அனைவரும் சமமா?
சில மாற்றுக்கருத்துக்களை முன்வைக்கும்முகமாக சக்தியில் "கற்றதனால் ஆன பயனென்ன? எழுத ஆரம்பித்துப் பின் நண்பர் செந்தில்குமரன் அவர்கள் அதில் திருநங்கைகள் பற்றிச் சிலகுறிப்புக்களை இட்டிருந்ததால் அதன் தொடர்பாக எழுந்த எண்ணங்களை ஒரு இடுகையாக இட்டிருந்தேன். அதில் அரச இயந்திரமான ஒரு மாநகராட்சி அலுவலகம் வரிவசூலிக்க அரவாணிகளைப் பயன்படுத்தியவிதம்பற்றியும் சுட்டியிருந்தேன். இன்று வெளிவந்திருக்கும் ஆனந்தவிகடனில் "தமிழ்மண்ணே வணக்கம்" பகுதியில் எழுதியிருக்கும் தமிழ்நாடு திருநங்கைகள் சங்கத் தலைவர் ஆஷா பாரதி அவர்களும் மேற்சொன்ன விடயத்தை விமர்சித்திருக்கிறார். மேலும், அரவாணிகள் சுய உதவிக்குழுக்கள் அமைப்பதற்கு அனுமதி கிடைத்திருப்பதிலிருந்து, நம் நாட்டில் அரசியலமைப்புச் சாசனம் சொல்வதுமாதிரி உண்மையிலேயே அனைவரும் சமமா? என்பதுவரை அவர் முன்வைத்திருக்கும் கருத்துக்களை இங்கிருக்கும் இவ்விடயத்தில் ஆர்வமுள்ளவர்களின் பார்வைக்காக விகடனிலிருந்து எடுத்து இட்டிருக்கிறேன். விகடனுக்கு நன்றி.
பார்வையற்ற ஒருவர் வீதியில் போனால், கைப்பிடித்து அழைத்துக்கொண்டு போக உங்கள் நல்ல மனசு முன்வருகிறது. கால் ஊனமான ஒருவர் நடந்து போவதைப் பார்த்ததும், கண்களில் கருணை பொழிய உங்கள் டூ&வீலரில் இடம் தருகிறீர்கள்.ஒவ்வொருவருக்குள்ளும் உறைந்துகிடக்கும் மனித நேயத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தவறாமல் பயன்படுத்திக்கொள்கிறீர்கள். மிக மிகப் பாராட்டுதலுக்குரிய விஷயம் இது. ஆனால்...
‘ஏய்... ஒம்போது!’ ‘ஹே, உஸ்ஸ§ வருதுடா..!’ &இப்படி வார்த்தைகளால் தினம் தினம் துகிலுரியப்பட்டு அவமானத்துக்கு ஆளாகும் அரவாணிகளைப் பற்றி எப்போதேனும் உங்கள் மனிதாபிமான மனம் சிந்தித்திருக்கிறதா? இயற்கையின் அச்சுப்பிழையாகப் பிறந்துவிட்ட ஜீவன்களைப் பற்றி நீங்கள் அக்கறை கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை... ‘ஏன்தான் இந்தப் பொறப்பு பொறந்தோமோ?’ என்று அரவாணிகளைக் கூனிக் குறுக வைக்கிற அலட்சியப் பார்வை பார்க்க வேண்டாமே, ப்ளீஸ்! இரக்கத்துக்குக் கூடத் தகுதியற்றவர்களாக மாறுவதைப் போன்ற வாழ்க்கைத் துயரம் வேறென்ன இருக்க முடியும், சொல்லுங்கள்?
சீராட்டிப் பாராட்டி வளர்த்த வீடும், உறவுகளும் திடீரென்று தூக்கியெறிவதும், துரத்தியடிப்பதும் விலங்குகளுக்குக்கூட நடைபெறாது. ஹார்மோன்களின் விபரீத விளையாட்டில் ‘ஜோக்கர்’ ஆக்கப்பட்ட ஜீவன்களைப் புரிந்துகொள்கிற பக்குவம் செம்மொழி பேசும் தமிழ்ச் சமூகத்துக்கு எப்போது வரும்? ‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது. அதிலும் கூன், குருடு, செவிடு, பேடு நீங்கிப் பிறத்தல் அரிது’ என்று பாலியல் திரிபையும் ஓர் ஊனமாகவே பார்த்த தமிழ் இலக்கியத்தின் முதிர்ச்சி, தமிழர்களின் வாழ்வில் இன்னும் வரவே இல்லை.
