தோழிமார் கதை
எந்தத் திட்டமிடலுமில்லாது டிசேவின் வைரமுத்து பற்றிய இடுகையைப் படித்ததன் விளைவாய் இதை எழுதும் விருப்பம் ஏற்பட்டது. இணையத்தில் எழுத ஆரம்பித்தபோதிருந்த ஆர்வம் எனக்கு நிச்சயமாய் இந்தமாதிரி இலக்கியம் சார்ந்ததாக மட்டுமே இருந்ததெனலாம்.
ஊரைவிட்டுக் கிளம்பும்வரை கம்பன்விழா, சிலப்பதிகாரவிழா, திருக்குறள்விழா, இன்னபிற சட்டம்சார்ந்த விழிப்புணர்வுக் கூட்டங்களில் எல்லாம் உரையாற்றி மக்களைக் கொல்கிற மாபெரும் வேலையும் செய்துகொண்டிருந்ததிலிருந்து விடுபட்டு வந்திருந்ததன் தாக்கமே
இணையத்தில் தமிழ் தேட வைத்தது. அதுவரை கவிதைகளைப் பேசி மட்டும் மக்களைச் சிரமப்படுத்திக்கொண்டிருந்ததிலிருந்து சிறிது மாறுபட்டு கவிதை எழுதிக் கவிதையையே கொல்லும் செயல் மேற்கொள்ளப்பட்டது. பிறகு ஊருக்கு ஒரு விடுமுறைக்குப் போனபோது
"அங்குபோனபின் தமிழுடனான தொடர்பு எப்படியுள்ளது?" என்று முந்தைய இலக்கியவட்ட நண்பர்கள் கேட்க, ஒரு நேர்மறைப்பதிலாக இருக்கட்டுமென்று "ஓ அது நன்றாகவே உள்ளது, நான் இப்போது கவிதைகள் எழுதவும் ஆரம்பித்துவிட்டேன்" என்று சொல்லப்போக
அவர்களும் "காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு" என்று கருதி என் பயணத்திற்கு முன்பு அவசரமாக அவற்றை அச்சிட்டு வெளியிடுவதும் நடந்து முடிந்தது. வெளியீடெல்லாம் நன்றாகவே இருந்தது. விழாவுக்கு வந்திருந்த 150 பேரில் அன்றே அந்தப் புத்தகத்தை
வாங்கிப்போன 60 பேரை நினைத்தால்தான் அவ்வப்போது கொஞ்சம் கவலையாக இருக்கும். அதில் ஒரு 20 பேர் சொந்தக்காரர்களாய் இருப்பார்கள். அவர்களைப் பற்றி ஒன்றுமில்லை. வளர்த்ததன் பலனை அனுபவித்தேதான் ஆகவேண்டும் அது புத்தகவடிவில் வந்து
கொடுமைப்படுத்தினாலும்.
இங்குவந்து சேர்ந்தபிறகும் "ஹிக்கின்பாதாம்ஸில் உங்கள் கவிதைநூல் கிடைத்தது, வாங்கிப் படித்தேன், பல கவிதைகளும் புரிகிறமாதிரி இருந்தது" என்ற ரீதியில் வந்த சில கடிதங்களிலிருந்து "அப்படியானால் நாம் நவீனக் கவிஞர் ஆகவே முடியாதா?" என்ற விடைதெரியாத கேள்வியின் கணம் அழுத்தத் தொடங்கும். அப்போதெல்லாம் வலைப்பதிவில் நல்ல இரண்டு இடுகைகள் படித்தபின் மனம் அவற்றுடன் போகத்துவங்கி என் புத்தகத்தை நினைவுபடுத்தாமல் நல்லது செய்துவிடும். விற்பனை உரிமையை
கற்பகாம்பாள் பதிப்பகத்துக்கும், கவிதைக்குச் செய்த தீங்குக்குப் பிராயச்சித்தமாய்ப் பணலாபத்தை ஒரு சமூக அமைப்புக்கும் கொடுத்துவிட்டதோடு அதனுடனான தொடர்பைத் துண்டித்துக்கொண்டு இருந்தால், நீண்ட இடைவெளிக்குப் பின் முன்பின் தெரியாத
முகவரியிலிருந்து "I bought ur book through online. 2good" என்று வந்த ஒரு மின்னஞ்சல் நான் மறந்திருந்ததை மீண்டும் நினைவுபடுத்தி "இவர் 2 good என்று சொல்லியிருப்பது முன்னட்டையையும், பின்னட்டையையுமாக இருக்குமோ?" என்று எண்ணத்தூண்டி கலவரத்தை ஏற்படுத்திப்போனது. நிற்க.
