நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Saturday, April 11, 2009

அவன் சென்றபின் பெய்த மழைதலைவன்களும் பல்லக்கத்தூக்கிகளுமாய்
ஊர்வலங்களால் அலங்கரிக்கப்பட்ட ஊரிலிருந்து
இவ்வனத்திற்குள் வந்து நாட்கள் பலவாகியிருந்தன

வனம் நிறையப்புற்களோடும் கொஞ்சம் மான்களோடும்
அழகாயிருந்தது.
தேன்சொரிந்தாலும் காய்கனிந்தாலும் வந்துபோக
பட்டாம்பூச்சிகளுக்கும் பறவைகளுக்கும்
அங்கே சுதந்திரம் இருந்தது.

இயற்கையின்மொழி இதயமெங்கும்
கவிதைகளை நிறைத்துக்கொண்டிருந்தபொழுதில்
அவன் தயங்கித் தயங்கி வந்து நின்று
தானுமொரு வனம்விரும்பி என்றான்
வனம்விரும்பிகளின் ரட்சகன் என்றான்
மொழிக்காதலனுமென்றான்
நான் வனம் நிறைத்திருந்த கவிதைகளை
அவனுக்குச் சொல்லலானேன்
பூக்களில் தேன் சொரிந்திருந்தும்
அன்று பட்டாம்பூச்சிகள் வருகையை நிறுத்திக்கொண்டன

தன்பரப்பில் வாழும் உயிர்களுக்கான
வனச்சுனையின் பேதமற்ற நீரளிப்பை
நெக்குருகிச் சொல்லிக்கொண்டிருந்தபோது
தலையைச் சிலுப்பிக்கொண்டே
"இப்படித்தான் பேசிக்கொண்டேயிருக்க வேண்டும்
அல்லது பேசிக்கொண்டிருப்பதே நம் பண்பாடு"
தன் அபிமான நடிகன்கூட
ஒருபடத்தில் அப்படித்தான் சொல்லியிருக்கிறான் என்றான்
பறவைகள் அக்கணம்
வனத்திற்கெதிரான திசையில் பயணிக்கக் கண்டேன்

தானென்பதழிந்து தன்னை உலகினுக்கு வழங்கும்
கனியீன்ற வனமரங்கள் காட்டினேன்
நேற்றைய மயில்களின் நடனத்தைச்சொல்லும்
உதிர்ந்த தோகைகளின் குறிப்புகளையும்கூட
பைகளில் பழங்களை நிரப்பிக்கொண்டவன்
கக்கத்தில் சொருகிய மயில்தோகைகளுடன்
சந்தையில் நல்ல விலைபோகுமென்றான்
முகில்களோ, மான்களோ எதுவும்
தட்டுப்படாத வெறுமை சூழந்தது

அவனுடனான உரையாடலில்
என் சொற்கள் தீர்ந்துபோன சமயத்திலும்
அவன் பேசிக்கொண்டிருந்தான்
தான் இச்சமூகத்துக்கு
ஏதேனும் செய்தே தீருவேன் என்றான்
கலைரசிகர்கள்
வனம்வாழ்வது தகாதென்றான்
இலக்கியம், கலை, மொழிபரப்புதலில்
தானொரு தலைவனாவதற்கு
ஆட்களைத் தேடிக்கொண்டிருப்பதாகவும்
தன்பின்னே வந்தால் எதிர்காலம் சிறக்குமென்றும்
தன்னைச் சுமப்பவர்களுக்கு மிகவும் விசுவாசமானவனென்றும்
இடைவெளிகளற்றுப் பேசிக்கொண்டேயிருந்தான்


மௌனத்தை மொழிபெயர்க்கத் தெரியாதவன்
பதிலுக்கு நச்சரித்தபோது நான்
நோய்க்கூறுகள் உருவானது இப்படித்தானென்றேன்
அவன் கோபம் கொப்பளிக்க என்னை
ஒரு சமூகத்துரோகியென முடிவுசொல்லி விடைபெற்றிருந்தான்
ஒரு நீள இரவு கடந்து
விழித்துக்கொள்கையில்
மழைபெய்திருந்தது
மான்கள், பறவைகள் எல்லாம் இருந்தன
என் வனம் என்னிடம் திரும்ப வந்திருந்தது.

