நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Monday, July 31, 2006

கொழுகொம்பாகும் கொடிகள்

இந்தியாவில் இயங்கிவரும் மென்பொருள் நிறுவனங்களில் பணிக்குச் சேர்ந்து அவற்றிற்காக அமெரிக்காவில் பணிபுரியவரும் இளைய தலைமுறையின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகின்றது. குறுகியகாலம் மட்டுமே வந்து செல்வோர், குறுகியகாலப் பணித்திட்டத்துக்கு வந்து பின் பணிநீட்டிப்புப் பெற்றுச் சிலவருடங்கள் இருந்து செல்வோர், சிலவருடங்கள் இருந்து பச்சைஅட்டை விண்ணப்பித்துப் பின் இங்கேயே தங்குவோர் எனப் பல பிரிவினர் இதில் உண்டு. இந்தப் பிரிவுகளுக்குள் இன்னும் சில உட்பிரிவுகள் உண்டு. திருமணம் ஆகாதவர்கள் (வருத்தப்படாத வாலிபர் சங்கத்துக்காரங்கன்னும் எடுத்துக்கலாமா?), திருமணம் ஆகிப் பணிக்குச் செல்லாத மனைவியுடன் வசிப்பவர்கள், அமெரிக்காவிலேயே வேறெங்கேனும் தன்னைப்போலவே மென்பொருள்துறையில் பணிபுரியும் மனைவியை வார இறுதிகளில் சந்தித்து இல்லறம் நடத்துபவர்கள்,
வாரயிறுதி இல்லறத்தை அனுதினமுமாக மாற்றும் முயற்சியில், தன் நிறுவனத்தில் தனக்கிருக்கும் செல்வாக்கை (பிறரிடம் இருக்கும் செல்வாக்காகவும் இருக்கலாம்) உபயோகித்து மனைவியையும் தன்னுடனேயே பணிபுரியவைத்துவிடும் திறமைசாலிகள்....... இதுபோல் பல உட்பிரிவுகள் உள்ளன.


திருமணம் ஆவதற்கு முன் இங்கு வருவோரில் ஆண்களைப்போலவே பெண்களும் கணிசமான அளவில் இருக்கிறார்கள். பெற்றோர்களைப் பிரிந்து நாடு கடந்து வந்து தனியாகவோ, தோழர் தோழியருடனோ தங்கியோ பொருளீட்டும் துணிச்சல்காரர்களாக இருக்கிறார்கள் இத்தலைமுறைப் பெண்கள். பெரியாரையெல்லாம் பேசத்தேவையேயில்லாத அளவுக்கு இங்கு பெண்விடுதலை வானம்வரை வளர்ந்துகிடக்கிறது என்பவர்களுக்கு
இவையெல்லாம் உதாரணங்களாகிப் போவதுமுண்டு. ஆனால், திருமணத்திற்குப் பிறகு நடப்பவை பெண்களுக்கு அவ்வளவு சுலபமாக இருப்பது இல்லை. அமெரிக்காவில் சம்பாதிக்கும் மாப்பிள்ளைகளுக்காக இந்தியாவில் தான் படித்துக்கொண்டிருக்கும் கல்வியைப் பாதியில் துறந்தும், செய்துகொண்டிருந்த வேலைக்கு (அது எவ்வளவு நல்ல வேலையாக இருந்தாலும்) முழுக்குப் போட்டும் இங்கு வந்து குடும்ப வாழ்க்கையைத்
தொடரும் பெண்கள் அதிகம். பிறகு இங்கு கிடைக்கிற வேலைக்குப் போவதோ, அல்லது விசா பிரச்சினையால் வேலை செய்யமுடியாது வீட்டை மட்டும் கவனித்துக்கொள்வதோ, மேலே படிப்பதோ அவரவர் சூழ்நிலைக்குத் தகுந்தபடி நடக்கிறது. இதுவே அமெரிக்காவில் பணிபுரிய வாய்ப்பும், ஆர்வமும் உள்ள பெண்களுக்காக அவர்களின் கணவன்மார்கள் இங்குவந்து இருப்பது என்பது அரிதாகவே உள்ளது. எப்போதும் பெண்கள்
"கொழுகொம்பைப் பற்றிப்படரும் கொடிகள்" என்பதே நம் சமூகத்தைப் பொறுத்தவரை அழகான சிந்தனை என்று ஆராதிக்கப்பட்டு வந்திருக்கிறது. மாற்றங்களைக் கொண்டுவருவதற்குத் தேவைகளும், ஏற்றுக்கொள்வதற்குப் பக்குவங்களும் வேண்டியிருக்கின்றன. அப்படி ஏற்றுக்கொண்டு இருக்கிற தம்பதிகளில் ஒருவர் தீபா-விவேக்.

நட்சத்திரவாரத்தில் அவர்களின் அனுபவங்களை இங்கு பதிவு செய்ய எண்ணி தீபாவுடன் கலந்துரையாடியதன் சுருக்கம் இது. அனுபவங்களைப் பகிர்ந்தமைக்கும், வெளியிட அனுமதித்தமைக்கும் தீபாவுக்கு நன்றிகள்.

எங்கு படித்தீர்கள்? எப்போது வேலையில் சேர்ந்தீர்கள்?

சென்னை மீனாட்சி கல்லூரியில் கணிதம் இளங்கலை, பின் சென்னை எம்ஐடியில் பிடெக். முடித்தவுடன் மென்பொருள் வல்லுனராக வேலை. வேலைக்குச் சேர்ந்தபின்னும் அஞ்சல்வழியில் எம்பிஏவும், எம்எஸ்சும் முடித்தேன்.

திருமணம்....

நான் எம்ஐடியில் படித்துக்கொண்டிருந்தபோதே தனியார்கல்லூரியின் உடற்கல்வித்துறை இயக்குனராக இருந்த விவேக்கை வேலையில் சேர்ந்த ஒருமாதத்தில் திருமணம் செய்தேன். காதல் திருமணம். இருவரும் வேறுவேறு சாதி மற்றும் பொருளாதார நிலையில் இருந்ததால் ஏற்பட்ட சங்கடங்களைத் தாண்டிப் பெற்றோர்களையும் சம்மதிக்கவைத்து ஒன்றுசேர்ந்தோம். நம் ஊரில் என்னதான் கல்வியில் சிறந்து விளங்கினாலும் ஒரு மனிதனுக்கான மரியாதை அவன் பொருளாதரத்தை வைத்தே முடிவு செய்யப்படும் நிலை இருக்கிறது. அதனாலேயே திருமணத்திற்குப்பின் பொருளாதார அளவில் உயர்ந்தநிலைக்குப் போய் வெற்றிஅடைந்துகாட்டுவதையே லட்சியமாகக் கொண்டோம்.

அமெரிக்காவிற்குப் பணிபுரிய வந்ததைப் பற்றிச் சொல்லுங்கள்?

