நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Monday, October 09, 2006

வன்முறை வாழ்க்கை

"அப்சலைத் தூக்கில் போடச் சொல்லவேண்டும்" , அதுதான் தேசபக்தி. அப்படிச் சொல்லாதவர்கள் எல்லாம் தேசத் துரோகிகள் என்னும் அளவில் இப்போது சூடு பறக்கப் போய்க்கொண்டிருக்கின்றன நம் ஊர்வலங்கள். காரணங்கள் வேறுவேறானாலும் நம் ஊர்வலங்கள் ஒரேமாதிரியானவை. நரம்புகள் புடைக்க, வியர்வைகள் தெறிக்கத் தொண்டை
வலிக்கும் வேகத்தில் முழக்கங்களிட்டுச் செல்லும் ஊர்வலங்கள் ஒரு பாமர வழிப்போக்கனுக்கு எதுவும் கற்றுத் தருவதில்லை, அவற்றின் கோஷங்கள் உண்மையானவை என்று அப்பாமரனை நம்பச் செய்வதைத் தவிர. அப்படியானதொரு பாமரத் தன்மையுடன் இந்த அப்சல் விவகாரத்தை வாசித்துக்கொண்டிருக்கும் எனக்கு என் அவதானிப்புகளைக் கூர்மையாக்கும் புள்ளிகளைக் கொடுத்தவை ரோசாவசந்த் , பிரபுராஜதுரையின் பதிவுகள் மற்றும் சில நண்பர்களின் பின்னூட்டங்கள். என்றாலும் இதில் சொல்லிக்கொள்கிற அல்லது எழுதிக் கொள்கிறமாதிரியான கருத்து வடிவம் எதுவும் எனக்கு ஏற்படவுமில்லை. உன்னைய யாராவது இப்பக் கேட்டமாங்கறீங்களா? அதுவும் சரிதான்:))


ஆனால் நிகழ்வுகளை அவதானிப்பதால் தோன்றும் சில குறிப்புகளை எனக்காக எழுதிவைத்துக்கொள்ள இப்பதிவு. அப்சலின் மரணதண்டனையை நிறுத்தக் கோரியும், நிறைவேற்றக்கோரியும் அவரின் குடும்பத்தாரும், அரசியல்
தலைவர்களும் மாறி மாறிப் போய்ச் சனாதிபதியைச் சந்தித்துக்கொண்டிருக்கிற இந்நிகழ்வு "மரண தண்டனை" பற்றிய ஆய்வுகளையும், அதுதொடர்புடைய பலநாடுகளின் சட்டத்துறைசார்ந்த நேர், எதிர்மறைக் கட்டுரைகளையும் தேடிப் படிக்கும் ஆவலைத் தூண்டியிருக்கிறது. சுதந்திர இந்தியாவின் 54 ஆவது மரணதண்டனைக் குற்றவாளி அப்சல் என்று சொல்கிற செய்திகள், இதற்கு முன்னான மரண தண்டனை வழங்கப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையை அவர்களின் கடைசி நிமிட உணர்வுகள் வரை எங்காவது பதியப்பட்ட குறிப்புகள் இருந்து அறியமுடிந்தால் அவை சொல்லுகிற விடயங்கள் பல இருக்கலாம் என நினைக்கத் தூண்டுகின்றன. சுதந்திரம் அடைந்து அரை நூற்றாண்டு முடிந்து அறிவியலின் வெளிச்சத்தில் மனிதனின் ஆயுளைக் கூட்டிவிடுகிற அளவு வந்தும்கூட ஒரு மரணதண்டனைக்
குற்றவாளியைச் சாகடிக்க எத்தனையோ எளிய மருத்துவ வழிகள் இருந்தும், துடிக்கத் துடிக்கக் கொல்லும் குரூரத்தை விட்டொழிக்க முடியாதது ஏன்? என்ற கேள்வி ஒன்றும் பலரைப் போலவே எனக்கும் இருக்கிறது. இதையெல்லாவற்றையும்விட இந்த இக்கட்டான சூழ்நிலையில் சனாதிபதி அப்துல்கலாமின் மனநிலை என்னவாக இருக்கும்? ஒருவேளை ஏதேனுமொரு புள்ளியைக் காரணமாகக்கொண்டு அப்சலின் மரணதண்டனையை நிறுத்தும்
நிலைக்கு அவர் வந்தால் அவருக்குக் கிடைக்க இருக்கும் பட்டங்கள் பற்றிய காட்சி ஒன்றும் விரிகிறது. நிற்க.

அப்சலின் மரணத்தில் ஆர்வமுள்ளவர்கள் முன்வைக்கும் கருத்தாக்கமான "தீவிரவாதம்" எனக்குள் பல எண்ணங்களைக் கிளறிவிடுகின்றன. " தீவிரவாதம் அல்லது வன்முறை?" என்பதை எப்படி வரையறுக்கலாம்? எது வன்முறையை உருவாக்குகிறது? வன்முறையற்ற வாழ்க்கை என்ற ஒன்றை உண்மையில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோமா?
என்றெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கிறது மனது. அண்ணனின் கையை வெட்டி எடுத்து ரத்தம் ஒழுகக் காவல்நிலையம் கொண்டுபோன தம்பியைய்ப் பார்த்த அனுபவமும், கோவைகுண்டுவெடிப்பன்று திரும்புகிற பக்கமெல்லாம் வெடிச்சத்தம் கேட்க, எங்கிருந்தோ வந்துவிழுந்த கண்ணாடி மிதித்துக் காலில் செம்மை படர, எங்கு ஓடுகிறோம் என்ற
முடிவில்லாது காந்திபுரம் சாலைகளில் ஓடிக்கொண்டிருந்த அனுபவமும் அவற்றைக் கடந்தபோது அச்சம் தந்தன. அதன் ஈரம் உலர்ந்த பிறகோ "இவையெல்லாம் நடக்க என்ன காரணம்?" என்ற இடத்தில் கொண்டுவந்து விட்டுவிடுகின்றன. ரத்தம் பார்த்து மகிழ்கின்ற மனநிலை "தீவிரவாதிகள்" என்று சுட்டப்படும் மனிதர்களுக்குப் பிறவியிலேயே வரும் ஒன்றாகத் தெரியவில்லை. இந்த அப்சலுக்குக்கூட இளமை லட்சியம் "சிறந்த இருதய மருத்துவர்" ஆகவேண்டும் என்பதாக இருந்தது எனவும் அவர் மருத்துவக் கல்லூரியில் படித்துக்கொண்டும் இருந்தவர் எனவும் படிக்க நேரிட்டபோது மேற்சொன்ன விடயம் மேலும் கனக்கிறது. பைத்தியத்தைக் கல்லால் அடிக்கவும், தீவிரவாதியைத் தூக்கில் போடவும்
மட்டுமே தெரிந்து வைத்திருக்கும் சமூகம் அப்படியானவர்கள் உருவாவதற்கும் தன் பரப்பின் மீதான நிகழ்வுகள்தான் காரணமாகின்றன என்பதை உணர்ந்து கொள்ளும் முனைப்பிலும், அக்காரண அழிப்பிலும் கவனம் செலுத்தவும் உழைக்க வேண்டும்.

