நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Tuesday, August 01, 2006

என்னைச் சுமக்கும் புத்தகம்

"ஒரே பாத்தியில இந்த மொளகாச் செடி பெரிசா வளந்திருக்கு, இது மட்டும் சின்னதா இருக்கு!"
"அதுக்குத் தண்ணி செரியாப் பாஞ்சிருக்காதா இருக்கும்"
"இல்லடா அது மொதல்லயே தளைஞ்சிருக்கும், இது அப்பறம் போட்ட பட்டநாத்தா இருக்கும்"

ஐந்தாம் வகுப்புவரை அடுத்தவீடுதான் பள்ளிக்கூடம். பிரச்சினை இருக்கவில்லை. ஆறாம் வகுப்புக்குத் தாவியதும் உயர்நிலைப்பள்ளிக்கு 2 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும். மிதிவண்டி பழகும்வரை நடைதான். நடையென்றாலும் கவலையில்லை. துணைக்குத்தான் ஒரு கூட்டமே இருந்ததே!. நேர்வழிகளை நிராகரித்துக் குறுக்குவழிகளில் கூட்டத்தோடு கூட்டமாகப் போகையில் நடக்கும் முக்கிய ஆராய்ச்சிகளின் மாதிரி ஒன்றுதான் மேலே சொன்னது. பிரச்சினை என்று சொன்னால் பள்ளிக்கூடத்தில் மட்டுமின்றிப் பாதைகளிலும் பாடப் புத்தகங்கள்தான் கஷ்டம் கொடுத்தன. எழெட்டு ஒரு குயர் நோட்டுக்களையும், அறிவியல், சமூக அறிவியல் போன்ற குண்டுப்புத்தகங்கள், கோனார் தமிழ் உரை உள்ளிட்ட
ஆறேழு புத்தகங்களையும், கொசுறாக நீளமான கட்டுரை, செய்முறைவடிவியல் நோட்டுக்களையும் சேர்த்துச் சின்னத் தோள்களுக்குக் கொஞ்சம் பெரிய சுமையாகவே இருந்தன. தூக்கும்போது தெரியாது. நடக்கநடக்கச் சுமை. சிறிது தூரத்திற்கொருமுறை கீழே வைப்பதும், பிறகு எடுத்துத் தோளில் போட்டுக்கொள்வதுமாகப் பயணம். அப்படிப் புத்தகங்களைச் சுமந்துகொண்டிருந்த என்னை இன்று ஒரு புத்தகம் சுமக்கிறது.

கல்லூரி முடித்து வழக்குரைஞர் ஆகியிருந்த காலத்தில் " நீ அதை வாங்கினாயா? படித்தாயா?" என்ற ஓயாத நச்சரிப்புகளுக்குப் பின் என் சோம்பேறித்தனத்தை நொந்துகொண்டே நண்பரே அன்பளிப்பாகத் தந்த புத்தகம், அப்படியாவது நான் படிக்கட்டுமென்று. எழுதியவர் அவருடைய நண்பரென்பதால் கூடுதலாகப் புகழ்ந்திருப்பாரோ என்கிற முன்முடிச்சோடுதான் வாசிக்க ஆரம்பித்தேன். ஆனால் நான் சற்றும் எதிர்பார்க்கா வண்ணம் எங்கெங்கோ எதனாலோ எனக்குள் விழுந்துகிடந்த முடிச்சுகளையெல்லாம் அவிழ்த்தெறிந்தது அது. என் இதயத்தின் யாருக்கும் தெரியாத இடத்தில் எதற்கோ சேமித்திருந்த இறுக்கத்தையும் சொட்டுச் சொட்டாகக் கரைத்துத் துடைத்தது. பனி தானே உருகுவதைப் போல், காற்றடிக்காதபோதும் புதிய தளிருக்கு வழிவிட்டு மெல்ல இறங்கும் உயர்ந்த மரமொன்றின் முதிர்ந்த இலையைப்போல் இயல்பாகவும் அழகாகவும் இருந்தன அந்தப் புத்தகத்தின் பெரும்பாலான எழுத்துக்கள். அதற்குப் பிறகு அது நான் எங்கிருந்தாலும் என்னோடு இருக்குமொன்றாகியது. பயணங்களிலும் இதை எடுத்துச் செல்ல மறந்ததில்லை. காரணம் தனியாகப் பயணிக்கையில் நல்ல நண்பனொருவன் கூடவே பேசிக்கொண்டு வருவதைப் போல் இருக்கிறது இதைப் படித்துக்கொண்டு போனால். தூங்கும்போது, சிரிக்கும்போது, அழும்போது என்று ஒவ்வொரு நேரத்திலும் அழகாகத் தெரியும்
கைக்குழந்தை மாதிரி என் மனம் மகிழ்ச்சியில் திளைக்கையில், களைப்பில் சலிக்கையில், ஏகாந்தம் தேடுகையில் என்று ஒவ்வொரு நிலையிலியிருக்கும்போதும் இதைப் படிக்கலாம். நிலைக்குத் தகுந்த உணர்வுகளை இதிலிருந்தும் பெறமுடிந்திருக்கிறது. புத்தகத்தின் பெயர்
"எல்லோர்க்கும் அன்புடன்". ஆசிரியர்: வண்ணதாசன். இவர் கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதைகள் புனைபவர்.

