நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Tuesday, October 03, 2006

அருக்காணியின் அரங்கம்

அருக்காணி: சுந்திரீ...அட வாவா உங்கூடப் பேசறதுக்குத்தே உன்னைய வரச்சொல்லியுட்டிருந்தெ நானு பிரேமாகிட்ட.

சுந்தரி: அப்பிடியென்ன தலபோறகாரியமாக்கு எங்கிட்ட ஒனக்கு?

அருக்காணி: அப்பிடித்தேன்னு வெச்சுக்கவே. நம்மூட்டுல செந்திலு கம்பியூட்டர் வாங்கிவெச்சதுல அப்பப்ப நானும் அதுல எதாவது படிப்பன்னு சொல்லீருக்கறனல்ல உனக்கு?

சுந்தரி: அவெஞ்சொல்லிக்குடுத்து நீயுங் கம்பியூட்டருக்குள்ள போகவெல்லாம் படிச்சதுனாலதான எனக்குங்கூட சூரியா சோதிகா கல்யாணப் போட்டாவையெல்லாங்கூட உங்கூட்டுக்கு வந்து உடனே பாக்கமுடிஞ்சுது. அதுக்கென்ன இப்போ? சோதிகா மாசமா இருக்குதுன்னு புதுசா எதாவது போட்டோக்கீது வந்துருக்குதா?

அருக்காணி: ஆமா, கல்யாணமாகிப் பத்தாவதுநாளே மருமவ மாசமாயீட்டாளான்னு கேக்கற காட்டுச் சனமாட்டவே இரு. சோதிகா கேட்டான்னா உன்னையெல்லா தாளிச்சே போடுவா. அதல்ல. இப்பத்தே இந்த வலைப்பதிவுலயெல்லாந் தமிழ்ல என்னென்னமோ எழுதிக்கிட்டிருக்கறாங்களே! அப்பிடி எழுதற நம்மூருப் புள்ளையொண்ணு நாம பேசறத அப்பிடியே அதும்பட பதிவுல போடறன்னு கேட்டுது. அதுக்குத்தே உங்கூட ஒரு கலந்துரையாடலு வெச்சு டேப்பு ரிக்காடருல பதிவு பண்ணி அந்தப் புள்ளைக்கு அனுப்பலாமுன்னு உனையக் கூப்புட்டது இப்போ.

சுந்தரி: பரவாயில்லயக்கா. நம்மூருப் புள்ளைக்கு நல்ல மனசுதேம்போ. நம்ம பேச்சையெல்லாங்கூட வலைப்பதிவுல போடுதாமா?

அருக்காணி: நல்லாச்சொன்னே நீயி, அந்தப் புள்ளையப்பத்தி எனக்குத்தெரியாதாக்கு? நாந்தே அதோட "நிறங்கள்"ங்கற பதிவயும் படிச்சுக்கிட்டுத்தேன இருக்கறனிப்போ. அந்தப் புள்ள நம்மளப் போடனுமுன்னெல்லா வந்தமாதிரித் தெரியல. ஆடிக்கொரு நாளைக்கு அம்மாவாசைக்கொருநாளைக்குப் பதிவு போடற கொஞ்சங்கூடத் துடியில்லாத புள்ளை அது.
அது உக்காந்து எழுதறதுக்குப் பதிலா நாம பேசறதப் போட்டு ஒரு பதிவு ஒப்பேத்தலாம்னு வந்துருக்குமுன்னு நெனைக்கறன் நானு.

சுந்தரி: பால் கறக்குற மாட்டப் பல்லப் புடுச்சுப் பாத்த கதையாப் பேசாதையக்கா. எப்பிடியோ நம்ம பேரெல்லாங்கூட அங்க வரப்போகுதுல்ல அந்தப் புள்ளையால?. அதையுட்டுப்போட்டு........... இப்ப நாம என்ன பேசோனும்னு சொல்லு
சீக்கிரமா, பேசிப்போட்டுப் போயிப் பொழுதோடத்துக்குச் சோறாக்கற வேலையிருக்குது எனக்கு. உனக்கென்ன ஆக்கிவெச்சுப்போட்டு அலுங்காம உக்காந்திருப்பே இந்நேரத்துக்கு.

