நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Wednesday, August 02, 2006

தேடும் முகவரிகள்

வேலைகள் பிடுங்கித் தின்றதால் இன்றைய நாளுக்கென்று புதிய பதிவு ஒன்றும் எழுதமுடியவில்லை. சில குறிப்புக்களோடு எழுதவேண்டிய பதிவொன்றை ஆரம்பித்துப் பாதிக்குமேல் தட்டச்ச அவகாசமில்லை. நாளையோ பிறகோ முடித்தபின்
உள்ளிடுகிறேன். அப்புறம் என்ன செய்யலாம்? பேசாமல் இதையே இன்னும் கொஞ்சம் நீட்டி ஒரு விடுப்பு விண்ணப்பப் பதிவாகப் போட்டுவிட்டால் அதுவே இன்றைய பதிவாகிவிடாதா என்றெல்லாம் மனம் யோசிக்காமலில்லை:)) ஆனால் நண்பர்களின் வருகையும், ஊக்கமும், தரும் உற்சாகம் அப்படியொரு ஒப்பேத்து வேலை செய்யவும் அனுமதிக்கவில்லை.
அதனால் இப்படி யோசித்தேன். முன்பு "தோழியர்" என்னும் பெண்களுக்கான கூட்டு வலைப்பதிவில்தான் (ம்ம்ம் அது ஒரு அழகிய நிலாக்காலம்) என் முதல் "தமிழ்மணப்" பயணம் ஆரம்பித்தது. அங்கு "தேடும் முகவரிகள்" என்ற தலைப்பில் ஒரு
தொடர் ஆரம்பித்து அது நண்பர்களின் ஆதரவோடு நன்றாகவும் போய்க்கொண்டிருந்தது. 7 பகுதிகள் எழுதினேன் என்று நினைக்கிறேன். இடையில் ஏற்பட்ட பயணங்கள் மற்றும் சில மாற்றங்களால் நின்றுபோனது. அதை மீண்டும் தொடரலாமா என்றும் யோசனை இருக்கிறது. அதற்குள் "தோழியர்" வலைப்பக்கமும் நின்றுபோனது. எனவே முதல்கட்டமாக அங்கு
எழுதியவற்றை இந்த வலைப்பக்கத்தில் சேமிக்கத் துவங்க வேண்டும். அப்படியொரு முயற்சியாகவும், இன்றைய நேரநெருக்கடியாலும் அதிலிருந்து ஒரு பதிவை இங்கு மீள்பதிவாக இடுகிறேன் இன்று. அங்கேயே படித்துவிட்ட நண்பர்கள்
சொன்னதையே சொல்லும் அறுவையைப் பெரிய மனது பண்ணிப் பொறுத்துக்கொள்ள வேண்டும்:))

தேடும் முகவரிகள் 3 ஆவதாக அப்போது எழுதப்பட்ட பதிவு இது.
***********************************************************

பங்குச் சந்தை, உலகச் சந்தை பற்றியெல்லாம் தெரிந்துகொள்ளவேண்டிய தேவை எதுவுமின்றித் தாம் கொண்டுவந்த பச்சைமிளகாய்க்கு, ஒரு சாக்கு மூட்டைக்கு மற்றவர்களைவிடப் பத்து ரூபாய் ஜாஸ்தி தருவதாய்ச் சொல்லும் வியாபாரியிடம் 12 ரூபாய் தரக் கேட்டு நின்றிருப்பார்கள் காங்கயம் சந்தையில் எங்கள் மக்கள். அவர்களின் வாழ்க்கையை நிர்ணயிப்பது பங்குச் சந்தையோ, உலகச் சந்தையோ இல்லை. அந்தக் காங்கயம் சந்தைதான். ஈரோட்டில் இருந்து பழனிக்குப் பேருந்தில் பயணம் செய்தவர்கள் இடையில் காங்கயம், தாராபுரம் என்ற இரண்டு சிறு நகரங்களைக் கண்டிருக்கலாம். இந்தச் சிறு நகரங்களுக்கு மத்தியில் இருக்கும் ஊர் எங்கள் கிராமம். எனவே எங்கள் ஊர் விவசாயிகள் விளைபொருட்கள் விற்பனைக்கு காங்கயம் அல்லது தாராபுரத்தை நம்பியே இருந்தார்கள். எங்களுக்குக் காங்கயம் சந்தைதான் மிகவும் பரிச்சயம்.


