நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Wednesday, September 27, 2006

ரோடும் ரோடு சார்ந்ததும்...

“தங்கறதுக்கு வூடும்
திங்கறதுக்கு சோறுமிருந்துட்டா
சவுரியத்துக்கு எழுதுவியாடா ............
ஒண்ணு தெரிஞ்சிக்கோ
மழை ஜன்னலுக்கு வெளியதான் எப்பவும் பெய்யுது உனக்கு
எங்களுக்கு, எங்க பொழப்பு மேலே’’


இப்படி ஒரு கலகக்குரல், தமிழ் இலக்கிய உலகுக்குள், இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஓங்கி ஒலித்தது. அந்தக் குரலுக்குரியவர் ஆதவன் தீட்சண்யா. இவரது எழுத்தில் தாங்கமாட்டாத நிஜத்தின் துயரம் தகிக்கும். சாதி, மதம், இனம், வர்க்கம் சார்ந்த சகலவிதமான ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக எழுதியும் பேசியும் ஒரு பண்பாட்டு ஊழியராய் இயங்கி வருபவர். இவரது கவிதைகள், புறத்திருந்து, பூஜ்ஜியத்திலிருந்து துவங்கும் ஆட்டம், தந்துகி எனும் மூன்று நூல்களாகவும், கதைகள் ‘எழுத வேண்டிய நாட்குறிப்பின் கடைசி பக்கங்கள்’எனும் நூலாகவும் வெளிவந்துள்ளன.‘புதுவிசை’இதழின் ஆசிரியராகவும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளராகவும் செயல்படுகிறார். ஓசூரில் தொலைபேசித் துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் இவரை, இவரது ஓசூர் இல்லத்தில் சந்தித்து உரையாடினோம்.




உங்களின் பூர்வீகம், குடும்பச்சூழல்; ஒரு படைப்பாளியாக, பண்பாட்டு ஊழியராக உங்களின் வளர்ச்சி... இவை பற்றி...?

பொதுவாக அப்பாவின் ஊரைத்தான் சொந்த ஊர்னு சொல்கிற வழக்கப்படி பார்த்தால் எனக்குச் சேலம் மாவட்டம், உத்தமசோழபுரம். அப்பா சிறுபிள்ளையாய் இருக்கும்போதே எங்க தாத்தா இறந்து போயிடுறார். அதற்குப் பிறகு எங்க பாட்டியின் அம்மா வீடான ஓமலூர் ஆர்.சி.செட்டிப்-பட்டியில் செட்டிலாகுறாங்க. அந்த ஊரிலே பெரும்பாலானவங்களுக்கு நிலம் கெடையாது. ரோடு போடுற, ஜல்லி உடைக்கிற வேலை-தான். (இவங்கதான் பொங்காரம் கதையின் மாந்தர்கள்) சேலம் _ அரூர் தார் ரோடு போடும்போது அங்கே என் பாட்டி மாரிமுத்தம்மாள் நிலம் வாங்குறாங்க. அரூரிலிருந்து கம்பைநல்லூர் ரோடு போடும்-போது, அந்த ரோட்டுக்கு மண்ணடிக்க வந்த வண்டிக்காரர் ஈச்சம்பாடி முனுசாமியோட மகள் ரத்தினம்மாவை தன் மகன் மாரியப்பனுக்கு கல்யாணம் முடிக்குது பாட்டி. இவங்க-தான் என் பெற்றோர். 6.3.1964ல் நான் பிறந்தேன். இப்படி ரோடும் ரோடு சார்ந்த வாழ்க்கையும்தான் எங்களுடையது.

ஏழு பேரில் நான்தான் பெரியவன். பிளஸ் டூ வரைக்கும் பாப்பிரெட்டிப்பட்டி ஸ்கூல்லதான் படிச்சேன். அதுக்குப் பிறகு தருமபுரி ஆர்ட்ஸ் காலேஜ். ஹாஸ்டல்ல தங்கிப் படிச்சேன். தருமபுரிங்கிறது சமூகரீதியாகவும் சிந்தனை ரீதியாகவும் ரொம்ப பின்தங்கின மனோபாவம் உள்ள இறுக்கமான ஒரு மாவட்டம்.

அங்கே, கிராமங்கள்லேருந்து காலேஜ்க்கு படிக்க வர்ற பசங்க, சாதியையும் சேர்த்து தூக்கிகிட்டுதான் வர்ராங்க. அப்போ ஹாஸ்டல்ல சாதிப் பிரச்னை வந்துருச்சி. காலேஜே ரெண்டா பிரிஞ்சிருக்கு. ரொம்ப சேதாரம். ‘ஒன் ஃபார்ட்டி ஃபோர்’ போட்டிருந்தாங்க. அப்போ, ‘கமர்சியல் டாக்ஸ்’லே சண்முகம்னு ஒரு தோழர். அப்போ, அரசு ஊழியர் சங்கம் ஆரம்பிக்கலே.

ஆக்சன் கமிட்டிங்கிற பேரிலே இருக்காங்க. எங்க ஹாஸ்டலுக்குப் பக்கத்திலேதான் அவரோட குவார்ட்டர்ஸ்.

அவருக்கு ஏற்கனவே ஹாஸ்டல்ல இருக்கிற ரெண்டு பசங்களோட தொடர்பு இருக்கு.

அவங்களைப் பார்க்க சண்முகம் அடிக்கடி வருவாரு. அவங்க அறைக்கு ஒரு நாள் போகும்போது அங்கே சண்முகம் பேசிகிட்டு இருக்காரு. அவர் பேசுனது என்னை ரொம்-பவும் பாதிச்சது. முடிவிலே, “மாணவர்-களெல்லாம் ஒற்றுமையா இருக்கணும்னு நீங்க ஏன் ஒரு அப்பீல் கொடுக்கக்கூடாது”ன்னார். அந்தக் கேள்வி எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அதனாலே, ஏழு பேரு சேர்ந்து ஒரு நோட்டீஸ் போட்டோம். ‘மாணவர்கள் ஒற்றுமையாக இருக்கணும், சாதி உணர்வுகளைக் கடந்து வரணும், விஞ்ஞானபூர்வமான கல்விக்காக போராடவேண்டிய மாணவர்கள் இப்படி சாதி விசயத்தை முன்னிலைப்படுத்தி அடிச்சிக்கிறதெல்லாம் தேவையில்லை’ன்னு ஒரு நோட்டீஸைப் போட்டுகிட்டு ஒவ்வொரு ரூமாக ஏறி இறங்கிக் கொடுத்தோம். அதுக்குப் பிறகு அந்தப் பிரச்னை ஒரு முடிவுக்கு வந்துச்சு. அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, தோழர் சண்முகம் வீட்டுக்கு நான் அடிக்கடி போக ஆரம்பிச்சேன்.

