தேடும் முகவரிகள் (மீள்பதிவு எண் 2)
அவன் என் காதலன் இல்லை, என்றாலும் அவனோடு நான் இருந்த நாட்களைத் திரும்பிப் பார்க்கும்போதெல்லாம் ஒரு மெல்லிய சோகம் உள்ளே ஊர்ந்து நகர்கிறது. அவன் என் சகோதரன் இல்லை, என்றாலும் ஒரு ரத்த பாசத்திற்கு இருக்கும் உணர்வுகளில் கொஞ்சம் எனக்கு அவனோடு இருந்தது. அவன் என்னோடு படித்தவனும் அல்ல, இருந்தாலும் என் ஆண் நண்பர்களின் பட்டியலில் அவன் பெயருக்குத்தான் முதலிடம் கொடுக்க
வேண்டும். அவன் என் வாழ்க்கையில் ஒரு சிறு வெளிச்சம். என் எல்லைக்குள் எதிர்பாராது வந்த ஒரு சின்ன ஆச்சரியம். கூட இருந்தபோது தொடமுடியாமல் போனவனும், தொட நினைக்கும்போது, கூட இல்லாது போனவனும் அவன். காரணம் சாதி. எந்த சாதிப் பாகுபாடுகள் இந்த சமூகத்தை ஒரு சல்லடையைப் போல் துவாரங்கள் இட்டு வைத்திருக்கிறதோ, எந்த சாதீயக் காரணிகள் இங்கு மனிதம் தழைக்க விடாமல் தன்
வேலையைச் செய்து வருகிறதோ, அதே சாதிப் பிளவுகள்தான் ஒரு களங்கமற்ற பிள்ளைப்பருவத்து அன்பிலும்கூட என்னையும் அவனையும் கைகள் கோர்த்து விளையாட அனுமதிக்கவில்லை. முட்டையிலிருந்து வெளிவந்த சிறுபறவையாய், திணிக்கப்பட்டிருந்த எல்லாமிலிருந்தும் வெளிவந்து பார்த்தபின், சாதிகளின் பெயரால் விளைந்த சமூக அவலங்கள் உணர்ந்தபின், எல்லோரும் ஒன்றுதான் என்பது தெளிந்தபின் இப்போது நினைக்கிறது மனம், அவனோடு கைகுலுக்கிப் பேச ஒரு தருணம் வேண்டுமென்று. எங்கிருக்கிறானோ தெரியவில்லை.
அவன் ரமேஷ். என்னைவிடவும் மூன்று வயது சிறியவன். மழை நன்கு பெய்து விவசாயம் மிகச் செழிப்பாய் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் எங்கள் ஊரைச் சேர்ந்த தலித்துகள் எல்லாம் அங்கிருந்த தோட்டங்களில் பண்ணையம் கட்டும் வேலை செய்தார்கள். பண்ணையம் கட்டுதல் என்பது ஒரு குறிப்பிட்ட தோட்டத்தில் வருடக் கணக்கில் ஒரு குடும்பமே உழைப்பது. பெருமாள் முருகனின் "கூள மாதாரி" படித்தவர்களுக்கு ஆடு மேய்க்கும் தலித் சிறுவர்களின் வாழ்க்கை தெரியும். தாங்கள் பண்ணையங்களில் வேலை செய்ததோடு, படிக்க வேண்டிய வயதில் இருந்த தங்கள் பிள்ளைகளையும் ஆடு மேய்க்கச் சேர்க்க வேண்டிய வறுமையில் பல தலித் குடும்பங்கள் இருந்தன. ஆடு மேய்க்கும் அச் சிறுவர், சிறுமிகளுக்கு இரண்டு வேளை சோறும், பண்டிகைக்குத் துணியும் தந்து வருடம் ஒரு கூலியை அவர்களின் பெற்றோருக்குத் தருவது பண்ணையச் சொந்தக்காரர்களின் வழக்கமாக இருந்தது. இது காலையில் 7 மணிக்கு வந்து இரவில் வீடு திரும்பும் சிறுவர், சிறுமியருக்கு. சில சிறுவர்கள் தாங்கள் ஆடு மேய்த்த தோட்டத்திலேயே இரவும் தங்கினால் அவர்களுக்கு மூன்று வேளை உணவும் தரப்பட்டது. இந்த உணவு அவர்களுக்குப்
பெரும்பாலும் பழைய சாதமாகவும், எப்போதாவது சூடானதாகவும் இருக்கும். டவுன் பஸ்ஸே வந்திருக்காத எங்கள் ஊருக்குள் அப்போது குடும்பக் கட்டுப்பாடு விழிப்புணர்வு தவிர வேறெந்த சமூக நலன் சார்ந்த விழிப்புணர்வும் வந்திருக்கவில்லை. எனவே குழந்தைகளை வேலை வாங்குவது மலர்களில் ஆணியடிக்கும் வன்முறை என்பதும் யாருக்கும் புரியாமல் அது ஒரு சாதாரண நிகழ்வாகவே கருதப்பட்டது.
