நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Monday, May 12, 2008

சாம்பல் பூத்த பின்னும்குளித்துமுடித்ததும் வழியும் திவாலைகள்
தவறுதலாய்க் கைபட்டுச் சிந்திய ஏதோவொரு திரவம்
எனத் துடைத்து எடுத்துவிடுவதுபோல்
சுலபமாய் முடிந்துவிடுவன அல்ல உன் நினைவுகள்

எப்போதோ வந்துபோகுமொரு ரயிலுக்காக
கானகத்தில் நீண்டு கிடக்கும் தண்டவாளமாய்
அடிமனதில் உன் நட்பை அடைகாத்தபடி
படுத்திருக்கிறது விவரிக்கவியலாத என் உணர்வு

ஒரு குளிர்தருவோ தளிர்நிழலோ
உவமானமாகிட முடியாது நம் சந்திப்புக்கு
அக்கினியாய்ச் சூடு பரவிய வெளியொன்றில்
தீயின் நாவுகளினிடை
நாட்கள் நகர்ந்த போராட்டக்களத்திலிருந்துதான்
கைகுலுக்கினாய் உன் காய்த்த விரல்கள் நீட்டி
ஒரு நடுச்சாமத்தின் நல்ல தூக்கத்தில்
என் கூரை உடைத்தொழுகிய மழையின் ஈரத்தில்
இருந்தன உன்னிடம் தரிசித்த தத்துவங்கள்
வாழ்வு ஒரு அணுவென்றால் அதன் எல்லாத் துகள்களையும்
உணர்ந்துவைத்திருந்த அமைதி உன்னிடம் இருந்தது

ஒரு மலையுச்சியில் உட்கார்ந்து நகர்ந்துவிடும்
மேக இருப்பின் கால அளவே கதைத்திருப்போம்
கோர்த்தலைப்போலவே பிரிதலிலும்
இயல்பாய் விலகின நம் விரல்கள்

அருகாமை, பகிர்தல்கள், தொடர்பிணைப்புகள்
எதுவும் தேவையிருக்கவில்லை நமக்கு
பாண்டியனின் சபையில்
கண்ணகியின் சிலம்பிலிருந்து சிதறிய பரல்களாய்
உணர்வுச் சிந்தலும் பிரிதலுக்கில்லை

காலம் இப்போதும் எடுத்துச் சென்றுகொண்டுதானிருக்கிறது
உன்னையும் என்னையும் இருவேறு திசைகளில்
உன்னுள் படர்ந்திருந்த தீ அணைந்திருந்தாலும்
அதிலிருந்து பற்றிக்கொண்ட சுடர்கள்
எங்குமிருக்கலாம் என்னிடமுமிருக்கலாம்
மீண்டுமொரு திருப்பத்தில்
உருமாற்றங்களோடு சந்திக்கநேர்ந்தாலும்
கைகுலுக்குவோம்
அப்போது கதைக்க ஏதுமில்லாதுபோனாலும்
உனக்குள் நீ தீவளர்த்த பிரதேசத்தின்மீது
பூத்திருக்கும் சாம்பல் விலக்கி
தேடிக்கண்டுகொள்ள முயல்வேன்
நீ தொலைத்த உன்னை

40 Comments:

At 10:46 PM, May 12, 2008, Blogger கிஷோர் said...

நல்ல அழகான கவிதை.
மிகச்சிறப்பான உவமைகள்.
உவமைகள் சற்று அளவுக்கு அதிகமாக இருந்தாலும், அது கேசரியில் கொஞ்சம் அதிகமாகிய சர்க்கரை போலவே இருக்கின்றது.

 
At 8:56 AM, May 13, 2008, Blogger தமிழ்நதி said...

அந்தத் தோழியாக அல்லது தோழனாக நான் இருந்திருக்கக்கூடாதா என்று ஏங்கவைத்த கவிதை.

 
At 9:50 PM, May 13, 2008, Blogger செல்வநாயகி said...

