நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Tuesday, May 23, 2006

கடல்கடந்துவந்து பெற்றதும் இழந்ததும்....


அவ்வப்போது மூட்டை கட்டிக்கொண்டேயிருக்கும் நாடோடி வாழ்க்கையில் இப்போது வசித்துக்கொண்டிருப்பது அமெரிக்காவின் விஸ்கான்சின்
மாநிலத்தின் "கிரீன்பே" என்னும் ஊர். ஆர்ப்பாட்டங்கள், அவசரங்கள் இல்லாத அமைதியான வாழ்வியல்முறையைக் கொண்டிருக்கும்
மக்களைக்கொண்ட இந்த ஊரை "கிராமம்" என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் அமெரிக்காவின் இரைச்சல்மிகு நகரங்களிலெல்லாம் இருந்துவிட்டு இங்கு வந்து சேர்ந்திருக்கிற நம் மக்கள். கேளிக்கை கொண்டாட்டங்களிலிருந்து விலகி ஏதோ ஒரு அமைதிக்கு ஏங்கும் மனதுடையவர்களுக்கு இந்த ஊர் பிடிக்காமல்போக வாய்ப்பில்லை. பார்ப்பதற்குச் சிறிய ஊராக இருந்தாலும் அமெரிக்காவின் தினசரிச்
செய்திகளில் அடிக்கடி வந்துபோகும் பெருமையும்கொண்டது. "கிரீன்பே பேக்கர்ஸ்" என்னும் புகழ்பெற்ற கால்ப்பந்தாட்ட அணியின் பிறப்பிடம் இது.
சுற்றி வளைத்திருக்கும் மிச்சிகன் ஏரியும் இதன் இன்னொரு சிறப்பு. டிஸ்யூ பேப்பர் தொழிற்சாலைகளும், இன்னபிற சிறு மற்றும் பெரும்தொழில்களும் அங்கங்கு அமைதியாக ஓரளவுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கிவருகின்றன. நிறைவான வேலைவாய்ப்புகள் மட்டுமின்றிக்
குறைவான வாடகைகளில் கிடைக்கும் நல்ல வீடுகளும் இருப்பதால் நடுத்தர மக்களுக்கு இங்கு வாழ்வது சுமையாக இல்லை. இன்னுமொரு
இனிக்கும் செய்தி சொல்லவேண்டுமென்றால் கார் பார்க்கிங்கிற்கு எங்கும் எப்போதும் "இடம் கிடைக்காது" என்ற கவலையே இல்லை. வேறு
மாநிலங்களில் இருந்தபோது சிரமப்பட்டுக் கற்றுவைத்திருந்த "பேரலல் பார்க்கிங்" முறை இங்கு வந்தபின் மறந்தேபோனது. அதற்கு
அவசியமேயில்லாத அளவு இடவசதி பரந்து கிடக்கிறது. மிக அருகில் மிருகக்காட்சி சாலைகளும், பூங்காக்களும் இருப்பது குழந்தைகளோடு
இருப்பவர்களின் பிரச்சினைகளுக்கு மருந்து. இதை எல்லாம்விட என்னைக்கவர்ந்த விடயம் இந்த ஊரில் உள்ள "ஒனிடா பழங்குடியினர்" வாழ்வு. இரண்டு தலைமுறைகளில் மற்றவர்கள் தலைநிமிர்ந்து பார்க்குமளவு தங்களை முன்னேற்றிக்கொண்ட ஒரு இனம். தங்களுக்குத் தேவையானவற்றைத் தாங்களே உழைத்துப் பெற்றுக்கொண்ட திறமை. தங்களுடைய தனித்தன்மைகளை முழுவதுமாக விட்டுக்கொடுத்துவிடாத அவர்களின் போராட்ட குணம்.

