நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Thursday, July 05, 2007

மக்கள் பங்குபெறாத புரட்சியால் பயனில்லை

‘‘நீயெல்லாம் செத்தா சந்நியாசித் தோப்பு சுடுகாட்டுல தான்டா புதைப்பேன்!’’ & என்னை, நான் ஒரு சேகுவேரா போல நினைத்-துக்கொண்டு அலைந்த மாணவப் பருவத்தில், என் அப்பா இப்படித்தான் திட்டுவார். காரணம், சந்நியாசித் தோப்பு சுடுகாடு... பாண்டிச்-சேரியில் அனாதைப் பிணங்களைப் புதைக்கிற இடம். தான்தோன்றித்தனமாகத் தன் பையன் திரிகிறானோ என்ற பயம், கவலை, கோபம் அவருக்கு. ஆனால், இன்று அப்பா இருந்திருந்தால், எல்லா வகையிலும் நான் சரியாகத்தான் வாழ்-கிறேன் என்பதைப் புரிந்துகொண்டு இருப்பார்.



பள்ளிப் பருவத்தில், ஈழப் -பிரச்னை கொழுந்துவிட்டு எரிந்தது. மொத்தத் தமிழகமும் ஈழத் தமிழர்களுக்காகக் கொந்த-ளித்த காலத்தில், ‘இந்திய அரசே! இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பு. இல்லாவிட்டால் எங்களை அனுப்பு’ என்றெல்லாம் நாங்களும் போஸ்டர் ஒட்டிப் போராடுவோம்.

பள்ளிப் -படிப்பை முடித்து, தாகூர் கலைக்- கல்லூரியில் சேர்ந்தபோது பெருஞ்சித்திரனாரின் மகன் பொழிலனின் நட்பு கிடைத்தது. மொழி, இனம்,


நாடு என்று தமிழ்த் தேசிய நலன்களைப் பேணும் கொள்கை-களைத் தீவிரமாக நானும் ஆதரித்தேன். தமிழ்நாடு விடுதலைப் -படைத் தலைவர் தமிழரசனின் தொடர்பு கிடைத்தது. பெரியவர் புலவர் கலிய-பெருமாளின் வழிகாட்டுதலில் தனித் தமிழ்க் கொள்கைகளை வலியுறுத்தி அமைப்பு கட்டினோம். 87&ல் பொன்பரப்பி வங்கிக் கொள்ளையில் திட்டமிட்டு தமிழரசன் கொல்லப்பட்ட பிறகும், நாங்கள் தொடர்ந்து இயங்கினோம். ஈழப் பிரச்னையில் இந்தியா தலையிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து, இந்தியாவும் தலை-யிட்டது. ஆனால், அது ஈழத் தமிழர்களை விலக்கிவிட்டு, இலங்கை அரசோடு ஒப்பந்தம் செய்துகொண் டதும் தமிழகத்தில் மீண்டும் கொந்தளிப்பு.

அப்போது தூர்தர்ஷன் அந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவான பிரசாரத்தை முடுக்கிவிட, டி.வி. பெட்டி உடைப்புப் போராட்-டம் நடந்தது. சென்னை, கத்திப்பாராவில் இருக்கிற நேரு சிலையை வெடி வைத்துத் தகர்க்கும் முயற்சி நடந்தது. கொடைக்கானல் டி.வி. டவரை குண்டு வைத்துத் தகர்க்-கும் முயற்சி நடந்தது. இந்த இரண்டு வழக்கிலும் பொழில-னுடன் என்னை-யும் சேர்த்துக் கைது செய்தது காவல் துறை. 18 நாட்கள் சட்டவிரோதக் காவலில் வைத்து நாங்கள் விசாரிக்கப்-பட்-டோம். பின்னர், நான் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டேன்.

மக்கள் பங்கு பெறாத எந்தப் புரட்சியும், அதை யாருக்-காக நடத்துகிறோமோ அவர்களுக்கே பயன்படாமல் போய்விடும். சிறு குழுக்களின் ஆயுதத் தாக்குதல் முயற்சி-களெல்லாம் மக்கள் ஆதர-வில்லாத குறுங்குழு வாதம் என்பதைப் புரிந்து-கொண்டேன். ஆனால் 18 நாள் சட்ட விரோதக் காவலில் இருந்த நாட்களும், சிறைச் சாலை அனுபவங்களும் என்னை மனித உரிமையின் பக்கம் திருப்பின. நான், ரவிக்குமார் எல்லாம் சேர்ந்து, 1989&ல் மக்கள் உரிமைக் கூட்டமைப்பைத் தொடங்கி-னோம்.

சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல்நிலையத்தில் பத்மினிக்குப் பாலியல் கொடுமை நடந்தபோது, சி.பி.எம். கட்சியுடன் இணைந்து நீதி கேட்டுப் போராடினோம். சம்பவம் நடந்த மூன்றாவது நாள், பத்மினி-யிடம் ஒரு வாக்குமூலம் பதிவுசெய்து அதை ஆயிரக்-கணக்கில் அச்சடித்து மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தோம். அந்த வழக்கில் நாங்கள் பதிவுசெய்த அந்த வாக்குமூலம் ஒரு ரத்த சாட்சி-யாக இருந்து, பத்மினிக்குத் துன்பம் செய்தவர்களைச் சிறைக்கு அனுப்ப உதவியாக இருந்தது.



அது போல, ரீட்டாமேரி வழக்கில் பேராசிரியர் கல்யாணியுடன் இணைந்து பணியாற்றி-னோம். பார்வதி ஷா கொலை வழக்கு, கோதண்டம் என்கிற இளைஞர் காவல் நிலையத்தில் கொல்லப்-பட்டது என்று ஏராளமான அத்துமீறல்-களில் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு தன் பங்களிப்பைச் செய்திருக்கிறது.

ஒரு சமூகம் நாகரிகமான முறையில் தன் குடிமக்களை நடத்துகிறதா என்பதை, அந்தச் சமூகத்தில் இருக்கும் சிறைச்சாலை-களையும் காவல் துறையை-யும் வைத்தே அளவிட முடியும் என்பார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரையில் பெருமளவு உரிமை மீறல்-கள் காவல் நிலையங்-களிலோ, காவல்துறையின-ராலோதான் நடைபெறுகின்றன. சிறைச்-சாலைகள் சித்ரவதைக் கூடங்களாக இருக்கின்றன.

புதுவையில், செக்குமேடு என்று பாலியல் தொழிலாளர்கள் வாழும் பகுதி இருக்கிறது. கமலா, கௌரி, மேனகா என மூன்று பெண் ஏஜென்ட்டு-கள் பல பெண்களை வைத்து தொழில் செய்து வந்தார்கள். மாதா மாதம் அவர்களிடம் இருந்து மாமூல் வசூலிப்பது போதாதென்று அடி, உதை, சித்ர-வதை, வழக்கு என்றும் துன்புறுத்தப்-பட்டார்கள். அவர்களுக்-காக நாங்கள் நீதி கேட்டுப் போராடி-னோம். அவர்-களுக்கு மாற்று வாழ்க்-கைக்கு ஏற்பாடு செய்-யுங்கள் அல்-லது பாலியல் தொழிலை அங்கீகரியுங்கள் என்றோம். பாலியல் தொழிலை அங்கீகரிப்பதா என்று பலருக்கு அதிர்ச்சி!

படிப்பறிவில்லாத ஏழைகளுக்கு அவர்களின் உரிமைகள் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்திவிட்டால், தங்கள் அனுபவத்தில் இருந்து அவர்கள் மற்றவரின் உரிமை பாதிக்கப்படும் போது நிச்சயம் குரல் கொடுப்பார்-கள். அத்தியூர் விஜயா இப்போது தன்னைப் போல பாதிக்கப்படுகிற பெண்களுக்-காகக் குரல் கொடுக்க, காவல் நிலை-யங்களுக்குப் போகிறார். காவலர்கள் அவரை இப்போது மிக மரியாதையோடு நடத்துகிறார்கள். இதுதான் மனித உரிமையின் மகத்துவம்!

கன்னட நடிகர் ராஜ்குமார், வீரப்பனால் கடத்தப்பட்டபோது, அவரை விடுவிக்க பழ.நெடுமாறன், கல்யாணி, நக்கீரன் கோபால், நான் எல்லோரும் காட்டுக்குள் போனோம். ராஜ்குமார் மீட்கப்பட்டார். இப்-போது வீரப்பனைக் கொன்றாகி-விட்டது. ஆனால், வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது பாதிக்கப்-பட்ட நூற்றுக்கணக்கான மக்களுக்கு சதாசிவம் கமிஷன் வழங்கச்சொன்ன நஷ்டஈட்டை இன்னும் முழுமையாகக் கொடுக்க வில்லை.

மரண தண்டனை, என்கவுன்ட்-டர்கள், சட்டவிரோதக் காவல் சித்ர-வதைகள், சாதிக் கொடுமைகள், பெண்கள் மீதான வன்முறை, குழந்தை-கள் மீதான வன்முறை என இடத்துக்கு இடம் வன்முறை-யின் வடிவம் மாறுகிறது. இதுபற்றிய விழிப்பு உணர்வு பரவி-னால்-தான், மக்க-ளிடையே எழுச்சி ஏற்படும்.


நாடாளுமன்றத் தாக்கு-தலில் தூக்குத் தண்டனை விதிக்-கப்பட்டு இருக்கும் முகமது அப்சல் உட்பட யாருக்கும் தூக்குத் தண்டனை வேண்டாம் என்கி-றோம். காந்தியைக் கொன்ற கோட்சே இன்றைக்கு இருந்-திருந்-தாலும், கோட்சேவுக்கும் தூக்குத் தண்டனை வேண்டாம் என்றுதான் சொல்லி-யிருப்போம். காரணம், காந்தியே தூக்குத் தண்ட-னையை எதிர்த்தார். தவிர, தண்டனையின் நோக்கம் குற்றவாளியைத் திருத்து-வதாக இருக்க வேண்டுமே தவிர, அரசும் பதிலுக்கு ஒரு கொலையைச் செய்யக் கூடாது!

இதைச் சொன்னால், விபசாரிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் தேசத் துரோகிகளுக்கும் ஆதரவாகப் பேசுவதா எனச் சிலர் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். ரௌடி-கள், திருடர்கள், பாலியல் தொழிலாளர்கள், தீவிர-வாதிகள் என யாராக இருந்தாலும், அவர்களுக்கும் நம்மைப் போல மனித உரிமைகள் உள்ளன. அதைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்கிறோம்.

சமீபத்தில், மும்பையில் என்-கவுன்ட்டர்-களுக்கு எதிரான மாநாடு ஒன்றில் கலந்துகொண்டேன். அதில் தீர்க்கமாகச் சில விஷயங்களைப் பேசினோம். அது தமிழ்ச் சூழலுக்கும் பொருந்தும். ரௌடி-களை ஒழித்துவிட்டால், ரௌடியிசமே ஒழிந்துவிடும் என நினைப்பது தவறானது. காரணம், இங்கே ரௌடியிசம் என்பது அரசியலுடன் கலந்திருக்கிறது அதன் ஆணி வேரைக் கண்டுபிடித்துச் சரி செய்-யாமல், ரௌடியிசத்தை சட்டம்& ஒழுங்குப் பிரச்னையாக மட்டும் பார்ப்பதால் ஒரு பயனும் ஏற்படாது!

வாழ்வியல் அறம்
அதிகாரத்துக்குப் பயப்படாமல், நேர்மையாக உண்மைகளைப் பேசுவது!
ரோல் மாடல்!
ஆந்திராவில், நக்சலைட்டுகளுக்கும் ஆந்திர அரசுக்குமிடையில் பாலமாகச் செயல்படும் மனித உரிமைப் போராளியான டாக்டர் கே.பாலகோபால்!
எதிர்காலக் கனவு!
மனித உரிமைகள் என்றாலே என்னவென்று தெரியாத மக்களுக்கும் அடிப்படை உரிமைகள் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும்!
பிடித்த நபர்
தந்தை பெரியார்!
இளைஞர்களுக்குச் சொல்ல விரும்புவது... உங்களுக்கு உரிமைகள் இருப்பதை உணருங்கள். அதை யாருக்காகவும் எந்தச் சூழலிலும் விட்டுக்கொடுக்காதீர்கள்.உங்களுக்கும் கீழான மக்களின் உரிமைகளைப் பறிக்காதீர்கள்.அவர்களுக்குக்கைகொடுங்கள்!

************ ******************
எப்போதாவது இணையத்தில் விகடன் மேய்வதுண்டு. ஆனந்த விகடனில் "முதல் தலைமுறை" என்றொரு பத்தி வருகிறது போலும். இதற்குமுன் அந்தப் பக்கத்தில் நின்று படித்ததாக நினைவில்லை. ஆனால் இன்று இவர் படிக்கவைத்தார். "மக்களிடையே விழிப்புணர்வைக் கொண்டுசேர்க்காமல் சிறுசிறு குழுக்களால் ஆயுதப் போராட்டமே நடந்தாலும் அதற்குப் பெரிதாய்ப் பலனிருக்காது " என்ற இடம் சமூக மாற்றங்களை விரும்புவர்கள் மிகவும் யோசிக்க வேண்டியது. நன்றி சுகுமாரனுக்கும் விகடனுக்கும்.

52 Comments:

At 12:00 AM, July 06, 2007, Blogger Unknown said...

//மக்கள் பங்கு பெறாத எந்தப் புரட்சியும், அதை யாருக்-காக நடத்துகிறோமோ அவர்களுக்கே பயன்படாமல் போய்விடும். சிறு குழுக்களின் ஆயுதத் தாக்குதல் முயற்சி-களெல்லாம் மக்கள் ஆதர-வில்லாத குறுங்குழு வாதம் என்பதைப் புரிந்து-கொண்டேன்.//

முற்றிலும் உண்மையானது.

 
At 12:29 AM, July 06, 2007, Blogger சாலிசம்பர் said...

//நாடாளுமன்றத் தாக்கு-தலில் தூக்குத் தண்டனை விதிக்-கப்பட்டு இருக்கும் முகமது அப்சல் உட்பட யாருக்கும் தூக்குத் தண்டனை வேண்டாம் என்கி-றோம். காந்தியைக் கொன்ற கோட்சே இன்றைக்கு இருந்-திருந்-தாலும், கோட்சேவுக்கும் தூக்குத் தண்டனை வேண்டாம் என்றுதான் சொல்லி-யிருப்போம். காரணம், காந்தியே தூக்குத் தண்ட-னையை எதிர்த்தார். தவிர, தண்டனையின் நோக்கம் குற்றவாளியைத் திருத்து-வதாக இருக்க வேண்டுமே தவிர, அரசும் பதிலுக்கு ஒரு கொலையைச் செய்யக் கூடாது! //

அருமையான வாதம்.

நம் நாட்டின் அதிகபட்ச தண்டணை ஆயுள்.அதை விட கடுமையான தண்டனை தூக்கு அதனால் அது வழங்கப்படுகிறது என்பது எதற்கெடுத்தாலும் ஆகம விதிகளை துணைக்கழைக்கும் மதவாதிகளின் மடத்தனத்தைப் போன்று உள்ளது.

 
At 1:11 AM, July 06, 2007, Blogger thiagu1973 said...

புரட்சியின் வரையறை என்ன ! ஒரு நாட்டில் எப்போது புரட்சி நடக்கும் !
புரட்சியில் யாரோட பாத்திரம் முக்கியம் ! இது குறித்து புரிதல் தங்களுக்கு இருப்பின் எனக்கும் கொஞ்சம் சொல்லுங்கள்

 
At 1:35 AM, July 06, 2007, Blogger அசுரன் said...

கட்டுரையின் பல பகுதிகளில் எனக்கு மாற்றுக் கருத்து இருப்பினும்(எ-கா: தூக்குத் தண்டனை) கீழே உள்ள வரிகளுக்காக எனது பாராட்டுக்கள்.

//மக்கள் பங்கு பெறாத எந்தப் புரட்சியும், அதை யாருக்-காக நடத்துகிறோமோ அவர்களுக்கே பயன்படாமல் போய்விடும். சிறு குழுக்களின் ஆயுதத் தாக்குதல் முயற்சி-களெல்லாம் மக்கள் ஆதர-வில்லாத குறுங்குழு வாதம் என்பதைப் புரிந்து-கொண்டேன்.//

தமிழகத்தில் சாகசவாதம் பேசும் அமைப்புகள் வலுவாக இல்லை. அதுவும் இணையத்தில் சுத்தமாக இல்லை. இருப்பினும் சாகசவாத நாட்டம் கொண்டவர்களுக்கு இந்த வரிகள் பயன்படும்.

அசுரன்

 
At 1:42 AM, July 06, 2007, Blogger செல்வநாயகி said...

நண்பர் தியாகு,

இந்த வெற்றுச் சவடால்கள், உனக்கெல்லாம் என்ன தெரியும் புரட்சியைப் பற்றி? எத்தனை புரட்சியில் எங்கு பங்கெடுத்திருக்கிறாய்? எதுவும் தெரியாமல் இப்படியான சொற்களைப் பயன்படுத்த உனக்கு என்ன துணிச்சல்? ஏதும் தெரிந்தால் என்னோடு பேசு பார்க்கலாம்! என்கிற ரீதியிலான கலாசாரத்தை நினைத்துக்கொண்டு நீங்கள் என் பதிவுக்கு வந்திருந்தால் மன்னிக்கவும். நான் கண்களை மூடிக்கொண்டு இன்னொருவரைச் சவாலுக்கு அழைத்துத் தொண்டைத் தண்ணீர் வற்றப் பேசிக்கொண்டிருப்பதற்காக வலைப்பதிவு எழுதவில்லை. கண், காது, மனம் திறந்து புதிய பொருள் தேடவும் தயாராய் இருப்பவள். எனவே என் புரட்சிப் புரிதலை எழுதக்கேட்டு மதிப்பெண் போட்டு நிறுத்துக்கொண்டிருக்க நினைக்காமல் நீங்கள் உங்களைப் பற்றிய சுய அறிமுகத்தில் எழுதியிருக்கும், நீங்கள் படித்த மார்க்ஸ், விவேகானந்தர், ஜேகே எல்லாவற்றிலிருந்தும் புரட்சி பற்றி வகுப்பு நடத்துங்கள். அதில் மக்கள் யார், புரட்சிக்காரர்கள் யார், மக்களின் துணை இல்லாமலே எப்படிப் புரட்சிகள் நடந்து முடிந்தன என்றெல்லாம் விலாவாரியாகவும் எழுதுங்கள். என் பதிவிலேயே எழுதுங்கள். நேரமாகிறது தூங்கப் போகிறேன். நாளை கணினிப் பக்கம் வந்ததும் பிரசுரிக்கிறேன். நான் மட்டுமில்லை நீங்கள் இப்பதிவில் அதையெல்லாம் எழுதிப் புரட்சி பற்றிப் பலரும் தெரியாத விசயங்களையும் தெரிந்துகொள்ளட்டும் என்கிற நல்லெண்ணத்திலும் கேட்கிறேன். நன்றி.

