நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Friday, August 31, 2007

மதம் தின்னும் மனிதன்

இருந்த இடத்திலிருந்தும் சுவாசிக்கும்போதும் கண்ணுக்குப்புலனாகாத ஆக்சிஜனைப்போல் விரவியிருக்கிறது அது வாழ்வைத் துளைகளாகப் பகுத்தபடி. பிறந்து பெயரிடப்பட்டபோதும் கடைசியில் மடிந்து அடக்கமாகும்போதும் அது பெயரின் தொனியாகவும், சடங்குகளாகவும் தன் பாரத்தை அழுத்திய, அழுத்தும் ஒரு பாறையாய் இருக்கும். இடைப்பட்டகாலத்திலும் அப்பாறையைப் புரட்டிஎறிந்து நகரும் நெம்புகோல் இருப்புக்கான சாத்தியங்களும் எளிதானவையல்ல. எங்கிருந்தோ உருட்டப்படும் அப்பாறை தன் வட்டத்திற்குள்ளும் வந்துவிழுந்தாலும் கிடைக்குமொரு சந்தில் மெல்ல ஊர்ந்து அப்பால் நகர்ந்துவிடுவதே
எறும்புகளுக்கான சாத்தியம். மதங்களை விட்டு விலகியிருப்பதும் அப்படியே.

தனக்கான அடையாளத்தை மதங்களாலும் சாதிகளாலும் காட்டிக்கொள்வதில்லை மண்ணும் மலையும் கடலும் காடும். ஆனால் அவற்றை ஆக்கிரமிக்கிற மனிதன் புகுத்துகிறான் அவற்றிற்கும் அப்படியொரு அடையாளத்தை.
இசுலாமிய நாடென்கிறான். இந்துக்களின் பூமி என்கிறான். கிறித்துக்களின் புண்ணியத்தலம் என்கிறான். மதச்சார்பின்மைகளை முகவரி அட்டைகளாகப் பறிமாறிக்கொண்டே வலுத்தவன் வாழும் இடங்களில் இளைத்தவனை அடிக்கிறான். எல்லாக்காயங்களும் வெளித்தெரிந்துவிடுவதுமில்லை. கொசுக்கடித்த தடயத்தைக் கத்திகளால் கீறிக்கொண்டு தன்னை இப்படி இரத்தம் பெருக வதைத்துவிட்டான் இன்னொருவன் என்று ஊர்கூட்டிக்கொண்டே பார்க்கக் கண்களற்ற இடமொன்றில் வைத்து இன்னொருவனுக்குத்தான்
உள்குத்து விட்டதை இறுக மூடிமறைத்துக்கொள்ள எந்தக் கடவுளும் கற்றுத்தந்ததாகத் தெரியவில்லை. இவனின் இத்தனை வித்தைகளைப் பார்த்தபடியும் சும்மாயிருக்கத்தான் கடவுளென்றால் கடவுள் என்று ஒன்று இருக்கிறதாவெனவும் தெரியவில்லை. கடவுள் என்பது ஒரு அனுபவம் என்றால் பார்க்கும் மரங்களிடை, கத்தும் குயிலினிடை, வீசும் காற்றினிடை, வாழும் மனிதரிடை உணர்வதில் இல்லாத அமைதியில்லை. அவ்வமைதியின்
ருசியறிந்தவனுக்கு சாமிக்குச் சாத்தும் வடைமாலையோ விரதங்களோவும் கட்டாயமில்லை. ஒன்று நடப்பதற்கும், நடக்காமைக்கும் எங்கும் நேர்ந்துகொள்ளவேண்டிய கவசங்களுமில்லை. இந்தக் கவசமின்மையையேகூட தனக்கொரு ஆதாயத்திற்கென்று வெளிச்சமிட்டுப் பறைசாற்றிக்கொள்ளும் வேசங்களுமில்லை.