அம்மாவை விட்டுவிட்டு ஒரு பட்டாம்பூச்சிக்காக அதன் பின்னால் நீண்டதூரம் ஓடிவிடும் சிந்தனையற்ற ஒரு குழந்தையிடம்கூட வன்முறை துளிர்க்கும் சூழல் அதற்கான ஏதோ ஒன்று மறுக்கப்பட்ட இடமாக இருக்கிறது. கையில் கிடைப்பதைத் தூக்கிவீசி எதிர்ப்பைக்காட்டும் குழந்தையின் செயலை நாம் வன்முறை என்போம். அதற்கானதை நாம் மறுத்ததே வன்முறை என நினைக்கும் குழந்தை. இவையிரண்டும் சந்திக்கிற சூழலில், அக்குழந்தை தன் வன்முறையை விட்டுவிடுவதோ அல்லது தொடர்வதோ அந்தக் குழந்தையின் கைகளில் இல்லாமல் அச்சூழலின் கைகளில்தான் இருக்கிறது. தனிமனிதர்களும் "தீவிரவாதிகள்" என்று சொல்லப்படுபவர்களாக ஆவது இதன் நீட்சியாக இருக்குமோ?

இவைதவிரவும் இன்னொன்று இந்நேரத்தில் நினைத்துக்கொள்வது, மனித உயிர்களைக் கொன்றவன் மட்டுமே வன்முறையாளன் என்ற அளவுகோல். உயிரை மட்டும் விட்டுவிட்டு இன்னொரு மனிதனின் உணர்வுகளை, உரிமைகளைக் கொல்வதற்குப் பெயர் என்ன சொல்வது? அப்படிக் கொன்று அவர்களைச் சாதியின் பெயரால் தீண்டத்தகாதவர்கள்
ஆக்கி வைத்திருந்த சமூகத்தில், அவர்களை அப்படி ஆக்கியவர்களெல்லாம் வன்முறையாளர்கள் இல்லையா? கல்வியும் பொருளாதாரமும் மறுக்கப்பட்டு ஆணின் சேவகியாக மட்டும் இருக்கப் பணிக்கப்பட்டிருந்த சமூகத்தில் ஆயிரக்கணக்கான
பெண்கள் அதிலேயே மூழ்கி மடிந்தார்களே அது அவர்கள்மீதான வன்முறையில்லையா? சாதாரண மனிதனுக்கு உண்மை மறைக்கப்பட்டு அல்லது உண்மையை அறிந்துகொள்வதற்கான வாய்ப்பே மறுக்கப்பட்டுவிடும் போலிக் கருத்தியல்
வன்முறை இல்லையா? வாழ்வின் பல இடுக்குகளிலும் உட்கார்ந்து பல்லிளிக்கும் வன்முறையைக் கட்டியணைத்துக்கொண்டே வீதியில் ஆடும் வன்முறையை மட்டும் ஒழித்து விடமுடியுமா?

தீவிரவாதத்தை ஒழிப்பது என்பது அப்சல்களை அழிப்பதால் நடந்துவிடும் என்று சொல்லிவிடமுடியாது. இன்னும் சில அப்சல்களைக்கூட அது உருவாக்கிவிடலாம். அப்சல்கள் உருவாவதற்கான காரணங்களை அழிப்பதுதான் தீவிரவாதத்தை
அழிக்க உண்மையிலெயே உதவுபவையாக இருக்க முடியும். அப்சலின் மரணமோ, இருப்போ இரண்டுமே நமக்கு நிறையச் சொல்லும் வலிமையுடையவை நாம் கற்றுக்கொள்ளத் தயாராகும்போது.

27 Comments:

At 8:18 AM, October 09, 2006, Blogger Muthu said...

செல்வநாயகி,

நீங்கள் என்ன பெண் தீவிரவாதியா?

 
At 8:26 AM, October 09, 2006, Blogger இரா. செல்வராசு (R.Selvaraj) said...

செல்வநாயகி, நல்ல பதிவு. முக்கியமான புள்ளிகளை நேர்த்தியாகத் தொட்டுச் சென்றிருக்கிறீர்கள்.

ஒரு முதிர்ந்த குமுகாயத்தில் மரணதண்டனை என்று ஒருவரின் உயிரைப் பறிப்பது சரியெனப் படவில்லை. (அப்சல் வழக்கு பற்றி நான் எதையும் அறிந்திருக்கவில்லை).

பிரபு சொல்லியிருந்தபடி தண்டனை என்பது பழிவாங்க என்பதல்லாமல் குற்றவாளியைத் திருந்தி வாழ வைக்க என்று பார்ப்பதே வளர்ச்சியாகத் தோன்றுகிறது. வன்முறையைத் தண்டிப்பதை விட அதன் ஊற்றுக் காரணங்களைக் கண்டறிந்து களையவல்லவா முற்படவேண்டும் என்னும் உங்களின் சிந்தனையும் அதனை ஒட்டியே அமைந்திருக்கிறது. ஆமோதிக்கிறேன்.

 
At 8:29 AM, October 09, 2006, Blogger பத்மா அர்விந்த் said...