கிஷோர்,
///உவமைகள் சற்று அளவுக்கு அதிகமாக இருந்தாலும்////

ஆமாம். இந்த விசயம் வேறு நண்பர்களாலும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. என்னையுமறியாமல் நேர்ந்துவிடுகிறதென்றே நினைக்கிறேன்:))

தமிழ்,
வலைப்பக்கம் என்னிருப்பு மிகக்குறைவாகவே நிகழ்கிறதெனினும் நீங்கள் நினைவுகளில் அவ்வப்போது வந்துபோய்க்கொண்டேதான் இருக்கிறீர்கள். மீண்டும் இக்கவிதை வழியாக உங்களை இங்கு கண்டதில் மகிழ்ச்சி.

நன்றி இருவருக்கும்.

 
At 1:22 AM, May 15, 2008, Anonymous Anonymous said...

///எப்போதோ வந்துபோகுமொரு ரயிலுக்காக
கானகத்தில் நீண்டு கிடக்கும் தண்டவாளமாய்
அடிமனதில் உன் நட்பை அடைகாத்தபடி
படுத்திருக்கிறது விவரிக்கவியலாத என் உணர்வு /// wow..

நல்ல தாட்...சூப்பர்...
வார்த்தைகள் விளையாடுகின்றன உங்களிடம்.
கவிதை(!)யும் அருமையா இருக்கு,
எப்படிங்க இப்படி எல்லாம் சிந்திக்க முடியுது?!


கலக்கல்.... வாழ்த்துக்கள்

S.Ravi
Kuwait

 
At 7:03 AM, May 15, 2008, Blogger செல்வநாயகி said...

ரவி,

பெரிதாக ஒன்றுமில்லை:))

தொடர் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

 
At 7:13 AM, May 15, 2008, Blogger ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லா வந்திருக்குங்க கவிதை.

எப்போதோ வரும் ரயிலுக்காய் காத்திருக்கும் தண்டவாளம் மாதிரியான வரிகள் ஒரு மன எழுச்சியைத் தருகின்றன.

 
At 7:22 AM, May 15, 2008, Blogger கயல்விழி முத்துலெட்சுமி said...

அதிலிருந்து பற்றிக்கொண்ட சுடர்கள்...

நீ தொலைத்த உன்னை...

ஹ்ம்.. ரொம்ப நல்லாருக்கு.. படிக்கின்றவர்களுக்கு அவரவர் நியாபகங்களை சாம்பலில் இருந்து தேடித்தரும்படியாக...

 
At 8:05 AM, May 15, 2008, Blogger செல்வநாயகி said...

சுந்தர்,
நான் வாசித்தவரையில் வலையுலகில் கவிதைகளின்பாலும் கவனம் செலுத்துபவர் நீங்கள் என அறிகிறேன். கருத்துக்கு நன்றி.

முத்து (நீங்கள் அதே முத்துதானே),
எழுதுவதைப்போலவே வாசித்தலும் எனக்குக் குறைந்துபோயிருந்த காலத்தில் நீங்கள் கயல்விழி முத்துலட்சுமி ஆகியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்:)) நீண்ட இடைவெளிக்குப்பின் சந்திப்பதில் மகிழ்வு.

 
At 2:01 AM, May 26, 2008, Blogger அய்யனார் said...

கவிதை தனக்கான வாசல்களை / பார்வைகளை உட்பொருத்தி வைத்திருப்பதினால்தானோ என்னமோ, சிலவற்றினோடு நம்மையும் பொருத்திப் பார்த்துக் கொள்ள ஏதுவாய் இருக்கிறது.

கிட்டத்தட்ட எல்லா உறவுகளின் ஆரம்பமும் முடிவும் மலையுச்சியில் நகரும் மேகத்தைத்தான் ஒத்திருக்கிறது. வளர்த்திருந்த தீயின் பிரதேசங்களில் படிந்திருக்கும் சாம்பலகற்றிப் பார்க்கும் மனது அற்புதமானது.

நல்லதொரு கவிதைக்கு நன்றி செல்வநாயகி!....