வேலையில் சேர்ந்து, திருமணமும் முடிந்து முதலில் சென்னையில்தான் வசித்தோம். பிறகு பொருளாதாரரீதியாக எடுத்த முடிவுகள் மற்றும் மேற்கொண்ட செயல்களுக்காக ஆன்சைட்டில் கொஞ்சகாலம் வேலைசெய்தால் நல்லதாக இருக்கும் என்று தோன்றியது. எனவே
எட்டுமாதக்குழந்தையைக் கணவரிடம் விட்டுவிட்டு முதலில் நான் மட்டும் ஒரு குறுகியகாலப் பணித்திட்டத்திற்குக் கம்பெனி அனுப்பி வைத்ததை ஏற்று
வந்தேன். பிறகு அது நீண்டகாலமாக மாற்றப்பட்டபோது நான்மட்டும் இங்கு குழந்தை கணவரைப் பிரிந்து இருப்பது துயரமாக இருந்ததால் விடுப்பு
எடுத்துக்கொண்டு ஊருக்குப்போய்க் கணவரிடம் பேசி அவரையும், குழந்தையையும் அழைத்துக்கொண்டுவர முயற்சி செய்தேன். ஆரம்பத்தில் அவர்
அங்குசெய்துகொண்டிருந்த வேலையை விடாமல் விடுப்பு மட்டும் எடுத்துக்கொண்டுவந்தார். ஆறுமாதங்கள் கழித்துத் திரும்பப்போய்விடும் முடிவில்தான் அவ்வாறு செய்யப்பட்டது. ஆனால் அமெரிக்காவிற்குக் குடும்பத்தைக்கொண்டுவருகிறபோது ஆரம்பகால வருமானத்தையெல்லாம் இங்கிருப்பதற்குச் செய்துகொள்ளவேண்டிய அவசிய வசதிகளான கார் வாங்குதல் போன்றவற்றிற்குச் செலவழிக்கவேண்டியிருந்ததால் மேலும் ஓரிரு வருடங்கள் இருந்து, நல்ல சேமிப்பொன்றை எடுத்தச்செல்ல விரும்பி என் பணியை இங்கேயே தொடர எண்ணினேன். குடும்பத்தைப் பிரிந்திருப்பதை இருவருமே
விரும்பாததாலும் விவேக்கிற்கு இங்கேயே ஏதாவது வேலைதேடிக்கொள்ள முடியுமென்றும் கருதி இந்தியாவில் அவரின் வேலையை ராஜினாமா செய்தார். இப்போது இரண்டு குழந்தைகளுடன் ஐந்தாவது வருடமாக இங்கேயே இருக்கிறோம்.

இங்கு இருத்தலின் அனுபவங்கள் எப்படியானவை?

குழந்தைகளுக்கு அடிவிழாத பள்ளிக்கல்வி, சுத்தம், சுகாதாரத்துடனான பொது விளையாட்டுப் பூங்காக்கள், வசதியான வாகனம், வாழ்க்கை முறை என்று நன்மைகளைச் சொல்லலாம். என்னதான் வசதிகள் இருந்தாலும் அவர்களின் உலகம் நம்வீடு, அவர்கள்பள்ளி என்று மிகச் சிறியதாக இருக்கிறது இங்கு. இதுவே நம் ஊரில் தெருவில் இறங்கி நடக்கும்போதே அவர்கள் சந்திக்கிற பல்வேறு மனிதர்கள், சமூக நிகழ்வுகள் என்று
அவர்களுக்குள் கேள்விகள் பிறக்கிற வாய்ப்புகள் இன்னும் அதிகமாக இருக்கும். மற்றபடி குடும்பத்தின் உயர்வுக்காகவே இங்கு வந்திருக்கிறோமென்பதால் நமக்கு ஏற்படுகிற இழப்புகளையெல்லாம் ஏற்கப் பழகிக்கொண்டிருக்கிறோம். என்றாலும் உறவுகளைவிட்டு வெகுதூரத்தில் இருப்பது என்னைப்பொருத்தவரை ஒருவகையில் நன்மையாகவே தெரிகிறது, அவர்களுடன் சில்லரைப் பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்புகள்
குறைவு என்பதால்.

இங்கிருக்கிற இந்திய சமூகத்தில் எப்படி உணர்கிறீர்கள்?

நண்பர்கள், உறவினர்கள் என்று நிறைய இருக்கிறார்கள். இந்திய சமூக சந்திப்புகளிலும் பங்குபெறுவதுண்டு. ஆனாலும் சில சங்கடமான கேள்விகளை எதிர்கொள்ள நேரிடும் அவர்களிடமிருந்து. விவேக் இங்கு வேலைதேட ஆரம்பித்தபோது அவர் அங்கு செய்துகொண்டிருந்த வேலைக்கு இணையான துறையில் வேலை கிடைப்பது இயலாததாக இருந்தது. என் பணிநேரம் காரணமாக குழந்தையை அவர் பார்த்துக்கொள்ளும் அவசியம்
ஏற்பட்டது. தொலைதூரத்தில் கிடைக்கும் வேலைக்காகப் பயணிக்க இன்னொரு கார் வாங்குவது, குழந்தையைக் காப்பகத்தில் விடுவது போன்ற செலவினங்களைக் கணக்கிட்டபோது வீட்டிற்கருகில் நடக்கும் தூரத்தில் அதுவும் நான் பணியிலிருந்து திரும்பிக் குழந்தையைப் பார்த்துக்கொள்ள ஆரம்பித்தபின் மாலைநேரங்களிலும், நான் வீட்டிலிருக்கும் வார இறுதிகளிலும் அவர் வேலைக்குச் செல்வதே எங்களுக்கு ஏற்புடையதென்று
முடிவெடுத்தோம். எந்த ஈகோவும் பார்க்காமல் என் நிலைகருதியும், குடும்ப நன்மை கருதியும் விவேக்கும் எரிவாயு நிரப்புமிடம், விடுதி என்றெல்லாம்
வேலைசெய்திருக்கிறார். நான் பழகுகிற அமெரிக்க நண்பர்கள், செய்யும்வேலை சார்ந்து மனிதர்களிடம் பாகுபாடு காட்டுவதில்லை. ஆனால் இந்திய
நண்பர்கள் விவேக் அந்த வேலைகளைச் செய்தபோது அதை ஏதோ அவர்களுக்கு ஏற்பட்ட கௌரவக் குறைச்சல் போல் பாவித்து என்னிடம் "அந்த வேலையெல்லாம் ஏன் செய்யவேண்டும்?" என்று கேள்வி கேட்டதுண்டு. இது நம் மனோபாவம். இந்தியநண்பர்கள் சந்திப்புகளில் கலந்துகொள்வதற்கு இந்தமாதிரிக் கேள்விகளும் அவை கேட்கப்படுகின்ற தொனிகளும் சிலசமயங்களில் விவேக்கிற்குத் தடைகளாக அமைந்துவிடுவதுண்டு.

அவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ள உங்கள் இருவருக்குமிடையான புரிதல்தான் காரணமாக இருந்திருக்கும். அதைப் பற்றிச் சொல்லுங்கள்!