இப்படிப் பன்முகங்கள் கொண்ட கிரீன்பேயில் தெற்காசியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. தமிழர்களும்
கணிசமாக உள்ளனர். வழக்கமான விருந்துகள், பிறந்தநாள் விழாக்கள் என்று மட்டுமே கூடிக்கொண்டிருந்த நண்பர்களில் சிலருக்கு இங்கு தமிழ்
நிகச்சிகளை ஏற்பாடு செய்யவெண்டுமென்ற ஆர்வம் பிறந்து இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். முழுக்க முழுக்கத் தன்னார்வத்தில் சிறிய அளவில் துவக்கப்படிருக்கும் இம்முயற்சி தொடர்ந்து செல்லவேண்டுமென்ற ஆர்வம் எல்லோர் மனதிலும் அரும்பியிருக்கிறது. குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுத் தருவது, தமிழ் நூல்கள் வாசிப்பது, வாசிப்பதைப் பகிர்ந்துகொள்வது என்று திட்டங்கள் வகுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. முதன்முதலாக ஒரு
பட்டிமன்றம் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் துவக்கலாமென முடிவு செய்யப்பட்டிருக்கிறது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த நண்பர்கள் தமிழில்
பேசவேண்டுமென்று ஆர்வத்தோடு இதில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். குழந்தைகளும் பெருமளவில் இருப்பதால் எளிய தமிழ்ப் பாடல்களைப்
பாட இசையறிந்தவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். சாப்பாடு சம்பிரதாயங்களின்றி தாய்மொழியில் பேசியும், கேட்டும் இருக்க மட்டுமே
என்று முடிவாகியிருக்கும் அம்முதல் சந்திப்பில் இடம் பெறும் பட்டிமன்றத்தின் தலைப்பு "கடல்கடந்து வந்து பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா?" என்பது.

கடல்கடந்து வாழ்கின்றவர்களே தங்களின் சொந்த அனுபவத்தின் மூலம் அறிந்ததைப் பொருத்தமான உண்மைகளோடு அலசினால் நன்றாக
இருக்கும் என்ற யோசனையில் இப்படி ஒரு தலைப்பு. ஆயிரம் கேள்விகளோடும், சமாதானங்களோடும், அவ்வப்போது துளைத்தெடுக்கிற
குற்றவுணர்வுகளோடும், ஏற்பட்டுப்போன பள்ளங்களைக் கைவசமுள்ள மண்ணிட்டு நிரப்பும் அவசர நிறைவுகளோடும் புலம்பெயர் வாழ்வுக்குள்
புகுந்திருக்கிறவர்களுள் நானும் ஒருத்தி. இந்த விவாதத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் தமிழர்கள்தான் கலந்துகொள்கிறார்கள். அதிலேயே
உலகம் முழுதும் வாழும் புலம்பெயர்ந்த நண்பர்களின் கருத்துக்களையும் பதிவு செய்ய முடிந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். அப்படி அனைவரும்
சந்திக்கும் தமிழ்மணத்தில் கேட்காமல் வேறு எங்கு இதைக் கேட்பது? நண்பர்களே! நீங்க என்ன நினைக்கறீங்க? கடல்கடந்து வந்து நாம் பெற்றது
அதிகமா? இழந்தது அதிகமா?

17 Comments:

At 12:35 AM, May 23, 2006, Blogger -/பெயரிலி. said...

நான் அமெரிக்கா வந்தபுதிதிலே இருந்தது மில்வோக்கி. அப்போதுதான் கடைசியாக க்றீன்பே பக்கேர்கஸ் வென்றார்கள் ;-) [ஆனால், அதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை ;-))]
விஸ்கோன்ஸின் பொதுவாகவே நல்ல மாநிலம். அமெரிக்காவின் நடுவாந்திரத்தரத்திலுள்ளதென்பதாகக் கருதப்படுவது

 
At 2:18 AM, May 23, 2006, Blogger துபாய்வாசி said...