மூளைக் குறைபாட்டோடு பிறந்த ஒரு குழந்தையை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உள்ள குடும்பம், ஆணாகப் பிறந்து பெண் தன்மையுடன் வளரும் ஒரு குழந்தையைச் சகித்துக்கொள்ளக்கூடத் தயாராக இல்லை. வெறுக்கும் பெற்றோர், கேலி செய்யும் நண்பர்கள் என எல்லோரையும் துறந்து வேறு வழியின்றி தன் அரவாணி சமூகத்தைத் தேடி வெளியூர், வெளி மாநிலம் சென்று பிச்சையெடுப்பதிலும், பாலியல் தொழில் செய்வதிலும் மொத்தமாகத் தொலைந்து போகிறார்கள் அரவாணிகள்.
‘பேடி, அலி, உஸ்ஸ§, ஒம் போது’ என வார்த்தைகளால் காயப்படுத்தாமல் ‘அரவாணி’ என்று கௌரவமாக அழைக்க வேண்டும் எனச் சமூகத்துக்கு வேண்டுகோள் வைத்து, எங்க ளுக்குப் பெயர் சூட்டியவர் ரவி என்கிற ஐ.பி.எஸ். அதிகாரி. 1997&ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம், கூவாகம் திருவிழா மேடையில், ‘அரவானின் மனைவி களான இவர்களை இனி அரவாணி என அழைக்க வேண் டும்’ என்று வேண்டுகோள் விடுத்தார் அந்தக் காவல்துறை உயர் அதிகாரி. ஆனால், சமூ கத்தில் அரவாணிகளை அதிகம் துன்புறுத்துவதில் காவல்துறை யினருக்கும் கணிசமான பங்குண்டு. விபசார கேஸ் முதல் கஞ்சா கேஸ் வரை வழக்குப் போட ஆட்கள் சிக்கவில்லையென்றால், அரவாணிகள்தான் ஆபத்பாந்தவர்கள். அவர்கள் மீது அக்கறை கொண்டு கேள்வி கேட்க இங்கே என்ன நாதி இருக்கிறது?
திரைப்படங்களில் குதிரைகளை, நாய் களை, பறவைகளைப் பயன்படுத்தினால், ‘அந்த ஜீவராசிகளைத் துன்புறுத்தவில்லை’ என்று ப்ளூகிராஸ் சங்கத்திடம் சான்றிதழ் வாங்கித் தந்தால்தான் அந்தப் படத்தை வெளியிட முடியும். கண்களில் விளக்கெண் ணெய் விட்டுக் கொண்டு விலங்குகள் துன்புறுத்தப்படுகின்ற னவா என்று பார்க்கிற சென்சார் போர்டு உறுப்பினர்களுக்கு, அர வாணிகளை வைத்து எடுக்கப்படும் அருவருப் பான நகைச்சுவைக் காட்சிகள் மட்டும் கண்களில் படவே படாது. அப்படி விலங்குகளின் மீது காட்டுகிற அக்கறையைக்கூட அரவாணிகளுக்குக் காட்ட முடியாமல் இறுகிப் போயிருக்கிறது நம் சமூகத்தின் மனம்.
தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவரை, அவமானப்படுத்தும் நோக்கத் துடன் அந்தச் சாதியின் பெயரைச் சொல்லித் திட்டினால், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியும். ஆனால், ‘டேய் ஒம்போது’ என்று எல்லோரும் திரும்பிப் பார்க்கும்படி கூப்பிட்டால், அதற்குப் பெயர் நகைச் சுவை. ஒரு பெண்ணை வார்த்தைகளில் கிண்டல் செய்தாலே ‘ஈவ் டீஸிங்’ வழக்கில் கடுமையாகத் தண்டிக்க முடியும். ஆனால், அராவணி களின் உடலைத் தொட்டுப் பலருக்கு முன்னால் பாலியல் தொந்தரவு செய்தாலும், அது அனைவருக்கும் சிரிப்பு வரவழைக் கும் பொழுதுபோக்கு. சாதிப் பாகுபாடு பார்ப்பது, அவமதிப்பது மனித உரிமை மீறல்! அதை வலியுறுத்த அரசு, நீதிமன்றம், அறிஞர்கள், அமைப்புகள் எனப் பல ஆதரவுக் குரல்கள் உள்ளன. ஆனால், இன்னும் மனிதர் களாகவே அங்கீகரிக்கப்படாத அரவாணிகளின் உரிமை பற்றிப் பேச எத்தனை பெரிய மனிதர்கள், அரசியல் கட்சிகள், மனிதநேய சிந்தனையாளர்கள் இருக்கி றார்கள்?
கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் வேலை பார்ப்பதற்கும் அரவாணியாக இருப்பதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனால், இங்கே எவ்வளவுதான் கூர்மையான அறிவுத்திறன் கொண்டவ ராக இருந்தாலும், அவர் அர வாணியாக இருந்தால் வேலை பார்க்கிற சூழல் அவரை ஒப்புக் கொள்வதில்லை. கரியாலி ஐ.ஏ.எஸ். அவர்கள் இரண்டு அரவாணிகளுக்கு அரசு சார்பு நிறுவனத்தில் உதவியாளர் வேலை வாங்கித் தந்தார். கொஞ்ச நாளிலேயே அந்த வேலை வேண் டாம் என்று வந்துவிட்டனர் அவர்கள். ‘படித்தவர்களும் மனிதத் தன்மையோடு இருப்ப தில்லை’ என்பதே அவர்கள் சொன்ன காரணம்.
சமூகம் தருகிற நிர்பந்தங்களால்தான் அரவாணிகள் தவறான பாதையில் போகின்றனர். 2,000 ரூபாய் வாடகை தரக்கூடிய வீட்டுக்கு 4,000 ரூபாய் தருவதாக இருந்தாலும், அரவாணி களுக்கு வீடு மறுக்கப்படும் தேசத்தில் எங்கே போய் வாழ்வது?
மத்தியப் பிரதேசத்தில் கமலா ஜான் என்கிற அரவாணி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அதை எதிர்த்து வழக்குத் தொடுத் தார்கள். ஷப்னம் என்கிற அரவாணி அதே மாநிலத் தில் சட்டமன்ற உறுப்பின ராக மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட வழக்கிலும் சட்டம் அரவாணிகளைச் சமமாகப் பாவிக்கவில்லை. அரவாணிகளுக்கு எந்தச் சட்டப் பாதுகாப்பும் இல்லை என்பதுதான் பெரிய சோகம். ‘எங்களை ஏன் இப்படிப் படைத் தாய்?’ என்று கோயிலுக்குச் சென்றும் கடவுளைக் கேட்க முடியாது. காய்ச்சல் என்றால் மருத்துவமனைக் குப் போக முடியாது. உரிமை கேட்க நீதிமன்றமும் போக முடியாது. படிக்க பள்ளிக்குப் போக முடியாது. ஆத்திர அவசரத்துக்குக் கழிப்பிடம்கூடப் போக முடியாது. அரவாணிகள் எங்கு போனாலும் அவர்களைக் கறுப்பு நிழல்கள் போலத் துரத்திக்கொண்டு இருக்கின்றன அவமானங்கள்.
