நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Sunday, August 06, 2006

நல்லதொரு வாரம்

நல்லதொரு வாரமா இல்லையா என்று நாங்கள்தானே சொல்லவேண்டும்? அதையும் நீயே சொல்லிக்கொள்வாயா? என்று கேட்கிறீர்களா:)) உங்களுக்கு எப்படிப்பட்ட வாரம் என்று நீங்கள்தான் சொல்லப்போகிறீர்கள். இது எனக்கு:)) உண்மையில் தமிழ்மணத்தில் நட்சத்திரமாக இருந்த வாரம் எனக்கு நல்லதொரு வாரம்தான். அமெரிக்கா வந்திருக்காவிட்டால் இணையத்தமிழ் எனக்கு பரிச்சயமாகியிருக்குமா என்பதே சந்தேகம்தான். ஓடிக்கொண்டேயிருந்த வாழ்க்கை ஊரில் எனக்கு. ஓட்டமும் வெற்றியும் மட்டுமே இலக்காயிருந்தபோது என்னைத் தெரியப்படுத்திக்கொள்வதில்தான் குறியிருந்ததே தவிர நான் தெரிந்துகொள்ளவேண்டியவை மீதான தேடல் கிடப்பில் போடப்பட்டது. காலம் வழங்கும் முடிவுகள் சிலவற்றில் பல நல்ல தொடக்கங்களும் நிகழலாம். அப்படிக் கிடைத்ததுதான் எனக்கு இணையத்தமிழும். என்னிடமிருப்பவைதான் வைரங்கள் என்ற
கர்வமெல்லாம் இல்லாமலில்லை நுழைந்தபோது. இங்கே வந்து உரசிப்பார்த்துக்கொண்டபின் உணராமலில்லை அவற்றில் பலவும் வெறும் கண்ணாடிகள் என்று. எங்கெங்கோ சுற்றித் தமிழ்மணம் வந்தநாளில் வேறெங்கும் படித்திராத சில நண்பர்களின் எழுத்துக்களைக் கண்டேன். அவை எனக்கான மொழியிலும், நான் உண்மைகள் என்று
நம்பிக்கொண்டிருந்தவைகளைத் தாண்டியும் சில உண்மைகளிருப்பதைக் காட்டுபவையாகவும் இருந்தன. பிறகு பல்துலக்குவது, சாப்பிடுவது, தூங்குவதுபோல் தமிழ்மணம் வந்துபோவதும் இயல்பாகிப்போனது.

ஆனால் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பது எனக்கு இயலாததாகவே இருந்தது. எப்போதாவது ஒரு பதிவிடுவதும், பிறகு மற்ற நண்பர்களின் எழுத்து வாசிப்பிலேயே தொலைந்துபோவதுமாயிருந்திருக்கிறேன். அப்படியிருந்தவளைத் தொடர்ந்து
ஒருவாரம் எழுதவைத்துவிட்டது நட்சத்திரப்பொறுப்பு. பதிவிடுவது மட்டுமின்றி, இடப்படுகிற பின்னூட்டங்களை உடனே பிரசுரிக்கவும், முடிந்தவரை அன்றன்று இடப்படும் மற்றவர்களின் இடுகைகளைப் படிக்கவும், மொத்தத்தில் தமிழ்மணத்தில் ஒருவாரத்திற்குத் தொடர்ந்திருப்பதென முடிவெடுத்துக்கொண்டிருந்தேன். அதை ஓரளவு செய்யமுடிந்ததில் மகிழ்ச்சி.