என் ஆசைகள், கனவுகள் எல்லாம் காதலித்த காலத்திலேயே விவேக்கிடம் பகிர்ந்து வந்திருக்கிறேன். வேலையிலும்சரி, படிப்பிலும்சரி மேலேமேலே
போய்க்கொண்டேயிருக்க வேண்டும், அதற்காக என்னைத் தகுதிப்படுத்திக்கோண்டே இருக்க வேண்டுமென நினைத்தேன். இரண்டு குழந்தைகள் பிறப்பின்போதும் பிறப்பிற்கு ஒருவாரம் முன்னும், பின்னுமாகத் தேர்வுகள் எழுதி வெற்றி பெற்றிருக்கிறேன். இதெல்லாம் விவேக்கின் மிகப்பெரிய ஆதரவால்தான் முடிந்தது. அமெரிக்காவில் இரண்டாவது குழந்தை பிறப்பிற்கு மாமனார் மாமியார் உதவிக்கு வந்து சென்றபின், அரைநாள் மட்டுமே
பள்ளி சென்று திரும்பும் முதல் குழந்தையையும், ஆறுமாதங்களே ஆகியிருந்த இரண்டாவது குழந்தையையும் அருகிலிருந்து கவனித்துக்கொள்ள நிச்சயம் ஒருவர் வீட்டிலிருந்தே ஆகவேண்டி வந்தபோது தான் பார்த்துக்கொண்டிருந்த பகுதிநேர வேலையையும் விட்டுவிட்டு வீட்டிலிருப்பதற்கு முன்வந்தார் விவேக். இப்போது வேலையோடு இங்கு சில பதவி உயர்வுகளைக் கருதி எம்பிஏவும் படித்துக்கொண்டிருக்கிறேன் நான். இரண்டு
குழந்தைகளையும் கவனித்துக்கொண்டு வீட்டிலிருந்த அவர் இப்போது மீண்டும் மாலைகளில் பணிபுரிய ஆரம்பித்திருக்கிறார்.


கணவனுக்காகவும், குடும்பத்திற்காகவும் தன் தனிப்பட்ட லட்சிய எல்லைகளைக் கரைத்துக்கொள்ளும் பாங்கிலேயே வளர்க்கப்பட்டது நம் பெண்கள் சமூகம். மாறுதலைக் கொண்டுவரும்போது அப்படிக் கொண்டுவருபவர்களுக்கு புற அகக் காரணிகளால் ஏற்படுகின்ற அழுத்தங்கள் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம். அவற்றைக் கடந்த அனுபவங்களைக் கூறுங்கள்!

குழந்தைகளோடு நிறைய நேரம் செலவிடமுடியாத வருத்தம் அவ்வப்போது ஏற்படுவதுண்டு. குழந்தைக்காக வீட்டிலேயே இருக்க நேரிட்ட விவேக்கின் உணர்வுகளைக் கருதும்போதும் பேசாமல் ஊருக்குப் போய்விடலாமா என்று அடிக்கடி முடிவெடுப்பதும், பிறகு குடும்பத்தின் சில எதிர்கால நன்மை கருதி அதை ஒத்திப்போடுவதுமாக நாட்களைக் கழித்தோம். என் படிப்பை முடிக்கவேண்டிய கட்டாயமும், அதற்காக ஆகும் பெரிய செலவும்
இப்போது கண்முன் இருக்கிறது. எவ்வளவு ஓட்டமாக இருந்தாலும் வீட்டில் எல்லோர்க்குமான சமையலை மட்டும் நானே செய்ய ஆசைப்பட்டு செய்கிறேன். மற்ற உபவேலைகள் செய்வதும், குழந்தைகளுக்குத் தேவையானவை செய்யவும் விவேக்தான் பெரும்பாலும். அவரே வைத்துக்கொண்டிருந்ததால் இரண்டாவது குழந்தைக்கு அவரின் அருகாமை மிக அவசியம். அவன் எப்போது என்ன சாப்பிடுவான் என்பது
என்னைவிட அவருக்கே தெரியும். இதைப் பார்க்கும்போது அவர்தான் இங்கு தாயோ என்று எனக்கே தோன்றும். ஆனால் வேறெந்தப் பாகுபாடும் எங்களுக்குள் வர அனுமதித்ததில்லை. "ஒன்று முடிந்தால் இன்னொன்றைப் படிக்கிறேன், செய்கிறேன் என்று ஆரம்பித்துக்கொண்டே இருக்கிறாய். எவ்வளவுதான் பொறுமையாக இருப்பது? திரும்பப் போகலாம்" என்று விவேக் சொல்வதும் உண்டு. ஆனால் எந்த விவாதங்களும் இரண்டு நாட்களில் காணாமல்போய் நான் படிக்கத் தேவையானது செய்ய ஆரம்பிப்பார் அவர். இந்தப் புரிந்துணர்வுக்கு என் வாழ்க்கையைப் பொறுத்தவரை ஒருவேளை எங்களது காதல் திருமணம் என்பதால் வாய்ப்புகள் அதிகமோ என்று நான் நினைத்துக்கொள்வதுண்டு.
*********

இது தேவைகளின்பால் மாற்றங்களை ஏற்றுக்கொண்டிருக்கிற ஒரு குடும்பத்தின் அனுபவம். இப்படியான ஓவ்வொரு குடும்பத்திற்கும் வேறு வேறு அனுபவங்கள், நிகழ்வுகள் இருக்கலாம். அந்த நிகழ்வுகளின் பட்டியல் பரந்துபட்டதாக இருக்கும். அந்தப் பட்டியல் நம் சமூகத்தின் இன்னும் ஒரு பக்கத்தை தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் உதவும்.

34 Comments:

At 3:40 PM, July 31, 2006, Blogger பூனைக்குட்டி said...

எல்லோரும் விவேக் மாதிரி இருந்திட்டா சர்தான்!!!!

இன்னொரு போஸ்ட் காலியிருந்த சொல்லுங்களேன், ப்ளீஸ். (just kidding)

Regards

 
At 3:54 PM, July 31, 2006, Blogger Deiva said...

Very good analysis of Indian family setup and also the title is perfect match for this article. Expecting more on this week from you

 
At 4:18 PM, July 31, 2006, Blogger VSK said...

எந்த ஒரு செயலும் சிறப்பாக நடக்க "புரிதல்" அவசியம்.
அது இவ்விரண்டு பேரிடமும் நிறையவே இருக்கிறது.
விரைவிலேயே, நிறைவாய் வாழ்க்கை அமைய வாழ்த்துகள்!
இந்நேரம், விவேக் ஒரு பர்ஸனல் ட்ரைனிங் கோர்ஸை முடித்திருக்கலாம் [அ] எடுக்க வேண்டும்.
நல்ல தேவை இதற்கு.

கொடி கொழுகொம்பாவதற்கும், கோடுகள் கோலங்களைத் தாண்டுவதற்கும் இடையில் பெரிய இடைவெளி இருக்கிறது.
அதனை நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்!

தீபா - விவேக் ஜோடிக்கு என் வாழ்த்துகள்!
இதன் மூலம், அவர்களுக்காக வேண்ட எங்களுக்கெல்லாம் ஒரு சந்தர்ப்பம் கொடுத்திருக்கிறீர்கள்.
கண்டிப்பாக பலனளிக்கும் என் நம்புவோம்.
நன்றி.

 
At 4:30 PM, July 31, 2006, Blogger பொன்ஸ்~~Poorna said...

தீபா, விவேக் - நல்ல முன்மாதிரி.. அவள் விகடனில் சில மாதங்கள் முன்பு இதே போல மனைவிக்காக கிட்டத்தட்ட 15- 20 வருடங்கள் வேலைக்குச் செல்லாமல் இருக்கும் கணவனைப் பற்றி ஒரு கட்டுரை வந்தது.

வேலைக்குப் போகும், போகாத என்பதற்கு முன்னால், சம்பளம் விஷயத்திலேயே நம்மவங்களுக்குள் பிரச்சனை இருக்கிறது.. அம்மாவின் தோழி ஒருவருக்கு, கணவனை விட நிரந்தர, நிறைந்த சம்பளத்தில் வேலை. இதனால் கணவருக்குத் தாழ்வு மனப்பான்மை வந்துவிடக் கூடாது என்று என்ன சொன்னாலும் தலையாட்டி விடுவாராம். இப்போது வயதாகி, பணி ஓய்வு பெறும் தருவாயிலும், கணவர், தான் சொல்வதைக் கேட்பதில்லை என்று கழுத்து மட்டுக்கும் குறை...

