நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Monday, October 16, 2006

நாலையும் யோசிக்கனும்

அன்று மப்பும் மந்தாரமுமாகக் காட்சியளித்த வானத்தில் பொழுது எங்கிருக்கிறதெனத் தெளிவாகத் தெரியாமலிருந்தது. அந்த ஊரின் ஆரம்பப் பள்ளிக்கூடத்துப் புள்ளைகள் வெளியில் வந்து தண்ணிகுடிப்பதும், ஒண்ணுக்குப் போவதுமாக இருந்ததை வைத்து அது ஒரு பதினொரு மணி சுமாரான எளமத்தியான நேரம் எனலாம். ஒம்பது மணிக்குத் துவங்கும் பள்ளிக்கூடத்தில் தினமும் எளமத்தியான நேரத்துக்குத்தான் அவர்களுக்கு அவ்விடைவேளை விடப்படும். செல்லாளும் சுக்கானும் அப்போது மாதாரி வளவுக்குள் வந்துவிட்டிருந்தனர். சுத்தியும் நெறையக் கூட்டமில்லை. அண்ணந்தம்பி, அக்கா தங்கச்சி அளவுக்கே சொல்லப்பட்டிருந்தது. நாலஞ்சு பொம்பளைகளும், ரெண்டுமூனு ஆம்பளைகளும், ஆக்கிய சோத்தைப் பெரிய தட்டத்தில் கொட்டுவதும், நீளமான வாழை எலைகளை அளவுபார்த்து அரிந்து வைப்பதுமாக இருந்தனர். ஊட்டுக்கு வந்ததும் திண்ணையில் உட்கார்ந்த செல்லாள் அங்கே படலுக்கந்தப்புறம் வெளையாடிக்கொண்டிருந்த சரோசாவையும், அப்புக்குட்டியையுமே பார்த்துக்கொண்டிருந்ததை எல்லோருக்கும் காப்பி குடுத்துக்கொண்டிருந்த அவளின் மாமியார் அலகாள் கவனித்துவிட்டு அருகில் வந்தார். "அடப் புள்ளே! எந்திரிச்சுப் போயி புள்ளைகளுக்கு சோத்தப் போட்டு வையி, கண்டதையும் உன்னமு நெனச்சிக்கிட்டிருக்காம இவந்தாம் புருஷன்னு பொழைக்கோனு இனி நீயி" எனச் சொல்லிவிட்டு அவர் வேலையைப் பார்க்க நகர்ந்தார். "மூதேவி! பொழுது கெளம்பறவரைக்கும் போத்தித் தூங்கீட்டிக் கெடக்குறா. எல்லாப் பொண்டுகளும் எந்தக் காட்டுல வேலையிருக்குன்னு கேட்டுக் கேட்டு ஓடறாளுக, இவளுக்கென்ன? காலெல்லாங் காப்புக் காய்க்கத் தறி முதிச்சு சம்பாதிச்சுப் போடறான் எம்மவன்" என்று காலங்கார்த்தால கதவுக்கு முன்னால நின்னு வறுத்தெடுக்கும் தன் மாமியார்க்காரிதான் இப்படியும் பேசுறா எனப் பழைய சம்பவத்தோடு இதையும் ஒப்பிட்டுப் பாத்துக்கொண்டார் மருமகள்.

காபி குடித்துக்கொண்டிருந்த பொம்பளைகளும் அவரவருக்குத் தோனியதைச் செல்லாளுக்குச் சொல்லியபடியிருந்தனர். தன் தோழர்களுடன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தாலும் சுக்கானுக்கும் செல்லாள்மீதே கண்ணிருந்தது. "என்னத்தப் போட்டு மருவிக்கிட்டிருக்காளோ நெஞ்சுக்குள்ளெ" என்று நெனச்சாலும் அப்போதைக்குக் கிட்ட வரமுடியாமல் தள்ளியே இருந்தார். ஒரு புதுக் கல்யாணப்பொண்ணுக்கிருக்கும் எதையும் செல்லாளிடம் எதிர்பார்க்கமுடியாதென்பது சுக்கானுக்கும் தெரியும். பத்து வருஷப் பொழப்பை மறக்க மூனு மாசங்கள் நிச்சயம் போதாது. "சரி எதுவாயிருந்தாலும் ராத்திரி புள்ளைக தூங்குனாப்புறம் மடியில இழுத்துப்போட்டு ஆதரவாப் பேசித் தீத்து வெச்சுக்கலாம்" என எண்ணிக்கொண்டே பரிமாறப் பட்டிருந்த இலைக்குச் சாப்பிடப் போய்விட்டார் சுக்கானும். "அம்மா இன்னக்கி நம்மூட்டுல பொரியலு, அப்பளத்தோடவெல்லாம் சோறாம்மா?" என்று துள்ளியபடி ஓடிய சரோசாவுக்குப் பின்னால், சட்டையைத் தூக்கி ஒழுகிய மூக்கைத் துடைத்துக்கொண்டே வந்துகொண்டிருந்த அப்புக்குட்டியை எடுத்து இடுப்பில் வெச்சு அவன் மூக்கைச் சுத்தமாக்கிச் சோறூட்டக் கொண்டுசென்றார் செல்லாள்.
****************

இரண்டு வாரங்கள் ஆகியிருந்தாலும் இன்னும் கூட்டம் குறையவில்லை கடையூட்டில். அந்த ஊட்டில் பள்ளிக்கூடத்துப் பசங்களுக்கு முட்டாய் வகைகளும், அதுபோகச் சில சில்லரைச் சாமான்களும் வியாபாரம் செய்துகொண்டிருந்ததால் அதற்குக் கடையூடு எனப் பெயராகியிருந்தது. எழவு கேக்கச் சனங்கள் வருவதும், போவதுமாகத்தானிருந்தார்கள். பக்கம்பாட்டுச் சனங்கள் பொணம் ஊட்டுக்குக் கொண்டுவரப்பட்டதுமே வந்து எடுக்கும்வரை இருந்து சென்றிருந்தார்கள். ஊரை விட்டு வெகுதூரத்திலிருந்தவர்கள் அதிலும் கொஞ்சம் தூரத்து ஒறவுச் சனங்களே இன்னமும் நாளுக்கு ஒன்றோ இரண்டோ என தெனம் வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.