மேலேசொன்ன இவ்வளவு சொந்தக்கதைக்குப் பின்னால் ஒரு செய்தி இருக்கிறது. புத்தகம் வெளியிடப்பட்டதையெல்லாம் ஒரு பெரியவிடயமாகவோ, ஒரு தகுதியாகவோ என்னளவில் நான் கருதுவதில்லை. என்னைவிடவும் நன்றாகவும், ஆழமாகவும், மொழிஅழகோடும்
எழுதுகிற பல நண்பர்களை இங்கு படிக்கும்போது மரங்கள் மௌனமாக இருக்க இலைகள் சலசலப்பதுபோல் நான் செய்தது என்று நினைத்துக்கொள்வதுண்டு. ஆனால் ஒன்றுகுறித்து மட்டும் சந்தோசப்பட்டுக்கொள்கிறேன். தேடலும், ஆர்வமும் மட்டும் தேய்ந்துபோகாமல்
வளர்ந்துகொண்டிருக்கிறது இதுநாள்வரைக்கும். பார்வைகள் ஒரே இடத்தில் நின்றுபோகாமல் பயணிக்கவேண்டியதன் அவசியம் புரிந்திருக்கிறது. ஈழத்து இலக்கியத்தின்மீதெல்லாம் இப்போது ஒரு நேசம் வந்திருக்கிறது. அரசியல், சமூகம்சார்ந்த கட்டுரைகளையும் விரும்பிப் படிக்கிற வெறி ஒன்று உருவாகியிருக்கிறது. நா.அருணாச்சலம் அவர்கள் நடத்திய கூட்டமொன்றில் உடன் உரையாற்றிய, ஈழ ஆதரவை ஊடகங்களிலும் தெரிவித்துவரும் நண்பரொருவருடன் "வன்முறையைக் கைக்கொள்வதால் புலிகளும் தீவிரவாதிகளே!"
என்றெல்லாம் வாதிட்டுக்கொண்டிருந்த என் அறியாமையைக் கொஞ்சமேனும் கரைத்தகற்றிக் கண்திறந்து பார்க்கும் ஒருநிலைவரை வந்துநிற்க முடிகிறது. இவையெல்லாவற்றிற்கும் மூலமாய் ஆதியில் என்னை வாசிப்புக்குள் இழுத்துவந்தது வைரமுத்துவின் கவிதைகள்தான்.
(அப்பாடா பேசுபொருளுக்கு வந்தாச்சு!)
