தவமாய் தவமிருந்து
"வணக்கம். வசந்தி எழுதுகிறேன். "தவமாய் தவமிருந்து" பார்த்துவிட்டுப் பலரிடமிருந்தும் பாராட்டு மழைகள். "கட்டிய கணவனின் உணர்வுகள் புரிந்து அவன் தாய் தந்தையரைக் கவனித்துக் கொண்ட மகராசி நீ உனக்கு ஒரு குறையும் வராது", "எங்க, நீயும் பெரிய மருமக மாதிரி இருந்து முத்தையாவையும், சாராதாவையும் புறக்கணிச்சிருவியோன்னு
பயந்தோம், நல்லவேளை", "சென்னைக்குப் போன உடனே நீ அழுததைப் பாத்து மனசே ஒடைஞ்சு போச்சு", "படிச்சிருந்தாலும் மாமனார், மாமியாருக்குப் பணிவிடை செய்தியே அதுவும் அவ்வளவு அடக்கமா" இதுபோலவும் இன்னும்
பலவும் வந்தவண்ணம் உள்ளன எனக்கு. புன்னகைத்துக் கொள்கிறேன். நூறாண்டுகளின் படிகளில் ஏறிவந்திருந்தாலும் இங்கு
வசந்திகள் குறித்து சமூகம் வைத்திருக்கும் எதிர்பார்ப்புகளை எண்ணி. அந்த மூன்று மணி நேரத்தில் வாழ்வைத் தொடங்கி முடித்த ஒரு தகப்பன் குடும்பத்தில் நான் வந்துபோகும் காட்சிகளில் நான் பேசுகிற காட்சிகள் மிகக்குறைவு. என் மௌனங்களை "அடக்கம்" என்ற அடைமொழிக்குள் அர்த்தப்படுத்தி அழகுபார்ப்பவர்கள், தந்தை மகனுக்காற்றும் நன்றியையும்,
மகன் தந்தைக்காற்றும் உதவியையுமே மாற்றி மாற்றிப் பேசுகிறவர்கள், மகள் தந்தைக்காற்றமுடியாக் கடமைகளை எப்போதாவது எண்ணியதுண்டா?
முத்தையா நல்ல தகப்பன், சாரதா நல்ல தாய், இராமலிங்கம் நல்ல மகன், வசந்திதான் நல்ல மருமகள் என்ற ஓயாத புராணத்தில் புரண்டு கொண்டிருப்பவர்களிடம், என் தந்தைக்கு நான் நல்ல மகளாயிருக்க முடியாமல்போன வலி சொன்னால் புரியுமா? காதல் உயிரியற்கை. காதலித்தோம். காமமுற்றோம். கருச்சுமந்தேன். கைவிடமாட்டாயல்லவா எனக்
கதறியபோது மணந்துகொள்ளப்பட்டேன். தாய்மையில் எனக்குத் தாயான கணவன், வறுமையிலும் அவரைவிட்டு விலகாத நான்,
நல்ல தாம்பத்யம்தான் எங்களுடையது. மகனால் அவமானங்கள் சுமந்த பெற்றோர் அருகில் வருகிறார்கள். அணைத்துக்கொள்ளப்பட்டோம். அதன்பின் துவங்குகிறது என் பயணம், முழுக்க முழுக்க இராமலிங்கத்தின் பொறுப்புக்களைப் பகிரந்தபடி, பொதிகளைச் சுமந்தபடி. இராமலிங்கத்தின் தந்தைபோலவே தனக்குத் தன் மகளால் கிடைத்த தலைக்குனிவைத்
தாடியால் மூடிக்கொண்டிருந்த என் தந்தையைப் பச்சைப் பிள்ளையைக் கையில் ஏந்தியபடி போய்ப் பார்த்ததோடு சரி. அதற்குப் பிறகு நான் அவரைச் சந்திக்கிறேனா என்பதெல்லாம் சொல்லப்படாமலே போனதற்கு நேரக்குறைபாடு காரணம் என்பது சரி. அதைவிடக் கதைக்கு முக்கியமில்லை என்பது மிகச் சரி. அதையும்விட இச்சமூகத்திற்கும் முக்கியமில்லை
என்பது மிகமிகச் சரி.