செத்துப்போன தெண்டபானிக்கு ஒரு நாப்பது வயசிருக்கலாம். சந்தைக்குப் போனவர், தன் மனைவி பாப்பாத்தி சொல்லியுட்ட சமையல் சாமான்களையும், அம்மாவுக்குக் கடைவியாபாரத்துக்குத் தேவையானதையும் வாங்கிப் பெரிய மூட்டையாகப் பைக்கில் வைத்துக் கட்டிக்கொண்டு திரும்ப வந்துகொண்டிருந்தபோதுதான் லாரிமோதி இறந்துபோனார். ஏழாவதிலும், எட்டாவதிலுமாக ரெண்டு பசங்கள் அவருக்கு. மூத்தவனைவிடவும் எளையவந்தான் அப்பாவின் மரணத்தை சீரணிக்கமுடியாமல் எப்போதும் ஒரு சோகமான ஒட்டுதலோடு அம்மா பாப்பாத்தியிடமே உட்கார்ந்திருந்தான். "வெள்ளை"யும் அப்படியே. சனக்கூட்டம் குறைந்து பாப்பாத்தி தனியாகும்போது எங்கிருந்தோ வந்து அவரின் காலடியில் படுத்துக்கொள்கிறது. சோறோ, பாலோ பாப்பாத்திதான் "வெள்ளை"க்கு ஊத்துவது வழக்கம். தன் கணவன் எறந்த நாளிலிருந்து அதுக்கு எதுவும் செய்யவில்லை அவர். அதை வேறு யாரும் கவனித்த மாதிரியும் தெரியவில்லை. அன்று ரத்தினா தான் அதுக்குச் சோறுபோட்டதாகவும் ஆனால் அது திங்கவில்லையெனவும், செத்துப்போன தன் அண்ணனை நினைத்துக் கிடக்கிறதெனவும் சொல்லிக்கொண்டிருந்தார். அதைக்கேட்ட பிறகு அந்த ஈயச் சோத்து வட்டலில் ரத்தினா ஊத்தி வைத்திருந்ததை எடுத்துவந்து "வெள்ளை"யின் முன்னால் வைத்தார் பாப்பாத்தி. அண்ணாந்து அவர் மொகத்தை ஒருதரம் பாத்துவிட்டு "மியாவ்" என்றது. பிறகென்ன நினைத்ததோ வட்டலிலிருந்ததைச் சுத்தமாகச் சாப்பிட்டு முடித்தது. "இந்தச் சனியனுக்கு வேற யாரு போட்டாலும் எறங்காது, எம்பயனே போய்ச் சேந்துட்டான், இதுக்கெல்லாந்தா சோறு ஒரு கேடு" என்று தன் எட்டு மொழச்சேலையின் நீளமான முந்தானையில் கண்ணைத் துடைத்துக்கொண்டே எழுந்துபோனார் தெண்டபாணியின் அம்மா.ஒரு வருஷத்துக்கு முன் இதே மாதிரிச் சந்தைக்குப் போய்விட்டு வருகையில்தான் "நாலிட்டேரிக்கிட்டக் கெடந்தது, கண்ணுகூட முழிக்கல, பாவமாயிருந்துது எடுத்துட்டு வந்துட்டேன், இந்தா பால ஊத்தி வெச்சுப்பாரு, வெள்ள வெளேர்னு இருக்கு வெள்ளைன்னே கூப்புட்டுக்கலாம்" என்று சொல்லிக்கொண்டே இதைக்கொண்டு வந்து தன் கணவன் கொடுத்தது ஞாபகம் வந்தது தூணைப் பிடித்து நின்றுகொண்டிருந்த பாப்பாத்திக்கு. அதை நினைத்த மாத்திரத்திலேயே பத்து நாளுக்கும் மேலாய் அழுதழுது சிறுத்திருந்த அவர் கண்களிலிருந்து மீண்டும் நீர் பெருகி அவர் காலுக்கடியில் நின்றுகொண்டிருந்த "வெள்ளை"யின் மீது ஒரு துளி விழ அது மீண்டும் அவர் மொகத்தைப் பார்த்து "மியாவ்" என்றது.

தூரத்தில் மௌனமாய் நின்ற பனைமரங்களுக்கிடையான சந்துகளில் ஆரஞ்சுப் பழமாகச் சூரியன் இறங்கிக் கொண்டிருந்தது. சுனாமியே வந்தாலும் சூரியன் துக்கம் அனுசரிப்பதில்லை. தெண்டபானி செத்ததற்கும் அப்படித்தான். அதுபாட்டுக்கு எழுவதும் விழுவதுமாக இருந்தது. செத்தவருக்குப் பதினாறாவது நாள் சீர் செய்வது குறித்துப் பேச பங்காளிகளில் சிலர் கூடியிருந்தனர் கடையூட்டில் அன்று. தெண்டபாணியின் அண்ணன், தம்பி , பொறந்தவள் ரத்தினா உட்பட அங்குதான் இருந்தனர். பதினாறாவது நாளுக்குத் தாங்களும் சில மொறைகள் செய்யவேண்டியிருந்ததால் பாப்பாத்தியின் தம்பியும், தம்பி மனைவியும்கூட அந்தப் பேச்சில் கலந்துகொண்டிருந்தனர்.