 
At 12:41 PM, May 26, 2008, Blogger பாலராஜன்கீதா said...

திவாலைகள் ?

:-((

 
At 6:46 AM, May 27, 2008, Blogger கயல்விழி முத்துலெட்சுமி said...

ஓ நானே தான் .. :) இனி பேரை மாத்தமாட்டேன்ப்பா..

 
At 12:34 AM, May 29, 2008, Blogger செல்வநாயகி said...

நினைப்பதையெல்லாம் சொல்லிமுடித்துவிடுவது என்பது எனக்குக் கவிதையில் கைகூடுவது அவ்வளவாகச் சாத்தியப்படுவதில்லை அய்யனார். அதனாலேயே அந்த முயற்சியில் இப்போதெல்லாம் அடிக்கடி இறங்குவதுமில்லை:)) நீங்களெல்லாம் சொல்வதைப் பார்த்தால் இக்கவிதை கொஞ்சம் தேறியிருக்கிறது போலும் என நம்பிக்கை கொள்கிறேன்:)) நன்றி.

பாலராஜன்கீதா,
தட்டச்சிய வேகத்தில் "திவலைகள்" "திவாலைகள்" ஆகியிருக்கிறது. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. திருத்தமுடியுமா எனப் பார்க்கிறேன்.

முத்து,
பெயர் மாற்றம் ஒரு பிரச்சினையில்லை:)) உங்களை நீங்களாகவேதான் வைத்திருக்கிறீர்கள் அதே நட்புடன்.

 
At 2:10 AM, June 12, 2008, Blogger OSAI Chella said...

UNRELATED MESSAGE:
Thozhi, oru murai solliyiruntheerkal.. poovaasamum poovaiyar pol ullathu endru... vanthu paarungal.. vithiyaasathai unarungal.. Click Here

anbudan
osai chella

 
At 12:04 PM, June 12, 2008, Blogger தருமி said...

//உங்களை நீங்களாகவேதான் வைத்திருக்கிறீர்கள் அதே நட்புடன்.//

அதெப்படீங்க?! "சும்மா" ஒரு வரி எழுதினாலும் அதுகூட கவிதையாவே இருக்கு.

நீங்களே ஒரு கவிதைதான் போலும்!

 
At 5:48 AM, July 09, 2008, Anonymous Anonymous said...

/*அப்போது கதைக்க ஏதுமில்லாதுபோனாலும்
உனக்குள் நீ தீவளர்த்த பிரதேசத்தின்மீது
பூத்திருக்கும் சாம்பல் விலக்கி
தேடிக்கண்டுகொள்ள முயல்வேன்
நீ தொலைத்த உன்னை */

இது நிஜம். இது கவிதை.

 
At 8:14 AM, August 09, 2008, Blogger நொந்தகுமாரன் said...

உங்கள் கவிதை மனதில் எறிந்த சில்லாக்காய் ஆகிவிட்டது.

முன்பு படித்த பல கவிதைகளை, பல மனிதர்களை தொட்டுப் போகிறது.

அதை விட சந்தோசம். இந்த கவிதை எனக்குப் புரிகிறது.

 
At 1:22 PM, September 17, 2008, Blogger Saravana Kumar MSK said...

அருமையான கவிதை.. ஒவ்வொரு வார்த்தையும் அழகு.. :)

உங்கள் மொத்த கவிதைகளையும் இப்போதே படிக்க வேண்டும் போலிருக்கிறது
ஆனால் நேரமின்மை காரணமாக இப்போது செல்கிறேன். மீண்டும் வருவேன்.. எல்லா பதிவுகளையும் படிக்க..
:)

 
At 4:06 PM, September 17, 2008, Blogger செல்வநாயகி said...

பலநாட்களாய் எழுதப்படாத பக்கமாக இது மாறிப்போயிருப்பினும், சிலரால் வாசிக்கப்படுகிற பக்கமாகத்தான் இன்னும் இருந்துகொண்டிருக்கிறது என்பதறிய மகிழ்ச்சி. நன்றி சரவணக்குமார் மற்றும் மறுமொழிந்ந்திருக்கிற மற்ற நண்பர்களுக்கும்.