அருக்காணி: சேரிச்சேரி, சுடுதண்ணியக் கால்மேல ஊத்துனமாரித் திரியாத நீயி. அப்பிடி உக்காரு அந்தப் பாவை மேல.காடு, ஊடுன்னு இருக்கற உங்கிட்ட எதையப் பேசுனாப் புரியும்னு ரோசனையா இருக்குது. இரு சொல்றேன், ம்ம்ம்ம்ம்ம்ம்.......இன்னைக்கு எந்தப் பதிவு படிச்சன்னா.........

சுந்தரி: ஆமாமா, நீ பெரிய கலெக்டரு பாரு. இன்னைக்கு உம்பய கம்பியூட்டரு வாங்கிக்கொடுத்தான்னு வந்துருச்சாக்குனக்கு? நாலைக்கே எம்பயனுமொண்ணு வாங்கிவெச்ச பொறகால பாரு.

அருக்காணி: பேசுபேசு, நீயுமொரு நங்கயா மொறைதான எனக்கு. நாம பேசிக்காம யாரு பேசுவா இப்பிடி.......ம்ம்ம்.....நாபகம் வந்துருச்சு இப்ப....... இன்னைக்கு எதோ "கொங்கு வட்டார வழக்கு" ன்னு மணிகண்டன்னு ஒருத்தரு எழுதுன பதிவையுமு அங்க மத்த சனம் போட்ட பதிலையுந்தான் படிச்சேன்.

சுந்தரி: கொங்கு வட்டாரம்னா நாமெல்லாம் பேசிக்கறதையா? நீ சொல்றதப் பாத்தா இந்த வலைப்பதிவுல நெறையா நல்ல காரியம் நடக்குமாட்ட இருக்குது.

அருக்காணி: இதெல்லாம் செய்யவேண்டிய நல்ல வேலதாஞ்சுந்தரீ.... ஆனாப் பாரு, இப்பத்த பசங்க புள்ளைக வெளியூரு வாழ்க்கைக்குப் போனா அங்கத்ததப் படிச்சுட்டு நம்ம வார்த்தைகள மறந்தும்போயிருது. மழை பேஞ்சா சாக்குல உள்ளாற மடிச்சுத் தலைக்குப் போடுவமே அதைய எப்பிடிச் சொல்றதுன்னு தெரியலைங்கறாங்க.

சுந்தரி: அடக் "கொங்காடை" ங்கறத மறந்துட்டாங்களா? நல்ல கதையா இரூக்குது போ. வார்த்தைக மட்டுமில்லப் பழமொழியெல்லாங்கூட எழுதி வெச்சர்றது நல்லது.

அருக்காணி: ஆமா, இந்தப் பதிவோட போன பாகத்துலகூட "போசி"ன்னாப் பாத்திரம்னு எழுதீருந்தாங்க மணிகண்டன். அதக்கூடப் பொதுவாப் பாத்திரம்னு சொல்றதவிடப் பாத்திரங்கள்ள ஒருவகைன்னு சொல்லலாம். ஏன்னா நாம ஒவ்வொரு
பாத்திரத்துக்குமே வேறவேற பேருதானே வெச்சிருக்கோம். உருளை வடிவத்துல இருக்கறதுக்குப் பேரு "போசி". அதுவே தொங்கற மாரி இருந்தா அதுக்குப் பேரு "தூக்குப் போசி".

சுந்தரி: தூக்குப் போசி தெரியாதா எனக்கு? சதிலீலாவதியில கோவைசரளா பெங்களூருல ஒரு மணிப்பாசுக் கடையில "இதென்னுங்க தம்பி எங்கூருத் தூக்குப் போசியாட்ட இருக்குது" ன்னு ஒரு மணிப்பாசத் தூக்கிக் காட்டுவாங்களே?

அருக்காணி: செரியாச் சொன்னே....... அதே மாரி நம்மகிட்ட இட்லிப் போசி, இட்லிக்குண்டா, தேக்குசா, சால்ப்பானை, காவிடிச் சொம்பு இப்பிடியெல்லாமே பாத்திரமிருக்குதே! சாப்பாட்டப் பரிமார்ற கரண்டியக்கூட "அன்னவாரி" ன்னு
சொல்லுவோம்.