எல்லாவற்றிற்கும் சில பக்கவிளைவுகள் இருப்பதுபோல் இதற்கும் இருந்தன. கடந்த ஒருவாரத்தைத் திரும்பிப் பார்க்கிறேன். முன்பு வீட்டிலிருந்துகொண்டு அலுவலுக்கும், தமிழ்மணத்துக்கும் போய்க்கொண்டிருந்தவள், போனவாரம் பூராவும்
தமிழ்மணத்திலிருந்துகொண்டு வீட்டிற்கும், பணிக்கும் சென்றுகொண்டிருந்திருக்கிறேன்:)) தூர இருக்கும்போது அன்பு பெருகும் என்பது உண்மையாகிப்போனது. ஒவ்வொரு நிகழ்வையும் அப்படியே ஏற்றுக்கொள்ள முடிந்தது எந்த எதிர்வினையுமின்றி. இல்லாத காய்கறியின் ஏக்கமின்றி, இருந்ததை வைத்துச் சமைக்க முடிந்தது. அடுப்பில் போட்டு
வைத்துவிட்டுப் பின்னூட்டம் ஒன்றிற்குப் பதில் சொல்ல வந்து, திரும்பிப் போகையில், வெந்துகொண்டிருந்த உருளைக்கிழங்கு கடைசிச் சொட்டுத் தண்ணீரில் கருகிவிடாது காத்திருந்ததற்கு நன்றி சொல்லிக்கொண்டே தோலுரிக்க முடிந்தது. பதிவிற்காகக் குறிப்பெடுத்தபோது வெடிச்சத்தம் கேட்டுப் பதைத்து ஓடினால் தண்ணீர் முழுதும் ஆவியானதால் சூடுபொறுக்காமல் வெடித்திருந்தது முட்டை. அளவுக்கு மீறி வதைத்துக்கொண்டிருந்தால் ரௌத்திரம் பழகும் முட்டையுமென்று ரசித்துக்கொண்டே நிற்க முடிந்தது. எதையெடுத்தாலும் "எடுக்காதே" என்ற எதேச்சாதிகாரப் போக்கை விட்டு, கேட்ட
மாத்திரத்தில் பெரிய டப்பா நிறையப் பவுடரை எடுத்துக் குழந்தையின் கைகளில் கொடுக்க முடிந்தது. பதிவு எழுதி, முடித்துப் பார்த்தால் தலையிலிருந்து பாதம் வரைக்கும் அவன் சுத்த வெள்ளையில் நின்றபோதும், பவுடர் தீர்ந்ததென்ற பதட்டமின்றிக் கட்டிக்கொண்டு சிரிக்க முடிந்தது. "அம்மா அம்மாவாக இல்லாமல் நட்சத்திரமாகவே இருந்தால் நல்லதென" அவன் நினைப்பதுமாதிரி உணர முடிந்தது. வீட்டில் என் அருகாமை குறைந்த இருவரின் சுதந்திரம் ஆனந்த சுதந்திரம் ஆனது கேட்டு "பாவம் இதை அவர்களுக்கு ஒருவாரமேனும் தரமுடிந்ததே" என்று தன்னிறைவு கொண்டு மகிழ முடிந்தது.

இப்படி ஒரு வாரம் எனக்கு அமைய உதவிய தமிழ்மணம் நிர்வாகிகளுக்கும், என் பதிவுகளை வாசித்த நண்பர்களுக்கும் நன்றி.

முக்கியமான பின்குறிப்பு:
********************

இந்த வாரத்தைக் கொடுங்குளிர் மாதமொன்றில் வழங்காமல் இந்த இனிய வெயில்காலத்தில் வழங்கி ஒருவாரமாக என் மாலைநேர வெளிப்போதலை முடக்கிய மதிக்கு மட்டும் நன்றி மட்டுமின்றி சிறிய கண்டனமும் சென்று சேர்வதாக:))

19 Comments:

At 1:06 PM, August 06, 2006, Blogger Sivabalan said...

செல்வ நாயகி,

உங்கள் நட்சத்திர பதிவுகளுக்கு மிக்க நன்றி.

தொடர்ந்து எழுதுங்கள்...

வாழ்த்துக்கள்.

 
At 1:18 PM, August 06, 2006, Blogger பொன்ஸ்~~Poorna said...