எப்போது வழங்கப்படும் எங்களுக்கான பாராட்டுப்பத்திரம்? நீளும் சிறகுகளைக் கத்தரித்துக்கொண்டு எங்களுக்கெனத் தயாரிக்கப்பட்ட கூண்டுகளுக்குள் அமர்ந்துகொள்ளும்போதுதானே? அன்னியன் இருப்பிடத்தில் இருந்ததால் தேய்ந்துபோன கற்பைக் கணவன் சொன்னவுடன் கனலில் இறங்கிப் புதுப்பித்துக் கொடுத்தால்தான் இங்கு சீதைக்கு இடப்படும் சிம்மாசனம்.
நடுத்தெருவில் விட்டுவிட்டோடும் கோவலனுக்காகக் கண்ணீர் மல்கக் காத்திருந்து, வந்தவுடன் அவன் வாழும்வழிசெய்யக்
கால்சிலம்பு கழற்றினால்தான் கண்ணகிக்குக் கிடைக்கும் இங்கு காப்பியநாயகி அந்தஸ்து. பண்பாட்டு நெறிகளின்
வரையறைப்படி பெண்களைப் பதிவிரதைகளாய் வேண்டுகிற சமூகம் சுட்டிக்காட்டிய இன்னுமொரு உதாரணம் நான்
என்பதன்றி என்னிலும் வேறு என்ன இருக்கிறது?
தன் பெற்றோருக்கு இராமலிங்கம் தான் செய்த அநீதியைச் சரிசெய்ய நினைத்தார். அவர் மதுரையில் இருந்தாலும் நான் அவர் பெற்றோரோடு இருந்தேன். நானும் அதற்குச் சம்மதித்ததைப் பெருமையோடு சொன்னார்.
முத்தையாவால் தன் முதல் பேத்திக்கு வைக்கமுடியாமல் போன பெயரை ஆசையாகத் தன் குழந்தைக்கு வைக்கட்டும் என இராமலிங்கம் ஆசைப்பட்டதற்கும் நான் மறுப்பெதுவும் சொல்லவில்லை. என் தந்தையும் தன் மகள் வயிற்றில் பிறக்கும் குழந்தைக்காக ஏதேனும் பெயர் யோசித்திருந்திருப்பாரோ? இருந்தாலும் இப்போது மகள் இன்னொரு வீட்டு மருமகள் அல்லவா? எதற்கு வம்பு?
மதுரையில் எங்கள் இரண்டு பேருக்கும் வேலைகிடைத்தபின் இராமலிங்கத்தின் அடுத்த ஆசை துளிர்விட்டது.
நியாயம்தானே? தன்னை வளர்த்து ஆளாக்கிய வயதான தாய் தந்தையரை மகன் தன்கூட வைத்துக்கொள்ள நினைப்பது தவறா
என்ன? நான் அதைப் புரிந்துகொண்டு வேலைக்குப் போகும் அவசரத்திலும் மாமனாருக்குக் காபி கலந்து கொடுத்துச் செல்வதையும்கூட விட்டுவிடாமல் காட்டி என்னை ஒரு சரியான மருமகளாய்ப் பெருமைப்படுத்தி விட்டார்கள். வேகமான எங்கள் வாழ்வின் வளர்ச்சி ஓடும்போதும் புகுந்த வீட்டில் எனக்கான கடமைகளைச் சரியாகவேதான் செய்துகொண்டிருந்தேன்.