 
At 4:41 PM, July 31, 2006, Blogger கால்கரி சிவா said...

நல்ல தம்பதிகள். மேலும் வெற்றிகள் அடைய வாழ்த்துக்கள்.

இப்பூவுலகின் சொர்க்கம் என அமெரிக்கவை நினைத்துக் கொண்டிருக்கும் பற்பல இந்தியர்களுக்கு அமெரிக்க வாழ்வு ஒன்றும் சுகமானதல்ல என்றுணரவைக்கும் பதிவு.

என் கல்லூரி ஜுனியர் சகோதரி தீபா மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
அதற்கு துணைபுரியும் சகோதரர் விவேகிற்கு ஒரு பெரிய சலாம்

 
At 4:55 PM, July 31, 2006, Blogger பாலசந்தர் கணேசன். said...

எம்.ஐ.டி மாணவியா, ஜூனியர், இங்கே இரண்டு எம்.ஐ.டி சீனியர்கள் இருப்பது தெரியுமா?

 
At 5:32 PM, July 31, 2006, Blogger செல்வநாயகி said...

நன்றி நண்பர்களே!

எம் ஐ டியில் படித்த இங்கிருக்கும் நண்பர்களை தீபாவுக்குத் தெரிவிக்கிறேன்.

 
At 5:32 PM, July 31, 2006, Blogger Thekkikattan|தெகா said...

நாயகி,

விவேக்கின் மன நலம் பேணுவது மிகவும் அவசியமென எனக்குப் படுகிறது. நிறைய காலங்கள் இப்படியே கடந்து போனால் மனம் கசப்புறுவதற்கு அடிகோலலாம்.

புரிதல்கள் அவசியம் இது போன்ற சூழலில் இருப்பினும், அடுத்தவரும் அவரின் மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அவருக்கு பிடித்தமான சூழ்நிலை அவசியம்மென்பது எனது புரிதல், ஒரு விவேக்கின் மனோ-சூழ்நிலையில்.

இது போன்ற அமெரிக்க தம்பதிகளும் இருக்கிறார்கள். ஆனால், கொஞ்சம் அது போன்ற உறவுகளில் மனத்தாங்கல்கள் இருப்பதை உணர முடிகிறது.

வெளியில் சென்று தனக்கு பிடித்த வேலை பார்ப்பது என்பது மனதினை சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உதவலாம். இருபாலருக்குமே...

//இது நம் மனோபாவம். இந்தியநண்பர்கள் சந்திப்புகளில் கலந்துகொள்வதற்கு இந்தமாதிரிக் கேள்விகளும் அவை கேட்கப்படுகின்ற தொனிகளும் சிலசமயங்களில் விவேக்கிற்குத் தடைகளாக அமைந்துவிடுவதுண்டு.//

அது தடைகள் மட்டுமள்ள மனதை வேதனைப் படுத்தும், அவர் தனிமைபடுத்தப் படும் பொழுது.... எனக்கு அருகமையிலேயே நானும் ஒரு வரை பார்த்து பேசி வருகிறேன்... தெரிந்தை பகிர்ந்து கொள்ளலாமே என்று இதனை இங்கு கூறிவைக்கிறேன், புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்...

 
At 6:19 PM, July 31, 2006, Blogger Udhayakumar said...

முதல் தடவையா இந்த மாதிரி கேட்கிறேன்... ஆணாதிக்கம் அது இதுன்னு அடிச்சு விட்டறாதீங்க...

அவங்க அவங்க பிரச்சினையை அவங்கதான் சமாளிக்கனும். அதுக்காக இதையவே எ.கா.வா வைச்சுக்கிட்டு பேசிட்டு இருந்தா நல்லா இருக்காது...

 
At 7:59 PM, July 31, 2006, Blogger செல்வநாயகி said...

தெக்கிக்காட்டான்,

உங்களின் நோக்கம் புரிந்துகொள்கிறேன். நன்றி.

ஆனால் நாமெல்லாம் கவலைப்படத் தேவையின்றி அவர்கள் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள். வக்கிரத்தையும், செல்லரித்த சிந்தனைகளையும் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிற சமூகத்தின் மனநலம் குறித்தல்லாமல், அவற்றை எதிர்த்து நிற்கிறவர்களின் மனநலம் குறித்துக் கவலைப் பட்டுக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது இங்கு:((

மாசுபடிந்து கிடக்கிற மரபுகளைக் கட்டுடைத்து வாழ்பவர்கள், அதுகுறித்தான சமூகத்தின் கூச்சல்களைப் புன்னகையோடு கடந்துபோகிறார்கள் என்பதே உண்மை.

 
At 8:32 PM, July 31, 2006, Blogger செல்வநாயகி said...

நான் இதுவரை என் எந்தப் பதிவிலும் பின்னூடம் எதையும் நிறுத்தவேண்டி வந்ததில்லை. இந்தப் பதிவில் பொதுவில் நிகழத் துவங்கியிருக்கும் ஒரு மாற்றத்தையும், அம்மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கிற இருவரின் தனிப்பட்ட உணர்வுகளையும் சேர்த்துப் பதிவு செய்திருக்கிறேன். மாற்றம் குறித்தான கருத்துக்களை, அதன் செயலாக்க சாத்தியங்களை, உண்மையிலேயே அதில் ஈடுபாடு இருக்குமானால் பகிரலாம், விவாதிக்கலாம்.

ஆனால் சம்பந்தமில்லாத நக்கல் நையாண்டிப் பின்னூட்டங்களை இட விரும்புவோர் அது உங்களின் புரிதலின் பிழைகளைத்தான் வெளிச்சம்போட்டுக் காட்டுகிறதென்பதை உணரும்வரை இடுங்கள்.

நண்பர்கள் மோகன்தாஸ், உதயகுமார் இருவருக்கும் இதைத்தவிர சொல்வதற்கு என்னிடம் வேறொன்றுமில்லை.நன்றி.

 
At 8:55 PM, July 31, 2006, Blogger மலைநாடான் said...

//ஒன்று முடிந்தால் இன்னொன்றைப் படிக்கிறேன், செய்கிறேன் என்று ஆரம்பித்துக்கொண்டே இருக்கிறாய். எவ்வளவுதான் பொறுமையாக இருப்பது? திரும்பப் போகலாம்" என்று விவேக் சொல்வதும் உண்டு. ஆனால் எந்த விவாதங்களும் இரண்டு நாட்களில் காணாமல்போய் நான் படிக்கத் தேவையானது செய்ய ஆரம்பிப்பார் அவர்//

மிகைப்படுத்தலில்லாத வாழ்க்கை வரிகள்.ஒரு யதார்த்த தம்பதிகளை அறியத்தந்தமைக்காக உங்களுக்கும், இல்லறத்தை நல்லறமாய் காணும் இனிய அத்தம்பதியினர்க்கும் வாழ்த்துக்கள்

 
At 9:31 PM, July 31, 2006, Blogger Thekkikattan|தெகா said...