குழந்தைகளின் ஆசிரியை வழியில் சந்தித்தால் ஒரு நூறு கதைகளைச் சொல்கிறாள். ஒரு அணிலின் பின்னால் ஓடிய குழந்தை மரத்தில் மோதியதென்றும், உண்டுபருத்த குழந்தை ஒன்றைத் தூரியில் வைத்து ஆட்டிவிடுவது எப்போதும் அந்த நோஞ்சான் குழந்தைதான் என்றும், அன்று இறந்துகிடந்த நாயொன்றைப்பார்த்த குழந்தைகள் விளையாடுவதை மறந்து எதையோ பேசியபடியிருந்தனவென்றும் குழந்தைகள் தெருவைக்கடக்கும்போது வரும் தபால்காரப்பெண்மணி கையசைக்க மறப்பதேயில்லை எனவும் பல கதைகளைச் சொல்லியபோதுதான் இதையும் சொன்னாள். அவள் கடவுள் உலகைப் படைத்த கதையைச் சொன்னபோது ஒருகுழந்தைமட்டும் தன் காதுகளைக் கொடுக்கவேயில்லை எனவும் பிறகு காரணம் கேட்டபோது "நான் ஜீசசைப்பற்றித் தெரிந்துகொள்ளவேண்டிய தேவையில்லை. எனக்கு வேறு கடவுள்" எனச்சொல்லிவிட்டதாகவும் நான்குவயதில் அப்படி அவள் பேசிவிட்டது தனக்கு ஆச்சரியமெனவும் அதைப்பற்றி அவள் அம்மாவிடம் பேசவேண்டுமெனவும் அங்கலாய்த்தபடி பேசிக்கொண்டிருந்தாள் ஆசிரியை. மழலைகளுக்குள்ளும் மதங்களின் கதவுகள்.

எதிர்பாராப்பிரச்சினையொன்றில் விழுந்த பெண்ணொருத்தி மீண்டும் எழுந்து திரும்ப உதவிக்கொண்டிருந்த குழுவுக்குத் தான் முழுமையாய் எழுந்து நின்றபின் வரிசையாய் நன்றி சொல்லிக்கொண்டுவந்தாள். "நீங்கள் செய்த உதவியால் உங்கள் குழந்தைகள் நாளை பலனடைவார்கள் என்பதே என் கடவுளின் வாக்கு. நீங்கள் செய்த உதவி அவர்களின் கணக்கில் சேர்க்கப்படும்" என்கிறாள். அவள் நகர்ந்தபிறகு உறுத்தலால் உந்தப்படும் இன்னொருத்தி சொல்லித்தீர்க்கிறாள் தன் மனதை " கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே எனும் மதத்திலிருந்து வந்தவள் நான் என". மனிதர்கள் ஒருவருக்கொருவர் செய்துகொள்ளும் உதவிகளிலும் மனிதநேயம் தாண்டி மதாபிமானங்களும் எட்டிப்பார்த்துக்கொள்கின்றன தலைநீட்ட இயலும் சந்துகளில்.

குண்டுவெடிக்கையில் துடித்துச்சாகும், தீவைப்புக்களில் கருகிச்சாகும், ஊர்வலங்களில் கொலையுண்டுசாகும் மதங்களின் பெயராலான கோரங்களுக்கு "அதோ ஐயப்பன்வீட்டில்தான் அந்தப் பாய் 5 ஆண்டுகளாகக் குடியிருக்கிறார். இந்த மேரிதான் பாத்திமாவுக்கு வைத்தியம் பார்த்தாள்" எனச்சொல்லும் சமாதானங்கள் பதிலாவதில்லை. கங்குகள் எங்காவது பாதுகாக்கப்படுகின்றன தேவையாகும்போது தீயாக்குவதற்கு.

மதங்களை எதிர்ப்பவன், அல்லது மதங்களைக் கடப்பவன் அவற்றைக் காப்பவர்களுக்கு எதிரியாகிறான். மதங்களின் கைகளுக்குள் கடவுள் எனும் புனித உறையிட்டுப் பாதுகாக்கப்படுகின்றன துப்பாக்கிகள். அவற்றின் பசி இலக்கு எப்போதும் எதையாவது பலிகேட்டபடி சுழல்கின்றன.

எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் தாக்கப்படுவதும், அவருக்குப் பகிரங்கமாகக்கொலைமிரட்டல் விடப்படுவதும் அப்படியொரு பசியின் தற்போதைய இரை. தம் கறைகள் அத்தனையும் மறைத்தபடி தஸ்லிமாவுக்கு மட்டும் தம் கருணையைக் கரைபுரண்டு ஓடவைக்கும் இந்துத்துவப் பேனாக்களின் நீலிக்கண்ணீர் தனிக்கதை.