செல்வநாயகி
இது குறித்து கருத்து எதுவும் எழுதவோ பேசவோ கூடாது என்றிருந்தேன். தீவிரவாதிகள் (அப்படி சொல்வது கூட தவறு ஏனென்றால் ஒரு சமயம் தீவிரவாதிகளாக இருப்பவர்கல் இன்னொரு கூட்டத்திற்கு தியாகிகளாகவும் இருக்கிறார்கல், பிறிதொரு சமயத்தில் எல்லாருக்குமே தியாகிகளாகிறார்கள்)சமுதாயத்தால் உருவாக்கப்படுகிறார்கள். பிடிபட்டு கொள்கிரவனுக்கு தண்டனை, ஆனால் அதற்கு பின்னால் திட்டமிடுபவர்களுக்கும் சரியாக கண்கானிக்காமல் தவறிவிட்ட உளவுத்துறைக்கும் ஏன் தண்டனை இல்லை?இறந்து போன உயிர்களுக்கு அவர்களும் காரணம் இல்லையா? எல்லா சமுதாயத்திலுமமிறந்து போகிற அல்லது இறக்கபோகிற ஒருவனின் அதிகாரம், பணபலம் சமுதாய அந்தஸ்து இன்னபிறவையே தண்டனையை தீர்மானிக்கின்றன. சட்டமும் சமமாக எந்த சமுதாயத்திலும் இல்லை அது அமெரிக்காவானலும் சரி இந்தியாவானாலும் சரி.நீங்கள் சொல்வதுபோல சமுதாயத்திற்கும் இதில் பங்கு இருக்கிறது.

 
At 8:36 AM, October 09, 2006, Blogger Muthu said...

என்னுடைய கிண்டலான பின்னூட்டம் கிண்டல் என்ற அளவிலே புரிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

செல்வாவின் பின்னூட்டத்தை பார்த்தவுடன் தோன்றியது. வன்முறையின் காரணங்களை கண்டறிந்து அதை ஒழுங்குப்படுத்துவது தான் நாகரீக சமுதாயத்தின் கடமை.உண்மையான கருத்து.

அதைத்தான் ஒரு பொறுப்புணர்வுள்ள குடிமகன் வலியுறுத்துவான்.இழப்புகள் இருக்கின்றன.இல்லை என்று சொல்லவிலலை.ஆனால் நிரந்தர தீர்வை நோக்கி நகர்வது தான் புத்திசாலித்தனம்.

 
At 8:49 AM, October 09, 2006, Blogger அருள் குமார் said...

வன்முறை, தீவிரவாதம் இதையெல்லாம் தாண்டி இது நம் பாதுகாப்பு சம்பந்தப்படதாக எனக்குத் தோன்றுகிறது. எதையுமே ஒரு நடுநிலமையில் அணுகமுடியாது. ஏதோ ஒரு பக்கம் சார்ந்தே இருக்கவேண்டியுள்ளது. அப்சலை தூக்கில் போடுவது மேலும் சில அப்சல்களை உருவாக்கலாம் என நீங்கள் நினைப்பதைவிட, மரணதண்டனையை ரத்து செய்வது என்பது அவர்களை இன்னும் தீவிரமாக செயலாற்றவைக்கும் என்பது என் எண்ணம். 'என்ன செய்தாலும், எத்தனை குண்டு வெடித்தாலும் நம் உயிருக்கு ஒன்றும் பாதமில்லை' என அவர்களுக்குத் தோன்றாதா?

போர்க்களத்தில் எதிரிகளை அழிப்பதையும் நாம் அழிக்கப்படுவதையும் விட பெரிய வன்முறை வேறு என்னவாக இருக்கமுடியும்?! இதே அப்சல், நம் எதிரியாக வந்து, போர்க்களத்தில் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தால் இந்த கேள்வியே வந்திருக்காது! வன்முறை தீவிரவாதம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்க மாட்டோம்!

அப்சல் செய்தது ஒரு வன்முறை என்றால், அப்சலை தூக்கில் போடுவது என்பது நம் அரசின் வன்முறை. ஆனாலும், நம் பாதுகாப்பு வேண்டி அது தேவையாகவே இருக்கிறது! வன்முறை என்பது, நமது மற்ற அனைத்து உணர்வுகளைப்போன்ற இயல்பு. நமது இருப்புக்கான பாதிப்பு வரும்போது, வன்முறை நிச்சயம் பயன்படுத்தப்படும்.

அப்சலை தூக்கில் போடக்கூடாது என்கிற வாதம், ஒரு இந்திய இரானுவ வீரனுக்கு எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என யோசித்துப்பருங்களேன்!

 
At 10:07 AM, October 09, 2006, Blogger Thekkikattan|தெகா said...

நாயகி,

//சமூகம் அப்படியானவர்கள் உருவாவதற்கும் தன் பரப்பின் மீதான நிகழ்வுகள்தான் காரணமாகின்றன என்பதை உணர்ந்து கொள்ளும் முனைப்பிலும், அக்காரண அழிப்பிலும் கவனம் செலுத்தவும் உழைக்க வேண்டும்.//

உங்களின் பாணியில் மிகவும் சென்சிடிவான ஒரு விசயத்தை ரொம்பவும் கவனத்துடன் அணுகி அதன் கருவினை தொட்டுச் சென்றீருக்கிறீர்கள். நன்றாக வந்திருக்கிறது.

எனக்கும் இது போன்ற எண்ண வெளிப்பாடுகள் வந்து போவதுண்டு, இங்கு அமெரிக்காவில் பள்ளிகளிலும் (சூட்டீங்), தெருக்களிலும் நடக்கும் ஸ்னைப்பர் சூட்டீங் என்றழைக்கப்படும் நிகழ்சிகளின் போதும், தொடர் கொலைகளின் போதும், சமூகம் அச் சம்பவம் நடதியவரைப் பற்றி மேலோட்டமான, சில நேரங்களில் புனையப் பட்ட கருத்துக்களையே ஊடகங்களின் வாயிலாக கொடுத்து, தீவிரவாதமென அறிவித்து கண்டிப்பாக அச் செயலில் இறங்கியவருக்கும் சாவு நாற்காலியோ அல்லது சாவு படுக்கையையோ கொடுத்து கொளரவித்து விடுகிறது. அதற்கென்ற தீர்வு எங்கிருந்து கொண்டுவருவது என்ற பொது பிரக்ஞை இல்லாமலேயே.

இருப்பினும் ஒவ்வொரு சூழல் நடக்கும் பொழுதும் சற்று அந்த நிகழ்சியை நடத்தியவரின் பின்புலத்தை ஆராய்ந்தால், அவர் அதுபோல நடந்து கொண்டதற்கு இந்தச் சமூதாயமே முழுப் பொருப்பாய் இருப்பது வெட்ட வெளிச்சாமாய் இருக்கிறது. எனக்கும் அது போன்ற ஒவ்வொரு சமயத்திலும் தோன்றச் செய்யும், எது எதுக்கோ பணத்தை செலவழித்து ஆராய்ச்சி செய்யும் இந்த அமெரிக்கா அது போன்ற கொலையாளிகளின் பின்புலத்தை ஆராய்ந்து அதற்கு காரணமாக இருந்த இந்த சமூக அவலத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவர ஏன் தயங்குகிறது.

