நாலையும் யோசிக்கனும்
அன்று மப்பும் மந்தாரமுமாகக் காட்சியளித்த வானத்தில் பொழுது எங்கிருக்கிறதெனத் தெளிவாகத் தெரியாமலிருந்தது. அந்த ஊரின் ஆரம்பப் பள்ளிக்கூடத்துப் புள்ளைகள் வெளியில் வந்து தண்ணிகுடிப்பதும், ஒண்ணுக்குப் போவதுமாக இருந்ததை வைத்து அது ஒரு பதினொரு மணி சுமாரான எளமத்தியான நேரம் எனலாம். ஒம்பது மணிக்குத் துவங்கும் பள்ளிக்கூடத்தில் தினமும் எளமத்தியான நேரத்துக்குத்தான் அவர்களுக்கு அவ்விடைவேளை விடப்படும். செல்லாளும் சுக்கானும் அப்போது மாதாரி வளவுக்குள் வந்துவிட்டிருந்தனர். சுத்தியும் நெறையக் கூட்டமில்லை. அண்ணந்தம்பி, அக்கா தங்கச்சி அளவுக்கே சொல்லப்பட்டிருந்தது. நாலஞ்சு பொம்பளைகளும், ரெண்டுமூனு ஆம்பளைகளும், ஆக்கிய சோத்தைப் பெரிய தட்டத்தில் கொட்டுவதும், நீளமான வாழை எலைகளை அளவுபார்த்து அரிந்து வைப்பதுமாக இருந்தனர். ஊட்டுக்கு வந்ததும் திண்ணையில் உட்கார்ந்த செல்லாள் அங்கே படலுக்கந்தப்புறம் வெளையாடிக்கொண்டிருந்த சரோசாவையும், அப்புக்குட்டியையுமே பார்த்துக்கொண்டிருந்ததை எல்லோருக்கும் காப்பி குடுத்துக்கொண்டிருந்த அவளின் மாமியார் அலகாள் கவனித்துவிட்டு அருகில் வந்தார். "அடப் புள்ளே! எந்திரிச்சுப் போயி புள்ளைகளுக்கு சோத்தப் போட்டு வையி, கண்டதையும் உன்னமு நெனச்சிக்கிட்டிருக்காம இவந்தாம் புருஷன்னு பொழைக்கோனு இனி நீயி" எனச் சொல்லிவிட்டு அவர் வேலையைப் பார்க்க நகர்ந்தார். "மூதேவி! பொழுது கெளம்பறவரைக்கும் போத்தித் தூங்கீட்டிக் கெடக்குறா. எல்லாப் பொண்டுகளும் எந்தக் காட்டுல வேலையிருக்குன்னு கேட்டுக் கேட்டு ஓடறாளுக, இவளுக்கென்ன? காலெல்லாங் காப்புக் காய்க்கத் தறி முதிச்சு சம்பாதிச்சுப் போடறான் எம்மவன்" என்று காலங்கார்த்தால கதவுக்கு முன்னால நின்னு வறுத்தெடுக்கும் தன் மாமியார்க்காரிதான் இப்படியும் பேசுறா எனப் பழைய சம்பவத்தோடு இதையும் ஒப்பிட்டுப் பாத்துக்கொண்டார் மருமகள்.