நிலக்கடலை, பருத்தி போன்றவை விளையும்போது வியாபாரிகள் ஊருக்கே வந்து விலைபேசி வாங்கிச் செல்வார்கள். தேங்காய், பச்சைமிளகாய், எள், மற்றும் காய்கறிகள் விற்பனைக்கு சந்தைதான் சௌகரியம். கொஞ்சம் கூடப் பயணம் செய்தால் திருப்பூர் அல்லது ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்குக் கொண்டுபோகலாம். ஆனால் போக்குவரத்துக்கே நிறைய செலவாகும் என்பதால் அங்கு யாரும் அதிகம் போனதில்லை. எங்கள் ஊரிலிருந்து கோயம்புத்தூர் போகும் வழியில் உள்ள குண்டடத்திலும் சந்தை இருக்கும். அங்கு செம்மறி ஆட்டுக்குட்டிகளின் விற்பனைக்கு மட்டுமே அவ்வப்போது போய்வருவார்கள். விவசாயிகளின் வாழ்வு, அதிலும் சிறு விவசாயிகளின் வாழ்வு அடிக்கடி சோதனைக்குள்ளாகும். அவர்களுக்கு, இந்த வருடம் இவ்வளவு வருமானம் வரும் என்று எந்த ஆடிட்டராலும் கணித்துவிட முடியாது. அதிலும் கால்வாய்ப்பாசனம் எதுவுமற்று வானம் பார்த்த பூமிதான் எங்கள் மக்களுக்கு."காஞ்சு கெடுக்குதுன்னு கடவுளுக்கு மனுச்செஞ்சா பேஞ்சு கெடுத்திருச்சே பெருமாளே என்ன பண்ண?" என்ற வைரமுத்துவின் வரிகள் எங்கள் ஊருக்குப் பொருந்தாது. மழை எங்களைப் பேஞ்சு கெடுத்ததில்லை. பேயாமல்தான் கெடுக்கும்.


மழைமாதத்தில் நிலத்தை உழுதுபோட்டு, விதைத் தானியம் சேர்த்துவைத்து, வானம் பார்த்துக்கொண்டிருப்பார்கள். வானமும் வஞ்சனையின்றி எங்கள் ஊருக்கு மேலே கார்மேகங்களோடு நிறைந்து நிற்கும். ஆனாலும் சிலசமயம் பொய்த்துவிடும். அதுவும் எப்படித் தெரியுமா? அம்மாவின் இடுப்பிலமர்ந்திருக்கும் அழகுக் குழந்தை நாம் எடுப்பதற்குக் கை நீட்டினால் சிரித்துக்கொண்டே தாவி வருவது மாதிரிப் பாவனை காட்டிக் கடைசியில் திரும்ப அம்மாவிடமே ஒட்டிக்கொள்வதுபோல் ஏங்கிநிற்கும் நிலத்தின்மீது கொட்டப்போவது கணக்காய் வந்து, கடைசியில் பொட்டுப்பொட்டாய் அம்மைத் தழும்புகள் அளவுக்கே பெய்து திரும்பும் மழையை மன்னிக்கமுடியாமல் வெதும்பி நிற்பார்கள் விவசாயிகள். பிறகு ஊர்கூடி முடிவுசெய்து மாரியம்மனுக்குக் காவேரித் தீர்த்தம் கொண்டுவந்து அபிஷேகம் செய்வார்கள். அவர்களின் நம்பிக்கைக்குத் துரோகம் செய்யமாட்டாள் அந்த மாரியும். காலம் தவறியாவது பெய்துவிடும் மழையும். ஆனாலும் அவரவர் ரசனைக்கேற்ப எதையும் விளைவித்துவிட முடியாது. எங்கள் மண்ணில் வாராவாரம் குடும்பச் செலவுக்கு ஒரு வருமானம் வருவது பச்சைமிளகாய் மூலம்தான். அதிலும் சம்பா மிளகாய்தான் நன்கு விளையும். எனவே மழையில் நீர்பெருகும் கிணறுகள் மூலம் பாசனம் செய்யப்பட்டு விவசாயம் ஆரம்பமாகும்.