 
At 1:48 AM, July 06, 2007, Blogger செல்வநாயகி said...

கல்வெட்டு, ஜாலிஜம்பர், அசுரன்,

உங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.

அசுரன்,

உங்களுக்கு இதில் ஏதும் சொல்ல மாற்றுக்கருத்துக்கள் இருந்து நேரமும் வசதிப்பட்டால் எழுதிச்சொல்லுங்கள். எனக்கு அது மகிழ்ச்சியே. ஒரே பிரச்சினை எனக்கு நாளை வரும்போதுதான் பிரசுரிக்க இயலுமாயிருக்கும்:))

 
At 2:10 AM, July 06, 2007, Blogger thiagu1973 said...

//நண்பர் தியாகு,

இந்த வெற்றுச் சவடால்கள், உனக்கெல்லாம் என்ன தெரியும் புரட்சியைப் பற்றி? எத்தனை புரட்சியில் எங்கு பங்கெடுத்திருக்கிறாய்? எதுவும் தெரியாமல் இப்படியான சொற்களைப் பயன்படுத்த உனக்கு என்ன துணிச்சல்? ஏதும் தெரிந்தால் என்னோடு பேசு பார்க்கலாம்! என்கிற ரீதியிலான கலாசாரத்தை நினைத்துக்கொண்டு நீங்கள் என் பதிவுக்கு வந்திருந்தால் மன்னிக்கவும். நான் கண்களை மூடிக்கொண்டு இன்னொருவரைச் சவாலுக்கு அழைத்துத் தொண்டைத் தண்ணீர் வற்றப் பேசிக்கொண்டிருப்பதற்காக வலைப்பதிவு எழுதவில்லை.//

முற்றிலும் உண்மையாகத்தான் இருக்கும் இந்த கருத்து அதாவது தாங்கள் வலைபதிவு எழுதும் நோக்கம் .
ஆனால் நான் அதைபற்றி கேட்கவில்லை நண்பியே!

இதில் நான் சில கேள்விகள் கேட்டது
தங்களுக்கு இத்தகைய எண்ணங்களை
தோற்றுவித்து இருந்தால் நான் அதுக்காக
வருந்துகிறேன் .மேலும் இன்னும் எனக்கு சரியா கேள்வி கேட்க தெரியலைன்னு அர்த்தம் .

// கண், காது, மனம் திறந்து புதிய பொருள் தேடவும் தயாராய் இருப்பவள். எனவே என் புரட்சிப் புரிதலை எழுதக்கேட்டு மதிப்பெண் போட்டு நிறுத்துக்கொண்டிருக்க நினைக்காமல் //
இவ்வாறெல்லாம் நான் நினைக்கவே இல்லையே நான் செய்த பாவம் நாலுவரிகள் கேள்விகள் கேட்டது

//நீங்கள் உங்களைப் பற்றிய சுய அறிமுகத்தில் எழுதியிருக்கும், நீங்கள் படித்த மார்க்ஸ், விவேகானந்தர், ஜேகே எல்லாவற்றிலிருந்தும் புரட்சி பற்றி வகுப்பு நடத்துங்கள்.//

அய்யோ நான் பதிலைத்தானே தேடினேன் இப்படி என்னையே கேள்வி கேட்கிறீங்களே
அது தெரிஞ்சா நான் ஏன் இங்கு குத்தவைக்க போறேன்னு வக்கபோறேன்னு வடிவேலு ஸ்டலைலில் சொல்லவைக்கிறீங்களே!

// அதில் மக்கள் யார், புரட்சிக்காரர்கள் யார், மக்களின் துணை இல்லாமலே எப்படிப் புரட்சிகள் நடந்து முடிந்தன என்றெல்லாம் விலாவாரியாகவும் எழுதுங்கள். //
என்ன சொல்றீங்க சரியா கேட்கலை
என் பதிவிலேயே எழுதுங்கள்.

//நேரமாகிறது தூங்கப் போகிறேன். நாளை கணினிப் பக்கம் வந்ததும் பிரசுரிக்கிறேன். நான் மட்டுமில்லை நீங்கள் இப்பதிவில் அதையெல்லாம் எழுதிப் புரட்சி பற்றிப் பலரும் தெரியாத விசயங்களையும் தெரிந்துகொள்ளட்டும் என்கிற நல்லெண்ணத்திலும் கேட்கிறேன். நன்றி.

//

ஆகா நிம்மதியா கேள்வியை திருப்பி விட்டுட்டு தூங்க போயிட்டீங்க
நான் திருதிருன்னு முழிச்சுட்டு உக்கார்ந்து இருக்கேன் .

ஆனா அந்த கேள்வி கேட்டதியாகு
இருக்கானே அவனுக்கு இன்னும் பதில் மட்டும் ஏன் கிடைக்கல

//உனக்கு வேணுண்டா நல்லா வேணும் எங்கயாவது யாராது புரட்சின்னு பேசினா கேள்வி கேட்பியான்னு எதோ அசரிரீ வந்து சொல்லுதுங்க //

 
At 2:17 AM, July 06, 2007, Blogger சந்திப்பு said...

செல்வநாயகி அற்புதமான உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளீர்கள். ஒளிவு மறைவின்றி தங்களின் வரலாற்று அனுபவத்தோடு எழுதியுள்ளீர்கள். இங்கே பல இடதுசாரி அதி தீவிர குழுக்கள் இப்படித்தான் புரட்சியை ஏற்படுத்தப் போவதாக போலீசிடம் சிக்கி வருகிறார்கள். அவர்கள் புரட்சியை கனவு காண்கிறார்கள். அதனால் தான் உணர்ச்சி வேகத்தில் செயல்படுகிறார்கள்.

புரட்சியை பற்றி லெனின் கூறுவதை யாருமே உணர்வதாக தெரியவில்லை. புரட்சியை எந்த நாட்டில் இருந்தும் இறக்குமதி செய்ய முடியாது. புரட்சியை கொண்டு வருவதற்கு புரட்சிகர பொறுமை தேவை என கூறியதை திண்ணை புரட்சியாளர்கள் உணர்வதாய் தெரியவில்லை. புரட்சி என்பது மக்களின் திருவிழா. அதில் இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் இரத்தத்தையும். உயிரையும் ஒன்றாய் கலந்து முகிழ்த்தெடுப்பது. பல கத்துக் குட்டி கம்யூனி;!ட்டுகள் இளம் பருவ கோளாறால் பாதிக்கப்படுகிறார்கள். அது புரட்சிகர இயக்கங்களுக்கே கூட சீர்குலைவை ஏற்படுத்துகிறது.

நடைமுறை அனுபவம் சிறந்த ஆசான் என்பவார்கள் அதை நன்றாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

 
At 2:23 AM, July 06, 2007, Blogger கதிரவன் said...

//மக்கள் பங்கு பெறாத எந்தப் புரட்சியும், அதை யாருக்-காக நடத்துகிறோமோ அவர்களுக்கே பயன்படாமல் போய்விடும். சிறு குழுக்களின் ஆயுதத் தாக்குதல் முயற்சி-களெல்லாம் மக்கள் ஆதர-வில்லாத குறுங்குழு வாதம் என்பதைப் புரிந்து-கொண்டேன். //

உண்மை. அனைவரும் இதைப் புரிந்து கொண்டால் நலம்

 
At 2:48 AM, July 06, 2007, Blogger தருமி said...

சிறு குழுக்களின் ஆயுதத் தாக்குதல் முயற்சிகளைப் பற்றி எனக்குச் சில கருத்துக்கள் உண்டு. ஆனால் அதற்கு வேண்டிய விளக்கத்தைக் கேட்கத்தான் ஆளில்லை.
கேட்கவும் கொஞ்சம் பயம் / தயக்கம்தான்!

 
At 2:53 AM, July 06, 2007, Blogger Thangamani said...

நீங்கள் இங்கு எடுத்துப் போட்டிருக்காவிட்டால் நான் தவறவிட்டிருப்பேன் செல்வநாயகி. மிக்க நன்றி!

 
At 9:06 AM, July 06, 2007, Blogger நாமக்கல் சிபி said...

//உனக்கு வேணுண்டா நல்லா வேணும் எங்கயாவது யாராது புரட்சின்னு பேசினா கேள்வி கேட்பியான்னு எதோ அசரிரீ வந்து சொல்லுதுங்க //

:))

தியாகு சார்,

உங்களுக்குத் தெரிஞ்சதை சொல்லுங்க! எல்லாரும் தெரிஞ்சிகிட்டுமேன்னு சொல்றாங்க!

 
At 9:07 AM, July 06, 2007, Blogger நாமக்கல் சிபி said...

நல்ல கட்டுரை சகோதரி!

பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி!

 
At 9:22 AM, July 06, 2007, Blogger டண்டணக்கா said...

/* நன்றி சுகுமாரனுக்கும் விகடனுக்கும்.*/
Is he the same "puduvai ko.sugumaran" at http://kosukumaran.blogspot.com

Nice interview by Vikadan, Thx for bringing it here.

 
At 10:18 AM, July 06, 2007, Blogger செல்வநாயகி said...

புதிய மறுமொழிகளை இட்டிருக்கிற நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

தியாகு,
குபீரென்று சிரிக்கவைத்தது காலையில் வந்துபார்த்த உங்கள் பின்னூட்டம். வேறொன்றும் சொல்வதற்கில்லை:))

சந்திப்பு,
எனக்கெதற்கு இவ்வளவு பாராட்டெல்லாம்:)) இது முழுக்க முழுக்க புத்துச்சேரி சுகுமாரனால் முன்வைக்கப்பட்டுப் பல இடங்களில் அவரின் கருத்துக்கள் என்னைக் கவர்ந்ததால் இங்கே பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.

கம்யூனிஸ்டுகளோ, மார்க்சிஸ்டுகளோ, பெரியாரிஸ்டுகளோ இல்லை இதில் எதையும் சொல்லிக்கொள்ளாத அல்லது சொல்லிக்கொள்ளவிரும்பாத சாதாரண சமூக நலம் விரும்பிகளோ யாராயிருப்பினும் அவர்கள் முதலில் நெருங்கிச் செல்ல வேண்டியது தன்னுடைய உரிமைகளோ, அடிமைத்தனமோ பற்றிய எந்தப் பிரக்ஞையுமற்று இன்னொருவரால் சுரண்டப்படுவதே வாழ்வின் இயல்பென்றும் கருதி விழிப்புணர்வின்மையால்
அமைதியாகவேயிருக்கும் சாதாரண மக்களைத்தான் என்று கருதுகிறேன் நான். ஆளும்வரை சொத்துசேர்ப்பதையே குறியாகக் கொண்டு செயல்படும் ஆட்சியாளர்களுக்கு மத்தியில் ஆட்சிமுடிந்து வீட்டி
ற்குப் போகும்போது ஒரு சைக்கிளையும், பெட்டியையும் மட்டுமே தூக்கிக்கொண்டுபோகிற ஆட்சியாளர்கள் இருந்தும் அப்படியானவர்களை மட்டுமே மீண்டும் ஆட்சிக்கு அனுப்பும் விழிப்புணர்வு ஏன் நம் மக்களிடம் இல்லை? அடிப்படை உரிமைகள் பறிபோகும் இடங்களில் அவர்களுக்காகப் போராடிக் களம் இறங்குவதில் முன்னிற்கும் இயக்கங்கள் தனித்துப் பெறமுடியாத வாக்குகளைத் தமிழ்நாட்டில் விசயகாந்த் பெறமுடிவதன் பின்னணியில் இருக்கும் நம் சமூக அறியாமையை வைத்துக்கொண்டு சிறுசிறு குழுக்களாக அங்கங்கு போராட்டமோ அல்லது இன்னொரு அதேமாதிரியான குழுவுடன் "நீ பெரிதா? நான் பெரிதா?" பாணிச் சண்டைகளோ செய்வது ஒரு பெரிதான வெற்றியைத் தந்துவிடுமா? என்பன போன்ற கேள்விகள் எனக்குள் நிறைய உண்டு. இவற்றிற்கு விடையாகப் "பல தளங்களிலும் நல்ல கொள்கைகள், கருத்துக்கள் கொண்ட இயக்கங்கள் எவையென்ற அடையாளம் மக்களுக்குக் காட்டப்பட்டு அவர்களும் அவற்றோடு இணைந்து பணியாற்றும்படியான சூழலை உருவாக்கவேண்டும். தாங்கள் ஒரு இயக்கத்தில் சார்ந்திருந்தாலும் அது தவறான முடிவுகளை எடுக்கும்போது துணிச்சலோடு விமர்சித்து எதிர்ப்பைக் காட்டுகிற, புறக்கணிக்கிற சுயசிந்தனையையும் வளர்த்தெடுக்கவேண்டும்" என்றும் கருதுகிறேன். இப்போதைய மிகப்பெரிய தேவை இதுவாகவே இருக்கிறதெனவும் நான் நம்புகிறேன். ஏனென்றால் இது நாம் நினைக்கும்படி எளிமையான காரியம் இல்லை. மதங்கள் எனும் போதைக்கும், எவன் எப்படி வாழ்ந்தால் என்ன? எனக்கொரு பிரச்சினை வராத வசதிவாய்ப்புகள் இருக்கும்போது எனக்கெதற்கு மற்ற வம்பு? என்ற சுயவாழ்வுப் போதைக்குள்ளும் மூழ்கியிருப்பவர்களாகவே பலரைப் பார்க்க முடிகிறது. இவர்களைத் தட்டியெழுப்பிவிடலாம் என முயற்சிப்பவர்களுக்கு இவர்களே இடையூறாக இருப்பது ஒருபுறமும், இன்னொரு புறம் "இவர்கள் விழித்துக்கொண்டால் நம் அரியணைகளை இழக்க நேரிடுமே என்ற அவல ஆவேசத்தில் கொதித்துக் கிளம்பும் கூட்டத்தின் தந்திரங்களுமாக இருக்கின்றன.

என்னோடு படித்த சில நண்பர்கள் மாணவப் பருவத்திலேயே சமூகப் பிரச்சினைகளுக்குக் குரல்கொடுத்து வந்ததைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் எல்லாம் எனக்குள்ளும் சில தாக்கங்களை மௌனமாக ஏற்படுத்தியவர்களும்கூட. படிப்பைத் துறந்து, புத்தகம் வாங்க அப்பா கொடுத்த காசில், அச்சடித்த நோட்டிசுகளை வினியோகித்து, கூட்டமாகத் தண்ணியடித்துப் போலீசே இவர்களைக் கண்டால் தங்கள் வழக்கமான பாணியைவிட்டு "என்ன தம்பி வேணும்? பேசிக்கலாம் வாங்க, பேருந்துகளை மறிக்கவேண்டாம், போகட்டும் விடுங்க" என்று பேசும் அளவு நெஞ்சில் உரமும் கொண்டிருந்த இளைஞர்களுக்கு நேர்ந்தது என்ன எனநினைத்துப் பார்க்கிறேன். இவர்களின் இந்த ஆர்வங்களைத் தம் மூளையைப் பயன்படுத்தி திராவிடக் கட்சிகள் வளைத்தும் போட்டன. அதனால் அவர்கள் மாணவரணிச் செயலாளர்கள் ஆனார்கள். தத்தமது தலைமையோடு புகைப்படம் எடுத்துப் போஸ்டர் அடித்து ஒட்டினார்கள். பிறகு கவுன்சிலர் ஆனார்கள், மாநாடுகளுக்கு லாரி எடுத்து ஆட்கள் நிரப்பிப் போனார்கள். கடைசியாக, ராசாங்க அமைச்சர்களைக் காலில் விழவைத்து அருள்பாலிக்கும் ராணிக்கோ அல்லது காலில் விழும் அமைச்சர்களுக்கோ "நல்லவர்களாய்" நடக்கவும், 84 வயதில் இந்திரசித்து கவிதை எழுதி இலக்கியம் வளர்க்கும் தலைவருக்கோ, தலைவரின் தளபதிக்கோ, தளபதியின் தளபதிகளுக்கோ "நல்லவர்களாய்" நடக்கவும் பழகிப்போனார்கள் 20 வயதில் மீசை துடிக்கத்துடிக்கப் புரட்சி மனப்பான்மையோடு இருந்தவர்கள். ஆனால் இப்போதும் ஏன் இப்படி என்று கேட்டால், "பெரியார்தான் எங்கள் முகவரி" என்பார்கள். எங்காவது பெரியார் சிலை உடைகிறபோது இரண்டு மூன்று பூனூல்களை அறுத்தெரிந்துவிட்டு "எங்களை யார் என்று நினைத்தாய்?" என்று வெற்றி முழக்கமிட்டு வீடு திரும்புவார்கள்.

இவையெல்லாம் தாண்டியும் களிமண் நிலையில் ஒரு கூட்டம் உண்டு சமூகத்தில். அதை யார் எந்த வடிவத்திற்கு வேண்டுமானாலும் வார்த்தெடுக்கலாம். அந்தக்கூட்டத்திற்கு உண்மைகளை எடுத்துச் சொல்லியும்,
சமூகப் புரட்டுக்களை எடுத்துச்சொல்லியும் ஒரு குறைந்தபட்சப் புரிதலையாவது ஏற்படுத்துவதும் தேவை. அது இல்லாமல் சிறு கூட்டங்கள் ஆயுதமே ஏந்திப் போராடினாலும் முழுவிடியல் அருகில் வராது என்பதையெல்லாம் என் எண்ணங்களாக ஓடவிட்டுக்கொண்டுதான் இந்தப் பத்தியை இங்கு எடுத்துப்போட்டேன். இதில் மீண்டும் "ஆமாம், நாங்கள் விழிப்புணர்வைத்தான் கொண்டுவர நினைக்கிறோம், அவர்களைப் போன்ற கத்துக்குட்டிகள்தான் ஆயுதம் மட்டுமே போதும் என்கிறார்கள்" என்கிற பழையபடியான "நீயா, நானா?" வுக்குப் போகாமல் மக்கள்நலன்சார்ந்த இயக்கங்களில் அனுபவமும், சிறந்த புரிதல்களும், சமூகம் குறித்தான ஆழ்ந்ததொரு அக்கறையும் கொண்ட இங்கிருக்கும் நண்பர்களான உங்களைப் போன்றவர்கள், அசுரன் போன்றவர்கள் தத்தமது கருத்துக்களை முன்வைத்து இந்தப் பத்தி மீதான விவாதத்தை முன்னெடுத்தால் மிகுந்த மகிழ்ச்சியோடு அவற்றிலிருந்தும் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தோடு நானிருக்கிறேன். என்னைப்போலவே இன்னும் சிலரும்கூட இருப்பார்கள் என்றும் நம்புகிறேன். நன்றி.