அவர்கிட்டே நிறைய புத்தகங்கள் இருந்துச்சு. அதுவரை கார்ட்டூன் புத்தகங்கள், மாலைமதி மாதிரியான புத்தகங்களைத்தான் படிச்சிருக்கேன். இலக்கியப் புத்தகங்கள்னு ஒரு ஏரியா இருக்கிறதே எனக்கு அப்போ தெரியாது. சண்முகம்தான் முதன்முதலா ‘ஒரு சமூகசேவகி சேரிக்கு வந்தாள்’னு தணிகைச்செல்வனோட கவிதைப் புத்தகத்தைக் கொடுத்து, படிக்கச் சொன்னார். அது எனக்கு பெரிய திறப்பு. அதுக்கு முன்னாடி, சினிமாப்பாட்டு பாதிப்பிலே சின்ன சின்னதா கிறுக்கிகிட்டிருந்தேன். கூடப் படிக்கிற பிள்ளைகள கிண்டல் பண்ணி எழுதுறது, கற்பனையா ஒரு காதலியை நினைத்து கண்ணே மூக்கே மூக்கிலிருக்கிற சளியேன்னு எழுதறது, இப்படி... இந்தப் புத்தகத்தைப் படிச்ச பிறகுதான் பிரச்சினைகளை வைச்சு கவிதை எழுதலாங்கிற விசயமே தெரிஞ்சது. அதுக்குப் பிறகு நிறைய புத்தகங்களை படிக்கக் கொடுத்தார்.

நான் பி.எஸ்.ஸி. கணிதம், பர்ஸ்ட் இயர் படிக்கும்போதே டெலிபோன் ஆபரேட்டர் வேலைக்கு செலக்ட் ஆயிட்டேன்.

அதனாலே, ஹாஸ்டல்ல இருந்தேனே தவிர, காலேஜ்க்குப் போறதேயில்ல. எஸ்.எஃப்.ஐ. ஆரம்பிச்சாச்சு. தீவிரமா வேலைகள் நடக்குது. மாணவர் சங்க மாவட்ட மாநாட்டில் மாவட்ட துணைத்தலைவரா நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். சிதம்பரம் மாநில மாநாட்டுக்கு பிரதிநிதியா போறேன். கோமல் சுவாமிநாதனை அழைத்துவந்து நாடகம் போடும் வேலைகளில் சண்முகத்தோடு சுற்றினேன். அப்போ, ஏ.கே.கோபாலனின் ‘நான் என்றும் மக்கள் ஊழியனே’புத்தகத்தை படிச்சுட்டு, அந்தப் பாதிப்பிலே முழுநேர அரசியல் ஊழியனா ஆகணும்னு பிடிவாதமா இருந்தேன். ஹரிபட்கிட்டே போய் விருப்பத்தைச் சொன்னேன். அவர், “முழுநேர ஊழியனா இருந்துதான் மக்களுக்கு ஊழியஞ் செய்யணும்னு இல்லே, டெலிபோன் டிபார்ட்மெண்டிலே இயந்திரம் மட்டும் இருக்காது. அங்கேயும் மனுசங்க இருப்பாங்க; தொழிற்சங்கங்கள் இருக்கு. அங்கே போய் வேலை செய்”னு சொல்லி அனுப்பி வைச்சுட்டாரு. அதுக்குப் பிறகுதான் டிரெயினிங் போனேன்.

84 ஜூன்ல தேன்கனிக் கோட்டையிலே வேலைக்குச் சேர்ந்தேன். அங்கே நான் இருக்கும்போது ஓசூரிலே தமுஎச மாவட்ட மாநாடு நடக்குது. இவங்களோடு எனக்கு ஏற்கனவே தொடர்பு இருந்தது. அப்போ, ஓசூரிலே நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்துகிட்டே இருக்குது. இங்கே ஒரு வீட்டு மொட்டை மாடியிலே கவியரங்கம் நடக்கும். கவிஞர் வெண்மணி அப்போ திருவண்ணாமலையிலே இருந்து அடிக்கடி வருவார். ஒருமுறை நீங்களும் கவிதை வாசிக்கலாமேன்னு சொன்னார். அப்போ, நான் எழுதுனது கவிதையா என்கிற கேள்வி எனக்கு வருது. நம்மள வாசிக்கச் சொல்றாங்கன்னா நாம எழுதுறது கவிதைதான் என்கிற நம்பிக்கையும் வருது. அந்தத் தைரியத்திலே எதையாவது எழுதி கவியரங்கத்திலே வாசிக்கிறது வழக்கமாயிடுச்சு. இந்தக் கவியரங்க மனநிலையிலிருந்து விடுபட்டு எப்போ மாறினேன்கிறதை என்னாலே சரியா சொல்லத் தெரியலே...

வெண்மணி ‘அதிர்வுகள்’னு ஒரு பத்திரிகை நடத்தினார்.

முதல் இதழ் அட்டையிலே ஷெல்லியின் கவிதையை வெளியிட்டிருந்தார். இரண்டாவது இதழ் அட்டையிலே என்னுடைய ‘வீசும் காற்றுக்கும் பாயும் ஆற்றுக்கும்’என்கிற கவிதையை வெளியிட்டிருந்தார். ‘தகடூர் ஆதவன்’ னு பேர் வைத்ததும் அவர்தான். ஷெல்லிக்கு அடுத்தது நாமதான் என்கிற நினைப்பிலே தலை கால் தெரியாம திரிஞ்சேன். இந்தச் சூழல், தொடர்ந்து எழுதுவதற்கான உற்சாகத்தைக் கொடுத்தது. என் முதல் கதை ‘ஃப்ளாஷ்’. செம்மலரில் வெளியானது. 1985ஆக இருக்கலாம். அப்போ தேன்கனிக்கோட்டையிலே இருந்தேன். செம்மலர் நடத்திய ஒரு சிறுகதைப் போட்டியில் ‘சிதைவுகள்’னு என்னோட இரண்டாவது கதை பிரசுரத்துக்குத் தேர்வாகி, பிரசுரமாச்சு.

1986ல் ஓசூருக்கு மாற்றல் வாங்கிட்டு வந்ததிலிருந்து 93 வரை முழுநேர தொழிற்சங்க வேலைதான். எங்க சங்கத்துக்கு மாவட்டச் செயலாளர். மத்திய மாநில பொதுத்துறை ஊழியர் கூட்டமைப்புக்கு செயலாளர். அப்போதுதான் மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் கேட்டு மாநில அரசுஊழியர்கள் போராட்டம். கே.ஜி.போஸ் இல்லம் என்கிற என் அறைதான், அந்தப் போராட்டத்துக்கான அலுவலகம். சங்க வேலையா வெளியூர் பிரயாணம் போகையில் புத்தகம் வாசிக்கிறதை ஒரு பழக்கமா வைச்சிருந்தேன். இந்த வாசிப்பினால் வந்த வினையோ என்னவோ தெரியல, தொழிற்சங்கப் பணியைச் செய்றதுக்குத்தான் நிறைய பேர் இருக்காங்களே, நாம ஏதாச்சும் வேறு வேலை பார்க்கலாமேன்னு தொழிற்சங்கப் பணியிலிருந்து ஒதுங்கிட்டேன்.

அதுக்குப் பிறகு எழுத்தாளர் சங்க வேலைகள். அதாவது, எழுதறதுதும் இயங்கறதுமான வேலைகள்.