எங்கள் தோட்டத்தில் ஆடுகள் இருந்தும் அதை மேய்ப்பதற்குச் சிறுவர்கள் அமர்த்தப்படவில்லை. ஊரில் யாருக்கும் வராத பரிந்துணர்வு எங்கள் வீட்டில்
மட்டும் இருந்தது என்று இதற்கு அர்த்தம் இல்லை. எல்லாப் பகுதிகளிலும் நான்கு புறமும் வேலி போட்ட மேய்ச்சல் நிலங்கள் இருந்ததால் ஆடுகள், மாடுகள் எல்லாம் எங்கும் வெளியில் ஓடாமல் சமத்தாக மேய்ந்து கொண்டிருக்கும் என்பதால் அதற்கென்று ஒரு தனி ஆள் அமர்த்தப்படாமல் மற்ற வேலைகளுக்கு இருந்தவரே அதையும் கண்காணித்துக் கொள்வார். இப்படிப்பட்ட காலம் ஒன்றில்தான் 11 வயது ரமேஷ் ஒருநாள் எங்கள் வீடுதேடி
வந்தான் தனக்கு ஆடு மேய்க்கும் வேலை வேண்டுமென்று. பருந்தைக் கண்டு பயப்பட்டுத் தன் தாயின் சிறகில் பதுங்க வரும் கோழிக்குஞ்சொன்றின் மிரட்சி அவன் கண்களிலும் வார்த்தைகளிலும் இருந்தன. அவன் வாழ்க்கை ஒரு பருந்தாகவே அவனைத் துரத்தியிருக்கிறது. பிறந்து சில வருடங்களிலேயே தாயும் தந்தையும் சண்டையிட்டுக் கொண்டு வேறுவேறு துணைகளைத் தேடிக் கொண்டதில் இவன் தன் பாட்டி மற்றும் சித்தப்பா
பராமரிப்பில் வளர்ந்து, பின் அவர்களாலேயே ஆடு மேய்க்கத் தோட்டம்தோட்டமாகச் சேர்த்துவிடப்பட்டிருக்கிறான். பாட்டி, சித்தப்பா இருவரும் இவன் பேரைச் சொல்லிப் பணம் வாங்கிக் கொண்டே இருந்ததால் தனக்குப் பிடிக்காத இடத்திலேயே தொடர்ந்து வேலை செய்திருக்கிறான். இவனைப் போலவே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மற்ற நண்பர்களிடம் விசாரித்து எங்கள் தோட்டத்தில் ஆடு மேய்க்கும் வேலை காலியாக இருப்பதைத் தெரிந்து, எப்படியும் சேர்ந்துவிட வேண்டுமென்று யாருக்கும் தெரியாமல் வந்திருந்தான்.
ஏதாவது பிரச்சினை வருமோ என்றெல்லாம் தயங்கிய பின்னும், அவன் சித்தப்பாவை அழைத்துப் பேசி வருடம் ஒரு கூலி கொடுப்பதென்றும், மூன்று வேளை சாப்பாடு கொடுத்து எங்கள் இடத்திலேயே தங்கவைத்துக் கொள்வதென்றும் ஒப்பந்தமாகி ரமேஷ் எங்களிடம் சேர்ந்தான். ஒரு தலித் சிறுவனுக்கு உதவி அவனை வாழ்க்கையில் உயரத்துக்குக் கொண்டுபோக வேண்டும் என்ற நோக்கமெல்லாம் அந்த முடிவில் இருந்திருக்க முடியாது.
வலிய வந்த ஆளை ஏன் போகச் சொல்ல வேண்டும், பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான் எங்கள் வீட்டுப் பெரியவர்களின் கணக்காகவும் இருந்திருக்கும். அவன் வரவில் மிக மகிழ்ந்த ஆள் நான். விளையாட நான் எப்போது அழைத்தாலும், வரும்வண்ணம் வெகு அருகில் ஒருவன் இருக்கிறான் என என் மனம் கணக்குப் போட்டது.