என்னைத்தூக்கி வளர்த்த மனிதர்களின் கைகள் ஏர் உழுது உழுது தழும்பானவை. அக்கைகளில் ரேகைகளை எப்படித் தேடிக்கண்டுபிடிக்க வேண்டுமோ அப்படித்தான் நான் வளர்ந்த வீட்டில் புத்தகங்களையும். காமராஜர் காலத்தில் பஞ்சாயத்துத் தலைவராயிருந்த உறவுக்காரத் தாத்தா ஒருவர்தான் கொஞ்சம் "தமிழரசு" புத்தகங்களைச் சேர்த்து வைத்திருந்தார். அதையும் சரஸ்வதிபூசையன்று சாமிகும்பிட மட்டுமே வெளியில் எடுப்பார். பூசைக்கு உதவுவதாய்ச் சொல்லிப்போய் அதில் படம் பார்ப்பதோடு சரி. இவைதவிர ஒரு கும்மிப்பாட்டுப் புத்தகமும், அம்மாவின் ஆதிபராசக்தி வழிபாட்டுப் பாடல்கள் நூலும் இருக்கும். இச்சூழலில் புத்தகவாசிப்புக்கான உந்துதல் உயர்நிலைப்பள்ளி
போகும்வரை ஏற்படவில்லை. மெல்லமெல்லத் தமிழாசிரியை தந்த ஊக்கத்தில் பேச்சுப்போட்டிகளில் ஆர்வம் வந்தபோதுதான் அதற்கான தயாரிப்புகளுக்கென்று அங்கிருந்த நூலகம் பக்கம் போக ஆரம்பித்தது. அப்போதும் திருக்குறள், பாரதி, பாரதிதாசன், உவேசா தாண்டி வரவில்லை. பொழுது சாய்வதற்குக் கொஞ்சநேரம் இருக்க, அம்மா முறுக்கு சுட்டுக்கொண்டிருந்த சாயந்தரம் ஒன்றில் இலங்கை வானொலியில் வைரமுத்து "மரங்களைப் பாடுவேன்" வாசித்துக்கொண்டிருந்தார். அவரின் மொழியோ, உச்சரிப்போ, உணர்ச்சியோ, இல்லை ஏற்கனவே எனக்குப் பிடித்தமானதாயிருந்த மரமோ எது பிடித்ததோ மிகவும் கவரப்பட்டேன். அதன்பின் அவரின் பெயர் கேட்க நேர்ந்தால் அது எதுசம்பந்தமானதென அறியும் ஈர்ப்பு ஏற்பட்டது. ஆனாலும் என் பள்ளி நூலகத்தில் அவரின் நூல்களெல்லாம் இல்லை. காசுகொடுத்து வாங்கும் வசதியுமில்லை.
கல்லூரி வந்தபிறகு அறைத்தோழி ஒருவள்தான் அறிமுகப்படுத்தினாள் முதன்முதலாக அவருடைய "இதுவரை நான்" ஐயும் "இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்" நூலையும். அவள் பாலகுமாரன் கதைகளையும் வைத்திருந்தாள். எடுத்த எடுப்பிலேயே எனக்குப்
பாலகுமாரன் கதைகள் பிடிக்காமல் போனது. "இதுவரை நான்" படித்தபிறகு வைரமுத்துவின் "சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்" என்னும் இளைஞர்களுக்கான குறிப்பாக மாணவர்களுக்கான கட்டுரைத் தொகுப்பைக் காசு கொடுத்து வாங்கினேன். ஒரு மிகச்சாதாரண வாழ்விலிருந்து தான் வந்த கதையின் காயங்கள், வலிகள், வாய்ப்புகள் என வழிநெடுகச் சந்தித்ததை அவர் பதிந்துவைத்திருப்பது மாணவநிலை மனதுக்கு உரமிடுபவை. அதுதான் கல்லூரி மாணவர்களில் தமிழார்வம் உடையவர்கள் அவர்பால் ஈர்க்கப்படக்
காரணமாயிருக்கலாம். சினிமாப்பாடல்களினால் மட்டும் கவரப்பட்டுமிருக்கலாம்.