காபி குடித்துக்கொண்டிருந்த பொம்பளைகளும் அவரவருக்குத் தோனியதைச் செல்லாளுக்குச் சொல்லியபடியிருந்தனர். தன் தோழர்களுடன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தாலும் சுக்கானுக்கும் செல்லாள்மீதே கண்ணிருந்தது. "என்னத்தப் போட்டு மருவிக்கிட்டிருக்காளோ நெஞ்சுக்குள்ளெ" என்று நெனச்சாலும் அப்போதைக்குக் கிட்ட வரமுடியாமல் தள்ளியே இருந்தார். ஒரு புதுக் கல்யாணப்பொண்ணுக்கிருக்கும் எதையும் செல்லாளிடம் எதிர்பார்க்கமுடியாதென்பது சுக்கானுக்கும் தெரியும். பத்து வருஷப் பொழப்பை மறக்க மூனு மாசங்கள் நிச்சயம் போதாது. "சரி எதுவாயிருந்தாலும் ராத்திரி புள்ளைக தூங்குனாப்புறம் மடியில இழுத்துப்போட்டு ஆதரவாப் பேசித் தீத்து வெச்சுக்கலாம்" என எண்ணிக்கொண்டே பரிமாறப் பட்டிருந்த இலைக்குச் சாப்பிடப் போய்விட்டார் சுக்கானும். "அம்மா இன்னக்கி நம்மூட்டுல பொரியலு, அப்பளத்தோடவெல்லாம் சோறாம்மா?" என்று துள்ளியபடி ஓடிய சரோசாவுக்குப் பின்னால், சட்டையைத் தூக்கி ஒழுகிய மூக்கைத் துடைத்துக்கொண்டே வந்துகொண்டிருந்த அப்புக்குட்டியை எடுத்து இடுப்பில் வெச்சு அவன் மூக்கைச் சுத்தமாக்கிச் சோறூட்டக் கொண்டுசென்றார் செல்லாள்.
****************
இரண்டு வாரங்கள் ஆகியிருந்தாலும் இன்னும் கூட்டம் குறையவில்லை கடையூட்டில். அந்த ஊட்டில் பள்ளிக்கூடத்துப் பசங்களுக்கு முட்டாய் வகைகளும், அதுபோகச் சில சில்லரைச் சாமான்களும் வியாபாரம் செய்துகொண்டிருந்ததால் அதற்குக் கடையூடு எனப் பெயராகியிருந்தது. எழவு கேக்கச் சனங்கள் வருவதும், போவதுமாகத்தானிருந்தார்கள். பக்கம்பாட்டுச் சனங்கள் பொணம் ஊட்டுக்குக் கொண்டுவரப்பட்டதுமே வந்து எடுக்கும்வரை இருந்து சென்றிருந்தார்கள். ஊரை விட்டு வெகுதூரத்திலிருந்தவர்கள் அதிலும் கொஞ்சம் தூரத்து ஒறவுச் சனங்களே இன்னமும் நாளுக்கு ஒன்றோ இரண்டோ என தெனம் வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.
செத்துப்போன தெண்டபானிக்கு ஒரு நாப்பது வயசிருக்கலாம். சந்தைக்குப் போனவர், தன் மனைவி பாப்பாத்தி சொல்லியுட்ட சமையல் சாமான்களையும், அம்மாவுக்குக் கடைவியாபாரத்துக்குத் தேவையானதையும் வாங்கிப் பெரிய மூட்டையாகப் பைக்கில் வைத்துக் கட்டிக்கொண்டு திரும்ப வந்துகொண்டிருந்தபோதுதான் லாரிமோதி இறந்துபோனார். ஏழாவதிலும், எட்டாவதிலுமாக ரெண்டு பசங்கள் அவருக்கு. மூத்தவனைவிடவும் எளையவந்தான் அப்பாவின் மரணத்தை சீரணிக்கமுடியாமல் எப்போதும் ஒரு சோகமான ஒட்டுதலோடு அம்மா பாப்பாத்தியிடமே உட்கார்ந்திருந்தான். "வெள்ளை"யும் அப்படியே. சனக்கூட்டம் குறைந்து பாப்பாத்தி தனியாகும்போது எங்கிருந்தோ வந்து அவரின் காலடியில் படுத்துக்கொள்கிறது. சோறோ, பாலோ பாப்பாத்திதான் "வெள்ளை"க்கு