 
At 10:26 AM, July 06, 2007, Blogger -/பெயரிலி. said...

சந்திப்பின் வரிகள் விளக்கெண்ணெயுள்ளே வாழைப்பழத்தை ஊறவைத்துச் சாப்பிட்டுவிட்டு, அட்டைக்கத்தியைச் சுத்திவரும் வீரர்கள் எழுதியதாகத்தான் தெரிகின்றது. சந்திப்பு சார்ந்திருக்கும் கட்சியின் புரட்சிகரப்பொறுமை எத்தனை ஆண்டுகள் காத்திருந்தது? இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்கப்போகின்றது? பொறை கேட்கும் மக்களுக்கு பொறுமையைப் போதிப்பதென்றால், அதற்குப் புரட்சிகரப்போராட்டம் என்பதிலும்விடப் புத்தரின் போராட்டம் என்பது சாலச்சிறந்ததாகவிருக்கும். எடுத்ததெற்கெல்லாம் லெனினை வக்காலத்துக்கும் வாய்தா வாங்குவதற்கும் இழுப்பதை மட்டும் ஒழுங்காகச் செய்துகொண்டிருங்கள் (1917 இலே வேண்டாமென்று லெனின் புரட்சிக்காய் முற்றாக முற்றி புரட்சிக்கனி மினுமினுக்கும்வரை காத்திருந்தாரா என்பதைக்கூட மறந்துவிடுவோம்). இந்தியாவிலே மேல்சாதியினரின் கைகளுக்குள்ளே அடங்கிக்கிடக்கும் இந்த மார்க்ஸியக்கட்சிகள் - தமிழ்நாட்டு கம்யூனிஸ்டு பார்ட்டியிலே அய்யங்கார், முதலியார்களின் செல்வாக்குத்தான் உண்டாமே, மெய்யா, சந்திப்பு? - எதற்காக தலித்துகளும் மற்றைய "சாதி"களைச் சேர்ந்த மார்க்ஸியர்கள் பல பத்தாண்டுகாலக்கட்சிச்சேவைக்குப் பின்னால் - கவனிக்க, சேவைக்குத்தான் அவர்கள்; செல்வாக்குக்கு ராமமூர்த்தி, ராம் நரசிம்மன் - விலகி, தமக்கான போராட்டத்தைத் தம் தெளிவோடு தனிப்படச் செய்யப்போனது? இதுவும் புரட்சிகரப்பொறுமையின் விளைவுதானா? நேபாளத்திலும் தெலுங்கானாவிலும் மத்திய இந்தியாவிலும் நக்சலைட்டுக்குகள் தங்கள் "torch" களினாலே மக்களிடையே ஏற்றி வைத்திருக்கும் வெளிச்சத்தை (தாக்கூர்கள் & மேல்சாதி பண்ணையார்களின் அடிவயிற்றுநெருப்பெரிதலை) எதற்காக, ராமமூர்த்தி, ராஜா, வரதராஜன், நரசிம்மன் ராம் போன்றவர்கள் தலைமை தாங்கிய, தாங்கும் "அட்டைக்கத்தி & ஆங்கிலப்பத்தி" மார்க்ஸியர்கள் (தமிழ்நாட்டு உதாரணபுருஷர்கள்மட்டுமே இங்கே சொல்லப்பட்டிருக்கின்றார்கள்; இவர்களின் "சமானமான தலைவர்களை" முந்தநாளைய ஈஎம்எஸ் நம்பூதிரி தொடக்கம் இந்நாளைய புத்ததேவ் பட்டாசாரியா வரைக்கும் மற்றைய மாநிலங்களிலே காண்க) இத்தனை நாட்கள் சாதித்தவை என்ன? "ஆர்எஸ்எஸ் இலிருக்கும் மேல்ஜாதி தலைவர்களிலும்விட கம்யூனிஸ்டு பார்ட்டியிலே இருக்கும் மேல்ஜாதி தலைவர்கள் பெட்டர்" என்பதையா? இத்தனை நாள் இவர்கள் புரட்சி புரட்சி என்று பேசிக்கொண்டதைத் தவிர, சோவியத்து, செஞ்சீனாவுக்கு (அட! அந்தக்காலத்தைப் பற்றித்தான் பேசுகிறேன்; இப்போதுதான், செஞ்சீனத்தின் திபெத்திய கவர்தலை நியாயப்படுத்தும் பத்தி(ரிகை) மார்க்ஸிய கம்யூனிஸ்டுகளின் புத்திரிகள் முதலாளித்துவ அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்திலே பத்தி(ரிகை)த்துறையிலே மினுங்குவதாக வாசிக்கின்றோமே? இது காலகாலமாகத் தவங்கிடந்து பெற்ற புரட்சியில்லையா? இத்தகைய தலைவர்களின் காத்திருந்த புரட்சியின் பின் வாலைப் பார்த்திருந்த பஞ்சாலைத்தொழிலாளர்களோ தெலுங்கானா விவசாயிகளோ கடைசியாகத் தங்கள் நிலையை உலகுக்குச் சுட்டுவதற்காகத் தற்கொலை செய்து போராடுவதுதான் புரட்சி முழுமையடைந்தது என்பதா? அல்லது..... சேவையின் விருதாக அந்நிய நாடொன்றின் லங்கா ரத்னா விருதைப் பெறுவதும் சிறை மீண்ட இருள்நீக்கி சுப்பிரமணியத்தைக் காத்திருந்து காரிலே ஏற்றிப்போவதுமேதான் காத்திருந்த புரட்சியி(டி)ன் ஈடேற்றமா? என்னத்தைக் கிழித்தீர்கள்? நீங்கள் ஐம்பதாண்டுகள் பண்ணிக் கிழிக்காததைத்தான் நக்ஸலைட்டுகள் கடந்த பத்தாண்டுகளேனும் (சாரு மஜும்தார் காலத்தையெல்லாம் இங்கே இழுக்கவில்லை... அப்போதுதான் உங்களிலே பாதிப்பேர் காங்கிரசிலே பபியன் சோசல்லாசபலிஸ்டாக குமாரமங்கலங்காக பரிணமித்து ஒளி காட்டினீர்களே!! அடடா என்ன தேஜஸ்! என்ன தேஜஸ்!! .. அண்மைக்காலத்தையே பார்ப்போம்) நேபாளம், பீஹார், மத்தியப்பிரதேசம்,

வாய் கிழியப் புரட்சி பற்றிப் போதிப்பதைத் தவிர, இத்தனை நாட்களிலே என்னத்தைச் சாதித்தீர்கள்? மேதினம் பற்றி ஒரு புத்தகம் போட்டிருக்கிறேன் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள். மலம் கழித்தபின்னர் துடைக்கக்கூட அதன் பக்கங்கள் தமிழ்நாட்டினதோ இந்தியாவினதோ பாட்டாளி, தொழிலாளி (அட இந்தியாவிலேதான் caste பிரச்சனையே இல்லையே, எல்லாமே class issues தான். வேணுமின்னா ராம் ஐயங்கார்வாளையே கேட்டுறலாமே. பேஷா பிபிஸி இங்கிலீஸ்லையே ஸொல்லிடுவார், "class is the sole issue, and the cate is merely a roll of toilet tissue.") வர்க்கங்கள் கனங்களுக்கு உதவுமா தெரியாது. உங்களையெல்லாம்விட நக்ஸலைட்டுகள் தாங்கள் யாருக்காகப் போராடுகின்றோமென்று சொல்கின்றவர்களுக்காக நிறையச் சேவை செய்திருக்கின்றாரென்றே பார்க்கத் தோன்றுகின்றது. அவர்கள் குறுங்குழுக்களென்றால், குறுங்குழுக்களாகவே இருந்துவிட்டுப்போகட்டுமே? உங்களின் சிவப்புப்புத்தங்களையா பறித்துக்கிழித்து நாளுக்கு முப்பது சொல்லென்று உருப்போட்டுக்கொண்டிருக்கப்போகின்றோமென்று அட்டைக்கத்தி & தாளிகைப்பத்தி வாதம் பண்ணிக்கொண்டிருக்கின்றார்கள்?

 
At 10:35 AM, July 06, 2007, Blogger செல்வநாயகி said...

தருமி,

இவ்வளவுதூரம் வந்துவிட்டு இப்படி ஓரமாகவே நிற்பதாய்ச் சொன்னால் எப்படி? உங்கள் கருத்துக்களை நீங்கள் தயக்கம் தவிர்த்து எழுதக் கேட்கிறேன். பொதுமாத்து, மொத்து ஏதும் விழுந்தாலும் இன்று நானும் உங்களோடு சேர்ந்தே நிற்கிறேனே பகிர்ந்துகொள்ள:)) எனவே விழுகிற அடியையும் ஆளுக்குப் பாதியாகப் பகிர்ந்து வலிகுறைத்துக் கொள்ளலாம்:))

தங்கமணி,
உங்களை வலையில் பின்னூட்டங்கள் வடிவிலேனும் பார்ப்பது நன்றாக இருக்கிறது. மீண்டும் பதிவுகள் வழியாக உங்கள் பக்கத்திற்கு எப்போது வருவீர்கள்?

சிபி,
ரொம்பநாள் கழித்து இந்தப்பக்கம் வந்திருக்கிறீர்கள். மகிழ்ச்சி.

டண்டணக்கா,
ஆமாம், அதே சுகுமாரன்தான். இன்று அவர் பதிவின் முகவரியை இணைக்க எண்ணிக்கொண்டிருந்தேன். நீங்கள் தந்தமைக்கு நன்றி.

 
At 11:37 AM, July 06, 2007, Blogger Osai Chella said...

நல்ல கட்டுரை தோழி... ஆனால் சில விசயங்கள் நெருடுகின்றன. உம் கியூபா வை விடுதலை செய்ய கிராண்ட்மா கப்பலேறிய ஒரு சிறு குழு ... பிடெல் காஸ்ட்ரோ, சேகுவாரா, ரால்

அதே சமயம் மக்கள் ஆதாரவில்லமல் வெற்றிபெறவும் முடியாது... ஒருவேளை "எனக்கென்ன" மக்கள் வாழ்ந்த இந்திய தேசம் போல் மற்றொரு தேசம் இருந்தால் இது பொய்யாகக்கூடும்!

 
At 2:38 PM, July 06, 2007, Blogger செல்வநாயகி said...

பெயரிலி,

இந்த வலைப்பதிவுகளுக்குள் வந்தபோது கம்யூனிசமோ, மார்க்கிசமோ, அவர்களுக்குள் உள்ள உட்பிரிவுகளோ சண்டைகளோ எதுவும் தெரியாது எனக்கு.(இப்போதும் பெரிதாகக் கரைத்துக்குடித்துவிடவில்லை). திருவிழாவில் முட்டாய்க்காரனைப் பார்க்கும் குழந்தைபோல்தான் இதுபற்றிய பதிவுகளையெல்லாம் வாசிக்கத் துவங்கினேன். நீங்கள் சொல்லும் இந்துராமும் அவருடைய கம்யூனிசமும் என்ன செய்துகொண்டிருக்கிறது என்பதை விளக்கி "சென்னையில் எதற்கு இரண்டு இலங்கைத் தூதரகங்கள்" என்ற தலைப்பில் என நினைக்கிறேன் தங்கமணி எழுதிய இடுகையொன்றிலிருந்து அவர்களின் சார்பு நிலைகளைப் புரிந்துகொள்ள முயற்சித்தேன். அவர் இலங்கா ரத்னா ஆனபோது இன்னும் நிறையவே புரிந்தது இந்து ராமின் கம்யூனிச அரசியல் பற்றி. அதுதான் நண்பர் சந்திப்பு சார்ந்திருக்கும் இயக்கம் என்றால் அந்த இயக்கத்தின் குறைபாடுகளை விமர்சியுங்கள். விமர்சித்திருக்கறீர்கள். அது பல புதிய செய்திகளையும் சொல்கிறது. உங்கள் விவாதப்படியே இந்த இயக்கங்கள் தம் பணிகளில் தோற்றுப் போனது என்றும் நக்சல்பாரிகள் போன்ற இயக்கங்கள்தான் உருப்படியான புரட்சியை முன்னெடுப்பவர்கள் என்றும் எடுத்துக்கொண்டாலும், அந்த நக்சல்பாரிகள் யார், எதற்காக இத்தனையும் செய்கிறார்கள், அவர்களின் சமூக அக்கறை என்ன என்பதை மக்களுக்குக் கொண்டுசேர்க்கவேண்டியதும் அவசியம் என்பது எனது புரிதல். இந்தப் பத்திக்கு இப்படித் தலைபிட்டு இங்கிட்டதற்கும் எனக்கு அதுவே காரணம். அது நடக்காதபோது அவர்கள் யாருக்காகக்ப் போராடுகிறார்களோ அவர்களே அதைப் புரிந்துகொள்ளாததும், அதிகார அமைப்புகள் மூலம் தீவிரவாதிகள் பட்டம் சுமத்தப்பட்டுச் சித்திரவதைக்கு உள்ளாவதும் தான் அதிகம் தொடரும். இதை யார் எப்படிச் செய்யவேண்டும்? அல்லது செய்யவேண்டிய தேவைகளே இன்றி சிறுசிறு ஆயுதக்குழுக்கள் மட்டுமே பல வெற்றிகளையும் சாதித்துவிட முடியும் என்றால் அதுபற்றிய விரிவான விளக்கங்கள் என்கிற பேசுபொருளுக்குள்ளும் நீங்கள் வந்திருந்தால் இன்னும் சிலவற்றைப் படிப்பவருக்கு அறியத்தந்திருக்கலாம். சந்திப்பை விமர்சிப்பது மட்டுமே உங்கள் நோக்கம் மற்றும் தேவை என்றால் என்றால் உங்களின் விருப்பமான அதில் நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை. ஆனால்,


////வாய் கிழியப் புரட்சி பற்றிப் போதிப்பதைத் தவிர, இத்தனை நாட்களிலே என்னத்தைச் சாதித்தீர்கள்? மேதினம் பற்றி ஒரு புத்தகம் போட்டிருக்கிறேன் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள். மலம் கழித்தபின்னர் துடைக்கக்கூட அதன் பக்கங்கள் தமிழ்நாட்டினதோ இந்தியாவினதோ பாட்டாளி, தொழிலாளி (அட இந்தியாவிலேதான் caste பிரச்சனையே இல்லையே, எல்லாமே class issues தான். வேணுமின்னா ராம் ஐயங்கார்வாளையே கேட்டுறலாமே. பேஷா பிபிஸி இங்கிலீஸ்லையே ஸொல்லிடுவார், "class is the sole issue, and the cate is merely a roll of toilet tissue.") வர்க்கங்கள் கனங்களுக்கு உதவுமா தெரியாது. //////

இந்த இடத்தில் எனக்குக் கொஞ்சம் பேச இருக்கிறது. இந்த இடைச்செருகல் எதற்கு பெயரிலி? இவ்வளவு பெரிய பின்னூட்டத்தில் எதேச்சையாக வந்து விழுந்துவிட்டதா? அல்லது இந்த இடைச்செருகலுக்காகத்தான் இவ்வளவு நீண்ட பின்னூட்டமா?

எம் சமூகம் மலம் கழுவிக்கொள்ளக்கூடத் தண்ணீர் இன்றித் தவிக்கிற பகுதிகளையும் கொண்டே இயங்குகிறது. ஆடிவந்தால் வேப்பம்பழங்களையும், பங்குனி வந்தால் இலந்தப்பழங்களையும் பொறுக்கி வயிறு வளர்க்கும் என் கிராமத்தின் பரட்டைத்தலைக்கிழவி ஒருத்தி தன்னோடு மரம்மரமாகச் சுற்றித்திரியும் தன் மகள்வயிற்றுப் பேத்தி மலம் கழித்தால் எங்கிருந்தோ காற்றுக்குப் பறந்துவரும் புத்தகத்தாளெடுத்துத்தான் துடைத்துவிடுகிறாள். அது பெரியாரைப் பேசினாலும், மார்க்சைப் பேசினாலும், இந்துராமைப் பேசினாலும் அவளுக்குக் கவலை இல்லை. அவளைப் பொறுத்தவரை அது ஒரு பயன்பாடு. அவளின் அடிப்படைத் தேவைக்கான பயன்பாடு. இந்தியாவில் "மே தினம்" புத்தகம் வெளியிட்டிருக்கும் சந்திப்பின் கருத்துக்களடங்கிய தாள் உங்கள் பார்வையில் மலம் துடைக்கத்தான் போகும் என்றாலும் அதில் ஒன்றும் குறைச்சலிருப்பதாகத் தெரியவில்லை.

இங்கே நாம் சிலசமயங்களில் எழுதிக்குவித்துக்கொண்டிருப்பவை அதற்காவது உதவுகிறதா என யோசிக்கிறேன். ஏனென்றால் நீங்களும் நானும் அமெரிக்காவில் உட்கார்ந்துகொண்டு எழுதுவதைக் கணிணிவரை வந்து அச்சுநகல் எடுத்து மலம் துடைக்கப் பயன்படுத்த அந்தக் கிழவிக்குத் தெரியாது. அதெல்லாம் தெரிந்தவர்களுக்கு நம் எழுத்துக்களின் அச்சுநகல் காகிதங்கள் எல்லாம் தேவையே இன்றி காஸ்ட்லியான soft angel toilet tissue வங்க்கிக்கொள்ள முடியும்.

