நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Monday, July 10, 2006

எங்கள் சாமிகள்!

லோகம் துன்பப்பட நேர்கையிலெல்லாம்
இவர்கள் அவதாரங்களாகிப் போரிடுவர்

துர்மிருகங்கள் பற்றிய பயங்களுக்கு
இவர்களின் நாமம் ஜெபித்தாலே போதும்

ஏழைபக்தனைப் பணக்காரனாக்கவும்
பணக்காரத்திமிரை ஏழையாக்கி அடக்கவும்
வெறும் திருவிளையாட்டுக்கள் கொண்டே
செய்யமுடிந்தவர்கள் இவர்கள்

யாருமற்ற அனாதைகளுக்கும்
பால்நினைந்தூட்டும் தாயினும்
சாலப்பரிந்து ஊட்டும்
காருண்யக்கதைகளின்
நாயகர்கள் இவர்கள்

இவர்கள்பால் பற்றுவைத்து
இவர்களே சரணென்று
இவர்களின் பசிதீர்க்க
பிள்ளைக்கறி படைக்கவும்
தயங்காத மானிடர்க்கு
மரணித்த குழந்தையையும்
உயிர்தரிக்க வைக்கும்
மாதிறனுடையவர்கள்

தீமையை அழிக்கவே சமரெனினும்
அரசனைப்போல் அன்று கொல்லாமல்
நின்று கொல்லும்
நிதானம் புரிந்தவர்கள் இவர்கள்

இவ்வளவும் தெரிந்திருந்தும்
பெண் தொட்டால்
பரவும் தீட்டிலிருந்து
தம்மைக் காத்துக்கொள்ளத் தெரியாமல்
கதறும் எங்கள் சாமிகள்!

22 Comments:

At 9:41 PM, July 10, 2006, Blogger Thekkikattan said...

நாயகி,

//இவ்வளவும் தெரிந்திருந்தும்
பெண் தொட்டால்
பரவும் தீட்டிலிருந்து
தம்மைக் காத்துக்கொள்ளத் தெரியாமல்
கதறும் எங்கள் சாமிகள்!//

தேர் யு வார்! என்னாடன்னு படிச்சுகிட்டே வந்தேன், இன்னும் நாயகியெ காணமென்னு கடைசி அஞ்சு வரிகள் சொன்னுச்சு, இங்க இருக்காங்க பாருன்னு.

மிக அருமை, இரண்டு வாரங்களா ஓடின ஒரு விசயத்தை ஒரு பக்கத்துக்குள்ளெ வைச்சு முடிச்சுட்டீங்க.

நன்றி!

 
At 10:19 PM, July 10, 2006, Blogger டிசே தமிழன் said...

ஒரு தோழியுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது,-ஏன் உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமற்போனது- என்று உரையாடலின் நீட்சியில் கேட்டபோது, 'அன்பும் அரவணைப்பும் தேவையான இவ்வாறான நாட்களில் ஆண் தெய்வங்களையாவது விடு, பெண் தெய்வங்களையும் நெருங்கமுடியாது என்று போதிக்கின்ற மதமும் கடவுளும் எனக்கு வேண்டாம் என்று ஒதுக்கி/ஒதுங்கி விட்டேன்' என்று அவர் கூறியதுதான் உங்களது இந்தக்கவிதையை வாசிக்கும்போது நினைவுக்கு வருகின்றது.

 
At 11:30 PM, July 10, 2006, Blogger நாமக்கல் சிபி said...

//
இவ்வளவும் தெரிந்திருந்தும்
பெண் தொட்டால்
பரவும் தீட்டிலிருந்து
தம்மைக் காத்துக்கொள்ளத் தெரியாமல்
கதறும் எங்கள் சாமிகள்!
//

சபாஷ்! செல்வநாயகி!
ஐந்தே வரிகளில் அடித்து நொறுக்குகிறீர்கள்!

 
At 12:17 AM, July 11, 2006, Blogger விழி said...