"என்னப்பா, சாப்பாடு சீரு போக்குவரத்துச் செலவெல்லாம் பங்காளிக எங்க மொறை எப்பவும்போல, நீங்க உங்க பொறந்தவளுக்கு, புள்ளைகளுக்குன்னு துணிமணி எடுத்துட்டு, வேற எதுனாலும் உங்க பிரியம்போல செஞ்சுக்கலாம்" என்றார் கொஞ்சம் வயதில் பெரியவராகத் தெரிந்த பங்காளி ஒருவர் பாபாத்தியின் தம்பியைப் பார்த்து.

"நம்ம ஊதியூர் ஐயருக்கே சொல்லீரலாமாங்ணா தீட்டு கழிக்க?" தெண்டபாணியின் அண்ணனுக்குக் கேட்கப்பட்டது இந்தக்கேள்வி இன்னொரு பங்காளியிடமிருந்து.

"ஐயரும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம். அவனென்ன எல்லாப் பொழப்பும் பொழைச்சு முடிச்சுச் செத்தானா? விமரிசையா ஐயரெல்லாங் கூப்பிட்டுத் தீட்டுக் கழிச்சுக்கிட்டிருக்க? நாமளே படப்புப் போட்டுக் கும்புட்டு அதைக் காக்காய்க்கு வெச்சுரலாம் அதுபோதும்" என்று சொல்லிவிட்டு எதற்கும் தன் அம்மாவை ஒரு முறை பார்த்தார் தெண்டபாணியின் அண்ணன். "என்னதாம் பண்ணாலும் அவன் இனி எந்திரிச்சா வரப்போறான்?" என்பதோடு நிறுத்திக்கொண்டார் அம்மாவும்.

"சொல்லவேண்டிய நெருங்குன ஆளுகளுக்கெல்லாம் நாளைக்கே சொல்ல ஆரம்பிக்கச் சொல்லி நாசுவங்கிட்டச் சொல்லீருங்க" என்றதோடு பேச்சு முடிவடையும் தருவாயில் பாப்பாத்தியின் தம்பி மனைவி தன் கணவனிடம் "நீங்களே சொல்லுங்க" என எதையோ சன்னக்குரலில் வற்புறுத்திக்கொண்டிருந்தார்.

"என்ன மாப்பளைக்கு எதோ சொல்றதுக்கிருக்கும்போலருக்கே?" பேச்சை முடித்துவைத்த நடுத்தரவயதுக்காரர் அந்தக் குசுகுசுப்புக்கும் வாய்ப்புக் கொடுத்துக் கேட்டார்.

"இல்லீங்க, பாப்பாத்திக்குச் சீலை எடுக்கறதப் பத்திப் பேசிக்கலாம்ங்கறா கண்ணா", பாதிச்சத்தத்தில் ஆரம்பித்தார் பாப்பாத்தியின் தம்பி. யாரும் பேசுவதற்கு முன் தெண்டபானியின் அம்மாவிடமிருந்து தெறித்து வந்து விழுந்தது "ஆமாமா பொறந்தவளுக்குக் கல்யாணத்துக்குப் பட்டு எடுக்கறாங்க, எல்லாம் பேசாம என்னபண்றது?"

"பட்டுந்தே எடுத்துது எல்லாந்தேம் பண்ணுச்சு, நல்லா இருந்தவங்களப் பாக்கப் பொறுக்கல கடவுளுக்கு. போனவிய போனாலும் சின்னஞ்சிறுசுக ரெண்டு இருக்குது. அண்ணிக்கும் வயசு ஒன்னும் பெரிசா ஆகிறல. இப்ப நம்ம சாதிசனத்துலயும் படிச்சவியெல்லா வெள்ளச் சீலைய உட ஆரம்பிச்சாச்சு. அதா அண்ணிக்கும் நாம சீருப் பொடவை குடுக்கைலியே கலர்ப்பொடவையக் கொடுத்தா அவங்களும் அப்படியே கட்டிக்க ஆரம்பிச்சிடுவாங்க", டீச்சர் வேலை செய்யும் பாப்பாத்தி தம்பி மனைவியை வழக்கமான நங்கயா கொழுந்தியா சச்சரவுகளையெல்லாந் தாண்டியும் இப்படிப் பேசத் தூண்டியது படிப்பென்று மட்டுஞ் சொல்லிவிடமுடியாது. ஒரு விதவைத் தாய்க்கு மகளாயிருந்து பல நிகழ்வுகளைக் கவனித்து வந்ததும் அவரை அப்படிப் பேசவைத்திருக்கலாம்.

உதட்டைப் பிதுக்கியபடி வைத்துக்கொண்டு அழுவதும், மூக்கைச் சிந்துவதுமாக இருந்த தெண்டபாணியின் அம்மா மூஞ்சியை அதில் படரத் தொடங்கியிருந்த எரிச்சல் மேலும் விகாரமாக்கிக் கொண்டிருந்தது. தெண்டபாணியின் அண்ணனும் தம்பியும் எந்தப் பக்கமும் பேசாமல் நடுநிலமை காத்தனர்.

"கண்ணா சொன்னாப்புல மேக்காலத் தோட்டத்துச் சின்னத்தம்பி ஊட்டுக்காரிக்குக் கூட பங்காளிக சீருலயே வெள்ள குடுக்காம காவிக் கலருதேங்குடுத்தாங்க" வாயிலிருந்த வெத்தலை எச்சையை வாசலில் போய்த் துப்பித் திரும்பிக்கொண்டே சொன்னது ரவிக்கை போடாத கலர்ச்சீலை ஆத்தா ஒன்று.

"கெடையில கெடக்குற அய்யன் போய்ச்சேந்துட்டா நாளைக்குத் தனக்கும் பங்காளிக கலர்ச்சீலையே எடுக்கட்டுமுன்னுதே இந்தாத்தா இப்பிடிச் சொல்லுமாட்டிருக்குதுடோய்" என்று கூட்டத்தைவிட்டுத் தள்ளி உக்காந்திருந்த ரெண்டு இளவயது ஆம்பிளைகள் பேசிச் சிரித்துக்கொண்டனர்.