அவன் ஒரு வித்தியாசமான அழகு. தொட்டுப் பொட்டு வைத்துக் கொள்ளும் கறுப்பில் முட்டைக் கண்களுடனும், வெள்ளை வெளேரென்ற பெரிய பற்களுடனும் குள்ளமாக இருப்பான். காலையில் எழுந்து சாணம் அள்ளுவது, ஆடு மாட்டை ஓட்டிக்
கொண்டுபோய் அடைப்புக் காட்டுக்குள் விடுவது, பின் மதியம் அவற்றிற்குத் தண்ணீர் தாகம் தணிக்க ஓடைக்கு ஓட்டிக் கொண்டுபோதல், சாண எரிவாயு அடுப்புக்கு சாணம் கரைத்து விடுதல், மீண்டும் மாலை ஆடு மாட்டைத் திரும்ப ஓட்டி வருதல் என்பன அவனுக்கு இடப்பட்ட பணிகள். ஒவ்வொன்றிற்கும் நடுவே இடைவெளி இருக்கும். அதில் அவன் விருப்பம்போல் ஓணான் பிடிக்கவும், தேன் கூட்டைக் கலைக்கவும், டிவி பார்க்கவும்
நேரம் இருந்தது. ஆனால் அவனுக்கு எல்லாம் தனியாக வழங்கப் பட்டிருந்தது. வீட்டிற்கு வெளியே உள்ள வண்டிச்சாலை எனப்படும் சிறு கூடத்தில் வீட்டுப் பெரியவர்களில் ஒருவர் கட்டிலில் படுத்திருக்க, இவன் கட்டிலுக்குப் பக்கத்தில் தரையில் தனிப் பாய், தலையணை கொண்டு தூங்குவான். ஹாலில் இருந்த டிவி அவன் பார்ப்பதற்கு வசதியாய் அந்தச் சிறுகூடத்திலிருந்து பார்த்தாலும் தெரிகிற வண்ணம் திருப்பி வைக்கப்பட்டது. முன்பு வேலை
செய்த இடத்தில் நல்ல சாப்பாடு கிடைக்கவில்லை என்று அவன் சொன்னதாலோ என்னவோ நாங்கள் சாப்பிடும் உணவையே அவனுக்கும் கொடுத்தார்கள் எங்கள் வீட்டில். நான் கொஞ்சம் கொஞ்சமாக அவனைக் கவனிக்க ஆரம்பித்தேன். பள்ளியிலிருந்து வந்த பின்னும், விடுமுறை நாட்களிலும் அவனைக் கவனிப்பதே என் வேலையாக இருந்தது. மிகச் சுத்தக்காரன். காலையில் எழுந்ததும் பல் தேய்க்காமல் காபி குடிக்க மாட்டான். உலகமே இயங்காது போயிருந்தாலும் ஒருநாளும் குளிக்காமல் இருக்க மாட்டான். அவன் குச்சி ஒடித்துப் பல்தேய்க்கும் அதே வேப்ப மரத்தில் நானும் ஒடித்துத் தேய்த்துப் பார்த்தும் அவன் பற்களின் வெண்மையை என் பற்கள் பெறவில்லை. வேலைகளை யாரும் சொல்லிச் செய்ய
வேண்டிய நிலைமையில் வைத்துக் கொள்ள மாட்டான். ஆடு மாடுகளை எக் காரணத்திற்கும் அடிக்க மாட்டான். ஆட்டுக் குட்டிகளை அடிக்கடி ஒரு குழந்தையைக் கொஞ்சுவது போல் மடியில் வைத்துக் கொண்டு கொஞ்சுவான். என்ன சாப்பிடக் கொடுத்தாலும் அதில் ஒரு துண்டு எங்களின் "ஜிம்மி" நாய்க்குப் போடாமல் தின்ன மாட்டான்.