நாயகி! அசத்திவிட்டீர்கள்!!

தங்களைக் காத்துக் கொள்ள முடியாத சாமி(எனும் மாயை) எங்களை எப்படி காக்கும் என்று நம்பி, அதிலேயே மூழ்கிக் கிடக்கிறார்களோ தெரியவில்லை.

 
At 8:47 AM, July 11, 2006, Blogger செல்வராஜ் (R.Selvaraj) said...

செல்வநாயகி, கருத்து நன்று. கவிதை சுமார் தான்.

கொங்கு நாட்டுக் குலதெய்வங்கள் சிலவற்றில் கூடப் பெண்கள் இன்னும் உள்ளே அனுமதிக்கப்படாதது நினைவுக்கு வருகிறது. இது பற்றி எழுத வேண்டும் என்று முன்பு நினைத்திருக்கிறேன்.

 
At 10:23 PM, July 11, 2006, Blogger சரவணன் said...

செல்வநாயகி,
கதறுவது சாமிகளா? இல்லை சாமியாடிகளா?

 
At 11:50 PM, July 11, 2006, Blogger துளசி கோபால் said...

செல்வா,

சும்மா 'நச்'ன்னு இருக்கு.

நம்ம வீட்டுலே சாமி இதையெல்லாம் கண்டுக்கறதே இல்லை.

ஆனாலும் நல்லாத்தான் இருக்கார்.

 
At 11:50 PM, July 11, 2006, Blogger முத்து(தமிழினி) said...

i second thekki..

excellent piece...

 
At 1:11 AM, July 12, 2006, Blogger Chandravathanaa said...

இவ்வளவும் தெரிந்திருந்தும்
பெண் தொட்டால்
பரவும் தீட்டிலிருந்து
தம்மைக் காத்துக்கொள்ளத் தெரியாமல்
கதறும் எங்கள் சாமிகள்!


அருமை

 
At 12:58 PM, July 12, 2006, Blogger செல்வநாயகி said...

சரவணன்,
சாமிகள் பேசியதாக நமக்குக் கதைகளிலும், புராணங்களிலும்தானே தெரியும்? சாமிகள் மீது தீட்டு பரவாமல் தடுப்பதாய்ச் சொல்லிக்கொண்டிருக்கும் ஆசாமிகளுக்குத்தான் இது.

செல்வராஜ்,
இன்னும் கொஞ்சம் நல்லா எழுதிருக்கலாம்னு சொல்றீங்களா:)) கொங்கு நாட்டுக் குலதெய்வங்கள் பற்றி நானும் ஆழமாகத் தெரிந்துகொள்ளும் ஆவலில்தான் இருக்கிறேன். உங்களுக்குத் தெரிந்த விடயங்களை முடிகிறபோது எழுதுங்களேன்.

உங்கள் இருவருக்கும் மற்றும் இங்கு பின்னூட்டமிட்டிருக்கிற நண்பர்கள் தெக்கிக் காட்டான், சிபி, டிசே, விழி, துளசிகோபால், முத்து (தமிழினி), சந்திரவதனா அனைவருக்கும் நன்றி.

 
At 3:38 PM, July 12, 2006, Blogger Suka said...

செல்வ நாயகி,

அருமையான படைப்பு..

உண்மையில் கதறுவது சாமிகளையும் காக்கும் 'ஆ'சாமிகள் தானே :)

சுகா

 
At 5:05 PM, July 12, 2006, Blogger சுந்தரவடிவேல் said...

சாமிக்கும் ஆகாது, வீட்டுக்கும் ஆகாது என்பதெல்லாம் ஒரு புறம். ஊருக்கே ஆகாது என்று ஊரின் ஒதுக்குப்புறத்தில் இருத்தி வைக்கும் வழக்கத்தை லீனா மணிமேகலையின் பலிபீடம் படத்தில் பார்க்கலாம். (இதனையொட்டிய டிசேயின் பதிவையும் கவனிக்க.) மாத'விலக்கு' போன்ற வார்த்தைகளைத் தவிர்த்துப் புதிதாய் ஏதேனும் வார்த்தையைக் கண்டுபிடித்துப் புழங்க வேண்டும்.