விளைந்ததைச் சந்தைக்கு எடுத்துப்போகும் வாகனம் பாலுச்சாமி மாமாவின் மாட்டு வண்டிதான். அவரும் அடிப்படையில் ஒரு விவசாயி. விவசாயத்தில் போதிய வருமானம் இல்லையென்று சந்தை வண்டி ஓட்ட ஆரம்பித்தாராம். அவர் எங்கள் ஊர் கிடையாது. அருகில் இருந்த வேறொரு கிராமத்தைச் சேர்ந்தவர். என்றாலும் எங்கள் ஊரில்தான் அவருக்கு வாடிக்கையாளர்கள் அதிகம். காங்கயம் சந்தை திங்கட்கிழமை கூடும். ஞாயிறன்றே மிளகாய் பறித்து, இலை, பழமிளகாயெல்லாம் பொறுக்கி சுத்தம் செய்து சாயந்திரம் சாக்குப்பைகளில் நிரப்பித் தைத்து வைக்க வேண்டும். பெரு விவசாயிகள், சிறு விவசாயிகள் உட்பட 15 அல்லது 20 பேர் பாலுச்சாமி மாமா வண்டியில், சந்தைக்கு மூட்டை அனுப்புவார்கள். நான்கு மூட்டைகளிலிருந்து அதிகபட்சம் பத்துப் பன்னிரண்டு மூட்டைகள் வரை ஒவ்வொருவரும் அனுப்புவார்கள். யாருடையது எந்த மூட்டை என்று அடையாளம் காட்ட மையினால் இனிஷியல் செய்திருப்பார்கள். பால்க்காரர், கடைக்காரர் மாதிரி பாலுச்சாமி மாமாவும் சந்தைவண்டிக்காரர் என்று அழைக்கப்பட்டார்.


ஞாயிறு இரவு 9 மணி வாக்கில் வீட்டிலிருந்து வண்டியைப்பூட்டிக் கொண்டு புறப்படும் அவர் வழியில் அங்கங்கு மூட்டைகள் ஏற்றிக் கொண்டு எங்கள் ஊர் வர இரவு 10 அல்லது 11 மணி ஆகும். மாட்டு வண்டிகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று சவாரி வண்டி. ஆட்கள் சவாரி செல்லப் பயன்படுத்தப்படும். மேலே தார்க்குச்சிகள் மற்றும் கெட்டியான துணி வேய்ந்த கூரையுடன் சிறியதாக இருக்கும். இன்னொன்று பெரியதாகக் கூரையின்றி, பொருட்களின் பாரம் ஏற்றிக்கொண்டு போகும் மொட்டை வண்டி. சந்தைவண்டிக்காரர் வைத்திருந்தது இரண்டாவது வகையில் மிகப் பெரியது. மழையில் மூட்டைகள் நனையாமல் இருக்க ஒரு பெரிய தார்ப்பாய் வைத்திருப்பார். எருதுகளும் வலுவுள்ள பெரிய எருதுகள்தான். அத்தனை மூட்டைகளின் பாரத்தையும் இழுக்க வேண்டுமே!. எங்கள் தெருவில் இரண்டு வீட்டு மூட்டைகள் ஒன்றாக, வெளிவாசலைத் தொட்டபடியிருக்கும் வீதியில் தெருவிளக்கு வெளிச்சத்தில் அடுக்கப் பட்டிருக்கும். அதில் எங்களுடையதும் ஒன்று. பக்கத்துவீட்டைவிட எங்களுக்கு எப்போதும் நிறைய மூட்டைகள் இருந்ததில் எனக்கிருந்த ஆணவம், அழுக்கென்று அப்போது தெரிந்திருக்கவில்லை. ஆனால் சந்தைவண்டிக்காரர் எல்லோருக்கும் ஒரே மதிப்பையே கொடுத்து வந்தார். ஒரு மூட்டைக்கு அவருக்குக் கொடுக்கப் பட்ட வாடகை மூன்று ரூபாயில் ஆரம்பித்து வருடாவருடம் ஒரு ரூபாய் ஏறிக் கொண்டிருந்தது.


