நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Wednesday, July 05, 2006

அடைக்க முடியாது "ஆறுக்குள்"

தமிழ்மணத்தில் விதவிதமான "ஆறு" பதிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. என்னையும் ஒரு "ஆறு" பதிவு போடுமாறு அழைத்திருந்தார் தெக்கிக்காட்டான். இப்போதுதான் நேரம் கிடைத்ததென்றாலும் இப்பதிவு எழுதுவதில் எனக்கு நிறையக் குழப்பங்கள் உண்டு. உண்மையைச் சொன்னால் இப்படி ஒரு கேள்வியை இப்போதுதான் நான் முதலில் சந்திக்கிறேன். எனக்குப் பிடித்தவைகள் என்று என்னையே கேட்டுப்பார்க்கிறேன். மழைக்குப் பின்னான உடனடி வெய்யிலில், ஈரத்துடன்
மினுமினுக்கும் இலைகளைப்போல் மனதின் அடுக்குகளில் படிந்துகிடக்கின்றன பலவும் பலவிதங்களில் "பிடித்தவைகள்" வரிசையில். எழுதலாம் எனப் பட்டியலிடும்போதுதான் பிரச்சினை. காரணம் "ஆறுக்குள்" அடங்க மறுக்கின்றன அவை. என் "பிடித்தவைகள்" ஒரு எல்லைக்குள் வராதனவாய் விரவிக்கிடக்கின்றன எங்கும்.

பிடித்த இடங்கள் எவையென்று எண்ணிப்பார்க்கிறேன். மண்ணில் விழுவதற்கு முன் கருவறை பிடித்திருக்கலாம். பிறந்தபின் தாயின் மடி பிடித்திருந்தது. திரிந்து விளையாடிய வீதி பிடித்திருந்தது. படித்த பள்ளியும், வசித்த ஊரும், வயல்காடும், வயல்களுக்கு நடுவே ஓடிய வாய்க்காலும், கோடைவிடுமுறையின் கொட்டும் வெப்பத்தில் கொட்டமடித்து மகிழ்ந்த உறவினர்கள்
வாழ்ந்த ஊரின் சிறுசிறு நீர்நிலைகளும் பிடித்தேயிருந்தன அப்போது. நினைவலைகளில் இப்போதும்.வாலிபத்தில் கல்வி வழங்கிய கல்லூரியும், உலகம் மறந்து புத்தகங்களை நேசிக்கவைத்த நான் நுழைந்த நூலகங்களும், ஒரு யோக வகுப்பில் என்னையே எனக்கு உருமாற்றிக்கொடுத்த அந்த ஆஸ்பெஸ்டாஸ் கூரைகொண்ட அழகான அறையும், ஏறி இறங்கிய மலைகளும், மணிக்கணக்கில் குளித்துக்கொண்டேயிருந்த அருவிகளும், மிதமான ஒலியில் அழகான பாடலை எந்த
ஒரு சினிமாப் பாடகர் குரலிலும் கேட்கமுடியுமொரு பேருந்தில் உட்கார்ந்துகொண்டு பயணிக்கக் கிடைக்கும் ஒரு இருக்கையும், மனதின் வெப்பமோ குளிர்ச்சியோ பகிர்ந்து கொள்ள முடிந்த நண்பர்களின் வீடுகளும் பிடித்தவைகளே!முதன்முதலாய்க் காதல் தோன்றியபோது இருந்த இடமும், காதலித்தபோது பிடிக்காதவை என்று எதுவுமேயில்லையென்ற வகையில் பிடித்திருந்த எல்லா இடங்களும் இப்போதும் பிடித்தேயிருக்கின்றன. என் வீடு பிடிக்குமென்பதைக்கூட
பொத்தாம்பொதுவாய்ச் சொல்ல மறுக்கிறது என்மனம். வீட்டிற்குள் எப்படியோ என்னை இழுத்துப்பிடித்து வேலைவாங்கி தன்னை பளிச்சென்று காட்டிக்கொள்ளும் சமையலறையும், அடுக்கிமுடித்ததாலும் அடிக்கடி கலைந்துகிடக்குமென் புத்தக அலமாரியும், படுத்தவுடன் நித்திரை வழங்கும் உட்காரும் இருக்கையும், சன்னலுக்கருகே தேநீர்குடிக்கத் தேர்ந்தெடுக்கும் பொழுதுகளில் அமர வசதியாய் அங்கே கிடக்கும் கொஞ்சம் காலுடைந்த நாற்காலியும், பூச்செடிகள் வைக்கப்படாமல் சிறிது
வெறுமையாயிருந்தாலும் என்னைத் தினம் ஒரு தடவையாவது உட்கார அழைக்கும் பால்கனியும், என்று வீட்டிற்குள் பிடித்தவைகளைத் தனியாய்ப் பட்டியலிடாமல் பொதுவாய் "வீடென்றால்" எப்படி அது முழுமை பெறுமென்கிறது மனம். இப்படி இடத்திற்குள் இடமாய் விரிந்துகொண்டேயிருக்கின்றன எனக்குப் பிடித்த இடங்கள்.

