நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Sunday, July 30, 2006

வணக்கம்

நட்சத்திரத்திற்கும் எனக்குமான தொடர்பு எப்படி ஏற்பட்டிருக்கலாம் என்று எண்ணிப்பார்க்கிறேன். நானும் ஒருத்தி இங்கிருக்கிறேன் என்று, எல்லோர்க்குமான என் இருப்பைச் சொல்லிக்கொள்ளும் வண்ணம், சுற்றிலுமான நிகழ்வுகளுக்கு எதிரொலியாய் என் உணர்வுகளை வெளிப்படுத்த ஆரம்பித்த கணத்திலேயே துவங்கியிருக்குமா நட்சத்திரத்திற்கான என் காத்திருப்புக்கள்? அப்படியென்றும் சொல்லிவிடமுடியாது. மேலே தொங்கவிடப்பட்டிருந்த, வெறும் நெல் உமி நிறைத்த கிளிப்பொம்மையையும், குஞ்சுக் கிளிகளையும் கைகளால் எட்டிப்பிடித்தும், காலால் உதைத்தும் ரசித்துக்கொண்டிருந்தபோது அதையேகூட நட்சத்திரமென்று நினைத்துக்கிடந்திருப்போனோ என்னவோ யாருக்குத் தெரியும்? ஏதோ ஒரு அவஸ்தையில் யாரும் புரிந்துகொள்ளமுடியாத ராகத்தில் நான் கத்தத் துவங்கிய நாளொன்றில் என் அவஸ்தையையோ அல்லது என்னாலான அவர்களின் அவஸ்தையையோ தணிக்க எடுக்கப்பட்ட முயற்சியாக அம்மாவோ அம்மாச்சியோ என்னை வெளியில் தூக்கிக்கொண்டுவந்து எதையாவது காட்டத் துவங்கியபோதுதான் ஆரம்பித்திருக்கும் என்னை நட்சத்திரத்திற்கு அறிமுகப்படுத்திய நிகழ்ச்சி. கிலுகிலுப்பைகளில் அடங்காத அப்போதைய என் ராத்திரிப் பேரழுகைகள் நிலாவிலும், நட்சத்திரத்திலும் கரைந்து போனதாய்க் கதைகள் சொல்லும் அம்மாச்சியிடம், இன்றும் ஒரு பகலால் நிறைவுசெய்யப்படமுடியாது போகும் என் நாளை இரவில் முளைக்கும் நட்சத்திரங்கள் பூர்த்தியாக்கிவிடுகின்றன என்று சொன்னால் புரிந்துகொள்ளுமா?