அவர் எங்கள் வீட்டுக்கு முதன்முதலாய் மூட்டைகள் எடுக்க வந்தபோது நான் 5 ஆம் வகுப்புப் படித்ததாய் ஞாபகம். மிக அமைதியானவர். அனாவசியமாகப் பேச மாட்டார். யாரிடமும் ஒரு ரூபாய்கூட வாடகையாய் அன்றி வேறெதற்கும் வாங்கமாட்டார். ஒரு லுங்கியும், பனியனும், தலைக்கு உறுமால்கட்டும் அணிந்திருப்பார். சின்னப்பிள்ளைகள் யாரிடமும் கலகலப்பாய்ப் பேசமாட்டார். ஆனாலும் அவரை மிகவும் பிடிக்கும் எனக்கு. மூட்டைக்குச் சொந்தக்காரர்கள் யாரையும் துணைக்கு அழைக்காமல், ஒவ்வொரு வீட்டு வெளிவாசலிலும் அடுக்கப்பட்டிருக்கும் எல்லா மூட்டைகளையும் அவர் தனியொருவராய்ச் சுமந்தே வண்டியில் ஏற்றுவார். எங்கள் வீட்டில் மூட்டைகள் வழக்கத்தைவிட அதிகமாகும்போது, ஆண்கள் சந்தை வண்டியில் ஏற்ற அவருக்கு உதவும் பொருட்டு விழித்திருப்பார்கள். அப்போதும், "ஏம்ப்பா நீங்கெல்லா இன்னும் முழிச்சு தூக்கத்தைக் கெடுக்கறீங்க? நானே ஏத்திக்க மாட்டனா?" என்றுதான் கேட்பார். இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியுமென்றால் நான் சில ஞாயிறுகளில் சந்தைவண்டி வந்து மூட்டை எடுத்துக் கொண்டு போன பின்புதான் தூங்கப் போவேன். தேர்வு இருந்தாலும் இல்லாவிட்டாலும் அன்று படித்துக் கொண்டிருப்பேன் இரவு பத்துப் பத்தரை மணிவரை. காரணம் அவருடைய பாட்டு. எங்கள் ஊர் எல்லையை நெருங்கும்போது லேசாய்க் கேட்க ஆரம்பிக்கும், பின் கொஞ்சம் சத்தமாக. "தன்னன்னன்னே தானானே........" என்கிற பல்லவி மட்டும்தான் திரும்பத் திரும்பத் தெளிவாய்க் கேட்கும். சரணங்கள் தெளிவாய்க் கேட்காது.