கல்யாண்ஜி வெவ்வேறு காலகட்டங்களில் தன் வெவ்வேறு நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களைத் தொகுத்துப் புத்தகமாக்கியிருக்கிறார்கள் "வைகறை" பதிப்ப்கத்தார். கடிதங்கள் பெரும்பாலும் இவரின் வாசக மற்றும் எழுத்தாள நண்பர்களுக்கு எழுதப்பட்டவை. சொந்தங்களுக்கு எழுதியவையும் சில. கடிதங்கள் எழுதுவதும், பெற்றுக்கொள்வதும் சுகமானது. தொலைபேசியின் இரண்டு நிமிடப் பேச்சைப்போல் காற்றில்
தொலைந்துபோகாமல், கடிதங்கள் கடைசிவரை பேசும் நாம் பத்திரப்படுத்திக்கொண்டால். மின்னஞ்சலிலும் இப்போது தமிழிலேயே கடிதங்கள் பரிமாறிக்கொள்ள முடிகிறதெனினும், அஞ்சலில் வரும் கையெழுத்துக் கடிதங்கள் எனக்காக யார்யாரெல்லாமோ சுமந்து வந்து என்னிடம் சேர்கின்றன என்று நினைத்துக்கொள்வதிலேயே நெகிழ்வைத் தருகின்றன.

கல்யாண்ஜியின் இத்தொகுப்பிலுள்ள கடிதங்கள் எழுதப்பட்டிருப்பது தனிமனிதர்களுக்கென்றாலும் பேசுவது எல்லோரைப்பற்றியும்தான். மனிதனின்
மென்மையான பக்கங்களை, அவற்றின் ஏக்கங்களை, கசிவை, காதலை, களிப்பை எல்லாம் எடுத்துக்காட்டுகின்றன இக்கடிதங்கள். அத்தொகுப்பின் முதல் கடிதம் இது:

"அன்புமிக்க வல்லிக்கண்ணன்,

வணக்கம். தங்கள் 71 ஆம் பிறந்தநாள் சிறப்பிதழாக வெளிவந்திருக்கிற 'முகம்' கிடைத்தது. உங்களை, உங்களின் ஒளிக்கீற்றை இப்படி எங்கேனும் எவரேனும் உணர்ந்து போற்றுகிறார்கள் என்பது மகிழ்வு தருவது. மலைச்சுனைபோலவும், வனச்சிற்றோடை போலவும் எங்கோ, யாருக்காகவோ என்ற நிச்சிந்தையில் அழுக்கற்றுக் காலம் கழிந்து விடுமாகில் எனக்கும்கூட அது உவப்பானதுதான். உங்களைப்போல் 'பொதிகைமலையில் போய் மறைகிற' ஆசை எனக்கென்ன, எல்லோர்க்கும் உண்டு. ஆனால் 'பணியை முடித்துக்கொண்டு' என்று சொல்லியிருக்கிறீர்கள் பணி தீர்வதில்லை. மலையாள சினிமாத் தலைப்பு போல இந்த வாழ்வு ஒரு 'பணி தீராத வீடு'. எது பணி என்று அறிந்து துவங்குவதற்கு வெகுநாள் ஆகிவிடுகிறது. ஆகும் நேரத்தில் பணிக்குப் பிணையாய் பிணி. பிணியின் கவ்வலில் கிழிந்து தொங்கும் நம் 'இனி'!
எல்லோர்க்கும் அன்புடன், கல்யாணி சி."


ஒவ்வொரு நொடி, நிமிட, நாள் நிகழ்வுகளும், அந்த நிகழ்வுகளினூடாகத் தேவையான சிந்தனைகளைப் பெற்றுக்கொள்ளும்படியாகவும்தான் வகுக்கப்பட்டிருக்கிறது வாழ்க்கை. ஒவ்வொன்றையும் கண்டுணர்ந்துகொள்வதில்தான் இருக்கிறது அதன் சூட்சுமம். வல்லிக்கண்ணனுக்கான இன்னொரு கடிதத்தில் இப்படி எழுதுகிறார்,

