சும்மாதான் இருக்கிறேன்!
சத்தமான அழுகை முடிந்தபின்னும் விசும்பலை நிறுத்தாத குழந்தை மாதிரி இன்னும் முழுதுமாய் விட்டுப்போகாமல் இருக்கிறது இங்கு குளிர். நல்ல வெயிலென்று வெளியில்போய்ப் பின் திடீரென வீசத்துவங்கும் குளிர்காற்றுக்கஞ்சி நினைத்த தூரம் நடக்க முடியாது திரும்பிவருவதும் நிகழ்கின்றன, எனினும் நடத்தலை நிறுத்துவது விருப்பமாயில்லை. வாழ்வின் தத்துவத்தை இதனோடு ஒப்பிட்டுப் பார்த்தாலும் சரியென்றுதான் தோன்றுகிறது. இயக்கமற்று இருக்க உயிர்ப்புள்ள மனிதனாலும் மனதாலும்
முடிவதில்லை எப்போதும்.
விடுதலையின் அருமையை உணர வீட்டிற்குள்ளேயே முடக்கிப்போடும் குளிர்காலம் உதவியாய் இருக்கிறது. சென்ற வருட வசந்தகாலமும் இப்படித்தான் இருந்திருக்கவேண்டும். ஆனால் அப்போது மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த இந்தியப் பயணம் குறித்த உற்சாகம் இங்கிருந்த எதையும் ஆற அமரக் கவனிக்கும் பொறுமையை வழங்கியிருக்கவில்லை. எங்கிருக்கிறோமோ அங்கு அப்போது மனத்தாலும் இருக்க முடிபவர்களுக்கு வாழ்வு இன்னும் கொஞ்சம் இனிமையானதாக இருக்கும். ஏறியமர்ந்து
கிளம்பி ஓடும் ரயிலிலும், விட்டுவந்த மனிதர்களைப் பற்றிய சிந்தனைகளில் மூழ்கிக்கிடக்கையில் ரசிக்கப்படாமல் தவறிப்போய்விடுகிறது ஒருகையால் அவிழும் கால்சட்டையைப் பிடித்துக்கொண்டும் மறுகையால் ரயிலில் செல்பவர்களுக்குக் கையசைத்து மகிழும் பாதையோரச்சிறுவனின் பாசாங்கற்ற மனமும் சந்துப்பல் சிரிப்பும். இப்படி எத்தனையோ?
அன்றாட அலுவல்களைத் தவிர வேறெந்தத் திட்டமிடல்களோ அவற்றின்பின்னால் பிடரி தெறிக்க ஓடும் நிர்ப்பந்தங்களோ
இன்றி இருப்பது இயற்கையோடு இயைந்து கிடக்க ஒத்துழைக்கிறது இப்போது. பனியைக் குடித்துக்குடித்துச் சலித்துக்கிடந்த மரங்கள் மெல்லத் துளிர்க்கின்றன. வெய்யில் அடிக்க அடிக்க ஒவ்வொரு இலையும்
வெட்கப்பட்டுக்கொண்டே வெளிவருகிறது.மாதக்கணக்காய்ப் பூமிக்குக் கிழே முச்சடக்கி இருந்த புற்கள் மூழ்க்கிக்கிடந்தாலும் அழுகிப்போகாதிருந்த வேர்களைத் தட்டியெழுப்பி மேலே கொஞ்சம் கொஞ்சமாய் எட்டிப் பார்க்கின்றன. பல மௌனப் பனி இரவுகளுக்குப்பின் பச்சையை விரித்துக் கலகலவென்றிருக்கும் நிலம் காதலனுடனான அமைதியான தனிமைப்பொழுதில் எதையோ ரசித்து எதற்காகவோ வாய்விட்டுச் சிரிக்கும் கன்னிப்பெண்ணொருவளை நினைவூட்டி நிற்கிறது. நிலத்தைப்
பெண்ணோடு ஒப்பிட்டு ரசிக்க முடிந்த ஒருவன்தான் நிலமகள் என்றும் பூமித்தாய் என்றும் பெயர்சூட்டி மகிழ்ந்திருப்பானோ?