அவனும் கூச்சங்கள் விலக்கி எங்களோடு கலந்தான். என் தவறுகளை அம்மாவிடம் போட்டுக் கொடுப்பான். குளிக்க மறக்கும் பெரிய மாமாவை "அழுக்கோட படுத்தாத் தூக்கம் வருங்களா?" என்று உரிமையோடு அதட்டுவான். வீட்டு ஆண்கள் இருவர் எதற்கேனும் வாக்குவாதம் நடத்திக் கொண்டிருந்தால் யாரேனும் ஒருவரை " அந்த மாட்டுக்குக் கழுத்து வீங்கீருக்கு, வந்து பாருங்க" என்று சமயம் பார்த்து அழைத்துக் கொண்டு போவான். அவனைக் கேட்காது தோட்டத்திலிருந்து வெளியாட்களுக்குத் துரும்பும் கொடுத்து விட முடியாது. "அன்னைக்கு வாங்கீட்டுப் போன ரண்டு மம்மட்டியவே அவங்க இன்னும் திருப்பித் தரலயே" என்று திருப்பிக் கேட்பான். அவனின் நடவடிக்கைகளில் நாங்கள் எங்களை இழந்தோம். என் பின்னால் சுற்றிக் கொண்டிருந்த "ஜிம்மி" கூட அவன் பின்னால் சுற்றத் தொடங்கியது. வீட்டிற்கு வரும் உறவினர்கள் அவனிடமும் நலம் விசாரித்தே திரும்புவர். எல்லா மழைநாளின் மாலைநேரத்திலும் பஜ்ஜி அல்லது போண்டா சுடும் வழக்கம் அம்மாவுக்கு உண்டு. அப்படிச் சுடும் உருளைக்கிழங்கு போண்டாவை மட்டும் அவன் எதிர்பார்க்கும் பதத்திற்கு அம்மாவால் சுடவே முடியாது. "இன்னும் கொஞ்சம் வெந்திருக்கனுங்க" " நெறைய வெந்திருச்சுங்க" இந்த இரண்டில் ஒரு விமர்சனம் இல்லாமல் சாப்பிட மாட்டான். அவன் சொல்லும் "ஸ்டைல்" எல்லோருக்கும் சிரிப்பை
வரவைக்கும். எந்த விஷயத்திற்கும் பெரிதாக ஆச்சரியப்படமாட்டான். புதுத்துணி, புதுச் செருப்பு என்று என்ன வாங்கித் தந்தாலும் வழக்கமாகச் சிறு பிள்ளைகளுக்கு வரும் குதூகலம் அவனுக்கு வராது. ஒரு ஞானியைப் போல் சாதரணச் சிரிப்பு மட்டுமே வரும். யார்மீதோ இருக்கும் எரிச்சலைத் தன்முன்னிருக்கும் எளியவர்கள்மீது காட்டுவது இயல்பான வாழ்வில், அவன் வேலைகள் சிலசமயங்களில் குறைகூறப்பட்டுச் சிலரின் பாரங்கள் அவன்மீது
இறக்கப்படும். வலிக்காமல் இருந்திருக்கமுடியாது அவனுக்கு. ஆனாலும் ஒருவர் செய்வதை வீட்டிலேயே இன்னொருவரிடம் சொல்லி அந்த இன்னொருவரின் மௌனத்திலோ அல்லது ஓரிரு ஆறுதல் வார்த்தைகளிலோ தன் காயங்களுக்குத் தானே மருந்திட்டுக்கொள்வான்.
ஒரு வருடம்தான் ஆகியிருக்கும் அவன் வந்து. பல வருடங்கள் பழகிய நெருக்கம் எங்களுக்கும் அவனுக்கும் முளைவிடத் தொடங்கியது. அப்போதுதான் எங்கள் பகுதியில் அறிமுகமாகியிருந்த அறிவொளி இயக்கப் புத்தகங்கள் பள்ளியில் தேர்ந்தெடுத்த மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டு, வீட்டுக்கருகில் உள்ள படிக்காத சிறுவர், சிறுமியருக்குச் சொல்லிக் கொடுக்குமாறு அறிவுறுத்தப் பட்டோம். ரமேஷ¤க்கு டீச்சராகும்
ஆவலில் நானும் அப்புத்தகங்கள் பெற்று வந்தேன். இரவு "சித்ரமாலா", "சித்ரஹார்", ஒளியும் ஒலியும்" ஆகியன இல்லாத செவ்வாயும், வியாழனுமே அவன் என்னிடம் படிக்கத் தேர்ந்துகொண்ட நாட்கள். அது எங்கள் இருவரின் நட்பை மேலும் இறுக்கியது. ஆனால் அது நீடிக்கவில்லை. எல்லா இடங்களிலும் அவன் உழைப்பு மூலம் பணம் பெற்று வந்த அவன் சித்தப்பா எங்களிடமும் பணம் கேட்டு வந்தார். அவன் உழைப்புக்கான கூலி அவன்