அத்தை மரணத்திற்குப் பின் தனியாக இருக்கும் மாமாவுடன் குழந்தைகளின் விடுமுறையைக் கழிக்க, நினைத்தவுடன் விடுப்பு
எடுத்துச் செல்லும் வசதியான வேலைதான் எனக்கு. கடைசியில் அடிபட்டவுடன் அவரை மருத்துவமனையில் சேர்க்கும்வரை
காதலித்த இராமலிங்கத்தின் காரியங்கள் யாவிலும் கைகொடுத்த திருப்தியுடன் விடைபெற்றுக்கொண்டேன். இந்தத்
திருப்தியும், கணவனின் வெற்றிக்காக ஓடிஓடி உழைத்ததற்காக சில மகுடங்களும் பெற்றுக்கொண்ட எனக்கு என் பக்கத்து
உணர்வுகளைச் சொல்லும் வாய்ப்புகள் வழங்கப்படாமலே போனது இயல்பானதுதான். ஆண்டாண்டுகளாக கோடானுகோடி
வசந்திகளுக்கும் இயல்பாக நடந்துகொண்டிருப்பதுதானே எனக்கும்? இராமலிங்கங்களின் வெற்றிகள் கட்டப்படுவது
எப்போதும் வசந்திகளின் தியாகங்கள் மீதுதானே? என் ஜன்னலுக்கு வெளியே ஒலித்துக்கொண்டிருக்கும் "வாழ்க பெண்மை!
வெல்க தாய்மை!" என்ற எங்கள் காதுகளைச் செவிடாக்கும் உங்கள் வழமையான கோஷங்களை இனியும் கேட்க மனமின்றி
இக்கடிதத்தை முடித்து எழுகிறேன் வசந்திகளின் வாழ்வுக்கென்று புலரும் ஒரு பொழுதைத் தேடி".
- வசந்தி-
ஒரு போராளியாக வாழ்வில் வெற்றி பெற்ற மனிதர் என்ற முறையிலும், தமிழ்சினிமாவில் வியாபார நோக்கங்கருதி வெறும் ஜரிகைக் காகிதங்களைக் கடைவிரித்திருப்பவர்களுக்கு மத்தியில் உண்மையான ரோஜாவுக்காக ஒரு பூ நாற்றைப் பதியனிடுகிறவர்களில் ஒருவர் என்ற முறையிலும் இயக்குனர் சேரன் மீது எனக்கு நல்ல மரியாதை உண்டு. ஆனாலும்
அவையெல்லாம் "தவமாய் தவமிருந்து" படம் பார்த்தபின் என்னுள் தொடரும் கேள்விகளிலிருந்து என்னை விடுவிக்கவில்லை.
பொதுவாய், உறவுகளின் இழைகளில் பிணைக்கப்பட்டுக் கிடக்கும் நம் வாழ்க்கையைப் பெரும்பாலான நேரங்களில் அவற்றின்
மூலம் விளையும் உணர்வுகள்தான் கொண்டு செலுத்துகின்றன என்பதை ஒப்புக்கொண்டும், அவற்றை மட்டுமே மையமாக
வைத்து வேற்ந்தக் கலப்படமும் இல்லாமல் இன்றைய சூழலில் ஒரு முழுநீளப் படத்தை எடுத்து வெல்வது சாதனைதான்
என்பதை ஏற்றுக்கொண்டும்தான் இப்பதிவை எழுதுகிறேன் என்பதால் இதை வாசிப்பவர்களால் என் புரிந்துகொள்ளலின் அடிப்படை பரிகசிக்கப்படாது என்று நம்புகிறேன். "காய்ந்துகிடந்த பூமியில் தண்ணீர் பாய்ச்சியதே புண்ணியமென்பதால் ஏதோ ஒரு மூலைக்குப் போதிய நீர் போய்ச்சேரவில்லை" என்ற குற்றச்சாட்டுக்கள் கூடாதென எடுத்த எடுப்பில் கூறிவிடாமல் அது எப்போதும் நனைக்கப்படாத மூலையாகவே இருக்கிறதென்பதை உணர்ந்துகொள்ள முடியக்கூடியவர்கள் நாம் என்றும்
நம்புகிறேன்.
19 Comments:
செல்வாநாயகி: அருமை. இதுபற்றிய என் பதிவொன்றில் விவாதித்தது நினைவுக்கு வருகிறது (பெண்களால் பெற்றவர்களை பாதுகாக்க முடியுமா). தென்றலாக இதம் தருகிறது உங்களின் இந்த கட்டுரையும். மென்மையாக அதே நேரம் தீவிரமாக கருத்தை சொல்லுகிறீர்கள்.