93ல் மீனாவுடன் திருமணம். என்னுடைய ‘புறத்திருந்து’முதல் கவிதைத் தொகுதியை ஓசூர் தமுஎச கிளை வெளியிட்டது. போப்பு, வினாயகம், பாலசுந்தரம் முன்முயற்சி எடுத்தாங்க. ‘புதிய பார்வை’யில் என்னுடைய நாலைந்து கவிதைகளும் கதைகளும் வெளிவந்தன. ‘விரகமல்ல தனிமை’கதைக்கு இலக்கியச் சிந்தனை பரிசும் கூட கிடைத்தது...

உங்களுடைய முதல் கதை ‘ப்ளாஷ்’, அதுக்குப் பிறகான கதை ‘சிதைவுகள்’ இந்த இரண்டுமே செம்மலரில் வெளிவந்ததாகச் சொல்றீங்க. அந்தக் கதைகள் உங்கள் சிறுகதைத் தொகுதியிலே இல்லை. எப்படியான விசயங்களை முன்வைச்சு அந்தக் கதைகளை எழுதினீங்க...-?

கல்யாண வீடுகள்ல போட்டோ பிடிக்கிறதுங்கிறது அப்போ, ரொம்ப அபூர்வம். ரொம்ப வசதியானவங்கதான் போட்டோ எடுப்பாங்க. அப்படி நகரத்திலே நடக்கிற ஒரு விசேஷத்துக்கு கிராமத்திலேருந்து உறவுக்காரர் ஒருத்தர் கிளம்பி வர்றாரு. கிராமத்து மனோநிலையில் அவராவே வேலைகளை எடுத்துப்போட்டு செஞ்சிகிட்டிருக்காரு. தன்னை போட்டோ எடுப்பாங்கன்னும், போட்டோ எடுக்கும்போது வெளிச்சம் வந்ததும் கூச்சத்தில் கண்ணை மூடி ஏமாந்துடக்கூடாதுன்னும் ஜாக்கிரதையா இருக்கார். இவர் போய் அண்டாவைக் கொடுத்துட்டு போட்டோ எடுக்கிறதுக்காக கேமராவைப் பார்த்து நிற்கிறார். அந்த நேரம் பார்த்து வீட்டு ஆளுங்க, “என்னது, நீங்களும் போய் மசமசன்னு அங்க நின்னுகிட்டு, கீழ இறங்கி வாங்க, அடுத்தடுத்து ஆளுங்க வந்துகிட்டு இருக்காங்கள்ல” ன்னு சட்டுன்னு போட்டோ எடுக்காமலே கீழ இறக்கி விட்டுடுறாங்க.

போட்டோ எடுக்காத ஏமாத்தத்துலே இவருக்குக் கண்ணு கலங்கி... அந்த கேமரா ‘பிளாஷ்’ மங்கலா தெரிஞ்சிகிட்டிருக்கு. அதுதான் அந்த ‘பிளாஷ்’ கதை.

‘சிதைவுகள்’ கதை, ஒரு சின்னப் பையனுக்குத் தாங்க முடியாத பசி. வீட்டிலே தின்கிறதுக்கு ஏதாவது கிடைக்குமான்னு அடுக்களையில் தேடுவான். கடைசியா, வீட்டு மொடாவுல கம்பு இருக்கும். சாப்பிட ஆரம்பிச்சிடுவான். பூச்சி அரிக்காம இருக்கிறதுக்காக அந்த தானியத்திலே பூச்சிக்கொல்லி கலந்துருப்பாங்க. அதைத் தின்னதாலே நுரை தள்ளிக் கிடப்பான். அதுதான் அந்தக் கதை.

1996ல் உங்களது ‘புறத்திருந்து’, 2003ல் ‘பூஜ்யத்திலிருந்து தொடங்கும் ஆட்டம்’வருது. முதல் தொகுதிக்கும் இரண்டாவது தொகுதிக்கும் இடையிலே கவிதையின் வடிவம், உள்ளடக்கம், அரசியல் எல்லாத்திலுமே வித்தியாசம் இருக்கு... என்ன காரணம்?

அப்போது நான் அம்பேத்கரை வாசிக்க ஆரம்பிச்சிருந்தேன். அதன் வழியா, பல விசயங்கள் எனக்கு விளங்க வருது. இந்திய சமூகங்கிறது வர்க்கமாகத்தான் பிரிஞ்சிருக்குன்னு புரிஞ்சிகிட்டது இருக்குல்ல, அதிலே சில விசயங்களை சேர்க்கணும்கிற மாதிரி தோணுச்சி. இந்திய சமூகம் என்கிறது வர்க்கமாக இருந்ததா இல்லையாங்கிறதுக்கு முன்னாடியே அது சாதியா இருந்திருக்கு. அந்தச் சாதிங்கிறது வாழ்க்கையின் எல்லா விசயங்களிலேயும் தலையிடுது. எல்லா நேரத்திலேயும் வழிநடத்துது. சாதியை மறந்துட்டு, சாதியை கைவிட்டுட்டு எந்த ஒரு தனிமனிதரும் எந்த ஒரு காரியத்திலும் இறங்குறதில்லை. ‘வேற்றுமையில் ஒற்றுமை’ன்னு காலம் காலமா சொல்லிகிட்டு திரியிறாங்க. ஆனால், மொழியால, கலாச்சாரத்தால, உடையால, பண்பாட்டால, விழாக்களால... எதிலேயும் ஒண்ணுபோல இல்லை. ஆனா, கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரைக்கும் ஒடுக்கிறவனெல்லாம் ஒண்ணு போலவும், ஒடுக்கப்படுறவனெல்லாம் ஒண்ணுபோலவும் இருக்கான்.

வெளியிடங்களில் முன்னைப்போல சாதியைக் காட்டிக் கொள்வதில்லை, பேசுவதில்லை என்றாலும்கூட, அவங்க சொந்த வாழ்க்கையிலே சாதியை விட்டுட்டு எதையும் பண்றதில்லை. இந்தப் புரிதல் என்பது அம்பேத்கரை வாசிச்சப் பிறகுதான் கிடைக்குது. சாதி என்பதுதான் இந்திய சமூகத்தை மிகப்பெரிய அளவுக்கு ஆட்கொண்டிருக்கிற விசயம். இதையெல்லாம் புரிஞ்சிகிட்டு, சாதி ஒடுக்குமுறைக்கு எதிரானவனாக மட்டுமல்ல, சாதியை மறுப்பவனாக என்னை எப்படி வெளிப்படுத்துறதுன்னு என்னுடைய சொந்த தவிப்பிலிருந்து யோசிக்கும்போது, அந்த அனுபவத்திலிருந்து எழுத ஆரம்பிச்சேன். அந்தக் கவிதைகள்தான் இரண்டாம் தொகுப்பிலே இருக்கு. அதுதான் முதல் தொகுப்புக்கும் இரண்டாம் தொகுப்புக்குமான வித்தியாசமா உங்களுக்குத் தெரியுது.