"பண்டம் சுடுகிற வாசனையுள்ள வீடு எவ்வளவு அருமையானது. அதுவும் சொந்த வீட்டு அடுக்களையில், மண் அடுப்பில், விறகு எரித்துச் சுடுகிற நேரத்தின் நெருப்பும், அடுப்பின் உட்பக்கத்துத் தணலும், தணலின் சிவப்பில் ஜொலிக்கிற அம்மா அல்லது ஆச்சி அல்லது அத்தைகளின் முகமும் எவ்வளவு ஜீவன் நிரம்பியது. உங்களின் 'கல்யாண முருங்கைகள்' மட்டும் தொலைந்து போயின. நெருப்பு வெளிச்சத்தில் சுடர் தகதகக்கிற எவ்வளவோ முகங்கள் தொலைந்து போயின. சிலசமயம் விஷேச வீடுகளில் தொலைகிற சிறுமிகளின் காதுத் திருகுகள் போல அவை திரும்பக் கிடைத்து சந்தோஷங்களையும் உண்டாக்கி விடுகின்றன.

நேற்றுச் சாயங்காலம் நல்ல மழை. இன்று எழுந்திருந்து பார்க்கும்போது எல்லாம் நன்றாக இருக்கிறது. புதிதாக எங்கள் பகுதியில் போட்ட தார்ரோடு கழுவிவிட்ட மாதிரி நன்றாக இருக்கிறது. கழுவின-காய்ந்துகொண்டிருக்கிற-முற்றிலும் காய்வதற்கு முந்திய எல்லாவற்றிலுமே ஈரம் செய்கிற அழகு தனி. எல்லா அழகையும் ஆனால் பன்றிகள் கெடுத்து விடுகின்றன. ஒருநாள் ராத்திரிக்குள் வீட்டைச் சுற்றி உழுது[போட்டதுபோல்
இருக்கிறது. கல் எடுத்து அடிக்கலாம் என்று நினைத்தால், இரண்டு தாய்ப்பன்றிகள் ஒருச்சாய்த்துப் படுத்துக்கிடக்க, பத்துப் பன்னிரண்டு குட்டிகள் பால் குடித்துக் கொண்டிருக்கின்றன. மிருகமோ, மனுஷியோ, பாலூட்டுகிற-பால் குடிக்கிற நேரத்தில் நிகழ்கிற மெய்மறதி தனி. கல்லுக்கு அங்கே இடமில்லை.

உங்களுடைய கால்புண் சரியாக ஆறிவிட்டதா என்று நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள். உங்களுடைய இந்த வயதில் உள்ளேயும், வெளியேயும் எந்த ஆறாத காயங்களும் இருக்கக்கூடாது. காயங்கள் நடைமுறை ஆகிவிட்டன. நம்மிடம் உடைவாட்கள் இல்லையென்றாலும்கூட, கேடயங்களைக் கையில் திணித்துப் போகிறது காலம். ஆனால் ஆறிவிடும்படியாக இருப்போம், எல்லாக் காயங்களும். காயமே இது பொய்யடா.

எல்லோர்க்கும் அன்புடன், கல்யாணி சி."


மனுஷ்யபுத்திரனுக்கு எழுதப்பட்ட கடிதம் ஒன்று இது:

"அன்புமிக்க ஹமீத்,

வணக்கம்.

நீங்கள் உங்கள் கடிதம் கிடைத்ததா என்று கேட்டிருப்பதைப் பார்த்தால், உங்கள் கடிதம் கிடைத்து அதற்கு நான் எழுதிய பதில் உங்களுக்குக் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. என்னுடைய தபால்பெட்டிகளை மாற்றவேண்டிய நிர்ப்பந்தம் மறுபடியும் வந்துவிட்டது. சமீபத்தில் நான் அனுப்பிய மூன்று கடிதங்களுக்கும் மேல் போய்ச்சேரவில்லை. எலிகளை ரசிகர்களாக எப்படி அங்கீகரிக்க? இடக்குறைவின் காரணமாக ஜாதிக்காய்ப் பெட்டிகளில் அடைக்கப்பட்ட எத்தனை புத்தகங்களை அவை "கரும்பித்" தள்ளியிருக்கின்றன. இப்போது மீண்டும் இம்சை. மிகவும் நெருக்கமான உணர்வுகளுடன் எழுதப்படும் கடிதங்கள் தின்னப்படுவதை எப்படி நான் அனுமதிக்க முடியும்? குரங்குகள் பிடுங்கிச் செல்கிற சாப்பாட்டுப் பொட்டலங்களை பழந்தோட்ட அருவியின் ஒரு அம்சாகவும், குழந்தையின் கையிலிருந்து முறுக்கைக் கவ்விப் போகிற காக்கைகளைப் புறவாசல் காட்சிகளுடன் இயைந்த ஒரு காட்சியாகவும் எப்போதும் எப்படி எடுத்துக்கொள்ள? எப்போது ரோமம் மூடிய கரம் மீண்டும் நம் கைக்கவளத்தின் மீது வீசப்படுமோ, எப்போது கருப்புச் சிறகு காற்றின் கிழிப்புடன் நம் தோளின் மீது அறைந்து அப்பாற்செல்லுமோ என்ற அடுத்த தடவைக்கான பயத்தை என்ன செய்ய? படுக்கை அறையில் மட்டுமல்ல, தபால் பெட்டியிலும் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்.