ஊத்துவது வழக்கம். தன் கணவன் எறந்த நாளிலிருந்து அதுக்கு எதுவும் செய்யவில்லை அவர். அதை வேறு யாரும் கவனித்த மாதிரியும் தெரியவில்லை. அன்று ரத்தினா தான் அதுக்குச் சோறுபோட்டதாகவும் ஆனால் அது திங்கவில்லையெனவும், செத்துப்போன தன் அண்ணனை நினைத்துக் கிடக்கிறதெனவும் சொல்லிக்கொண்டிருந்தார். அதைக்கேட்ட பிறகு அந்த ஈயச் சோத்து வட்டலில் ரத்தினா ஊத்தி வைத்திருந்ததை எடுத்துவந்து "வெள்ளை"யின் முன்னால் வைத்தார் பாப்பாத்தி. அண்ணாந்து அவர் மொகத்தை ஒருதரம் பாத்துவிட்டு "மியாவ்" என்றது. பிறகென்ன நினைத்ததோ வட்டலிலிருந்ததைச் சுத்தமாகச் சாப்பிட்டு முடித்தது. "இந்தச் சனியனுக்கு வேற யாரு போட்டாலும் எறங்காது, எம்பயனே போய்ச் சேந்துட்டான், இதுக்கெல்லாந்தா சோறு ஒரு கேடு" என்று தன் எட்டு மொழச்சேலையின் நீளமான முந்தானையில் கண்ணைத் துடைத்துக்கொண்டே எழுந்துபோனார் தெண்டபாணியின் அம்மா.ஒரு வருஷத்துக்கு முன் இதே மாதிரிச் சந்தைக்குப் போய்விட்டு வருகையில்தான் "நாலிட்டேரிக்கிட்டக் கெடந்தது, கண்ணுகூட முழிக்கல, பாவமாயிருந்துது எடுத்துட்டு வந்துட்டேன், இந்தா பால ஊத்தி வெச்சுப்பாரு, வெள்ள வெளேர்னு இருக்கு வெள்ளைன்னே கூப்புட்டுக்கலாம்" என்று சொல்லிக்கொண்டே இதைக்கொண்டு வந்து தன் கணவன் கொடுத்தது ஞாபகம் வந்தது தூணைப் பிடித்து நின்றுகொண்டிருந்த பாப்பாத்திக்கு. அதை நினைத்த மாத்திரத்திலேயே பத்து நாளுக்கும் மேலாய் அழுதழுது சிறுத்திருந்த அவர் கண்களிலிருந்து மீண்டும் நீர் பெருகி அவர் காலுக்கடியில் நின்றுகொண்டிருந்த "வெள்ளை"யின் மீது ஒரு துளி விழ அது மீண்டும் அவர் மொகத்தைப் பார்த்து "மியாவ்" என்றது.
தூரத்தில் மௌனமாய் நின்ற பனைமரங்களுக்கிடையான சந்துகளில் ஆரஞ்சுப் பழமாகச் சூரியன் இறங்கிக் கொண்டிருந்தது. சுனாமியே வந்தாலும் சூரியன் துக்கம் அனுசரிப்பதில்லை. தெண்டபானி செத்ததற்கும் அப்படித்தான். அதுபாட்டுக்கு எழுவதும் விழுவதுமாக இருந்தது. செத்தவருக்குப் பதினாறாவது நாள் சீர் செய்வது குறித்துப் பேச பங்காளிகளில் சிலர் கூடியிருந்தனர் கடையூட்டில் அன்று. தெண்டபாணியின் அண்ணன், தம்பி , பொறந்தவள் ரத்தினா உட்பட அங்குதான் இருந்தனர். பதினாறாவது நாளுக்குத் தாங்களும் சில மொறைகள் செய்யவேண்டியிருந்ததால் பாப்பாத்தியின் தம்பியும், தம்பி மனைவியும்கூட அந்தப் பேச்சில் கலந்துகொண்டிருந்தனர்.
"என்னப்பா, சாப்பாடு சீரு போக்குவரத்துச் செலவெல்லாம் பங்காளிக எங்க மொறை எப்பவும்போல, நீங்க உங்க பொறந்தவளுக்கு, புள்ளைகளுக்குன்னு துணிமணி எடுத்துட்டு, வேற எதுனாலும் உங்க பிரியம்போல செஞ்சுக்கலாம்" என்றார் கொஞ்சம் வயதில் பெரியவராகத் தெரிந்த பங்காளி ஒருவர் பாபாத்தியின் தம்பியைப் பார்த்து.