நீங்கள் ஒரு பண்பாட்டு ஊழியரா இருக்கீங்க. சாதிய ஒடுக்குமுறைகளை இடதுசாரி இயக்கங்கள் எந்த வகையில் எதிர்கொண்டிருக்கின்றன?

ஒடுக்கப்பட்டவர்களுக்கான இயக்கம்கிற வகையில் எல்லாவகையிலும் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்-பட்ட சாதி மக்களோட, எல்லாச்சாதி பெண்களோட இயக்கமாத்தான் இடதுசாரி இயக்கம் இருக்கமுடியும். என் சொந்த அனுபவத்திலே, இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்த தோழர்கள் சாதி என்கிற விசயத்தை பொருட்படுத்தாதவர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக, என்னை இயக்கத்துக்குக் கொண்டுவந்த சண்முகம் போன்ற தோழர்கள் சாதி என்கிற விசயத்துக்குள்ளேயே போகலை. சாதி என்பது ஒரு விவாதத்துக்குரிய விசயமாக வரவேயில்லை.

ஆனால், சாதிய ரீதியான ஒடுக்குமுறை நடக்கும்போது, ‘சாதியம் என்பது நிலப்பிரபுத்துவத்திலிருந்து உருவாகுது. நிலப்பிரபுத்துவம் ஒழியும்போது சாதியும் ஒழிஞ்சிரும்’னு சமாதானம் சொல்லி, எப்பவும் தப்பிச்சிட்டு போனது கிடையாது. தஞ்சாவூரிலே கம்யூனிஸ்ட் தோழர்கள் விவசாயத் தொழிலாளர்களை அணிதிரட்டுற வேலையை மட்டும் செய்துகிட்டிருக்கல்ல, சாதிரீதியான ஒடுக்குமுறை வந்தப்ப, அந்த ஒடுக்குமுறையையும் எதிர்த்து போராடி இருக்காங்க. அதற்கான இயக்கத்தைக் கட்டியிருக்காங்க.

விடுதலைச் சிறுத்தைகளோ, புதிய தமிழகமோ வந்தது இப்பத்தானே? அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா போன்றவர்களெல்லாம் முன்னமே ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடி இருக்காங்க. இல்லைன்னு சொல்லல. ஆனால், இவங்க எல்லாருமே நகரத்தில் குவிந்திருந்த ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றியே அதிகமா அக்கறை கொண்டிருந்தார்களே தவிர, கிராமப்புறங்களிலே சாதி ஒடுக்குமுறையை கையிலெடுத்துப் போராடினவங்க தலித் மக்களுக்கு பாதுகாப்பா இருந்தவங்க கம்யூனிஸ்டுகள்தான். கம்யூனிஸ்டுகள் சாதிய விசயங்களை கையிலெடுக்காமல் திட்டமிட்டே புறக்கணித்தார்கள்னு தலித் அமைப்புகள் சொல்றதிலே எனக்கு உடன்பாடு இல்லை. பிப்ரவரியில் டெல்லியில் நடந்த தலித் உரிமை சிறப்பு மாநாடு சாதியம் குறித்த இடதுசாரிப் பார்வையை தெளிவாக சொன்னது. வர்க்கநீக்கம் செய்து கொள்வதைப் போலவே சாதிநீக்கம் என்பதன் அவசியத்தை இடதுசாரிகள் புரிஞ்சிருக்காங்க. எந்த சாதியில் பிறந்திருந்தாலும் அடுத்தவன் மலத்தை வாரிச் சுமக்கிற அவலத்திலிருந்து மீளத்துடிக்கும் ஒரு அருந்ததியனாக தன்னை உணருகிற ஒருவன்தான் கம்யூனிஸ்ட்டாக இருக்க முடியும்.

ஆனாலும், இயக்கத்துக்குள்ளே வர்றவன், மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின் எழுதினது பூராவும் படிச்சி, தெளிவாகியா வர்றான்? அப்படி சில பேரு தத்துவார்த்த புரிதலோடும் பிடிப்போடும் வந்திருக்கலாம். அப்படிப்பட்டவங்க ரொம்பக் குறைவு. பெரும்பாலானவர்களுக்கு அவர்களது தனிப்பட்ட அல்லது சொந்த ஊர் சார்ந்த பிரச்னைகளை மையமாக வைத்து, இயக்கத்தோட தொடர்பு ஏற்படுது. அந்தத் தொடர்பின் வழியாகத்தான் இயக்கத்துக்குள்ளே வர்றாங்க. சாதியாதிக்க, பாலாதிக்க உணர்வுகளிலிருந்து விடுபட்டுத்தான் வர்றாங்களாங்கிறதைத் துல்லியமா கண்டறிவதற்கான அளவுகோல் எதுவும் நம்மிடம் இல்லை. இயக்கத்திலே வேலை செய்கிறபோது, அனுபவரீதியாக சில விசயங்களைக் கத்துக்கிறாங்க. சிலதை கைவிடுறாங்க. அப்படி கைவிடக்கூடிய விசயங்களாக சாதியை அவனுடைய சொந்த வாழ்க்கையில் நடைமுறையிலிருந்துதான் கைவிடணும். தான் இன்ன சாதிக்காரன் என்கிற அகங்காரமோ, தாழ்வுணர்ச்சியோ அவன் மனதிலிருந்து விடுபட்டாலொழிய அவன் சாதியற்றவனாக மாறுவதற்கு வாய்ப்பே கிடையாது. அந்த இடத்தை ஒருவன் அடைவதற்கு இயக்கம் உதவி செய்வதாக நான் நினைக்கிறேன்.

அதேசமயம், சாதியை எல்லாருமே கைவிட்டாங்களான்னா, நான் இல்லைன்னுதான் சொல்வேன். இன்னமும் பெரும்பாலான குடும்பங்கள்ல சடங்கு மறுப்பு, சாதி மறுப்பு திருமணங்கள் நடக்கலே. அப்படின்னா... இவன், இன்றைய அரசியல் சூழலில், தன்னை ஒரு இடதுசாரி அரசியலுக்கு ஒப்புக்கொடுத்தவனாக இருக்கிறான். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மாற்றி அமைத்து புதிய சமுதாயத்தை உருவாக்கணும்கிறதிலே உடன்பட்டு இருக்கிறான். ஆனா, பண்பாட்டு ரீதியான புரிதல்ல, தன்னுடைய சொந்த வாழ்க்கையின் கலாச்சார நடவடிக்கையிலே, ஒரு புரட்சிகரமான ஆளாக மாறுவதற்குத் தன்னைத் தயார் படுத்திக்கொள்ளாத ஒரு பலகீனம் இருக்கு. அந்த இடத்திலே அவர்களை பயிற்றுவிப்பதற்கான ஒரு கல்வி தேவைப்படுது. சாதி ரீதியான உணர்வை கைவிடுவதற்கு இயக்கம் உதவி பண்ணுது; ஊக்கு-விக்குது. ஆனால், தொடர்ச்சியான கண்காணிப்பு இல்லைன்னு நான் கருதுறேன். அதற்கு தனி கவனம் எடுத்து செய்யவேண்டிய முயற்சி தேவைப்படுது.