9 Comments:

At 11:22 PM, April 11, 2009, Blogger Raji said...

amazing.........i dont know how many will understand the hidden meaning in this....why not..they will.

 
At 11:59 PM, April 11, 2009, Blogger அன்புடன் அருணா said...

ரொம்ப அழகான ஆழ்ந்த கருத்துடைய பதிவு....எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது........
அன்புடன் அருணா

 
At 12:18 AM, April 12, 2009, Blogger சென்ஷி said...

சிறந்த வரிகளை தேர்ந்தெடுக்கலாம் என்று தேடியதில் மொத்தக்கவிதையும் மிகச்சிறப்பாக இருக்கிறது..

மிகப் பிடித்த வரிகளில் சில...

//தானென்பதழிந்து தன்னை உலகினுக்கு வழங்கும்
கனியீன்ற வனமரங்கள் காட்டினேன்
நேற்றைய மயில்களின் நடனத்தைச்சொல்லும்
உதிர்ந்த தோகைகளின் குறிப்புகளையும்கூட
பைகளில் பழங்களை நிரப்பிக்கொண்டவன்
கக்கத்தில் சொருகிய மயில்தோகைகளுடன்
சந்தையில் நல்ல விலைபோகுமென்றான்
முகில்களோ, மான்களோ எதுவும்
தட்டுப்படாத வெறுமை சூழந்தது//

நிச்சயம் மனது சற்று வெறுமை கொள்கிறது.. புரிந்து கொள்ளப்படாத மனதுடன் கொள்ளும் பகிர்வுகளை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்த வரிகள்..!

 
At 5:15 AM, April 12, 2009, Blogger முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஹ்ம்.. மழை முதற்கொண்டு வனம் வரை கை நழுவிப்போகாமல் மீண்டும் கிடைத்துவிட்டது நிம்மதி..
பதிவு அருமை.

 
At 7:24 AM, April 12, 2009, Blogger தமிழன்-கறுப்பி... said...

இது அரசியல் பதிவுதானே...

 
At 11:00 AM, April 12, 2009, Blogger செல்வநாயகி said...

ராஜி, அன்புடன் அருணா, சென்ஷி, முத்து,
கவிதை மீதான உங்களின் புரிதல்களுக்கும், கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.

தமிழன் கறுப்பி,
அப்படியா நினைக்கறீங்க:))

 
At 4:03 AM, April 13, 2009, Blogger பதி said...

உட்பொருட்கள் கொண்டதொரு நல்ல பதிவு...

//சென்ஷி said...
புரிந்து கொள்ளப்படாத மனதுடன் கொள்ளும் பகிர்வுகளை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்த வரிகள்..//

அதே !!!!

வாரக்கடைசியில் ஊர் சுற்றப் போனதினால் உடனே படிக்க முடியவில்லை !!!!!! :)

 
At 11:01 AM, April 13, 2009, Blogger செல்வநாயகி said...

பதி,
ஊர்சுற்றல் அதனினும் இனிதே:)) இங்கே இன்னும் குளிர் அதற்கு முட்டுக்கட்டை போட்டுக்கொண்டிருப்பதால்தான் வாரயிறுதியிலும் வலையில் சுற்றிக்கொண்டிருக்க முடிகிறது. நன்றி.

 
At 4:52 PM, April 13, 2009, Blogger பதி said...

//ஊர்சுற்றல் அதனினும் இனிதே:))//

ஆம்... ஆயினும், //
ஒரு நீள இரவு கடந்து
விழித்துக்கொள்கையில்
மழைபெய்திருந்தது
மான்கள், பறவைகள் எல்லாம் இருந்தன
என் வனம் என்னிடம் திரும்ப வந்திருந்தது.
//

இது போன்ற வனம் திரும்பக்கிடைத்த அனுபவங்களும் அதனைப் பகிர்ந்து கொள்வதும் அதனினும் இனியவை !!! :)

 

Post a Comment

<< Home