எதிர்காலத்திற்கும் பயன்பட வேண்டும் எனச் சொல்லி கூலியில் ஒரு பகுதியை அவன் பெயரில் வங்கிக் கணக்கு ஏற்படுத்திப் போட்டு வைக்கும் யோசனையை எங்கள் வீட்டில் முடிவு செய்து அவனின் சித்தப்பாவிடம் சொன்னார்கள். அவர் ஒத்துக் கொள்ளாததோடு வேறு இடத்தில் ரமேஷைச் சேர்க்கப் போவதாகவும் கூறினார். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் ரமேஷை அழைத்துப் போவேனென்றே நின்றார். ரமேஷ் என்ன
செய்வதென்று தெரியாமல் குழம்பி நின்றான். அவர் சித்தப்பா தன்னுடன் வந்தால் அவனுக்கு அவன் அம்மாவைக் காட்ட முடியும் என்று சொன்னபோது அவன் அவருடனேயே போக விரும்புவதாய்த் தரையைப் பார்த்துக் கொண்டே சொன்னான். தாயைப் பார்ப்பதை விட ஒரு
குழந்தைக்கு வேறு என்ன பெரிதாகத் தோன்ற முடியும்? ஒரு வருடத்திற்கான கூலியை வாங்கிக் கொண்டு அவன் சித்தப்பா நடந்தார். ரமேஷ் பின் தெடர்ந்தான் ஏற்கனவே விழுந்த மழைத் துளிகளின் சுவடுகளில் விழுவதன்றிப் புதுஇடம் தேடிவிழத் தெம்பற்ற ஒரு குழந்தை மழைத்துளியாக. அவனையும் அழைத்துக் கொண்டு வெளியூர் வேலை தேடிப் புறப்பட்ட அவன் சித்தப்பா பற்றிப் பின் செய்திகள் வரவில்லை. எங்கு போனாலும்
பிழைத்துக்கொள்ளும் சாமர்த்தியம் ரமேஷ¤க்கு உண்டென்று எங்கள் வீட்டில் பேசிக்கொண்டிருந்தார்கள். அதன்பின் வேறு ஆள் எதுவும் ஆடுமேய்க்க அமர்த்தவில்லை.
வருடங்கள் உருண்டோடின பின்னும் என்னால் மறக்க முடியவில்லை அவனின் வாக்கியங்களை. 10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வந்த அன்று நான் பள்ளிக்குப் போய் மதிப்பெண் பார்த்துவிட்டுத் திரும்பிய மாலையில் வீட்டிற்கு வந்தவுடன் அவனிருக்குமிடம்தேடி ஓடினேன். ஆடுகளைப் பட்டிக்குள் அடைத்துக் கொண்டிருந்தான். அவனாக எதுவும் கேட்கவில்லை. இருந்தும் சொன்னேன், "ரமேஷ் நாந்தாண்டா முதல் மார்க். 500 க்கு 439." அவன் சலனமின்றிச் சொன்னான்,"பொய் சொல்லாதீங்க" அதிர்ச்சியில் உறைந்துபோய்க் கேட்டேன், " ஏண்டா நம்பமாட்டேங்குறே?"
அவன் திருப்பிக் கேட்டான், "நீங்கெல்லாம் படிச்சதுக்கு மொதல் மார்க் வாங்க முடியுங்களா?" அப்போது அவன் என்னைக் குறைத்து மதிப்பிட்டதற்குக் கோபம் கொண்டேன் என்றாலும் இப்போது உணர்ந்து கொண்டிருக்கிறேன், "ரமேஷ்களின் புத்திக் கூர்மைகளுக்கு வாய்ப்புக் கிடைக்காத இடங்களில் செல்வநாயகிகள் ஜெயிப்பதில் பெருமை கொள்ள என்ன இருக்கிறது?" என்பதை.
30 Comments:
ம்... பாவம் ரமேஷ்... இல்லையா?
ஆண்டவன் ஏன்தான் இந்த ஏழ்மையைப் படைத்தானோ?
செல்வநாயகி,
மனதை உருக்கிய பதிவு. மிகவும் நேர்த்தியாகச் சொல்லியுள்ளீர்கள். எப்போது தான் எமது இனம் இந்த மனிதாபிமானமற்ற ஈனச் செயல்களை விட்டு மனிதரகா வாழப்போகிறதோ!
வள்ளுவன்
பாரதி
பெரியார்
இவர்கள் இடித்துரைத்தது எல்லாம் விழலுக்கு நீர் பாய்ச்சியது போல் ஆனதோ?
//"ரமேஷ்களின் புத்திக் கூர்மைகளுக்கு வாய்ப்புக் கிடைக்காத இடங்களில் செல்வநாயகிகள் ஜெயிப்பதில் பெருமை கொள்ள என்ன இருக்கிறது?"//
என்ன சொல்ல?! வாயடைக்கச் செய்துவிட்ட வரிகள். மிக நல்ல பதிவு செல்வநாயகி.
ஒவ்வொரு முழுஆண்டுத்தேர்வு விடுமுறையை கிராமத்து வீட்டில் கழிக்கும் இரண்டு மாதங்களும் எங்கள் வாழ்க்கையும் இதேதான். எங்கள் வீட்டில் வேலை செய்தவர்களில் சிலர் எங்களுக்கு ஹீரோ மாதிரி.