சுந்தரி: என்னமோ போ. "நங்கயா" ன்னு நம்ம பொறந்தவம் பொண்டாட்டியக்கூடச் சொல்றதுண்டு. "ஏனுங்க நங்கை"ன்னு கேக்கறதே நல்லாருக்கும். இப்பெல்லாம் "அண்ணி" ஆயிருச்சு அது. எங்கூட்டுச் சின்னப் பண்ணாடிகூட இப்பெல்லாம் "வீடு" ன்னுதான் பேசுது. "ஊடு" போயாச்சு. "செவினில" ஏண்டா கைவெச்சு உக்காந்துருக்கறேன்னு கேட்டா "ஏம்மா கன்னத்துலைன்னு சொல்லத் தெரியாதா?" ன்னு கேட்டு நாவரீகம் பழகுது. இவனெல்லாந்தே நாளைக்குப் பண்ணையம் பாக்கப் போறானாக்கு? நாங்க அய்யனம்மா
இருக்கறவரைக்குந்தே.....

அருக்காணி: நீ வேற....... என்னையச் சின்னமா சின்னமான்னு கூப்புட்டுக்கிட்டிருந்த எங்கக்கா பயனொருத்தன் டிவியில "சித்தி" வந்தப்புறமா "சித்தி"ங்கறான். எல்லாம் மாறிக்கிட்டிருக்குது போ. ஆனாக்கூட உடமுடியாது நம்ம "செலவு வேகுச்சுக் கொட்டிக் கடஞ்ச கொழம்பையும், அரசானிக்காப் பொரியலையும், தட்டப்பயித்துச் சுண்டலையும்"
அமெரிக்காப் போனாலுஞ்சேரி, எங்க போனாலுஞ்சேரி.

சுந்தரி: பொழுதே உழுந்துருச்சு.... மிச்சமிருந்தா உன்னோரு நாளைக்குப் பாத்துக்கலாம். நாம்போறனக்கா. ஆமா.....இப்பிடி எதோ அரையுங்கொறையுமா நாம பேசுனதையெல்லா எப்பிடி எழுதப்போகுது அந்தப்புள்ளை? இதையெல்லாங் கேட்டுப்போட்டு நம்மளைய வார்த்தை பேசீறப்போகுது அது!

அருக்காணி: என்னமோ "அருக்காணியின் அரங்கம்" னு தலைப்பு வெச்சு எழுதறன்னு சொல்லுச்சு. வார்த்தை பேசுனாத் தெரியும்.................நாமலா போனோம் அதுகிட்ட? அது வந்துருக்குது நம்மகிட்ட அதுக்குச் சோலியாகுனுமுன்னு.

சுந்தரி: நாய் வயித்துல பொறந்தாக்கூட நட்சத்திரங்கூடிப் பொறக்கோனுமுன்னு சும்மாவா சொன்னாங்க பழமொழி? சடைகூட நேராப் பின்னத்தெரியாம ஏழுகோணையாப் பின்னற உனக்கு அடிச்சிருக்குது ஒரு யோகம்.

அருக்காணி: நீ ஒருத்தி..........நானாவது சடைதான் கோணையாப் பின்னிக்கறவ. அவங்கவுங்க அங்கங்க மனசே கோணையோட ஆடிக்கிட்டிருக்கறாங்க அவுத்துட்ட காளை மாரி. நீ பாத்துப் போ. அம்மாவாசை நாளு, தடத்துல பூச்சி,
புழுவு ஊறிக்கிட்டுக் கெடக்குங்க பாவம்.

பின்குறிப்பு:
**********
கொங்கு வட்டார வழக்குச் சொற்களைச் சேமிக்கும் முயற்சியில் உள்ள நண்பர் மணிகண்டனுக்கும், அவருக்குப் பின்னூட்டங்களில் சொற்களை வழங்கி உதவும் நண்பர்களுக்கும் நன்றி.

28 Comments:

At 7:27 AM, October 03, 2006, Blogger இரா. செல்வராசு (R.Selvaraj) said...

செல்வநாயகி, அருமை! நல்ல முயற்சி! மிக நன்றாக வந்திருக்கிறது.