"டவுன்ல எப்பிடியோ பண்ணீட்டுப் போறாங்க. ஊட்டுக்குள்ளயே ஒன்னுக்கு வெளிக்குப் போக ரூம்பு கட்டிக்கிற சனங்க அது.நாம பழய காலத்துச் சீரையெல்லா முழுசா உடமுடியாது. தாலியறுத்த பொம்பளைக வெள்ளச் சீலை கட்டிக்கறதே அவங்களப் பாக்குற மச்சன் கொழுந்தனுக்குப் பாவ தோஷம் வராம இருக்கத்தான். ஆனா இப்பத்த புள்ளைக ஆசைப்படுது. ஆத்தா சொன்னாப்புல 'காவி' இல்லைனா எதோ ஒரு 'குருட்டுக் கலர்' சீலையே எடுத்துட்டாப் போவுது" பிரச்சினைக்குச் சரியாகத் தீர்ப்பு வழங்கும் தோரணையில் சொல்லி முடித்தார் ஒரு பங்காளி .

அதுக்குப் பிறகு வேறு யாரும் பேச்சை நீட்டிக்காமல் கிளம்பிக்கொண்டிருந்தனர். உள்ளே போய் மூலை அறையில் உக்காந்திருந்த பாப்பாத்தியிடம் விடைபெற்று வந்து வாசலில் நின்றிருந்த பைக்கைக் கணவன் எடுத்துச் சிறிது தூரம் கடந்த பிறகு பேசிக்கொண்டு வந்தார் பின்னால் இருந்த கண்ணாள், "எல்லாமுக்குமே மொடக்கடி பேசற சனங்க. ஊரு பாத்து உங்கக்காளக் கட்டிக்குடுத்தாங்க பாருங்க உங்க அப்பா அம்மா, நாம நல்ல கலர்ல எல்லாருங் கட்ற டிசைன்லயே எடுத்துட்டு வருவோம், மொனகறவிய மொனகீட்டே இருக்கட்டும்"
**************************


மொதநாள் இரவு பேஞ்சு முடிச்ச மழைக்குக் காலையில் அட்ரைப் பூச்சிகள் ஊர்ந்துகொண்டிருந்தன. காட்டு வேலைக்குப் போகும் சனம் கிளம்பிக்கொண்டிருந்தது. மாதாரி வளவு அடிபைப்பில் செல்லாள் கொடத்தை வைத்துத் தண்ணி அடித்துக்கொண்டிருக்க வேப்பங் குச்சியில் பல்லைத் தேய்த்துக்கொண்டே அருகில் நின்றுகொண்டிருந்தார் சுக்கான்.
"ஊட்டுலயே வாய் கொப்புளிக்காம இங்க எதுக்குப் பொறவாலயே வருவியோ காலங்கார்த்தால"

" நீ சொமந்தாந்து ஊத்தற தண்ணிய எறைச்சுத் தீக்கவேண்டாம்னுதான்" சீண்டிய செல்லாள் பதிலுக்கு மடக்கப்பட்டார்.

இந்தக் காட்சி எதையும் பார்க்காமல் வாசலைப் பெருக்கியவுடன் மகன் ஊட்டைக் கடந்து கவுண்ட வளவு ரோட்டில் நடந்துபோய்க் கடையூட்டு வாசலில் நின்றிருந்தார் அலகாள். பாப்பாத்தியின் மாமியார்தான் வெளித்திண்ணையில் உட்கார்ந்தபடி தன் தலைக்கு எண்ணெய் வைத்துக் கொண்டிருந்தார்.

"மவராசரு போய்ச்சேந்த பொறகு ஒரு மாசங் கழிச்சு ஆத்தா நேத்துதேங் கடையத் தொறந்திருப்பீங்களாட்டிருக்குது. உப்பு இல்லீங்க ஊட்டுல, ஒரு படி வாங்கீட்டுப் போலாமுன்னு வந்தனுங்க"

"இன்னாருக்கின்னபடி ஈசனிட்டபடீன்னு நமக்குக் கொள்ளி போடறவனுக என்ன அவசரமோ போய்ச் சேந்துட்டானுக, பெரிய மருமவள சின்ன மவனுக்கே கட்டிவெச்சிட்டா அலகான்னு சனமெல்லாம் பேசிக்கிட்டாங்க. கல்யாணம் முடிஞ்சும் ஒரு மாசமிருக்குமா?" கேட்டுக்கொண்டே படி நிறைய உப்பை மூட்டிப் பின் அதன் தலையைத் தட்டிக்குறைத்துக் கொண்டுவந்து அலகாளின் போசியில் போட்டார் பாப்பாத்தியின் மாமியார்.

"ஆமாங்காத்தா எம் பெரிய பயனும் உங்கூட்டுச் சாமியாட்டத்தேனுங்க. விதி முடிஞ்சுதுன்னு போய்ட்டானுங்க. இவ ஒரு சண்டி. அவனிருக்கற நாள்லயே வேல செய்யமாண்டா. ரெண்ட வெச்சுக் காப்பாத்த என்ன பண்ணுவாளோன்னு சுக்கானுக்கே பண்ணிவெச்சுட்டனுங்க. நாளைக்கு நாம கண்ணுமூடினாலுங் கவலையில்லாமப் போய்ச் சேந்துக்கலாம் பாருங்க"

"நல்லதாப் போச்சுப் போ. எப்படியோ நல்லா இருந்தாச்சரி. உங்க சாதில எப்பிடிப் பண்ணுணா என்ன? நாங்கெல்லாந்தேன் நாலையும் யோசிக்க வேண்டியிருக்குது" என்றவாறே அலகாள் தந்த சில்லரைக் காசுகளை உள்ளே எடுத்துப்போய் அதற்கென்று உள்ள டப்பாவில் போட்டுக்கொண்டிருந்தார். அங்கிருந்த அந்த வீட்டுப் பூனை "வெள்ளை" அலகாள் திரும்பிப் போகையில் அன்று எதற்கோ அவர் பின்னால் நடந்துபோனது.