களிமண்ணில் ரேடியோ, டிராக்டர் எல்லாம் செய்யக் கற்றுத்தருவது, நுணா காய்கள் மற்றும் சீவாங்குச்சிகளில் தேர் செய்து தருவது என்று அவர்களின் க்ரியேட்டிவிட்டி இன்றைக்கும் ஆச்சர்யப்படுத்துகிறது. எங்கள் கூட்டுக் குடும்பத்தில் நாங்கள் ஏழு குழந்தைகள். ஆளாளுக்கு போட்டி போடுவோம் அவர்களிடம் எங்களுக்குத் தெவையானதைச் செய்துகொள்ள. வீட்டுக்குத் தெரியாமல் அவர்களுடன் நீச்சல் கற்க ஏரிக்குச் சென்ற நாட்கள் இன்னும் பசுமையாய் மனதில்.
அவர்கள் சொல்லும் விடுகதைகள் ஒன்றுக்கு கூட நாங்கள் சரியாய் பதில் சொன்னதில்லை! இப்படி இன்னும் எவ்வளவோ...
உங்கள் பதிவின் தாக்கத்தில், இவர்களைப் பற்றி விரைவிலேயே நானும் எழுதக்கூடும் :)
நன்றி!
முன்பே படித்திருக்கிறேன். அவ்வப்போது கடைசி வரிகளை சிந்திப்பதும் உண்டு. மறக்க முடியாத வரிகள்.
சத்தியா,
நானும் சாதிகளைக்கூடக் கடவுள்தான் படைத்தார் என்று ஒரு காலத்தில் நம்பித்திரிந்தது உண்டு. அந்த நம்பிக்கை பொய்யென்று புரிகிறபோது பல உண்மைகளை அறிவதற்கான கதவுகள் திறக்கின்றன.
வெற்றி,
எந்தச் செயலுக்கும் விதி என்றோ, அவன் கர்மவினை என்றோ காரணம் சொல்லி அதை ஏற்றுக்கொள்ளவும் செய்யும் உத்திகள் வாழும்வரை இவைபோன்றவைகள் இயல்பெனவே தொடர்ந்துகொண்டிருக்கும் இங்கு.
அருள்,
கிராம அனுபவங்கள் முக்கியமானவை. உங்களுக்கு அது வழங்கிய அருமையான தருணங்களை என்னால் உணரமுடிகிறது. எனக்கும்
வாழ்வை, இயற்கையை, மனிதர்களை நேசிக்கக் கற்றுக்கொடுத்தது என் கிராமத்து வாழ்க்கைதான்.
நேசக்குமார்,
மெல்லிய சோகம் படர ரமேஷ்களின் இருப்பைப் பகிர்ந்துகொள்வதில் நம் சமூகத்தில் எந்தச் சிக்கலும் இருப்பதில்லை. ஆனால் அதுவே அதற்கான காரணங்கள், அவற்றின் சூழ்ச்சிகள் என்று விவாதிக்க ஆரம்பிக்கையில் வேறுமாதிரி ஆகிவிடுகிறது.
பத்மா,
உங்களைப் போல் இன்னும் சிலராலும் இது ஏற்கனவே "தோழியரில்" வாசிக்கப்பட்டதுதான். நான் எழுதியவற்றினைச் சேமித்துக்கொள்ளவே இந்த மீள்பதிவு.
வாசித்துப் பின்னூட்டிய உங்கள் அனைவருக்கும் நன்றி.
செல்வநாயகி
உங்களுக்கு சேமித்து கொள்ள என்றானாலும் எனக்கு எண்ணங்களை மீண்டும் தூண்ட, வாய்ப்பில்லாமல் வாடுபவர் கண்டு எப்படி வாய்ப்புக்களாஇ ஏற்படுத்தலாம் என்றும் எனக்கு அந்த வாய்ப்புக்களை தந்த பெற்றோருக்கு நன்றி சொல்லவும் கூட உதவும்.
செல்வநாயகி,
பள்ளியில் படித்து நல்ல மதிப்பெண் வாங்கி கழுத்தில் பட்டிக் கட்டிக் கொண்டால்தான் முன்னேற்றம் என்று நாம் நினைத்துக் கொள்கிறோம். அது இல்லாமலேயே படிக்காத மேதைகளாக எத்தனையோ பேர் தன் நிலையிலேயே ஒளிபரப்புவதை அழகாகக் காட்டி விட்டீர்கள்.