நெசமாளுமே அவிங்கலப் பேசச்சொல்லி வாங்கிப் போடுவீங்களா?அதுங்கூட நல்லாத்தே(ன்) இருக்குமுனு நெனைக்கிறேன்.

 
At 7:58 AM, October 03, 2006, Blogger ramachandranusha(உஷா) said...

செல்வா நல்லா வந்திருக்கு. கடைசில சொன்னீங்க பாருங்க அது ! தடம் பார்த்துதானே போய்க்கிட்டு இருக்கேன் :-)

 
At 8:01 AM, October 03, 2006, Blogger ஜெயஸ்ரீ said...

அடடா! சுத்தமான கொங்கு தமிழை கேட்க(படிக்க) இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே.

படிக்கும்போது இனம்புரியாத ஒரு நிறைவைத் தருகிறது செல்வநாயகி.

போசி , தூக்குப்போசி என்று கொங்கு வட்டாரத்தில் அறியப்படும் பாத்திரங்கள் நெல்லையில் போணி மற்றும் தூக்குப்போணி என வழங்கப்படுகின்றன.

இதிலேயே சற்று உயரமான பாத்திரம் தூக்குப்போணி எனப்படுகிறது.

 
At 12:33 PM, October 03, 2006, Blogger வெற்றி said...

செல்வநாயகி,
அருமை. மிகவும் அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

 
At 12:41 PM, October 03, 2006, Blogger வெற்றி said...

//போசி , தூக்குப்போசி என்று கொங்கு வட்டாரத்தில் அறியப்படும் பாத்திரங்கள் நெல்லையில் போணி மற்றும் தூக்குப்போணி என வழங்கப்படுகின்றன.//

ஈழத்தில்[எனது ஊரில்] இதைப் பேணி என்று சொல்வார்கள். பேணி என்பது அரிசி அளவைப் பொருளாகவும் பயன்படுகிறது. அத்துடன் தண்ணீர் குடிக்கப் பயன்படுத்தும் பாத்திரமாகவும் ஈழத்தில் புழக்கத்தில் உள்ளது. பேணியிலும் பல வகைப் பேணிகள் உண்டு. மூக்குப்பேணி...

4 பேணி (அல்லது சுண்டு) = 1 கொத்து [அளவை]

எடுத்துக்காட்டுகள்:
1."உந்தப் பேணிக்குள்ள சொஞ்சம் குடிக்க தண்ணி தாடி பிள்ளை"

"2 பேணி அரிசி கடனாய் எடுக்கலாமே?"

 
At 1:31 PM, October 03, 2006, Blogger மலைநாடான் said...

செல்வநாயகி!

மிகநல்ல முயற்சி. எனக்குப் பரிச்சயமில்லாத பேச்சு வழக்காக இருப்பினும் புரிந்து கொள்ள முடிகிறது.

வெற்றி!
போசி என்பதைச் சட்டி, தூக்குச் சட்டி, என்று கொள்ள முடிகிறதா எனப்பாருங்கள். எனக்கென்னவோ, பேணி என்பதைவிட அதுதான் அவர்கள் உரையாடலில் சுட்டும் பாத்திரத்துக்குப் பொருந்துகிறது போல் தெரிகிறது.

நன்றி!

 
At 2:12 PM, October 03, 2006, Blogger வெற்றி said...

//வெற்றி!
போசி என்பதைச் சட்டி, தூக்குச் சட்டி, என்று கொள்ள முடிகிறதா எனப்பாருங்கள். எனக்கென்னவோ, பேணி என்பதைவிட அதுதான் அவர்கள் உரையாடலில் சுட்டும் பாத்திரத்துக்குப் பொருந்துகிறது போல் தெரிகிறது//

நன்றி மலைநாடான். ஓ... நான் தவறாகப் புரிந்து கொண்டேன் என நினைக்கிறேன்.

செல்வநாயகி,
போசி படம் ஏதாவது இருந்தால் பதிவில் இணைக்க முடியுமா? குழப்பம் தீரும்.

 
At 5:57 PM, October 03, 2006, Blogger செல்வநாயகி said...

பின்னூட்டிய நண்பர்களுக்கு நன்றி. சில விளக்கங்களைப் பிறகு இடுகிறேன்.