/வக்கிரத்தையும், செல்லரித்த சிந்தனைகளையும் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிற சமூகத்தின் மனநலம் குறித்தல்லாமல், அவற்றை எதிர்த்து நிற்கிறவர்களின் மனநலம் குறித்துக் கவலைப் பட்டுக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது இங்கு:(( //

இதுதான், கிட்டதட்ட மற்றொரு அணுகுமுறையின் மூலம் நான் சொல்ல வருவதும். சமுதாயம் தனது Pre-Conditioned எண்ணங்களை எதிர்பார்ப்புகளை மாற்றிக்கொள்ளும் வரையிலும், நாமும் அதன் அங்கமாக இருப்பதால் தினமும் (சமூகத்தில்) அங்கே நடக்கும் விசயங்கள் நமது சொந்த வாழ்கையில் சிறிது சலனங்களை ஏற்படுத்தவே செய்கிறது அல்லவா?

அதனைப் பொருத்தே நான் "மன நலம்" குறித்து பேசினேன். எனக்கும் கொஞ்சம் அனுபவம் இருக்கிறது... அது போன்ற வாழ்வு வாழ்ந்து, எது போன்று இந்த சமூகத்தை எதிர் கொள்ள நேர்ந்தது என்பதில் என் சொந்த அனுபவமும் அதனை சார்ந்த எண்ணங்களும் என்னிடத்தே உண்டு...

அவர்கள் இன்றுபோல் என்றும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு வாழ, வாழ்த்துக்கள்...

புரிந்து கொண்டமைக்கு நன்றி, நாயகி!

 
At 11:45 PM, July 31, 2006, Blogger செல்வநாயகி said...

நன்றி மலைநாடன். மீண்டும் விளக்கமான பின்னூட்டத்திற்கு உங்களுக்கும் தெக்கிக்காட்டான்:)) இவ்விடயத்தில் உங்களின் அக்கறையான அணுகுமுறையைப் புரிந்தேயிருக்கிறேன்.

 
At 12:32 AM, August 01, 2006, Blogger பூனைக்குட்டி said...

சரி சரி ஒத்துக்குறேன், விவேக் நல்லவர் வல்லவர் நாலும் தெரிஞ்சவர். இதுதான உங்களுக்கு வேண்டியது.ஒரு விஷயத்தை வெளியில் கொண்டுவந்தா நாலு பேரு நாலு விதமாத்தான் பதில் சொல்லுவாங்க.

சரியா இருக்கிறத எடுத்துக்கோங்க தப்புன்னு நினைக்கிறதை தூக்கி போட்டுறுங்க. அவ்வளவுதான், அதை விடுத்து, என்னுடைய புரிதல்களின் பிழைகளை கண்டுணறும் உங்கள் போக்கு ஆச்சர்யத்தை மட்டுமேயளிக்கிறது.

 
At 12:54 AM, August 01, 2006, Blogger senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

காதலித்து திருமணம் செய்பவர்கள் மட்டும் அல்ல மும்பையில் என்னுடன் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணுக்கு வெளிநாட்டில் அதிக காலம் தங்கி வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்தப் பெண்ணுக்கு பெரியவர்கள் பார்த்து செய்து வைத்த கல்யாணம் தான் இருந்தாலும் அவருடைய கணவர் இங்குள்ள வேலையை விட்டு விட்டு வெளிநாட்டில் சென்று அங்கு வேலை தேடிக் கொள்ள ஒப்புக் கொண்டிருக்கிறார். இது போன்ற விஷயங்களில் மனிதர்களின் பார்வை மாறிக் கொண்டேதான் இருக்கிறது ஆனால் இன்னும் நிறைய மாற வேண்டும்.

நல்ல பதிவு நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

 
At 5:30 AM, August 01, 2006, Blogger கதிர் said...

இந்த வார நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்


ஆத்மார்த்தமான தம்பதிகள். திருமணம் ஆன பிறகும் அவர்கள் காதல் தொடர்வதை நினைக்கும்போது சந்தோஷமாக உள்ளது. இது போலவே ஒருவொருக்கொருவர் புரிந்து கொண்டு நடந்துவிட்டால் பிரச்சினையே வராது.

அன்புடன்

 
At 7:50 AM, August 01, 2006, Blogger Unknown said...

ஓர் இணையின் புரிதலை மற்றவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் வழங்கியமைக்கு நன்றிகள்.

 
At 4:30 PM, August 01, 2006, Blogger செல்வநாயகி said...

குமரன் எண்ணம், தம்பி, அருட்பெருங்கோ,

உங்கள் கருத்துப் பகிர்தலுக்கு நன்றி.

 
At 4:49 PM, August 01, 2006, Blogger செல்வநாயகி said...

மோகன்தாஸ்,

இந்தப் பதிவு உங்களிடமிருந்து விவேக்கிற்கு சான்றிதழ் பெற்றுத்தர வேண்டிய அவசியத்தில் எழுதப்பட்டதல்ல. எனவே நீங்கள் சிரமப்பட்டு இவ்வளவு எழுதியிருக்க வேண்டியதில்லை. பொதுவில் எழுதினால் நாலுபேர் நாலுவிதமாகச் சொல்வார்கள் என்பதெல்லாம் அறியாமலா நாமெல்லாம் பதிவிட்டுக் கொண்டிருக்கிறோம்?

பதிவின் பொருள் குறித்தோ, அது தேவையா என்பது குறித்தோ அல்லது ஏன் தேவையில்லை என்பது குறித்தோ எவ்வளவு எழுதினாலும் அது உங்கள் உரிமை. சம்பந்தமில்லாமல் விவேக் என்கிற தனிமனிதரைக் கிண்டல் செய்துவிட்டுப் போகிற உங்களை 'புரிதலில் பிழை" என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது? நான் அப்படிச் சொன்னது உங்களுக்கு ஆச்சரியமென்றால் நல்லது :)) பிழைகளை ஏற்றுக்கொள்வது இயல்பாகிப்போனதால் அவற்றைக் கண்டுணர்வதே ஆச்சரியமாகிப்போனதோவென நான் நினைக்கிறேன். நன்றி.

 
At 10:01 PM, August 01, 2006, Blogger Adaengappa !! said...

மிக நல்ல பதிவு. விட்டுக்கொடுத்து வாழ்வது தான் இனிய இல்லறம் என தெளிவாக பதிந்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள் !

 
At 2:03 AM, August 02, 2006, Blogger பூனைக்குட்டி said...

give me time selvanayaki. i will write in detail. as once again they blocked the blogspot in pune.

it is your wish whether or not to post this comment.

Regards

 
At 2:48 AM, August 02, 2006, Blogger பூனைக்குட்டி said...

ம்ஹும் வந்துட்டேன், ஆரம்பத்தில் இந்தப் பதிவில் இருந்த சொல்லப்பட்டதான ஒழுங்கமைவு இல்லாமல் போய்விட்டதால் தான் நக்கல் தொனிக்கும் குரலில் வந்த பதில் அது. மீண்டும் ஒருமுறை கவனிக்கவும் நக்கல் தொனிக்கும்... இது ஒரு தரப்பைப்பற்றி மட்டுமே எழுதப்பட்டது, என்று நான் சொன்னால் என்ன செய்வதாக உத்தேசம்.

‘மாற்றங்களைக் கொண்டு வருவதற்குத் தேவைகளும், ஏற்றுக்கொள்வதற்கு பக்குவங்களும் வேண்டியிருக்கின்றன. அப்படி ஏற்றுக்கொண்டு இருக்கிற தம்பதிகளில் ஒருவர் தீபா-விவேக்.

நட்சத்திரவாரத்தில் அவர்களின்...”

‘அவர்களின்’ என்பது பன்மை என்று நினைக்கிறேன். ஆனால் இது ஒரு பக்க கருத்துக்களை மட்டுமே கொண்டுள்ளது என்பது உண்மையில்லையா. எங்கே இந்த நிகழ்வின் உண்மைக் கதாநாயகன் விவேக்கின் பதில்கள்.

