நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Thursday, February 18, 2010

பதின்மம்

பதின்மத்தைப் பற்றி என்ன சொல்வது?


தட்டான் பறந்த தூரத்தின் உயரமே இருந்த வாழ்வு
விண்ணில் ஏறி நிலவில் மிதந்து
எங்கும் நிற்காமல் அலைந்த கனவு

அப்பனும் ஆத்தாளும் முக்கனிச்சுவைக்கு வகுப்பெடுத்திருக்க
வேப்பங்காய்ச் சுவை விரும்பித் துடித்த மனதே குரு மற்றவர் எதிரிகள்

சிறுவனும் சிறுமியும் ஊரே அறியத் தொடுத்த அரும்புகள்
ஆணாய்ப் பெண்ணாய் விரிந்து உதிர்ந்த ரகசியப் பொழுதுகள்

உலகை உலுக்கும் அநீதிகளனைத்தையும்
பொசுக்கும் ரௌத்திரம் எனதெனச் சொல்லி
மருதாணி சிவக்கா ராத்திரிக்காக
அழுது சிவந்த கண்களில் மிஞ்சிய
வீரப்புரட்சியின் வெம்மைச் சுவடுகள்

சைக்கிள் ஓட்டிய சாகசத் தழும்புகள்
நீச்சலில் உடைத்த முழங்கால் சில்லுகள்
கவிஞராகி, எழுத்தாளராகி ஓவியருமான
காகிதக் கற்றைகள்
எல்லாம் உள்ளன பதின்மத்தின் சாட்சிகளாய்
இன்னும் சொல்லா நிகழ்வுகளின் சொற்ப ரணங்களும்

கொட்டிய அருவி நதியானால் என்ன
இசை இன்னும் இருந்துகொன்டுதானிருக்கிறது
அதற்குரிய சுருதியோடு
இந்த இசை இருக்கும்வரை இருக்கும் வாழ்வும்.

பின்குறிப்பு:-

அழைத்த தெக்கிக்காட்டானுக்கும், ஆரம்பித்த முல்லைக்கும் கடும் கண்டனங்கள்:))

Thursday, February 04, 2010

சூரியனைக் கொன்ற இரவு
கடிகார முட்களுக்கு நடுவே எண்களை எண்ணிக்கொண்டிருக்கும்
நாளின் எந்த இடைவெளியிலும்
இயல்பாய் என் நினைவுகளில் இறங்குகிறதுன்பாதை
பொட்டல் வெளியெங்கும் கருவேலமரங்களெனப்
பசுமை தொலைத்த இக்கோடையில்
மழைக்கான நம்பிக்கையாய்ச் சித்திரைப்பூச்சி நீ
உன் கத்தல் காது நிறைக்கிறது
செடிகளையல்ல மரங்களையே தொட்டிகளில் வளர்த்துக்
காட்சிப்படுத்தி விடமுடியும் வீதிகளில்
நீ கொண்டலையும் வனக் கனவுகள்
சிதறி விழுகின்றன என் விரித்த கைகளில்

போர் தொடுப்பதான பாவனையில்
ஒவ்வொரு சந்திப்பிலும் கடந்துபோதல் எதற்கென
பலாப்பழத் தோல் பிளந்து
சொல்லிவிடலாம்தான் நேசத்தை
பிறகு புலரும் பொழுதொன்றில்
உன் மாயச்சந்துகளிலிருந்தும் நீளும்
எசமானக் கயிறொன்று
என்னை அடிமையாய்க் கேட்கும்
வேண்டாம் இப்படியே இருப்போம்
சூரியனைக்கொன்ற இரவில்
நட்சத்திரங்கள் ஒளிர்ந்துகொண்டிருக்கின்றன