ஒரு உறவுக்கார மாணவன் அல்லது மாணவிக்கு நல்ல பரிசளிக்க விரும்பினால் இப்போதும் நான் "சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்" ஐ வாங்கிக்கொடுக்கிறேன். ஒரு தேர்வுக்கான தயாரிப்பிலிருந்து பதின்ம வயதுப் பிள்ளைகளுக்கும், பெற்றோ¡ருக்குமான உறவுகளின்
பிரச்சினைகள்வரை நன்கு எழுதப்பட்ட நூல் அது. பிறகு காசு மிச்சமாகும் வேளைகளில் புத்தகங்களாய் வாங்கியதில் வைரமுத்துவின் பெரும்பாலான கவிதைத் தொகுப்புகள், கட்டுரைகள் கைக்கு வந்தன. அப்துல்ரகுமான், வானம்பாடிக் கவிஞர்கள், மேத்தா, அறிவுமதி, என்ற வரிசையில் அப்போதைய புத்தக ஆர்வம் நீண்டன. இலக்கியங்கூட்டங்களுக்குச் செல்லும் ஆர்வம், வாய்ப்புகள் எல்லாம்
வாய்க்கப்பெற்ற கல்லூரிவாழ்வின் இடைப்பகுதியில் வைரமுத்து, அப்துல்ரகுமான் போன்றவர்களின் தலைமையில் பேசுகின்ற நிகழ்வுகளும் நடந்தேறின. டிசே சொல்லியிருப்பதுபோல் அவர் பழகுவதற்கு இனிய மனிதர் என்பதுதான் என் அனுபவமும். ஒரு சபையில் அறிஞர் நிலையிலிருந்தவர்களையும், என்போன்ற மாணவநிலையிலிருந்தவர்களையும் பேதம்பிரிக்காமல் மதிக்கவும், ஊக்கப்படுத்தவும் செய்தார். அவர் வருகிற நிகழ்ச்சிக்குக் கூடும் கூட்டங்கள் கட்டுப்படுத்தமுடியாதனவாய் இருந்தன. சினிமாவெளிச்சமே அதற்குக் காரணமாயிருக்கலாம். தன் ரசிகனொருவரின் திருமணத்திற்கு அவர் வர ஒப்புக்கொண்டிருந்து வருகிறாரென, மண்டபத்திலிருக்கவேண்டிய அந்த மாப்பிள்ளை ரசிகன் இரவு அவர் வரவேண்டிய வழியில் அவருக்காகப் போஸ்டர் ஒட்டிக்கொண்டிருந்ததையெல்லாம் கேட்க நேர்ந்தது.
போஸ்டர் ஒட்டாவிட்டாலும் இதே ரசிகமனப்பான்மையோடு இருந்த பலரைப் பார்க்கமுடிந்தது. அவர்களைத் தாண்டினால் "டைமண்டு" என்கிற ரேஞ்சில் போட்டுத் தாக்கிக்கொண்டிருந்த இன்னொரு பிரிவினரும் இருந்தனர். இதற்கிடையில் அவர் எழுத்துக்கள்மீதான நடுநிலையான நல்ல விமர்சனங்களைத் தேடிப்படிப்பது அப்போது எனக்கு இலகுவாயில்லை. புதிதாக இலக்கிய உலகம் அல்லது படைப்பாளிகளைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் உள்வருகிற இளைய தலைமுறைக்கு இந்த நடுநிலையான நல்ல விமர்சனங்கள்
உதவியாக இருக்கமுடியும். ஆனால் அது நம் சூழலில் குறைவாகவே இருக்கிறது. ரசிக மனோபவத்தில் வானுயர்ந்த பாராட்டுக்களும், இல்லாவிட்டால் பாதாளத்தில் போட்டு மூடிவிடும் அளவில் மண்நிரப்பும் வேலைகளும் அதிகமாய் நடக்கின்றன. இலக்கியவாதிகளிடமும் அரசியல்வாதிகளை மிஞ்சிய அரசியல் வந்துவிட்டிருக்கிறது. தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் எத்தனங்களும், இன்னொருவனைத்
தனக்குமேல் வளரவிடாமல் பார்த்துக்கொள்ளும் குள்ளநரித்தனங்களும், கூட்டங்களில் அடித்துக்கொள்ளும்வரையான கலாசாரமும் விரவிக் கிடக்கிறது. இலக்கியத்திற்கு நல்ல எழுத்தாளர்கள், நல்ல விமர்சகர்கள், நல்ல எழுத்துக்களை இனம்கண்டு படிக்கிற வாசகர்கள்,
அவற்றைப் பதிப்பிக்கிற பதிப்பகத்தார் எனப் பலவும் ஒருங்கே அமையவேண்டியிருக்கிறது.