இன்னொன்று சொல்ல மறந்துவிட்டேன். இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு ஆண்கள் பலரும் பதிவெழுதியபொது, பதிவினுள் தேடிப்பார்த்தேன். மனைவியின் பெற்றோர் பற்றி மனைவியின் சிந்தனைகள் பற்றி ஒரு குறிப்பேனும் இருக்கிறதா என்று:)
செல்வநாயகி : வித்தியாசமான பார்வை. அழகான நடை. படிக்கச் சுகமாயிருந்தது.
நாளை உலக பெண்கள் தினம் கொண்டாடும் இந்நேரத்தில் நமது சமூகம் இன்னும் எவ்வளவு தூரம் போகவேண்டும் எனப் பதித்ததாகவே கொள்கிறேன். ஏனெனில் திரைப்படம் வாழ்க்கையின் பிம்பம். நமது முகத்தில் இருக்கும் பருவிற்கு கண்ணாடியை குற்றம் காண முடியுமா ?மாயாஜாலக் கண்ணாடியிலிருந்து முகம் காட்டும் கண்ணாடி கிடைத்திருக்கிறது. அதற்கு சேரனுக்கு நன்றி.அதன் பிம்பத்தில் தெரியும் குறைகளை நீக்க சிகிட்சை ஆரம்பிக்க வேண்டும்.
Precisely one of my biggest cribs about the movie - playing to the conventional (Taml/Indian) "morality" and trying to pass it off as art.
The wife's interests are bound to be at loggerheads (as per the Indian social structure where the parents expect to stay with their male children, that is) with that of the man's parents. An issue which is touched only to paint the other 'marumagal' in bad light.
The biggest irritation is of course when Cheran beams (thinking he has done the morally right thing) when he tells his papa that he (and she) has decided that she will stay alongwith the parents! I mean, is it really wrong for the girl to think otherwise, like the other 'marumagal' did?
//வேலைக்குப் போகும் அவசரத்திலும் மாமனாருக்குக் காபி கலந்து கொடுத்துச் செல்வதையும்கூட விட்டுவிடாமல் காட்டி என்னை ஒரு சரியான மருமகளாய்ப் பெருமைப்படுத்தி விட்டார்கள்//
செல்வநாயகி உங்கள் கருத்துக்களின் மேலேயே என் விவாதத்தைச் சொல்கிறேன்.
அந்த பெண் பாத்திரத்தின் அன்பையும் கடமை உணர்வையும் வெளிப்படுத்தும் ஒரு காட்சியாகவே காட்டப்பட்டதாக என் கருத்து. அது எந்த விதத்திலும் பெண் சுதந்திரத்தை பாதித்ததாக ஆகாது. கணவரின் பெற்றோருக்கு பணிவிடை செய்வதாலேயே ஒரு பெண் அடிமைத் தளையில் இருப்பதாகவும் ஆகாது. அந்த இடத்தில் அவள் பெற்றோர் இருந்தாலும் அதே போன்ற காட்சிதான் காட்டப்பட்டிருக்கும்.
//கணவனின் வெற்றிக்காக ஓடிஓடி உழைத்ததற்காக சில மகுடங்களும் பெற்றுக்கொண்ட எனக்கு என் பக்கத்து
உணர்வுகளைச் சொல்லும் வாய்ப்புகள் வழங்கப்படாமலே
போனது//
இந்த இடத்தில் சேரனின் சறுக்கல் அதல பாதாளம்தான். படத்தின் நீளம் கருதி சொல்லப்படாமலிருந்தால் சரிதான். ஆனால் சொல்லும் முயற்சிகளே எந்த இடத்திலும் இல்லை. மிக யதார்த்தமான கதையில், ஆதர்ச, ஆத்மார்த்த தம்பதிகளாக ராமலிங்கமும் வசந்தியும் வலம் வருவதே சினிமாத்தனம்தான். கணவனின் வெற்றிக்காக வசந்தி ஓடி ஓடி உழைக்கவில்லை, தங்கள் காதல் வாழ்க்கையின் வெற்றிக்காகத்தான் அத்தனை ஓட்டமும். காதலின் வெற்றிக்காக குடும்பத்தை எதிர்க்க முடியும். ஆனால் கல்யானத்துக்குப்பின் சின்ன எதிர்ப்பு காட்டினால்கூட காதல் கல்யாணங்கள் கேலிப் பொருளாக்கப்பட்டுவிடும். அதனாலேயே நிறைய வசந்திகள் வாய் திறப்பதில்லை.