 
At 8:16 PM, October 03, 2006, Blogger பெத்தராயுடு said...

//ஆனாப் பாரு, இப்பத்த பசங்க புள்ளைக வெளியூரு வாழ்க்கைக்குப் போனா அங்கத்ததப் படிச்சுட்டு நம்ம வார்த்தைகள மறந்தும்போயிருது. மழை பேஞ்சா சாக்குல உள்ளாற மடிச்சுத் தலைக்குப் போடுவமே அதைய எப்பிடிச் சொல்றதுன்னு தெரியலைங்கறாங்க//

ஹி..ஹி..
வெள்ளாமய உட்டுபோட்டு கம்யூட்டர் வேலக்கி வந்திட்டா 'கொங்காடை' பத்தியெல்லா ஞாபகம் இருக்குமுங்களா?

மத்தபடி, அப்படியே தோட்டத்துல உக்காந்து அருக்காணி பேசறத கேட்ட மாதரியே இருக்குது.

 
At 9:48 PM, October 03, 2006, Blogger Jayaprakash Sampath said...

சினிமாவிலே வரும் கொங்குத் தமிழுக்கும், இந்த ஒர்ரிஜினல் கொங்குத் தமிழுக்கும் எத்தனை வித்தியாசம்.

அருமையான பதிவு. நன்றி

 
At 9:54 PM, October 03, 2006, Blogger துளசி கோபால் said...

சாக்கு மடிச்சுப்போடுறதைக் 'கொங்காணி'ன்னு கேள்விப்பட்ட ஞாபகம்.

குண்டான், போணி, எல்லாமும் நினைவு இருக்கு.
ஜோடுதா(வ)லைன்னு மெட்ராஸ் பக்கம் சொல்வாங்க ஒரு நீளப் பாத்திரத்தை. பால் கறக்கப் பயன் படும்.

 
At 11:39 PM, October 03, 2006, Blogger Chandravathanaa said...

செல்வநாயகி
இதுதான் கொங்குதமிழா?
வித்தியாசமா நல்லாயிருக்கு முயற்சி.

 
At 12:41 AM, October 04, 2006, Blogger செல்வநாயகி said...

புதிய மறுமொழிகளுக்காகவும் நண்பர்களுக்கு நன்றி.

ஓரளவிற்காவது அந்தப் பேச்சு வழக்கை அப்படியே எழுதத்தான் முயற்சித்தேன். ஆனாலும் உற்றுப் பார்க்கிற போது இதிலும் சில சொற்களுக்கு விகுதி அமைத்ததில் அது கொஞ்சம் முரணாகக்கூட இப்போது தோன்றுகிறது. உதாரணத்திற்கு "சடைதான்", "படிச்சேன்" இப்படி.

பதிவின் முடிவிலேயே இந்த உரையாடலின் சில இடங்களுக்கு அகராதியும் எழுதிவிடலாமா என யோசித்தேன் இந்த மொழி பழக்கமேயில்லாதவர்களுக்கு இது கடினமாக இருக்குமே என. ஆனால் பிடித்திருப்பதாகவும், புரிகிறதெனவும் கொங்கு வட்டாரத்தில் வாழ்ந்திராத நண்பர்களும் சொல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. எதற்கும் சில இடங்களுக்கு மட்டும் இப்போது பொருள் சொல்லிவைக்கிறேன்.