பிடித்த மனிதர்களையாவது ஆறுபேரைச் சொல்லமுடியுமா என்று பார்த்தால் அதிலும் சிக்கல். பிடித்திருந்து பின் பிடிக்காமல் போனவர்களும், பிடிக்காதிருந்து பின் பிடித்துப்போனவர்களும், எப்போதும் பிடித்தேயிருப்பவர்களுமாய் நிறைய இருக்கிறார்கள். இதில் எதில் எந்த ஆறு பேரைச் சொல்வது:)) இந்தக் கால் நூற்றாண்டுக்கும் மேலான வாழ்க்கையில் வந்து போன, கூடவே வாழ்ந்துகொண்டிருக்கிற மனிதர்களின் பட்டியல் நீளமானது. உற்றுப்பார்த்தால் "ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்
ஒரு குழந்தை மனம் இருக்கிறது" என்று எங்கோ படித்த ஞாபகம். அந்தக் குழந்தை மனதை தங்களை அறிந்தோ அறியாமலோ வெளிப்படுத்தும் வேளைகளில் எல்லா மனிதரும் எனக்குப் பிடித்து விடுகிறார்கள். அவசரங்கள் தின்றுகொண்டிருக்கும் அன்றாட அலைச்சல்களிலும்கூட எங்காவது ஒரு இடத்தில் அன்பினால் நனைத்து நம்மை ஆச்சரியப்படுத்திவிட்டு ஓடிக்கொண்டேயிருக்கும் மனிதர்களைச் சந்தித்தே வாழ்கிறோமென்பதால் பிடித்தவர்கள் என்று சொல்லுகையில் அவர்கள் எல்லோரையுமல்லவா சொல்லவேண்டும்? நம்மை நாம் விரும்பியபடி வளர உதவிய பெற்றோர்கள்,
உறவினர்கள், நண்பர்கள் என்பதோடு நின்றுபோய்விடுவதில்லை நமக்குப் பிடித்தவர்கள். நான் பள்ளிக்குக் கிளம்பிய ஒரு காலையில் பாதிவழியில் சுற்றும் சங்கிலி அறுந்து நின்றுபோன என் மிதிவண்டியை அந்நேரத்தில் சாலையில் போய்க்கொண்டிருந்த ஒரு மனிதர் சரிசெய்து கொடுத்தபோதும், பேருந்திலிருந்து இறங்கி எதிரே வந்துகொண்டிருந்த வாகனம் பார்க்காமல் சாலை கடக்கையில் என்னை அந்த வாகனத்திடமிருந்து காப்பாற்ற கைபிடித்து இந்தப்பக்கம்
இழுத்தெறிந்த பெண்ணொருவரும், இதோ இப்போது பணி முடிந்து திரும்புகையில் பிரச்சினை செய்த என் வாகனம் சரியாகக் கைகொடுத்த ஒரு வெள்ளைக் கிழவரும் என் வாழ்வில் ஒரு முறைதான் வந்தார்களெனினும் வந்தபோது பிடித்தேயிருந்தார்கள். எனக்கென்று எதுவும் செய்யக்கூட வேண்டாம், உதிர்ந்து கிடக்கும் அன்று பூத்த பூவை மிதிக்காமல் நடப்பவர்கள், செத்துப்போய்க்கிடந்தாலும் அதை மேலும் சிதைக்க விரும்பாமல் சாலையில் கிடக்கும் அணிலொன்றுக்காய்
வாகனத்தை வளைத்து ஓட்டுபவர்கள், மழை வந்தவுடன் குடை எடுக்காமல் கொஞ்சம் நனையத் தெரிந்தவர்கள் என்று இதுபோன்ற வரிசைகளில் கண்ணுறுகின்ற மனிதர்களும் பிடித்தவர்களே! அடைக்க முடியாது அவர்களை "ஆறுக்குள்" என்னால்.