மதுரைக்கு நீங்கள் வருகிறபோது எப்படியும் பார்த்துப்பேசிவிடலாம் என்றுதான் இருந்தேன். லட்சுமி, மணிவண்ணன், மற்றும் உங்களது சைக்கிள் கடை நண்பர் நேரே பாங்கிற்கு வந்தபோது கூட்டத்திற்கு வந்துவிடுவதாகவும் சொன்னேன். கதிர் கல்யாணம். மீராவைவிட கதிர் எனக்கு நெருக்கமான பையன், எப்படிப் போகாமல் இருக்க? அங்கேயும் கல்யாணத்தைவிடக் கலந்துரையாடல்தான் அதிகமாக இருந்தது. நான் ராகுலதாசனை ஒரு இருபத்தைந்து வருடங்கள் தொலைத்துவிட்டு, சின்ன வயதில் தொலைந்து, உச்சகட்டத்தில் அதே பாட்டைப் பாடிக்கொண்டு ஒன்று சேர்வது போல அந்தக் கல்யாண மண்டபத்தில் கண்டெடுத்தேன்.

எல்லோர்க்கும் அன்புடன், கல்யாணி சி."


ரவிசுப்பிரமணியனுக்கு எழுதப்பட்ட கடிதங்களில் ஒன்று இது:

"அன்புமிக்க ரவி,

வணக்கம்.
தொடர்ந்து உங்கள் கடிதங்கள்.

எதையாவது தொடர்ந்தும், அதனாலோ தொடரப்பட்டும் கடைசிவரை செய்வினை, செயப்பாட்டுவினை ஆகிவிட்டது வாழ்க்கை. கல்நாகங்களின் மாய
அர்த்தங்கள் போல, வாழ்வின் பாறைகளில் வால்சுழித்துப் படம் உயர்த்தி, படத்துக்குள் சிவலிங்கம் தாங்கி, வழிபடுபவரின் குங்குமத்திற்கும், மஞ்சளுக்கும், வழிகிற மழைக்கும், விழுகிற பறவை எச்சத்துக்கும் அசையாதிருக்கவேண்டியதாகிவிட்டது.

நேர்காணல் அவசியமற்றது. என்னைப் பிறர் அறிவதற்கும், நான் பிறருக்கு அறிவித்துக்கொள்வதற்கும் என் எழுத்துக்கள் போதுமானது. ஆனாலும்
'விருப்பமில்லாத திருப்பங்கள்' எத்தனையோ. தவிர்க்க முடியாதவை. "காதலினால் அல்ல கருணையினால்" என்றும் "கருணையினால் அல்ல காதலினால்" என்றும்தான் ஒவ்வொன்றும் வெவ்வேறு அறியாத சதவிகிதங்களுடன் நிகழ்கின்றன. இலக்கியத்தில் வன்முறைகளுக்கு இடமில்லை. கரும்புத்தோகைகள் கையைக்கிழித்த அனுபவம் உங்களுக்கும் இருக்கலாம். வாய்க்காலில் குளிக்கையில், கிழிந்த பாதத்துடன் கரையேறிக்கிறேன் என் சின்ன வயதில். ஒரு ஏழெட்டுப் பேர் மத்தியில் நான் சரிந்து போயிருக்கலாம். ஒரு நாலைந்து வாசல்கள் முற்றிலுமாக இனி எனக்கு அடைக்கப்படலாம். முகமூடிய தாக்குதல்கள், புனைந்த பெயருடன் வசைகள் இனிச் சிறிது காலம் இருக்கும். ஏனெனில் இது கதையல்ல வாழ்க்கை.
இவர்கள் பாத்திரங்கள் அல்ல மனிதர்கள். வாழ்வும், மனிதர்களும் நான் விரும்புகின்றவை அல்லவா?

எல்லோர்க்கும் அன்புடன்,
கல்யாணி சி."


போதும் நண்பர்களே! இந்தத் தொகுப்பின் ஒரு நூற்றுச்சொச்சத்துக்கும் மேலான கடிதங்களையும் இப்போதே உங்களுக்குக் காட்டவேண்டுமென்ற
வேட்கை இருந்தாலும் நட்சத்திர வாரத்தில் குறைந்தது தினம் ஒரு பதிவாவது போட வேண்டியிருக்கிறது. பின்னூட்ட மட்டுறுத்தல் வேறு:)) வருகிற
பத்திருபது பின்னூட்டங்களையே ஒவ்வொன்றாகப் பார்த்துப் பிரசுரிக்கத் திணறிக்கொண்டு, நூற்றுக்கணக்கில் பின்னூட்டம் பிரசுரிப்பவர்களை வாயைப் பிளந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். என்றாலும் கடைசியாக இந்த ஒரு கடிதத்தை மட்டும் சுட்டி முடித்துக்கொள்கிறேன்.