தலபோற காரியம் -- அவசரமான வேலை
அதும்பட --அதனுடைய
ஆடிக்கொருநாளைக்கு அமாவாசைக்கொரு நாளைக்கு ---அடிக்கடி நடக்காத அல்லது செய்யாத விடயம்
பால் குடுக்கற மாட்டைப் பல்லப் புடிச்சுப் பாக்கறது --- பாடுபடுகிறவன் அல்லது உழைப்பவனுக்குப்(எதேனும் நல்ல விடயத்தின் பொருட்டு) பாராட்டு வழங்காவிட்டாலும் அவன் செயலைச் சந்தேகித்தல் அல்லது கொச்சைப்படுத்துதல்
அலுங்காம -- கஷ்டப்படாம (எம்பய அவம் பொண்டாட்டிய அலுங்காம வெச்சிருக்கிறான்)
பாவை மேல உக்காரு -- கோரைப் பாய். நாற்காலிகள் வாங்கியிருக்காத காலத்திலும், இப்போதும் நாற்காலிகள் பற்றாக்குறையில் பாய் விரித்து விருந்தினர்களை உட்காரச் சொல்லுதல் விருந்தோம்பும் பண்பாடுகளில் ஒன்று. இது கொங்கு வட்டாரத்துக்கு மட்டுமானதுமல்ல, பல இடங்களிலும் உண்டென்பது நீங்களும் அறிந்ததே.
தேக்குசா ---கூம்பு வடிவிலான ஒரு பாத்திரம்
கவிடிச் சொம்பு -- காவடி எடுக்கத் தலைமீது சுமக்கும் சொம்பு மாதிரியன பாத்திரம்.
மணிப்பாசு ---- மணிப்பர்ஸ்
பொழுது உழுந்திருச்சு --பொழுது சாய்ந்துவிட்டது.
நாய் வயித்துல பொறந்தாக்கூட நட்சத்திரங்கூடிப் பொறக்கோனுமுன்னு -- நட்சத்திரங் கூடுதல் என்பது பெரும்பாலும் சாதகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் சொல்வார்களே "அவம் பொறந்த நேரம் அப்படி நல்ல வாழ்வாக இருக்குது" என்று சொல்லும் வகை.

கோணை -- கோணல்
அவுத்துட்ட காளை மாரி ---அவிழ்த்து விடப்படும் காளைகள் அடுத்த மாடுகளை, காளைகளை, எருதுகளை எனப் பிறவற்றைத் தம் மகிழ்வுக்காக முட்டுவதும், சீண்டுவதுமாக ஒழுங்கற்றுத் திரிவது மாதிரி .

 
At 1:14 AM, October 04, 2006, Blogger செல்வநாயகி said...

செல்வராஜ்,

///நெசமாளுமே அவிங்கலப் பேசச்சொல்லி வாங்கிப் போடுவீங்களா?///

இந்த ரோசனையும் நல்லாத்தான் இருக்குது:)) நீங்ககூட கொங்குவட்டார வழக்கிலேயே ஒரு கவிதை எழுதியிருந்தீங்களே? "சலதாரை"ங்கற சொல் எல்லாம் வந்தது அதுல. உங்க பக்கத்துல சுட்டி தேடினேன் இங்க எடுத்துப் போட, இன்னும் கிடைக்கலை.

உஷா,
///கடைசில சொன்னீங்க பாருங்க அது ///
:))

ஜெயஸ்ரீ,

கொங்கு வட்டாரத்தில் "போவிணி" என்றும் கேட்டிருப்பது எனக்கு நினைவு வருகிறது நீங்கள் சொன்ன "போணி"யைக் கேட்ட பிறகு.

மலைநாடான்,
"சட்டி" என்பது நீங்கள் சொல்வதிலிருந்து முற்றிலும் வேறுபட்ட வடிவில் உள்ள பாத்திரம் எங்கள் பகுதியில், மண் சட்டியிலிருந்து ஈயச் சட்டி வரைக்கும். "வாணாக் குண்டா"ன்னு வாய் அகலமான பாத்திரமும் ஒன்றுண்டு.

வெற்றி,

"போசி" எதுவும் எங்கிட்ட இல்லை இப்போதைக்கு :)) போசிப்படம் வேற யாராவது போட்டாலும் நல்லாயிருக்கும்னு நானும் பாக்கறேன்.

அளக்கறதுக்குப் பயன்படுவதற்குப் பெயர் "படி" கொங்கு வழக்கில். அதிலேயே "அரைப்படி" "கால்ப்படி" அளவைகளும் உண்டு.

பெத்தராயுடு,
//வெள்ளாமய உட்டுபோட்டு கம்யூட்டர் வேலக்கி வந்திட்டா 'கொங்காடை' பத்தியெல்லா ஞாபகம் இருக்குமுங்களா?///

:))

துளசிம்மா,

கொங்கு வட்டாரத்திலேயே சில இடங்களில் வழக்கு சொற்கள் சில மாறுதல்களோடு இருக்கும். அந்தமாதிரி "கொங்காணி" நீங்க கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் ஈரோட்டுப் பகுதியில் இது "கொங்காடை" . சென்னையில பால்கறக்கும் பாத்திரத்துக்கான பெயர் நான் கொங்குப் பகுதியில் கேள்விப்படாதது.