அது அழகான நாட்டுப்புறப்பாட்டாயிருக்கும். அதன் ராகத்திற்கு நான் அடிமையாகி இருந்தேன். அவர் குரலும் அப்படி. இரவில், பனியில், மழையில், பௌர்ணமியிலும், அமாவாசையிலும் தனியாளாய் வண்டியோட்டும் அவருக்கு அந்தப் பாட்டுத்தான் வழித்துணை. அதுவும் ஊரை நெருங்கி வருகையில் நிறுத்திக் கொள்வார். உறங்குபவர்களுக்கு அவரின் பாட்டுச் சத்தம் தொந்தரவாய் இருக்கக்கூடாது என்ற பரிவாயிருக்கலாம். அப்போது கேட்கும் அவர் எருதுகளின் சலங்கைச் சத்தமும், "ஹை, ஹை" என்று எருதுகளை உற்சாகப் படுத்தும் அவர் ஒலியும்கூட இனிய ராகமாகவே இருக்கும் எனக்கு. எங்கள் வீட்டு முன் மூட்டை ஏற்றும்போது நான் படித்துக் கொண்டிருக்கும் படுக்கையறையில் இருந்து ஜன்னல் வழியாக தெருவிளக்கு வெளிச்சத்தில் பார்ப்பேன். வீட்டில் தூங்கும் பெரியவர்களும் வண்டிச் சத்தத்தில் சிறிதாய் விழித்து "பாலுச்சாமி வண்டி வந்திருச்சு இன்னுந் தூங்காம என்ன படிக்கிறே? நாளைக்குப் படிச்சுக்கலாம் படு" என்று என்னை அதட்டுவார்கள். ஒருபோதும் அவர்களுக்குச் சொன்னதில்லை நான், படிப்பது அவருடைய பாட்டுக் கேட்பதற்கென்று. பலசமயங்களில் அவர் பாட்டுக் கேட்கும் முன்பே விரித்த புத்தகத்தோடு தூங்கியும் போவேன்.


இரவெல்லாம் பயணித்து விடிகாலை 3 மணி வாக்கில் சந்தையை அடைந்து மூட்டையெல்லாம் இறக்கிவிட்டுக் காலை 11 மணிவரை எருதுகளோடு ஓய்வெடுத்துவிட்டு, மீண்டும், சந்தையில் எங்கள் மக்கள் தங்கள் கால்நடைகளுக்கு வாங்கும் தவிடு, புண்ணாக்கு, பருத்திக்கொட்டை மற்றும் தங்களுக்கு வாங்கும் அரிசி மூட்டைகள் எல்லாம் ஏற்றிக்கொண்டு மாலை 5 மணி வாக்கில் ஊருக்குள் வரும் அவர் வண்டி. பள்ளியில் இருந்து வந்து, நொறுக்குத் தீனி கொறித்துப் பால் குடித்துவிட்டு வெளித்திண்ணையில் சந்தைவண்டிக்காகக் காத்துக் கொண்டிருப்பேன். என்னோடு என் தோழர் தோழியரும். இப்போது பாட்டெல்லாம் பாடமாட்டார் அவர். ஆனாலும் தூரத்தில் வருகிறபோதே வண்டியைப் பார்க்காமலே அதை சந்தைவண்டி என்று என்னால் சொல்ல முடிந்தது. அதிகாலையில் பாத்திரச் சத்தத்தை வைத்து, அம்மா விழித்துவிட்டதைத் தூங்கிக் கொண்டே உணர்ந்து பின் சிறிது நேரத்தில் காபி ரெடியாகும்போது சரியாய் விழித்து எழுந்துகொள்வது எனக்குப் பழக்கமாகியிருந்தது. அதேபோல் தூரத்தில் கற்கள்மீது ஏறி இறங்கும் சந்தைவண்டியின் "ரொடக்ரொடக்" சத்தமும், பாலுச்சாமி மாமாவின் "ஹைஹை" ஒலியும் எனக்குள் மனனம் ஆகியிருந்தது.