"நம்ம ஊதியூர் ஐயருக்கே சொல்லீரலாமாங்ணா தீட்டு கழிக்க?" தெண்டபாணியின் அண்ணனுக்குக் கேட்கப்பட்டது இந்தக்கேள்வி இன்னொரு பங்காளியிடமிருந்து.
"ஐயரும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம். அவனென்ன எல்லாப் பொழப்பும் பொழைச்சு முடிச்சுச் செத்தானா? விமரிசையா ஐயரெல்லாங் கூப்பிட்டுத் தீட்டுக் கழிச்சுக்கிட்டிருக்க? நாமளே படப்புப் போட்டுக் கும்புட்டு அதைக் காக்காய்க்கு வெச்சுரலாம் அதுபோதும்" என்று சொல்லிவிட்டு எதற்கும் தன் அம்மாவை ஒரு முறை பார்த்தார் தெண்டபாணியின் அண்ணன். "என்னதாம் பண்ணாலும் அவன் இனி எந்திரிச்சா வரப்போறான்?" என்பதோடு நிறுத்திக்கொண்டார் அம்மாவும்.
"சொல்லவேண்டிய நெருங்குன ஆளுகளுக்கெல்லாம் நாளைக்கே சொல்ல ஆரம்பிக்கச் சொல்லி நாசுவங்கிட்டச் சொல்லீருங்க" என்றதோடு பேச்சு முடிவடையும் தருவாயில் பாப்பாத்தியின் தம்பி மனைவி தன் கணவனிடம் "நீங்களே சொல்லுங்க" என எதையோ சன்னக்குரலில் வற்புறுத்திக்கொண்டிருந்தார்.
"என்ன மாப்பளைக்கு எதோ சொல்றதுக்கிருக்கும்போலருக்கே?" பேச்சை முடித்துவைத்த நடுத்தரவயதுக்காரர் அந்தக் குசுகுசுப்புக்கும் வாய்ப்புக் கொடுத்துக் கேட்டார்.
"இல்லீங்க, பாப்பாத்திக்குச் சீலை எடுக்கறதப் பத்திப் பேசிக்கலாம்ங்கறா கண்ணா", பாதிச்சத்தத்தில் ஆரம்பித்தார் பாப்பாத்தியின் தம்பி. யாரும் பேசுவதற்கு முன் தெண்டபானியின் அம்மாவிடமிருந்து தெறித்து வந்து விழுந்தது "ஆமாமா பொறந்தவளுக்குக் கல்யாணத்துக்குப் பட்டு எடுக்கறாங்க, எல்லாம் பேசாம என்னபண்றது?"
"பட்டுந்தே எடுத்துது எல்லாந்தேம் பண்ணுச்சு, நல்லா இருந்தவங்களப் பாக்கப் பொறுக்கல கடவுளுக்கு. போனவிய போனாலும் சின்னஞ்சிறுசுக ரெண்டு இருக்குது. அண்ணிக்கும் வயசு ஒன்னும் பெரிசா ஆகிறல. இப்ப நம்ம சாதிசனத்துலயும் படிச்சவியெல்லா வெள்ளச் சீலைய உட ஆரம்பிச்சாச்சு. அதா அண்ணிக்கும் நாம சீருப் பொடவை குடுக்கைலியே கலர்ப்பொடவையக் கொடுத்தா அவங்களும் அப்படியே கட்டிக்க ஆரம்பிச்சிடுவாங்க", டீச்சர் வேலை செய்யும் பாப்பாத்தி தம்பி மனைவியை வழக்கமான நங்கயா கொழுந்தியா சச்சரவுகளையெல்லாந் தாண்டியும் இப்படிப் பேசத் தூண்டியது படிப்பென்று மட்டுஞ் சொல்லிவிடமுடியாது. ஒரு விதவைத் தாய்க்கு மகளாயிருந்து பல நிகழ்வுகளைக் கவனித்து வந்ததும் அவரை அப்படிப் பேசவைத்திருக்கலாம்.