வைரமுத்துவின் பாடல்கள், தனிக்கவிதைகள், நாவல்கள், கட்டுரைகளில் பாடல்களே அவரை அதிகம் முன்னிறுத்துபவை. நாவல்களில் திரும்பத்திரும்ப அலங்கார வார்த்தைகளையே படிக்க நேரிடும்போது அலுப்பு வந்ததுண்டு. தனிக்கவிதைகளுக்கு அவர் எழுத ஆரம்பித்தபோது அவரால் உருவாக்கப்பட்ட பாணி இப்போது நவீன இலக்கியவாதிகளால் "அது கவிதையே இல்லை" என்று சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் இன்றும் சாதாரண மக்கள் கூடுகிற சபைகளில் வைரமுத்துவின் கவிதைகள் உடனே
பொருள்புரிந்துகொள்ளப்பட்டு ரசிக்கப்படுகிறது. இந்நிலையில் எழுத்து யாருக்காக? என்ற கேள்வியும் அது பாமரனுக்கும் என்றால் வைரமுத்துவின் எழுத்து பாமரனுக்குப் புரிவதாய் இருக்கிறது. இப்போது என்ன சொல்வது? என்கிற இன்னொரு கேள்வியும் வந்து
போகிறது. நான் படித்தவரை வைரமுத்துவின் நாட்டுப்புறக்கவிதைகள்தான் எனக்கு மிகவும் பிடித்தவை. அவருடைய தனிக்கவிதைத் தொகுப்புகளில் இம்மாதிரிப் பல கவிதைகளைப் பார்க்கலாம். நாட்டுப்புற மனிதன் அல்லது மனுஷியின் வாழ்வியலை அவர்கள் மொழியில்
அவர்களே பேசுவதுபோல் அமைந்த அக்கவிதைகள் படிக்கும்போதே மனதில் இறங்கி உட்கார்ந்துகொண்டவை. இப்போதைக்கு ஒன்றை நினைவிலிருந்து எடுத்து எழுதுகிறேன். கிராமத்தில் வளர்ந்த இரண்டு தோழிகள் திருமணமாகிப் பிரிகின்றனர். பின்னொரு காலத்தில்
ஒருத்தி இன்னொருத்தியை நினைத்து ஏங்குகிறாள். கவிதையின் பெயர் "தோழிமார் கதை".
ஆத்தோரம் பூத்த மரம் ஆனைகட்டும் புங்கமரம்
புங்கமரத்தடியில் பூவிழுந்த மணல்வெளியில்
பேன்பார்த்த சிறுவயசு பெண்ணே நெனவிருக்கா?
சிறுக்கிமக பாவாடை சீக்கிரமா அவுறுதுன்னு
இறுக்கிமுடிபோட்டு எங்காத்தா கட்டிவிட
பட்டுச்சிறுகயிறு பட்டஇடம் புண்ணாக
இடுப்புத் தடத்தில் நீ எண்ணைவெச்சே நெனப்பிருக்கா?
கருவாட்டுப்பானையில சிலுவாட்டுக்காசெடுத்து
கோணார்கடைதேடிக் குச்சிஐசு ஒன்னுவாங்கி
நாந்திங்க நீகொடுக்க நீதிங்க நாங்கொடுக்க
கலங்கிய ஐஸ்குச்சி கலர்கலராக் கண்ணீர்விட
பல்லால்கடிச்சுப் பங்குபோட்ட வேளையில
வீதிமண்ணில் ரெண்டுதுண்டு விழுந்திருச்சே நெனப்பிருக்கா?