படித்த, வேலையிலிருக்கிற தலித்துகளில் சிலர், இந்தக் காலத்திலும் தங்களை சாதியரீதியாக வெளியில் காட்டிக்கொள்ளாமல் மறைந்தவாழ்கிற சூழல் இருக்கிறது. இது பற்றி நீங்கள் ‘சுயவிலக்கம்’என்கிற கவிதையிலே எழுதியிருக்கீங்க. அவர்கள் எதிர்கொள்கிற சமூகச் சிக்கல் எத்தகையது?

அவன் பாரம்பரியம் என்பது அவன் நினைத்து, சந்தோசப்பட்டு, மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளக் கூடியதாக இல்லை. பிற சாதியினர் தங்கள் சாதியை இயல்பாக சொல்லிக் கொள்வதற்குரிய பெருமித உணர்ச்சி தலித் சமூகத்தைச் சேர்ந்தவனுக்கு இருக்கிறதில்லை. தன்னுடன் இதுவரை சகஜமாக பழகிக்கிட்டுருக்கிறவன், தன் சாதி தெரிந்தபிறகு, இனிமேல் அப்படி பழகுவானா என்கிற பயம் அவனுக்கு வந்துடுது. அந்தப் பயம் அவன் உருவாக்கிக்கொண்டது கிடையாது. இந்தச் சமுதாயம்தான் அவனுக்கு இந்தப் பயத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கு. உண்மையிலேயே, ரொம்ப நெருக்கமா பழகிக்கிட்டிருக்கிறவன்கூட இவன் தாழ்ந்த சாதின்னு தெரிஞ்சவுடனே இவன்கிட்டேயிருந்து விலகி நிற்க ஆரம்பிக்கிறான். இப்படி, தன்னிடமிருந்து ஒதுங்கிக் கொள்வார்கள், தன்னை ஒதுக்கி வைப்பார்கள் என்கிற பயம் இருக்கே, அது மிகவும் கொடூரமானது. அப்படி ஒதுக்கி வைத்தால் இந்த சமூகத்தில் தான் எப்படி சுதந்திரமாக புழங்குவது என்கிற அச்சத்தில், அவன் தன்னைத்தானே மறைச்சிக்க முயற்சிக்கிறான். ஒரு மனிதன் எதை வேண்டுமானாலும் தாங்கிக் கொள்வான்.

ஆனால், ஒதுக்கலை புறக்கணிப்பை மட்டும் அவனால் தாங்கிக் கொள்ளவே முடியாது. அதுதான் மிகப்பெரிய அவமரியாதை. அந்தப் புறக்கணிப்பைத் தாங்கிக் கொள்ள முடியாததாலும், ஏற்கனவே அவன் முன்னோர்கள் பட்ட அவமானங்களில் இருந்தும், அவன் தன்னுடைய பூர்வீகம் முழுவதையும் மறைத்துக் கொள்கிறான். அப்படி மறைத்துக் கொள்வதன் மூலமாக மட்டுமே அவன் உங்களில் ஒருவனாக தன்னை இணைந்துகொள்ள முடியும் என முயற்சி செய்கிறான். உங்களோடு ஒட்டி உறவாடுறதாலே அவனுக்குப் பெருமை ஒன்னும் கிடையாது. ஆனால், அதன் மூலம் அவன் ஒரு சராசரி மனிசனா வாழத்தான் முயற்சி பண்றான். ஆனால், அந்த முயற்சியிலும்கூட, ஏதாவது ஒரு நேரத்தில் தாம் பிடிபட்டுவிடுவோம் என்கிற பயம் அவனுக்குள்ளே இருந்து கொண்டுதான் இருக்கு.


‘கடவுளும் கந்தசாமி பிள்ளையும்’ என்றொரு கதையைப் புதுமைப்பித்தன் எழுதியிருந்தார். நீங்களோ, ‘கடவுளும் கந்தசாமி பறையனும்’னு ஒரு கவிதை எழுதி, கடவுளை மாடு அறுக்கவும், மலம் அள்ளவும் விட்டிருக்கீங்களே...?

கடவுள்கிட்டே கந்தசாமிப் பிள்ளை பேசநேர்ந்தால் என்ன பேசுவார் என்பதை புதுமைப்பித்தன் அவர் அனுபவத்திலிருந்தும் அவருக்கான பிரச்னையிலிருந்தும் சொல்லியிருந்தார். அதேபோல, கடவுள்கிட்டே கந்தசாமி பறையன் பேச நேர்ந்தால் என்ன பேசுவார் என்பதை நான் சொல்லியிருக்கிறேன். மனிதர்கள் எல்லாரும் கடவுளின் பிள்ளைகள்னு சொல்லப்படுது.

அப்படியிருக்க, பெரும்பகுதி பிள்ளைகளை கோயிலுக்கு வெளியே ஏன் நிறுத்தி வைக்கணும் என்கிற கேள்வி கந்தசாமி பறையனுக்கு எழுது. அவன் கடவுள்கிட்டே, “உள்ளே வர எனக்குத்தான் தடை. வெளியே வந்து எங்களைப் பார்க்க உனக்கென்ன கேடு?’’ன்னு கோபப்படுறான். கடவுளின் பெயரால் மனுசங்க செய்கிற அட்டூழியத்தை கடவுளே உணர்றார். “பிரிச்சு வைக்கிறதுதானே அவனுங்க குணம். உம்புத்தி எங்கே போச்சு. எம்புள்ளைங்களப் பாக்கறதைத் தடுக்க உனக்கென்னடா அதிகாரம்னு அவங்களை உதைச்சி வீசிட்டு வரவேண்டியதுதானே”ன்னு கடவுளிடம் கந்தசாமி கேட்கிறான். அடிமை மாதிரி கடவுள் நடத்தப்படுறார்.

கடைசியில், கடவுள் கோயிலுக்குள் போகாமல், இவன் தொழிலான மாடு அறுக்கவும், மயானம் காக்கவும், மலம் அள்ளவும் சென்று கொண்டிருப்பதாக எழுதியிருக்கிறேன். இவன் கடவுள் அப்படித்தானே இருக்கமுடியும்.

மருத்துவமனை பிணக்கிடங்கில் பிணம் அறுக்கிற தொழிலாளரின் வாழ்க்கையை ‘அன்னையா’கதையிலே சொல்லியிருக்கீங்க. அதேபோல, காலமெல்லாம் கதைசொல்லிகிட்டிருக்கிற உழைக்கும் பெண்கள், தங்களின் வாழ்க்கைக் கதைகளை வெளியே சொல்லமுடியாமல் அவர்களுக்கு சமூகத்தில் உள்ள தடைகளை மையமா வைச்சு ‘சொல்லி முடியாத கதைகளின் கதை’யைச் சொல்லியிருக்கீங்க. இவ்விரண்டு கதைகளும் படைப்பாளியின் பார்வையிலிருந்தே எதார்த்தமாக சொல்லப்பட்டிருக்கு. அவை உண்மையில் நீங்கள் எதிர்கொண்ட அனுபவங்களா?

