பழக்கம்
புறாக்களின் தோட்டத்துக்குப் போவது உறுதியானதும்
தேடிச் சேகரித்துக் கொஞ்சம் சுமந்துபோகிறேன்
நெல்மணிகளையும் இன்னும் சில தானிய எடைகளையும்
சூரியனைக் கருமேகங்கள் குடித்திருக்க
கூட்டமாய்த் தென்படுகின்றன புறாக்கள்
உலோபியிடமிருந்து விழும் காசாய்
பிரயத்தனப்பட்டுச் சொட்டும் ஓரிரு துளிகளில்
சிறகுகள் சிலிர்க்க மண்கீறுபவையாகவும்
கிடைத்த எதையோ தலைகுத்தி ஆய்பவையாகவும்
மிரளும் கண்களால் என் நுழைவை நோக்குபவையாகவும்
கலந்து நிற்கும் புறாக்கூட்டத்தின் முன்
தானியங்களைத் தூவி எறிகிறேன்
பொறுக்க அழைக்கும் தோரணையில்
பறந்தெழுந்துபோய்த் தூறும் துளிகளுக்குச் சிறகுகொடுத்து
குறுகி நிற்கிறது ஒற்றைப்புறா
கொத்தித் திங்கும் கூட்டத்திலிருந்து விலகி
நாளைமுதல் இங்கு வரப்பழகவேண்டும்
தானியங்களைப் பைகளில் அடைத்துக்கொண்டுவராத
கொஞ்சம் வெறும் நானாகவும்
5 Comments:
அருமையாய் இருக்கிறது செல்வநாயகி.
வெறும் நாமாக இருக்க, பழகவேண்டிய வேதனையான சூழல் நமக்கு!
நன்றி அருள்.
கவிதை என்றாக இருக்கிறது செல்வநாயகி.
கவிதை அழகு! கண்முன் விரிகின்ற காட்சிகளும், அக்காட்சிகள் எழுப்பும் சிந்தனைகளும் பொருத்தமாய் கச்சிதமாய்ச் சொல்லும் கவிதை.
ராதாராகவன், செல்வராஜ்,
உங்கள் மறுமொழிகளுக்கு நன்றி.
Post a Comment
<< Home