புறப்பட்டுவிட்டார்கள் மனிதர்கள் பச்சையைப் பார்த்தபடி பாட்டும் கேட்டபடி காலையிலும் மாலையிலும் நடக்கவும், ஓடவும். உடற்பயிற்சி உடைகள்தான் நிரம்பியிருக்கின்றன இப்போது இங்கு துணிக்கடைகளில். "March wind brings April shower; April shower brings May flowers" என்ற வரிகளோடு பொது நூலகங்களில் குழந்தைகளுக்கான கதை சொல்லும் நேரங்கள்
துவங்கியிருக்கின்றன. "வால்மார்ட்" போன்ற கடைகளுக்கு வெளியே பாலோடும், தயிரோடும் மட்டுமின்றிச் செடியோடும்,
செடித்தொட்டியோடும் செல்லும் பலரைப் பார்க்க முடிகிறது. மனிதனுக்குத்தான் முறையான வசந்தகால ஆரம்பத்தேதி
தேவையாயிருக்கிறது. அகம் உணர்த்துகிறதா இல்லை புறம் புரியவைக்கிறதா எனத் தெரிந்துகொள்ளமுடியவில்லை இந்த அணில்களுக்கும், பறவைகளுக்கும். எங்கும் ஓடியாடியபடி உள்ளன அவை. எங்கிருந்தனவோ இந்த முயல்கள் இவ்வளவுகாலம்? பட்டுப்பாதம் எடுத்துவைத்துப் பதுங்கிப்பதுங்கி நடந்துகொண்டிருக்கின்றன புல்வெளிகளில். அவற்றிற்குக் குடைபிடித்தபடி நகர்கின்றன மேகங்கள்.
சுற்றிலும் நிகழும் இச்சூழ்நிலை மாற்றங்கள் தரும் இதமான மனநிலையில் ஏதாவது செய்யலாம்தான். தூரத்துத் தோழியைத் தொலைபேசியில் பிடித்து அங்குள்ள பச்சை நிலவரம் பற்றி விசாரித்துக்கொண்டே தமிழனுக்கும் இந்தப் பசுமை நிறத்துக்குமுள்ள தொடர்பு பற்றிப் பேசலாம். தலைவாழை இலைபோட்டுச் சோறிட்டுத் தாம்பூலம் தந்து வாய் சிவக்க வைத்து,
பச்சை மட்டைகளால் பந்தலிட்டுத் தோரணமாய்ப் பசும் மரங்கள் அழகுக்குக் கட்டிவைக்கும் கலாசாரம் பேசலாம். பசுஞ்சாணமிட்டு மெழுகிய வாசலில் கோலமிட்டு மகிழ்ந்த நாட்களை நினைவுகூறலாம். நீண்ட நாட்களாய் எழுத நினைத்துத் தள்ளிப்போட்டுக்கொண்டுவரும் ஒரு கவிதையை எழுதி முடிக்கலாம். விரும்பி வாங்கிவைத்துப் போடாமல் கிடக்கும் ஒரு
உடையைப் போட்டுக்கொண்டு அழகு பார்க்கலாம். ஆனால் எதுவும் செய்யாமல் சும்மாதான் இருக்கிறேன் நான் சுற்றிப் படரும் பசுமையும், இயற்கையின் எழிலும் எனக்குள் எறியும் ஒவ்வொரு கல்லுக்கும் கிளம்பும் அலை வளையங்களை மட்டும் எண்ணிக்கொண்டு, படத்திலிருக்கும் பெண்ணைப்போல!
19 Comments:
/எங்கிருக்கிறோமோ அங்கு அப்போது மனத்தாலும் இருக்க முடிபவர்களுக்கு வாழ்வு இன்னும் கொஞ்சம் இனிமையானதாக இருக்கும்./
இதமான பதிவு. நன்றி செல்வநாயகி.
//நீண்ட நாட்களாய் எழுத நினைத்துத் தள்ளிப்போட்டுக்கொண்டுவரும் ஒரு கவிதையை எழுதி முடிக்கலாம்.//
பதிவே கவிதை மாதிரி இருக்கிறது. இன்னும் கவிதை எப்படி இருக்குமோ..?? எழுதுங்கள் செல்வா..!!!
எழுத வேண்டும் என்பதற்காக எழுதிக் குவிப்பது எவ்வளவு தவறோ அதைவிடத் தவறு, எழுதக் கவிதை இருந்தும் எழுதா இருப்பது..!!!!!!
இந்தப் பதிவே ஏதோ ஓர் கவிதை படித்த உணர்வைத்தான் தருகிறது செல்வா!
"செல்வ" என்று ஆரம்பிக்கும் பெயரில் இருப்பவர்கள் எழுதுவது எல்லாம் இப்படித்தான் கவித்துவமாய்
இருக்குமா?
டிசே தமிழன், மூக்கு சுந்தர், நாமக்கல் சிபி,
உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி.
///எழுத வேண்டும் என்பதற்காக எழுதிக் குவிப்பது எவ்வளவு தவறோ அதைவிடத் தவறு, எழுதக் கவிதை இருந்தும் எழுதா இருப்பது..!!!!!!////
பாடக் குரல்வளம் இருந்தும் தொடர்ந்து பாடல்பதிவுகள் இடாதிருப்பது மட்டும் தவறில்லையா சுந்தர்:))
அருமையான பதிவு செல்வா.