பத்திரிக்கைத் தருமத்தில் முக்கியமானது இரண்டு பக்க விவரங்களையும் தருவது. இதில் பத்திரிக்கைத் தருமத்தைக் குறிப்பிடுவதற்கு மன்னிக்கவும். அது ஒரு மிகப்பெரிய பிரச்சனை கிடையாது. விவேக்கும் மேற்சொன்ன உங்கள் தோழியின் பதிலையேக் கூட சொல்லலாம்.

இப்பொழுது விஷயத்திற்கு, இது நிச்சயமாக ஒரு சமுதாயத்தின் கட்டுடைத்தலோ இல்லை ஒழுங்கமைவோ இல்லைதானே. நீங்கள் குறிப்பிட்ட ஒரு தனிமனிதரின் இல்லை அவருடன் இணைந்த இன்னொரு தனிமனிதருடன் சேர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வாழ்வியல் முறை அவ்வளவுதானே. இதில் சமுதாயம் எங்கிருந்து வந்தது கட்டுடைத்தல் எங்கிருந்து வந்தது.

அவர்களின் தனிமனித உரிமையை முழுவதுமாக மதிக்கிறேன், தனித்தனியாக, உங்களைப் போல் கணவன் மனைவியாக இல்லை. இங்கே தியாகம் போன்ற ஒரு விஷயம் நேரடியாக சொல்லப்படாமல் உள்ளுறைஉவமையாக இருப்பதாக நான் உணர்கிறேன். அப்படியென்றால், மன்னித்துக்கொள்ளுங்கள், என்னுடைய தனிமனித உரிமைகளைப் பற்றிய எண்ணங்கள் வித்தியாசமானவை, அதில் தியாகத்திற்கு இடமில்லை, மனைவியாக இருந்தாலும் சரி, தாயாகஇருந்தாலும், என் வாழ்விற்கு நான் பொறுப்பு.

நீங்கள் சொன்னதைப் போல வாழ்வதற்கு பல காரணங்கள் இருக்கலாம், பிண்ணனியில், இதை ஒரு பொது நிகழ்வாக இல்லை, அப்படியொன்றாக ஆக்க நினைக்கும் உங்கள் தீவிரத்தை தான் சுட்டிக்காட்டினேன்.

என்னைப்பொறுத்தவரை பொருளாதார நிலைக்காக உந்தப்பட்டு செய்து கொள்ளப்பட்ட சமாதானங்களை சமுதாயத்தின் மீது திணிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். இந்தப் பதிவில் எங்கும் விரவியிருக்கும் சமூகத்தைப் பற்றிய, இந்தியாவைப் பற்றிய, உங்களுடையதோ இல்லை உங்கள் தோழியினுடையதோ கொள்கைகளைப்பற்றி சொல்வதற்கு எனக்கு ஒன்றும் இல்லை. தனிமனித உரிமையை மதிக்கிறேன், தனித்தனியே.

விவேக்கிற்கு மட்டுமல்ல யாருக்குமே சான்றிதழ் தரும் உரிமையோ, கடமையோ எனக்கு கிடையாது. ஒரு சாதாரண நிகழ்வை சமூகக் கட்டுடைத்தலாக காட்டும் எண்ணமும் கூட.

 
At 6:36 AM, August 02, 2006, Blogger செல்வநாயகி said...

////மீண்டும் ஒருமுறை கவனிக்கவும் நக்கல் தொனிக்கும்... ////

அட அதுதான் ஆரம்பத்திலேயே தெரிந்துவிட்டதே மோகன்தாஸ்! அந்தப் பின்னூட்டம் "நக்கல் தொனிக்கும்" குரல் என்று. இன்னும் எத்தனைமுறை கவனித்தாலும் அதன் குரல் மாறவா போகிறது:))


/// இது ஒரு தரப்பைப்பற்றி மட்டுமே எழுதப்பட்டது, என்று நான் சொன்னால் என்ன செய்வதாக உத்தேசம்////

ஒன்றும் செய்வதாக உத்தேசம் இல்லை, இதை விளங்கிக்கொள்ளவே ஒருவருக்கு இவ்வளவு நேரம் பிடிக்கமுடியும் என்று நினைத்துக்கொள்வதைத் தவிர. ஆமாம் ஒரு தரப்பினுடையதுதான். பெரும்பான்மையினரிலிருந்து வேறுபட்ட முடிவில் வாழ்வை அமைத்துக்கொண்ட பெண் ஒருவரின் அனுபவங்களைப் பதிவு செய்வதே என் நோக்கமும்.

///‘அவர்களின்’ என்பது பன்மை என்று நினைக்கிறேன்///

எனக்கு உறுதியாகவே தெரியும் 'அவர்கள்' பன்மைதான் என்று. அவர்களின் அனுபவம் என்று போட்டதன் காரணம் கணவன் மனைவியாக அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை அவர் பகிர்ந்தார் என்பதைக் காட்ட.

///எங்கே இந்த நிகழ்வின் உண்மைக் கதாநாயகன் விவேக்கின் பதில்கள்.///

எதுக்குங்க இந்த மாதிரி வசனமெல்லாம் இந்த இடத்துக்கு? சும்மா சாதரணமாவே கேளுங்க, "விவேக் இதுல பேசலையா"ன்னு. பதில் சொல்லிட்டுப் போறேன். நான் பேசியது அவர்கள் குடும்பமாக இருந்தபோது குழந்தைகள் உட்பட. சில இடங்களில் அவர்களின் முடிவுகளை, நிகழ்வுகளை விவரித்ததும் அவர்தான். சேர்ந்து வாழுகிறபோது குடும்பத்தில் ஏற்பட்ட நிகழ்வுகளை பேட்டி என்ற பெயரில் இருவரிடமும் தனித்தனியாக தனி அறைகளில் வைத்துக் கேட்டுக்கொண்டிருக்க வேண்டியதில்லை என்பது என் புரிந்துணர்வு.

///நீங்கள் குறிப்பிட்ட ஒரு தனிமனிதரின் இல்லை அவருடன் இணைந்த இன்னொரு தனிமனிதருடன் சேர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வாழ்வியல் முறை அவ்வளவுதானே. இதில் சமுதாயம் எங்கிருந்து வந்தது கட்டுடைத்தல் எங்கிருந்து வந்தது.///

சமூகம் சரியென்று சொல்லியும் ,வலியுறுத்தியும் வைத்திருக்கிற ஒன்றை அவர்களாகவே மீறி வாழ்கிற யாரையும் சமூகம் சொன்னதைக் கட்டுடைத்து வாழ்பவர்கள் என்பேன் நான்.

///////அவர்களின் தனிமனித உரிமையை முழுவதுமாக மதிக்கிறேன், தனித்தனியாக///

கேக்கறதுக்கு நல்லா இருக்கு. ஆனா இப்பதிவில் நீங்கள் இட்ட முதல் பின்னூட்டத்தில் அப்படி ஏதும் மதிக்கிற மாதிரியான சாயலே தெரிந்தபாடில்லையே:))


///என்னுடைய தனிமனித உரிமைகளைப் பற்றிய எண்ணங்கள் வித்தியாசமானவை, அதில் தியாகத்திற்கு இடமில்லை, மனைவியாக இருந்தாலும் சரி, தாயாகஇருந்தாலும், என் வாழ்விற்கு நான் பொறுப்பு.////

நல்ல கொள்கை பாராட்டுக்கள். நான் தியாகம் பத்தியெல்லாம் இங்க எங்கேங்க சொல்லியிருக்கேன். உலக ஆண்களையெல்லாம் தியாகம் செய்யக் கூப்பிட்ட மாதிரியில்ல பேசிக்கிட்டிருக்கீங்க:)) மனைவியின் உணர்வுகளை மதித்துப் புரிதலோடு செய்யப்படுபவைக்கெல்லாம் தியாகம்னு பேரு வெச்சுக்கிட்டிருப்பீங்க போலிருக்கு.