இதிலென்ன சந்தேகம்? கண்டிப்பாக நாமெல்லாம் இழந்ததே அதிகம்! வசதியான வாழ்க்கை மட்டுமே போதும் என்றால், இந்த கேள்வியே எழும்பியிருக்காது அல்லவா? கேள்வியிலிருந்தே தெரிகிறதே, இழப்பு என்று ஒன்று இருக்கிறது என. அது எவ்வளவு என கணக்கிட்டு, அது கிடைத்ததை விட குறைவு என பொய்ச்சமாதானம் வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம், ஆனால் உண்மை வேறு! (கசப்பான உண்மை!).

 
At 8:52 AM, May 23, 2006, Blogger paarvai said...

சகோதரி!
நான் ஈழத்தவன்; இங்கிருப்பதன் காரணம் பேறு! எனினும் நிம்மதியான வாழ்வுக்கு பணம் மாத்திரம் போதாது. அதைப் இந்தப் பணத்தைக் கொடுத்தும் வாங்கமுடியவில்லை! " கட்டிலை வாங்கமுடிந்த நமக்கு நித்திரையை வாங்க முடியவில்லை"
இன்றைய இந்த வசதிகள் இல்லாத என் பெற்றோர், பாட்டன்மார்;;;;நிம்மதியாகத் தான் வாழ்ந்து மறைந்தார்கள்;
அதனால் நாம் இழந்ததே! அதிகம்
யோகன் -பாரிஸ்

 
At 10:21 AM, May 23, 2006, Blogger செல்வநாயகி said...

பெயரிலி,
விஸ்கான்சின் மாநிலம் நிறையப் பிடித்துத்தான் போயிருக்கிறது எனக்கும்:))

துபாய்வாசி,
நீங்கள் சொன்னதுபோல் நம்மில் பலருக்கும் இழப்பின் வலி இருக்கத்தான் செய்கிறது. அதுவும் அரபுநாடுகள் போன்ற இடங்களில் குடும்பத்தைத் தாயகத்தில் விட்டுவிட்டு இங்கு வந்து தனித்திருந்து வேலைபார்க்கும் நண்பர்களின் வலி இன்னும் அதிகமே.

யோகன்,
உங்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடிகிறது. சமாதானங்களால் சரிசெய்யமுடியாத இழப்புக்கள் ஈழத்து நண்பர்கள் சந்திப்பவை.

மூவருக்கும் நன்றி.

 
At 11:11 AM, May 23, 2006, Blogger Karthik Jayanth said...

பெற்றது அதிகமா ? இல்லை இழந்தது அதிகமா ? ந்னு கேட்ட எனக்கு தெரியல
அப்படின்னுதான் சொல்லுவேன், இப்போதைக்கு .

மத்த படி நான் இந்த மாதிரி யோசிக்கல ஆனால் இந்த பொருள் தேடும் வாழ்வில் நான் எங்கு இருக்கிறேன் அப்படின்னு நினைவலைகளை இங்கு எழுதினேன்.

விஸ்கான்சின் கீரின்பே ஒரு நல்ல ஊர்.. Enjoy U r stay there. :-)

 
At 12:18 PM, May 23, 2006, Blogger செல்வராஜ் (R.Selvaraj) said...

செல்வநாயகி, அவ்வளவு எளிதில் கூறிவிட முடியாத ஒன்று என்று நினைக்கிறேன். இருப்பினும் பெற்றது அதிகம் என்றே நான் சொல்லுவேன். கடல் கடந்ததால் இழந்ததும் உள்ளனவென்றாலும் சொந்த மண்ணோடான நமது ஒட்டுதலாலும், பயணங்களாலும், சதா சுற்றித் திரியும் நினைவுகளாலும் அந்த இழப்பை நாம் முடிந்தபோது முடிந்தவரை நிறை செய்து கொள்ள முனைகிறோம்.