பத்து வருசத்துக்கு முன்பு, இங்கே அரசு மருத்துவ-மனை பின்பக்கத்திலேதான் குடியிருந்தேன். காலையிலே ஐந்து மணி போல எழுந்து தினமும் டீ குடிக்க வருவேன். அப்போ, மார்ச்சுவரியிலே வேலை செய்கிற ஒருத்தர், கருத்த நெடிசலான ஆளு. எப்பவும் காக்கிச் சட்டை, காக்கி டிராயரோடதான் இருப்பாரு. குடியினாலே கண்ணெல்லாம் செவந்து போயிருக்கும். அவரும் டீக்கடைக்கு வருவார். குடிச்சதால வயிறு எரியும் போல. தண்ணிய வாங்கி மடமடன்னு குடிப்பாரு. அவரின் அந்தத் தோற்றமும், தினமும் அவரைப் பார்க்கிறபோது ஏற்படுகிற உணர்வும் என்னை ரொம்ப பாதிச்சது. அவரை மையமா வைச்சு அவர்களைப் பற்றி நான் அறிந்த விசயங்களைக் கொண்டு ‘அன்னையா’ கதையை எழுதினேன். போஸ்ட்மார்டத்திலேயே கூட ரொம்ப பிரச்னைக்குரியதைத்தான் டாக்டர்கள் செய்வார்கள்.

மத்ததெல்லாம் டாக்டர் டிக்டேட் பண்ணுவதோடு சரி, பிணத்தை இவருதான் அறுப்பாரு, உடைப்பாரு. எனக்கு இதப் பார்த்தா கடுப்புதான் வரும். லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து டாக்டராக்கி போஸ்ட்மார்ட்டம் பண்றான்னு அனுப்பினா, இவன் நின்னுகிட்டு டிக்டேட் பண்றான். ஒன்னுமே படிக்காதவரு போஸ்ட்மார்டம் பண்றாரு. இதைப்போலதான் தகுதி, திறமைன்னு போனவன் 450 கோடி ரூபாய் செலவிலே ராக்கெட் விடுறான். அது போய் டுபுக்குன்னு கடல்ல விழுது. என்னடா ஒங்க படிப்பு?ன்னு காறி துப்புலாம் போல இருக்கு. அந்தக் கதையை இப்போ எழுதியிருந்தா வேற மாதிரி எழுதியிருப்பேன்.

‘சொல்லவே முடியாத கதைககளின் கதை’ என்பது, என்னுடைய பாட்டியோ, பாட்டியின் அம்மாவோ இன்னைக்கு உயிரோடு இருந்து பேசினால், என்னவெல்லம் பேசியிருப்பார்களோ, அதுதான் அந்தக் கதை. வெளியில் வேலைக்குப் போவது என்பது தலித் பெண்களுக்கோ, பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கோ ஒரு பெரிய பிரச்னை கிடையாது. பொதுவாகவே வேலைக்காக வீட்டை விட்டு வெளியில் போவதுதான் அவர்களது வாழ்க்கை.

ஆட்களைக் கூட்டிகிட்டு ஊர்விட்டு ஊர் போய் ரோடு போடுறது, ஜல்லி உடைக்கிறது... அந்த மாதிரி வேலைகளில் ஈடுபட்டது பெரிய விசயமாகத்தான் தோணுது. பெண்கள் பற்றி நமக்கு இருக்கக்கூடிய பார்வைகள் எல்லாத்தையும் சேர்த்து வைத்துத்தான் அந்தக் கதையை எழுதினேன்.

‘நமப்பு’ன்னு ஒரு கதை. பெண்கள் பேன் பார்ப்பதை மையமா வைச்சு ரொம்ப சுவாரஸ்மாக எழுதியிருந்தீர்களே...? அது ஒரு புதிய முயற்சி. அது எந்த மாதிரி வரவேற்பைப் பெற்றது?

சமீபத்திலே, குறும்பட விழாவில் பாலுமகேந்திரா சிறுகதைகளை சினிமாவா எடுக்கிறதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார். அப்போ, “எந்தக் கதையை வேணுமானாலும் சினிவாமா எடுத்திடலாம். ஆனா, ஆதவனோட பேன் பார்க்கிற கதையை மட்டும் எடுக்கமுடியாது” ன்னு திலகவதி சொன்னாங்க. பேன் பார்க்கிறதுங்கிறது ரொம்ப சுவாரஸ்யமான விசயம்தான். பேன் பார்க்கிறபோது நடக்கிற சம்பாஷணைகளை உட்கார்ந்து கேட்கணும். அப்படியரு சுவாரஸ்யம். ஒரு கட்டத்திலே சுவாரஸ்யம் கூடிப்போய் பேன் குத்துறவங்க, எச்சில் ஒழுக குத்துவாங்க. அந்தக் கதை எங்கள் ஊர்ப் பெண்களிடமிருந்து எடுத்து எழுதினதுதான்.

சமீபகாலமாக தலித் எழுத்தாளர்கள் தன்வரலாறு எழுதுவதில் கவனம் செலுத்துகிறார்களே...

தன்வரலாறு என்பது மராட்டிய தலித் இலக்கியத்திலிருந்து வந்த முக்கியமான வடிவம். இந்திய தமிழக வாசகத் தளத்திலே பெரும்பகுதியினருக்கு தலித் வாழ்க்கை என்றால் என்னவென்று தெரியாது. இந்தியா ஊருன்னும் சேரின்னும் பிரிக்கப்பட்டிருக்கு. தீட்டு காரணமாக ஊருக்குள் இருக்கிறவன் சேரிக்குப் போகவும், சேரிக்குள் உள்ளவன் ஊருக்குள் போகவும் இங்கே தடையிருக்கு. அப்போ, அவனுக்குத் தெரியாத ஒரு வாழ்க்கை அங்கே இருக்கு. அப்படித் தெரியாத வாழ்க்கையை சொல்லிப் பார்ப்பதன் வழியாக, ஒரு புதிய வாழ்க்கையை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துகிற வேலையை தலித் படைப்பாளிகள் மராட்டியத்தில் செய்தார்கள். உங்களின் கற்பனைக் கதைகளில் வரக்கூடிய திருப்பங்கள், பல்வேறு விதமான சுவாரசியங்கள் அவனுடைய சொந்த வாழ்க்கையிலே இருக்கு. கூடுதல் குறைத்தல் இல்லாமல் சொன்னாலே போதும். இன்னொருத்தனின் வாழ்க்கையை பார்க்க அனுமதிக்கப்படாத இவன், தன்னை, தான் சார்ந்தவர்களை, சாதிக்காரர்களை, சொந்த பந்தங்களை, முன்னோர்களை எல்லாம் அதுக்குள்ளே கொண்டுவர்ரான். அதுவரை தலித் வாழ்க்கையை, அவர்களது பழக்க வழக்கங்களை, கலாச்சார நடவடிக்கைகளை பார்க்காத வாசகர்கள் இதைப் புதிதாக எதிர்கொள்கிறார்கள்.