எழுதுங்கள் பெயரிலி. விமர்சனமோ எதுவோ, ஆர்வத்துடன் அறியாமையுடன் இருக்கும் என்போன்ற பலபேருக்கு உங்கள் எழுத்துக்களால் புதிய புரிதல்கள் கிடைக்கட்டும். அதைவிடுத்து அந்த எழுத்து, உங்களுக்கு உவப்பில்லாத ஒன்றைக் கருத்தாக வைத்தார் என்பதற்காக இன்னொருவரின் புத்தகம் கிழித்து யாருக்கோ மலம் துடைக்க ஏன் துடிக்கவேண்டும்? உங்களுக்கு எழுத ஆரம்பித்தால் நல்ல தமிழ்ச்சொற்களும், மூலையின் ஒவ்வொரு செல்லில் இருந்தும் எப்போதோ தேக்கிவைத்த வாசித்த விசயங்களும் போட்டியிட்டுக்கொண்டு வருவதுபோலவே இம்மாதிரி இடைச்செருகல்களும் தடுக்கமுடியாது வந்து விழுந்தே தீரும் என்றால் பிறகு ஒரு கத்தரியாவது போட்டுக்கொள்வதில் ஏதும் சிரமமுண்டா? நட்போடும் அன்போடும்தான் கேட்டுக்கொள்கிறேன். புரிந்துகொள்வீர்கள் என்றும் நம்புகிறேன். இல்லை நான் சொல்லியிருக்கிற இதன்மேலும் உங்களுக்கு உங்கள் பாணி விமர்சனம்தான் எழுமென்றாலும்
நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை. ஏனென்றால் வலையுலகில் இடுகைகளில் என்னவேண்டுமானாலும் படைத்துக்கொள்வதற்கான படைப்புரிமை போல், உங்களைப் போன்ற நண்பர்களின் விமர்சன உரிமைகள்கூட எல்லைகளுக்கு அப்பாற்பட்டதுதானே!

மற்றபடி நீங்கள் நேரம் ஒதுக்கி இங்கு வந்தமைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி.

 
At 2:48 PM, July 06, 2007, Blogger செல்வநாயகி said...

மறுமொழிக்கு நன்றி செல்லா. இந்தப்பதிவு எனக்குள்ளூம் பலகேள்விகளை ஏற்படுத்தியே இருக்கிறது. உலகின் அனைத்துவிதமான புரட்சிகளையும், குறிப்பாக சிறுசிறு குழுக்களின் போராட்டங்களையெல்லாம் தேடிப் படித்துத் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வம் முளைவிட்டிருக்கிறது. இந்தச்சூட்டை இப்படியே தக்கவைத்திருந்தால் படித்து முடிக்கலாம். இல்லாவிட்டால் வழமைபோல் காத்திருப்பின் பட்டியலில் போய் விழும்:))

 
At 3:13 PM, July 06, 2007, Blogger பத்மா அர்விந்த் said...

//ஒரு சமூகம் நாகரிகமான முறையில் தன் குடிமக்களை நடத்துகிறதா என்பதை, அந்தச் சமூகத்தில் இருக்கும் சிறைச்சாலை-களையும் காவல் துறையை-யும் வைத்தே அளவிட முடியும் என்பார்கள்.// இந்த வகையில் தமிழகம் மட்டும் அல்ல எல்லா சமூகமுமே போக வேண்டிய தூரம் மிக அதிகம். இன்னும் எழுத நிறைய இருக்கிறது. நன்றி இங்கே பதிந்தற்காக

 
At 3:46 PM, July 06, 2007, Blogger Thangamani said...

பெயரிலியின் பின்னூட்டில் இருந்து நான் புரிந்துகொள்வது இதுதான்:

நிறுவனப்படுத்தப்பட்ட மார்ச்சியம் இங்கு மக்களிடமிருந்து மேற்சாதி பூசாரிகளால் கடத்தப்பட்டு வெகுநாட்களாகிறது. அங்கங்கு உள்ளூர் பிரச்சனைகளில் தலையிட சில ஆர்வம் கொண்ட உள்ளூர் பிரமுகர்களைத் தாண்டி கட்சி என்ற அமைப்பு புரட்சிகர கனவுக்குள் மக்களை ஊறுகாய் போட்டு வைத்திருக்கிறது; அல்லது வைக்கவிரும்புகிறது.

//இத்தகைய தலைவர்களின் காத்திருந்த புரட்சியின் பின் வாலைப் பார்த்திருந்த பஞ்சாலைத்தொழிலாளர்களோ தெலுங்கானா விவசாயிகளோ கடைசியாகத் தங்கள் நிலையை உலகுக்குச் சுட்டுவதற்காகத் தற்கொலை செய்து போராடுவதுதான் புரட்சி முழுமையடைந்தது என்பதா? அல்லது..... சேவையின் விருதாக அந்நிய நாடொன்றின் லங்கா ரத்னா விருதைப் பெறுவதும் சிறை மீண்ட இருள்நீக்கி சுப்பிரமணியத்தைக் காத்திருந்து காரிலே ஏற்றிப்போவதுமேதான் காத்திருந்த புரட்சியி(டி)ன் ஈடேற்றமா? என்னத்தைக் கிழித்தீர்கள்? //

இதுதான்.

புரட்சிகரக் குழுக்களிடமிருந்து சுகுமாரன்களும், நிறுவனமயப்படுத்தப்பட்ட மார்ச்சிய கட்சிகளிடமிருந்து 'இலங்கா இரத்னா' களும் வரும்பட்சத்தில் நான் எப்படியான கருத்தைக்கொண்டிருப்பேன்?
தங்கள் சுயநேர்மையும், முனைப்பும், சமூகபுரிதலும் அவர்களை கடும் தவறிழைக்க (?) வைத்து அதில் மாண்டு போனவர்களோ அல்லது சுகுமாரன்களாய் மீண்டு வந்தவர்களோ ஏமாற்றுக்கார, நயவஞ்சகர்களை விட மிகவும் பெருமதியானவர்கள். அவர்களே அடித்தட்டு மக்களிடம் உரிமைகளைப் பற்றிய, வாழ்வைப்பற்றிய நம்பிக்கையை விதைப்பவர்கள்; மற்ற மார்க்சீயப் பூசாரிகள் அல்ல.

எப்படி சில இந்துத்துவ அறிஞர்கள் கொக்ககோலா முதல், அணுகுண்டுவரை வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்று உரையெழுதிக்கொண்டிருக்கிறார்களோ அப்படியே இவர்களும் 'மூலதனத்தில்' இருந்தும், இரட்சகர் லெனினிடமிருந்தும் மாநிலத்துக்கு மாநிலம் புதுப்புது வியாகியானங்களை எழுதிக்கொண்டு மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

சுகுமாரன்கள் //மக்கள் பங்கு பெறாத எந்தப் புரட்சியும், அதை யாருக்காக நடத்துகிறோமோ அவர்களுக்கே பயன்படாமல் போய்விடும். சிறு குழுக்களின் ஆயுதத் தாக்குதல் முயற்சிகளெல்லாம் மக்கள் ஆதரவில்லாத குறுங்குழு வாதம் என்பதைப் புரிந்து கொண்டேன்.// என்று சொல்வதற்கும், மார்ச்சிய பூசாரிகள் சொல்வதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.


நன்றி செல்வநாயகி!

 
At 4:51 PM, July 06, 2007, Blogger -/பெயரிலி. said...

செல்வநாயகி,

நிச்சயமாக, சந்திப்பை(யும் இந்து ராமையும்) விமர்சிப்பது(ம்) என் நோக்கமே. ஆனால், அதுமட்டுமல்ல நான் சொல்லவந்தது அதைமட்டுமல்ல. இவர்கள் புரட்சி முழுமையடையவேண்டுமென்று சொல்லிக் கொண்டே இத்தனை நாள் வரை சாதித்தது என்னவென்று சொல்வதில்லை. உதாரணத்துக்கு, மேற்குவங்கத்திலே ஆளுங்கட்சி செய்ததையும் அதை அத்தனை மரபுமார்க்ஸியத்தோழர்களும் நியாயப்படுத்தியதையும் பாருங்கள். ஆனால், இவர்களின் பாதைகளிலேயிருந்து விலகிப்போய்த் தீவிரவாதத்தினைக் கையிலெடுத்தவர்களே (போகிற வருகின்றவனையெல்லாம் சுடு என்பதான அர்த்தத்திலே சொல்லவில்லை), யாருக்காகத் தாங்கள் போராடுகின்றோம் என்று சொல்லிக்கொள்கின்றார்களோ, அவர்களுக்காகக் கொஞ்சமேனும் மாற்றம் ஏற்படுத்தும்படியாக ஏதேனும் செய்திருக்கின்றார்கள்; செய்கின்றார்களெனத் நடப்பவற்றினைப் பார்க்கும்போது தோன்றவில்லையா? அவர்களைச் சார்ந்திருக்கும் மக்களை நாம் எப்போதாவது போய்க் கேட்டிருக்கிறோமா? மக்கள் யாரைச் சார்ந்திருக்கின்றார்கள் என்று பார்க்கக்கூட Da kindu இனையே வாசித்து வைக்கவேண்டிய நிலையிலே நாங்கள்; ஓர் உதாரணத்துக்கு, பாலமுருகனின் சோளகர்தொட்டி வாசித்திருப்பீர்கள்; இன்னமும், சதாசிவம் ஆணைக்குழு முன்னான சாட்சியங்கள் பற்றிய சுகுமாரனுடைய முன்னைய கட்டுரைகளையும் (காலச்சுவடோ எங்கே வந்ததென மறந்துபோய்விட்டது). அதனையும் பரபரப்போடு வீரப்பன் வதம் குறித்து விற்பனையாகும் நூல்களையும் சேர்த்து வாசித்துப்பாருங்கள். "சிறுகூட்டத்தினர்" குறித்தும் அவர்கள் தங்கியிருக்கும் மக்கள் குறித்தும் எம் மீது மார்க்ஸிய மனிதாபிமானி நடத்தும் கிண்டு அமுக்கிய பிம்பமும் (சுகுமாரன், கல்யாணி, நெடுமாறன் வீரப்பனைச் சந்திக்கப்போவதையே எதிர்த்த சிகாமணிகளிலே ராம், தேவாரம், சோ ஆகியோர் அடக்கம்) அந்தப்பிரதேச மக்கள் கொண்டிருக்கும் பிம்பமும் எத்துணை மாறானவையெனத் தெரியவரும். நாங்கள் விரும்பியவற்றினையே நடப்பதாக எண்ணவிழைகின்றோம். கத்தியின்றி இரத்தமின்றி கம்யூனிஸ்டு கட்சிகள்கூட நடத்தும் புரட்சிகளும் இப்படியாகப் பெயர்பண்ணும் (அதாவது, சோவியத்து விழுந்தவுடன் கட்சியின் பெயரை மாற்றி 'ஜனநாயகம்' சேர்க்கும் புரட்சிகள் இலங்கையிலே கம்யூனிஸ்டு கட்சியிலே நடந்ததைக் கண்டிருக்கிறேன்) வேலைகளாகவேயிருக்கின்றன. தேர்தலுக்கு எந்தத் திராவிடக்கட்சியுடன் அடுத்த கூட்டு என்று நிற்கும் கட்சிகளுக்கு, புரட்சி பாலூறி விளைந்து அரிசி முற்றிக் கதிரறுப்பது குறித்து, உடனுக்குடன் பாதித்தவனுக்கும் தனக்குப் பாதிப்பேற்படின் எப்படியாகவிருக்குமென அதே கோணத்திலேயடிக்கும் நக்ஸலைட்டுக்களின் செயற்பாடுகள் கதிகலங்கவைப்பது, மார்க்ஸுக்கும் எங்கல்ஸுக்கும் தாம் சார்ந்த சூழலுக்கும் சமூகத்துக்குமேற்ப இயக்கம் காட்டுவதாலேயே. இப்படியான குழுக்களைச் சிறுகுழுக்களென்று விலக்கிவிடமுடியுமா? எல்லாப்புரட்சிகளுக்கும் (நான் சொல்வது நியாயமான நடைமுறைப்புரட்சிகளை மட்டுமே - காண்கையிலும் இணையத்திலும் தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் தோழர், தோழி என்று அழைத்துக்கொள்ளும் புரட்சியையல்ல :-)) ஏதுவான சூழலமைந்த நேரத்திலே எங்கோ ஓரிருவராலேயே விதை விழுந்து முளைத்து விரிந்து பரவி மக்கள்புரட்சியாகின்றது; மக்கள் புரட்சியென்பது, ஊடகங்களின் திறனை வைத்துக்கொண்டு, பயங்கரவாதம் - ஜனநாயகம் என்று மாயையைப் பரப்புவதாகவிருக்கமுடியாது. ஆனால், துரதிர்ஷ்டமாக, மே.வங்காளம், கேரளா தொடக்கம் எல்லா இந்தியமாநிலங்களிலும் மார்க்ஸியக்கட்சிகளும் இதே ஊடகங்களை வைத்துக்கொண்டே பம்மாத்தினைக் காட்டிக்கொண்டிருக்கின்றார்களெனப் படுகின்றது - அதன் ஒரு விளைவே, நக்ஸலைட்டுப்பூச்சாண்டிகள் பற்றிய விவரணங்களும் எமக்குள்ளே பரப்ப ஏதுவாகின்றது. நான் இந்தியன் அல்ல என்பதாலே, சொல்லச் சங்கடமாகவிருக்கின்றது; என்றாவது, (நேபாளத்தின் தெற்குப்பகுதி) மத்திய இந்தியாவிலே நக்ஸ்டலைட்டுகளின் செயற்பாடுகள் மிகுந்திருக்குமிடங்களிலே செல்ல முடிந்தால், ஒரு முறை அவர்கள் மக்கள் சாராத சிறுகுழுக்களா என்பதை உங்களைப் போன்றவர்களே எமக்குச் சொல்லமுடியும். நிச்சயமாக, மக்கள்சாராத சிறுகுழுக்கள் எல்லா நாடுகளிலுமேயிருக்கின்றன. கிரீக், ஜேர்மன், ஜப்பான் தொடக்கம் எத்தனையும் பத்துப்பேர், முப்பதுபேர் மட்டுமே கொண்ட செம்படைகள் இருந்தன; இருக்கின்றன. ஆனால், இந்தியாவிலே இன்று தெலுங்கானா, பீகார் போன்ற பிரதேசங்களிலேயிருக்கும் நக்ஸலைட்டுகளையெல்லாம் அப்படியாகக் கருதி ஒதுக்கிவிடமுடியாதெனவே படுகின்றது. மக்கள் அவர்களுக்குப் பின்னாலேயிருக்கின்றனரென்றே சொல்வேன். நிச்சயமாக, தமிழரசனின் தமிழர்படை அங்குமிங்கும் வாசித்ததினை வைத்துப் பார்க்கும்போது அப்படியாக மக்கள்சார்ந்த இயக்கமாக எனக்குத் தெரிந்ததில்லை.

இரண்டாவது, மலம் துடைக்கும் காகிதமாகப் பயன்படுவது என்றுகூறியது பற்றி. நீங்கள் சொல்லியிருப்பதுபோல, குழந்தைக்கு மலம் துடைக்க மேதினம் பற்றிய புத்தகம் பயன்பட்டால், மகிழ்ச்சியே. நான் அப்படியான விதிவிலக்கினை எண்ணவில்லை. அஃது என் தவறுதான். நான் பொதுவான பார்வையிலே "மலம் துடைத்துக்கொள்ள காகிதத்தினைப் பயன்படுத்தாத சமூகத்திலே கடதாசிக்கு என்ன வேலையிருக்கக்கூடும் என்ற வகையிலேயே எண்ணிவிட்டேன். பஞ்சத்திலே சாகும் பஞ்சாலைத்தொழிலாளிக்கு, கட்சித்தலைவரோ வட்டச்சிறுவரோ மேதின மகிமை குறித்து நூல் வெளியிடுவது, கணணித்தொழில்நுட்பக்கல்விக்குக் கடைகெட்ட கல்லூரியிலேனும் இடம் கிடைக்கவேண்டுமென்று மத்தியதட்டு நிற்கும் நாட்டிலே என்ன பயனைத் தரப்போகின்றது? சொல்லுங்கள். இதுதான் இவர்களிலேயும் இவர்களின் கோஷம் நிறைந்த ஊடகங்களிலேயும் வெறுப்பை ஏற்படுத்துகின்றது. இதேபோலத்தான், இப்போதெல்லாம் 'இசங்'களையும் 'துவங்'களையும் பிடித்துக்கொண்டு, நடைமுறைக்குப் பயனில்லாமற் பேசிக்கொண்டேயிருக்கும் தத்துவவாதிகளையும் புரட்சியாளர்களையும் கண்டாலே ஒதுங்கச்சொல்கின்றது. வெறும் வாய்ப்பேச்சும் நூல்வெளியீடும் மட்டும் புரட்சியை ஆக்கிவிடுமென்று நாம் எண்ணமுடியாது. அது சந்திப்புக்கும் பொருந்தும்; நீங்கள் சொல்வதுபோல இணையத்திலே எழுதும் எமக்கும் பொருந்தும். மறுப்பதற்கில்லை. இனி, இங்கே கத்தரி போட்டுவிடுகிறேன். :-) இவற்றினையெல்லாம்விட, ஒரு குறித்த கூட்டத்தினருக்காக, சொன்னச் செய்யப்போராடும் நக்ஸலைட்டுகள் (அவர்களிடையே

 
At 7:55 PM, July 06, 2007, Blogger தமிழ்மணி said...

என்னமோ பெரியவங்கள்ளாம் பேசறீங்க. ஒன்னும் புரியலை.

ஆமா, புரட்சின்னா என்னாங்க?

 
At 10:43 PM, July 06, 2007, Blogger மாலன் said...