Monday, October 09, 2006

வன்முறை வாழ்க்கை

"அப்சலைத் தூக்கில் போடச் சொல்லவேண்டும்" , அதுதான் தேசபக்தி. அப்படிச் சொல்லாதவர்கள் எல்லாம் தேசத் துரோகிகள் என்னும் அளவில் இப்போது சூடு பறக்கப் போய்க்கொண்டிருக்கின்றன நம் ஊர்வலங்கள். காரணங்கள் வேறுவேறானாலும் நம் ஊர்வலங்கள் ஒரேமாதிரியானவை. நரம்புகள் புடைக்க, வியர்வைகள் தெறிக்கத் தொண்டை
வலிக்கும் வேகத்தில் முழக்கங்களிட்டுச் செல்லும் ஊர்வலங்கள் ஒரு பாமர வழிப்போக்கனுக்கு எதுவும் கற்றுத் தருவதில்லை, அவற்றின் கோஷங்கள் உண்மையானவை என்று அப்பாமரனை நம்பச் செய்வதைத் தவிர. அப்படியானதொரு பாமரத் தன்மையுடன் இந்த அப்சல் விவகாரத்தை வாசித்துக்கொண்டிருக்கும் எனக்கு என் அவதானிப்புகளைக் கூர்மையாக்கும் புள்ளிகளைக் கொடுத்தவை ரோசாவசந்த் , பிரபுராஜதுரையின் பதிவுகள் மற்றும் சில நண்பர்களின் பின்னூட்டங்கள். என்றாலும் இதில் சொல்லிக்கொள்கிற அல்லது எழுதிக் கொள்கிறமாதிரியான கருத்து வடிவம் எதுவும் எனக்கு ஏற்படவுமில்லை. உன்னைய யாராவது இப்பக் கேட்டமாங்கறீங்களா? அதுவும் சரிதான்:))


ஆனால் நிகழ்வுகளை அவதானிப்பதால் தோன்றும் சில குறிப்புகளை எனக்காக எழுதிவைத்துக்கொள்ள இப்பதிவு. அப்சலின் மரணதண்டனையை நிறுத்தக் கோரியும், நிறைவேற்றக்கோரியும் அவரின் குடும்பத்தாரும், அரசியல்
தலைவர்களும் மாறி மாறிப் போய்ச் சனாதிபதியைச் சந்தித்துக்கொண்டிருக்கிற இந்நிகழ்வு "மரண தண்டனை" பற்றிய ஆய்வுகளையும், அதுதொடர்புடைய பலநாடுகளின் சட்டத்துறைசார்ந்த நேர், எதிர்மறைக் கட்டுரைகளையும் தேடிப் படிக்கும் ஆவலைத் தூண்டியிருக்கிறது. சுதந்திர இந்தியாவின் 54 ஆவது மரணதண்டனைக் குற்றவாளி அப்சல் என்று சொல்கிற செய்திகள், இதற்கு முன்னான மரண தண்டனை வழங்கப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையை அவர்களின் கடைசி நிமிட உணர்வுகள் வரை எங்காவது பதியப்பட்ட குறிப்புகள் இருந்து அறியமுடிந்தால் அவை சொல்லுகிற விடயங்கள் பல இருக்கலாம் என நினைக்கத் தூண்டுகின்றன. சுதந்திரம் அடைந்து அரை நூற்றாண்டு முடிந்து அறிவியலின் வெளிச்சத்தில் மனிதனின் ஆயுளைக் கூட்டிவிடுகிற அளவு வந்தும்கூட ஒரு மரணதண்டனைக்
குற்றவாளியைச் சாகடிக்க எத்தனையோ எளிய மருத்துவ வழிகள் இருந்தும், துடிக்கத் துடிக்கக் கொல்லும் குரூரத்தை விட்டொழிக்க முடியாதது ஏன்? என்ற கேள்வி ஒன்றும் பலரைப் போலவே எனக்கும் இருக்கிறது. இதையெல்லாவற்றையும்விட இந்த இக்கட்டான சூழ்நிலையில் சனாதிபதி அப்துல்கலாமின் மனநிலை என்னவாக இருக்கும்? ஒருவேளை ஏதேனுமொரு புள்ளியைக் காரணமாகக்கொண்டு அப்சலின் மரணதண்டனையை நிறுத்தும்
நிலைக்கு அவர் வந்தால் அவருக்குக் கிடைக்க இருக்கும் பட்டங்கள் பற்றிய காட்சி ஒன்றும் விரிகிறது. நிற்க.