ஆனால் மேலாகப் பார்த்தால் தெரிகிற வசதிகள் தவிரவும், வெளியே கிடைக்கிற அனுபவங்கள், மாறுபட்ட சிந்தனைகள், மாண்புகள், இயற்கை வளங்கள், வளரும் இரசனைகள், நம்பிக்கைகள்... என்று நிறையப் பெற்றிருக்கிறோம்.

 
At 1:22 PM, May 23, 2006, Blogger Thekkikattan said...

நாயகி,

நானும் இங்கு வந்து குப்பைக் கொட்ட துவங்கி ஒரு பத்தாண்டுகள் ஒடிவிட்டது. நாம் இங்கு நடத்தும் அல்லது தொடங்கும் அனைத்தும் ஒரு விதமான பள்ளத்தை நிரப்பும் ஆவாவுடனே என்பது சொல்லி தெரிவதற்கில்லை.

பெறுவது அதிகமாகும் எப்பொழுது எனில் தன்னை நிறைய தொலைத்துக் கொள்வதை மறந்தபொழுது... உதாரணம்: வாழும் கலாச்சாரத்துடன் தன்னை பிணைக்கும் பொருட்டு நம்மை நாமே சாமதானப்படுத்தி ஒவ்வொரு விசயாமாக போக விடுவது நம்மை விட்டு...

இவைகள் தொடர்ந்து பரிணாமத்தை போன்று வளர்ந்து கொண்டே இருக்கும்... நமக்கென குழந்தைகள் பிறந்ததிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக... பிறகு குழந்தைகள் இங்கு வளரும் பொருட்டு இன்னும் அதிகமான let go of our own vaules whichever you cherished when you were young. இப்படியாக நிறைய பெற்றோர்கள் தன்னைத் தானே இழந்து தனது குழந்தைகளுக்காக நடைபிணமாய் இங்கு மாட்டித் தவிப்பதை அவர்களின் மூத்த பருவத்தில் பார்த்தும், கேட்டும் உணர்திருக்கிறேன்.

குழந்தைகளும் தனக்கென ஒரு வாழ்வு அமைந்தவுடன் அவர்கள் அத்துடன் இயைந்து வாழும் பொழுது நீங்கள் மட்டியுமே எஞ்சு இருக்கிறீர்கள், உங்களின் சுயத்துடன், பட்டி மன்றம் நடத்திக் கொண்டு.

தொலை நோக்கு பார்வை இருந்தால் இந்த சங்கிலியை சரியான திட்டத்தின் மூலம் உடைத்து யாவரும் பயனுறலாம் என்பது எனது எண்ணம்.

அன்புடன்,

தெகா.

 
At 10:37 PM, May 23, 2006, Blogger செல்வநாயகி said...

கார்த்திக் ஜெயந்த்,
அங்கே போய்ப் பார்த்தேன். இழந்தவை பற்றிய பதிவாகத்தான் தெரிந்தது.

செல்வராஜ்,
அப்பப்ப நீங்க சொல்ற மாதிரி இப்படி இரண்டு பக்கங்களையும் நினைத்துக்கொள்வதாகத்தான் இங்கு வாழ்வு நகர்கிறது.

தெக்கிக்காட்டான்,
உங்களின் நீண்ட பின்னூட்டம் நிறைய விடயங்களைச் சொல்கிறது.

இதன் பின்னணியாக என்ன பொருள் கொள்வதென்று அனுமானிக்கக் கொஞ்சம் சிரமமாக இருக்கிறது (எனக்கு). நீங்களே விளக்கினால் மகிழ்வேன்.

கருத்துக்களைப் பகிர்ந்தமைக்கு அனைவருக்கும் நன்றி.

 
At 5:38 PM, May 24, 2006, Blogger பாலராஜன்கீதா said...

http://kvraja.blogspot.com/

வலைப்பதிவர் கேவிஆர் அவர்கள் சனி, செப்டம்பர் 17, 2005 தேதியிட்ட செவிக்குணவு என்ற தலைப்பில் சாலமன் பாப்பையா அவர்கள் தலைமையில் ரியாத் தமிழ்ச் சங்கம் "திரைகடலோடி திரவியம் தேடியதில் இழந்தது அதிகமா, பெற்றது அதிகமா?", என்ற தலைப்பில் நடத்திய பட்டிமன்றம் குறித்து எழுதியிருக்கிறார்.