 
At 2:36 PM, September 18, 2008, Blogger Saravana Kumar MSK said...

//பலநாட்களாய் எழுதப்படாத பக்கமாக இது மாறிப்போயிருப்பினும், சிலரால் வாசிக்கப்படுகிற பக்கமாகத்தான் இன்னும் இருந்துகொண்டிருக்கிறது என்பதறிய மகிழ்ச்சி.//

நான் படிக்கிறேன்..

அப்பறம் ஒரு சின்ன திருத்தம்.. பல நாட்கள் அல்ல. சில மாதங்கள் ஆகிவிட்டது..ஒரு பதிவு போட்டு..

சீக்கிரம் எழுதுங்க.. நெறையா எழுதுங்க..
:))

 
At 9:50 AM, September 24, 2008, Blogger Kasi Arumugam - காசி said...

புதிதாக ஒண்ணையும் காணோம்!

எழுதுங்க.

 
At 2:10 PM, September 24, 2008, Blogger செல்வநாயகி said...

முயல்கிறேன் காசி. உங்களின் அக்கறை நிறைந்த விசாரிப்புக்கு நன்றி.

 
At 6:14 AM, October 06, 2008, Anonymous Anonymous said...

///பலநாட்களாய் எழுதப்படாத பக்கமாக இது மாறிப்போயிருப்பினும், சிலரால்( no many peoples) வாசிக்கப்படுகிற பக்கமாகத்தான் இன்னும் இருந்துகொண்டிருக்கிறது////

Dear Friend ,
Yes many people came to your site often and இம்புட்டு தூரம் வந்து ஏமாற்றமா திரும்பி போறேன்.

Busy ?? take care and deliver fine-one.

S.Ravi
Kuwait

 
At 9:32 AM, October 07, 2008, Anonymous Anonymous said...

You can now get a huge readers' base for your interesting Tamil blogs. Get your blogs listed on Tamil Blogs Directory - http://www.valaipookkal.com and expand your reach. You can send email with your latest blog link to valaipookkal@gmail.com to get your blog updated in the directory.

Let's show your thoughts to the whole world! - http://www.valaipookkal.com

 
At 3:12 PM, October 08, 2008, Blogger செல்வநாயகி said...

ரவி,

நான் எப்போதாவதுதான் எழுதுகிறேன் என்றாலும் என் இடுகைகளைத் தவறாது படித்தும், மறுமொழிகள் எழுதியும் வரும் நண்பர்களில் நீங்களும் ஒருவர் என்பதை அறிவேன்.

இப்போதைய வேலைப்பளுவாலும், வேறுசில புதிய எழுத்துப் பணிகளாலும் வலைப்பக்கத்திற்கு வருவது அரிதாகிப்போனது எனக்கு. என்றாலும் முடிகிறபோது விரைவில் வருவேன் என்றே நம்புகிறேன்.

உங்கள் அன்புக்கும், விசாரிப்புக்கும் நன்றி.

 
At 3:14 PM, October 08, 2008, Blogger செல்வநாயகி said...

வலைப்பூக்கள்,

அழைப்புக்கு நன்றி.

 
At 1:49 AM, November 22, 2008, Blogger அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்ல உவமைகள், அழகழகான உவமைகள்

எப்போதோ வந்துபோகுமொரு ரயிலுக்காக
கானகத்தில் நீண்டு கிடக்கும் தண்டவாளமாய்
அடிமனதில் உன் நட்பை அடைகாத்தபடி
படுத்திருக்கிறது விவரிக்கவியலாத என் உணர்வு//

மிகவும் அருமை.

 
At 2:39 PM, November 22, 2008, Blogger செல்வநாயகி said...

நன்றி அமிர்தவர்ஷினி அம்மா.

 
At 3:00 PM, December 01, 2008, Blogger சுந்தரவடிவேல் said...