"அன்புமிக்க ஆன்ந்தன்,

வணக்கம்.

உங்களுடைய கடிதமும் சிருஷ்டியும்.

அடுத்த சிருஷ்டிக்கு என்னுடைய கவிதைகள் சில இத்துடன் அனுப்பியிருக்கிறேன். அக்டோபருக்கும், டிசம்பருக்கும் மத்தியில் நிறையக் கவிதைகள் எழுதினேன். 'மூன்றாவது" என்று மானசீகத் தலைப்பிட்டுவைத்திருக்கிற அந்த நாற்பது பக்கங்களை எங்கோ வைத்துவிட்டு அதை எழுதிய முதல் படிவத்திலிருந்து இதைப் பிரதி செய்து அனுப்புகிறேன். அப்போதுதான் ஈன்ற பசுங்கன்றுக்குட்டியைவிட மூன்றுநாள் சீம்பால் குடித்துத் துள்ளுகிற
கன்றுக்குட்டி அழகாக இருக்கும். நக்கி நக்கிச் சுத்தம் பண்ணுகிற தாய்ப் பசுவைப் போல மனம் எத்தனையோ முறை ஈன்று புறந்தந்துகொண்டே இருக்கிறது.

'குளிப்பதற்கு முந்திய ஆறு' எழுதியதற்காக இப்போதுகூடச் சந்தோஷப்படுகிறேன். உங்கள் கண்முன் தாண்டுகிற உயரம் உயரமல்ல. உங்கள்

கண்முன் செதுக்குகிற சிற்பம் சிற்பமல்ல. உங்கள் செவிகளை நிறைப்பது மட்டும் இசைமையின் உச்சமல்ல. நான் வரந்த ஓவியத்தையும் தாண்டி ஒன்றை வரையவே ஒவ்வொருமுறையும் பிரஷ்ஷை எடுக்கிறேன். என் இம்சையைத் தாங்கமுடியாது திரச்சீலைகள் விம்முவதை நான் மட்டுமே அறிவேன். நான் அறியாத வசீகரங்களை, என் விரல்களுக்கு அப்பாற்பட்டு திரைச்சீலை எனக்குத் தரமுயல்கிற நேரங்களும் எனக்குண்டு.
வாசிக்கிறவனை வீணை மீட்டத் துவங்குகிற நேரம் அபூர்வமானது. இசையின் கொடுமுடிகளைத் தொடப் பிரயாசைப்பட்டு அடையும்போது இசையே
இன்னும் சில சிகரங்களுக்குப் பாடகனை நகர்த்தும்.

இந்த வாழ்வின், இந்த மனிதர்களின் மத்தியில் ஒரு அந்தரத்தராசு சதா தொங்கிக்கொண்டிருக்கிறது. இதில் ஆணும் பெண்ணும் துல்லியப்பட்டுச்
சமஎடையில் நில்லாமல், தாழ்ந்தும் உயர்ந்தும் சீசா விளையாடிக்கொண்டிருக்கிரார்கள். இந்தச் சமன் புரிந்துவிட்டால் வாழ்வு ரம்மியமானது. இந்த ரம்மியமான இடத்தைச் சிறிதாவது எழுதிப்பார்க்க வேண்டும்.

குளிப்பதற்கு முந்திய ஆறும் குளித்த பிறகான ஆறும் மட்டும் வேறுவேறு அல்ல. நீங்கள் பார்க்கிற ஆறும், நான் பார்க்கிற ஆறுமே வேறுவேறு.

எல்லோர்க்கும் அன்புடன், கல்யாணி சி. "


வாழ்வை ரசிப்பவன் தன்னை நேசிக்கிறான். தன்னை நேசிப்பவன் தன் சுதந்திரத்தையும் மதிக்கிறான். தன் சுதந்திரத்தை மதிப்பவன் இன்னொருவனுக்கும் அப்படியான சுதந்திரம் தேவைப்படுமென உணர்கிறான். அப்படி உணர்ந்தவர்களால் மற்றவர்களுக்கோ, உலகத்துக்கோ பிரச்சினைகள் வருவதில்லை. இப்படியான ஒரு கருத்தாக்கத்தை என்னுள் ஏற்படுத்தியதில் "எல்லோர்க்கும் அன்புடன்" நூலுக்கு நிறையவே பங்குண்டு.

18 Comments:

At 12:39 PM, August 01, 2006, Blogger மலைநாடான் said...