இலக்கிய உலகமும் இதனை புதிய வகையாக ஏற்றுக்கொண்டது. அதன் பிறகு, கன்னடத்திலே சித்தலிங்கையாவின் ஊரும் சேரியும் வந்தது. தமிழில் பாமாவின் கருக்கு, கே.ஏ.குணசேகரனின் வடு இப்படி சில வந்திருக்கின்றன. ஆனாலும், தன்வரலாறாகத்தான் எழுதிப் பார்க்கணும் என்கிற அவசியம் கிடையாது. அந்த வகை கைகொடுத்தால் அந்த வகையில் சொல்லலாம். இல்லேன்னா, வேறு வடிவங்களில் சொல்லிப் பார்க்கலாம். எழுதப் படிக்கத் தெரியாத மக்களிடம் ஒரு இலக்கிய மரபு இருக்கு. அவர்கள் பிறப்பிலிருந்து இறப்பு வரைக்கும் பாட்டு பாடிகிட்டும், கதை சொல்லிகிட்டும் வாழறாங்க. அதையெல்லாம் வாய்மொழியாக பதிவு பண்ணனும். ஆங்காங்கே சில முயற்சிகள் நடக்குது. அதெல்லாம் போதாது. மக்களின் வாழ்க்கையை உடனிருந்து பார்க்கக்கூடிய, புதிய சமுதாயத்தை உருவாக்கணும்னு விரும்பக்கூடிய அல்லது தங்களுடைய வரலாறு மறைக்கப்பட்டு விட்டது; உண்மையான வரலாறைச் சொல்லணும்னு நினைக்கக்கூடிய ஒவ்வொருவரும் அந்தப் பணியைச் செய்யனும்.

ஒடுக்கப்பட்டோர் இயக்கங்கள் பௌத்தத்தை வலியுறுத்துகின்றனவே...

எனக்கு அடிப்படையான பல சந்தேகங்கள் இருக்கு. பௌத்தம் தழைத்தோங்கும் ஜப்பானில் யுத்தவெறியை மட்டுப்படுத்த அதனால் முடியவில்லை. இலங்கையில் அது பேரினவாதமாக வெளிப்படுகிறது. சீனத்தில் பெரும்பான்மைச் சமூகத்தோடு இணங்கி வாழாமல் தலாய்லாமா தலைமையில் அது உலகம் முழுக்க சுற்றிக் கொண்டிருக்கிறது. பௌத்தம் ஆட்கொண்ட பல நாடுகளில் வறுமையும் விபச்சாரமும் ஒழியல. அம்பேத்கரோடு பௌத்தம் தழுவின பத்துலட்சம் பேரோட சமூகநிலை இப்போ என்னவாக இருக்குன்னு தெரியல. பௌத்தம் தழுவி அரைநூற்றாண்டு ஓடிவிட்டது. இப்போது அவர்களோடு சமூகத்தின் பிற பகுதி எப்படியான உறவு வச்சிருக்குன்னு தெரியணும். அதிகாரம் கிடைக்கிறபோது எந்தவொரு மதமும் ஒரு ஒடுக்குமுறை கருவியாகத்தான் இருக்கமுடியும்கிறதை பௌத்தம் எந்த வகையில் மறுக்கிறது...? இதையெல்லாம் தெளிவுபடுத்தாமல் எல்லாருக்கும் புத்தர் தாயத்து வழங்கவேண்டுமாங்கிற கேள்வி இருக்கு.

ஒரு நாத்திகராகவோ, மதத்தை மறுதலிக்கிறவராகவோ இருந்து அந்தநிலைக்கு தோதானதாக அம்பேத்கர் பௌத்தத்தை தேர்ந்து கொண்டாரான்னும் விவாதிக்க வேண்டியிருக்கு.

கவிதை, சிறுகதையைக் கடந்து இப்போது இசைப்பாடலிலும் கவனம் செலுத்துகிறீர்களே...?

பொதுவாக, பெரும்பாலானவங்க “என்னங்க நீங்க, இன்னமும் சாதி, சாதின்னு பேசிகிட்டிருக்கீங்க. இப்பெல்லாம் எவன்க சாதி பார்க்குறான்” என்கிறார்கள். இந்த வார்த்தை என்னை ரொம்ப துன்புறுத்துச்சி. ஒரு பிரச்சாரத்துக்காக பாடல் எழுந்த நேர்ந்தபோது அந்த வார்த்தைக்குப் பதில் சொல்ற மாதிரிதான் “இப்பல்லாம் எவன்டா சாதிப் பார்க்கிறான்” என்கிற ஒரே ஒரு பாடலை எழுதினேன். அது ஏராளமான , பாட்டு எழுதின மாதிரி பேர் வாங்கிக் கொடுத்துடுச்சி. இதற்காக பிரளயனுக்கும் திருவுடையானுக்கும்தான் நன்றி சொல்லணும்.

‘புதுவிசை’ இதழ் அனுபவம்...?

கவிஞர் கந்தர்வனைச் சந்திக்கிறதுக்காக 1999ல் புதுக்கோட்டைக்குப் போயிருந்தேன். “வளர்ந்த என் போன்ற எழுத்தாளர்கள எழுதுறதுக்கு சிறுபத்திரிகையிலிருந்து வணிக பத்திரிகை வரை ஒரு தளம் இருக்கு. ஆனால், புதுசா ஏராளமா வந்துக்கிட்டிருக்கிறவங்க எழுதுறதுக்கு ‘செம்மலர்’ மட்டும் போதும்னு எனக்குத் தோணல. நீ ஏன் ஒரு பத்திரிகைத் தொடங்கக்கூடாது” ன்னு அவர் கேட்டார். இப்படித்தான் ஒரு கேள்வி போதுமானதாயிருக்கிறது. அன்று இரவே தென்மாவட்டங்களில் எனக்கு மிகவும் பரிட்சயமான ஷாஜகான், மாதவராஜ், லட்சுமிகாந்தன் இவங்ககிட்டே எல்லாம் பேசினேன். அவங்க ரொம்ப உற்சாகமாக நடத்தலாம்னு சொன்னாங்க.

கடைசியா, நாங்கள்லாம் சேர்ந்து தமிழ்ச்செல்வனிடம் பேசினோம். அவர், “தமிழிலே படைப்பிலக்கியங்கள் வெளிவர்றதுக்கு ஏராளமான பத்திரிகைங்க இருக்கு. சமூகவியல் சார்ந்த, பண்பாட்டுத் தளம் சார்ந்த விசயங்களை பேசுவதற்கான ஒரு இடதுசாரி அணுகுமுறையிலான பத்திரிகை இல்லை. அப்படி ஒரு பத்திரிகையை கொண்டு வரலாம்” னு ஆலோசனை சொன்னார். அப்படித் தொடர்ந்து ஏழு இதழ்களைக் கொண்டு வந்தோம். பரவலான கவனத்தைப் பெற்றது. பத்திரிகைகள் பரவலா விற்றுப்போச்சு. ஆனால், விற்ற ‘நண்பர்கள்’பணத்தை அனுப்பல. அதன் பிறகு, விசையின் பாக்கியைப் போல பல மடங்கு அவங்க கையில் புரண்டிருக்கு. ஆனால், அவங்களுக்கு ஏனோ பணத்தை அனுப்ப மனம் வரல. நானும் தமிழ்ச்செல்வனும் மல்லுக்கட்டி பார்த்துவிட்டு நிறுத்திவிட்டோம். பிறகு, ரமேஷ் எனும் நண்பனின் உதவியால் இணைய இதழாகக் கொண்டுவந்தோம். பெரியசாமி, சம்பு, சிவா போன்ற நண்பர்கள் உதவியோடு மீண்டும் உற்சாகத்தோடு புதுவிசை வருகிறது. தொடர்ந்து வெளிவரும்...