உலகம் இருக்கும் கிரகத்தைவிட்டு இன்னொரு கிரகத்திற்கு இடம்பெயர்ந்தாலும் அங்கும் மதங்களையும் அதன் சண்டைகளையும் அப்படியேதான் எடுத்துச்செல்வானா மனிதன்?

17 Comments:

At 11:20 PM, August 31, 2007, Blogger தமிழ்நதி said...

ஒரு சின்னக் கதை சொல்லவேண்டும் செல்வநாயகி! கோயில்கள் மன அமைதியைத் தருவதாகச் சிலர் சொல்கிறார்கள். அண்மையில் பிரபலமான ஒரு கோயிலுக்குச் சென்றிருந்தேன். என்னோடு வந்த நண்பர் நூறு ரூபா கொடுத்தார். அங்கிருந்த ஒரு ஊழியர் தடைகளற்று எங்களை அழைத்துச்சென்றார். மெலிந்த, கலைந்த பரட்டைத் தலையோடு பெண்ணொருத்தி திருநீறு வேண்டிக் கையேந்திக்கொண்டே நின்றாள். அர்ச்சகரோ அப்படியொருத்தி அங்கு நிற்பதைக் கண்ணெடுத்தும் பார்க்கவில்லை. அந்தப் பெண்ணோ பிச்சையெடுப்பவள் போல அவரைத் தொடர்ந்து இறைஞ்சிக்கொண்டேயிருந்தாள். 'ச்சே' என்றாகிவிட்டது. கோயில்கள் மன அமைதியை வளர்க்கின்றனவென்பதில் இருந்த கடைசி இழை அன்று அறுந்தது. மதங்களும் அவ்விதமே... தேவையற்ற எடை போல நாம் அதைக் கொண்டலைகிறோம். மனிதனை மதம் தின்றுகொண்டிருக்கிறது என்பது உண்மைதான். என்ன எழுதி என்ன... ஒன்றும் ஆகப்போவதில்லை என்பது மட்டும் புரிகிறது சகோதரி.

 
At 1:24 AM, September 01, 2007, Blogger செல்வநாயகி said...

தமிழ்,

நீங்கள் மீண்டும் வந்துவிட்டீர்களா? மகிழ்ச்சி. உங்களின் புத்தக வெளியீட்டு நிகழ்வுகளை விசாரித்து ஒரு தனிமடல் அனுப்பும் எண்ணம் இரண்டுநாட்களாய் உழன்றபடி இருந்தது. உங்களை இப்போது இங்குபார்த்துவிட்டதால் என் வழமையான சோம்பலில் இனி அவ்வெண்ணத்தை மீண்டும் ஒத்திப்போட்டுவிடுவேனாயிருக்கும்:))

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதுபற்றிய விவாதம் என்னுள் இன்னும் தொடர்ந்தபடிதான், முடிவுக்குவரவில்லை. ஆனால் அவர் நம் கோயில்களில், சர்ச்சுகளில், மசூதிகளில் கண்டிப்பாக இல்லை என்பது எப்போதே முடிவுக்கு வந்துவிட்ட விசயமாகிவிட்டது எனக்கும்:)) நீங்கள் இனியும் இங்கு தொடர்ந்து இயங்கிவாருங்கள்.


///என்ன எழுதி என்ன... ஒன்றும் ஆகப்போவதில்லை என்பது மட்டும் புரிகிறது சகோதரி////

இல்லை தமிழ்நதி, இன்னும் முழுவதுமாய் நம் நம்பிக்கைகள் பொய்த்துப்போகத் தேவையில்லாத புள்ளிகளும் இருப்பதாகவே நான் பிடிவாதமாக நம்பிக்கொண்டிருக்கிறேன். எழுதுவோம் நாம், நமக்குத் தோன்றுவதை நாம் நம்புவதை.

 
At 5:28 AM, September 01, 2007, Blogger அருள் குமார் said...

எனக்கும் ஒரு சம்பவம் நினைவுக்கு வருதுங்க.