 
At 8:12 PM, May 24, 2006, Blogger சரவணன் said...

செல்வநாயகி, உங்கள் குழுவினர் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள். இதில் யோசிக்க என்ன இருக்கிறது...

பெறுவது போல் ஒரு தோற்றம். பெறப் பெற இன்னும் அதிகமாக இழக்கிறோம். கடன் தொல்லை இல்லை, கார்களுக்குப் பஞ்சம் இல்லை, கால் கடுக்க நடப்பதும் இல்லை. ஆனால் கவலைகள் இல்லாமல் இல்லை.

தங்கை பையனுக்கு மடியில் வைத்து மொட்டை அடிக்க முடியுமா? அம்மாவை அவள் விரும்பும் இடத்துக்கு கூட்டிச் செல்ல முடியுமா? அப்பாவை ஓய்வெடுக்கச் சொல்லி விட்டு அவர் நமக்குச் செய்ததை திருப்பிச் செய்ய முடியுமா?

இன்னும் எத்தனை சொல்ல?

 
At 1:59 AM, May 25, 2006, Blogger செல்வநாயகி said...

உங்கள் சுட்டிக்கு நன்றி பாலராஜன்கீதா. இதைக் கொஞ்சம் வித்தியாசமாகச் செய்யும் எண்ணம் விளைந்ததால்தான் ஊரிலிருந்து தொழில்முறைப் பேச்சாளர்களையெல்லாம் கொண்டுவரும் எண்ணமின்றி முழுக்கமுழுக்க அப்படிப்பட்ட வாழ்க்கையிலிருப்பவர்களையே அதுகுறித்துப் பேசவைக்கும் முடிவு செய்யப்பட்டது. அக்குறிப்பிட்டவர்களின் கருத்துக்கள் தாண்டி நம் வலையுலக நண்பர்களின் எண்ணங்களையும் அங்கு சேர்ப்பிக்க எண்ணினேன். இங்கிடப்படும் பின்னூட்டங்களை அச்சு நகல்கள் எடுத்துவைத்து விவாதத்தின்பின் தீர்ப்புக்குமுன் வினியோகிக்கலாம் என்றொரு யோசனை. பார்க்கலாம்:))

சரவணன், நன்றி உங்கள் மறுமொழிக்கு.

 
At 9:50 AM, May 25, 2006, Blogger Kuppusamy Chellamuthu said...

சுய முடிவாலும், நிர்ப்பந்ததாலும் புலம் பெயர்ந்த அனைவரின் உள்ளப் பிரதிபலிப்பும் இதுவாகத்தான் இருக்கும். நல்ல பதிவு.

-குப்புசாமி செல்லமுத்து

 
At 1:07 PM, May 26, 2006, Blogger செல்வநாயகி said...

நன்றி குப்புசாமி செல்லமுத்து.

 
At 11:13 PM, May 28, 2006, Blogger துளசி கோபால் said...

செல்வா,
எதுன்னு இன்னும் சொல்லத்தெரியலை. ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான காரணங்களுக்காக வெளியே வந்திருக்கோம்.

உங்கள் அணி வெற்றிபெற வாழ்த்து(க்)கள்.

 
At 12:38 AM, May 29, 2006, Blogger செல்வநாயகி said...

துளசிம்மா,

நான் எந்த அணியிலும் இல்லை. தீர்ப்புச் சொல்லணும்:)) அதுக்குத்தான் புலம்பெயர் வாழ்வில் உங்களை மாதிரி அனுபவம் நிறைந்தவர்கள் என்ன சொல்றீங்கன்னு பார்க்கலாம்னு இப்பதிவைப் போட்டேன். நீங்க பட்டுனு ஒரு பதிலச் சொல்லாம மௌனமா இருக்கறீங்க:)) நானும் எல்லோரும் பேசுவதைக் கேட்டுவிட்டு மௌனமாக எழுந்து வருவது மாதிரி இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்:)) நன்றி.