அது போன்ற தருனங்கள் குடும்பங்களின் இன்றியமையாத் தேவையையும், குழந்தை பருவத்தில் பெற்றோர்களின் பங்கு எந்த அளவிற்கு பிற்காலத்தில் அக் குழந்தைகளுக்கு இந்த சமூகத்தை அணுகுவதற்கு உதவியாய் இருக்கிறது என்பதனையும் எடுத்துக் கூறி மக்களிடத்தே ஒரு விழிப்புணர்வை ஊட்டுவதற்கு அருமையான தருனங்கள் அல்லாவா, என எண்ணச் செய்தன.

ஆனால், அச் சமயத்தில் அது போன்றது முறையில் அணுகினால் அந்த கொலையாளிக்கு தப்பித்துக் கொள்ள சாதகமாக அமைந்து விடுமென்பதினால் அது போன்ற அணுகு முறை பயன்படுத்தப் படுவதில்லை போலும். அப்படி இருப்பினும், அது போன்றதொரு அணுகு முறை மக்களிடத்தே ஒரு சரியான விழிப்புணர்வை இட்டுச் செல்வதில்லை என்பதனை ஏன் இந்த வளர்ந்த ஜன்மங்கள் புரிந்து கொள்வதில்லை.

உதாரணத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு மேரிலாண்ட் மாநிலத்தில் நடந்த ஸ்னைப்பர் சூட்டிங்கை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஸ்னைப்பரும் நல்ல படிப்பும், பொருப்பான பதவியும் வகித்தவர்தான் ஆனால் எந்த சூழ்நிலை அவரின் வாழ்கையை ஒரு பொருளாற்றதாக எண்ணத் தோன்றி இப்படி ஒரு இரண்டு வாரங்களுக்கு "கொலை வெறியுடன்" அழைந்து 10க்கும் மேற்பட்டடோரை சூரையாடினார். அதன் பின்புலத்தில் சமூக சீர்கேடே முன் நின்றது. ஆனால், மீடியாக்கள் தனக்கு வேண்டியதை ஜோடனை செய்து, மக்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து விட்டு அமுங்கிப் போனது.

விளைவு, இன்னும் இது போன்ற உடைந்து, விலகிப் போய்க் கொண்டிருக்கக் கூடிய குடும்பம் என்கிற கட்டமைப்பு, மனிதர்கள் தனித்தனியாக தீவுகளாக வாழும் அவலம் இத்தியாதிகள். இதுவான, காரணத்தை விட்டுவிட்டு, விளைவுக்கு மட்டுமே வைத்தியம் செய்யும் தவறான அணுகுமுறை. மென்மேலும் அது போன்ற துர்சம்பவங்கள் நடைபெற காரணமாய் அமைந்துவிடுகின்றன.

தாங்கள் கூற வரும் சங்கதிக்கும், இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறாதா? இருக்கும் என்றே கருதுகிறேன். எங்கிருந்து கிளம்புகிறது இந்த தீவிரவாதம்? யார் இதற்குப் பொருப்பாளிகள்...? தீவிரவாதத்தை தீவிரவாதம் கொண்டு அணைத்துவிட முடியுமா? அல்லது தீவிரவாதற்கு மிதவாதம்தான் ஒரு எதிர்த்தீயா (எது ஒரு சரியான Antidote)...?

இப்பொழுது ஒரு உலகம் தழுவிய தீவிரவாதியை சரியானதொரு அணுகுமுறையுடன் அதனை கையாளாமல் ஜஸ்ட் அவனை துடைத்தெறிந்துவிட்டால், நாளை அதுபோல நூறு தீவிரவாதி உருவாக வழி வகுக்காது என்பது என்ன நிச்சயம்? இதில் எந்த அணுகுமுறை சரியான அணுகுமுறை பயத்தை மூட்டி தற்காலிகமான முறையில் பிரட்சினைக்கு தீர்வுகாண்பதா அல்லது மொத்த சமூதாயத்தையே ஒரு விழிப்பு நிலைக்கு எடுத்துச் சென்று காரண, காரணியை கண்டறிந்து அதற்கென நிறந்தர தீர்வு காண்பதா?

கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற நியதி நிறந்தர தீர்வைக் கொணர முடியுமா? முடியும், தற்காலிகமாக அதற்கும் ஒரு கேஸ் வால்வ் போட்டு.

இப்பொழுது நடந்து கொண்டிருக்கிற தேசம் சார்ந்த நிகழ்வுகள் என்ற பிரக்ஞை அற்ற முறையில் இந்த விசயத்தை அணுகி, ஒரு தனிப்பட்ட மனிதன் என்ற நிலையில் இவ் விசயத்தை அணுமும் பொழுது எனக்கு தோன்றும் சிந்தனையே இவைகள்...

//அப்படிக் கொன்று அவர்களைச் சாதியின் பெயரால் தீண்டத்தகாதவர்கள் ஆக்கி வைத்திருந்த சமூகத்தில், அவர்களை அப்படி ஆக்கியவர்களெல்லாம் வன்முறையாளர்கள் இல்லையா?//

ஹும், யாரும் பிறக்கும் பொழுதுதே தீவிரவாதியாகி தன் வாழ்வை தொலைத்துக் கொள்ள வேண்டுமென்று கங்கனம் கட்டிக் கொண்டு பிறப்பது கிடையாதே. தன் வாழும் சமூக கட்டமைப்பே வழி நடத்தி, அவரை அந் நிலைக்கு இட்டுச் செல்கிறது எனக் கொள்ளாலாமா??

பி.கு: நாயகி, இதனையே தாங்களின் பதிவை மேற்கோல் காட்டி தனிபதிவாக போடுவதாக உத்தோசித்துள்ளேன்... தவறாக எண்ண வேண்டாம். செய்தி போய்ச் சேர்ந்தால் சரிதான். :-)

 
At 10:29 AM, October 09, 2006, Blogger செல்வநாயகி said...

மறுமொழியிட்ட நண்பர்களுக்கு நன்றி.

முத்து உங்களின் முதல் பின்னூட்டம் புரிந்துகொள்ளப்பட்டது:))

பத்மா,
நீங்கள் முன்பொருமுறை தீவிரவாதி ஒருவரைச் சந்தித்த அனுபவத்தை எழுதியிருந்ததாக நினைவு. பொதுவாய் இதுமாதிரி மனிதர்களை நிந்தனை செய்வதோடு நின்றுபோய்விடுகிறது சமூகம். அவர்களை உருவாக்குகிற சூழல்களைக் கணக்கிலெடுக்கிறபோது மேலும் சிலவேலைகள் செய்யவேண்டியது தெரியவரும்.