//வாழ்வை ரசிப்பவன் தன்னை நேசிக்கிறான். தன்னை நேசிப்பவன் தன் சுதந்திரத்தையும் மதிக்கிறான். தன் சுதந்திரத்தை மதிப்பவன் இன்னொருவனுக்கும் அப்படியான சுதந்திரம் தேவைப்படுமென உணர்கிறான். அப்படி உணர்ந்தவர்களால் மற்றவர்களுக்கோ, உலகத்துக்கோ பிரச்சினைகள் வருவதில்லை //

என்ன ஓரு அழகான சிந்தனை. உண்மையைச் சொல்கின்றேன் செல்வநாயகி! நான் முன்னர் உங்கள் பதிவுகளை வாசித்தவன் அல்ல. ஆனால் இப்போ வாசிக்காமல் இருக்க முடியவில்லை. ரசிக்கவும், அதே ரசிப்புடன் மற்றவர் ரசிக்கும்படி சொல்லவும் தனித்திறமை வேண்டும். தமிழ்மணத்தில் அப்படிச் சந்தித்த திறமையாளர்களில் ஒருவராக தென்படுகின்றீர்கள்.பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

 
At 12:43 PM, August 01, 2006, Blogger மோகன்தாஸ் said...

//வண்ணதாசன் என் விருப்பத்துக்குரிய எழுத்தாளர். நெருக்கத்தில் அவரை ‘கல்யாணி அண்ணன்’ என்று அழைப்பதுதான் பிடித்திருக்கிறது. அவரது கதைகள் நெருக்கடியும் பிரச்னைகளும் நிறைந்த வாழ்வின் இடையில் அன்பின் இருப்பையும், அன்பு வெளிப்படும் அரிய தருணங்களையும் வெளிப் படுத்துபவை. தமிழ்ச் சிறுகதை உலகுக்கு இவரது பங்களிப்பு தனித்துவமானது. அது கவித்துமானதொரு உரைநடையை சிறுகதை எழுத்துக்கு உருவாக்கியது. இம்பிரஷனிச ஓவியங்கள் போன்ற துல்லியமும் வண்ணங்களும் கொண்ட உருச்சித்திரங்கள் இவரது கதைகளில் சித்திரிக்கப்படுகின்றன.

நவீன தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுந்த கவனம் பெற்ற எழுத்தாளரான எஸ்.கல்யாணசுந்தரம் என்ற வண்ணதாசன், ‘தீபம்’ இதழில் எழுதத் துவங்கியவர். திருநெல்வேலிக்காரர். 1962-ல் இருந்து இன்று வரை தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது கதையுலகம் ப்ரியமும் கருணையும் நிரம்பியது. சகமனிதர்களின் மீதான அன்பும், அன்றாட வாழ்வு தரும் நெருக்கடியை மீறி மனிதன் நெகிழ்வுறும் அபூர்வ கணங்களைப் பதிவு செய்வதும் இவரது எழுத்தின் வலிமையாகச் சொல்லலாம். கலைக்க முடியாத ஒப்பனைகள், தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள், சமவெளி, பெயர் தெரியாமல் ஒரு பறவை. மனுஷா மனுஷா, கனிவு, நடுகை, உயரப் பறத்தல், கிருஷ்ணன் வைத்த வீடு ஆகியவை இவரது சிறுகதைத் தொகுப்புகள். கல்யாண்ஜி என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதி வருகிறார். இவரது சிறுகதைகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன. இலக்கிய சிந்தனை உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார் வண்ணதாசன். //

கதாவிலாசத்தில் எஸ்ராவிடமிருந்து கிடைத்த அறிமுகத்திற்குப் பிறகு தேடி சில கவிதைகள் வாசித்த நினைவு. சில கவிதைகளைப் படித்து வாய்விட்டும் மனதிற்குள்ளும் சிரித்திருக்கிறேன்.

பின்னூட்டங்களைப் பற்றிய உங்கள் வார்த்தைகளுக்கு ஒரு :-) இப்பொழுதெல்லாம் நான் விரும்பிப் படிக்கும் சில பதிவுகளுக்கு அதிக பின்னூட்டங்கள் வந்துவிட்டால், கொஞ்சம் ஆச்சர்யமாய் உணர்வது எனக்கேக்கூட ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.

நன்றி கதாவிலாசம், விகடன், எஸ்ரா, உங்களுக்கும் தான்.

 
At 1:13 PM, August 01, 2006, Blogger மகேந்திரன்.பெ said...

நட்சத்திர வாரத்தில் புத்தகம் பேசும் எங்கள் பெட்டகமே வாழ்க உன் தொண்டு

 
At 1:30 PM, August 01, 2006, Blogger டிசே தமிழன் said...