ஆனால் `தவமாய் தவமிருந்து’ சேரனின் படம் என்பதைவிட ஒரு அப்பாவின் வாழ்க்கை என்பதாக மட்டும் பார்க்கும்போது நிஜமாகவே நல்ல படம்.
I am happy to read this post Selvanayaki.
//அது எப்போதும் நனைக்கப்படாத மூலையாகவே இருக்கிறதென்பதை உணர்ந்துகொள்ள முடியக்கூடியவர்கள் //
:)
சேரன் எடுத்து கொண்ட மையகருத்தின் Framework குள்ளே, வசந்தியை எப்படி காட்ட வேண்டுமோ, அப்படி காட்டியதாகத் தோணுகிறது. நடைமுறையில் உள்ள சமூகை அமைப்பை தான் எடுத்து கையாண்டிருப்பதாக படுகிறது. புதுமை வசந்தி வேண்டுமென்றால், எடுத்து கொண்ட மையகருத்தை மாறு படவேண்டும்.
செல்வ நாயகி,
உங்கள் கோபம் ஞாயமானது, ஆனால் அதை சேரன் மேல் காட்டாதீர்கள். பார்க்கப்போனால் அவர் உங்கள் பக்கம்தன் இருக்கிறார்..சில நிஜங்களை முன்வைக்கிறார். அவர் பெண் பார்வையில் பலதை சொல்லாதது இன்றைய சூழலை காட்டித் தான். இதோ நீங்கள் எழுட்தியிருக்கிறீர்களே இது போல பலரும் பேசவேண்டும் என்பதற்காகத்தான்.
ஓரளவுக்கும் நம் கிராமங்களை நாம் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது. மூடர்களாய் தெரிந்தாலும் அவர்களை ஒரு நாளிலேயே இல்லை ஒரு வாழ்நாளிலேயே திருத்திவிடமுடியாது.
மகள்தந்தைக்காற்றும் உதவியோ, புதுமைபெண்ணோ ஒருபுறம் இருக்கட்டும்
// அதற்குப் பிறகு நான் அவரைச் சந்திக்கிறேனா என்பதெல்லாம் சொல்லப்படாமலே போனதற்கு நேரக்குறைபாடு காரணம் என்பது சரி. அதைவிடக் கதைக்கு முக்கியமில்லை என்பது மிகச் சரி. அதையும்விட இச்சமூகத்திற்கும் முக்கியமில்லை
என்பது மிகமிகச் சரி. //
சேரன் தான் எடுத்துக்கொண்ட framework இன் உள்ளிலேயே, படத்தின் மையக்கருத்து எதையும் மாற்றாமலேயே இதை செய்திருக்க முடியும். நடைமுறை வாழ்வில் மருமகள் தன் வீட்டிற்கு செல்வதில்லையா, இல்லை அவளது பெற்றோர்தான் அவளைப்பார்க்க வருவதில்லையா? ஒரே பாடலில் அவர்களது 5 அல்லது 6 வருட வாழ்க்கை அழகாக நுட்பமாக காட்டபடுகிறது அதில் ஒன்றிரண்டு காட்சிகளிலாவது வசந்தியின் பெற்றோரையும் (உதாரணத்துக்கு, குழந்தையின் காதுகுத்து விழா, இரண்டாவது குழந்தையின் பிறப்பு ) காட்டியிருக்க முடியும். அல்லது இரண்டு குடும்பங்களும் ஒன்றாய் அமர்ந்து உணவருந்துவது போன்ற ஒரு காட்சியோ கூட வந்திருக்கலாம். அது வசந்தி என்ற கதாபாத்திரத்துக்கு செய்யும் ஒரு சின்னஞ்சிறு மரியாதை. இதைபற்றிய குறைந்தபட்ச ப்ரக்ஞை கூட சேரனுக்கு இல்லாதது வருத்தமே. மற்ற எல்லா பாத்திரங்களையும் (கதைக்கு அதிகம் சம்பந்தமில்லாதவர்களைகூட) அவர்களது தனித்தமையுடன் செதுக்கிய இயக்குனருக்கு வசந்தி "மகன் தந்தைகாற்றும் உதவி" க்கான ஒரு கருவியாக மட்டுமே தெரிகிறாள்.
