ஒரு வாழ்த்து!!
அமெரிக்கா வந்து வாழவேண்டிவந்தபோது நீச்சல் தெரியாமல் குளத்தில் குதித்தது போல்தான் தொடங்கின அந்நாட்கள். பல நேரங்களில் வெறுமையை விதைத்த இவ்வாழ்விடம் சிலநேரங்களில் அதன் அருமையையும் உணர்த்தியது. கணவர் வேலைக்குச் சென்றுவிட கணிணி, புத்தகங்கள் இவைதாண்டியும் தொடர்பென்றால் இங்கிருக்கும் சில இந்தியத்தோழிகள் என்று போய்க்கொண்டிருந்த நேரத்தில், முதன்முதலாய் முழுக்க முழுக்க அறிமுகமற்ற அந்நியர்களுடன் (மருத்துவரைத் தவிர) மூன்றுநாள் வாழும் நிலை மருத்துவமனையில் பிரசவத்திற்குச் சேர்ந்தபோது ஏற்பட்டது. ஊரிலிருந்து உதவிக்கு யாரும் வரமுடியாது விசா பிரச்சினை. தவிப்போடு அருகில் கணவர். சுகப்பிரசவம் என்று 20 மணிநேரம் காத்திருந்து பின் கணநேரத்தில் குழந்தையை ஆபத்தில்லாமல் காப்பாற்ற அவசரகதியில் அறுவைசிகிச்சை. வலி புரட்டிப்போட்டது உடலை மட்டுமின்றி மனதையும். அந்நேரத்தில் பொங்கிய கண்ணீரைத் துடைத்துக்கொண்டே குழந்தையைத் தூக்கியது மட்டும்தான் தெரியும். அசதியும் மருந்துகளும் தந்த ஆழ்ந்த நித்திரைக்குப்பின் விழிக்கையில் கையில் மாத்திரைகளுடனும் இதழ்களில் புன்னகையோடும் செவிலி. வாங்கி வாயில்போட சிரமப்பட்டு எழுந்து உட்கார்ந்தால் "good job". பின் கழிவறைக்கே சென்று சிறுநீர் கழிக்க விருப்பம்கொண்டு நடக்க உதவி கேட்டபோது, வந்த இன்னொருவரிடமிருந்து "you are doing great job". குழந்தைக்குப் பாலுட்டினால் " good job", மாலையில் அறைக்கு வெளியே நடக்கும்போது எதிர்ப்பட்ட ஒருவரிடமிருந்து "I am proud of you, you are great". மூன்று நாட்களும் அதிகம் கேட்ட வார்த்தைகள் "good job". மருந்துகளால் உடம்பு தேறிவிடும் என்றாலும், மனம் உற்சாகமடைய இவ்வார்த்தைகளும் அவை சொல்லப்பட்ட விதமும் பெரிதும் உதவின அன்று.
அதற்கு முன்பு எப்படியிருந்தேன் என்பது எனக்குச் சரியாக ஞாபகம் இல்லை. ஆனால் அதற்குப் பின் என்னிடமிருந்து அதிகம் வெளியேறும் ஆங்கில வார்த்தைகளில் ஒன்றாய் "good job". இவ்வளவு பீடிகை எதற்கென்றால் இப்பதிவு அப்படி ஒரு வாழ்த்துச் சொல்லவே. இணையத்தில் எழுத ஆரம்பித்து வேறு தளங்களுக்கும் பயணித்துக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கு, வேறெங்கும் எழுதாவிட்டாலும் தத்தம் வலைப்பதிவுகளிலேயே மொழியோடும் கருத்தோடும் அற்புதமாய் விளையாடும் நண்பர்களுக்கு, அவர்களின் பதிவுகளிலேயே போய் பின்னூட்டமிடாதிருந்தாலும் யாருக்கும் தெரியாது கைதட்டியிருக்கிறேன். அதிலும் பெண்பதிவர்களென்றால் மனம் இன்னும் கனிகிறது. ஆழமாக சிந்திக்காதவர்களின் பார்வையில் பெண்களுக்கு இன்று தடைகள் அதிகமில்லாததுபோல் தோன்றலாம். ஆனால் அவை பார்த்தவுடன் தெரிந்துவிடும் அளவில் நிறுத்தியிருக்கும் கார்மீது கொட்டிக்கிடக்கும் பனிமணலாயின்றி அருகில்வரும்வரை கண்ணுக்குத்தெரியாமல் காண்ணாடிகள்மீது அப்பிக்கிடக்கிற பனிப்படலமாய் (நன்றி - சுந்தரவடிவேலின் சமீபத்திய பதிவு ஒன்று) இறுகியிருக்கின்றன.திருமணத்திற்கு முன் தத்தம் தனித்திறமைகளில் பிரகாசிக்கும் பெண்கள் எல்லோருக்குமே திருமணத்திற்குப்பின்னும் அப்படியே தொடரமுடியாமல்போவதன் காரணங்களை அலசினால் பார்க்கலாம் இச்சமுதாயத்தில் இன்னும் ஆழமாக இருக்கிற ஆணாதிக்க வேர்களை, அவை பெண்களைச்சுற்றிப் பின்னியிருக்கும் வலைகளை. இவ்வலைகளைச் சுமந்துகொண்டே ஓடும் வலுவுடனோ அல்லது அவற்றை அறுத்தெரிந்துவிட்டோடும் துணிவுடனோதான் அவர்கள் வெளிவரமுடியும்.