சாதிக் கொடுமையினால் ரமேஷ் படிக்கவில்லை என்பது இதன் செய்தியாக இருந்தாலும், திட்டமிட்டுச் செய்யாத உங்கள் வீட்டின் மனித நேயமும், தன்னைச் சேர்ந்த எல்லோரையும் கட்டிப் போட்ட ரமேஷின் திறமையையும், உங்கள் மதிப்பெண்களை அதற்குரிய இடம் கொடுத்து கருத்துச் சொல்ல முடிந்த அவரது தன்னம்பிக்கையையும் புரிந்து கொள்ள முடிந்தது.
சுட்டிய அருளுக்கு நன்றி.
அன்புடன்,
மா சிவகுமார்.
நானும் சில முகவரிகளைத் தேடுவதால், உங்கள தலைப்பு பதிவை வாசிக்கத் தூண்டியது. இடையில் நிறுத்தாமல் வாசித்து முடித்தேன். முடிவில் கண்ணில் கண்ணீர்த் துளிகள்.
உணர்ந்து எழுதியிருக்கீங்க...அருமையா இருக்கு
பதிவில் ஆங்காங்கே கொஞ்சம் கேப் இருந்தா நல்லாருக்கும்...
எனிவே உருக்கிட்டீங்க...
சிவகுமார், கலை, ஆழியூரான், மங்கை, செந்தழல் ரவி
உங்களின் வருகைக்கும் மறுமொழிகளுக்கும் நன்றி.
என்ன சொல்றதுன்னே தெரியல....மனசை ரெம்ப பாதித்துடுச்சு. இன்னும் எத்தனை பெரியார் இந்த மண்ணில் பிறக்க வேண்டுமோ இந்த மாதிரி அவலம் நீங்க
ஸ்ருதி,
உங்கள் கருத்துப் பகிர்வுக்கு நன்றி.
மிக நுட்பமான உணர்வுகளைக் கொண்டமைந்த பதிவு செல்வநாயகி,
"கூட இருந்தபோது தொடமுடியாமல் போனவனும், தொட நினைக்கும்போது, கூட இல்லாது போனவனும் அவன்."
என்ற வரிகள் மிகவும் பிடித்தன. எத்தனையோ ரமேஷ்கள் இருப்பார்கள். அவர்களை வெளிக்கொணர்ந்து சின்ன வலியை மனசில் விட்டுச்செல்ல எத்தனை செல்வநாயகிகள் இருக்கிறார்கள்? பின்னூட்டங்களின் பெயர்களில் புளொக்கர் பூச்சி அடித்திருக்கிறது. அதனால் யார் என்ன சொன்னார்கள் என்று தெரிந்துகொள்ள முடியவில்லை.
தமிழ்நதி
உணர்வை உருக்கிய இன்னொரு பதிவு!
தமிழ்நதி,
நாம் நினைத்தபடி நம்மை இயங்கவிடாமல் தடுக்கும் புறக்காரணிகள் பால்யத்திலிருந்து வயோதிகம் வரைக்கும் சமூகத்தின் கரங்களிடமிருந்து சுரந்துகொண்டேயிருக்கின்றன அல்லவா? எதிர்க்கமுடியாமல்போன கையாலகத்தனங்களும், எதிர்க்கையில் ஏற்படுகின்ற பிரச்சினைகளும் பகிர்ந்துகொள்ளப்பட எழுத்து ஒரு அருமையான கருவியாகிவிடுகிறது இல்லையா? மரணம் பற்றிய உங்கள் இடுகை, கூடவே சென்னை பற்றிய சமீபத்திய இடுகை இரண்டும் படித்து முடித்தேன். பேசாமல் நான் எழுதுவதை நிறுத்திவிட்டு உங்களின் எழுத்துக்களை வாசித்துக்கொண்டு இருந்துவிடலாமென யோசிக்கிறேன் சிலநேரங்களில்:)) ஆமாம், நம் அலைவரிசைகள் நிறையவே ஒத்திருக்கின்றன.
சிந்தாநதி,
இதுமாதிரி இன்னும் சில மனிதர்களைப் பற்றியும் ஒரு தொடராக எழுத நினைத்து இரண்டுவருடங்கள் முன் ஆரம்பித்தது. சிலபாகங்களோடு நிறுத்தியிருந்தேன். இப்போது நீங்களெல்லாம் தரும் உற்சாகத்தில் அதைத் தொடரலாமெனத் தோன்றுகிறது.
இருவருக்கும் நன்றி.
எழுத்தாளர் பாமரன் எழுதியது...
அன்புத் தோழி...ஆண்டுகள் பலவாயிற்று இப்படி ஒருஎழுத்தைப் படித்து...எல்லா உணர்வுகளும் அற்றுப் போய் விட்டதோ..எல்லாம் மரத்துப் போய் விட்டதோ என கொஞ்ச நாளாய் மனதின் ஓரத்தில் ஒரு எண்ணம்....இல்லை அது எங்கும் போய் விடவில்லை...உள்ளுக்குள்தான் உறைன்து கிடக்கிறது என்பதை உணர வைத்தது உங்கள் எழுத்து...