அன்புள்ள செல்வநாயகி,

நீங்கள் தந்திருக்கும் சுகுமாரன் கட்டுரைக்கு நன்றி.
மூன்று கோணங்களில், (மூன்றும் ஒன்றுடன் ஒன்று ஒருவகையில் தொடர்புடையது)
1.'புரட்சியைக் கருக்கொள்ளாதவரை ஒரு சமூகத்தில் புரட்சியைத் தோற்றுவிக்க முடியாது' என்று ஒரு வழக்கு உண்டு.(இந்தக் கோணத்தில்தான் ஒரு சமூகத்தில் அறிவுஜீவிகளீன் வேலை முக்கியத்துவம் பெறுகிறது)
2.ஒரு சமூகத்தில் உள்ள் சிறுபான்மையினரே (அதாவது கருத்து ரீதியாக சிறுபான்மையினர்) அந்த சமூகத்துப் பெரும்பான்மையினரின் போக்கைத் தீர்மானிக்கின்றனர். (குழந்தை மணம், தீண்டாமை ஒழிப்பு, பெண்கல்வி, கணவனை இழந்தவர்களின் மறுமணம், மணவிலக்கு, பெண்களுக்கான வாக்குரிமை, பெண்களுக்கான சொத்துரிமை, தகவல் அறியும் உரிமை போன்ற பல முன் மொழியப்பட்ட காலங்களில் அறிவுலகு சார்ந்த சிலரது கருத்தாகவே இருந்தது என்பதை நினைத்துப் பாருங்கள்.பின்னோக்கிப் பார்த்தால் புத்தர் காலத்திலிருந்து பல உதாரணங்களை நீங்கள் காணமுடியும்)
3. இந்தியாவில் நிறுவனமயப்பட்ட எந்த அரசியல் சிந்தனையும் அதன் வீர்யத்தை இழந்தே வந்திருக்கிறது. ஏனெனில் நம் அரசியல் அமைப்பு, வாக்குகளால் தீர்மானிக்கப்படுகிறது. சித்தாந்தங்களால் அல்ல.(The character of our polity is electoral and not idealogical)

இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆயுதப் புரட்சியைக் கைவிடுவதாகவும், பாராளுமன்ற அரசியல் வழியை ஏற்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றி ஆண்டுகள் பல ஆகின்றன. அவை ஆயுதப் புரட்சியில் இறங்கும் என எதிர்பார்ப்பது வெறும் Fantasy.

கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் மாற்றங்களை சந்தித்து வந்திருக்கின்றன. இந்தியாவில் அவற்றின் போக்கில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு, அதன் முன்னால் தலைவர்களை மட்டும் குறைசொல்வது முழு உணமையாகாது.

இன்னொரு கருத்தும் உங்கள் யோசனைக்கு:
தேசியவாதமும், மனித உரிமை ஆதரவும் நடைமுறையில் ஒன்றோடு ஒன்று ஒத்துப் போகாது. சோவியத் யூனியன் தேசியவாதத்தை அங்கீகரித்தது (பிரிந்து போகும்சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்ததின் மூலம்). ஆனால் அங்கு மனித உரிமைகள், கருத்துரிமைகள் இவை எந்த அளவிற்கு அனுமதிக்கப்பட்டன என்பது உலகறிந்தது. இப்போதும், அதாவது புரட்சி நடந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், பிடல், டல் நிலை சரியில்லாமல், சிகிச்சைக்குப் போகும் காலத்தில், பதவியைத் தம்பியிடம்தான் கொடுத்துவிட்டுப் போகவேண்டியிருக்கிறது. ஒரு கூட்டுத் தலைமையை ஏற்படுத்த இயலவில்லை.

இன்னொரு கோணத்தில் பார்த்தால், மனித உரிமைகள் கோணத்தில் பார்த்தால், விடுதலைப்புலிகளின் செயல்பாட்டை ஆதரிக்கமுடியாது.கருத்துரிமை, மனித உரிமை மறுப்பில் அவர்கள் சிங்கள அரசுக்குச் சற்றும் குறைந்தவர்கள் அல்ல. ஆனால் தேசியவாத (தமிழ்த் தேசியவாத) நோக்குக் கொண்டவர்களால் அந்தப் போராட்டத்தை வரவேற்காமல், ஆதரிக்காமல், இருக்க முடியாது.

நிறைய உதாரணங்கள் சொல்லலாம். ஆனால் சிந்திக்க இவை போதும்.
அன்புடன்,
மாலன்

 
At 11:41 PM, July 06, 2007, Blogger செல்வநாயகி said...

மாலை அவசரமாய் உங்கள் பின்னூட்டத்தைப் படிக்கக்கூட இல்லாமல் பிரசுரிக்கக் கொடுத்துவிட்டுப் பல மணிநேரங்கள் இங்கு வர இயலவில்லை பெயரிலி. இப்போது வந்து பார்த்தால் நீங்கள் நேரம் ஒதுக்கித் தட்டச்சிய நீளத்தில் பாதியை விழுங்கிவிட்டு பிளாக்கர் அரைகுறையாக இங்கு சேர்த்திருக்கிறது. மன்னிக்கவும். உங்களிடம் அதன் மீதிப்பகுதி இருந்தால் சிரமம் பாராது மீண்டும் இடுங்கள். மொத்தமாகவே சேமிப்பிலிருந்தால் அப்படியே இடுங்கள். இன்னொருமுறை பிரசுரிக்கிறேன். நன்றி.

 
At 12:00 AM, July 07, 2007, Blogger -/பெயரிலி. said...

செல்வநாயகி,
நன்றி. பரவாயில்லை. தனிப்பட்ட சில காரணங்களினாலே பின்னூட்டிகள் சிலரைப் பார்த்தபின்னால், என் பின்னூட்டத்தைத் தொடர விரும்பவில்லை. நான் தொடர்வது எங்கே போய் நிற்குமென்று எனக்குத் தெரியும். அதனால், இங்கே ஆட்டத்திலிருந்து கழன்றுகொள்கிறேன் :-)

 
At 12:29 AM, July 07, 2007, Blogger இளங்கோ-டிசே said...

சுகுமாரனின் உரையாடலைப் பகிர்ந்தமைக்கு நன்றி செல்வநாயகி.
.....
பெயரிலி: *பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கும் ஆட்டங்கள். இதற்கெல்லாம் அலுத்துக்கொள்ளக்கூடாது :-)
(*ஆதவன் தீட்சண்யா)

 
At 12:47 AM, July 07, 2007, Blogger செல்வநாயகி said...

தங்கமணி,

மேலும் சில துணைத் தகவல்களோடு நீங்கள் பெயரிலியின் பின்னூட்டத்தை எடுத்தாண்டு எழுதியுள்ளீர்கள். நன்றி. "நாங்கள்தான் புரட்சியை விதைக்கிறோம், கத்துக்குட்டித் திண்¨ணைப் புரட்சிக் கம்யூனிஸ்டுகள் அல்ல" என்ற எடுத்தாடலில் எனக்கும் உடன்பாடு இருக்கவில்லை என்பதை நான் அதைச் சந்திப்புக்கும் சுட்டிக்காட்டி மக்களைச் சென்றடைவது பற்றிப் பேசக் கேட்டு எழுதிய என் பின்னூட்டத்தில் நீங்கள் அறியலாம். அதையே காரமாக விமர்சித்து இட்ட பெயரிலியின் பின்னூட்டத்தில் சொல்லப்பட்ட இந்துராம் கம்யூனிஸ்டின் புரட்சி அவருக்கானது, அதைவிடவும் புரட்சிக்காரச் சிறுகுழுக்கள் செய்திருப்பவைதான் மக்களுக்கானது என்பதையும் உள்வாங்கியபின்னேதான் பெயரிலிக்கும் நான் பதில் எழுதினேன். அவரை நான் கேட்டுக்கொண்டது வேறு:)) அந்த இடம்வரை போகாமல் பெயரிலியின் பின்னூட்டத்தில் "என்ன கிழித்தீர்கள்" உடன் கோடுகிழித்து நின்றுகொண்டது உங்கள் லாவகம்:))

இப்போதும்கூட நாம் பேசும் தளம் வேறுவேறு புள்ளிகளாக இருக்கிறதோ அல்லது நான் தொடவிரும்பிய புள்ளியைச் சரியாக இங்கே நான் சொல்லவேயில்லையோ என்றும்கூட நினைத்துக்கொண்டிருக்கிறேன். காரணம் இந்த விசயத்தை இங்கே இதுவரை நாம் சிறுகுழுக்களா, பெரும் இயக்கங்களா (உங்கள் பார்வையில் மார்க்சிய பூசாரிகள்) என்ற ஒரே பொருளிலே மட்டுமே பேசியிருக்கிறோம். நான் சுகுமாரனின் செவ்வியில் உள்ள மற்ற பிரச்சினைகள் சிலதையும்கூட மனதில் வைத்துக்கொண்டே விழிப்புணர்வு மக்களுக்குப் போகவேண்டும், இதை யார் எப்படிச் செய்வது என்கிற பல்லவியைப் பாடிக்கொண்டிருந்தேன்.
அவற்றில் முக்கியமானவை அடிப்படை உரிமைகளை அடித்தட்டு மக்களுக்குப் புரியவைப்பது, அவற்றைப் புரிந்துகொண்டவர்கள் மூலமான மற்றும்சில முன்னெடுப்புக்களை (உதாரணத்திற்கு அந்தியூர் விஜயா பற்றி சுகுமாரன் சொன்னது) நகர்த்துவது இதையெல்லாம் யோசித்தேன். பெண்கள் மீதான, குழந்தைகள் மீதான வன்முறை, பாலியல் தொழிலாளர்களின் உரிமைகள், தண்டனைக்குள்ளாக்கப்படும் குற்றவாளிகளுக்கும் உரிமைகளை ஏற்படுத்துவது என சுகுமாரன் சொன்ன அத்தனை விசயங்களையும் கணக்கில் கொண்டே இதுபற்றிய விழிப்புணர்வைச் சாதாரண மக்களுக்கும் கொண்டுசேர்க்க என்ன வழிகள் உள்ளன என்பது பற்றி விவாதம் போகும் என்றும் எதிர்பார்த்தேன். இப்போதும் இதைச் செய்ய அதை முன்னெடுக்கும் புரட்சிக்காரச் சிறுகுழுக்களில் போராளிகளாய் இருந்து மாண்டுபோகிறவர்களோ , மீண்டு வருகிறவர்களோ மட்டுமேதான் தகுதியானவர்கள் அல்லது நம்பிக்கைக்கு உரியவர்களா? சமூகப் பொறுப்புள்ளவர்கள் என்ற முறையில் புரிதல் உள்ள எல்லோரும் செய்யவேண்டியவையாக இவை இல்லையா? என்கிற கேள்விகள் எனக்குள் தொக்கியே நிற்கின்றன. ஆனால் இங்கு அவசரத்தில் அவரவருக்கு உள்ள வேலைகளில் விவாதம் ஒரு இடத்திலேயே நின்றுபோய்விட்டாலும் வருந்தவில்லை. நடந்தவரை மகிழ்ச்சியே.

 
At 1:10 AM, July 07, 2007, Blogger செல்வநாயகி said...

பெயரிலி,

உங்கள் விருப்பம்:)) அந்த மீதியை மட்டுமாவது அனுப்பியிருக்கலாம்:)) வந்த பாதி சொன்ன விசயங்கள், சொல்லியவிதம் இரண்டும் பிடித்தது. எல்லோராலும் கைவிடப்பட்டவர்களுக்காய் போராடும் குழுக்கள் பற்றிய உங்கள் எண்ணங்களில் பெரும்பாலும் ஒத்தே இருக்கிறேன். மக்களின் ஆதரவு அந்தந்த இடங்களில் அவர்களுக்குக் கிடைத்தேயிருக்கிறது என்பதும் நல்ல விசயம்தான். ஆனால் அவை போதுமானவையா? இன்னும் பரவலாக அவர்களுக்கான பலம் கிடைக்க என்ன செய்யலாம் என்பதே என் பார்வையாக இருந்தது.

இரண்டாவது பத்தியில் மீதியைத் தொலைத்துவிட்டு வந்தவரை இருக்கும் செய்திக்கு இனி நான் வரப்போவதில்லை:)) போதும் அந்த ஆராய்ச்சி:)) புரிதலுக்கு நன்றி.

பி.கு:- இசங்களையெல்லாம் பார்த்தால் எனக்கும் ஒவ்வாமைவருவது உண்டு. ஆனால் வலைப்பதிவுகளில் இசத் திணிப்பு வன்முறையிலிருந்து தப்புவது சிரமம்தான்:))

டிசே,

இங்கே ஆட்டம் மைனசிலிருந்து தொடங்கியதாக நான் உணர்கிறேன்:))

 
At 1:31 AM, July 07, 2007, Blogger செல்வநாயகி said...

நீங்கள் மீண்டும் வலைப்பதிவுகளில் முன்புபோல் இயங்க ஆரம்பித்திருப்பதற்கும், எங்களைப் போன்றவர்களுடனான உரையாடலுக்கும் நேரம் ஒதுக்கி வருவதற்கும் நன்றி மாலன் உங்களுக்கு. இந்த இடுகைக்கு வேறு சில கோணங்களில் சிந்திப்பதற்கான குறிப்புக்களை வழங்கியிருக்கிறீர்கள். அவை எனக்குப் பயனுடையவை.

///'புரட்சியைக் கருக்கொள்ளாதவரை ஒரு சமூகத்தில் புரட்சியைத் தோற்றுவிக்க முடியாது' என்று ஒரு வழக்கு உண்டு.(இந்தக் கோணத்தில்தான் ஒரு சமூகத்தில் அறிவுஜீவிகளீன் வேலை முக்கியத்துவம் பெறுகிறது)////


புரட்சிகள் மக்களைச் சென்றடைவதற்கு ஒரு பாலமாக அறிவுஜீவிகள் இயங்கமுடியும், இயங்கவேண்டும் என்றுதான் நான் இதைப் புரிந்துகொள்கிறேன். அது நமது தேவையும்கூட. ஆனால் அறிவுஜீவிகளின் போக்கும் அதிகார அமைப்புக்களைச் சார்ந்து இயங்கத் தொடங்குவது நடக்கும்போது இவர்களுக்கும் எதிரான போக்கைச் செயல்வேகத்தில் இருப்பவர்கள் காட்டுகிறார்களோ என்றும் நினைத்துக்கொள்கிறேன்.

உங்களின் மற்ற குறிப்புக்களையும் புரிந்துகொள்கிறேன். இன்னும் அவற்றின் மீதெல்லாம் மேலெடுக்கப்படும் விளக்கங்களையும் படிக்கவும் விரும்பியே இருக்கிறேன். உங்கள் பக்கத்திலோ வேறு இடங்களிலோ கிடைக்கும்போது பயன்படுத்திக்கொள்வேன். நன்றி.

 
At 1:53 AM, July 07, 2007, Blogger செல்வநாயகி said...

பத்மா,
உங்கள் பின்னூட்டத்தை இப்போதுதான் கவனிக்கிறேன். நன்றி.

 
At 4:04 AM, July 07, 2007, Blogger அபிவிருத்தி said...

//நாடாளுமன்றத் தாக்குதலில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு இருக்கும் முகமது அப்சல் உட்பட யாருக்கும் தூக்குத் தண்டனை வேண்டாம் என்கிறோம். காந்தியைக் கொன்ற கோட்சே இன்றைக்கு இருந்-திருந்தாலும், கோட்சேவுக்கும் தூக்குத் தண்டனை வேண்டாம் என்றுதான் சொல்லியிருப்போம். காரணம், காந்தியே தூக்குத் தண்டனையை எதிர்த்தார். தவிர, தண்டனையின் நோக்கம் குற்றவாளியைத் திருத்து-வதாக இருக்க வேண்டுமே தவிர, அரசும் பதிலுக்கு ஒரு கொலையைச் செய்யக் கூடாது!//

மரணதண்டனையோ அல்லது வேறுவிதமான எந்த தண்டனையாக இருந்தாலும் அது வேண்டுமா, வேண்டாமா என்பதை தீர்மானிக்கக் கூடிய உரிமையை குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கோ அல்லது அவர்களின் இரத்தத் தொடர்புடைய உறவுகளுக்கோ வழங்க வேண்டும். குற்றவாளிகளின் எந்தவித பாதிப்பையும் உணராத மூன்றாம் தரப்பினரான அரசின் முடிவிற்கோ, அல்லது பொதுவான நபர்களின் கருத்திற்கோ முக்கியத்துவம் கொடுப்பது அறிவுப்பூர்வமாக இருக்காது.

தன் மகன் அல்லது மகள் படித்து பெரிய ஆளாக வரவேண்டும் என்ற எதிர்கால ஆசையுடன் கல்லூரிக்கு அனுப்பிய தந்தை ரேக்கிங் என்ற கொடுமையால் சக மாணவர்களாலேயே கொல்லப்பட்டால் அந்த தகப்பனின் மனநிலை எவ்வாறு இருக்கும்? அந்த அயோக்கியர்கள் என் கைகளில் கிடைத்தால் அடித்தே கொன்று விடுவேன் என்று அந்த மனிதர் சொல்வார். அவருடைய கோபம் நியாயமானதா இல்லையா? அவருடைய அந்த உணர்வுகளை அரசோ அல்லது மற்ற மூன்றாம் மனிதர்களோ உணர முடியாது.

ஒரு குற்றவாளிக்கு கொடுக்கப்படும் தண்டனையின் நோக்கம் அது போன்ற குற்றத்தை மற்றவர்கள் செய்யக்கூடாது என்பதாக இருக்க வேண்டும். குற்றவாளி திருந்த வேண்டும் என்ற நோக்கில் இருக்க வேண்டும் என்று சொல்வது வெற்று வாதமாகவே இருக்க முடியும், நடைமுறைக்கு சாத்தியமாக இருந்திராது.

இதற்கு ஆதாரமாக இருப்பது இன்றைய பத்திரிக்கை செய்திகள்.

(1) பலமுறை திருடியவர் மீண்டும் கைது, (2) பாலியல் வழக்கில் ஒருவர் கைது, ஏற்கனவே இவர் மீது இதுபோன்ற வழக்குகள் உண்டு.

இப்படி செய்த குற்றத்தையே திரும்ப, திரும்பச் செய்து கைதாகி விடுதலையானவர்களின் வரலாறுகள் நம் நாட்டின் குற்றவியல் சட்டத்தில் உள்ள குளறுபடிகளை தெளிவாக படம் போட்டு காட்டுகிறது. அந்த குளறுபடிகளுக்கு இதுபோன்ற கருத்துக்களை பரப்புபவர்களும் ஒரு காரணமாகவே கருத முடிகிறது.

நன்றி
அபிவிருத்தி

 
At 5:29 AM, July 07, 2007, Blogger thiagu1973 said...

எனது பதிலை பார்த்து சிரித்துவிட்டீர்கள் நன்றி !

கேள்விக்கு பதிலா நான் சிரிப்பை வைத்துகொள்ளவா ?

 
At 5:39 AM, July 07, 2007, Blogger சந்திப்பு said...