எண்கள் கற்றுத்தெளிந்த காலத்தில் முதலில் நானாக எண்ண ஆரம்பித்தது நட்சத்திரங்களையாக இருக்கலாம். அந்தக் காலங்களில், அகலத்தில் அள்ளித் தெரிக்கப்பட்ட சோற்றுப்பருக்கைகளைப் போல் தெரிந்திருந்தன அவை. தட்டில் போட்டுவைத்த சோற்றை இறைக்காமல் சாப்பிடப் பழகிய பொழுதில் அந்தக் கற்பனை மாறி, பெரிய பந்தலில் தொங்கவிடப்பட்ட மின்மினி விளக்குகளாயின அவை பிறகு. விழாக்களிலும், திருமணங்களிலும் பந்தலில் மின்னும் அலங்கார விளக்குகள் மீதான மோகம் களைந்தபோது வான மண்டலத்தின் வரலாறு படித்துக்கொண்டிருந்த வயது. இயற்பியல் விஞ்ஞானிகளின் வாயில் வராத பெயர்களையும், அவர்கள் எழுதி வைத்த வரையறைகளையும், சூரியனுக்கு மிக அருகிலும், தொலைவிலும் உள்ள கோள்களின் பெயர்களையும் எழுதி எழுதி சலித்துக்கொண்டிருந்தபோது நட்சத்திரங்கள் குறித்த அறிவியல் உண்மைகள் கற்பிக்கப்பட்டன. அறிவியல் வகுப்பில் படித்துவிட்டு வருவதை தமிழ்வகுப்பில் மறுத்தார்கள் "மண்மீது பகலிலெல்லாம் தொழிலாளர் படும்பாடு கண்டு வேதனையில் அந்திக்குப்பின் விண்மீனாய்க் கொப்பளித்த விரிவானம்" என்ற பாவேந்தன் கற்பனை கொண்டு. அதுவே பிடித்தும்போனதென்றாலும் கொப்புளங்களாகவும் அவை நீடிக்கவில்லை. முகமெல்லாம் பருக்கள் முளைத்துப் பத்துமுறை கண்ணாடி பார்த்த காலத்தில் சட்டென்று பூக்களாகியிருந்தன கொப்புளங்கள். அப்போது பூத்துக்கிடக்கும் ஒரு மல்லிகைச் செடி கடக்கும்போதும் இரவில் கொட்டிக்கிடக்கும் நட்சத்திரங்களின் ஞாபகம். உயிர்கரைத்து வரைந்த காதல் கடிதங்களில் வார்த்தைகளாகப் புகுந்துகொண்டவையும் அவையாகவேயிருக்கலாம். இப்போதோ இங்கத்தய குளிர்காலத்தின் விழுந்துகிடக்கும் பனிக்குவியல்களில் விளக்குவெளிச்சத்தில் மின்னுகின்றன அவை.

திடீரென நானும் ஒரு நட்சத்திரமாகிறேன் இன்னும் ஒரு வாரத்திற்கு இங்கு:)) ஒரு வருடத்திற்கு ஏழு பதிவுகளை எழுதிக் குவிக்கிற ஆசாமியிடம் ஒரு வாரத்திற்கு ஏழு பதிவுகளை எழுதப் பணித்திருத்திருக்கிறார்கள்:))

35 Comments:

At 11:57 PM, July 30, 2006, Blogger பொன்ஸ்~~Poorna said...

//ஒரு வருடத்திற்கு ஏழு பதிவுகளை எழுதிக் குவிக்கிற ஆசாமியிடம் ஒரு வாரத்திற்கு ஏழு பதிவுகளை எழுதப் பணித்திருத்திருக்கிறார்கள்:))//

எழுதுங்கள் செல்வநாயகி - காத்திருக்கிறோம், வாழ்த்துக்களுடன்.. எதிர்பார்ப்புகளுடனும்..

 
At 12:15 AM, July 31, 2006, Blogger துளசி கோபால் said...

செல்வா,

வாங்க வாங்க.
இந்த வாரம் கொண்டாட்டம்தான் .

வாழ்த்து(க்)கள்.

 
At 12:16 AM, July 31, 2006, Blogger Thekkikattan said...

அடெடே வாங்க, வாங்க நட்சத்திர பதிவுகளை அள்ளித் தெளியுங்கள், லபக் லபக்கென்று பிடிக்க தெகா ரெடி... வாழ்த்துக்கள்!

 
At 12:35 AM, July 31, 2006, Blogger Anitha Pavankumar said...

All the best Selvi
Waiting to read
Anitha

 
At 12:36 AM, July 31, 2006, Blogger உங்கள் நண்பன் said...

//நட்சத்திரத்திற்கும் எனக்குமான தொடர்பு எப்படி ஏற்பட்டிருக்கலாம் என்று எண்ணிப்பார்க்கிறேன். நானும் ஒருத்தி இங்கிருக்கிறேன் என்று, எல்லோர்க்குமான என் இருப்பைச் சொல்லிக்கொள்ளும் வண்ணம், சுற்றிலுமான நிகழ்வுகளுக்கு எதிரொலியாய் என் உணர்வுகளை வெளிப்படுத்த ஆரம்பித்த கணத்திலேயே துவங்கியிருக்குமா நட்சத்திரத்திற்கான என் காத்திருப்புக்கள்?//


ஆஹா, ஆரம்பமே பட ஜோரு,

நல்ல பல(ஏழுக்கும் மேல்) பதிவுகள்
எழுதிட வாழ்த்துக்கள்,


அன்புடன்...
சரவணன்.