உதட்டைப் பிதுக்கியபடி வைத்துக்கொண்டு அழுவதும், மூக்கைச் சிந்துவதுமாக இருந்த தெண்டபாணியின் அம்மா மூஞ்சியை அதில் படரத் தொடங்கியிருந்த எரிச்சல் மேலும் விகாரமாக்கிக் கொண்டிருந்தது. தெண்டபாணியின் அண்ணனும் தம்பியும் எந்தப் பக்கமும் பேசாமல் நடுநிலமை காத்தனர்.
"கண்ணா சொன்னாப்புல மேக்காலத் தோட்டத்துச் சின்னத்தம்பி ஊட்டுக்காரிக்குக் கூட பங்காளிக சீருலயே வெள்ள குடுக்காம காவிக் கலருதேங்குடுத்தாங்க" வாயிலிருந்த வெத்தலை எச்சையை வாசலில் போய்த் துப்பித் திரும்பிக்கொண்டே சொன்னது ரவிக்கை போடாத கலர்ச்சீலை ஆத்தா ஒன்று.
"கெடையில கெடக்குற அய்யன் போய்ச்சேந்துட்டா நாளைக்குத் தனக்கும் பங்காளிக கலர்ச்சீலையே எடுக்கட்டுமுன்னுதே இந்தாத்தா இப்பிடிச் சொல்லுமாட்டிருக்குதுடோய்" என்று கூட்டத்தைவிட்டுத் தள்ளி உக்காந்திருந்த ரெண்டு இளவயது ஆம்பிளைகள் பேசிச் சிரித்துக்கொண்டனர்.
"டவுன்ல எப்பிடியோ பண்ணீட்டுப் போறாங்க. ஊட்டுக்குள்ளயே ஒன்னுக்கு வெளிக்குப் போக ரூம்பு கட்டிக்கிற சனங்க அது.நாம பழய காலத்துச் சீரையெல்லா முழுசா உடமுடியாது. தாலியறுத்த பொம்பளைக வெள்ளச் சீலை கட்டிக்கறதே அவங்களப் பாக்குற மச்சன் கொழுந்தனுக்குப் பாவ தோஷம் வராம இருக்கத்தான். ஆனா இப்பத்த புள்ளைக ஆசைப்படுது. ஆத்தா சொன்னாப்புல 'காவி' இல்லைனா எதோ ஒரு 'குருட்டுக் கலர்' சீலையே எடுத்துட்டாப் போவுது" பிரச்சினைக்குச் சரியாகத் தீர்ப்பு வழங்கும் தோரணையில் சொல்லி முடித்தார் ஒரு பங்காளி .
அதுக்குப் பிறகு வேறு யாரும் பேச்சை நீட்டிக்காமல் கிளம்பிக்கொண்டிருந்தனர். உள்ளே போய் மூலை அறையில் உக்காந்திருந்த பாப்பாத்தியிடம் விடைபெற்று வந்து வாசலில் நின்றிருந்த பைக்கைக் கணவன் எடுத்துச் சிறிது தூரம் கடந்த பிறகு பேசிக்கொண்டு வந்தார் பின்னால் இருந்த கண்ணாள், "எல்லாமுக்குமே மொடக்கடி பேசற சனங்க. ஊரு பாத்து உங்கக்காளக் கட்டிக்குடுத்தாங்க பாருங்க உங்க அப்பா அம்மா, நாம நல்ல கலர்ல எல்லாருங் கட்ற டிசைன்லயே எடுத்துட்டு வருவோம், மொனகறவிய மொனகீட்டே இருக்கட்டும்"
**************************
மொதநாள் இரவு பேஞ்சு முடிச்ச மழைக்குக் காலையில் அட்ரைப் பூச்சிகள் ஊர்ந்துகொண்டிருந்தன. காட்டு வேலைக்குப் போகும் சனம் கிளம்பிக்கொண்டிருந்தது. மாதாரி வளவு அடிபைப்பில் செல்லாள் கொடத்தை வைத்துத் தண்ணி அடித்துக்கொண்டிருக்க வேப்பங் குச்சியில் பல்லைத் தேய்த்துக்கொண்டே அருகில் நின்றுகொண்டிருந்தார் சுக்கான்.