பெயரிலி தங்களது கருத்துக்களுக்கு நன்றி!
தோழர் செல்வநாயகி பதிவிட்டத்தின் உள்ளார்ந்த நோக்கத்தை கவனத்தில் கொள்வது பொருத்தமாக இருக்கும். அவரது நோக்கம் இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதும், அதே சமயம் புரட்சியின் பெயரால் மக்களிடம் இருந்து தனிமைப்பட்டு ‘காட்டுவாசி’யாக மாறுவதாலும், சிறு, சிறு குழுக்களாக பிரிந்து கிடப்பதாலும் எந்த விளைவும் ஏற்படப்போவதில்லை என்ற நோக்கத்தோடே இதனை பதிந்துள்ளார்.

அதே அடிப்படையை வைத்துக் கொண்டுதான் நானும், இடதுசாரி அதி தீவிரவாதிகளின் தவறானை பாதைக்கு எதிராக என்னுடைய விமர்சனத்தை முன்வைத்துள்ளேன். நன்பர் பெயரிலி, நக்சலிசம் எவ்வாறு புரட்சிகரதன்மை வாய்ந்தது, அது இந்தியாவில் என்னவென்னால் சாதித்தது என்று விளக்கியிருந்தால் அது குறித்த பிரச்சாரத்திற்காவது உதவியிருக்கும்.

பொறை கேட்கும் மக்களுக்கு பொறுமையை போதிப்பதா? என ஆதங்கப்பட்டிருப்பது நியாயமானதே! இன்னும் எவ்வளவு நாள் காத்திருப்பது என்ற அவரது அவசரத்தில் நியாயம் இருந்தாலும், தெளிவு இருப்பதாக தெரியவில்லை.

சி.பி.ஐ. - சி.பி.ஐ.(எம்) இரண்டு இடதுசாரி கட்சிகளும் 1964 பிரிந்தது என்றால், நக்சலிசம் 1969 இல் உருவானது. இரண்டிற்கும் வித்தியாசம் வெறும் ஐந்து வருடங்கள்தான். இந்த மூன்று அணிகளும் இந்திய ஆளும் வர்க்கம் குறித்து மூன்று நிர்ணயிப்புகளை கொண்டுள்ளனர். அந்த நிர்ணயிப்புகளுக்கு ஏற்ப புரட்சியை விரைவுபடுத்த மூன்று வழிகள் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த 40 வருட அனுபவம் எதை உணர்த்துகிறது? 64 இல் பெரிய கட்சியாக இருந்த சி.பி.ஐ. இன்றைக்கு முற்றிலும் கரைந்துள்ள நிலைக்கு சென்றுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. மேலும் அவர்களது அரசியல் நிலைபாடு சங்பரிவாரங்களோடும், எமர்ஜென்சியில் அரை பாசிச சர்வாதிகாரிகளோடும் கொஞ்சிக் குலாவியதன் விளைவு இன்றைக்கு பரிதாபகரமான நிலைக்கு சென்றுள்ளது.

நான் சார்ந்திருக்கும் சி.பி.ஐ.(எம்) ஐ பொறுத்தவரை இந்திய பெரு முதலாளித்துவ கட்சியான காங்கிரசுக்கு எதிராக, மோனோபலி ஆட்சி நடத்தி வந்த காங்கிரசை அரசியல் களத்தில் இருந்து வீழ்த்தியுள்ளது. தற்போது இந்த காங்கிரசு மற்றவர்களின் காலையே நம்பியுள்ள குதிரையாக மாறியதற்கும், ஏன் இடதுசாரிகளின் காலையே நம்பியிருக்கும் பரிதாபகரமான நிலைக்கு தள்ளியதற்கு எமது கட்சியின் அரசியல் நிலைபாடுகளே பெரும் காரணம்.

மேலும், காங்கிரசின் அரசியல் தோல்வியைத் தொடர்ந்து தேசிய அளவில் வலுவான ஜனநாயகபூர்வமான மாற்று சக்தி எழ இயலாத சூழலை பெரு முதலாளிகள் ஆதரவு பெற்ற பாசிச பா.ஜ.க. பயன்படுத்திக் கொண்டது. இதற்கு அனைத்து திராவிட மற்றும் மாநில கட்சிகளும் (ஒரு சில தவிர) ஆதரவு அளித்து பட்டுக்கம்பளம் விரித்தது. பா.ஜ.க. இந்தியாவை இந்துத்துவா என்ற பெயரில் இந்திய மக்களின் ஒற்றமைக்க வேட்டு வைத்து பாசிச வெறியாட்டம் போட்டதை அனைவரும் அறிவோம். இத்தகைய பலம் பொருந்திய பாசிச பா.ஜ.க.வை முற்றிலும் வீழ்த்திய பெருமை சி.பி.ஐ.எம். இன் அரசியல் தந்திரத்திற்கு கிடைத்த வெற்றியே. மேலும், தேசிய அளவில் கம்யூனிசத்தின் பால் மக்களது பெரும் கவனத்தையும் இந்த காலத்தில் ஈர்த்துள்ளோம். அது தவிர மூன்று மாநிலங்களில் கேரளா, திரிபுரா, மேற்குவங்கம் (12 கோடி மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது) ஆட்சியைப் பிடித்ததும், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு உழைக்கும் மக்களுக்கு ஆதரவான நிலைபாடுகளை மேற்கொண்டுள்ளதோடு இந்தியாவில் செய்யப்பட்ட நிலச்சிர்திருத்தங்களிலேயே 25 சதவீதத்தை மேற்குவங்கம், கேரளாவில் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இன்றைக்கும் ஆந்திரா, தமிழ்நாடு உட்பட பல்வேறு இடங்களில் நிலம் மற்றும் வீட்டு மனைக்கு எதிரான வலுவான போராட்டங்களை நடத்தி மக்கள் திரளை மார்க்சியத்தின் பால் திரட்டி வருகிறோம். குறிப்பாக 120 கோடி மக்களை கொண்ட இந்தியாவில் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம் என்பதை உணர்ந்து அதற்கேற்ப எங்களது திட்டத்தை வகுத்து செயலாக்கியுள்ளோம்.

மறுபுறம் சி.பி.ஐ.(எம்-எல்.) என்று ஆயுதப் புரட்சி என்று நீட்டி முழங்கியவர்கள் எங்கே இருக்கிறார்கள். இந்தியா முழுவதும் எத்தனை குழுக்கள் செயல்படுகின்றன? ஒவ்வொரு குழுவும் மற்ற குழுக்களையும் இதர இடதுசாரிகளையும் எப்படி வேட்டையாடுகிறது. ஏன் ஆயுதப் போராட்டம் என்ற பெயரால் ஒவ்வொரு ஆண்டும் தாழ்த்தப்பட்ட - பழங்குடி மக்களை 500 மேல் யாரால் வேட்டையாடப்படுகிறது. (இவர்கள் எல்லாம் வர்க்க எதிரிகள் - ஆட்காட்டிகள் என்ற நாமத்தால்) இவர்களது பாதை தவறு என்று உணர்ந்த லிபரேஷன் இன்றைக்கு தேர்தல் பாதைக்கு ஏன் திரும்பியது? அதைவிட பெரிய கொடுமை இவர்கள் காட்டும் நேபாளத்தில் ஒற்றுமையும் - அமைதியும் - ஜனநாயகத்தையும் கொண்டு வர மார்க்சி°ட் கட்சி செய்த பங்களிப்பு உலகிற்கே தெரியும். அங்கேயுள்ள மாவோயி°ட்டுகள் தற்போது பாராளுமன்றத்தில் பங்கேற்க உள்ளார்கள். அவர்களே இந்தியா மாவோயி°ட்டுகள் குறித்து விமர்சிக்கிறார்களே? பொத்தம் பொதுவாக நக்சலிசம் என்று குழப்புவதை விடுங்கள்.... உங்களது வழி நக்சலிமாக இருக்கலாம்.... எல்லா நக்சலிச குழுக்களையும், எல்லா நக்சலிச குழுக்களும் ஆதரிக்கிறதா? தமிழகத்தில் ம.க.இ.க. தனது கட்சி பெயரைக் கூட சொல்லிக் கொள்ள வெட்கப்படுகிறதே? இது எந்த அகில இந்திய அமைப்போடு இணைந்தது? இவர்கள் எப்படி இந்தியா முழுக்க புரட்சியை கொண்டு வரப்போகிறார்கள்? இவர்கள் செய்வது என்ன? கம்யூனிசம் என்ற பெயரால் இடதுசாரிகளுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் - அதாவது, போலி கம்யூனி°ட்டுகள் என்ற நாமகரணம் சூட்டி யாரை மகிழ்விக்கப் போகிறார்கள்? இவர்களது வர்க்க கூட்டாளி யார்? யாரோடு இவர்கள் கூட்டு சேர்ந்துள்ளார்கள்.... இத்தகைய கேள்விகளுக்கு மனப்பூர்வமாக விடையளிக்கத் தயாரா?

அடுத்து, எதற்கெடுத்தாலும் லெனினை வக்காலத்து வாங்குவது ஏன்? ஐயா லெனின் என்பர் தனி மனிதன் அல்ல. அது கம்யூனிசதின் மொத்த உருவம். புரட்சிகர அனுபவத்தின் பொக்கிஷம். அவர் என்ன கற்பனையில் கதை விட்டவரா? அவரது நிகழ்காலத்தில் நடைபெற்ற சூழலை எதிர்கொண்டு அதிலிருந்து கற்றவர் - புரட்சியை வென்றெடுத்த புரட்சிகரத் தலைவர். அவரை மேற்கோள் காட்டாமல், உங்களது எழுத்துக்களையா காட்ட முடியும்! நல்ல வேடிக்கை...

இந்த புரட்சி என்று ஆரம்பித்தாலே, அதுவும் ஆயுத புரட்சி என்று ஆரம்பித்தால் கியூபாவில் நடக்கவில்லையா? என்று மடக்குவார்கள்? ஒருவேளை சே குவேரா இந்திருந்தால் மிகத் தெளிவாக பதில் கூறியிருப்பார் இந்த கேள்விக்கு? எந்த ஒரு நாட்டின் சூழலும் மற்றொரு நாட்டுக்கு பொருந்தாது என்ற அடிப்படை பாலப்பாடத்தையாவது நமது புரட்சி வீரர்கள் கற்பார்களா? அவர்கள் எல்லாம் அனுபவங்கள். அதிலிருந்து நாம் ஏராளமாக கற்றுக் கொள்ளலாம். ஆனால் காப்பியடிக்க முடியாது.

பெயரிலி போன்ற புரட்சி வீரர்களுக்கு எதிராக நாம் விமர்சனம் வைத்தால், உடனே சி.பி.ஐ.(எம்) அய்யர், ஐயங்கார் கட்சி... பிராமண தலைமை.... என்ற உளற ஆரம்பித்து விடுவார்கள்... இதைத்தான் திசை திருப்பல்வாதம், குழப்பல்வாதம், சீர்குலைவுவாதம் என்று கூறுவது.

கம்யூனிசம் என்பது தொழிலாளிகளை சுரண்டலில் இருந்து விடுவிப்பது. நான் கேட்கிறேன்... எம்.ஆல்.எப்., அசோக் லேலண்ட், டி.வி.எ°. போன்ற நிறுவனங்களில் வேலை பார்க்கும் பிராமண தொழிலாளிகள் எல்லாம் அந்த சுரண்டலுக்கு உள்ளேயே மூழ்கி கிடக்கட்டும் என்று கூறுவீர்களா? நாம் என்ன பேசுகிறோம், எதை பேசுகிறோம் என்று நிதானிப்பதுதான் பிரச்சினைக்கு தீர்வு காண உதவும். கர்நாடக பிராமணராக இருந்தா பி. சீனிவாசராவ்தான் தஞ்சையில் இருந்த தாழ்த்தப்பட்ட மக்களை வீறு கொண்டு எழச்செய்து மக்களுக்கு வீராவேச வர்க்க உணர்வை ஊட்டி - நிலப்பிரபுத்துவ அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற்றுத் தந்தவர்.... யார் எந்த ஜாதியில் பிறந்தார்கள் என்பதல்ல பிரச்சினை? அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதுதான் தீர்வு!

அதைவிட மிக முக்கியமான விஷயம்; இட்லரின் பாசிச வெறித்தனத்திற்கு ஒருபோதும் சளைக்காத இந்து மதவெறி பாசிசத்தை முறியடிக்க - அதற்கு எதிராக பெரும்பகுதி மக்களை அணித்திரட்ட இந்த நக்சலிச புரட்சிவீரர்களின் ஐக்கிய முன்னணி தந்திரம் என்ன? காட்டுக்குள்ளும், திண்ணைலும், பு.ஜ.விலும் உளறினால் போதுமா? செயல்முறையில், நடைமுறையில் என்ன சாதித்தீர்கள். அப்படியென்றால் பாசிசம் வளர்வதை வேடிக்கை பார்கக்லாம் என்று இருக்கிறீர்களா?

மேதினம் வரலாறு இன்றைக்கும் உழைக்கும் மக்களின் ஆதர்சம். அது உழைப்புச் சுரண்டலுக்கு எதிரான மகத்தான போர்வாள்... ஐ.டி. துறையிலும், இதர துறையிலும் இன்றைய சூழலில் 12 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெறும் சுரண்டலிலிருந்து மீட்டெடுக்கு இன்னொரு மே தினம் தேவைப்படுகிறது. அதற்கு இது உதவும் என கருதுகிறேன். உங்களுக்கு அது டாய்லட் பேப்பர் என்றால் மகிழ்ச்சியே!

வர்க்கமா? ஜாதியா? இந்தியாவில் ஜாதியம் என்பது வர்க்கத்தின் உள்ளடக்கமே! என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்கும் இடமேயில்லை. அதேசமயம் ஜாதி வலைப்பின்னலின் கன்னிகளையும் குறைத்து மதிப்பிட முடியாது. ஆங்கிலயர் உட்பட தற்போதைய ஆளும் வர்க்கம் இவற்றை நன்றாக பயன்படுத்துகிறது... அதற்கு நீங்களும் தீனி போட்டு வளர்க்கிறீர்கள். பிராமண... எதிர்ப்பு என்ற பெயரில்...

இறுதியாக மாலன் அவர்களுக்கு....

இரண்டு கட்சிகளும் புரட்சியை கைவிடுவதாக எங்கே சொல்லியிருக்கிறார்கள் என்று கொஞ்சம் விளக்கினால் நன்றாக இருக்கும். புரட்சியை மேற்கொள்வதற்காகத்தான் கம்யூனி°ட் கட்சியை வைத்திருக்கிறோம். கம்யூனிச போர்த்தந்திரத்தின் இரண்டு வழிகள் ஆயுதமேந்தி - தலைமறைவாக செயல்படுதல், இன்னொன்று வெளிப்படையாக மக்களிடம் செயல்பட்டு - பாராளுமன்றத்தில் பங்கெடுத்து, அதனையும் புரட்சிக்கு பயன்படுத்தும் வழி... புரட்சியை எப்படி நடத்த வேண்டும், எத்தகைய ஆயுதத்தை நீங்கள் கையிலெடுக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது ஆளும் வர்க்கம்தானேயொழி கட்சிகள் அல்ல.... இருப்பினும் தங்களது பங்களிப்பிற்கு நன்றிகள்...

 
At 6:20 AM, July 07, 2007, Blogger Osai Chella said...

படித்துமுடிக்க அரைமணிநேரம் ஆனது! முடிவாக ஒரு சென் நிலை! ஒன்றும் இல்லாத ஒரு வெற்று மன நிலை! நாம் ஆராய்கிறோம் பலர் சயனைடு குப்பிகளுடன் படகில்ஏறுகிறார்கள். இருவர் மன நிலைக்கும் ஆயிரம் காத உளவியல் தூரம்! சரிதானா சகோதரி.. நான்எந்த இசத்தையும் சொல்லவில்லை!

 
At 9:03 AM, July 07, 2007, Blogger செல்வநாயகி said...

மறுமொழியிட்டிருக்கிற நண்பர்களுக்கு நன்றிகள் மீண்டும். ஓடும் அவசரத்தில் இருந்தாலும் சில குறிப்புகளை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

அபிவிருத்தி,

தூக்குத் தண்டனை பற்றி மட்டும், அது ஏன் கூடாது என்பது பற்றி மட்டும் வலையுலகில் இன்னும் பல நண்பர்களின் ஆழமான முன்னெடுப்புகளோடு வலையுலகில் ஒரு விவாதம் நடந்தது. ஒரு வருடம் இருக்கலாம். அவையெல்லாம் உங்களின் புரிதல்களுக்குத் தகுந்த மாற்றுக்கருத்துக்களை வழங்கும். தேடிப்பிடித்துச் சுட்டிகள் தர இயலாத அவசரம். நீங்கள் ஆர்வமிருந்தால் பூங்காவின் ஆறேழு மாத இதழ்களுக்கு முன்னால் புரட்டிப்பாருங்கள். அப்சல் தூக்குதண்டனை எதிர்ப்பு பற்றிய பல ஆக்கங்கள் அங்கு கிடைக்கும்.

 
At 9:21 AM, July 07, 2007, Blogger செல்வநாயகி said...

சந்திப்பு,

உங்கள் மீதான விமர்சனங்களுக்கு நீங்கள் மாற்றுக்கருத்துக்கள் வைத்தமைக்கு மிக்க நன்றி. உங்கள் பின்னூட்டத்தை வாசித்ததில் இப்போதைக்கு நான் இரண்டுவிசயங்கள் மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

1. சீனிவாசராவ் பற்றிய கருத்துக்களில் எனக்கும் உடன்பாடு உண்டு. இதை முன்பொருமுறை தன் செவ்வியில் ஆதவன் தீட்சண்யாவும் சுட்டிக்காட்டியிருந்தார். இந்தமாதிரி இடங்களில் பிறப்பினை இழுத்துவந்து ஒருவரது செயல்களில் சந்தேகங்கள் கிளப்பிக்கொண்டிருக்க வேண்டியதில்லை என்றும் சொல்லியிருந்தார்.

2. மக இக பற்றிய உங்கள் விமர்சனத்தில் எனக்கு மாற்றுக்கருத்து உண்டு. அரசியல் இயக்கங்கள், அவற்றின் அடிஆழத்தில் உள்ள இன்னொரு அரசியல் எல்லாம் புரிந்துகொள்வதில் நான் இன்னும் நடக்கவேண்டிய தூரம் உள்ளது. ஆனால் எனக்குத் தெரிந்த மக இக செயல்பாடுகளிலேயே எனக்கு அவர்கள்மீது நம்பிக்கையும் மதிப்பும் உண்டு. நீங்கள் சொல்லுகிற "மக்களைப் பங்குபெறவைக்கத்தான் நாங்கள் விரும்புகிறோம்" என்பதை மேலோட்டமாகப் பார்த்தாலே அவர்கள் நிறையச் செய்துகொண்டிருப்பதை விளங்கிக்கொள்ளலாம். யாரும் வெளிக்கொண்டுவரத் தயங்கும் விசயங்களை வெளிக்கொண்டுவந்து போராடுவதில், துணிந்து கருத்துக்களைத் தங்கள் பார்வையில் மக்களுக்குக் கொண்டுவந்து சேர்ப்பதில் அவர்களின் பணிகள் எனது கவனத்தைக் கவர்ந்தவை.