*********************
மேற்கண்ட செவ்வியைப் படித்து முடித்தபோது மிகவும் சங்கடமாக உணர்ந்தேன் இதுவரை ஆதவன் தீட்சண்யாவின் படைப்புகள் முழுதையும் படிக்காமல் போனதற்கு. அங்கங்கு அவருடைய சில கவிதைகளைப் படித்ததோடு சரி. ஒரு செவ்வியிலேயே இவ்வளவு வீச்சைக் கொண்டுவருகிற மனிதர் தன் படைப்புக்களில் எப்படி வெளிப்பட்டிருப்பார் என்கிற ஆவல் மிகுந்ததால் இதை இங்கு இட்டு வைக்கிறேன். இச்செவ்வியை வெளியிட்ட கீற்று இணையத் தளத்திற்கும், வினாக்களைத் தொடுத்திருக்கிற சூரியச்சந்திரன் அவர்களுக்கும் நன்றி.

12 Comments:

At 6:20 AM, September 27, 2006, Blogger மணியன் said...

நல்ல சுட்டியை கொடுத்ததிற்கு நன்றி.

 
At 5:22 PM, September 27, 2006, Blogger செல்வநாயகி said...

எனக்காக சேமித்துக்கொள்ளவும், இவர் படைப்புநூல்களை முழுதுமாகப் பின்னாளில் வாங்குவதற்கு ஒரு நினைவுறுத்தலாக இருக்கட்டும் என்றும்தான் இங்கு இட்டேன் மணியன். உங்களுக்கும் உபயோகமானதில் மகிழ்ச்சி. இதில் சாதியம், அதன் தோற்றுவாய், அதைக் கடந்ததன் அடையாளங்கள் என்பவற்றை அடக்கிய அவரின் பதில்களில் சிலதை நான் இங்கு ஏற்றவில்லை, அவற்றைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள் தங்களுக்குரிய ஆயுதங்களோடு போரிடத் தொடங்குவார்கள் என்று கருதி. நீங்கள் விரும்பினால் கீற்றில் இன்னும் முழுமையாகப் படிக்கலாம். நன்றி.

 
At 3:17 AM, September 28, 2006, Blogger அருள் குமார் said...

புத்தகக்கடைகளில் இவரின் பெயர் பார்த்துவிட்டு பெரிதாக ஆர்வமில்லாமல் ஒதுக்கியிருக்கிறேன். இப்போது இவரின் படைப்புகளை படிக்க ஆர்வம் எழுந்திருக்கிறது.

நன்றி!

 
At 8:34 AM, September 28, 2006, Blogger இளங்கோ-டிசே said...

மீளப்பதிந்தமைக்கு நன்றி செல்வநாயகி.
.....
ஆதவனின், 'புறத்திலிருந்து' தவிர மிகுதி அனைத்துத் தொகுப்புக்களையும் வாசித்திருக்கின்றேன். நல்ல வாசிப்பனுபவமாய் அவை இருந்திருக்கின்றன.

 
At 11:49 PM, September 28, 2006, Blogger செல்வநாயகி said...

சிலசமயங்களில் நானும் இப்படி நல்ல படைப்பாளிகளைத் தவறவிட்டதுண்டு அருள்.

டிசே,
உங்களின் பரந்த வாசிப்பனுபவம் பலசமயங்களில் எனக்குப் பிரமிப்பாக இருக்கிறது.

நன்றி இருவருக்கும்.

 
At 4:46 PM, September 30, 2006, Blogger வீரமணி said...

வணக்கம் மேடம்...வலைப்பதிவில் இப்படி ஒரு பேட்டியை எடுத்து பிரசுரித்ததற்கு உங்களுக்கு ரொம்ப புண்ணியம். (கி.ரா. ஸ்டைல்)., அருள் தான் உங்களை அறிமுகப்படுத்தினார்......தொடர்ந்து செய்யுங்கள்......
நிறைய அன்புடன்
வீரமணி

 
At 11:15 PM, September 30, 2006, Blogger செல்வநாயகி said...

வணக்கம் வீரமணி. தாமதமாகப் பார்த்ததால் உங்களின் பின்னூட்டத்தைப் பிரசுரிக்க இவ்வளவு நேரமாகிவிட்டது, மன்னிக்கவும். இச்செவ்வி உங்களுக்கும் பயனானதற்கும், ஒத்த ரசனைக்கும் மகிழ்ச்சி.

 
At 7:20 AM, October 03, 2006, Blogger செல்வநாயகி said...

இச்சுட்டியை ஏற்கனவே இணைக்க நினைத்து விட்டுப்போனது. அதை இங்கு இட்ட கீற்று ஆசிரியர் அவர்களுக்கு நன்றி.

 
At 11:57 AM, November 21, 2006, Blogger மஞ்சூர் ராசா said...

கொஞ்சம் தாமதமாக வந்தாலும் ஒரு முக்கியமான பதிவை படித்த மனதிருப்தி.

மிகவும் நன்றி.

இங்கு வர காரணமான இந்த வார தமிழ் மண நட்சத்திரத்திற்கும் நன்றி.

 
At 1:52 PM, November 21, 2006, Blogger செல்வநாயகி said...

நன்றி மஞ்சூர் ராசா.

 
At 6:12 AM, April 21, 2007, Blogger Ayyanar Viswanath said...

தாமதத்திற்க்கு வருந்துகிறேன்

இவரோட நான் பழகி இருக்கேன்னு கொஞ்சம் பெருமையா சொல்லிக்கலாம்
ரொம்ப சாதாரணமா இருக்கும் பேச்சு பழக்கம் நடவடிக்கை எல்லாம்..ரொம்ப அபூர்வம் இந்த மாதிரி ஒரு மனிதர்...குறிஞ்சி திரைப்பட இயக்கம் னு ஒரு திரைப்பட இயக்கமும் நடத்திட்டு வராங்க ஓசூர் தமுஎச.நிறைய விஷயங்கள் தெரிஞ்சிகிட்டது இவங்களோட பட்டறையில இருந்துதான்
:) நன்றிகள் பல

 
At 11:26 AM, April 21, 2007, Blogger செல்வநாயகி said...

அய்யனார்,

நன்றி. ஆதவன் தீட்சண்யாவுடனான உங்கள் அனுபவங்கள் பற்றியும், அவரின் படைப்புகள்பற்றியும்கூட நேரம் கிடைக்கும்போது உங்கள் பக்கத்தில் எழுதுங்கள். என் போன்றவர்கள் மேலும் அவரைப் பற்றி அறிய வாய்ப்பாக இருக்கும்.

 

Post a Comment

<< Home