///நீங்கள் சொன்னதைப் போல வாழ்வதற்கு பல காரணங்கள் இருக்கலாம், ////
என்னங்க இது? காரணங்கள்தான் தெளிவாச் சொல்லியிருக்காங்களே! நீங்க வேற எதவாது கற்பனைக் காரணங்கள் நினைச்சுக்கிட்டா நானோ அவங்களோ என்ன பண்ண முடியும்?

////என்னைப்பொறுத்தவரை பொருளாதார நிலைக்காக உந்தப்பட்டு செய்து கொள்ளப்பட்ட சமாதானங்களை///
அதற்காக மட்டுமே செய்யப்பட்ட சமாதானம்னு நீங்க என்ன உரிமையில அனுமானிக்கிறீங்க, தனிமனித உரிமையை மதிக்கிறன்னு வேற அடிக்கடி சொல்லிக்கிறீங்க

///விவேக்கிற்கு மட்டுமல்ல யாருக்குமே சான்றிதழ் தரும் உரிமையோ, கடமையோ எனக்கு கிடையாது. ///

இதை இப்பத்தான் உணர்ந்தீங்களாக்கும்:))

"சரி சரி ஒத்துக்குறேன், விவேக் நல்லவர் வல்லவர் நாலும் தெரிஞ்சவர். இதுதான உங்களுக்கு வேண்டியது" என்று பின்னூட்டமிடும் முன் உணர்ந்திருந்தால் எனக்கு ஒரு வேலை மிச்சமாகியிருக்கும். சும்மா விவாதிக்க வேண்டும் என்பதற்காக எதையாவது பேசிக்கொண்டிருக்க நினைத்தால் மன்னிக்கவும் எனக்கு நேரமில்லை:)) நன்றி.

 
At 6:40 AM, August 02, 2006, Blogger செல்வநாயகி said...

மாயா வாங்க வாங்க, சந்தேகம் வருதா? ரொம்ப நல்லதாப்போச்சு. சந்தேகம் வரவரத்தான் நிறையக் கேள்விகள் பிறக்கும். கேள்விகளின் பின்தானே தேடல், ஞானம் எல்லாம்:)) நன்றி.

 
At 8:14 AM, August 02, 2006, Blogger மலைநாடான் said...

/சமூகம் சரியென்று சொல்லியும் ,வலியுறுத்தியும் வைத்திருக்கிற ஒன்றை அவர்களாகவே மீறி வாழ்கிற யாரையும் சமூகம் சொன்னதைக் கட்டுடைத்து வாழ்பவர்கள் என்பேன் நான்./

மிகவும் ரசித்தேன். செல்வநாயகி!

வாழ்க்கையை வாசித்த அனுபவத்தின் வரிகள்
என்பேன்.

 
At 11:16 AM, August 02, 2006, Blogger செல்வநாயகி said...

மலைநாடன்,

நன்றி.

 
At 11:38 AM, August 02, 2006, Blogger செல்வநாயகி said...

மோகன்தாஸ்,
தனிப்பட்ட மனிதர்களும் சம்பந்தப்பட்டிருக்கிற ஒரு பதிவில் அவர்கள் குறித்தான, அவர்கள் வாழ்வு குறித்தான உங்களின் சுயவிருப்பக் கருத்துக்களோடு இடப்பட்ட பின்னூட்டங்களுக்கு இதுவரை அனுமதியுமளித்துப் பேசியுமாகிவிட்டது. அதுவே அதிகமோ என்ற யோசனையிலிருக்கும் எனக்கு இனி உங்களின் பின்னூட்டங்களை இந்தப் பதிவில் வெளியிட்டுக்கொண்டிருக்கவும், மேலே பேசவும் முன்பே சொன்னதுபோல் நேரமில்லை, கூடவே ஆர்வமுமில்லை.

நீங்கள் பதிவு எழுதுவது பற்றி சொல்வதற்கு எனக்கு ஒன்றுமில்லை. நன்றி.

 
At 11:58 AM, August 02, 2006, Blogger செல்வநாயகி said...

மலைநாடான்,

உங்களின் பெயரைத் தவறான வாசிப்பின் காரணமாக இதுவரை மலைநாடன் என்றே கூறிவந்திருக்கிறேன். பிழைக்கு வருந்துகிறேன்.

 
At 2:26 PM, August 02, 2006, Blogger Thangamani said...

செல்வநாயகி:

எளிய அழகான மொழியில் ஒரு நல்ல பதிவு.

ஒவ்வொருவரும் எந்தளவுக்கு தனிமனிதர்களோ அந்த அளவுக்கு அவர்களுக்குள் ஒரு சமுதாயமும் இருக்கிறது. ஒவ்வொருவரும் அந்தச் சமுதாயத்தால் கட்டுப்படுத்தப்படவும், உந்தப்படவும் செய்கிறார்கள். தனிமனிதர்கள் மற்றவரை பாதிக்காத தங்களது சுதந்திரம், சமத்துவம், கெளரவம் இவைகளை கண்டுகொள்ளவும், அவற்றை நடைமுறைப்படுத்தவும் முனையும் போது ஒரு சாராருக்கு ஆதரவாய் அமைந்த சமூக மனப்போக்கு பிறரிடம் இருந்துமட்டுமல்ல; அதற்கு பலியாகிபோன ஒவ்வொருவருக்குள் (ஏறக்குறைய அனைவருக்குள் இருந்தும்) இருக்கும் சமுதாயத்திடம் இருந்தும் இத்தகைய முயற்சிகளுக்கு (சுதந்திரம், சமத்துவம், உரிமையுடன் கூடிய கண்ணியம்) கண்டனங்களும், எதிர்ப்பும், வருத்தமும், வசையும், குற்றச்சாட்டும் வருவதும் அதை எதிர்கொண்டு மீள்வதும் அல்லது சமூகத்தில் கரைவதும் ஒவ்வோருகணமும் நிகழ்கின்ற ஒன்று.

இந்த வாழ்வுதாரணம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு செய்தியைச் சொல்லலாம்.

 
At 5:25 PM, August 02, 2006, Blogger செல்வநாயகி said...

நன்றி தங்கமணி,

இப்பதிவு குறித்த புதிய வடிவம் ஒன்றை உங்களுக்கேயான மொழியில் இங்கு பதிந்தமைக்கு. அது எனக்கு மேலும் சில விடயங்களை உணர்த்துகிறது.

 
At 5:26 PM, August 02, 2006, Blogger செல்வநாயகி said...

அடேங்கப்பா,
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி.

 
At 12:01 AM, August 03, 2006, Blogger செல்வநாயகி said...