 
At 10:28 AM, July 07, 2007, Blogger -/பெயரிலி. said...

/பெயரிலி போன்ற புரட்சி வீரர்களுக்கு எதிராக நாம் விமர்சனம் வைத்தால், உடனே சி.பி.ஐ.(எம்) அய்யர், ஐயங்கார் கட்சி... பிராமண தலைமை.... என்ற உளற ஆரம்பித்து விடுவார்கள்... இதைத்தான் திசை திருப்பல்வாதம், குழப்பல்வாதம், சீர்குலைவுவாதம் என்று கூறுவது./

சந்திப்பு ஐயா, இந்த புரட்சி, தோழர் போன்ற கீறிட்ட இடங்களை நிரப்பப் பயன்படும் கூர் முறிந்த சொற்களை வைத்தா நம்மைப் பற்றிச் சொல்லவேண்டும்? திட்டுவதாயின், கொஞ்சம் கௌரவமாகவே திட்டியிருக்கலாமே? புரட்சி, வீரர் என்றா நசுங்கிப்போன சொற்களாலே திட்டவேண்டும்? உளறுவது என்றால், பாசிசசக்திகள், புரட்சிகரத்தலைமை என்று நாமும் உளறலாம். திரிபுவாதமென்றும் ஒன்றுண்டல்லவா? நீங்கள் 'புரட்சி'யின் 'திசை'களை நீங்கள் நின்றுபிடிக்க மாற்றுவதற்குக் கொடுக்கும் விளக்கங்களையும் அப்படியான வாதமென்றே சொல்வோம். இவை பற்றியும் அசோக் லேலண்டிலோ டிவிஎஸ் சுந்தரம் அய்யங்கார் வீட்டிலோ இருக்கும் பிராமணத்தோலர்களோ தோழர்களோ எவருக்காகவும் போராடுவது பற்றியோ என் பதிவிலேயே எழுதிக்கொள்கிறேன் (முன்னமே, உங்களின் சகோதர மார்க்ஸிய பாட்டாளி ஜேவிபி-இக்கான வக்காலத்துக்கான பதில் மீதியிருக்கின்றது). இங்கே வேண்டாம்; [ஒன்றைக் கவனியுங்கள், ஈழத்தமிழர்களுக்கு ஆனந்தசங்கரி, டக்ளஸ் போன்றவர்களைத் தலைமைகளாகத் திணிப்பவர்களுக்கு மட்டுமேதான் பெயர்களின் பின்னே, நான் அவர்கள் சார்ந்த சாதி அடையாளங்களைத் திணிக்கிறேன்; மற்றவர்களுக்கு அல்ல.... எமக்கு யார் தலைமை என்பதை அவர்கள் எம் இன அடையாளத்தை வைத்துத் திணித்தால், மாற்றாக நாமும் கஸ்தூரிரங்கப்பாரம்பரியம் மிக்க நரசிம்மன் ஐயங்கார் ராம் ஐயங்காருக்கு அதைச் செய்யமுடியும் என்பதைச் சந்தர்ப்பம் ஏற்படும்போதெல்லாம் சுட்டிக் காட்டுவோம்].

செல்வநாயகி, பெண்கள், குழந்தைகள், பாலியற்றொழிலாளிகள் போன்றவர்களின் பிரச்சனைகளிலே இணையத்திலே பேசும்போது, சில ஆண்டுகாலமாகச் சோர்வு மட்டுமேதான் ஏற்படுகின்றது. அதனாலே விவாதிக்கவோ சொல்லப்போனால், ஈடுபாடுகொண்டு வாசிக்கவோ முடிவதில்லை. தனிப்படச் சில காரணங்கள்:
1. இப்படியாகப் பேசுவது, எம்மை நாமே 'சமூகத்'துக்கு ஏதோ செய்துகொள்கிறோமென்ற ஒரு விதமான திருப்தியை ஏற்படுத்திக்கொண்டு, எம்முள்ளேயிருக்கும் குறுகுறுப்பையும் அடக்கமட்டுமே உதவுகின்றது என்ற உணர்வு
2. "சமூகம் அவளை வாழவிடவில்லை" என்பதுபோன்ற வசனங்களுடனான வாதங்களுடன் எம்மைத் தவிர்ந்த எல்லோரையும் திட்டித்தீர்த்துவிட்டு, நடைமுறைக்குச் சாத்தியமில்லாத, ஆனால், கருத்தளவிலே மட்டுமே தீர்வாகத் தோன்றுகிறவற்றோடு அடங்கிப்போவது - அடுத்த முறை அதே விவாதம் எங்கேனும் தோன்றும்வரை
3. கிட்டத்தட்ட மயங்குகிறாள் ஒரு மாது படத்திலே வரும் சமூகசேவகி பாத்திரங்கள்போல, ஓரீர் அடையாளச்செயற்பாடுகளைமட்டும், "தெருத்தெருவாய்க் கூட்டுவது பொதுநலத்தொண்டு; அதைப் படம்பிடிக்கக் காட்டுவதில்" முடிந்துவிடுகின்றதாகத் தோன்றுவது
4. முன்னமே அகப்பட்ட சுழிபோலவிருக்கிறதே என்ற கனவோடையும் நனவோடையும் கலக்கும் டே-ஜா வூ புல்லரிப்பு
5. "அக்காவோட கையப் புடிச்சிழுத்துட்டு இன்னாடா முற்போக்குத்தனம்? ஆட்டோவுல வூட்டாண்ட வந்திறங்கட்டுமா?" என்ற குருட்டு அடியாட்கள் தொந்தரவு. security clearence மாதிரி இணையத்திலே இது ஒரு தொல்லை.
எல்லோரும் இருக்குமிடங்களிலே இருந்து கொண்டால், எல்லாம் சௌக்கியமே. பேசாமால், நா. கோவிந்தசாமி எப்போது டாக்டர் பட்டம் எவரிடம் பெற்றார் என்ற உபயோகமான ஆய்வுகளை மிகத்தீவிரமாக இணையத்திலே எட்டுக்குனியா பரவும் இக்காலகட்டத்திலே 'sexed up self claims' நோய்க்குறிகளிலே கண்டு தீர்வெழுதுவது திரிபுவாத வரலாற்றையேனும் திருத்தவுதவும்.

இப்பின்னூட்டத்தை அனுமதிப்பதும் அனுமதிக்காததும் உங்கள் விருப்பம். இடுகைக்குச் சம்பந்தமில்லாததாகவோ இடுகைச்சுருதிக்கு ஸ்வரம் பிறழ்ந்ததாகவோ தோன்றினால், அனுமதிக்கத் தேவையில்லை.

 
At 10:57 AM, July 07, 2007, Blogger தமிழ்மணி said...

ஆளுக்காள் புரட்சி புரட்சின்னு பேசறீங்க. மக்கள் பங்குபெறனும்னு சொல்றீங்க

புரட்சின்னா என்னான்னு சொல்லமாட்டேங்குறீங்களே.

புரியாததில எப்படீங்க பங்குகொள்றது?

என்னமோ போங்க

 
At 12:20 PM, July 07, 2007, Blogger செல்வநாயகி said...

பெயரிலி,

உங்களின் இப்பின்னூட்டத்தில் எந்த சுருதிக்குறைவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அதுமட்டுமல்ல, மனம் திறந்த நட்புடனான வாதங்களுக்கும் உரையாடல்களுக்கும் நான் மதிப்பு அளிப்பவள். அப்படியானவற்றையே நானும் செய்ய ஆசைப்படுபவள். என்னைச் சிலகாலமாக என் எழுத்துக்கள் மூலமாகவேனும் அறிந்துவரும் நீங்கள் இதை நம்பினால் நான் மகிழ்வேன். பேசலாம் பெயரிலி. பெண்கள் பிரச்சினைகளை முன்னெடுப்பதில் இணையத்தில் நேரும் சிக்கல்களை மனம் திறந்து பேசலாம். அதை நீங்கள் இங்கு முன்வைத்ததற்கு நன்றி. எனக்கு மிகுந்த நேரப்பிரச்சினை. இந்த இடுகைக்கு இவ்வளவு பின்னூட்டங்கள் வரும் என்றெல்லாம் நினைத்துக்கூடப் பார்க்காமல் வெள்ளிக்கிழமையில் இட்டுவிட்டேன். எனக்கு நேற்று மட்டுமே நேரம் இருந்தது. வாரயிறுதி மிகுந்த வேலைகள். ஆனாலும் வேறெந்த இடுகைக்கும் இல்லாத மகிழ்வும், நிறைவும் எனக்கு இதில் உண்டு. நான் நிறையத் தெரிந்துகொண்டேன்.

நேரம் கைக்குவந்ததும் பேசுகிறேன் பெயரிலி பிற விசயங்களை.

 
At 7:34 PM, July 07, 2007, Blogger Osai Chella said...

தோழி, பெயரிலியின் விவாதங்களில்/வாதங்களில்/நடையில் நான் அசந்து போனேன் என்பதென்னவோ உண்மை. தயவு செய்து இந்த விவாதத்தை மற்றொரு பதிவுக்காக கருக்கலைப்பு செய்யவேண்டாம். தினமும் குப்பைகளால் தமிழ்மணத்தை நிரப்ப என் போன்ற பதிவர்கள் நிறையப் பேர் இருக்கிறோம்!

 
At 11:12 PM, July 07, 2007, Blogger மாலன் said...

அன்புள்ள சந்திப்பு,

1951ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9ம் தேதி, இந்தியக் கம்யூனிஸ்ட் தலைவர்கள் (ராவ்,டாங்கே,
கோஷ்,புன்னையா) ஸ்டாலினை சந்தித்தார்கள்.அந்த சந்திப்பில் சீன, சோவியத் புரட்சியின் அனுபவங்களின்
அடிப்படையில் சில யோச்னைகளை ஸ்டாலின் அவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.பெரிதும் விவசயிகளால்
முன்னெடுக்கப்பட்ட தெலுங்கானா புரட்சியைக் குறித்து இந்தியத் தலைவர்கள் பெருமகிழ்ச்சியும் மனநிறைவையும் அடைந்திருந்தார்கள். ஆனால் அதை இந்தியப் புரட்சிக்கான ஆரம்பம் என்று மட்டுமே கருதிய ஸ்டாலின், இந்தியப் புரட்சி வெகு தொலைவில் இருப்பதாகக் கருதினார். விவசாயிகளை மட்டுமல்லாமல் தொழிலாளர்களையும் உள்ளடக்கிய ஆயுதப்புரட்சிக்கு தயார்செய்ய அவர் யோசனை சொன்னார்.

அதனடிப்படையில் உருவான செயல்திட்டம் ஆயுதப் புரட்சியைப் பற்றிப் பேசுகிறது (இந்த ஆவணத்திற்கும், மேலதிக விவரங்களுக்கும் பார்க்க மோகித் சென்னால் எடிட் செய்யப்பட்ட Documents of the History of the Communist party of India Volume III 1951-56 People's Publishing House வெளியீடு)

ஆனால் 1953ல் சோவியத் தலைமையில் ஏற்பட்ட மாற்றங்களையும், 1953ல் நடைபெற்ற CPSU 20வது காங்கிரசை அடுத்தும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்திட்டங்களிலும், உத்திகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. மக்கள் ஜனநாயக புரட்சிக்குப் பதிலாக தேசிய ஜனநாயகப் புரட்சியை(National Democratic revolution) மேற்கொள்ள அது விரும்பியது. (இது பற்றிய விவரங்களுக்கு: லண்டனில் இருந்து வெளியான Communist review என்ற இதழில் A.Sobelov என்பவர் எழுதிய கட்டுரையில் காணலாம். 1956ல் கம்யூனிஸ்ட் கட்சியின் வெளியீடாக வந்த,Some forms of transition from Capitalism to Socialism என்ற பிரசுரத்திலும் காணலாம்.இந்த நூலில் பாராளுமன்றத்தின் மூலம் சோஷலிசத்தை அடைவதைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

கம்யூனிஸ்ட் கட்சிகளிடைய பிளவு ஏற்பட்டபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. 1951ல் பெறப்பட்ட
பார்வைகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கைவிட்டுவிட்டதாகக் குறைகூறி விமர்சனம் செய்தது.1951ல்
மேற்கொண்ட நிலைகளை நியாயப்படுத்தியும், மக்கள்ஜனநாயகப் புரட்சிக்கு ஆதரவளித்தும் பேசியது. ஆனால் சுமார் பத்தாண்டுகளுக்குப் பின் அதுவும் தன்நிலையை மாற்றிக் கொண்டது.

இந்த மாற்றம் குறித்து சுந்தரய்யா எழுதியிருப்பது: ‘…We are all agreed that our path is not exactly of Russia or China but will be our independent path, based on the working class peasant alliance, if possible simultaneously synchronising of peasant armed revolts (leading to establishment of guerrilla bases and then to liberation bases) and general strikes and armed insurrections in the industrial and administrative centres. To make our revolution successful, the necessity of combining these two main forces on All-India scale becomes essential. But from this we slip unconsciously in the name of preparing for working class
and peasant movements on all-India scale to plan all-India mass actions, which taking our party’s present organisational weakness, and the weakness of general democratic movements leads us more or less to constitutional and – parliamentary forms of activity, neglecting other basic tasks of the party.

1991ம் ஆண்டு வெளிவந்த சுந்தரய்யாவின் My resignation நூலில் இது குறித்த அவரது கருத்துக்களைக்
காணலாம். (எமெர்ஜென்சியின் போது கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.

அந்தத் தருணத்தில் ஆர்.எஸ்.எஸ். உடனிணைந்து செயல்பட, ஜோதிபாசு, பி.டி.ரணதிவே, EMS, பி.ஆர் போன்ற
தலைவர்கள் முன்வந்தது அவருக்குப் பிடிக்கவில்லை எனச் சொல்லப்பட்டது)

நீளமாக எழுத நேர்ந்துவிட்டது. (செல்வநாயகி மன்னிக்கவும்) கூடுதலாக ஒரு தகவல்: ஆயுதப் புரட்சியை
பகிரங்கமாக் ஆதரிக்கிற எந்தக் கட்சியும் பதிவு பெற்ற அரசியல் கட்சியாகச் செயல்பட மக்க்ள் பிரதிநிதித்துவச் சட்டம் இடம் தரவில்லை.ஒருவேளை வழக்கறிஞர் செல்வநாயகி இது குறித்து அதிகம் அறிந்திருக்கக் கூடும்.

அன்புடன்,
மாலன்

 
At 11:39 PM, July 07, 2007, Blogger செல்வநாயகி said...

தூக்கம் கண்களைச் சுழற்ற உறங்கப்போகும் முன் காத்திருக்கும் பின்னூட்டங்கள் இருந்தால் எதற்கும் ஒருமுறை பார்த்துவிடலாம் என வந்தேன் மாலன். பல தரவுகளோடு அருமையான பின்னூட்டம் உங்களிடமிருந்து. கவிழும் இமைகளை வலியப் பிரித்து நீங்கள் தந்துள்ள சுட்டிகளின் பின்னே போகச் சொல்கிறது மனம். என்றாலும் பிறகு நாளைய வேலைகளைக் கருத்தில்கொண்டு நகர வேண்டியுள்ளது. நீளமெல்லாம் ஒரு பிரச்சினையில்லை. நீங்கள் நினைப்பதைப் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி. இதில் எனக்கு ஏதும் சொல்ல இருந்தால்(தெரிந்தால் என்றும் எடுத்துக்கொள்ளுங்கள்:)) பிறகு வருகிறேன்.

 
At 12:03 AM, July 08, 2007, Blogger மாலன் said...

அன்புள்ள செல்வநாயகி,

பின்னூட்டத்தை அனுமத்தித்தமைக்கு நன்றி

>>புரட்சிகள் மக்களைச் சென்றடைவதற்கு ஒரு பாலமாக அறிவுஜீவிகள் இயங்கமுடியும், இயங்கவேண்டும் என்றுதான் நான் இதைப் புரிந்துகொள்கிறேன். அது நமது தேவையும்கூட.<<

புரட்சிகளை மக்களிடத்தில் எடுத்துச் செல்வதில் அறிவுஜீவிகளைவிட களப்பணியர்களுக்கு மிக அதிகப் பங்குண்டு. ஆனால் புரட்சிக்கான அவசியத்தை, தேவையை மக்க்ளிடம் எடுத்து வைப்பதில், சமூகம் புரட்சியைக் கருக் கொள்ளச் செய்வதில் அவர்களுக்கு மிகப் பெரும் பங்குண்டு. கஞ்சி குடிப்பதற்கிலார் என இரங்குவதை விட அதன் காரணங்கள் இவை என்னும் அறிவை ஊட்டுவது அவர்களின் கடமை.பெரும்பாலும் இதை அவர்கள் மக்கள் எதிர்ப்பிற்கிடையே செய்ய வேண்டியிருக்கிறது என்பதுதான் யதார்த்தம்.

>> ஆனால் அறிவுஜீவிகளின் போக்கும் அதிகார அமைப்புக்களைச் சார்ந்து இயங்கத் தொடங்குவது நடக்கும்போது இவர்களுக்கும் எதிரான போக்கைச் செயல்வேகத்தில் இருப்பவர்கள் காட்டுகிறார்களோ என்றும் நினைத்துக்கொள்கிறேன்.<<

அறிவுஜீவிகள் அதிகார வர்க்கத்தைச் சார்ந்து அல்லது அதற்கெதிராகவே எப்போதும் இயங்க வேண்டுமா, வேண்டாமா என ஒரு வரையறுக்கப்பட்ட இறுக்கமான் நிலைபாட்டை மேற்கொள்ள முடியாது. அவர்கள் பிரசினையின் அடிப்படையில்தான் நிலைப்பாடுகளை மேற்கொள்ள முடியும்.(issue based stands).ராஜமான்ய ஒழிப்பு, தேசியம்யமாக்கல் போன்ற விஷயங்களில் அதிகார அமைப்புக்கு ஆதரவாக நிலை எடுப்பவர்கள் அதே இந்திரா காந்தி எமெர்ஜென்சியை அறிவித்தால் எதிர்க்கத்தான் வேண்டும். தேசியவாதம், மனித உரிமைகள் இவற்றுக்கு இடையே முரண்கள் தோன்றும் போது என்ன நிலைப்பாடு எடுப்பது என்பது சிக்கலானதாக மாறிவிடுவதும் உண்டு. இந்த நேரங்க்ளில் அறிவுஜீவிகள் எடுக்கும் நிலை தவ்றானதாகக் கூட,(வெளிப்பார்வைக்கு நியாயமற்றதாகக் கூட்) தோன்ற வாய்ப்புக்கள் அதிகம்.