மேற்சொன்ன தனிப்பட்ட வாழ்வியல் அனுபவங்கள் தவிர்த்து எல்லோர்க்கும் பொதுவான வேறு சில விடயங்களில்(லாவது) ஒரு "ஆறு" பட்டியல் தர முயற்சித்திருக்கிறேன் கீழே. ஆனால் அவையும் இந்த "ஆறு" மட்டுமே அல்ல என்பதுதான் உண்மை.

பிடித்த சமூக சிந்தனையாளர்களில் ஆறு பேர் (இப்படி எழுதுவதுதான் சரியென்று தோன்றுகிறது)
**************************************************
பெரியார்
சேக்குவாரா
அம்பேத்கார்
காமராஜர்
ஜீவா
அன்னை தெரசா

விரும்பிப் படித்தவை அல்லது படிப்பவைகளில் ஆறு பேர்
**************************************************************
பாரதி
ஆண்டன் செகாவ்
தொ.மு.சி.ரகுநாதன்
வைரமுத்து
கல்யாண்ஜி
மனுஷ்யபுத்திரன்

பார்த்த படங்களில் பிடித்தவைகளில் ஆறு
:*********************************************
விதி
பாரதி
கருத்தம்மா
காந்தி
டைட்டானிக்
சதிலீலாவதி.

கேட்ட பாடல்களில் பிடித்தவைகளில் ஆறு
:*********************************************
பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால்வார்க்க வா
மார்கழிப்பூவே மார்கழிப்பூவே உன் மடிமீது ஓரிடம் வேண்டும்
போறாளே பொன்னுத்தாயி பொலபொலவென்று கண்ணீர் விட்டு
பூங்காத்து திரும்புமா ஏம்பாட்டெ விரும்புமா
கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே
சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைத்தேனே


இப்படி ஒரு பதிவு எழுத வைத்த தெக்கிக்காட்டான் அவர்களுக்கு நன்றி. இதைப் படிப்பவர்கள் திட்ட விரும்பினால் அதுவும்
அவருக்கே:))

18 Comments:

At 3:15 AM, July 05, 2006, Blogger ramachandranusha(உஷா) said...

"ஆறுக்குள்" அடங்க மறுக்கின்றன அவை. என் "பிடித்தவைகள்" ஒரு எல்லைக்குள் வராதனவாய் விரவிக்கிடக்கின்றன எங்கும்.//

அதே, அதே :-) பிடிக்காதவைகளைப் பட்டியல் போட சொன்னாலும் இதே பிரச்சனைதான்

 
At 4:05 AM, July 05, 2006, Blogger ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar) said...

enjoyed !
not the list but
those poetic sentences that preceeded the list. selva, i love your style : ) anbudan J

 
At 6:00 AM, July 05, 2006, Blogger Geetha Sambasivam said...

அங்கே போய்த் திட்டிட்டு வரட்டுமா? இங்கேயே திட்டிடலாமா?

 
At 10:34 AM, July 05, 2006, Blogger அருள் குமார் said...

இதுவறை தமிழ் மணத்தில் நான் படித்த ஆறு-களில் எனக்கு மிகப்பிடித்தது உங்களுடையதுதான்.

உண்மையைச்சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் வரிசைப்படுத்திருந்த ஆறுகளை விட, அதற்கு முன் கொடுத்திருந்த முன்னுரையைத்தான் திரும்பத்திரும்பப் படித்தேன். அதில் பெரும்பாண்மையானவை நானும்(பலரும்) அனுபவித்தவையே!

நல்ல வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்தமைக்கு நன்றி :)

 
At 12:56 PM, July 05, 2006, Blogger Thekkikattan|தெகா said...

