சாத்தப்பட்ட கதவுகளினூடான தரிசனம்
சுடத் தொடங்கிவிட்ட சூரியனின் கதிர்கள்
நீள்வதை ரசித்துக்கொண்டே
நெடிதுயர்ந்த கூரையொன்றின் மேலமர்ந்த பறவை
அலகால் கோதிக்கோதி அழுக்குகளை உதறி
தன் சிறகுகளைச் சுத்தமாக்கிக்கொண்டிருக்கிறது
சலசலக்கும் இலைகளில் இல்லை தன் உயிர்
தாங்கிப்பிடிக்கும் வேரிலிருக்கிறதென நம்பும் அம்மரம்
தன் நிறமிழந்த சருகுகளை உதிரக்கொடுத்துவிட்டு
கொடுங்குளிரில் தவமிருந்ததன் பயனாய்
புதியதளிர்களை ஏந்திக்கொண்டிருக்கிறது இந்த இளவேனிலில்
தனக்குள் இறுகிக்கிடந்த பனிப்பாறைகள்
இளகுவதை இயல்பாய் ஏற்றபடி
மெல்லப்படரும் வெய்யிலுக்கு
உருகிஓடத் துவங்கியிருக்கிறது அந்த ஆறு
ஆனால்
சுற்றியெழுப்பப்பட்ட சுவரும்
சாத்தப்பட்ட கதவுசன்னல்களுமே
பாதுகாப்பெனும் உன்பார்வையில்
இவைஎதுவுமே விழப்போவதில்லை
அறைகவிழ்ந்திருக்கும் இருளும்
அங்கு ஏற்றப்பட்டிருக்கும்
ஒன்றிரண்டு மெழுகுவர்த்திகளையும் தவிர
மேலே உள்ளது எனக்குக் கவிதை எழுதவருகிறதா என்ற வழக்கமான பயிற்சியில் இன்றும் எழுதியது. இனிக் கீழே எழுதப்போவது ஒரு விவாதத்தின் தொடர்பான எண்ணங்கள். காலம்கடந்தவைதான். ஆனாலும் தோன்றியதைச் சேமித்துக்கொள்ளவே இப்பதிவு.
ஒரு எளிய வினா. கற்றறிந்த எம் நண்பர்கள் விவாதிக்கிறார்கள் தமிழ்மணம் விவாதக்களத்தில். "பெண்கள் மூடிக்கொள்ள வேண்டுமா?". இதுதான் கேள்வி. அடித்துப்பிடித்து ஆண்கள் ஓடிவருகிறார்கள் பெண்கள் பற்றி முடிவெடுப்பதற்கு. சரி. ஓடிவந்தவர்கள் ஒற்றுமையாக ஒரு முடிவெடுத்தார்களா என்றால் அதுவுமில்லை. இரண்டு அணிகளாகத் திரண்டு எதிரெதிரே நின்றுகொண்டார்கள். "ஆண்கள் பத்துபேர் இருந்தாலும் ஒருவீட்டில் ஒற்றுமையாக இருப்போம், ஆனால் இரண்டு பெண்களை இருக்கச்சொல்லுங்கள் பார்ப்போம்" என்று வேட்டியை வரிந்துகட்டிக்கொண்டு வலைப்பதிவில் வாய்ச்சவால்விட்டுக்கொண்டிருக்கும் வீரத்தமிழர்களை நினைத்துக்கொண்டு "பிறகேன் பெண்களின் உடைவிடயம் பற்றிப் பேசுகையில்கூட ஆண்கள் இதில் என்மதமே உயர்ந்தது, உன்மதம் எப்போதும் இப்படித்தான் எனச் சண்டையிடுகிறார்கள்?" எனக் கேள்வியெல்லாம்
உங்களுக்கு நீங்களே கேட்டு இந்த இடத்தில் குழப்பிக்கொள்ளக்கூடாது. அந்தக் கேள்வியைத் தப்பித்தவறி நீங்கள் வெளியிட்டால்கூட "அதுவா? பேசியது பெண்களைப் பற்றியல்லவா? அதுதான் இப்படி இரண்டாக அணிபிரிந்து சண்டையிட நேர்ந்தது. மற்றநேரங்களில் நாங்கள் மகாத்மாக்களே" என்றும் பதில்சொல்லத்தெரிந்தவர்கள்தான் மேற்படி வீரத்தமிழர்கள் என்பதையும் இந்நேரத்தில் நீங்கள் மனதில் இருத்திக்கொள்ளவேண்டும். நிற்க.