 
At 12:39 AM, July 31, 2006, Blogger செல்வநாயகி said...

பொன்ஸ், துளசிம்மா, தெக்கிக்காட்டான்,

நானே இப்போதுதான் "முன்புமாதிரி நட்சத்திரங்களின் பதிவுகளைத் தவறாமல் படிப்பதும் கருத்துப் பகிர்வதுமாகப் பெரும்பாலான பதிவர்கள் இருந்த காலமெல்லாம் மலையேறிப்போய் இப்போதெல்லாம் சண்டை நடக்கும் இடங்களுக்கும், சாமிகும்பிடும் இடங்களுக்கும் அதிகம் போய்விடுவதால் அப்படியே காத்துவாங்கிக்கொண்டு எதையாவது எழுதி ஓட்டிவிடலாம் என்ற நம்பிக்கையில்தான் எந்தப் பயமுமின்றி சட்டென்று ஒத்துக்கொண்டு விட்டேன் நான்:))"
என்று சற்று முந்தைய நட்சத்திரத்தை வழியனுப்பும்போது சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். நீங்கெல்லாம் இப்படி எதிர்பார்க்கிறோம், கொண்டாட்டம்னெல்லாம் சொன்னா எனக்குப் பயம் வராதா சொல்லுங்க:))

நன்றி.

 
At 12:45 AM, July 31, 2006, Blogger Dharumi said...

ஒரு பின்னூட்டம் இட்டேன். எல்லோரும் சொல்வதுபோல ப்ளாக்கர் விழுங்கிவிட்டதோ என்னவோ தெரியவில்லை. விழுங்கியிருந்தால் இதை ஏற்ற வேண்டாம். இல்லையேல்..


ஒரு வருடத்திற்கு ஏழு பதிவுகளை ...// - எண்ணிக்கையில் என்ன இருக்கு..?

சுய அறிமுகத்தின் தமிழ்நடை...சும்மா "நச்"!

அவ்வளவு நல்ல தமிழை வாசித்தபின்னும் இதுபோன்ற "தமிழில்" பின்னூட்டம் இடுவது தவறுதான். என்ன செய்வது...சட்டியில் இருப்பதுதானே வரும் :(

 
At 12:53 AM, July 31, 2006, Blogger செல்வநாயகி said...

அனிதா பவன்குமார், சரவணன், தருமி

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

 
At 1:01 AM, July 31, 2006, Blogger S. அருள் குமார் said...

எங்கோ ஒரு பின்னூட்டத்தில் நூல்பிடித்து, உங்கள் பதிவை முதன்முதலில் பார்த்த அன்றிலிருந்து அடிக்கடி உங்கள் பதிவுக்கு வருகிறேன். முன்பென்லாம் தினம் தினம் வந்து பார்த்து ஏமாந்துபோய், பின், இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை என்றாகி... அதுவே ஒரு வாரத்துக்கு ஒரு முறை, ஏமாற்றத்தை எத்திர்பார்த்தபடியே வர்ந்து பார்ப்பது எனப் பழகிவிட்டது. இனி இந்த ஒரு வாரத்திற்கு தொடர்ந்து வந்து பார்க்கலாம்(அதுவே தொடர்ந்தால் நிரம்ப மகிழ்ச்சி) :) அதற்கு வாய்ப்பளித்த தமிழ்மணத்திற்கு நன்றி.

 
At 1:28 AM, July 31, 2006, Blogger Chandravathanaa said...

வாழ்த்தக்கள் செல்வநாயகி.
அழகிய நடையில் வந்து விழும் உணர்வு கலந்த உங்கள் வார்த்தைக் கோர்வைகளை வாசிப்பதற்கு காத்திருக்கிறேன்.