உங்களுக்குப் பிடித்த கடிதத் தொகுப்பை எங்களோடும் பகிர்ந்தமைக்கு நன்றி.
...
ப்லவேறு பட்ட படைப்பாளிகளால் எழுதப்பட்ட/பெறப்பட்ட கடிதங்கள் தொகுப்புக்களாய் வெளிவந்திருக்கின்றன என்று நம்புகின்றேன். கடிதங்களின் தொகுப்பு என்றளவில், அ.மார்க்ஸால் தொகுக்கப்பட்ட, 'டானியலின் கடிதங்கள்'தான் வாசித்திருக்கின்றேன். உங்களின் பதிவை வாசிக்கும்போது, வண்ணதாசனின் இந்தத் தொகுப்பை வாசித்துவிட வேண்டும் என்ற ஆர்வம் வருகின்றது. :-).

 
At 2:14 PM, August 01, 2006, Blogger சரவணன் said...

>>>>>
"ஒரே பாத்தியில இந்த மொளகாச் செடி பெரிசா வளந்திருக்கு, இது மட்டும் சின்னதா இருக்கு!"
"அதுக்குத் தண்ணி செரியாப் பாஞ்சிருக்காதா இருக்கும்"
"இல்லடா அது மொதல்லயே தளைஞ்சிருக்கும், இது அப்பறம் போட்ட பட்டநாத்தா இருக்கும்"
<<<<<

இந்த வரிகள் என் பழைய வாழ்க்கையை நினைவுபடுத்துகின்றன. நன்றி.

 
At 3:52 PM, August 01, 2006, Blogger Udhayakumar said...

//நேர்வழிகளை நிராகரித்துக் குறுக்குவழிகளில் கூட்டத்தோடு கூட்டமாகப் போகையில் நடக்கும் முக்கிய ஆராய்ச்சிகளின் மாதிரி ஒன்றுதான் மேலே சொன்னது. //

அது எப்படிங்க, நாங்க பண்ணதெல்லாம் நீங்களும் பண்ணிருக்கீங்க...

//தன்னை நேசிப்பவன் தன் சுதந்திரத்தையும் மதிக்கிறான். தன் சுதந்திரத்தை மதிப்பவன் இன்னொருவனுக்கும் அப்படியான சுதந்திரம் தேவைப்படுமென உணர்கிறான். அப்படி உணர்ந்தவர்களால் மற்றவர்களுக்கோ, உலகத்துக்கோ பிரச்சினைகள் வருவதில்லை.//

:-) ஏனோ ஸ்மைலி போடன்னும்னு தோணுச்சு...

 
At 3:55 PM, August 01, 2006, Blogger SK said...

ஒவ்வொருவருக்கும் இது போல ஒரு புத்தகம் மிகவும் பிடித்ததாக இருக்கும்.
இப்பதிவின் மூலம், அதை நினைக்க வைத்து விட்டீர்கள்!

வேணும்னா சொல்லுங்க!
ஒரு செயின் ஆரம்பித்து விடலாம்!!
:))

உங்க பேரைச் சொல்லிக்கிட்டு ஒரு 3 மாதம் ஓட்டலாம்! :)
சில மாணிக்கங்களும் கிடைக்கலாம்!

 
At 5:12 PM, August 01, 2006, Blogger செல்வநாயகி said...

மலைநாடன்,
உங்களைப் போன்றவர்களின் ஊக்கங்களே இதுபோன்ற முயற்சிகளுக்கு துணையாக இருக்கிறதென நினைக்கிறேன்.

மோகன்தாஸ்,
கல்யாண்ஜி பற்றிய விகடன் பத்தியை நீங்கள் இங்கு எடுத்துப்போட்டதில் மகிழ்ச்சி. எஸ்ராவின் கதாவிலாசம் பயனுள்ள தொடராக இருந்தது.

மகேந்திரன்,
நான் புத்தகம் குறித்துப் போடுகிற முதல்பதிவே இதுவாகத்தானிருக்கும். அடிக்கடி நிறைய நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கிற ஆசாமி இங்க வந்துட்டுப் போயிருக்காரு பாருங்க டிசே, அவர்தான்.

டிசே,
"டானியலின் கடிதங்களை" எனக்கு அறிமுகப்படுத்தியமைக்கு மகிழ்ச்சி.

சரவணன்,
பட்டநாத்தெல்லாம் தெரியுமா உங்களுக்கு? அனுபவங்களை எழுதுங்கள், படிக்கலாம்.

உதயகுமார்,
ஸ்மைலிதானே! எங்க வேணா போட்டுக்குங்க, அது உங்க சுதந்திரம். ஆனா அதுவே அடுத்தவங்க சுதந்திரத்தைப் பாதிக்கும்போது பிரச்சினை வரலாம் அல்லது விளையாட்டு வினையாகிருலாம்:))

எஸ்கே,
எழுதுங்க எழுதுங்க, புத்தகம் பற்றி எழுதுவதற்கென்ன?

அனைவர்க்கும் நன்றி.