"ஊட்டுலயே வாய் கொப்புளிக்காம இங்க எதுக்குப் பொறவாலயே வருவியோ காலங்கார்த்தால"
" நீ சொமந்தாந்து ஊத்தற தண்ணிய எறைச்சுத் தீக்கவேண்டாம்னுதான்" சீண்டிய செல்லாள் பதிலுக்கு மடக்கப்பட்டார்.
இந்தக் காட்சி எதையும் பார்க்காமல் வாசலைப் பெருக்கியவுடன் மகன் ஊட்டைக் கடந்து கவுண்ட வளவு ரோட்டில் நடந்துபோய்க் கடையூட்டு வாசலில் நின்றிருந்தார் அலகாள். பாப்பாத்தியின் மாமியார்தான் வெளித்திண்ணையில் உட்கார்ந்தபடி தன் தலைக்கு எண்ணெய் வைத்துக் கொண்டிருந்தார்.
"மவராசரு போய்ச்சேந்த பொறகு ஒரு மாசங் கழிச்சு ஆத்தா நேத்துதேங் கடையத் தொறந்திருப்பீங்களாட்டிருக்குது. உப்பு இல்லீங்க ஊட்டுல, ஒரு படி வாங்கீட்டுப் போலாமுன்னு வந்தனுங்க"
"இன்னாருக்கின்னபடி ஈசனிட்டபடீன்னு நமக்குக் கொள்ளி போடறவனுக என்ன அவசரமோ போய்ச் சேந்துட்டானுக, பெரிய மருமவள சின்ன மவனுக்கே கட்டிவெச்சிட்டா அலகான்னு சனமெல்லாம் பேசிக்கிட்டாங்க. கல்யாணம் முடிஞ்சும் ஒரு மாசமிருக்குமா?" கேட்டுக்கொண்டே படி நிறைய உப்பை மூட்டிப் பின் அதன் தலையைத் தட்டிக்குறைத்துக் கொண்டுவந்து அலகாளின் போசியில் போட்டார் பாப்பாத்தியின் மாமியார்.
"ஆமாங்காத்தா எம் பெரிய பயனும் உங்கூட்டுச் சாமியாட்டத்தேனுங்க. விதி முடிஞ்சுதுன்னு போய்ட்டானுங்க. இவ ஒரு சண்டி. அவனிருக்கற நாள்லயே வேல செய்யமாண்டா. ரெண்ட வெச்சுக் காப்பாத்த என்ன பண்ணுவாளோன்னு சுக்கானுக்கே பண்ணிவெச்சுட்டனுங்க. நாளைக்கு நாம கண்ணுமூடினாலுங் கவலையில்லாமப் போய்ச் சேந்துக்கலாம் பாருங்க"
"நல்லதாப் போச்சுப் போ. எப்படியோ நல்லா இருந்தாச்சரி. உங்க சாதில எப்பிடிப் பண்ணுணா என்ன? நாங்கெல்லாந்தேன் நாலையும் யோசிக்க வேண்டியிருக்குது" என்றவாறே அலகாள் தந்த சில்லரைக் காசுகளை உள்ளே எடுத்துப்போய் அதற்கென்று உள்ள டப்பாவில் போட்டுக்கொண்டிருந்தார். அங்கிருந்த அந்த வீட்டுப் பூனை "வெள்ளை" அலகாள் திரும்பிப் போகையில் அன்று எதற்கோ அவர் பின்னால் நடந்துபோனது.
8 Comments:
நயாகி,
அப்படியே கிராமத்து வாசனை மாறாது சொல்லி அசச்திபுட்டீங்க.