 
At 8:17 PM, July 12, 2006, Blogger aathirai said...

கவிதை அருமை.

அயோத்தி இராமருக்கு புல்லட் ப்ரூப் அறை :)
என்ற செய்தியை படித்தபோது இப்படித்தான்
தோன்றியது.

 
At 2:08 PM, July 13, 2006, Blogger செல்வநாயகி said...

சுகா, சுந்தரவடிவேல், ஆதிரை எல்லோருக்கும் நன்றி.

சுந்தரவடிவேல்,
லீனா மணிமேகலையின் குறும்படம் பற்றிய டிசேவின் பதிவைப் படித்தேன். நன்றாக எழுதப்பட்டுள்ளது.

 
At 9:27 PM, July 13, 2006, Blogger Thangamani said...

//இவ்வளவும் தெரிந்திருந்தும்
பெண் தொட்டால்
பரவும் தீட்டிலிருந்து
தம்மைக் காத்துக்கொள்ளத் தெரியாமல்
கதறும் எங்கள் சாமிகள்!//

நல்ல கருத்து செல்வநாயகி. ஆனால் எல்லாத் தீட்டையும் கழிக்கும் வல்லமை ரூ25,000த்தில் (மீரா ஜாஸ்மின் கதை) நடத்தப்படும் யாகத்துக்கு இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளவேண்டும்.

 
At 12:03 AM, July 14, 2006, Blogger செல்வநாயகி said...

தங்கமணி,

25,000 ரூபாயில் தீட்டு கழியாமல் பின் அது 50,000 ஆனதாக நான் எங்கோ படித்தேன்.
நன்றி உங்கள் பின்னூட்டத்துக்கு.

 
At 4:49 AM, July 14, 2006, Blogger செந்தழல் ரவி said...

///இவ்வளவும் தெரிந்திருந்தும்
பெண் தொட்டால்
பரவும் தீட்டிலிருந்து
தம்மைக் காத்துக்கொள்ளத் தெரியாமல்
கதறும் எங்கள் சாமிகள்!//

சாட்டையடி...

 
At 9:51 AM, July 14, 2006, Blogger -L-L-D-a-s-u said...

//இவ்வளவும் தெரிந்திருந்தும்
பெண் தொட்டால்
பரவும் தீட்டிலிருந்து
தம்மைக் காத்துக்கொள்ளத் தெரியாமல்
கதறும் எங்கள் சாமிகள்//
கலக்கல்

 
At 9:54 AM, July 14, 2006, Blogger paarvai said...

இவ்வளவும் தெரிந்திருந்தும்
பெண் தொட்டால்
பரவும் தீட்டிலிருந்து
தம்மைக் காத்துக்கொள்ளத் தெரியாமல்
கதறும் எங்கள் சாமிகள்!

எனக்குக் நவீன கவிதை வடிவங்களில் ஈடுபாடில்லை. எனினும் உங்கள் இந்த வரிகள் நல்ல குட்டு.
கடவுளுக்கும்;கடவுளைக் காட்டிப் பிழைக்கும் கையாலாகாத கயவர்களுக்கும்
யோகன் பாரிஸ்

 
At 4:09 PM, July 14, 2006, Blogger செல்வநாயகி said...

செந்தழல் ரவி, எல்.எல்.தாசு, யோகன் பாரிஸ்,

உங்கள் மறுமொழிகளுக்கு நன்றி.

 
At 11:59 AM, July 18, 2006, Blogger Dharumi said...

முத்து(தமிழினி) said...
i second thekki..

excellent piece... //
i 'third' thakka - அப்டின்னு சொல்லலாமா? :)

 
At 1:38 PM, July 19, 2006, Blogger செல்வநாயகி said...

நன்றி தருமி.

 

Post a Comment

<< Home