ரம்ஜான் அன்று இஸ்லாமிய நண்பர் ஒருவரின் வீட்டுக்கு பிரியாணி சாப்பிட சென்றிருந்தோம். நண்பனின் அண்ணன் மகள் துறுதுறுவென்று விளையாடிக்கொண்டிருக்க, அழைத்துப் பெயர் கேட்டேன். "ஆதிலா ரோஷன்" என்று அவள் சொன்னதை சரியாய் உள்வாங்காததால் மீண்டும் சொல்லச்சொல்லிக் கேட்டேன். "ஆ தி லா ரோ ஷ ன்...!" என்று நிதானமாய்ச் சொல்லிவிட்டு, "நாங்கல்லாம் முஸ்லிம்" என்றாள்!

"ஏன்டா இப்படி பிஞ்சு மனசுல நஞ்ச விதைக்கிறீங்க" என்று ஒருபக்கம் என் நண்பனைக் கலாய்த்துக் கொண்டிருந்தாலும், பள்ளி முதற்கொண்டு அந்தக் குழந்தை எத்தனை இடங்களில் தன் பெயர் சம்பந்தமான பிரச்சனையை சந்தித்திருந்தால் அவளுக்கு இப்படி ஒரு விளக்கம் சொல்ல நேர்ந்திருக்கும் என்று நினைக்கையில் மனசு கனக்கிறது.

 
At 7:29 AM, September 01, 2007, Blogger பத்மா அர்விந்த் said...

மதங்கள் தனியார் நிறுவனங்களைப் போல இப்போது செயல்படுகின்றன. யார் பெரியவர் என்ற போட்டி மனப்பான்மையும் கொண்டதாய் இருக்கின்றன. நம்பிக்கை குறைந்து, vulnerable ஆக இருக்கும் மனிதரை தங்கள் சாதுரிய பேச்சால் மயங்க செய்து அவர்களை ஒருவித அடிமைகளாக்குவதில் எந்த மதமும் சளைத்ததில்லை. மதத்தினுள் மறைந்திருப்பவனே இன்றைய மனிதன் என்றாகிவிட்டது.

 
At 11:43 AM, September 01, 2007, Blogger ஜமாலன் said...

"மதங்களின் கைகளுக்குள் கடவுள் எனும் புனித உறையிட்டுப் பாதுகாக்கப்படுகின்றன துப்பாக்கிகள். அவற்றின் பசி இலக்கு எப்போதும் எதையாவது பலிகேட்டபடி சுழல்கின்றன"

நல்ல தெறிப்பான வசனம் இது. படைப்பாளிகளுக்குத்தான் இப்படி வரும். நீங்கள் படைப்பாளியா? என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும் உங்களது ஆயாசம் அர்த்தமுள்ளதே. கடவுள் என்பதன் தோற்றமே மரண பயத்தின் அடிப்படையில் உருவானதுதான். ஒருவன் தனது மரணத்திலிருந்து தப்பிக்க மற்றொருவனை மரணிக்கச் செய்கிறான். கடவுளும் மதமும் தொடர்கொலைநிகழ்தத்தலின் ஒரு அழகிய கலைக்கூடம். கொலையின் குரூரத்தின் அழகியல்தான் கடவள் பெயரால் மதங்கள் கற்றக் கொடுக்கின்றன். பலயிடுதலில் துவங்கிய இவ்வெறி.. இன்று மக்கள்திரள் மீதான கொலைவெறியாக மாறி உள்ளது. ஆன்ம வாழ்வு என்பது ஒரு பொய்யான சுகம்தான். அது ஒரு தற்காதல் மனநிலை. பிறரை காதலிப்பதூன் இன்றைய தேவை. அதற்கு கடவுளும் சமூகமும் என்றுமே தடையாகத்தான் இருக்கும்.

 
At 9:50 PM, September 02, 2007, Blogger செல்வநாயகி said...

நன்றி நண்பர்களே.

ஜமாலன்,

உங்கள் பெயரைப் பார்த்ததிலிருந்து எங்கோ எனக்கு மிக அறிமுகமான பெயராகத் தெரிகிறதேவென யோசித்துக்கொண்டிருந்தேன். சிறுபத்திரிக்கைகளிலோ, வேறு ஊடகத்திலோ உங்களை வாசித்ததுபோன்ற உணர்வும் இருந்தது. பிறகு உங்கள் பக்கத்துக்கு வந்து அங்கு ரோசாவசந்த் இட்டிருந்த பின்னூட்டத்தின் மூலம் என் எண்ணம் உறுதியானது. ரோசாவசந்த் சொன்னதையே நானும் வழிமொழிகிறேன். உங்களின் வருகை மகிழ்வளிக்கிறது.