மேல் நாடுகளில் அரவாணிகளுக் குச் சட்டப் பாதுகாப்பு இருக்கிறது. அங்கே அவர்கள் ஒரு நிறுவனத்தில் படித்து வேலை பார்ப்பதில் பிரச்னை கள் இல்லை. சின்னச் சின்ன அவ மானங்களைத் தவிர, அவர்களும் அங்கே மனிதர்களாக மதிக்கப்படு கிறார்கள். ஆண், பெண் போல ‘பால் மாறியவர்கள்’ என மூன்றாவது ஒரு பிரிவாக அரவாணிகளைச் சட்ட பூர்வமாக அங்கீகரித்திருக்கிறது ஜப்பான் அரசு. நமது அரசாங் கங்களோ பலவீனமானவர்களைப் பலியாடுகளாக்கும் தந்திரத்தை அரவாணிகள் விஷயத்திலும் செய் கின்றன. மும்பை மாநகராட்சியில் வரி வசூல் செய்ய அரவாணிகளைப் பயன்படுத்தினர். அவர்களுக்குச் சமூக அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்பதல்ல நோக்கம். ‘அரவாணிகள் ஆபாசமாகப் பேசுகிறவர்கள்; அவர் கள் கடைகள், வீடுகள் ஏறி தினம் தினம் வருவதை யாரும் விரும்ப மாட்டார்கள். உடனே வரி கட்டி விடு வார்கள்’ என்கிற குயுக்தியான நோக் கத்தில் ஒரு அரசே செயல்பட்டது.
தமிழகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் போல அரவாணிகளும் சுய உதவிக் குழுக்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இது போதாது! இன்னும் அங்கன்வாடி பணியாளர்களாக, அலுவலக உதவி யாளர்களாக, சுய தொழில் முனை வோர்களாக அரவாணிகள் பணிபுரிய சமூகமும், அரசும் ஆவன செய்ய வேண்டும். இப்போது அரவாணி களின் பிரச்னைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்துக்கு வந்துகொண்டு இருக்கின்றன. அதற்கு, நம் சமூகம் பண்பட்டு வருகிறது என்பதல்ல காரணம்! உலகமே கண்டு அஞ்சுகிற எய்ட்ஸ் நோய்தான் காரணம். பாலியல் தொழிலாளர்களாக இருக்கிற அரவாணிகளைத் தவிர்த்து எய்ட்ஸ் விழிப்பு உணர்வுப் பிரசாரம் செய்ய முடியாது. அந்த வகையில் ஒதுக்கப் படுகிற பணம், அரவாணிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு தருகிற அம்சமாக மாறி வருகிறது. மனிதர் களுக்கு நன்றி கூற முடியாமல், எய்ட்ஸ§க்கு நன்றி தெரிவிக்க வேண்டிய துர்பாக்கியசாலிகளாக இருக்கும் அரவாணிகள் இந்தச் சமூகத்தின் முன் வைக்கிற கேள்வி ஒன்றே ஒன்றுதான்...
‘அனைவரும் சமம்’ என்று சொல்கிற அரசியல் சாசனத்தின் அர்த்தம் மிகுந்த வார்த்தைகளில் உள்ள ‘அனைவரும்’ என்ற சொல்லில் அர வாணிகளும் இருக்கிறார்களா, இல்லையா?
நாகரிகம் அடைந்தவர்கள் பதில் சொல்லட்டும்!
8 Comments:
செல்வநாயகி!
மிக நல்ல சிந்தனைகள்.
ஐரோப்பியத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அடிக்கடி தோன்றும் ஒரு அரவாணிக்குக்குக் கிடைக்கும் முக்கியத்துவத்தைப் பார்த்தபோது, எங்கள் தமிழ்த் திரைப்படச்சிந்தனையாளர்களின்மீது ஆத்திரமேற்பட்டது.
அரவானிகள் விடயத்தில் எங்கள் சமுகப்பார்வை எட்ட வேண்டியதூரம் மீற்றர்களில்ல கிலோமீற்றர்களில் உள்ளது.
பதிவுக்கு நன்றி!