 
At 1:41 AM, July 31, 2006, Blogger Suka said...

//கிலுகிலுப்பைகளில் அடங்காத அப்போதைய என் ராத்திரிப் பேரழுகைகள்//

:) ரசிக்கப்படக்கூடிய நடை.. வாழ்த்துக்கள்..

 
At 1:57 AM, July 31, 2006, Blogger Thangamani said...

வாழ்த்துக்கள் செல்வநாயகி!

 
At 2:24 AM, July 31, 2006, Blogger ஜெகதீஸ்வரன் said...

வாழ்த்துக்கள் செல்வநாயகி!

 
At 3:26 AM, July 31, 2006, Blogger கோவி.கண்ணன் said...

நட்சத்திரம் செல்வநாயகி அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள் :)

 
At 3:32 AM, July 31, 2006, Blogger தாணு said...

நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ்மணத்தை எட்டிப் பார்த்தேன், ஒரு நட்சத்திரம் `நட்சத்திரத்தை' அலசியிருந்தது மிக நேர்த்தி. வாழ்த்துக்களும், எதிர்பார்ப்புக்களும்!!

 
At 3:41 AM, July 31, 2006, Blogger செல்வநாயகி said...

அருள்குமார், சந்திரவதனா, சுகா, தங்கமணி, ஜெகதீஸ்வரன், கோவி.கண்ணன், தாணு

அனைவருக்கும் நன்றி.

 
At 4:01 AM, July 31, 2006, Blogger G.Ragavan said...

வாழ்த்துகள் செல்வநாயகி. இந்த வாரம் இனிய வாரமாக அமைய எனது வாழ்த்துகள். உங்கள் படைப்புகளுக்காகக் காத்திருக்கிறோம்.

 
At 4:03 AM, July 31, 2006, Blogger சின்னக்குட்டி said...

நட்சத்திர நாயகிக்கு எனது வாழ்த்துக்கள்

 
At 4:46 AM, July 31, 2006, Blogger இளவஞ்சி said...

நட்சத்திர வாழ்த்துக்கள் செல்வநாயகி!

உங்கள் தனிப்பட்ட எழுத்துநடையுடன் கூடிய அருமையான பதிவுகள் ஒரு வாரத்திற்கு மினிமம் கேரண்டி! :)))

 
At 7:01 AM, July 31, 2006, Blogger மலைநாடான் said...

செல்வநாயகி!
உங்கள் அழகு தமிழ்காணும் ஆவலுடன், வாழ்த்துக் கூறி வரவேற்றுக்கொள்கின்றேன்.
நன்றி!

 
At 8:46 AM, July 31, 2006, Blogger முத்து(தமிழினி) said...

எதிர்ப்பார்ப்புகளுடன் காத்திருக்கிறோம் என்று பொன்ஸ் சொன்னதை வழிமொழிகிறேன்..

 
At 11:19 AM, July 31, 2006, Blogger Mookku Sundar said...

செல்வா,

வாழ்த்துக்கள்.

பேர் ராசியோ என்னவோ, உங்கள் பெயர் கொண்டவர்கள் எல்லாம் எழுத்திலேயே யதார்த்தமும் இனிமையும் அழகு தமிழில் கலக்கத் தெரிந்தவர்களாய் இருக்கிறார்கள்..

இன்னொரு செல்வா மறுபடியும் எழுதுவாரா..??

கனவுகளை கிளறிவிடுகிற அதே நேரம், சமூக சிடுக்குகளையும் மறந்து விடாதீர்கள் இந்த வாரம்.

மறுபடியும் வாழ்த்துக்கள்.

என்றென்றும் அன்புடன்

 
At 1:18 PM, July 31, 2006, Blogger செல்வநாயகி said...

ஜி. ராகவன், இளவஞ்சி, மலைநாடன், சின்னக்குட்டி, முத்து தமிழினி, மூக்கு சுந்தர்

அனைவருக்கும் நன்றி.