வீடுவீடாக வந்து சந்தையில் வாங்கப்பட்ட மூட்டைகளை இறக்கிவிட்டு, முந்தையநாள் மிளகாய் நிரப்பப்பட்டிருந்த வெற்றுச் சாக்குக்கட்டுகளையும் இறக்கிவிட்டுப் போவார். விவசாயம் விவசாயிகளுக்கு மட்டுமின்றி சந்தைவண்டிக்காரர்களுக்கும் வாழ்வு கொடுத்துக் கொண்டிருந்த காலம் என் கண்ணெதிரிலேயே எங்கள் ஊரில் காணாமல் போனது. மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்தும், மழை வருடக்கணக்கில் பொய்க்கத் துவங்கியது. என் அப்பாவெல்லாமே, இருந்த பூமியை அப்படியே போட்டுவிட்டு, நகர்ப்புறத்தொழில் நோக்கி நகர்ந்து விட்டார். அங்கேயே இருக்க எண்ணிய என் மாமாக்கள்கூட போர்வெல் புண்ணியத்தில் தென்னந்தோப்புகளும், சொட்டுநீர்ப்பாசனங்களும் ஏற்படுத்திக்கொண்டு நிம்மதியாய் இருந்தார்கள். இதுமாதிரியே ஊரில் நிறையப் பேர் மாறியதால், விளைச்சலும், சந்தைக்கு விற்பனைக்குப் போதலும் குறைந்துபோனது. சந்தைவண்டிமாமாவின் தொழில் நஷ்டமடைந்து அதை அவர் கைவிட நேர்ந்தது. அவர் எங்கள் ஊரைச் சேர்ந்தவர் இல்லை என்பதால் அவரின் தொடர்பும் அதற்குப்பின் நிறையநாள் நீடிக்கவில்லை.


கடல்கடந்து வாழும் இச்சூழ்நிலையிலும் நினைவுகள் பின்னோக்கி நீளுகையில் எழுந்துவரும் இனிய நாதங்களில் பாலுச்சாமி மாமாவின் சந்தைவண்டிச் சத்தமும் உண்டு. வாத்தியத்தை இழக்க நேர்ந்தாலும், அனுபவித்த நாதமேனும் இருந்துவிட்டுப்போகட்டும் இன்னும் பலகாலம் என்நினைவில்!!

14 Comments:

At 5:35 PM, August 02, 2006, Blogger இயற்கை நேசி|Oruni said...

/அம்மாவின் இடுப்பிலமர்ந்திருக்கும் அழகுக் குழந்தை நாம் எடுப்பதற்குக் கை நீட்டினால் சிரித்துக்கொண்டே தாவி வருவது மாதிரிப் பாவனை காட்டிக் கடைசியில் திரும்ப அம்மாவிடமே ஒட்டிக்கொள்வதுபோல் ஏங்கிநிற்கும் நிலத்தின்மீது கொட்டப்போவது கணக்காய் வந்து, கடைசியில் பொட்டுப்பொட்டாய் அம்மைத் தழும்புகள் அளவுக்கே பெய்து திரும்பும் மழையை மன்னிக்கமுடியாமல் வெதும்பி நிற்பார்கள் விவசாயிகள்.//

நாயகி, இதனை மீள்பதிவாக இடாமலிருந்திருந்தால் எங்களுக்கு இந்த மண்வாசனை கிடைக்காமலே போயிருக்கும்.

படித்தேன், ரசித்தேன் நேசியாக இன்று... :-)

 
At 6:54 PM, August 02, 2006, Blogger மலைநாடான் said...

இயற்கைநேசி! என்னங்க இது? அந்தவரிகள அப்படியே பாடம்பண்ணி வந்து பாத்தா நீங்க போட்டிருக்கிறீங்க?

செல்வநாயகி!
படித்தேன், ரசித்தேன், நேசியோடு சேர்ந்து....

அந்த மாட்டின் சலங்கையும்,ஹை ஹையா குரலும் கேட்கணுமா? இங்க வாங்க..
http://maruthanizal.blogspot.com/2006/08/2.html

 
At 9:35 PM, August 02, 2006, Blogger பெத்தராயுடு said...

கோவைக்கு அருகில் ஒரு கிராமத்தில் வாழ்ந்த என்னுடைய அனுபவங்களும் ஏறக்குறைய உங்களுடையதைப் போன்றதுதான்.