கண்ணாமூச்சி ஆடையில கால்க்கொலுச நீதொலைக்க
சூடுவைப்பா கெழவின்னு சொல்லிசொல்லி நீஅழுக
எங்காலுக் கொலுசெடுத்து உனக்குப் போட்டனுப்பிவிட்டு
என்வீட்டில் நொக்குப்பெத்தேன் ஏண்டீ நெனப்பிருக்கா?
வெள்ளாறு சலசலக்க வெயில்போல நிலவடிக்க
பல்லாங்குழிஆடையில பருவம்திறந்துவிட
என்னமோஏதோன்னு பதறிப்போய் நானழுக
விறுவிறுன்னு கொண்டாந்து வீடுசேர்த்தே நெனப்பிருக்கா?
ஒன்னாவளந்தோம் ஒருதட்டில் சோறுதின்னோம்
பிரியாதிருக்க ஒரு பெரியவழி யோசிச்சோம்
ஒருபுருஷன்கட்டி ஒருவீட்டில்குடியிருந்து
சக்களத்தியா வாழச் சம்மதிச்சோம் நெனப்பிருக்கா?
ஆடு கனவுகண்டா அருவா அறியாது
புழுவெல்லாம் கனவுகண்டா கொழுவுக்குப் புரியாது
எப்படியோ பிரிவானோம் இடிவிழுந்த ஓடானோம்
வறட்டூருதாண்டி வாக்கப்பட்டு நாம்போக
தண்ணியில்லாக்காட்டுக்குத் தாலிகட்டி நீபோக
எம்புள்ள எம்புருசன் எம்பொழப்பு என்னோட
உம்புள்ள உம்புருசன் உம்பொழப்பு உன்னோட
நாளும்கடந்திருச்சு நரைகூடவிழுந்திருச்சு
வயித்துல வளந்தகொடி வயசுக்கு வந்திருச்சு
ஆத்தோரம் பூத்தமரம் ஆனைகட்டும் புங்கமரம்
போனவருசத்துப் புயல்காத்தில் சாஞ்சிருச்சு!!
16 Comments:
பாராட்டுக்கள்.
இந்தக் கவிதையை வாசிக்கத் தந்ததற்கு ரெம்ப நன்றி..
அருமையான பதிவு.
தகவல்களையும் எழுத்து நடையையும் வெகுவாக ரசித்தேன்.
நன்றி
அண்மையில் தான் இதே தோழிமார் கதை யை வைரமுத்துக் குரலிலேயே கேட்க + பார்க்க முடிந்தது...
ஆணையும் கொஞ்ச நேரம் பெண்ணாக்கி உணர வைத்தக் கவிதை.
செல்வநாயகி,
நீங்கள் குறிப்பிட்டுள்ள'தோழிமார் கதை' என்ற கவிதையும் பாடலாக்கப்பட்டு'கவிதையே பாடலாக'என்ற இசைத்தட்டில் வெளிவந்திருக்கிறது. மஹதி,சின்மயி பாடியிருக்கிறார்கள். கேட்டுப்பாருங்கள். பால்ய நினைவுகளைக் கிளறும் குரலும் வரியும்...