பிரகாஷ்,

சினிமாவுல சில நேரங்களில் சரியான கொங்குத் தமிழாக அது காட்டப்படுவதில்லைதான்.

சந்திரா,
இப்பப் போட்டுருக்கற அகராதியின் துணையோடவும் ஒருதரம் படிச்சுப் பாருங்க:))

 
At 8:26 AM, October 05, 2006, Blogger தேவமகள் said...

வாங்கம்மிணி! சொகமாத்தா இருக்குது நம்மாளுங்க பேசரத படிக்கறதுக்கு!
அப்பறஞ்சவுக்கியமெல்லா மெப்படி?
நம்மூடுதானேன்னு ஒரம்பரைக்கு வாராப்புல வராம அடிக்கடி வார்ரதுங்க!
ஏனுங்க என்னங்க நாஞ்சொல்றது!

 
At 1:01 PM, October 05, 2006, Blogger arulselvan said...

ஏனுங்கம்மிணி, பெருமாள் முருகன் 'கொங்கு வட்டச் சொல்லகராதி' அப்பிடீன்னு நம்மூரு பாசையப்பத்தி ஒரு பொஸ்தகமே போட்டிருக்காருங்களே. அதுல இன்னூங்கூடி அல்லா வார்த்தயுமு இருக்குக்குதுங்கொ. ஒருபாடு படமு இருக்குதுங்கொ. நீங்களூ நல்லாத்தா எளுதறீங்க. ஊர்ல மழ பரவால்லீங்களா?
அருள்

 
At 1:40 PM, October 05, 2006, Blogger இரா. செல்வராசு (R.Selvaraj) said...

அட, நீங்க கேட்டதுக்கப்புறமும் குடுக்காம இருக்க முடியுங்களா? இந்தாங்க - கதைகள் மட்டும் மிஞ்சும்.

இலகுவில் புரியும் இந்த வட்டார வழக்கு அதே வட்டாரத்தைச் சேர்ந்தவனாய் இருப்பதால் தான் என்பது உங்கள் அருஞ்சொற்பொருள் பார்க்கும் போதும், பிறரின் கருத்துக்கள் பார்க்கும் போதும் புரிகிறது. வேறு ஒரிரு பதிவுகளையும் வட்டார வழக்கில் எழுதிய போது பிறருக்குப் பொதுவாகப் புரியச் சற்று நேரமாகியிருக்கும் என்பதை உணர முடிகிறது.

 
At 1:26 AM, October 06, 2006, Blogger செல்வநாயகி said...

உதயா,

வாங்க வாங்க. நானும் உங்களைய ஒரம்பரையாவெல்லாம் நெனைக்கறதில்லீங்க:))

அருள்செல்வன்,

இப்பதிவு குறித்துச் சொல்லிக்கொண்டிருந்தபோது, கணவரும் பெருமாள் முருகனின் இந்த நூல் பற்றிய விமர்சனத்தை எங்கோ தான் படித்ததாகச் சொன்னார். நீங்களும் சொன்னபிறகு அதை வாங்கத் தோன்றுகிறது. இப்போதைக்கு என்னிடமிருப்பது அவரின் "கூளமாதாரி" மட்டுமே. அப்பறம், ஊருல மழையே இல்லீங்கலாமா :((

செல்வராஜ்,

என் சோம்பலால் மீண்டும் தேடாதிருந்தேன். நல்ல காரியம் செய்தீர்கள். இரண்டு வருடங்களுக்கு முன் படித்துப் பிடித்துப் போனதை மீண்டுமொருமுறை படித்து மகிழ்ந்தேன்.

அனைவருக்கும் நன்றி.

 
At 7:23 PM, October 07, 2006, Blogger Thangamani said...

நல்ல பதிவு செல்வநாயகி. படிக்க இனிமையாக இருந்தது.

 
At 12:32 AM, October 08, 2006, Blogger செல்வநாயகி said...