//ஒருவாரமாக என் மாலைநேர வெளிப்போதலை முடக்கிய மதிக்கு மட்டும் நன்றி மட்டுமின்றி சிறிய கண்டனமும் சென்று சேர்வதாக:))//

செல்வநாயகி பதிவுகளைப் படிக்கும் ஆர்வத்தால், இந்த இறுதி வாரத்தில் வெளியில் சுற்ற முடியாமல் போனதற்காக என்னுடைய கண்டனங்களும் மதிக்கு :)))



நல்ல வாரம் செல்வநாயகி.. இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம் என்று சொல்லத் தோன்றினாலும், கொடுத்த பதிவுகள் அத்தனையுமே நிறைவானவை..

 
At 1:23 PM, August 06, 2006, Blogger SnackDragon said...

செல்வநாயகி,

வண்ணதாசனின் கடிதப்பதிவுக்கும், அம்மா பதிவுக்கும் நன்றி.

 
At 1:42 PM, August 06, 2006, Blogger மலைநாடான் said...

/"அம்மா அம்மாவாக இல்லாமல் நட்சத்திரமாகவே இருந்தால் நல்லதென" அவன் நினைப்பதுமாதிரி உணர முடிந்தது. வீட்டில் என் அருகாமை குறைந்த இருவரின் சுதந்திரம் ஆனந்த சுதந்திரம் ஆனது கேட்டு "பாவம் இதை அவர்களுக்கு ஒருவாரமேனும் தரமுடிந்ததே" என்று தன்னிறைவு கொண்டு மகிழ முடிந்தது. /

இனி வரும் காலங்களில், ஒரு சில நாட்களுக்காவது அவர்கள் அதே மகிழ்ச்சியில் இருக்கட்டுமே!
நீங்கள்பதிவு தரும் மகிழ்ச்சியில் நாங்களும்தான்.. பாராட்டுக்கள்.

 
At 5:13 PM, August 06, 2006, Blogger துளசி கோபால் said...

செல்வா,

நல்ல பதிவுகள் நல்ல வாரம். பிடிச்சிருந்துச்சு.

கட்டாயம் ஒவ்வொரு பதிவிலும் சமூகத்துக்குக் கருத்து சொல்லணுமுன்னு
நினைச்சுக்கக்கூடாது. பொழுது போக்காவும் ஜாலியாவும் நட்பு வட்டத்தோட பழகறதுக்கு எழுதறதும்,
முக்கியமா நாம எழுதுன பதிவுகளை நாமே படிச்சுப் பார்க்கும்போது, மனசுக்குத் திருப்தியா இருந்தாலும்
அது நல்ல பதிவுதான்:-)))))

தொடர்ந்து எழுதுங்க செல்வா.

 
At 6:03 PM, August 06, 2006, Blogger Chandravathanaa said...

பதிவுகள் நன்றாக இருந்தன.
வாழ்த்துக்கள் செல்வநாயகி

 
At 7:22 PM, August 06, 2006, Blogger இராம.கி said...

எது வயிரம், எது ஆடி என்று நீங்கள் சொன்னால் எப்படி?

எங்களுக்கென்னவோ, வயிரமே நிரம்பக் கிடைத்தது.

பண்பட்ட ஆழமான நடை; வாழ்க! வளர்க!

அன்புடன்,
இராம.கி.

 
At 9:57 PM, August 06, 2006, Blogger செல்வநாயகி said...

பொன்ஸ்,
உங்களுக்கு என்ன சொல்வது? :)))))) ஸ்மைலி மட்டும்தான்.

கார்த்திக்,
எனக்கும் அந்த இரண்டும் எழுதும்போது ஏனோ ஒரு நிறைவாயிருந்தது.