அருள்குமார்,
உங்களின் மாற்றுக்கருத்துக்களை வரவேற்கிறேன்.

இந்தப் பதிவில் அப்சலின் மரணதண்டனை சரியா, சரியில்லையா என்கிற என் முடிவை நான் எங்குமே எழுதவில்லை. அது பற்றிய முடிவுக்கு வர அப்சலுக்கு மட்டுமில்லை, வேறெந்தக் குற்றவாளிக்கானாலும்சரி நான் இன்னும் நிறையத் தெரிந்துகொள்ள இருக்கிறது என்பதை எழுதியே இருக்கிறேன்.

அப்சல் அலியின் மரணதண்டனை குறித்துப் பேசுபவர்களையெல்லாம் தேசபக்தன், தேசத்துரோகி என்று வகைபிரித்து ஒவ்வொருவருக்கும் சான்றிதழ் வழங்குவதைவிட அப்சல் அலி போன்றோரின் உருவாக்கத்திற்கான காரணங்களையும், அவை களையமுடிவதற்கான சாத்தியங்களையும் சிந்திப்பதும் அவசியமென்பதை முடிந்தவரை சுட்டவே இப்பதிவு.

வன்முறை, தீவிரவாதம் என்பதைத் தாண்டிய நாட்டின் பாதுகாப்பு என்கிறீர்கள். ஒரு நாட்டின் பாதுகாப்பு மக்கள்வளம் சார்ந்தும் அமைகிறது. அம்மக்களிலிருந்தே அப்சல்கள் உருவாகிறபோது அப்சல்களை அழித்து அழித்தே அவர்களை இல்லாமல் செய்வதைவிடவும், அவர்கள் உருவாகும் இடத்தின்மீது கவனம் செலுத்துவதும் தேவைதானே?

/// போர்க்களத்தில் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தால் இந்த கேள்வியே வந்திருக்காது! வன்முறை தீவிரவாதம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்க மாட்டோம்!///

என்னங்க அருள் இப்படிச் சொல்லீட்டீங்க? போரைவிடவும் ஒரு வன்முறையும், தீவிரவாதமும் இருக்கிறதா மனிதகுலத்தில்?

//ஒரு இந்திய இரானுவ வீரனுக்கு எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என யோசித்துப்பருங்களேன்! ///


சடாரென்று இந்த ஆயுதத்தைக் காட்டிப் பேசுவதுதான் இதற்கான ஒரே தீர்வாக இருக்கமுடியுமா அருள்? தேசத்திற்காய்த் தம்மை வருத்திக்கொள்ளும் இராணுவ வீரர்களின் பணி மகத்தானது. அவர்களின் இழப்புக்களும் வலிகளும் நானும் உணர்ந்தே இருக்கிறேன். ஆனால் இப்பதிவில் அப்சல் என்ற தீவிரவாதியாகச் சுட்டப்படும் ஒரு மரணதண்டனைக் கைதியின் நிலைபற்றி நான் எழுதியிருக்கும் குறிப்புகள் முற்றிலும் வேறுகோணம். அதில் இராணுவவீரர்களை சம்பந்தப்படுத்திப் பேசினால் அது நான் அழைக்கும் இடத்திற்கு உங்களைக் கொண்டுவந்து சேர்க்காது:))

 
At 10:34 AM, October 09, 2006, Blogger செல்வநாயகி said...

தெக்கிக்காட்டான்,
உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி. பதிவுதானே போடுங்க போடுங்க:))

 
At 10:37 AM, October 09, 2006, Blogger -/சுடலை மாடன்/- said...

//செல்வநாயகி: பைத்தியத்தைக் கல்லால் அடிக்கவும், தீவிரவாதியைத் தூக்கில் போடவும்
மட்டுமே தெரிந்து வைத்திருக்கும் சமூகம் அப்படியானவர்கள் உருவாவதற்கும் தன் பரப்பின் மீதான நிகழ்வுகள்தான் காரணமாகின்றன என்பதை உணர்ந்து கொள்ளும் முனைப்பிலும், அக்காரண அழிப்பிலும் கவனம் செலுத்தவும் உழைக்க வேண்டும்.//

//பத்மா: தீவிரவாதிகள் (அப்படி சொல்வது கூட தவறு ஏனென்றால் ஒரு சமயம் தீவிரவாதிகளாக இருப்பவர்கல் இன்னொரு கூட்டத்திற்கு தியாகிகளாகவும் இருக்கிறார்கல், பிறிதொரு சமயத்தில் எல்லாருக்குமே தியாகிகளாகிறார்கள்)சமுதாயத்தால் உருவாக்கப்படுகிறார்கள்.//

செல்வநாயகி, பத்மா - சிந்திக்க வைக்கும் வரிகள். ஆனால் உறைந்து போன சிந்தனைகளைக் கொண்ட அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும், அதிகார மனோபாவம் கொண்டிருப்போருக்கும் உரைக்காது.

2001 செப்டம்பர் 11 தாக்குதல் நடந்த அன்று அமெரிக்க வானொலி நிகழ்ச்சியில் அழைத்த ஒரு குடும்பத் தலைவி சொன்னது நினைவில் வருகிறது. "நான் சாதாரண குடும்பத் தலைவி, எனக்கு என்னைச் சுற்றி இருப்பவர்களையும், நிகழ்வுகளையும் மட்டுமே தெரியும். உலகத்தை பற்றி எதுவும் தெரியாது. ஆனால் என் உணர்வுக்குத் தோன்றுகிறது ஒன்றே ஒன்று. வேற்று நாட்டைச் சேர்ந்த சிலர் இந்த அளவுக்கு ஒரு கொடூரத்தைச் நமக்குச் செய்யத் தூண்டியிருக்கிறது என்றால் அதை நான் முழுக்க அவர்களது தவறு மட்டுமே என்று நினைக்க வில்லை. என் நாட்டின் அரசும் அவர்களுக்கு கொஞ்சமாவது கொடுமைகளைச் செய்திருக்கக் கூடும். இதுவரை அதைப் பற்றியெல்லாம் அக்கறையில்லாத நான் இனி வாழும் நாட்களில் அவற்றைத் தெரிந்து கொள்ள எல்லா வழிகளிலும் முயல்வேன்" என்றார்.