அப்சலின் மரணத்தில் ஆர்வமுள்ளவர்கள் முன்வைக்கும் கருத்தாக்கமான "தீவிரவாதம்" எனக்குள் பல எண்ணங்களைக் கிளறிவிடுகின்றன. " தீவிரவாதம் அல்லது வன்முறை?" என்பதை எப்படி வரையறுக்கலாம்? எது வன்முறையை உருவாக்குகிறது? வன்முறையற்ற வாழ்க்கை என்ற ஒன்றை உண்மையில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோமா?
என்றெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கிறது மனது. அண்ணனின் கையை வெட்டி எடுத்து ரத்தம் ஒழுகக் காவல்நிலையம் கொண்டுபோன தம்பியைய்ப் பார்த்த அனுபவமும், கோவைகுண்டுவெடிப்பன்று திரும்புகிற பக்கமெல்லாம் வெடிச்சத்தம் கேட்க, எங்கிருந்தோ வந்துவிழுந்த கண்ணாடி மிதித்துக் காலில் செம்மை படர, எங்கு ஓடுகிறோம் என்ற
முடிவில்லாது காந்திபுரம் சாலைகளில் ஓடிக்கொண்டிருந்த அனுபவமும் அவற்றைக் கடந்தபோது அச்சம் தந்தன. அதன் ஈரம் உலர்ந்த பிறகோ "இவையெல்லாம் நடக்க என்ன காரணம்?" என்ற இடத்தில் கொண்டுவந்து விட்டுவிடுகின்றன. ரத்தம் பார்த்து மகிழ்கின்ற மனநிலை "தீவிரவாதிகள்" என்று சுட்டப்படும் மனிதர்களுக்குப் பிறவியிலேயே வரும் ஒன்றாகத் தெரியவில்லை. இந்த அப்சலுக்குக்கூட இளமை லட்சியம் "சிறந்த இருதய மருத்துவர்" ஆகவேண்டும் என்பதாக இருந்தது எனவும் அவர் மருத்துவக் கல்லூரியில் படித்துக்கொண்டும் இருந்தவர் எனவும் படிக்க நேரிட்டபோது மேற்சொன்ன விடயம் மேலும் கனக்கிறது. பைத்தியத்தைக் கல்லால் அடிக்கவும், தீவிரவாதியைத் தூக்கில் போடவும்
மட்டுமே தெரிந்து வைத்திருக்கும் சமூகம் அப்படியானவர்கள் உருவாவதற்கும் தன் பரப்பின் மீதான நிகழ்வுகள்தான் காரணமாகின்றன என்பதை உணர்ந்து கொள்ளும் முனைப்பிலும், அக்காரண அழிப்பிலும் கவனம் செலுத்தவும் உழைக்க வேண்டும்.

அம்மாவை விட்டுவிட்டு ஒரு பட்டாம்பூச்சிக்காக அதன் பின்னால் நீண்டதூரம் ஓடிவிடும் சிந்தனையற்ற ஒரு குழந்தையிடம்கூட வன்முறை துளிர்க்கும் சூழல் அதற்கான ஏதோ ஒன்று மறுக்கப்பட்ட இடமாக இருக்கிறது. கையில் கிடைப்பதைத் தூக்கிவீசி எதிர்ப்பைக்காட்டும் குழந்தையின் செயலை நாம் வன்முறை என்போம். அதற்கானதை நாம் மறுத்ததே வன்முறை என நினைக்கும் குழந்தை. இவையிரண்டும் சந்திக்கிற சூழலில், அக்குழந்தை தன் வன்முறையை விட்டுவிடுவதோ அல்லது தொடர்வதோ அந்தக் குழந்தையின் கைகளில் இல்லாமல் அச்சூழலின் கைகளில்தான் இருக்கிறது. தனிமனிதர்களும் "தீவிரவாதிகள்" என்று சொல்லப்படுபவர்களாக ஆவது இதன் நீட்சியாக இருக்குமோ?

இவைதவிரவும் இன்னொன்று இந்நேரத்தில் நினைத்துக்கொள்வது, மனித உயிர்களைக் கொன்றவன் மட்டுமே வன்முறையாளன் என்ற அளவுகோல். உயிரை மட்டும் விட்டுவிட்டு இன்னொரு மனிதனின் உணர்வுகளை, உரிமைகளைக் கொல்வதற்குப் பெயர் என்ன சொல்வது? அப்படிக் கொன்று அவர்களைச் சாதியின் பெயரால் தீண்டத்தகாதவர்கள்
ஆக்கி வைத்திருந்த சமூகத்தில், அவர்களை அப்படி ஆக்கியவர்களெல்லாம் வன்முறையாளர்கள் இல்லையா? கல்வியும் பொருளாதாரமும் மறுக்கப்பட்டு ஆணின் சேவகியாக மட்டும் இருக்கப் பணிக்கப்பட்டிருந்த சமூகத்தில் ஆயிரக்கணக்கான
பெண்கள் அதிலேயே மூழ்கி மடிந்தார்களே அது அவர்கள்மீதான வன்முறையில்லையா? சாதாரண மனிதனுக்கு உண்மை மறைக்கப்பட்டு அல்லது உண்மையை அறிந்துகொள்வதற்கான வாய்ப்பே மறுக்கப்பட்டுவிடும் போலிக் கருத்தியல்
வன்முறை இல்லையா? வாழ்வின் பல இடுக்குகளிலும் உட்கார்ந்து பல்லிளிக்கும் வன்முறையைக் கட்டியணைத்துக்கொண்டே வீதியில் ஆடும் வன்முறையை மட்டும் ஒழித்து விடமுடியுமா?

தீவிரவாதத்தை ஒழிப்பது என்பது அப்சல்களை அழிப்பதால் நடந்துவிடும் என்று சொல்லிவிடமுடியாது. இன்னும் சில அப்சல்களைக்கூட அது உருவாக்கிவிடலாம். அப்சல்கள் உருவாவதற்கான காரணங்களை அழிப்பதுதான் தீவிரவாதத்தை
அழிக்க உண்மையிலெயே உதவுபவையாக இருக்க முடியும். அப்சலின் மரணமோ, இருப்போ இரண்டுமே நமக்கு நிறையச் சொல்லும் வலிமையுடையவை நாம் கற்றுக்கொள்ளத் தயாராகும்போது.

Tuesday, October 03, 2006

அருக்காணியின் அரங்கம்

அருக்காணி: சுந்திரீ...அட வாவா உங்கூடப் பேசறதுக்குத்தே உன்னைய வரச்சொல்லியுட்டிருந்தெ நானு பிரேமாகிட்ட.

சுந்தரி: அப்பிடியென்ன தலபோறகாரியமாக்கு எங்கிட்ட ஒனக்கு?