பின்னூட்டிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
மஞ்சூர் ராசா,
புத்தகத்தைப் படிக்கநேர்ந்தால் அதற்குப் பிறகு "பாராட்டுக்கள்" என்பதற்குப் பதிலாய் "வருத்தங்கள்" என்று உங்களிடமிருந்து மறுமொழி வருமோ என இதைத் தட்டும்போது ஒரு கற்பனை வந்து போகிறது:))
நாடோடி,
சுட்டிக்கு நன்றி. இதற்கு முன்பு ஒருமுறை நண்பர் சிவபாலன் இதுமாதிரி ஏதோ ஒரு சுட்டி கொடுத்திருந்து அதில் போய்க் கேட்ட நினைவிருக்கிறது. ஆனால் அவரைப் படிக்கத் துவங்கியிருந்த பதின்மங்களில் முதன்முறையாக "கவிதை கேளுங்கள்" என்ற ஒலிநாடாவில் அவர் குரலில் சில கவிதைகளைக் கேட்டபோதிருந்த ஈர்ப்பெல்லாம் இப்போது ஏனோ இல்லை. இந்தத் தோழிமார் கதைக்கே நான் எழுத்தில் உணரும் உச்சரிப்பு, உணர்வு வடிவத்தை அவர் குரலில் முழுமையாய்ப் பெறமுடியாததாக இருந்தது. தான் இசையமைக்கும் படங்களில் ஒரு பாடலாவது பாடும் ஆசை இளையராஜாவுக்கிருப்பது போல் இவருக்கும் தன் கவிதைகளைத் தன் குரலில் கேட்கும் ஆசை
இருக்கலாம்:))
சூர்யகுமார்,
முதன்முறையாக உங்களை இங்கு பார்க்கிறேன். வேறு சிலர் பதிவுகளில் உங்களின் பின்னூட்டம் படித்திருக்கிறேன். நீங்கள் பாராட்டியிருந்த இடுகைகள் பெரும்பாலும் எனக்கும் பிடித்ததாக இருந்தவை. ஒத்த ரசனைக்கு மகிழ்ச்சி.
தமிழ்நதி,
அந்த இசைத்தட்டை என் சகோதரன் ஒருவன் இன்னும் அனுப்பிக்கொண்டே இருக்கிறான் அங்கிருந்து, வந்துசேர்ந்தபாடில்லை:))
அருட்பெருங்கோ,
///ஆணையும் கொஞ்ச நேரம் பெண்ணாக்கி உணர வைத்தக் கவிதை///
நல்ல செய்தி:))
நல்லதொரு பதிவு. நன்றி செல்வநாயகி.
ஒலி, எழுத்து வடிவில்..
அற்புதம்...
சூர்யா
துபாய்
butterflysurya@gmail.com
சூர்யா, டிசே,
உங்கள் மறுமொழிகளுக்கு நன்றி.
enanku migavum pidtha kavidhai..inge thahdhanamaiku nandri..adhu sari idhai eppadi ingey poteergal i mean eppadi copy pani ingey poteergal?
கார்த்திக் பிரபு,
இது என் நினைவிலிருந்து தட்டச்சி இட்டது. அவரின் "பெய்யெனப் பெய்யும் மழை" தொகுப்பில் இடம்பெற்ற கவிதை.
எழுதி இட்ட பிறகு நினைவுக்கு வந்தது இதில் நான் சேர்க்காதுவிட்ட இன்னொரு பத்தி.
மருதாணி வெச்ச விரல்
மடங்காம நானிருக்க
நாசமாப்போன நடுமுதுகு தானரிக்க
சுருக்கா நீ ஓடிவந்து
சொறிஞ்ச கதை நெனப்பிருக்கா?
அழகாயிருந்தது கட்டுரை கவிதைய முந்தையபதிவிலேயே ரசித்தேன்.
வாழ்த்துக்கள்.
ipa VEYIL endoru padathila oru paadu vanthu iruke " veyiloodu vilyaadi endu" kedirukreengela? intha tholiyar kathai style la ulla paadal.paarkavum nalla irukum.
நன்றி சிறில் .
அந்தப்பாடலை இதுவரை கேட்கவில்லை. அறியத்தந்தமைக்கு நன்றி சினேகிதி.
Hello Selvanayaki,
Where do you live? I will be happy to meet and talk to you. How is everyone in ur family?
Take care,
Veena
veena,
thanks for your comment. we are fine. I am not able to recognise which veena you are, as I have two friends in the name of veena:))
please write a line about you and your ID, I wont publish that, but will be helpful to send you a personal mail.
Post a Comment
<< Home