 
At 4:41 PM, June 01, 2006, Blogger Thekkikattan said...

செல்வநாயகி எழுதிய *நான் ரசித்த பயணம்* என்ற கட்டுரையை வாசிக்க வாசிக்க என் வாழ்க்கை பின்னோக்கி பயணித்ததை உணர முடிந்தது. எந்த அளவிற்கு அந்த கடந்த கால நினைவுகள் நெஞ்சிலே தைத்துப் போயிருந்தால் காலச் சுவடுகள் அவ் நினைவுச் சுவட்டினை தீண்ட முடியாமல் போயிருக்கும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

செல்வநாயகி சிறிது நாட்களுக்கு முன்பு தமிழ்மணத்தில் ஒரு கேள்வி ஒன்றை முன் வைந்திருந்தார் - அது புலம் பெயர்வதால் நமக்கு ஏற்படுவது இழப்பா அல்லது சேர்ப்பா என்று. அதற்கு அங்கு அவருக்கு கொஞ்சம் சூசகமாக எனக்குப் பட்டதை பகிர்ந்திருந்தேன். அதற்கு அவர் ஒன்றும் பிடிபடாமல் கொஞ்சம் விளக்கச் சொல்லியிருந்தார்.

அவ்வாறு என்னால் செய்ய முடியவில்லை எனினும் இதோ அதற்கு விடை அவரே கொடுத்திருக்கிறார், இந்த கட்டுரையின் மூலம். இதே தான் நான் சொல்ல வந்திருந்தது. இழப்பே தான். இவ் அனுபவ மூடைகள் ஒரு பொக்கிஷம் எவ்வளவு கொட்டிக் கொடுத்தாலும் திரும்ப பெறமுடியாதது. நமக்கு மீண்டும் இதே மாட்டு வண்டிச் சவாரி கிடைத்தாலும், அந்த அனுவத்துடன் புது கண்டோட்டத்துடன் ஒப்பிட முடியாது, காரணம் புது விசயசங்கள் நம்மூள் நிறைய அழுக்கு மூடைகளை அடுக்கி வைத்து விட்டது. இழப்பு, Sometime ignorant is bliss!

தெகா

P.S: நண்பர் சரவணன் சற்றே விவரித்துள்ளார், இன்னும் எவ்ளோவோ இருக்கிறது. நாமும் நம் மனமும் பரிணமிக்கும் பொழுது இழந்தது பொருட்டாக இருப்பதில்லை... ஆனால் சில பேர் கொஞ்சம் கஷ்டப் படுகிறார்கள்... மாட்டுச் சவாரி, மழைக்கால தன் ஊர் மண் வாசனை, பொரித்த சோளம், சுவற்றோரத்தில் மழைக்காக ஒன்றும் விவசாயி இப்படி எத்தனையோ ஏக்கங்களுக்கு கிடையே... அமெரிக்கா (தன்) வீட்டுப் பிள்ளைகளின் டீனேஜிய தர்க்கத்தை நிலை கொள்ளும் பொருட்டு அந்த கால நினைவுகள் ஓடி வந்து மனதில் ஒட்டிக் கொள்ளும் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது - அந்த சில பேருக்கு.

 
At 12:28 AM, June 02, 2006, Blogger செல்வநாயகி said...

தெக்கிக்காட்டான்,

வாசிப்பின் பின்னான, நேரம் செலவழித்துப் பதிந்த உங்கள் நீண்ட மறுமொழிக்கு மிக்க நன்றி. என் பதிவின் இடுகைக்கான உங்கள் மறுமொழியை மேலெடுத்து மீண்டும் விளக்கியதற்கும்.

 

Post a Comment

<< Home