக்கத்து
உணர்வுகளைச் சொல்லும் வாய்ப்புகள் வழங்கப்படாமலே போனது இயல்பானதுதான். ஆண்டாண்டுகளாக கோடானுகோடி
வசந்திகளுக்கும் இயல்பாக நடந்துகொண்டிருப்பதுதானே எனக்கும்? இராமலிங்கங்களின் வெற்றிகள் கட்டப்படுவது
எப்போதும் வசந்திகளின் தியாகங்கள் மீதுதானே? என் ஜன்னலுக்கு வெளியே ஒலித்துக்கொண்டிருக்கும் "வாழ்க பெண்மை!
வெல்க தாய்மை!" என்ற எங்கள் காதுகளைச் செவிடாக்கும் உங்கள் வழமையான கோஷங்களை இனியும் கேட்க மனமின்றி
இக்கடிதத்தை முடித்து எழுகிறேன் வசந்திகளின் வாழ்வுக்கென்று புலரும் ஒரு பொழுதைத் தேடி".
- வசந்தி-

ஒரு போராளியாக வாழ்வில் வெற்றி பெற்ற மனிதர் என்ற முறையிலும், தமிழ்சினிமாவில் வியாபார நோக்கங்கருதி வெறும் ஜரிகைக் காகிதங்களைக் கடைவிரித்திருப்பவர்களுக்கு மத்தியில் உண்மையான ரோஜாவுக்காக ஒரு பூ நாற்றைப் பதியனிடுகிறவர்களில் ஒருவர் என்ற முறையிலும் இயக்குனர் சேரன் மீது எனக்கு நல்ல மரியாதை உண்டு. ஆனாலும்
அவையெல்லாம் "தவமாய் தவமிருந்து" படம் பார்த்தபின் என்னுள் தொடரும் கேள்விகளிலிருந்து என்னை விடுவிக்கவில்லை.
பொதுவாய், உறவுகளின் இழைகளில் பிணைக்கப்பட்டுக் கிடக்கும் நம் வாழ்க்கையைப் பெரும்பாலான நேரங்களில் அவற்றின்
மூலம் விளையும் உணர்வுகள்தான் கொண்டு செலுத்துகின்றன என்பதை ஒப்புக்கொண்டும், அவற்றை மட்டுமே மையமாக
வைத்து வேற்ந்தக் கலப்படமும் இல்லாமல் இன்றைய சூழலில் ஒரு முழுநீளப் படத்தை எடுத்து வெல்வது சாதனைதான்
என்பதை ஏற்றுக்கொண்டும்தான் இப்பதிவை எழுதுகிறேன் என்பதால் இதை வாசிப்பவர்களால் என் புரிந்துகொள்ளலின் அடிப்படை பரிகசிக்கப்படாது என்று நம்புகிறேன். "காய்ந்துகிடந்த பூமியில் தண்ணீர் பாய்ச்சியதே புண்ணியமென்பதால் ஏதோ ஒரு மூலைக்குப் போதிய நீர் போய்ச்சேரவில்லை" என்ற குற்றச்சாட்டுக்கள் கூடாதென எடுத்த எடுப்பில் கூறிவிடாமல் அது எப்போதும் நனைக்கப்படாத மூலையாகவே இருக்கிறதென்பதை உணர்ந்துகொள்ள முடியக்கூடியவர்கள் நாம் என்றும்
நம்புகிறேன்.