பதிவுக்கு நன்றி செல்வநாயகி.
மறுமொழியிட்டிருக்கிற நண்பர்களுக்கு நன்றி. நேரமின்மை, கிடைக்கிற கொஞ்ச நேரத்தில் மற்ற பதிவுகளைப் படிப்பதிலும், அவை ஏற்படுத்தும் அதிர்வுகளின் வழி சிந்தித்துக் கொண்டிருப்பதிலும் நாட்கள் சென்றுகொண்டிருந்ததில் என் வீட்டுப் பக்கமே வரவில்லை:))
தாணு,
உங்களின் பின்னூட்டத்திற்கு பதிலாகவும், சில தொடர்ச்சியான சிந்தனைகளாகவும் ஒரு பதிவெழுதுவதாய்ச் சொன்னேன். வாக்குறுதியை எப்படியும் காப்பாற்றி விடுவேன். வாய்தா வாங்குவதை நீங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது:))
உண்மை,
உங்கள் கருத்துக்கு நன்றி.
செல்வநாயகி,
வித்தியாசமான கோணத்தில் அசத்தலாக எழுதியிருக்கிறீர்கள் .ஆனால் பலரும் சொன்ன மாதிரி சேரனை இவ்வளவு கோபித்துக்கொள்வதில் அர்த்தம் இல்லை .சேரன் உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது உண்மையே எனினும் ,பெரும்பாலான இயக்குனர்கள் போல அபத்தமாகவும் காட்டவில்லை .இருந்தாலும் அத்தகைய அபத்தக்களஞ்சியங்கள் விவாதிப்பதற்கே தகுதியற்ற சூழலில் ,குறைந்த பட்ச நேர்மையுடனாவது சிந்தனையை தூண்டும் படம் எடுத்த சேரனை பாராட்டியே ஆக வேண்டும் .இன்னொரு மருமகளின் அபிலாஷைகளை அவரின் பார்வையில் அழகாக சொல்லியிருப்பதாகவே நான் நினைக்கிறேன்.
http://keetru.com/anicha/Mar06/kumarados.html
தங்கமணி,
இந்தச் சுட்டிக்கு மிக்க நன்றி. "தவமாய்த் தவமிருந்து" படத்தை இன்னும் பல கோணங்களில் எழுதியிருக்கிறார் கட்டுரையாசிரியர். அந்தக் கோணங்களில் எழும் கருத்துக்களும் மறுக்கப்பட முடியாதவையாகத் தெரிகிறது.
செல்வநாயகி, நல்லதொரு பதிவு.
பெண்கள் பக்க நியாயங்கள் எப்போதும் எடுபடுவதில்லை.
இப்போது எவ்வளவோ மாறியிருக்கிறது.
சில இடங்களில் பெண்வீட்டார் ஆதிக்கமும் இருக்கத்தான் செய்கிறது.
சேரன் படங்களில் மெதுவாகச் செல்லும் காட்சிகள் இருக்கும். அவைகளில் சில துளிகளில் வசந்தியின் உணர்ச்சிகளுக்கும் இடம் கொடுத்து இருக்கலாம்.
இதுவே சேரனின் அடுத்த கருவாக இருக்கட்டுமே.
பாரதி எழுதி இருப்பதுதான் உண்மை. யாருக்கும் கவலை கிடையாது வசந்திகளைப்பற்றி.
என் இனிய வசந்தி மன்னிக்கவும் செல்வா...
தந்தை மகனுக்காற்றும் நன்றியையும்,
மகன் தந்தைக்காற்றும் உதவியையுமே மாற்றி மாற்றிப் பேசுகிறவர்கள், மகள் தந்தைக்காற்றமுடியாக் கடமைகளை எப்போதாவது எண்ணியதுண்டா?