///கனவுகளை கிளறிவிடுகிற அதே நேரம், சமூக சிடுக்குகளையும் மறந்து விடாதீர்கள் இந்த வாரம்.///


சுந்தர்,

சில விடயங்களைப் பதிவிட எண்ணிக்கொண்டிருக்கிறேன். மொத்து வாங்கக் கொஞ்சம் முதுகையும் தயார் செய்து கொண்டும்:)) பார்க்கலாம்.

 
At 1:30 PM, July 31, 2006, Blogger SK said...

துவக்கமே தூக்கலாக இருக்கிறது.
உங்கள் எழுத்துகளைச் சற்று அறிந்தவன் என்ற முறையில் இதிலொன்றும் வியப்பில்லை.
விருந்துண்ணக் காத்திருக்கிறேன்.
வந்து படையுங்கள்!
வாழ்த்துகள்!

 
At 1:53 PM, July 31, 2006, Blogger oosi said...

கலக்குங்க செல்வநாயகி !!

 
At 2:20 PM, July 31, 2006, Blogger நாமக்கல் சிபி said...

////ஒரு வருடத்திற்கு ஏழு பதிவுகளை எழுதிக் குவிக்கிற ஆசாமியிடம் ஒரு வாரத்திற்கு ஏழு பதிவுகளை எழுதப் பணித்திருத்திருக்கிறார்கள்:))//
//

:)

வாழ்த்துக்கள்! ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது!

 
At 5:10 PM, July 31, 2006, Blogger செல்வநாயகி said...

எஸ்கே, ஓசை, நாமக்கல் சிபி

நன்றி உங்கள் பின்னூட்டங்களுக்கு.

 
At 10:17 PM, July 31, 2006, Blogger டிசே தமிழன் said...

இந்த வாரத்தில் நிறைய எழுத வாழ்த்து, செல்வநாயகி.

 
At 11:47 PM, July 31, 2006, Blogger செல்வநாயகி said...

நன்றி டிசே

 
At 12:29 AM, August 01, 2006, Blogger வெற்றி said...

செல்வநாயகி,
வாழ்த்துக்கள்.

 
At 7:24 AM, August 01, 2006, Blogger manu said...

வணக்கம் செல்வநாயகி.
இனிமையான வாரப் பதிவுகளுக்கு வாழ்த்துகள்.

 
At 7:59 AM, August 01, 2006, Blogger அருட்பெருங்கோ said...

நட்சத்திரத்திர வாரத்தில் மேலும் பல படைப்புக்களை உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறேன்...

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

 
At 12:33 PM, August 01, 2006, Blogger செல்வராஜ் (R.Selvaraj) said...

வாழ்த்துக்கள் செல்வநாயகி. உடனுக்குடன் படிக்க இயலவில்லை என்றாலும் சேர்த்து வைத்துப் படித்துவிடுவேன். உங்களுக்கே உரித்தான இனிய நடையில் தொடருங்கள்.

(மூக்கன், எழுதுவேன்! நன்றி.).

 
At 4:23 PM, August 01, 2006, Blogger செல்வநாயகி said...

வெற்றி, மனு, அருட்பெருங்கோ, செல்வராஜ்,

வாழ்த்துக்களுக்கு நன்றி.

 
At 5:00 AM, August 20, 2006, Blogger மா சிவகுமார் said...

நட்சத்திரம் மூலமாக உங்கள் வாழ்க்கையையே மனக் கண்ணில் ஓட வைத்து விட்டீர்கள். சோற்றை இறைக்கும் சிறு குழந்தை, இயற்பியலுடன் போராடும் சிறுமி, பாவேந்தரில் மயங்கி நிற்கும் பெண், கண்ணாடியில் பருக்களை எண்ணும் முகம் என்று ஒவ்வொன்றாகப் படம் பிடித்து விட்டீர்கள். எல்லாம் கற்பனை இல்லைதானே?

அன்புடன்,

மா சிவகுமார்

 

Post a Comment

<< Home