///நீங்கள் படைப்பாளியா? ////

அப்படியெல்லாம் பெரிதாக ஒன்றுமில்லை ஜமாலன்:)) உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

கடவுள், மதம் குறித்த உங்களின் எண்ணங்களோடு ஒத்துப்போகிறேன்.

 
At 10:11 PM, September 02, 2007, Blogger தருமி said...

//உலகம் இருக்கும் கிரகத்தைவிட்டு இன்னொரு கிரகத்திற்கு இடம்பெயர்ந்தாலும் அங்கும் மதங்களையும் அதன் சண்டைகளையும் அப்படியேதான் எடுத்துச்செல்வானா மனிதன்//

அதில் என்ன சந்தேகம் என்ன உங்களுக்கு?

சுமைதாங்கிகளாக உருவான மதங்கள் இன்று நம் கழுத்தில் தொங்கும் பழுக்கற்களாக மாறிப் போய் விட்டன. அதை இறக்கி வைக்க யாருக்கும் மனமின்றி போய்விட்டது. இதில் யார் கல் சிறந்ததென்று நமக்குள் போட்டி வேறு.

 
At 10:35 PM, September 02, 2007, Blogger ramachandranusha(உஷா) said...

செல்வா,
ஆளவந்தான் படத்தில் வருமே ஒரு பாடல் கடவுள் பாதி மிருகம் பாதி. அதில் "மிருகம் கொன்று கடவுளை வளர்க்கப்பார்க்கிறேன் ஆனால் கடவுள் தின்று உணவாய் கொண்டு மிருகம் மட்டும் வளருவதேன்" என்று வரும். இது பெரும்பான்மையான ஆன்மீகவாதிகளுக்கு பொருந்தும். கடவுள் நம்பிக்கை என்பது மனிதனின் தனிப்பட்ட விஷயாய் இருக்க வேண்டும், கடவுளும்,
நம்பிக்கைகளும் வீட்டு வாசலைத் தாண்டி வரக்கூடாது என்று தமிழருவி மணியன் ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார்.என்ன செய்ய இப்படி புலம்புபவர்களின் எண்ணிக்கை மிக குறைவு.
பல முறை சொன்னது மீண்டும்- மனிதனின் மிக மோசமான கண்டுப்பிடிப்பு கடவுள்.

பத்மா! துபாய் இருந்தப் பொழுது அடிக்கடி காதில் விழுந்த வசனம்- அவங்க அஞ்சு வேளை தொழுகிறாங்க இல்லையா? நாமும்
நம்முடையதை விட்டுடக்கூடாது என்று? இது எப்படி இருக்கு :-)

 
At 12:26 AM, February 19, 2008, Blogger MISS.G.SELVA said...

INIYA VANAKKANGAL..............

THANGALIN 'MADAM THINNUM MANIDAN ' PADHIVINAI PADHITHEN.........

KADAVUL ENBATHARKU INNAMUM ETHANAIIYO VILAKKANGAL THARA PATTU VARUM NILAIYIL THANGAL KADAVULAI ANUBAVAM ENDRU VIZHITHIRUPATHU SALA SIRANTHATHU..........

KADAVUL THEVAYA ILLAYA ENBATHAI VIDA KADAVUL PEYARAL NADAKKUM MANITHAM MEERIYA SEYALGAL ORU POTHUM ORU ARIVARNDA SAMOOGHATHIRKU THEVAI ILLAI...
SATTAI ADIYAGAVUM SILA SAMAYAM NAYAMAGAVUM ULLANA THANGAL ELUTHUKKAL...

THANGAL ELUTHIN MEETHU THANGALUKU IRUKUM NAMBIKAI THANGALIN PINOOTA ALASALGALIL THERIKIRATHU.....

INDHA NAMBIKAI KEETRUKAL NAM SAMUTHAYATHIN VENDHADA KALAIGALAI KALAYATTUM.....NAMBIKAIYODU IRRUPOM........