ஆமாம் செல்வா இந்த கேள்விகள் எத்தனைமுறை எங்களுக்குள் விவாதிக்கப்பட்டிருக்கிறது!
எப்போது வழங்கப்படும் எங்களுக்கான பாராட்டுப்பத்திரம்? நீளும் சிறகுகளைக் கத்தரித்துக்கொண்டு எங்களுக்கெனத் தயாரிக்கப்பட்ட கூண்டுகளுக்குள் அமர்ந்துகொள்ளும்போதுதானே? அன்னியன் இருப்பிடத்தில் இருந்ததால் தேய்ந்துபோன கற்பைக் கணவன் சொன்னவுடன் கனலில் இறங்கிப் புதுப்பித்துக் கொடுத்தால்தான் இங்கு சீதைக்கு இடப்படும் சிம்மாசனம்.
நடுத்தெருவில் விட்டுவிட்டோடும் கோவலனுக்காகக் கண்ணீர் மல்கக் காத்திருந்து, வந்தவுடன் அவன் வாழும்வழிசெய்யக்
கால்சிலம்பு கழற்றினால்தான் கண்ணகிக்குக் கிடைக்கும் இங்கு காப்பியநாயகி அந்தஸ்து
இங்கு கண்ணகிகளும் சீதைகளும் மட்டும்தான் பெண்களாக ஏற்றுக்கொள்ளப் பட்டவர்கள்!
என் தந்தைக்கு நான் நல்ல மகளாயிருக்க முடியாமல்போன வலி சொன்னால் புரியுமா?
ஆனால் இவர்கள் சொல்லாமலே இவர்களை புரிந்து கொள்ளும் பக்குவம் நமக்கிருப்பது நம் பலமா பலவீனமா தெரியவில்லை!
இராமலிங்கங்களின் வெற்றிகள் காட்டப்படுவது
எப்போதும் வசந்திகளின் தியாகங்கள் மீதுதானே?
தியாகங்கள் வசந்திகளின் வாழ்க்கையாகிப் போகும்போது
அவையெப்படி தியாகங்களாக உணரப்படும்?
என் ஜன்னலுக்கு வெளியே ஒலித்துக்கொண்டிருக்கும் "வாழ்க பெண்மை!
வெல்க தாய்மை!" என்ற எங்கள் காதுகளைச் செவிடாக்கும் உங்கள் வழமையான கோஷங்களை இனியும் கேட்க மனமின்றி
இக்கடிதத்தை முடித்து எழுகிறேன்
பெண்மையும் தாய்மையும் வாழ்வதிருக்கட்டும்
வசந்திகளை வாழட்டும் முதலில்! பெண்மையும் தாய்மையும் வாழ கோஷங்கள் தேவையில்லை
சொல்ல வந்தது மிகச் சரியாய் சொல்லப்பட்டிருக்கிறது தோழி!
நன்றாக அலசப்பட்டிருக்கிறது!
சேரன் என்ற ஆணால் இப்படியொரு வசந்தியைத்தான் காட்ட முடியும் பாவம்!
செல்வா
உங்களுக்கு உங்கள் yahoo idல் ஒரு மடல் அனுப்பியிருந்தேன். படித்தீர்களா?
செல்வராஜ் தளங்களில் பின்னூட்டமிட்டவர்களை அவர்கள் தளத்தில் உள்நுழைந்து பார்த்ததைப் போலவே உங்கள் ரசிகப் பெருமக்களையும் பார்த்துக் கொண்டு இருக்கின்றேன்.
ரொம்ப ஆச்சரியமா இருக்கும்.
ஆழ்கடல் அமைதி போல.
ம்ம் கொடுத்து வைத்தவர் தான் நீங்கள்.
நல்வாழ்த்துகள்.
அப்புறம் சேரனைப் பற்றி
வாயைப் பொத்திக் கொண்டு வெறும் திரைப்பட இயக்குநராக இருந்து விட்டால் இன்னும் கால் நூற்றாண்டு காலம் ஜெயிக்கக்கூடியவர்.
சந்தேகம் தான்.
Post a Comment
<< Home