நலமா?
உஷா,
உங்கள் மறுமொழிக்கு நன்றி.
உஷாவுக்கு நன்றிசொல்லிக்கிட்டிருக்கும்போதே நீங்க மின்னஞ்சல்பெட்டிக்கு வந்துட்டீங்கன்னு நினைக்கிறேன் துளசிம்மா. நலம். உங்கள் அன்புக்கு நன்றி.
சில சமயங்களில் இது போன்ற பதிவுகளை படிக்கும் போது எழுத தெரியாமல் இருப்பதன் வருத்தத்தை உணர முடிகிறது.
விரும்புகின்ற இடத்தில் மனதோடு உடலும் இருக்க முடிவதில்லை ஆனால் மனதால் மட்டும் முடிகிறது. வசட்ந்ஹ காலத்தில் எனக்கு பிடித்தது பூக்களும் சிறுவர்கள் சைக்கிளை முகம் கொள்ளா சாதனை சிரிப்புடன் ஓட்டி விளையாடுவதும். நன்றி செல்வா
வழக்கம் போல் உங்களிடமிருந்து ஒரு இனிமையான பதிவு. நல்ல உவமைகள் கவித்துவமாகவும் வெளிப்பட்டிருக்கின்றன. வசந்தத்தின் வரவைத் தவிரவும் எதையோ ஒன்றை இந்தப் பதிவு எனக்குச் சொல்வது போலிருக்கிறது.
பத்மா, ராஜுவரதன், செல்வராஜ் மூவருக்கும் நன்றி.
பூக்களும், சைக்கிள்விடும் சிறுவர்களும் வசந்தத்தின் மற்றுமிரு அழகுகள்தான் பத்மா. இப்பதிவை எழுதியபோது துளிர்க்க ஆரம்பித்திருந்த மரங்களில் சில, இதை நான் தமிழ்மணத்தில் சேர்ப்பித்த இன்று போய்ப்பார்த்தால் பூக்களுடன் நிற்கின்றன.
என் சுறுசுறுப்பை நீங்கள் இதிலிருந்து ஊகித்துக்கொள்ளலாம்:))
//எங்கிருக்கிறோமோ அங்கு அப்போது மனத்தாலும் இருக்க முடிபவர்களுக்கு வாழ்வு இன்னும் கொஞ்சம் இனிமையானதாக இருக்கும். //
அப்போதுதான் வாழ்வே இருக்கிறதென்று நினைக்கிறேன். மற்ற பொழுதுகளில் வாழ்வு என்ற நமது கற்பனைகள் தான் இருக்கின்றனவோ!
நல்ல பதிவு செல்வநாயகி.
நன்றி தங்கமணி.
அருமையான பதிவு. உங்களது எழுத்தின் ஊடே புகுந்து வெளிவந்திருப்பது உம் உள்ளத்தில் தெறித்தோடும் ரசனை உணர்வு மட்டுமல்ல. இறக்கையை, மலரை, குரங்கை, மலையை, குழந்தையை, பனியை, வறுமையை என எதைப் பார்த்தாலும் உள்ளது உள்ளபடியே படம் பிடித்துக் காட்டும் திறனும் தான்.
-குப்புசாமி செல்லமுத்து
குப்புசாமி செல்லமுத்து, பாரதி
உங்கள் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி.
மதுரா உங்கள் வருகைக்கு நன்றி. தாயுமானவர் என்ற இடத்தில் வள்ளலார் என்று இருக்கவேண்டுமோ?
செல்வநாயகி, நான் உங்கள் இடுகைகளை விருப்பத்துடன் எதிர்நோக்குபவன். எப்படி இந்த அழகான கவிதைமயமான இடுகையை விட்டேன் எனத் தெரியவில்லை. மனதிற்கு சுகம்தந்த ஆக்கம்.நன்றி
மணியன், இப்போதெல்லாம் எண்ணற்ற இடுகைகள் வந்துகொண்டிருப்பதால் அவை தமிழ்மணத்தில் தெரிவது குறைவான நேரமே. நானும் பலநேரங்களில் படிக்கவேண்டிய பல இடுகைகளைத் தவறவிட்டிருக்கிறேன். நன்றி உங்களின் மறுமொழிக்கு.
உங்கள் இந்தப் பதிவில் எனக்குப் பிடித்ததென சில வரிகளையும் சொற்றொடர்களையும் குறித்துவைத்துப் பின்னூட்டம் இட வந்தால் அவைகள் எல்லாமே ஏற்கெனவே முன்னோரால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன...!
Post a Comment
<< Home