நல்ல சீர்திருத்த பதிவு. ('பூங்கா' கவனிப்பார்களாக)
கொக்கரிக்கும் ஆண்கள் முக்கியமாக புரிந்துகொள்ள வேண்டியது யாதெனில், நாளைக்கு பிறக்கும் அவர்களின் ஆண் பிள்ளைகளிலும் ஒருசிலர் இப்படி அரவாணர்களாக மாறக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது என்பதைத்தான். அவர்கள் பெற்ற பிள்ளைகள் இதுபோன்ற இக்கட்டான வாழ்க்கை வாழ்வதை, அவமானப்படுத்தப்பட்டு சமுதாயத்தால் நசுக்குப்படுவதை, மனம் இல்லாத பொருளாக கருதப்படுவதை பொருத்துக் கொள்வார்களா? மற்றவர்களின் மனதை நோகடிப்பது 'பாவம்' என சிறுவயதில் நமக்கு நம் பெற்றோர்கள் சொலலி கொடுத்ததை வாலிபத்தில் மறந்துவிடுகிறோம். உடலால் மாறுபட்டிருந்தால் என்ன? உள்ளம் உன்றுதானே. எது எப்படி இருந்தாலும் மற்றவர்களின் வித்தியாசம் மாற்றங்களுடன் வருபவர்களை இருப்பதுபோல் ஏற்று வரவேற்று குறை ஏதும் தேடாமல் நம்
பறந்தமனதை திறந்துவிடுவோம்.
மனிதம் காப்போம்.
அன்புடன் மாசிலா!
அரவானிகளின் சோகங்களை சொல்லி உள்ளீர்கள்.
மக்கள் மணம் மாற வேண்டும் என எதிர்பாராமல் அரசு கடுமையான் சட்டங்கள் போட்டு நிறைவேற்ற வேண்டும்.
//மற்றவர்களின் மனதை நோகடிப்பது 'பாவம்' என சிறுவயதில் நமக்கு நம் பெற்றோர்கள் சொலலி கொடுத்ததை வாலிபத்தில் மறந்துவிடுகிறோம்
//
இதுவும் உண்மை
நன்றி
வசந்த்
மலைநாடான், மாசிலா, வசந்த்,
உங்களின் மறுமொழிகளுக்கு நன்றி.
மாசிலா,
///'பூங்கா' கவனிப்பார்களாக///
திருநங்கைகள் பற்றிய என் கருத்துக்களை நான் சக்தியில் இட்டிருக்கிறேன். இது ஆஷா பாரதி அவர்கள் விகடனில் எழுதியது. அங்கிருந்து எடுத்து இட்டிருக்கிறேன். பிற இதழ்களில் ஏற்கனவே வந்தது பூங்காவில் வெளியிடப்படாது என்பது நீங்களும் அறிந்ததுதானே?
வரிக்குவரி நம்மவருக்குச் சாட்டையடிதான் கொடுத்துள்ளீர்கள்!!!சட்டங்களால் மாத்திரம் இவர்களைப் பாதுகாக்க முடியாது. இது நம் வீட்டினுள் வந்தால் என்ற நிலையை உணரும் போது அவர்கள் மேல் விச(ம) பார்வை மறையும்.கனிவு வரும். எனினும் இப்போ சற்று மாற்றம் உள்ளது நம்பிக்கை தருகிறது; ஆனால் இந்த திரைத்துறை இவ்விடயத்தில் மாறியே ஆகவேண்டும்.
நல்ல பதிவு பாராட்டுக்கள்.
யோகன் பாரிஸ்
அக்கரை மிகுந்த மறு பதிவுக்கு நன்றிகள்!
இது கயமைக்க போடப்பட்ட பின்னுட்டம்.
//கொக்கரிக்கும் ஆண்கள் முக்கியமாக புரிந்துகொள்ள வேண்டியது யாதெனில்,//
இந்த வரிகளுடன் சற்று .... அல்ல, அல்ல,..... முற்றிலும் மாறுபடுகிறேன்.
இதில் ஆண்களை மட்டும் குறை சொல்லி பயனில்லை.
தங்களையும் பெண்கள் என்வே நம்பும் அரவாணிகளுக்கு ஆதரவு அளிக்க மறுப்பதில், பெண்களுக்கும் பெரும் பங்கு இருக்கிறது.
அவர்களும் சற்றும் குறைவில்லாமல், இவர்களை அவமதிப்பதில் தம் பங்கை செவ்வனே ஆற்றி வருகிறார்கள் என்பதே உண்மை.
திருத்தப்பட வேண்டிய எத்தனையோ இந்திய நிகழ்வுகளில் இதுவும் ஒன்று!
வெடகி தலைகுனிய வேண்டிய நேரம்...
அருமையான பதிவு..
சூர்யா
துபாய்
butterflsurya@gmail.com
Post a Comment
<< Home