அதே மிளகாய், கத்தரிக்காய், அவரைக்காய் மூட்டைகள்தான் சந்தைக்குப் போகும்.
என்ன, வண்டிய வேலைகாரர் ஓட்டிச் செல்வார். நான் எதிர்பார்த்துக் காத்திருந்தது தந்தை வாங்கி வரும் மிக்சர்/முருக்கு மற்றும் குமுதம், கல்கண்டு வாரப்பத்திரிகைகளுக்காக.

Nostalgic moments...
என் சிறுவயது நினைவுகளைக் அசைபோட தூண்டியதற்கு நன்றி.

-பெத்தராயுடு

 
At 11:48 PM, August 02, 2006, Blogger செல்வநாயகி said...

இயற்கை நேசி, மலைநாடான், மதுரா, பெத்தராயுடு,
உங்கள் மறுமொழிகளுக்கு நன்றி.

மலைநாடான்,
சுட்டிக்கு ஒரு சிறப்பு நன்றி.

 
At 11:54 PM, August 02, 2006, Blogger senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

என்னங்க நானும் காங்கேயந்தானுங்க நீங்க எங்கீங்க காங்கேயத்தில?

 
At 12:05 AM, August 03, 2006, Blogger செல்வநாயகி said...

குமரன் எண்ணம், கங்கேயத்திலிருந்து 20 கிலோமீட்டருக்கும் மேல் தள்ளிய கிராமம்.

 
At 5:35 AM, August 04, 2006, Blogger மணியன் said...

செல்வநாயகி, நான் 'தோழியர்' பதிவிலேயே இதைப் படித்து இரசித்தவன். மீள்பதிவை மீண்டும் சுவைத்தேன்.
நானும் காங்கேயம்தான். ஆனால் கோவையிலேயே வசித்ததால் அந்த கிராமீய கணங்களைத் தொலைத்தவன்.

 
At 4:25 AM, August 06, 2006, Blogger செல்வநாயகி said...

மணியன்,
நீங்கள் காங்கேயம் என அறிய மகிழ்ச்சி. நானும் கோவையில் நெடுங்காலம் இருந்தேன்.

இராதாகிருஷ்ணன்,
நீங்களும் "தோழியரில்" இதை வாசித்துப் பின்னூட்டியதாக நினைவு எனக்கு.

நன்றி இருவருக்கும்.

 
At 8:12 AM, August 06, 2006, Blogger தருமி said...

வாத்தியத்தை இழக்க நேர்ந்தாலும், அனுபவித்த நாதமேனும் இருந்துவிட்டுப்போகட்டும் //

ம்ம்...ம்

தொடருங்கள், please

 
At 10:48 PM, August 06, 2006, Blogger செல்வநாயகி said...

நன்றி தருமி.

 
At 7:40 PM, August 08, 2006, Blogger Thangamani said...

இப்போதுதான் படித்தேன். உங்கள் இயல்பான நடையில் இன்னொரு அருமையான கிராமிய சித்திரம்.

 
At 10:26 PM, August 08, 2006, Blogger செல்வநாயகி said...

நீங்களெல்லாம் தரும் ஊக்கத்தில் இத்தொடரை மீண்டும் தொடர்ந்துவிடப்போகிறேன் நான்:)) நன்றி.

 
At 5:09 AM, August 20, 2006, Blogger மா சிவகுமார் said...

வாழ்க்கையையே கவிதையாக படித்திருக்கிறீர்கள். படித்த மகிழ்ச்சியில் புன்னகை ததும்பி கண்களின் நீர் கசிய உட்கார்ந்திருக்கிறேன். நன்றி.

அன்புடன்,

மா சிவகுமார்

 
At 1:34 PM, August 20, 2006, Blogger செல்வநாயகி said...

நன்றி சிவக்குமார் உங்களின் ஊக்கமளிக்கும் மறுமொழிக்கு. "வணக்கம்" இடுகையிலும் உங்கள் மறுமொழி பார்த்தேன். அவை உண்மைகள்தான்:))

 

Post a Comment

<< Home