அருக்காணி: அப்பிடித்தேன்னு வெச்சுக்கவே. நம்மூட்டுல செந்திலு கம்பியூட்டர் வாங்கிவெச்சதுல அப்பப்ப நானும் அதுல எதாவது படிப்பன்னு சொல்லீருக்கறனல்ல உனக்கு?

சுந்தரி: அவெஞ்சொல்லிக்குடுத்து நீயுங் கம்பியூட்டருக்குள்ள போகவெல்லாம் படிச்சதுனாலதான எனக்குங்கூட சூரியா சோதிகா கல்யாணப் போட்டாவையெல்லாங்கூட உங்கூட்டுக்கு வந்து உடனே பாக்கமுடிஞ்சுது. அதுக்கென்ன இப்போ? சோதிகா மாசமா இருக்குதுன்னு புதுசா எதாவது போட்டோக்கீது வந்துருக்குதா?

அருக்காணி: ஆமா, கல்யாணமாகிப் பத்தாவதுநாளே மருமவ மாசமாயீட்டாளான்னு கேக்கற காட்டுச் சனமாட்டவே இரு. சோதிகா கேட்டான்னா உன்னையெல்லா தாளிச்சே போடுவா. அதல்ல. இப்பத்தே இந்த வலைப்பதிவுலயெல்லாந் தமிழ்ல என்னென்னமோ எழுதிக்கிட்டிருக்கறாங்களே! அப்பிடி எழுதற நம்மூருப் புள்ளையொண்ணு நாம பேசறத அப்பிடியே அதும்பட பதிவுல போடறன்னு கேட்டுது. அதுக்குத்தே உங்கூட ஒரு கலந்துரையாடலு வெச்சு டேப்பு ரிக்காடருல பதிவு பண்ணி அந்தப் புள்ளைக்கு அனுப்பலாமுன்னு உனையக் கூப்புட்டது இப்போ.

சுந்தரி: பரவாயில்லயக்கா. நம்மூருப் புள்ளைக்கு நல்ல மனசுதேம்போ. நம்ம பேச்சையெல்லாங்கூட வலைப்பதிவுல போடுதாமா?

அருக்காணி: நல்லாச்சொன்னே நீயி, அந்தப் புள்ளையப்பத்தி எனக்குத்தெரியாதாக்கு? நாந்தே அதோட "நிறங்கள்"ங்கற பதிவயும் படிச்சுக்கிட்டுத்தேன இருக்கறனிப்போ. அந்தப் புள்ள நம்மளப் போடனுமுன்னெல்லா வந்தமாதிரித் தெரியல. ஆடிக்கொரு நாளைக்கு அம்மாவாசைக்கொருநாளைக்குப் பதிவு போடற கொஞ்சங்கூடத் துடியில்லாத புள்ளை அது.
அது உக்காந்து எழுதறதுக்குப் பதிலா நாம பேசறதப் போட்டு ஒரு பதிவு ஒப்பேத்தலாம்னு வந்துருக்குமுன்னு நெனைக்கறன் நானு.

சுந்தரி: பால் கறக்குற மாட்டப் பல்லப் புடுச்சுப் பாத்த கதையாப் பேசாதையக்கா. எப்பிடியோ நம்ம பேரெல்லாங்கூட அங்க வரப்போகுதுல்ல அந்தப் புள்ளையால?. அதையுட்டுப்போட்டு........... இப்ப நாம என்ன பேசோனும்னு சொல்லு
சீக்கிரமா, பேசிப்போட்டுப் போயிப் பொழுதோடத்துக்குச் சோறாக்கற வேலையிருக்குது எனக்கு. உனக்கென்ன ஆக்கிவெச்சுப்போட்டு அலுங்காம உக்காந்திருப்பே இந்நேரத்துக்கு.

அருக்காணி: சேரிச்சேரி, சுடுதண்ணியக் கால்மேல ஊத்துனமாரித் திரியாத நீயி. அப்பிடி உக்காரு அந்தப் பாவை மேல.காடு, ஊடுன்னு இருக்கற உங்கிட்ட எதையப் பேசுனாப் புரியும்னு ரோசனையா இருக்குது. இரு சொல்றேன், ம்ம்ம்ம்ம்ம்ம்.......இன்னைக்கு எந்தப் பதிவு படிச்சன்னா.........

சுந்தரி: ஆமாமா, நீ பெரிய கலெக்டரு பாரு. இன்னைக்கு உம்பய கம்பியூட்டரு வாங்கிக்கொடுத்தான்னு வந்துருச்சாக்குனக்கு? நாலைக்கே எம்பயனுமொண்ணு வாங்கிவெச்ச பொறகால பாரு.

அருக்காணி: பேசுபேசு, நீயுமொரு நங்கயா மொறைதான எனக்கு. நாம பேசிக்காம யாரு பேசுவா இப்பிடி.......ம்ம்ம்.....நாபகம் வந்துருச்சு இப்ப....... இன்னைக்கு எதோ "கொங்கு வட்டார வழக்கு" ன்னு மணிகண்டன்னு ஒருத்தரு எழுதுன பதிவையுமு அங்க மத்த சனம் போட்ட பதிலையுந்தான் படிச்சேன்.

சுந்தரி: கொங்கு வட்டாரம்னா நாமெல்லாம் பேசிக்கறதையா? நீ சொல்றதப் பாத்தா இந்த வலைப்பதிவுல நெறையா நல்ல காரியம் நடக்குமாட்ட இருக்குது.

அருக்காணி: இதெல்லாம் செய்யவேண்டிய நல்ல வேலதாஞ்சுந்தரீ.... ஆனாப் பாரு, இப்பத்த பசங்க புள்ளைக வெளியூரு வாழ்க்கைக்குப் போனா அங்கத்ததப் படிச்சுட்டு நம்ம வார்த்தைகள மறந்தும்போயிருது. மழை பேஞ்சா சாக்குல உள்ளாற மடிச்சுத் தலைக்குப் போடுவமே அதைய எப்பிடிச் சொல்றதுன்னு தெரியலைங்கறாங்க.