நாயகி,

என்ன சொல்லச் சொல்றீங்க. தெரியும் எனக்கு, நீங்க வருவீங்க ரொம்ப வித்தியாசமா. வந்தீங்க. அடிச்சு ஆடீட்டீங்க.

சாத்தலா இருந்துச்சுங்க.

நான் உங்களொடத "கட் பண்ணி பேஸ்ட்" பண்ணி சொல்ல ஆரம்பிச்சா சொல்லிக் கிட்டே இருக்கலாம்... ஒரு சின்ன சாம்பில் கொடுக்கிறென் இருந்தாலும்...


//ஒரு யோக வகுப்பில் என்னையே எனக்கு உருமாற்றிக்கொடுத்த அந்த ஆஸ்பெஸ்டாஸ் கூரைகொண்ட அழகான அறை...//

//அடுக்கிமுடித்ததாலும் அடிக்கடி கலைந்துகிடக்குமென் புத்தக அலமாரியும், //

:-))) புரிகிறது.

//செத்துப்போய்க்கிடந்தாலும் அதை மேலும் சிதைக்க விரும்பாமல் சாலையில் கிடக்கும் அணிலொன்றுக்காய்
வாகனத்தை வளைத்து ஓட்டுபவர்கள்,//

:-) மனிதம் வாழ்கிறது ஒரு அத்தாட்சி (அணில்).

வாழ்வினை "இந் நொடியில்" - ஒரு "மைண்ட்ஃபுல்னெஸ்" வுடன் நீங்கள் வாழ்வது ஒவ்வொரு வாக்கியத்திலும் தெரிகிறது.

மனதில் ஒட்டிப்போவவை அனைத்தும் அத்துடன் வாழ்ந்திருந்த தருனத்தில்தான் நிகழ்கிறது, அதுவோ கடைசி தொட்டும் நம்முடனே வருகிறது.

இங்கே நீங்கள் ஒவ்வொரு நொடியும்........

என்னை மதித்து இந்த பதிவினை இங்கு கொணர்ந்ததிற்கு ரொம்ப சந்தோஷம்.

தெகா.

பி.கு: திரும்பவும் வருவேன், "கீதா சாம்பசிவம்" அவர்களுக்காக :-))

 
At 2:18 PM, July 05, 2006, Blogger நாமக்கல் சிபி said...

நான் தெகாவையே திட்டி விடுகிறேன்.

நல்ல பதிவுதானைய்யா!

//கேட்ட பாடல்களில் பிடித்தவைகளில் ஆறு//

மிக அருமையான பாடல்கள்.

 
At 11:56 PM, July 05, 2006, Blogger செல்வநாயகி said...

உஷா,
வாங்க வாங்க. போட்டி, பரிசு என்று பரபரப்பாக இருக்கிறீர்களென நினைக்கிறேன். நின்று பின்னூட்டமிட நேரமிருப்பதில்லையெனினும் படித்துக்கொண்டிருக்கிறேன் உங்கள் பதிவுகளை.

ஜெயந்தி,
நீங்கள் வலைப்பக்கம் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறீர்களென அறிய மகிழ்ச்சி.

கீதா,
உங்கள் பின்னூட்டம் என்ன சொல்கிறது?

அருள்குமார்,
இப்பதிவு உங்களுக்குப் பிடித்த வாசிப்பனுபவமாக இருந்ததில் மகிழ்ச்சி.

தெக்கிக்காட்டான்,
உங்கள் பின்னூட்டம் ஊக்கம் அளிக்கிறது.

நாமக்கல் சிபி,
உங்கள் மறுமொழியைப் பிரசுரிக்கச் சொன்னபோது செய்துவிட்டதாகச் சொன்ன பிளாக்கர், நிறங்களுக்குக் கொண்டு வந்து சேர்க்காமல் விட்டது ஏனென்று தெரியவில்லை, நான் பிரசுரிக்கச் சொல்லிய கையோடு அதை என் மின்னஞ்சல் பெட்டியிலிருந்தும் நீக்கிவிட்டதால் மீண்டும் இங்கு இடமுடியவில்லை. மன்னிக்கவும். நீங்கள் அப்பின்னூட்டத்தைச் சேமித்திருந்தால், முடிந்தால் அனுப்புங்கள். இன்னொருமுறை பிரசுரித்துப் பார்க்கிறேன்.