அந்தப் பெண்மணி யாரென்று எனக்குத் தெரியாது. இன்று ஐந்து ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில் அவர் பாதுகாப்பு-தேசபக்தி என்ற வெளிப்போர்வையின் பேரால் திரை மறைவில் நடக்கும் அயோக்கியத்தனங்களை அறிந்து நிம்மதியான தூக்கத்தை இழந்திருப்பார் என்று மட்டும் அறிவேன். இலங்கையின் 83 ஜூலை கலவரங்களுக்குப் பிறகு உண்மையைத் தெரிந்து கொள்ள விழைந்த என்னுடைய நிலையும் அதுதானே.

இதில் கசப்பானதென்னவென்றால், எல்லா நாட்டு அரசுகளும், ஆளும் வர்க்கமும், அவர்களின் அடக்கு முறையை எதிர்க்க முளைத்த போராளி இயக்கங்களும் வன்முறை-பயங்கரவாதம் என்ற புள்ளியில் மட்டும் ஒன்றிணைவார்கள். ஆனால் அரசாங்கங்களும், அதிகார வர்க்கமும் மட்டும் அமைதி-பேச்சுவார்த்தை-அகிம்சை-தேசபக்தி போன்ற பம்மாத்து நாடகங்களைத் தொடர்ந்து நடத்திக் கொண்டேயிருப்பதால் பெருவாரியான மக்களை மூளை மழுக்கி தம்முடன் வைத்துக் கொள்ள முடிகிறது. அதே மாதிரியான தந்திரங்களை புலிகள் போன்ற இயக்கங்கள் கையாளும் போது மட்டும் இந்துப் பத்திரிகை போன்ற அதிகாரவர்க்க ஊடகங்கள், "புலிகள் நாடகம் ஆடுகிறார்கள்" என்று ஊளையிட்டுக் கொண்டேயிருப்பார்கள்.

நன்றி - சொ. சங்கரபாண்டி

 
At 10:40 AM, October 09, 2006, Blogger Muthu said...

//அப்சல் அலியின் மரணதண்டனை குறித்துப் பேசுபவர்களையெல்லாம் தேசபக்தன், தேசத்துரோகி என்று வகைபிரித்து ஒவ்வொருவருக்கும் சான்றிதழ் வழங்குவதைவிட அப்சல் அலி போன்றோரின் உருவாக்கத்திற்கான காரணங்களையும், அவை களையமுடிவதற்கான சாத்தியங்களையும் சிந்திப்பதும் அவசியமென்பதை முடிந்தவரை சுட்டவே இப்பதிவு//


not only arul...this issue confused lot of people.

thing is that we all are thinking that we are impartial..impartial to what?..

 
At 10:48 AM, October 09, 2006, Blogger அருள் குமார் said...

செல்வநாயகி,
உங்கள் பதிவை முற்றிலும் புரிந்துகொண்டுதான் அந்த பின்னுட்டம் எழுதினேன். எனக்கும் உங்கள் கருத்துதான். அதில் மாற்றமில்லை.

//என்னங்க அருள் இப்படிச் சொல்லீட்டீங்க? போரைவிடவும் ஒரு வன்முறையும், தீவிரவாதமும் இருக்கிறதா மனிதகுலத்தில்? //

இதையேதான் நானும் சொல்லியிருக்கிறேன்.

//அம்மக்களிலிருந்தே அப்சல்கள் உருவாகிறபோது அப்சல்களை அழித்து அழித்தே அவர்களை இல்லாமல் செய்வதைவிடவும், அவர்கள் உருவாகும் இடத்தின்மீது கவனம் செலுத்துவதும் தேவைதானே?//

மிகச்சரி. எனது கருத்தும் இதுதான். ஆனால் இப்போது நிகந்துவிட்ட சிலவற்றுக்கு நாம் உடனடியாக சில எதிரிவினைகள் செய்யவேண்டியது மிக அவசியம் எனத் தோன்றுகிறது.

ஒருவகையில், எந்த மனிதனின் எந்த தவறுக்கும் இந்த சமூகம் தான் காரணம். அதற்காக தண்டனை இல்லாமல் இருந்தால் சரிவருமா? அப்படி அவர்கள் மாறியதற்கான சூழலை மாற்ற வேண்டியது அரசின் கடமைதான். ஆனால் தண்டிக்கமலும் இருக்க முடியாதே!

//சடாரென்று இந்த ஆயுதத்தைக் காட்டிப் பேசுவதுதான் இதற்கான ஒரே தீர்வாக இருக்கமுடியுமா அருள்? //
இது ஓரே தீர்வென்று சொல்லவில்லை. இது உடனடி எதிர்வினை என்றே சொல்கிறேன்.

//அப்சல் அலி போன்றோரின் உருவாக்கத்திற்கான காரணங்களையும், அவை களையமுடிவதற்கான சாத்தியங்களையும் சிந்திப்பதும் அவசியமென்பதை முடிந்தவரை சுட்டவே இப்பதிவு. //

இதை முற்றிலும் புரிந்து ஏற்றே இருக்கிறேன் :)

 
At 10:53 AM, October 09, 2006, Blogger அருள் குமார் said...

முத்து,
அப்சல் அலியின் மரணதண்டனை குறித்துப் பேசுபவர்களையெல்லாம் தேசபக்தன், தேசத்துரோகி என்று வகைபிரித்து ஒவ்வொருவருக்கும் சான்றிதழ் வழங்குவதில் எனக்கும் உடன்பாடு இல்லைதான்.

அப்சல் அலி போன்றோரின் உருவாக்கத்திற்கான காரணங்களையும், அவை களையமுடிவதற்கான சாத்தியங்களையும் சிந்திப்பதும் அவசியமென்பதும் புரிந்தே இருகிறது. அவை மெதுவாகவே நிகழத்தக்க மாற்றங்கள். ஆனால் உடனடியாக நாம் இதற்கு செய்யவேண்டிய சில எதிர்வினைகளை செய்யத்தானே வேண்டும்?

 
At 11:14 AM, October 09, 2006, Blogger Sivabalan said...

செல்வநாயகி,

நல்ல பதிவு.

பதிவுக்கு நன்றி.

 
At 11:48 AM, October 09, 2006, Blogger Thekkikattan|தெகா said...

உங்களின் பெரிய மனச என்னன்னு சொல்றதுங்கோ :-)) இங்க ஒரு இலவச விளம்பரப் பலகை வைச்சுட்டுப்பேறேன்... தூக்கி தூரப் போட்டுடாதீங்க.