//உங்க சாதில எப்பிடிப் பண்ணுணா என்ன? நாங்கெல்லாந்தேன் நாலையும் யோசிக்க வேண்டியிருக்குது"//
இந்த வரிகளிலிருந்து எனக்கு கிடைத்த செய்தி என்னன்னா, நாலை என்பதே கிடையாது. இன்றிருப்பதுதான் நிஜம், என்று வாழ்ந்து விட்டால் எவ்வளவு பிரட்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். நாலை யாருக்காக யோசிக்க வேண்டும்?
தெக்கிக்காட்டான், சரவணன் நன்றி.
///இந்த வரிகளிலிருந்து எனக்கு கிடைத்த செய்தி என்னன்னா, நாலை என்பதே கிடையாது. இன்றிருப்பதுதான் நிஜம், என்று வாழ்ந்து விட்டால் எவ்வளவு பிரட்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.////
"நாலையும்" என்பது "நான்கையும்" என்ற பொருளில் இடப்பட்டது. இதை நாளையும் என்ற பொருளில் புரிந்துகொண்டீர்களா?
வட்டார வழக்கு நன்றாக வருகிறது.
-----------
//அவன் மூக்கைச் சுத்தமாக்கிச் //
அவன் மூக்கைச் சிந்தி
//கடைவியாபாரத்துக்குத்//
கடவேவாரத்துக்கு
என்று மாற்றினால் இயல்பாக இருந்திருக்கும்.
நல்ல சிறுகதை செல்வநாயகி. கதை சொல்வதற்காய் தேர்ந்தெடுக்கப்பட்ட சம்பவங்கள் மிக இயல்பாய் இருக்கின்றன.
தன்னிச்சையய் சூரியன் உதிப்பததைச் சொல்லியிருப்பது, பாப்பாத்தியின் தம்பி மனைவி கலர் புடவை வாங்கச் சொன்னதற்கான காரணமாக யூகித்திருப்பது என ஆங்காகே ரசனையாய் இருக்கிறது.
மற்றபடி, கார்த்திக்வேலு குறிப்பிட்ட இடங்கள் மட்டுமல்லாமல், உரையாடல்கள் தவிர்த்த அனைத்து வரிகளிலுமே வட்டார வழக்கும், இலக்கிய நடையும் கலந்திருப்பது உறுத்துகிறது.
செல்வநாயகி,
இரு வேறு பெண்களுக்கும் இரு வேறு நீதியா.
உலகமும் சாதியும் எல்லா இடத்திலும் ஒரே மாதிரி இயங்குகிறதே.
கண்முன்னால் கடையூடும், படல்,வெள்ளைப்பூனை எல்லாம் வந்து விட்டன. நல்ல கதைக்கு நன்றி.
சிறுகதை வடிவம் என் புது முயற்சியே. உங்களின் வாசிப்பும், விமர்சனமும் எனக்கு இவ்விடயத்தில் பயன்தருபவை. நன்றி நண்பர்களே உங்களின் பின்னூட்டங்களுக்கு.
கதை முயற்சி என்கிறீர்கள்... நன்றாக இருந்தது. எனக்கு கதைமாந்தர்களில்(?) அந்த 'வெள்ளை'யைத்தான் பிடித்தது. ஏனென்றால் நானொரு பூனைக்குட்டிப் பைத்தியம். (ஊரிலுள்ள வீட்டில் மூன்று பூனைகள் வளர்கின்றன.)எனக்கு இந்தக் கதையில் நீங்கள் பயன்படுத்திய நடை தஞ்சை பிரகாஷை நினைவுபடுத்தியது.
ரௌத்ரன்,
இந்த இடுகையில் நீங்கள் இட்டிருந்த பின்னூட்டம் வாசித்தேன். உங்களின் கருத்துக்களுக்கும், அன்புக்கும் நன்றி. எனது மின்னஞ்சல் snayaki@yahoo.com
Post a Comment
<< Home