அனைவர்க்கும் நன்றி.

 
At 12:01 AM, July 06, 2006, Blogger செல்வநாயகி said...

சிபி,
மதியம் பிரசுரிக்கச் சொன்னதை இவ்வளவு நேரம் பதிவில் காட்டாமல், இப்போது நான் பின்னூட்டமிட்டவுடன் உங்களுடையதையும் கொண்டுவந்து காட்டுகிறது பிளாக்கர். பிரச்சினை சரியாகிவிட்டதென நினைக்கிறேன்:))

 
At 12:22 AM, July 06, 2006, Blogger ilavanji said...

செல்வநாயகி,

இரண்டாம் மூன்றாம் பத்திகள் அட்டகாசமா இருக்கு. படிக்கவே இத்தனை ரசனையான இருக்க, அனுபவித்து எழுதிய உங்களுக்கு எத்தனை மகிழ்ச்சியோ?!

உங்களையெல்லாம் 600 போட கூப்பிட்டிருக்கனும்! :)))

 
At 8:40 AM, July 07, 2006, Blogger Thekkikattan|தெகா said...

நாயகி,

//இப்படி ஒரு பதிவு எழுத வைத்த தெக்கிக்காட்டான் அவர்களுக்கு நன்றி. இதைப் படிப்பவர்கள் திட்ட விரும்பினால் அதுவும்
அவருக்கே:)) //

:-)) நீங்கள் இப்படி சொல்லியிருக்கலாம், பாரட்ட விரும்புபவர்கள் பின்னூட்டத்தை இங்கெயும், திட்ட(அடிக்க, கொலை செய்ய) எண்ணுபவர்கள் "காட்டான்" இடத்திலும் செய்து விடவுமின்னு அந்த டிஸ்கியெ போட்டுறுக்கலாம் ;-)))

 
At 2:16 PM, July 07, 2006, Blogger Sivabalan said...

இந்த பதிவு நன்றாக உள்ளது.

உங்களுடைய மற்ற பதிவுகளை இன்னும் படிக்கவில்லை. படித்துவிடுகிறேன்.

நன்றி.

 
At 2:28 PM, July 07, 2006, Blogger Suka said...

அருமையான பதிவு.. பழைய நினைவுகளுடனும்.. புன்னகைகளோடும் சில ஏக்கப் பெருமூச்சுகளையும் கொடுத்துவிட்டது இந்தப் பதிவு..

வாழ்த்துக்கள்
சுகா

 
At 1:18 PM, July 08, 2006, Blogger செல்வநாயகி said...

இளவஞ்சி, சிவபாலன், சுகா,
உங்கள் மறுமொழிகளுக்கு நன்றி.
தெக்கிக்காட்டான்,
ஆறுபேரைச் சொல்லச்சொன்னா சொல்லீட்டுப்போகாம என்னமோ நீட்டி எழுதிவச்சிருக்காங்கன்னு யாரும் திட்டுவாங்களோன்னுதான் அதெல்லாம் உங்களுக்குன்னு கைகாட்டினது:))

 
At 5:10 AM, July 31, 2006, Blogger தருமி said...

தெக்காவுக்கு நன்றி.

 
At 1:19 PM, July 31, 2006, Blogger செல்வநாயகி said...

நன்றி தருமி.

 
At 5:26 AM, August 06, 2006, Blogger தருமி said...

நான் தெக்காவுக்குத்தானே நன்றி சொன்னேன் :)

 
At 11:36 AM, August 14, 2006, Blogger வீரமணி said...

வணக்கம் செல்வநாயகி மேடம். இன்றுதான் அருள்..உங்களைபற்றி சொன்னார்.. உங்கள் எழுத்து நடை மிகமிக அருமை...இனி தினமும் வாசிக்கிறேன்.... அன்புடன்
வீரமணி

 
At 5:19 PM, August 14, 2006, Blogger செல்வநாயகி said...

வணக்கம் வீரமணி. நீங்கள் தினமும் வாசிக்குமளவு அடிக்கடி பதிவிடும் சுறுசுறுப்பான ஆளில்லை நான்:)) என்றாலும் முயற்சிப்பேன்:)) நன்றி உங்களுக்கும், அருளுக்கும்.

 

Post a Comment

<< Home