நன்றிகளுடன்,
பாமரன்
என் வலைப்பூ
From Chella: Dear Selvanayaki, he is ... popular writer Pamaran ... since he dont have a blogger account he used mine - Anbudan Chella
வணக்கம் பாமரன்,
என் கல்லூரிக்காலத்திலேயே அங்கங்கு கிடைத்த உங்கள் எழுத்துக்களை வாசித்துக்கொண்டிருந்த நினைவு வருகிறது. நீங்கள் என் பதிவைப் படித்ததும், மறுமொழியிட்டதும் மகிழ்ச்சி எனக்கு. உங்களைப் போன்றவர்களும் படிக்கிறீர்கள் என்பதை அறியும்போது எழுத்தில் அது மேலும் பொறுப்புணர்வைக் கூட்டும் என் போன்ற பதிவர்களுக்கு. நன்றி உங்களுக்கும், உங்கள் மறுமொழியை எனக்கு அனுப்பி உதவிய செல்லாவுக்கும்.
/கூட இருந்தபோது தொடமுடியாமல் போனவனும், தொட நினைக்கும்போது, கூட இல்லாது போனவனும் அவன். /
/"ரமேஷ்களின் புத்திக் கூர்மைகளுக்கு வாய்ப்புக் கிடைக்காத இடங்களில் செல்வநாயகிகள் ஜெயிப்பதில் பெருமை கொள்ள என்ன இருக்கிறது?" என்பதை.
/
சொல்வதற்கு வார்த்தைகளை தேட வேண்டியுள்ளது... செல்வநாயகி!
வழக்கம்போல்... (உருக்கிய)இன்னொரு பதிவு!
நன்றி தென்றல்.
கையெடுத்துக் கும்பிட வைக்கும் எழுத்துக்காரிக்கு,
வாழ்க; வளர்க.
முதன்முதலாய் ஒரு பின்னூட்டத்துக்குப் பதில் சொல்லத் தெரியாமல் மௌனமாகிறேன் தருமி. அந்த மௌனத்தில் மீண்டும் ரமேஷ் தன் முட்டைக் கண்களுடனும், பச்சரிசிப் பற்களுடனும் ஒரு முண்டாசு பனியனுடன் செவப்புத்துண்டு உருமாலையும் கட்டிக்கொண்டு என் அதே பால்யவயது சினேகிதனாய் வந்து கண்களுக்குள் நின்று நீர்கட்டவைக்கிறான்.
நீங்கள் பெரியவர். வாழ்வின் சுழலுக்குள் எதிர்த்தாடியபடியும், சிலநேரம் எல்லாவற்றையும்விட என்னைக்காப்பதே முக்கியமாய் ஆகி அதன் போக்கிலேயே நீந்துபவளுமாய் இருக்கிற ஒரு சாதாரணப் பிரதியான எனக்காக உங்களைப் போன்றவர்களிடமிருந்து இவ்வளவு பெரிய வார்த்தைகள் வேண்டாம்.
எனவே அந்த மறுமொழியில் இருக்கிற மரியாதையை வடிகட்டி எடுத்துவிட்டு அன்பை மட்டும் பிரித்தெடுத்துக்கொண்டேன். அன்பு கனப்பதில்லை அது எவ்வளவு பெரிதாக இருந்தாலும். அதற்கு நன்றி.
என்னம்மா நீங்க ...
ஒவ்வொருமுறையும் ஒரு விகசிப்போடுதான் உங்கள் எழுத்தை வாசித்து முடிக்க வேண்டுமா? என்ன 'தண்டனை' இது ..
மீண்டும் மௌனம் தருமி:))
//"ரமேஷ்களின் புத்திக் கூர்மைகளுக்கு வாய்ப்புக் கிடைக்காத இடங்களில் செல்வநாயகிகள் ஜெயிப்பதில் பெருமை கொள்ள என்ன இருக்கிறது?" என்பதை.//
சுளீரென உரைத்த உண்மை. உண்மை சுடும்...
உதயகுமார், delphine,
நன்றி.
such a open posting , no additions,deletions, i felt i was witnessing all te happenings, superb post mam
நன்றி ரோகிணிசிவா.
enna solla...
manasu romba kanama irukku...
intha suyanalam pudicha manusangala
enna panrathu....
Ramesh V
ரமேஷ்,
புரிதலுக்கு நன்றி.
Post a Comment
<< Home