உங்கள் பரந்துபட்ட சமூகப்பார்வையைப் புரிந்துகொள்ள முடிந்தவர்களிடம் கேட்டுப் பாருங்கள், உங்களுக்கு நல்லவிதமான பதில்கிடைக்கலாம். என்னைமாதிரி அதைப் புரிந்துகொள்ளமுடியாதவர்களிடம் கேட்டால் கிடைக்கிற பதில் உங்களுக்கு எகத்தாளமாகத் தெரிந்தால் அதற்கு நான் ஒன்றும் செய்ய இயலாமைக்கு வருந்துகிறேன். நன்றி மாயா.

 
At 7:37 AM, August 03, 2006, Blogger செல்வநாயகி said...

மாயா,

முதலில் குறைந்தபட்ச நேர்மையோடு வாருங்கள். இங்கே வந்து நீங்கள் இட்டிருக்கிற முதல் பின்னூட்டம் என்ன சொல்கிறது?

உலகம் முழுதுமான பெண்விடுதலைக்குரல்களின் ஓயாத பிடியில் சிக்கி , ஆணினம் தன் எல்லாம் இழந்து ஈனக்குரலில் ஏதோ முனகிக்கொண்டிருப்பது போலவும், இந்தப்பதிவிலும் நான் ஆண்களைப் போட்டு அடைத்துவைப்பதையும், பூட்டிவைப்பதையும் வலியுறுத்தி, "பெண்களே இன்றிலிருந்து நீங்களெல்லாம் உங்கள் கணவன்களை வீட்டிற்குள் பூட்டிவைத்து விட்டு நீங்கள் மட்டும் வேலைக்குப் போங்கள், படியுங்கள், உலகத்தை அனுபவியுங்கள்" என்று சொல்லிக்கொண்டிருப்பதுமான பாவனையில் நீங்கள் எழுதுகிறீர்கள்:" பெண்விடுதலை என்பது சமத்துவத்தை நிறுவாமல், எங்கே ஆண் அடிமையில் முடியப்போகிரதோ என பலமுறை நான் நினைத்ததுண்டு. இந்தப் பதிவும் அப்படி ஒரு சந்தேகத்தை என் மனதில் கிளப்பியுள்ளது."என்று.

இதிலேகூட முறைப்படியான கேள்வி எனக்கு எங்கே எழுதியிருக்கிறீர்கள்? உங்களுக்கு வரும் சந்தேகம் என்றுதான் பதிவுசெய்திருக்கிறீர்கள். இதுபோல் இன்னும் ஆயிரம் சந்தேகங்கள் இதைப்படிப்பவர்களுக்கு வரலாம். நான் என்ன இங்கு பாடம் நடத்திக்கொண்டிருக்கிறேனா எல்லோருக்கும்? வருகிற சந்தேகங்களையெல்லாம் விசாரித்துத் தீர்த்து வைப்பதற்கு? அது மாணவர்களாகவும், ஆசிரியர்களாகவும் இருப்பவர்களுக்கான விதிமுறை. நான் எண்ணங்களைப் பகிர்ந்து வைக்கிறேன். அதைப் புரிந்துகொண்டு வந்து பேசுகிறவர்களிடம் நானும் பேசினால் இருவருக்குமே, மட்டுமல்ல கேட்கிறவர்களுக்கும் எதாவது உருப்படியாகக் கிடைக்கலாம். வெறுமனே வருகிற அர்த்தெங்கெட்ட சந்தேகங்களுக்கெல்லாம் பதில் என்று சொல்லிக்கொண்டிருப்பதால் எல்லோர்க்குமே நேரவிரயமெனக் கருதியே " சந்தேகம் வந்தவர்கள்தான் இவ்வுலகில் தேடலை மேற்கொள்வார்கள், உங்களுக்கு பெண்விடுதலையில் ஆண் அடிமையாகிவிடுவான் என்று வந்த சந்தேகத்தில் உண்மையிலேயே தேடல் வந்தால் அது எவ்வளவுதூரம் உண்மை என்று கண்டடைவீர்கள்" என்ற பொருள்பட எழுதப்பட்டது என் மறுமொழி.

உடனே அடுத்த பின்னூட்டத்தில் நான் கேள்வி கேட்டேன், எகத்தாளமான் பதில் என்று ஓடிவருகிறீர்கள். "உங்களின் பார்வை என்னவென்றே விளங்காதபோது நான் அப்படித்தான் பதில் சொல்லமுடியும். அதற்கு வருந்துகிறேன். ஒருவேளை உங்களின் பரந்துபட்ட சமூகப்பார்வை புரிபவர்கள் விளக்கமாகச் சொல்ல முடியும்" என எழுதினேன். இப்போது மீண்டுமொரு குழாயடிச் சண்டைக் கேள்வியோடு வந்திருக்கிறீர்கள். இது எப்படியிருக்கிறதென்றால், ஒருவன் அவன் வீட்டிற்குள் அமைதியாக ஏதோ செய்து கொண்டிருக்கிறான். படிக்கிறான் ஆராய்ச்சி செய்கிறான் எதோசெய்கிறான். வெளியில்வந்து யாரிடமும் பேசாததால் அவன் செத்துவிட்டான் போலிருக்கிறது என்கிறார் இன்னொருவர். கொஞ்சகாலம் கழித்து "பார் அவன் செத்துவிட்டான் என்று இங்கு நான் கத்திக்கொண்டிருக்கிறேன் அவன் உயிரோடிருப்பதை வந்து நிரூபிக்காமல் இருக்கிறான் இன்னும்" என்று கத்த ஆரம்பிக்கிறார். இந்தப்பதிவில் உங்கள் செயலுக்கும் இந்த உவமையைப் பொருத்திப் பாருங்கள் மாயா.


உண்மையிலேயே உங்களுக்கு ஆர்வமிருந்தால் உங்களின் பரந்துபட்ட பார்வையில் விளக்கமாக "இன்றைய பெண்விடுதலையில் ஆணடிமை" என்று ஒரு பதிவு எழுதுங்கள். சும்மா அல்ல. ஆதாரங்களுடன். உலகின் ஒவ்வொரு மூலையிலும் அல்லது குறைந்தபட்சம் நம் ஊரில் இப்போது பிரபலமாகியிருக்கிற அயப்பன் கோவில் விடயத்தில் பெண்ணுக்கும் அரசியல் சாசனப்படி சம உரிமை கேட்டு இதோ இப்போது பெண் வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுத்திருக்கிறார்களே அதிலாவது அவர்கள் எப்படி ஆணடிமையைக் கொண்டுவருகிறார்கள் என்று கொஞ்சம் எனக்கு மட்டுமின்றி இங்குள்ள மற்ற பெண்கள் எல்லோருக்குமே புரியும்படி விளக்கமாக எழுதுங்கள். சாவகாசமாக விவாதிக்கலாம். உண்மையில் உங்களின் பரந்துபட்ட பார்வையில் இங்கு எழுப்பப்பட்ட சந்தேகத்திற்கு "பிரசுரிக்க வேண்டாம்" என்று என்னோடு மட்டும் பகிரும் நோக்கில் மற்ற பெண்கள் எனக்கு எழுதுவதையும் சேர்த்து எடுத்துக்கொண்டு அங்கு வந்து பேசுகிறேன். ஆனால் இங்கு அதற்கு வாய்ப்பு இல்லை. ஏனென்றால் என்னை நம்பித் தங்களின் சொந்தவாழ்க்கையைப் பகிர்ந்துகொண்ட இருவருக்கு நான் தார்மீகமாக நடந்துகொள்ளவேண்டியிருக்கிறது. இங்கு போடப்படும் கூச்சல் சந்தோஷமான அவர்களுக்கு எதற்கு?

மீண்டும் நன்றி.

 

Post a Comment

<< Home