 
At 7:24 AM, August 02, 2006, Blogger மணியன் said...

கடிதங்கள் உணர்வுபூர்வமானவை. அதுவும் 'எல்லோருக்கும் அன்புடன்' எழுதிய கடிததொகுப்பு என்றால் உள்ளத்தோடு உரையாடுவது ஆச்சரியமில்லை. நல்ல புத்தகத்தை பரிசளித்தவருக்கும் அதனை இங்கு அறிமுகப்படுத்திய உங்களுக்கும் நன்றிகள்.

இத்தகைய கடிதங்கள் இன்றைய மின்னஞ்சல் காலத்தில் காணமுடிவதில்லை :(

 
At 9:24 AM, August 02, 2006, Blogger செந்தில் குமரன் said...

தொகுப்பை அறிமுகம் செய்து வைத்ததற்கு நன்றி.

 
At 11:21 AM, August 02, 2006, Blogger ராசுக்குட்டி said...

//அப்போதுதான் ஈன்ற பசுங்கன்றுக்குட்டியைவிட மூன்றுநாள் சீம்பால் குடித்துத் துள்ளுகிற
கன்றுக்குட்டி அழகாக இருக்கும். நக்கி நக்கிச் சுத்தம் பண்ணுகிற தாய்ப் பசுவைப் போல மனம் எத்தனையோ முறை ஈன்று புறந்தந்துகொண்டே இருக்கிறது.//

அருமை...

//தன் சுதந்திரத்தை மதிப்பவன் இன்னொருவனுக்கும் அப்படியான சுதந்திரம் தேவைப்படுமென உணர்கிறான்//

மிக அருமை...

நட்சத்திரப் பதிவுகள் ஒவ்வொன்றும் 5*

 
At 12:00 PM, August 02, 2006, Blogger செல்வநாயகி said...

மணியன், குமரன் எண்ணம், ராசுக்குட்டி,

உங்கள் மறுமொழிகளுக்கு நன்றி.

 
At 12:05 PM, August 06, 2006, Blogger Sivabalan said...

செல்வ நாயகி,

//வாழ்வை ரசிப்பவன் தன்னை நேசிக்கிறான். தன்னை நேசிப்பவன் தன் சுதந்திரத்தையும் மதிக்கிறான்.//

அருமையாக சொன்னீர்கள்.

நன்றி

 
At 7:44 PM, August 08, 2006, Blogger Thangamani said...

வண்ணதாசன் எனக்குப் பிடித்த எழுத்தாளர். இங்கு இப்போது என்னிடம் இருக்கும் மிகச்சில புத்த்கங்களில் அவரது அனைத்து சிறுகதைகளின் தொகுப்பும் ஒன்று. அவரது கதைகள், கவிதைகளில் இருக்கும் கவிதை பற்றி உங்களுக்கு ஒரு தனி மடல் இன்னும் முடியாமல் இருக்கிறது..

இந்தக் கடிதங்களை இங்கு எடுத்துப்போட்டதற்கு நன்றியும் ஒத்த ரசனைகளுக்கு மகிழ்ச்சியும்.

 
At 10:29 PM, August 08, 2006, Blogger செல்வநாயகி said...

சிவபாலன், தங்கமணி,

நன்றி உங்கள் மறுமொழிகளுக்கு.

 
At 11:17 PM, August 08, 2006, Blogger மதுமிதா said...

செல்வநாயகி

பதில் எழுதத் தோன்றவில்லை.
மனம் நிறைவாகவும்,நெகிழ்வாகவும் உணர்கிறேன்.

http://madhumithaa.blogspot.com/2005/11/blog-post_26.html
இங்கே பாருங்கள் செல்வநாயகி.

நான் பலரை சந்திக்க விரும்பியிருக்கிறேன். சந்தித்துமிருக்கிறேன். ஆனால் சந்திக்க நினைத்தும் சந்திக்காதவர் வண்ணதாசன் அவர்கள். இன்னும் சொல்ல எவ்வளவோ இருக்கிறது. ஆனால் இப்போது என்னால் எழுத இயலவில்லைம்மா

 
At 12:03 AM, August 09, 2006, Blogger செல்வநாயகி said...

நன்றி மதுமிதா. நீங்கள் தந்துள்ள சுட்டியில் உள்ள பதிவை நான் முன்பே படித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். மீண்டுமொருமுறை இப்போது படித்தேன். அதில் வண்ணதாசன் பற்றிய செய்தியை இப்போதுதான் கவனிக்க முடிந்தது. நன்றி.

 
At 7:23 AM, November 24, 2009, Blogger Killivalavan said...

வைகறை பதிப்பக முகவரி கிடைக்குமா?
அல்லது
எல்லோர்க்கும் அன்புடன் புத்தகம் எங்கு கிடைக்கும்?

 

Post a Comment

<< Home