எப்படியோ இந்தக் கவிதை தமிழ்மணத்தில் மீண்டும் மேலெழுந்து வந்தது. நெருங்கிய தோழர்களின் தனித்தனி குணங்களையெல்லாம் ஆங்காங்கே கண்டேன்!
நன்றி!

 
At 3:01 PM, December 01, 2008, Blogger இப்னு ஹம்துன் said...

காத்துக்கிடக்கும் தண்டவாளங்கள் - நல்ல வரி.

இருங்கள், எல்லாப் பதிவுகளையும் வாசித்து வருகிறேன்.

 
At 10:47 PM, December 01, 2008, Blogger செல்வநாயகி said...

சுந்தரவடிவேல்,
தமிழ்மணத்தில் என் பதிவு ஆழப்புதைந்து அமிழ்ந்தேதான் கிடந்திருக்கும். ஏனென்றால் என் பதிவுக்கு நான் வந்தே நாட்கள் பலவாயிற்று. என்றாலும் அவ்வப்போது வந்துபோகும் நண்பர்களால் சிலசமயம் மேலே மிதக்கிறதென நினைக்கிறேன்:)) வருகைக்கு நன்றி.

இப்னு ஹம்துன்,
வாசித்துவிட்டு வாருங்கள், நன்றி.

 
At 10:03 AM, December 02, 2008, Blogger தருமி said...

//என் பதிவுக்கு நான் வந்தே நாட்கள் பலவாயிற்று//

இது ஒண்ணும் நல்லா இல்லைங்க .. அவ்வளவுதான் சொல்ல முடியும்...

 
At 2:23 PM, December 02, 2008, Blogger செல்வநாயகி said...

தருமி,

உங்களையெல்லாம் பதிவின்வழி அடிக்கடி சந்திப்பதற்கேனும் எழுத ஆசைதான். நேரப்பற்றாக்குறை இப்போது. எனினும் வர முயற்சிப்பேன். வழமையான உங்களின் அன்புக்கு நன்றி.

 
At 7:27 AM, January 17, 2009, Blogger vcsugumat said...

Excellent...Mella solla theriyala. Innaiku ethayo thedavanthu ungal kavithaigaludan mudikirathu..

 
At 8:25 AM, January 29, 2009, Blogger Muthusamy said...

அருமையா இருக்கு

 
At 7:59 AM, March 14, 2009, Blogger Muthu said...

really good ...first time coming iam going thro blogs...i can say it in one word "arumai".expecting write more

 
At 4:45 PM, April 29, 2009, Blogger susi said...

inruthaan paarththen. atumaiyaana kavithai. palataip pola ennaiyum en tholiyai ninaiththu enga vaiththullathu. 8 aanduhalin mun pitinthaval enge enru innamum theduhinren.. enraavathu santhippom enra nambikkaiyil!

 
At 2:11 PM, May 01, 2009, Blogger செல்வநாயகி said...

நண்பர்கள் vcsugumat, முத்துசாமி, முத்து, சுசி,

மறுமொழிகளுக்கு நன்றி.

 
At 12:40 PM, July 08, 2009, Blogger தமிழன்-கறுப்பி... said...

நன்றி...

 
At 1:37 PM, July 26, 2009, Blogger aladdi said...

"எப்போதோ வந்துபோகுமொரு ரயிலுக்காக
கானகத்தில் நீண்டு கிடக்கும் தண்டவாளமாய்
அடிமனதில் உன் நட்பை அடைகாத்தபடி
படுத்திருக்கிறது விவரிக்கவியலாத என் உணர்வு"
விவரிக்கவியலாத உணர்வுகளை தந்த அருமையான வரிகள் சகோதரி,
நன்றி

 
At 5:48 PM, July 26, 2009, Blogger செல்வநாயகி said...

நன்றி aladdi.

தமிழன் கறுப்பி எப்போதே வந்து போயிருக்கிறீர்கள், கவனிக்கத் தவறிவிட்டேன். நன்றி உங்களுக்கும்.

 

Post a Comment

<< Home