அந்த சூழ்நிலைகளில் அவனது கருத்தை தங்களது மாற்றுக் கருத்துக்கருத்துக்களை வைத்து ஆராய்வது, விமர்சிப்பதுதான் முறையானது. ஆனால் பொதுவாகத் தமிழ்நாட்டில், தமிழ்ச் சமூகத்தில், தமிழ்மணத்தில் என்ன நடக்கிறது என்றால், அந்த அறிவுஜீவியை அவனது சொந்த வாழ்க்கை, குடும்பம், ஜாதி இவற்றின் அடிப்படையில் தனிமனிதத் தாக்குதல்களைத் (இந்த்த் தாக்குதல் வசையாகத்தான் இருக்க வேண்டியதில்லை, எள்ளலாகக் கூட இருக்கலாம்) தொடுத்து அவர்களை devalue செய்கிற முயற்சி நடக்கிறது. அப்படி devalue செய்வதன் மூலம் அவர்களது கருத்துக்களை மதிப்பிழக்கச் செய்யலாம் எனவும் சிலர் கருதிக் கொள்கிறார்கள்.

அதை உங்களைப் போன்றவர் அனுமதிப்பதும் வியப்பளிக்கிறது.

உதர்ரணமாக, புரட்சி எது, குறுங்குழு வாதம் எது என்று சுகுமாரனின் கருத்துக்களை முன்வைத்து நடக்கும் இந்த விவாதத்தில் ராமின் மகள் கொலம்பியா பல்கலையில் தன்படிப்பில் சிறந்தை, பெயரிலி எள்ள்ல் தொனியில் கிண்டலடிக்கிறார். அதற்கும் இந்த விவாதத்திற்கும் என்ன சம்பந்தம்? ராமிற்கே கூட என்ன சம்பந்தம்? அவர் மார்க்சிஸ்ட் கட்சியின் போக்கைத் தீர்மானிக்கிற பொலிட்பீரோ உறுப்பினரா? மார்க்சிஸ்ட் கட்சி பற்றிய விவாதத்தில் அவரை அவ்ர் மகளை, அவர் தாத்தா வரை இழுத்து ஏகடியும் பேசுவது முறைதானா? அது இந்த விவாதத்திற்கு எந்த விதத்தில் பயனளிக்கும்?

அன்புடன்
மாலன்

 
At 1:06 AM, July 08, 2007, Blogger ஓகை said...

அபிவிருத்தி அவர்களே, ஒற்றை மனிதர்களுக்காவும் அவர்கள் சார்ந்துள்ள இயக்கக்களின் மேலுள்ள அபிமானத்துக்காகவுமே தூக்குத் தண்டனைகள் வேண்டாமென்று சொல்லப்படுவதாக இணையத்தில் நான் படித்த தூக்குத் தண்டனை ஆதரவு பதிவுகளின் மூலம் உணரமுடிகிறது. நாட்டின் நீதி நிலைநாட்டலும் மிக மிக மிகப் பெரும்பான்மையான மக்கள் நலன்களும் உணர்வுகளும் கண்டுகொள்ளப்படுவதில்லை என்பதுடன் அவர்களின் இருப்பே இல்லாததுபோல் இக்கருத்துக்கள் சொல்லப்படுவதாக நினக்கிறேன். தர்மபுரி வழக்கில் தண்டனை பெற்றவர்களுக்கு ஆதரவாக நான் பதிவுகளில் அதிகமாக எதையும் படிக்கவில்லை. இந்த தருமபுரி வழக்கு தண்டனைகளை ஆதரித்து நான் ஒரு பதிவு எழுதியிருந்தேன்.

 
At 8:05 AM, July 08, 2007, Blogger செல்வநாயகி said...

மாலன், ஓகை எனக்கு இரவு நேரமென்பதால் நீங்கள் இருவரும் இட்ட பின்னூட்டங்கள் நிறைய நேரம் காத்திருப்பில் இருந்திருக்கலாம். மன்னிக்கவும் இப்போதுதான் பிரசுரிக்க முடிந்தது.

மாலன்,
இதுவிசயத்தில் எனக்கு நிறையச் சொல்ல வேண்டியுள்ளது. எனவே நேரம் அமைவைதைப் பொறுத்து அதை எழுதுவதில் எனக்குத் தாமதமாகலாம். பொறுத்துக்கொள்ளுங்கள்.

ஓகை,
தர்மபுரி பஸ் எரிப்புத் தண்டனை வழக்கிலும் அதிலும் மரணதண்டனை எதிர்ப்புக் குறித்தும் பத்ரி ஒரு பதிவு எழுதியிருந்தார் என நினைக்கிறேன். மரண தண்டனை எதிர்ப்புக்கு அவர் வைத்திருந்த காரணங்களைப் படித்துப்பாருங்கள்.

///ஒற்றை மனிதர்களுக்காவும் அவர்கள் சார்ந்துள்ள இயக்கக்களின் மேலுள்ள அபிமானத்துக்காகவுமே தூக்குத் தண்டனைகள் வேண்டாமென்று சொல்லப்படுவதாக இணையத்தில் நான் படித்த தூக்குத் தண்டனை ஆதரவு பதிவுகளின் மூலம் உணரமுடிகிறது///

என்கிற கருத்து அப்போதாவது உங்களுக்கு மாறினால் மகிழ்ச்சி:)) சுட்டிகள் தேடிக்கொடுக்கத்தான் இயலாத அவசரம் எனக்கு.

 
At 2:09 PM, July 08, 2007, Blogger Thangamani said...

செல்வநாயகி,

கடந்த இரண்டு நாட்களாய் இணையத்தின் பக்கம் வரமுடியவில்லை. இன்றே பல பின்னூட்டங்களைப் படித்தேன்.

வலைப்பதிவுகளில் (தமிழ்மணம் என்ற பயன்பாட்டை தவிர்க்கிறேன்)மட்டுமல்ல எங்குமே விவாதம் செய்யமுடியாது என்பது எனது எப்போதுமான நிலைப்பாடு. செய்யமுடிவதல்லாம் ஏற்கனவே மாலன் குறிப்பிட்டது போல சிறுபான்மையினரால் (இங்கு அறிவுஜீவிகள், முற்போக்குவாதிகள், மார்க்சிஸ்டுகள் என்ற பொருளைக் குறிக்கிறது) மக்களின் கருத்தாக நாளும் நிறுவப்படுகிற கருத்துக்களுக்கு அப்பால் இருக்கிற, அதன் அதிகாரவெளிச்சத்துக்கு அப்பால் இருக்கிற விதயங்களை சொல்லமுடிவதே. அது சொல்பவர் தொடக்கம் சிலருக்கு பயன் தரலாம் என்றே நினைக்கிறேன்.

நன்றி!

 
At 9:30 PM, July 08, 2007, Blogger செல்வநாயகி said...

தங்கமணி, பெயரிலி,
நான் மதியம் மாலனின் பதிவில் ஒரு பின்னூட்டம் மட்டும் இட்டுவிட்டு வெளியே போனவள் இப்போதுதான் வந்தேன். உங்கள் இருவரின் பின்னூட்டமும் நிறையக் காத்திருப்பில் இருந்தமைக்கு வருந்துகிறேன்.

தங்கமணி,

புரிந்துகொள்கிறேன் குறிப்பிட்ட எல்லைதாண்டி நகர்த்தமுடியாதன நம் வாதங்கள் என்பதை.

///அது சொல்பவர் தொடக்கம் சிலருக்கு பயன் தரலாம் என்றே நினைக்கிறேன்///

அதுவும் உண்மை.

பெயரிலி,
மாலன் உங்கள் மேல் வைத்த குற்றச்சாட்டுக்கு சிலவரிகளில் உங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிற உங்கள் பின்னூட்டத்தைக் கையில் வைத்துக்கொண்டு 10 நிமிடங்கள் யோசித்தேன் பிரசுரித்துவிடலாமா என. ஆனால் ஏற்கனவே ரயில் தண்டவாளத்திலிருந்து கீழிறிங்கியாகிவிட்டது. இனி அதைச் சிரமப்பட்டு மேலே தூக்கி மூச்சுத் திணறவேண்டாம் என எண்ணுகிறேன். இன்னும் எனக்கு என் பகுதியாகப் பேசவேண்டியது ஒன்று உள்ளது. அத்தோடு நிறுத்திவிடலாம் என முடிவு செய்துவிட்டேன். எனவே உங்கள் பின்னூட்டத்தைப் பிரசுரிக்கவில்லை. புரிந்துகொள்ள வேண்டுகிறேன். ஆனாலும் இது எனக்கு முற்றிலும் புதிய ரயில். அதை ஒரு குறிப்பிட்ட குறுந்தூரம்வரை விபத்தில்லாது கொண்டுவருவதற்கு உதவிய நீங்கள் உள்ளிட்ட இங்கு பேசிய எல்லா நண்பர்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். ஆதவன் தீட்சண்யாவின் பேட்டியை எடுத்துப் போட்டபோதுகூட சிலபகுதிகளை நீக்கிப்போட்டவள்தான் நான் வலையுலகில் எத்திசையிலிருந்தும் எப்படியான திருப்புதல்களும் நடக்கும், அதோடு மல்லுக்கட்டுவதைவிட முக்கியமான வேலைகள் கொண்டது அன்றாடம் என்பதால். இது என் நேரத்தை நான் எதிர்பார்த்ததைவிடவும் நிறையவே எடுத்துக்கொண்டது. ஒவ்வொரு பின்னூட்டமாகப் பார்த்தும், படித்தும், என் எண்ணங்களையும் சொல்லிவந்தேன். அப்படியும் பின்னூட்டப் பிரசுரிப்பிலும் என் நகர்த்தலிலும் கடைசியில் பழியே வாங்கவேண்டிவந்திருக்கிறது. ஆனாலும் வருத்தமில்லை, அடுத்தவர்களின் பார்வையில் என்னைப் பற்றி ஒரு நேர்மை இருப்பது போலவே, என் பார்வையிலும் எனக்கொரு நேர்மை இருக்கிறது, அதை இந்த இடுகையிலும் முடிந்தவரை காப்பாற்றியே இருக்கிறேன் என்கிற திருப்தியோடே உள்ளேன்.

தியாகு, தமிழ்மணி,
பொறுமையோடு நீங்கள் தொடர்ந்து எழுதிய உங்களின் பின்னூட்டங்களுக்கும் நான் ஏதாவது பேசியிருக்கலாம்தான். ஆனால் இடுகையைச் சுற்றிய மற்ற கிளைவிவாதங்களையே தொடரவேண்டியும், கவனிக்க வேண்டியும் இருந்த காரணத்தால் உங்களுக்கு எதுவும் சொல்லவில்லை. என்றாலும் என் பதிவுக்கு வந்து வாசிப்புச் செய்தமைக்கு நன்றி.

பெயரிலி,
இதைப் பிரசுரிக்கும் முன் உங்களின் இரண்டாவது பின்னூட்டமும் வந்துசேர்ந்தது. நீங்கள் மாலன் பதிவில் என் பின்னூட்டத்தைப் படித்ததோடு உங்களின் பின்னூட்டத்துக்கு நான் எழுதியிருந்த கண்டனத்தையும் புரிந்துகொண்டு என்னிடம் மன்னிப்புக் கேட்டு எழுதியிருக்கிறீர்கள். புரிந்துகொண்டமைக்கும் இந்த மறுமொழிக்கும் மிக்க நன்றி உங்களுக்கு. ஆனால் இதையும் பிரசுரிக்கவேண்டாம் என்றே ஏற்கனவே எடுத்த முடிவைத் தொடரவேண்டிய நிலையில் நான் உள்ளதற்கு வருந்துகிறேன்.

 
At 2:50 PM, July 09, 2007, Blogger செல்வநாயகி said...

சிலர் வாரயிறுதியில் மட்டுமே வலைப்பதிவு படிக்க முடிபவர்கள் என நினைக்கிறேன். இப்போதுதான் பார்த்தேன் காத்திருப்பில் 8 பின்னூட்டங்கள். ஆனால் நீங்கள் shopping வரும்போது என்னுடைய இந்த இடுகைக்கடை பூட்டியாகவேண்டிய நேரத்தைத் தொட்டுவிட்டது:)) நேற்றுப் பூட்டிவிடலாம் என எடுத்த முடிவில் மாற்றம் இல்லை. இதில் எனக்குச் சொல்லவேண்டியிருப்பதைக்கூடத் தனி இடுகையாகவே எழுதுவேன். எனவே புரிந்துகொள்ள வேண்டுகிறேன்.

மனித உரிமை ஆர்வலர் சுகுமாரனுக்கு, இவ்விவாதத்தில் பங்குகொண்ட சந்திப்பு, தங்கமணி, பெயரிலி, மாலன் ஆகியோருக்கு அவர்கள் எழுதிய இடுகையை ஒட்டிய விவாதம் சார்ந்த கருத்துக்களில் சிலவரிகளை எடுத்துப்போட்டுப் பாராட்டியும், இதைப் பகிர்ந்தமைக்கு நன்றியாகவும் சில பின்னூட்டங்கள் இருக்கின்றன.
குறிப்பிட்ட பதிவர்களுக்கு இது தெரியப்படுத்தப்படவேண்டியது என்பதால் இதைக் குறிப்பிடுகிறேன். பின்னூட்டம் எழுதியவர்கள் நேரடியாக அவர்களுக்கும் சேர்த்துவிடலாம்:)) உங்கள் வாசிப்புக்கும் இவ்வளவுக்குப் பிறகும் பதிவின் பொருளை, வாதங்களை உள்வாங்கி அவற்றைப் பற்றிச் சொல்ல நினைத்தமைக்கும் நன்றி.

சிலர் நான் இதனால் சோர்ந்துபோகக்கூடாதெனவும் ஓய்வெடுத்துக்கொண்டு வாருங்கள் எனவும் சொல்லியிருக்கிறீர்கள். இதற்கெல்லாம் சோர்ந்தால் என்ன ஆவது:)) நான் வலைப்பதிவிலிருந்துவிட்டு ஓய்வெடுக்க வெளியே போவதில்லை. வெளியே இருந்துவிட்டு ஓய்வுக்காகத்தான் இங்கு வந்துபோய்க்கொண்டிருக்கிறேன்:)) என்றாலும் உங்கள் அன்புக்கு நன்றி.

 
At 1:54 PM, July 10, 2007, Blogger செல்வநாயகி said...

அசுரன்,

காலையிலேயே பார்த்துவிட்டுப் போனாலும் ஓய்வு கிடைத்த சற்றுமுந்தைய இடைவேளையில்தான் உங்களின் இரண்டு பின்னூட்டங்களையும் படித்தேன். மிக்க நன்றி. அதிலும் சந்திப்பின் குற்றச்சாட்டுக்களுக்கான உங்களின் மிக நீண்ட, இடுகையைவிட்டு விலகாத, பல விளக்கங்கள் கொண்ட நல்லதொரு பின்னூட்டம் எனக்குப் பயனுள்ளதாக இருந்தது. நிச்சயம் அதை இங்கே பிரசுரித்தால் ஆர்வமுள்ளவர்களுக்கும் பயனாக அமையலாம். ஆனால் இரண்டுநாட்களாக எத்தனையோ பின்னூட்டங்களை (அவையெல்லாமே இடுகையை, அதன்பின்னான என் நோக்கத்தைப் புரிந்துகொண்டு இடப்பட்ட நல்ல பின்னூட்டங்களும்கூட) பிரசுரிக்காமல் இருந்துவிட்டு இப்போது உங்களுடையதை மட்டும் பிரசுரித்தால் "செல்வநாயகியின் சனநாயகத்தன்மை" என்று வலையுலகில் மட்டும் வேலைசெய்துகொண்டிருப்பவர்கள் ஏதேனும் இடுகை எழுதலாம்:)) அதெற்கெல்லாம் பயந்தல்ல. இங்கே தன்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டை மறுத்துப்பேச பெயரிலிக்குக் கொடுக்காத வாய்ப்பை, பலரையும் வாசித்து இடுகையோடு தொடர்புபட்டு எழுதிய இன்னும் சிலருக்கும் கொடுக்காத வாய்ப்பை இப்பின்னூட்டத்திற்கு மட்டும் தரமுடியாமல் இருக்கிறது எனக்கு. ஆரம்பத்தில் ஒரு இடத்தில் உங்களின் மாற்றுக்கருத்துக்களை வந்து எழுதிச்சொல்லுங்கள் என நானேவும் கேட்டுக்கொண்டுவிட்டு, நீங்கள் நேரம் செலவழித்து எழுதியபின் இங்கே பிரசுரிக்கமுடியாமல் போவது எனக்குத் தர்மசங்கடமாயும் உள்ளது. என்றாலும் "நீங்கள்" என்னைப் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.

அதேசமயம் அதை நீங்கள் தயவுசெய்து உங்கள் பதிவில் பதியவேண்டுகிறேன். பலபேர் படிக்கவும் விரும்பினால் அதில் அங்கே மேற்கொண்டு பேசவும் ஏதுவாயிருக்கும். அந்தச் சுட்டியை நான் என் இந்த இடுகையில் என் பினூட்டமாக இட்டு இணைக்க ஆவலாயிருக்கிறேன். நன்றி அசுரன்.

 
At 9:29 AM, July 11, 2007, Blogger செல்வநாயகி said...

இப்பதிவு சம்பந்தமான அசுரனின் எண்ணங்கள் அவருடைய இடத்தில் கீழே உள்ள சுட்டியில். விருப்பமுள்ளவர்கள் படித்துக்கொள்ளலாம். சுட்டியை அனுப்பியதற்கும், புரிந்துகொண்டதற்கும் நன்றி அசுரன்.

http://poar-parai.blogspot.com/2007/05/blog-post_30.html#comment-1937511295532150022

 

Post a Comment

<< Home