சுந்தரி: அடக் "கொங்காடை" ங்கறத மறந்துட்டாங்களா? நல்ல கதையா இரூக்குது போ. வார்த்தைக மட்டுமில்லப் பழமொழியெல்லாங்கூட எழுதி வெச்சர்றது நல்லது.

அருக்காணி: ஆமா, இந்தப் பதிவோட போன பாகத்துலகூட "போசி"ன்னாப் பாத்திரம்னு எழுதீருந்தாங்க மணிகண்டன். அதக்கூடப் பொதுவாப் பாத்திரம்னு சொல்றதவிடப் பாத்திரங்கள்ள ஒருவகைன்னு சொல்லலாம். ஏன்னா நாம ஒவ்வொரு
பாத்திரத்துக்குமே வேறவேற பேருதானே வெச்சிருக்கோம். உருளை வடிவத்துல இருக்கறதுக்குப் பேரு "போசி". அதுவே தொங்கற மாரி இருந்தா அதுக்குப் பேரு "தூக்குப் போசி".

சுந்தரி: தூக்குப் போசி தெரியாதா எனக்கு? சதிலீலாவதியில கோவைசரளா பெங்களூருல ஒரு மணிப்பாசுக் கடையில "இதென்னுங்க தம்பி எங்கூருத் தூக்குப் போசியாட்ட இருக்குது" ன்னு ஒரு மணிப்பாசத் தூக்கிக் காட்டுவாங்களே?

அருக்காணி: செரியாச் சொன்னே....... அதே மாரி நம்மகிட்ட இட்லிப் போசி, இட்லிக்குண்டா, தேக்குசா, சால்ப்பானை, காவிடிச் சொம்பு இப்பிடியெல்லாமே பாத்திரமிருக்குதே! சாப்பாட்டப் பரிமார்ற கரண்டியக்கூட "அன்னவாரி" ன்னு
சொல்லுவோம்.

சுந்தரி: என்னமோ போ. "நங்கயா" ன்னு நம்ம பொறந்தவம் பொண்டாட்டியக்கூடச் சொல்றதுண்டு. "ஏனுங்க நங்கை"ன்னு கேக்கறதே நல்லாருக்கும். இப்பெல்லாம் "அண்ணி" ஆயிருச்சு அது. எங்கூட்டுச் சின்னப் பண்ணாடிகூட இப்பெல்லாம் "வீடு" ன்னுதான் பேசுது. "ஊடு" போயாச்சு. "செவினில" ஏண்டா கைவெச்சு உக்காந்துருக்கறேன்னு கேட்டா "ஏம்மா கன்னத்துலைன்னு சொல்லத் தெரியாதா?" ன்னு கேட்டு நாவரீகம் பழகுது. இவனெல்லாந்தே நாளைக்குப் பண்ணையம் பாக்கப் போறானாக்கு? நாங்க அய்யனம்மா
இருக்கறவரைக்குந்தே.....

அருக்காணி: நீ வேற....... என்னையச் சின்னமா சின்னமான்னு கூப்புட்டுக்கிட்டிருந்த எங்கக்கா பயனொருத்தன் டிவியில "சித்தி" வந்தப்புறமா "சித்தி"ங்கறான். எல்லாம் மாறிக்கிட்டிருக்குது போ. ஆனாக்கூட உடமுடியாது நம்ம "செலவு வேகுச்சுக் கொட்டிக் கடஞ்ச கொழம்பையும், அரசானிக்காப் பொரியலையும், தட்டப்பயித்துச் சுண்டலையும்"
அமெரிக்காப் போனாலுஞ்சேரி, எங்க போனாலுஞ்சேரி.

சுந்தரி: பொழுதே உழுந்துருச்சு.... மிச்சமிருந்தா உன்னோரு நாளைக்குப் பாத்துக்கலாம். நாம்போறனக்கா. ஆமா.....இப்பிடி எதோ அரையுங்கொறையுமா நாம பேசுனதையெல்லா எப்பிடி எழுதப்போகுது அந்தப்புள்ளை? இதையெல்லாங் கேட்டுப்போட்டு நம்மளைய வார்த்தை பேசீறப்போகுது அது!

அருக்காணி: என்னமோ "அருக்காணியின் அரங்கம்" னு தலைப்பு வெச்சு எழுதறன்னு சொல்லுச்சு. வார்த்தை பேசுனாத் தெரியும்.................நாமலா போனோம் அதுகிட்ட? அது வந்துருக்குது நம்மகிட்ட அதுக்குச் சோலியாகுனுமுன்னு.

சுந்தரி: நாய் வயித்துல பொறந்தாக்கூட நட்சத்திரங்கூடிப் பொறக்கோனுமுன்னு சும்மாவா சொன்னாங்க பழமொழி? சடைகூட நேராப் பின்னத்தெரியாம ஏழுகோணையாப் பின்னற உனக்கு அடிச்சிருக்குது ஒரு யோகம்.

அருக்காணி: நீ ஒருத்தி..........நானாவது சடைதான் கோணையாப் பின்னிக்கறவ. அவங்கவுங்க அங்கங்க மனசே கோணையோட ஆடிக்கிட்டிருக்கறாங்க அவுத்துட்ட காளை மாரி. நீ பாத்துப் போ. அம்மாவாசை நாளு, தடத்துல பூச்சி,
புழுவு ஊறிக்கிட்டுக் கெடக்குங்க பாவம்.

பின்குறிப்பு:
**********
கொங்கு வட்டார வழக்குச் சொற்களைச் சேமிக்கும் முயற்சியில் உள்ள நண்பர் மணிகண்டனுக்கும், அவருக்குப் பின்னூட்டங்களில் சொற்களை வழங்கி உதவும் நண்பர்களுக்கும் நன்றி.