நண்பர்களே இதற்கு தொடர்பான மற்றுமொரு பதிவு வன்முறை வாழ்கைக்கு யார் பொறுப்பு...?

 
At 12:19 PM, October 09, 2006, Blogger செல்வநாயகி said...

அருள்குமார்,

உங்கள் விளக்கங்கள் பிடித்திருக்கின்றன. ஒரு விடயத்தை மாற்றுக்கருத்துக்களோடும் இப்படிப் பகிர்ந்துகொள்ள முடிவதே நல்லது.

சுடலைமாடன்,

நீங்கள் சொல்லும் அந்தப் பெண்மணியின் பதிலில் உள்ள முதிர்ச்சியை உணரமுடிகிறது. அறியத் தந்தமைக்கு நன்றி.

தெக்கிக்காட்டான்,
///உங்களின் பெரிய மனச என்னன்னு சொல்றதுங்கோ :-)) /////

நீங்க இப்படியெல்லாம் சொல்லலைன்னாலும் நான் தூக்கிப் போடமாட்டேன்:))

சிவபாலன் நன்றி.

 
At 12:20 PM, October 09, 2006, Blogger குழலி / Kuzhali said...

என் பங்குக்கு இங்கே

http://kuzhali.blogspot.com/2006/10/blog-post_09.html

 
At 12:57 PM, October 09, 2006, Blogger செல்வநாயகி said...

குழலி,

உங்களின் அப்சல், பகத்சிங் ஒப்பீடு என்னால் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது. எப்படி அப்படியொரு ஒப்பீடு செய்யமுடிந்தது என்று நினைத்துக் கொண்டேன். இது புதுப் பதிவென நினைக்கிறேன். அறியச் சுட்டியை இங்கிட்டமைக்கு நன்றி. படித்துப் பார்க்கிறேன்.

 
At 2:08 PM, October 09, 2006, Blogger மலைநாடான் said...

செல்வநாயகி!
நல்லதோர் நோக்கு. அருமையாகப் பதிவு செய்திருக்கிறீர்கள்.
வாதப்பிரதிவாதக் கருத்துக்களும் அருமையாக உள்ளன
பாராட்டுக்கள்.

 
At 7:50 PM, October 09, 2006, Blogger செல்வநாயகி said...

நன்றி மலைநாடான்.

 
At 1:29 AM, October 11, 2006, Blogger senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

நான் அப்சல் மரண தண்டனை குறித்து படித்த பதிவுகளிலேயே ஒரு தொலை நோக்கு பார்வையோட எழுதப் பட்ட பதிவில் இது.

அப்சல் என்ன பிறக்கும் பொழுதே குண்டு வீசுபவர்களுக்கு துணை புரிய வேண்டும் என்று கங்கணம் கட்டுக் கொண்டு பிறந்தானா இல்லை அவன் வாழ்க்கையின் லட்சியமே இதுதானா?

அவன் செய்தான் அவனை தூக்கில் இட வேண்டும் என்று துடிப்பவர்கள் அவன் செய்ததற்கு பின்னால் என்ன காரணம் இருக்கிறது ஏன் இது போன்ற குற்றவாளிகள் உருவாகுகின்றனர் என்பதைப் பேசாமல் ஏன் தண்டனை கிடைக்க வேண்டுமா இல்லையா என்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்?

குற்றங்கள் களையப் பட வேண்டியது முக்கியமா இல்லை குற்றவாளிகளா?

இதில் காட்டும் தீவிரத்தையும் ஆர்வத்தையும் பிரச்சனைகளை களைய ஏன் காட்ட மாட்டேன் என்கிறார்கள்.

http://gandhiyam.blogspot.com/2006/10/blog-post_10.html

இந்தப் பதிவில் மணிப்பூரில் நடக்கும் பிரச்சனைகளைப் பற்றி எழுதப் பட்டிருக்கிறது. மனோரமா என்ற பெண்ணின் கற்பழிப்பின் பொழுது விவாதிக்கப் பட்ட அளவுக்கு இப்பொழுது இது விவாதிக்கப் படுவதில்லை இது குறித்து விழிப்புணர்ச்சியும் இல்லை.

ஏனெனில் இதில் sensation என்பது குறைவாக உள்ளது.

கடைசியாக அப்சலை தூக்கில் இட வேண்டும் என்பது தான் என் கருத்து ஆனால் அந்தத் தூக்கு தண்டனை சமூக அவமான கருதப்பட்டு பிரச்சனைகளை களைய நடவடிக்கைகள் எடுக்கப் பட வேண்டும்.

 
At 10:19 AM, October 11, 2006, Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

I hope in the next post you will argue that AlQueida and Bin Laden
should not be punished.Using your 'logic' you could even ask whether Hitler should be blamed
for genocide and .If you go ahead and argue so, and you will find enough supporters among tamil bloggers.

 
At 10:23 AM, October 11, 2006, Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

நீங்கள் சொல்வதுபோல சமுதாயத்திற்கும் இதில் பங்கு இருக்கிறது.

Blame everything on society including cross border terrorism
supported by Pakistan.I am getting sick of such bland assertions ( நீங்கள் சொல்வதுபோல சமுதாயத்திற்கும் இதில் பங்கு இருக்கிறது.
by persons
who refuse to see that terrorism
is a real danger in India.

 
At 12:18 PM, October 11, 2006, Blogger senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

///
by persons
who refuse to see that terrorism
is a real danger in India.
///
atleast according to me terrorism is the biggest threat not only to india but to human kind. but speaking about whether we have to hang afsal and giving the amount of hype we give to it will not solve problems instead will spur it further. please do understand what one is trying to say before condemning things said by some one. we should be using the passion which we show here and resolve issues which causes terrorisms. if terrorism is eradicated so will terrorist. the real issues should be centered around that.

 
At 4:10 PM, October 11, 2006, Blogger செல்வநாயகி said...