VALTHUKALUDAN,
G.SELVANAYAKI

 
At 8:01 PM, February 19, 2008, Blogger Thamizhan said...

மனித மனத்தில் அச்சமுண்டாக்கி அதனால் பிழைப்பு நடத்தும் ஏமாற்று வேலையாகி விட்டது மதம்.
இதற்கு மௌணமான வணிகப் பொருள் கடவுள்.
மத வெறியர்களே மதங்களின் அழிவிற்கும் மனித நேயத்தின் வளர்ச்சிக்கும் வழி செய்து வருகிறார்கள்.
கடவுள்தான் பாவம்.காணாமல் போய்விட நேரும்.

 
At 8:42 PM, February 19, 2008, Blogger செல்வநாயகி said...

G. செல்வநாயகி,

பழைய இடுகைகளையும் எடுத்து எனக்கும் அவைமீது ஒரு மீள்வாசிப்பை ஏற்படுத்திக் கொடுத்து வருகிறீர்கள். எழுதச் சோம்பியிருக்கும் பொழுதில் மீண்டும் எழுதத்தூண்டும் உற்சாகத்தையும் அளிக்கின்றன உங்கள் மறுமொழிகள். நீங்கள் சொல்லியிருக்கும் அளவு பெரிதாக என் எழுத்துக்களில் எதுவும் செய்திடவில்லை:)) அவை ஒரு சாதாரண மனதில் தோன்றும் சலனங்கள் மட்டுமே. உங்கள் அன்புக்கு நன்றி.

தமிழன் வருகைக்கு நன்றி.

 
At 9:16 PM, February 19, 2008, Blogger வல்லிசிம்ஹன் said...

செல்வா, மனம் நொந்து போகிறது, மதங்களின் பெயரால் மனிதம் அழிந்து போவதைப் பார்த்து.
கடவுள் ,கோவில்கள் எல்லாம் இனி மனதிலேயே அடக்கிக் கொள்ள வேண்டுமோ என்று கூடத் தோன்றுகிறது.

வரும் எல்லாவற்றுக்கும் ஒரு விடிவு காலம்.
நல்லதொரு பதிவுக்கு நன்றி.

 
At 12:22 AM, February 20, 2008, Blogger MISS.G.SELVA said...

INIYA VANAKKANGAL...........
KADAVULUKKU YEATHANAIYO VILAKKANGAL THARA PATTU VITTA NILAIYIL KADAVULAI ANUBAVAM ENDRU NEENGAL KURIPITTULLATHU MIGA NALLA VILLAKKAM...

KADAVUL THEVAYA ILLAYA ENBETHAI VIDA KADAVULIN PEYARAL NADAKKUM MANITHAM MEERIYA SEYALGAL NICHAYAM MAANUDATHIRKU THEVAI ILLAI..

UNGAL PINNOOTTA BATHILIL IRUNTHU UNGAL ELUTHIN MEETHU UNGALAKKU IRUKUM NAMBIKAI PALICHIDUKIRATHU....
nalaya samuthayam innamum membada udhavattum ungal eluthukkalum
valthukkaludan
ka.selvanayaki

 
At 9:58 PM, February 20, 2008, Blogger Vetrimagal said...

I have been looking for good blogs for years. I have read hundreds of them. Very few have touched the rare topic of religion with so much honesty.

I used to wonder why people write about cushy lives, easy life or abusive lives. Not many write useful topics that make people think. Your is an outstanding style and the frank and simple flow reflect a clear mind.

Thanks for sharing your thoughts with all. It was a pleasure to read words that mirror what one contemplates in life.

Hope I will be permitted to glimpse your thoughts in future too.

 
At 10:04 PM, February 21, 2008, Blogger செல்வநாயகி said...

Thank you friends for the comments.

vetrimagal,

I am glad of knowing about you and your blog . Thank you.

 
At 10:08 PM, February 21, 2008, Blogger செல்வநாயகி said...

vetrimagal,

forgot to mention,

"but I don`t see any writings in your blog:))"

 
At 10:41 AM, April 04, 2008, Blogger Vetrimagal said...

Yes, I have been writing so much, but am shy of posting it yet. Feel kind of 'my writings are not adequate enough ".

One day i will overcome this. :-)

 

Post a Comment

<< Home