நன்றி தங்கமணி. உங்களின் இறுதியாக இடப்பட்ட பதிவில் நான் செப்டம்பர் 29 ல் இட்ட பின்னூட்டம் ஒன்று தான் இன்னும் மட்டுறுத்தலுக்குக் காத்திருப்பதாகச் சொல்லிக்கொண்டிருக்கிறது:)) ஒருவேளை எதாவது தொழில்நுட்பப் பிரச்சினையால் உங்களின் கவனத்திற்கு வராமல் போயிருக்குமோ என நினைக்கிறேன்.

 
At 1:35 AM, October 08, 2006, Blogger தருமி said...

//ஆடிக்கொரு நாளைக்கு அம்மாவாசைக்கொருநாளைக்குப் பதிவு போடற கொஞ்சங்கூடத் துடியில்லாத புள்ளை அது. //

அவிய சரியாத்தான் சொல்லியிருக்காவ..

 
At 1:50 AM, October 08, 2006, Blogger செல்வநாயகி said...

தருமி,

:))

 
At 10:28 AM, October 08, 2006, Blogger இரா. செல்வராசு (R.Selvaraj) said...

செல்வநாயகி,
பெருமாள் முருகனின் கொங்கு வட்டாரச் சொல்லகராதி பற்றி இராதாகிருஷ்ணன் முன்பு சொல்லியிருந்தார். கோவை விஜயாவில் சென்றமுறை தேடிப் பார்த்தேன். கேட்டுப் பார்த்தேன். பிற இடங்களிலும் கிடைக்கவில்லை. :-(

 
At 11:39 AM, October 08, 2006, Blogger arulselvan said...

செல்வராஜ்

சென்னையில் கிடைக்கிறது. நான் சென்றவருடம் புக் பாய்ண்டில் வாங்கினேன். அவர்களுக்கு எழுதினால் கிடைக்கும்.
அருள்

 
At 10:48 PM, October 08, 2006, Blogger செல்வநாயகி said...

விஜயாவில் சில புத்தகங்கள் கிடைப்பதில்லை செல்வராஜ். கோவையிலிருந்தபோது இந்த அனுபவம் எனக்கு அங்கு அடிக்கடி ஏற்படுவதுண்டு.

உங்களிடம் புத்தகமிருந்தால் அதன் வாசிப்பனுபவத்தை எங்களுக்கும் எழுதிச் சொல்லுங்களேன் அருள்செல்வன்.

நன்றி.

 
At 4:07 PM, October 09, 2006, Blogger Thangamani said...

செல்வநாயகி, நான் என்னுடைய வலைப்பதிவில் ஏற்பட்ட சில தொழில்நுட்பப் பிரச்சனைகள் காரணமாக எதையும் அங்கு போய் பார்க்காமல் இருந்ததால் வந்த வினை போல. ஆனால் அந்த பின்னூட்டு மட்டுறுத்தப்பட்டிருந்தது. நான் படித்துவிட்டேன்.

நீங்கள் எழுப்பிய கேள்வி குறித்து (பெரியார்-கூலி உயர்வு-கம்யூனிஸ்ட் இயக்க எதிர்ப்பு) எனக்கு சில பார்வைகள் உண்டு. தனிமடலிலோ பதிவிலோ எழுதுகிறேன்.
நன்றி.

 
At 7:28 PM, October 09, 2006, Blogger இரா. செல்வராசு (R.Selvaraj) said...

அருள், தகவலுக்கு நன்றி. அடுத்த முறை முயல்கிறேன். நியூபுக்லேண்ட்ஸ் இணைய தளத்திலும் அண்மையில் தேடியபோது இல்லாததால், அதிகம் இப்போது கிடைப்பதில்லை போலிருக்கிறது என்று எண்ணிக் கொண்டேன். அவரின் 'கொங்கு சிறுகதைகள்' என்று வேண்டுமானால் ஒன்று பார்த்தேன்.

 
At 7:48 PM, October 09, 2006, Blogger செல்வநாயகி said...

நல்லது தங்கமணி. உங்களுக்கு நேரம் வாய்க்கும்போது எழுதுங்கள். அவசரமில்லை.

 

Post a Comment

<< Home