ரவிஸ்ரீனிவாஸ்,

///by persons
who refuse to see that terrorism
is a real danger in India. ///
இன்னும் நாள் இருக்குது. சீக்கிரமாவே இங்கிருந்து ஒரு பட்டியல் தயார் பண்ணிக்கொண்டுபோய்க் கொடுங்க. "அப்சலைத் தூக்கில் போட்டால் மட்டும் போதாது. இதோ அப்சலின் நிலை பற்றிய மாற்றுப்பார்வைகளை எழுதிக்கொண்டிருக்கிற இவர்களெல்லோராலும் இந்தியாவுக்குப் பேராபத்து வந்துகொண்டிருக்கிறது, எனவே இவர்களையும் தூக்கில் போடவேண்டும்" எனச் சொல்லி. அதில் மறக்காம என் பெயரையும் எழுதிடுங்க. அப்பறமா நான் அடுத்து அல்கொய்தா பற்றி எழுதுவனா இல்லை ஹிட்லர் பற்றி எழுதுவனா என்று சோசியம் பார்க்கவேண்டிய வேலையெல்லாம் உங்களுக்குக் குறைஞ்சிரும் பாருங்க:))

மன்னிக்கவும் ரவிஸ்ரீனிவாஸ். பதிவு எதைப் பேசவருகிறது என்பதைவிட்டு வெகுதூரம் விலகிநின்று கருத்துச் சொல்கிறவர்களோடு பேச எனக்குப் பெரும்பாலும் மொழி வசப்படுவதில்லை. நன்றி.

குமரன் எண்ணம்,
உங்கள் கருத்துப் பகிர்வுக்கும், ரவிக்குப் பதில்சொல்ல முடிந்த பொறுமைக்கும் நன்றி. பலபதிவுகளிலும் உங்களின் பின்னூட்டங்களை வாசிக்க நேரிடும் எனக்குச் சிலவிடயங்களில் உங்களின் வித்தியாசமான அணுகுமுறை பிடித்தும், நான் அறியாத ஒன்றை அறியத் தருவதாகவும் இருந்திருக்கிறது.

 
At 5:52 AM, December 12, 2006, Blogger அசுரன் said...

//அம்மாவை விட்டுவிட்டு ஒரு பட்டாம்பூச்சிக்காக அதன் பின்னால் நீண்டதூரம் ஓடிவிடும் சிந்தனையற்ற ஒரு குழந்தையிடம்கூட வன்முறை துளிர்க்கும் சூழல் அதற்கான ஏதோ ஒன்று மறுக்கப்பட்ட இடமாக இருக்கிறது. கையில் கிடைப்பதைத் தூக்கிவீசி எதிர்ப்பைக்காட்டும் குழந்தையின் செயலை நாம் வன்முறை என்போம். அதற்கானதை நாம் மறுத்ததே வன்முறை என நினைக்கும் குழந்தை. இவையிரண்டும் சந்திக்கிற சூழலில், அக்குழந்தை தன் வன்முறையை விட்டுவிடுவதோ அல்லது தொடர்வதோ அந்தக் குழந்தையின் கைகளில் இல்லாமல் அச்சூழலின் கைகளில்தான் இருக்கிறது. தனிமனிதர்களும் "தீவிரவாதிகள்" என்று சொல்லப்படுபவர்களாக ஆவது இதன் நீட்சியாக இருக்குமோ? //

//தீவிரவாதத்தை ஒழிப்பது என்பது அப்சல்களை அழிப்பதால் நடந்துவிடும் என்று சொல்லிவிடமுடியாது. இன்னும் சில அப்சல்களைக்கூட அது உருவாக்கிவிடலாம். அப்சல்கள் உருவாவதற்கான காரணங்களை அழிப்பதுதான் தீவிரவாதத்தை
அழிக்க உண்மையிலெயே உதவுபவையாக இருக்க முடியும். அப்சலின் மரணமோ, இருப்போ இரண்டுமே நமக்கு நிறையச் சொல்லும் வலிமையுடையவை நாம் கற்றுக்கொள்ளத் தயாராகும்போது.//

அருமையாக சொல்லியுள்ளீர்கள்....

இதே விசயத்தை விவாதத்தின் ஊடாக எனது பதிவில் சொல்ல முற்ப்பட்டிருந்தேன்..

உங்களது பதிவில் விடுபடும் விசயமும், எனது விவாதத்தில் நான் சுட்டிக் காட்டிய விசயமும்.... அப்சல் என்ற விளைவுக்கு காரணமான காரணியை நீக்கும் நோக்கமோ/நேர்மையோ அரசுக்கு கிடையாது என்பதும் இன்னும் சொன்னால் அதுதான் ஒரு காரணியாக இருக்கிறது என்ற விசயமும்....

இந்த பதிவு எனது கண்ணில் படாமல் எப்படி தப்பியது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

ரவி சிரினிவாசை பொறுத்தவரை உலகமய பொருளாதாரம் எனும் ஆகக் கேடான டெரரிஸத்தை மூடி மறைக்க ஏகாதிபத்தியத்தின் உடன் விளைவாக உருவாகி இன்று தனி ராஜ்ஜியம் கோரும் மத(அதிலும் he concentrates only இஸ்லாம் ...) தீவிரவாதம் எனும் முகமூடி தேவைப்படுகிறது.....

அசுரன்

 
At 2:11 PM, December 13, 2006, Blogger செல்வநாயகி said...

அசுரன்,
உங்கள் மறுமொழிக்கு நன்றி. உங்களின் பல பதிவுகளை நான் படிக்கவேண்டிய பதிவுகள் பட்டியலில் போட்டு வைத்திருக்கிறேன், நிதானமாகப் படிக்கவேண்டியவை அவை என்பதால்.

 
At 6:41 AM, January 04, 2007, Blogger butterfly Surya said...

1931 மார்ச் 23ம் தேதி பகத்சிங் தூக்கிலிடப்பட்ட போது அவரது முகத்தை கருப்பு துணியால் மூட அவர் மறுத்து விட்டார். மரண பயம் உள்ளவர்களுக்கு தான் கருப்பு துணி. மரண பயமற்றவர்களுக்கு அல்ல. பகத்சிங் மரணம் பயம் அற்றவர். அதே போல தான் சதாம் உசேனும்.

சதாமுக்கு தண்டனை தரும் உரிமை அமெரிக்காவுக்கு கிடையாது.

Visit this page:

http://www.gwu.edu/~nsarchiv/NSAEBB/NSAEBB82/

மனித இனத்திற்கே எதிரான மரண தண்டனை அடியோடு ஒழிக்க பட வேண்டும் என Amnesty யும் மனித உரிமை ஆர்வலர்களும் எவ்வளவோ குரல் கொடுத்தும் இந்த அவலம் அரங்கேறி கொண்டுதான் இருக்கிறது...

வைரத்தின் வரிகள் :- ஜெயிக்க போவது அல்லாவா?? ஏசுவா..? அல்ல கேள்வி... தினாரா டாலரா... என்பதே ...

__________________
அன்பு அமைதி ஆனந்தம்...

சூர்யா
துபாய்

 

Post a Comment

<< Home