நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Friday, August 04, 2006

பழைய கவிதைகள்

தொட்டிச்செடி
****************


வாங்கிவந்தவிதை
பொய்க்கவில்லை
சமையலறை ஜன்னல் மேடையில்
சூரிய ஒளி ஈர்த்து
ஊற்றிய நீர் குடித்து

முளைத்துவிட்டது

அரும்பிய துளிர்கள்
கண்களைச்சுண்டியிழுத்த

நாளொன்றில்
வருபவர்களுக்கு அழகுகாட்ட
வரவேற்பறைக்குத் தொட்டியை

நகர்த்தினேன்

மொட்டுக்கள் இதழ்விரித்தபோது
பூஜைப்பொழுதுகளில்
பறித்துக்கொள்ள

வசதியாயிருக்கட்டுமென
சாமியறை ஜன்னலின்

வெளிப்புறமாய் வைத்தேன்

பயன்கொடுக்கும் பருவம் கழிந்தபின்
தொட்டிச்செடியின் இருப்பிடத்தை
கொள்ளையின் ஒருமூலைக்கு

மாற்றினேன்

வானம் தூறல்தெளிக்கும் காலத்தில்
நேர்த்தியாகக் கத்தரித்துவிட்டு
மொட்டைமாடியில் உட்கார

வைத்திருக்கிறேன்

மழைநீரின் ஸ்பரிசத்தில்
வேகமாய்ப்பெருகும்

இளமென்துளிர்கள்
தொட்டுச்செல்லும் காற்றிடம்
கைகளாட்டிச் சொல்லிக்கொண்டிருக்கின்றன
இன்னுமொருபிறப்பு

செடியே என்றாலும்
தொட்டிச்சிறைக்குள்

அதுவேண்டாமென்று

வேர்கள்நீட்டி கிளைகள்விரிக்க
வேண்டியசுதந்திரம் கிடைக்குமொரு நிலத்தில்
விழட்டும் அவ்விதை
என்கைகளில்

அகப்படாமல்.பனிப்பொம்மைகள்
***********************

வெளிப்போதலை முடக்கும்
கொடுங்குளிரைச் சபிக்காமல்
நன்மை தேடி உணர்ந்து
பொம்மை செய்து விளையாடின
வெள்ளைக்குழந்தைகள் பனிமணலில்

சரியாக வரவேண்டுமேயென்று
நாய் செய்தபோது வாலுக்கும்
யானை செய்தபோது காதுக்கும்
படைத்தலின் பரிதவிப்போடு
போராடிச் சிவந்தன
பிஞ்சுக்கரங்கள்

போகும் வரும் மனிதர்கள்
உருவுகொண்ட பொம்மைகளை
பார்த்துவிட்டுச்சிந்தும்
இதமானவார்த்தைகளை
குடித்து மலர்ந்தன சின்னக்கண்கள்

பத்திரமாக
இருக்கின்றனவாயென
ஒவ்வொருநாளும்
ஓடோடிவந்து
பொம்மைகளைக்கேட்பதை
கடமையாய்க் கொண்டன

காலம்மாறும்
உலகினில் கூடவே
காட்சிகள் மாறும்
தத்துவம்புரிய
மழலை
மனதுக்கெப்படி முடியும்?

பறவைக்குரல்களின்
பள்ளியெழுச்சியில்
மெல்லவிழிக்கும்
வசந்த இளங்கதிர்
தொட்டுருக்குகின்றது
பனிப்பொம்மைகளை
பதைபதைப்போடு
பார்த்துநிற்கின்றன
குழந்தைகள்
ஏதும் செய்யவியலாப்
பெருஞ்சுமையோடு

மிச்சமின்றிக்
கரைந்துபோகும்
நாளுக்கப்புறமும்
குழந்தைகளோடு
கனவில் பேசும்
அப்பனிப்பொம்மைகள்
இன்னொரு குளிர்காலம்
மீண்டும் பனிமணல்
கொடுக்குமென்று.

6 Comments:

At 12:41 AM, August 05, 2006, Blogger கார்த்திக் பிரபு said...

first kavidhai soppernga ..nan indru thaan ungal padhivirku varugirane..nall iruku..nall eludhunga..appdiye numma padhivuku vandhu parunga..ungal karuthukkal sollungal

 
At 12:33 PM, August 05, 2006, Blogger செல்வநாயகி said...

நன்றி கார்த்திக் பிரபு.

 
At 2:06 AM, August 06, 2006, Blogger Dharumi said...

உங்கள் புதிய, பழைய பதிவுகள் எல்லாம் ஓரளவு வாசித்தாயிற்று. பலவும் நன்று.

வர வர கதை, கவிதைக்களைத் தாண்டிப் போகச் சொல்கிறது மனது. சரியோ தவறோ...? என்னவோ ஒரு அயர்ச்சி.

உங்கள் முதல் கவிதை பிடித்தது.

 
At 4:19 AM, August 06, 2006, Blogger செல்வநாயகி said...

///வர வர கதை, கவிதைக்களைத் தாண்டிப் போகச் சொல்கிறது மனது///


தருமி,

நானெல்லாம் கவிதை எழுத ஆரம்பித்ததால் வந்த வினைகளில் ஒன்றுதானோ இதெல்லாம்:))

நீங்கள் என் பல (எழுதியிருக்கிறதே ஏழோ எட்டுதான், சும்மா ஒரு தன்னம்பிக்கைக்காக "பல":)) பதிவுகளையும் படித்தமைக்கும், உங்கள் மறுமொழிக்கும் நன்றி.

 
At 12:02 PM, August 06, 2006, Blogger Sivabalan said...

செல்வ நாயகி,

//வேர்கள்நீட்டி கிளைகள்விரிக்க
வேண்டியசுதந்திரம் கிடைக்குமொரு நிலத்தில்
விழட்டும் அவ்விதை
என்கைகளில்
அகப்படாமல். //

அருமையான வரிகள்

நன்றி

 
At 10:46 PM, August 06, 2006, Blogger செல்வநாயகி said...

நன்றி சிவபாலன்.

 

Post a Comment

<< Home