மலைநாடான்,
///இனி வரும் காலங்களில், ஒரு சில நாட்களுக்காவது அவர்கள் அதே மகிழ்ச்சியில் இருக்கட்டுமே! ///

அவர்களும் அதையே விரும்புகிறார்கள்:))

துளசிம்மா,

///கட்டாயம் ஒவ்வொரு பதிவிலும் சமூகத்துக்குக் கருத்து சொல்லணுமுன்னு
நினைச்சுக்கக்கூடாது. பொழுது போக்காவும் ஜாலியாவும் நட்பு வட்டத்தோட பழகறதுக்கு எழுதறதும்,
முக்கியமா நாம எழுதுன பதிவுகளை நாமே படிச்சுப் பார்க்கும்போது, மனசுக்குத் திருப்தியா இருந்தாலும்
அது நல்ல பதிவுதான்:-))))) ////

நண்பர்களை மகிழ்விக்க, அதைத் தாண்டியும் ஏதோ ஒன்று தேட என்று அவரவர் விருப்பத்திற்கு எழுதிக்கொள்ளத்தானே நமக்கென்று ஒரு இடம். நான் "இவைதான் நல்ல பதிவுகள், இவையெல்லாம் அப்படியல்லாதன" என்றெல்லாம் யாருடைய பதிவுகளையும் வகைப்படுத்தியிருக்காதபோது இதெல்லாம் எதுக்குச் சொல்றீங்கன்னு புரியலையே:))

வேற எதுக்கோ வேறெங்கயோ சொல்ல நினைத்ததை இங்க சொல்லீட்டீங்களோ? சரி இருக்கட்டும் விடுங்க:))

இராம. கி ஐயா,
உங்கள் பாராட்டுக்கு மகிழ்ச்சி.
எல்லோர்க்கும், சிவபாலன், சந்திராவுக்கும் நன்றி.

 
At 11:26 PM, August 06, 2006, Blogger தருமி said...

அதென்ன மாயமோ என்னமோ தெரியலை. நட்சத்திர வாரம் முடிந்ததும் நிறைய எழுதுப்வர்கள் கூட எழுதுவதைக் கொஞ்சம் குறைத்து விடுவது வழக்கமாகிப் போச்சு. நீங்களும் அந்த வகையில் சேர்ந்து விடாதீங்க...

வீட்டினருக்கு கூடக் கொஞ்சம் சுதந்திரம்; எங்களுக்கு இன்னும் கொஞ்சம் எழுத்துக்கள்...

 
At 11:32 AM, August 07, 2006, Blogger செல்வநாயகி said...

முடிகிறபோதெல்லாம் எழுத முயல்வேன், உங்கள் ஊக்கத்திற்கு நன்றி தருமி.

 
At 12:58 PM, August 07, 2006, Blogger VSK said...

நான் விரும்பி, ரசித்துப் படித்த வாரம்!

மனதைத் தொடும் பல நிகழ்வுகளைத் தொட்டிருந்தீர்கள்!

வாழ்த்துகளும், நன்றியும்!

 
At 1:24 PM, August 07, 2006, Blogger இயற்கை நேசி|Oruni said...

நாயகி,

அப்பாடா, ஒரு வகைய உங்க வாரம் முடிஞ்சுச்சு ;-))

இப்பொழுதுதாவது அந்த இயற்கை நேசி இந்த தெ.காட்டான்னு தெரிஞ்சுகிட்டீங்களே, சந்தோஷம்.

நல்லதொரு வாரம் கொடுத்தீங்க, நன்றி!

 
At 1:28 PM, August 07, 2006, Blogger இயற்கை நேசி|Oruni said...

நாயகி,

//இன்றுவந்துபார்த்தால் நீங்கள்தான் இயற்கைநேசி:)) மகிழ்ச்சி. சாவகாசமாகப் படிக்க வேண்டும் இந்தப் பக்கத்தின் பதிவுகளை.//

இப்பொழுதுதாவது அந்த இயற்கை நேசி இந்த தெ.காட்டான்னு தெரிஞ்சுகிட்டீங்களே, சந்தோஷம்.

படிச்சிட்டு சொல்லுங்க இன்னும் என்னவெல்லாம் பண்ணலாமின்னு இந்த பக்கத்தில். பிறகு இன்னவொரு விசயம் பின்னூட்டம் எழுதும் பொழுது முட்டை, உருளை கிழங்கு இதுக்கெல்லாம் தண்ணீர் போதுமான அளவுக்கு இருக்கான்னு பார்த்துட்டு வந்து எழுதுங்க :-))) ஒண்ணும் அவசரமில்லை....