இணையத்தில், தமிழ்ப்பதிவுகளில் இன்று எழுதிக்கொண்டிருக்கும் பெண்களின் ஆர்வமும், தேடலும்கூட அப்படியானவைகளில் ஒன்றுதான். வெவ்வேறு சூழல்களில் இருந்துகொண்டு அவர்களுக்குக் கிடைத்திருக்கும் இணையம் என்னும் துடுப்பைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
ஒடுக்கப்படுபவர்களுக்காகவும், உரிமை மறுக்கப்படுபவர்களுக்காகவும் அப்படி ஏதுமற்றவர்கள் குரல்கொடுப்பதும் மகிழ்ச்சிதான் என்றாலும் பாதிக்கப்பட்டவர்களே அவர்களின் பிரச்சினைகளைப் பேசும்போதுதான் அதற்கான சரியான தீர்வுகளையும் கண்டடைய முடியும். அவ்வகையில் பெண்களின் உண்மையான பிரச்சினைகள் பற்றி அவர்கள் இன்னும் நிறையப் பேச வேண்டியிருக்கிறது. பேச விழைபவர்கள் தங்களுக்கெதிரான தாக்குதல்களிலிருந்தும், அரசியலிலிருந்தும் தற்காத்துக்கொண்டு தொடர்ந்து தம் இருப்பை நிலைநாட்டுவதும் முக்கியமானதாக இருக்கிறது. அப்படித் தொடர்ந்து இங்கிருக்கும் தோழியர் அனைவருக்கும் ஒரு "good job" சொல்லவேண்டும்போல் தோன்றியதால் இப்பதிவு. நேரமின்மை காரணமாகவும், தாக்குதல்களில் விளையும் சோர்வு காரணமாகவும் இடைவெளி விட்டிருக்கின்ற பெண்பதிவர்கள் மீண்டும் வரவேண்டும் என்று கேட்டுக்கொள்ள இப்பதிவு. பலவருடங்களாய் இணையம் மூலம் எழுத்தை வளர்த்தெடுத்து சமீபத்தில் மூன்று நூல்களை ஒரே சமயத்தில் சிங்கப்பூரில் வெளியீடு செய்திருக்கின்ற ஜெயந்தி சங்கருக்கு மகிழ்வோடு வாழ்த்துச் சொல்லவும் இப்பதிவு.
7 Comments:
Good Job! Keep it up! :)
செல்வநாயகி,
உங்கள் "சாமிகள்" கவிதையிலிருந்து கீழே வாசித்துக் கொண்டு வந்தேன்.. உங்கள் நடையும் நீங்கள் எடுத்துப் பேசும் பொருட்களும் அற்புதமாக உள்ளன...
எந்தப் பதிவில் பதிவது என்று புரியாததால், இந்தப் பதிவில், உங்கள் பாணியில், ஒரு Good Job..
வாழ்த்துக்கள்.
செல்வநாயகி
உங்கள் எழுத்தும் அழகான ஆற்றொழுக்கு போன்ற நடையும் நான் தோழியரில் படித்த போதே என்னை கவர்ந்தவை.
தொடர்ந்து எழுதுங்கள்
நல்ல பதிவு,
நன்றி செல்வநாயகி
பொன்ஸ், தேன்துளி, ராபின்ஹ¥ட், சந்திரவதனா,
உங்களின் மறுமொழிகளுக்கு நன்றி.
இந்த பதிவை படிக்கும் போது என்னை நான் உணர்ந்து கொண்டது போல் இருந்தது.
Post a Comment
<< Home