 
At 1:36 PM, August 07, 2006, Blogger Udhayakumar said...

//"அம்மா அம்மாவாக இல்லாமல் நட்சத்திரமாகவே இருந்தால் நல்லதென" அவன் நினைப்பதுமாதிரி உணர முடிந்தது.//

:-)

 
At 3:55 PM, August 07, 2006, Blogger செல்வநாயகி said...

நன்றி அனைவர்க்கும்.

 
At 1:48 PM, August 08, 2006, Blogger அருள் குமார் said...

//நல்லதொரு வாரம் // நிஜம்தான். ஒவ்வொரு பதிவும் ஏதோ ஒரு விதத்தில் நிறைய பாதிப்புகளை ஏற்ப்படுத்தின. அந்த எண்ணங்களை கோர்வையாக்கி பின்னூட்டம் இட இயலவில்லை. சில முறை சிலவற்றைச் சொல்ல நினைத்து எழுதி, அது திருப்தியாய் வராததால் அப்படியே விட்டுவிட நேர்ந்தது. இருப்பினும் உங்கள் கருத்துக்கள் என்னைச் சேர்ந்ததை உங்களுக்குச் சொல்லிக்கொள்ளத் தோன்றியதாலே இந்த பின்னூட்டம் :)

//ஒவ்வொரு நிகழ்வையும் அப்படியே ஏற்றுக்கொள்ள முடிந்தது எந்த எதிர்வினையுமின்றி// இந்த ஒரு வாரத்தில்தானா?! நீங்கள் எப்போம் அப்படித்தான் என நினைத்திருந்தேன்.

நட்சத்திர வாரத்தில்தான் தொடர்ந்து பதிவுகள் தரவேண்டுமா என்ன? தொடர்ந்து எழுதுங்கள்.

நன்றி.

 
At 4:51 PM, August 08, 2006, Blogger இளங்கோ-டிசே said...

செல்வநாயகி, மற்ற 'இருவரின்' சந்தோசத்திற்காய் உங்களை அடிக்கடி நட்சத்திரமாக்க மதியிடம் சொல்லிவைக்கின்றேன்.
....
நன்றாக இருந்தது உங்கள் வாரம். எங்களுக்கும் நீண்ட வாரவிறுதியாக இங்கே இருந்ததால் ஊரெல்லாம் சுற்றமுடிந்தது ஒரு உபகுறிப்பாய் :-).

 
At 6:10 PM, August 08, 2006, Blogger செல்வநாயகி said...

அருள்குமார்,

////இந்த ஒரு வாரத்தில்தானா?! நீங்கள் எப்போம் அப்படித்தான் என நினைத்திருந்தேன்////

இன்னும் அந்த அளவுக்கெல்லாம் வந்துசேர்ந்தபாடில்லை:)) ஆனால் முயற்சிகள் மட்டும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன சிலசமயங்களில் வெற்றியாய், சில வேளைகளில் தோல்வியாய்......

///தொடர்ந்து எழுதுங்கள்///

முயற்சிக்கிறேன் அருள்.

டிசே,
///மற்ற 'இருவரின்' சந்தோசத்திற்காய் ///

:))))

///ஊரெல்லாம் சுற்றமுடிந்தது ஒரு உபகுறிப்பாய் //

:(((


நன்றி இருவருக்கும்.

 
At 11:04 PM, August 08, 2006, Blogger மதுமிதா said...

///தமிழ்மணத்திலிருந்துகொண்டு வீட்டிற்கும், பணிக்கும் சென்றுகொண்டிருந்திருக்கிறேன்:)) தூர இருக்கும்போது அன்பு பெருகும் என்பது உண்மையாகிப்போனது///

வாழ்த்துகள் செல்வநாயகி
இன்றுதான் பார்த்தேன்.

நட்சத்திரம் ஒரு வாரம் மட்டுமல்ல
என்றென்றும் ஒளிர வாழ்த்துகள்மா

 

Post a Comment

<< Home