உடை விலங்கிலிருந்து மனிதன் தன்னை வேறுபடுத்திக்கொண்டதன் அடையாளங்களில் ஒன்று. ஆனால் அந்த உடையை யார் எப்படி அணியவேண்டும் என்பது அவரவர் விருப்பங்கள், ரசனைகள், பொருளாதார வசதிகள் சார்ந்தது. பள்ளியிலோ, அலுவலகத்திலோ, இராணுவத்திலோ மற்ற பணி, கல்விசார்ந்த இடங்களிலோ உடைசம்பந்தமான விதிகள் இருபாலருக்கும் பொதுவானவை. கடைப்பிடிக்கப்படவேண்டியவை. இவைதாண்டி மற்ற இடங்களில், நேரங்களில் தம் உடையைத் தேர்ந்தெடுப்பது அவரவர் சுதந்திரம். அவரவர் கண்ணியத்தை அவரவர்
காப்பாற்றிக்கொள்ள உரிமையுடையவர்கள். இதில் இடத்திற்கு இடம், மனிதருக்கு மனிதர், நாட்டுக்கு நாடு, காலத்திற்குக் காலம் வேறுபாடுகள் நேரலாம் வடிவங்களில். உடை பற்றி பொதுவான கருத்தென்றால் இதற்குமேல் எதுவும் வேண்டியதில்லை.
ஆனால் பெண்களுக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதில் உடையும் அடங்கும். கணவன் இருந்தால் எப்படி உடுத்திக்கொள்ளவேண்டும்? இறந்தால் எப்படி உடுத்திக்கொள்ளவேண்டும்? மகா சன்னிதானங்களில் பெண்கள் எதுவரை போகலாம்? எங்கு போகக்கூடாது? பெண் தொட்டாலே தீட்டாகிக் கோபிக்கும் சாமிகோயிலுக்குப் போகப் பெண்களுக்கு உள்ள வயதுவரம்பு என்ன? மடங்களின் பீடாதிபதிகள் பிரசாதமாய்த் தரும் பழங்களை
பெண்களுக்கு எப்படித் தரவேண்டும்? என்பதான விதிகளை இன்னும் இந்துமதம் கொண்டிருக்கவே செய்கிறது. அதைப்போலவே இஸ்லாம் மதத்திலும். சானியா மிஷ்ரா எனும் பெண் ஒரு டென்னிஸ் வீராங்கனையாக அவருக்கு விளையாட ஏற்றதை அணியும்போதும் அவரின் குட்டைப் பாவாடையை விமர்சிப்பதுவரையான உரிமையை அது கொண்டிருக்கிறது. இதில் வாதிடும் நண்பர்கள் அவரவர் மதங்களைக் காப்பாற்றிக்கொண்டு
அடுத்தவர் மதத்தை மட்டும் தயக்கமின்றிச் சுட்டுகிறார்கள். இதில் இஸ்லாம் மதத்தைக் கண்டிக்கும் சிலரைத் தனியாக " இந்துமதத்தில் ஏன் பெண்கள் அர்ச்சகராகக்கூடாது?" என்று கேள்விகேட்டால் அங்கு பெண்களின் மாதவிலக்குத் தீட்டால் கடவுளின் புனிதம் கெட்டுப்போவதிலிருந்து, பெண்கள் அர்ச்சகராயிருந்தால் கோயிலுக்குவரும் ஆண்களின் மனது கெட்டுப்போவது வரையான காரணங்களை அடுக்குபவர்களே. இஸ்லாம் மதத்தில் இதையே பெண்களின் உடைக்குச் சொல்கிறார்கள்.
பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. உற்றுநோக்கினால் இரண்டுக்கும் அடித்தளம் ஒன்றே. பெண்கள் என்பவர்கள் ஆண்களின் மனது கெட்டுப்போகாமல் பாதுகாக்கவேண்டிய வீராங்கனைகள். அது எப்படியென்றால் தம்மை விலக்கிக்கொண்டும், உச்சிமுதல் பாதம்வரை
மறைத்துக்கொண்டும். இவைதான் மதங்கள் பெண்களைப் பார்க்கும் பார்வைகள். இதன் பொருள் இதுதான்:- "ஆண் தனக்குள் எழுந்தாடும் காமப் பரதேசியை அடக்கமுடியாத கையாலாகத்தனமோ அல்லது உடல்திமிரோ கொண்டு அலையும்போதெல்லாம் எந்தப் பெண்ணென்றாலும் உறவாடுவான். அதை அடக்கவேண்டிய ஒழுக்கமோ, கட்டுப்பாடோ, நியாயமோ இல்லை. ஆனால் பெண்கள்தான் அந்த ஆண்களுக்குள் அப்படியொரு காமப்பரதேசி எழுந்தாடாவண்ணம் தம்மை அமைத்துக்கொள்ளவேண்டும்". இதைக் கடைப்பிடிக்க வைப்பதற்குத்தான் கடவுளின் பெயர்களும், மதங்களின் விதிகளும்.
இதில் இன்னொரு முக்கியமான விடயத்தைக் கவனிக்க வேண்டும். அப்படி ஒரு ஆணின் மனம் கெட்டுப்போகாதபடி உடையணிந்து ஒதுங்கி இருக்கும் பெண்கள் மட்டும் 100 சதவீத பாதுகாப்போடு இருக்கிறார்களா இந்த உலகில் என்பதைப் பார்க்கையிலேயே இந்த மதப் புரட்டுகள் அம்பலமாகிவிடும். ஐநா சபை போன்ற அமைப்புகளின் புள்ளிவிவரத்தில் எத்தனை நிமிடத்திற்கு ஒருமுறை உலக அளவில் பெண்கள் உடல் வன்முறைக்கு ஆளாகிறார்கள் என்ற நுண்ணிய கணக்குவிவரங்களையெல்லாம் விட்டு மேலோட்டமாக "போரும் பெண்களும்" என்று போட்டுத் தேடினாலே கிடைக்கிறது web.amnesty.org என்னும் தளமும் அதில் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் உலக அளவில் போர்களில் வன்புணரப்பட்ட
பெண்களின் வலிகளும், கணக்குகளும்.
I was sleeping when the attack on Disa started. I was taken away by the attackers, they were all in uniforms. They took dozens of other girls and made us walk for three hours. During the day we were beaten and they were telling us: "You, the black women, we will exterminate you, you have no god." At night we were raped several times. The Arabs guarded us with arms and we were not given food for three days."
A female refugee from Disa [Masalit village, West Darfur], interviewed by Amnesty International delegates in Goz Amer camp for Sudanese refugees in Chad, May 2004 என்று தொடங்குகிற அந்தத் தளத்தின் ஒரு பக்கத்தில் அக்குறிப்பிட்ட போரில் வன்புணரப்பட்ட பெண்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
The girls spend their lives being intimidated and threatened by guerrillas and paramilitaries. They are accused of having relationships with men from the other side. Between February and March [2004] the bodies of three girls who had been raped were found in the area. They mark their territory by leaving scars on the bodies of the women. It is a terror without sound. Sometimes they punish women for wearing low-slung jeans but other times they make them wear low-cut tops and miniskirts so that they can accompany them to their parties"
All the armed groups – the security forces, paramilitaries and the guerrilla – have sexually abused or exploited women, both civilians or their own combatants, in the course of Colombia’s 40-year-old conflict, and sought to control the most intimate parts of their lives. By sowing terror and exploiting and manipulating women for military gain, bodies have been turned into a battleground. The serious abuses and violations committed by all the parties to the armed conflict remain hidden behind a wall of silence fuelled by discrimination and impunity. This in turn
exacerbates the violence that has been the hallmark of Colombia’s internal armed conflict. It is women and girls who are the hidden victims of that conflict. என்று தொடங்கும் அதன் இன்னொரு பக்கம் அதே நிகழ்வில் நடந்தேறிய இன்னும் பல கொடுமைகளையும், அதைப்பற்றிய ஐநா பிரதிநிதியின் நேரடி விசாரணை அறிக்கையையும் காட்டுகிறது.
இவை வெறும் இரண்டு உதாரணங்கள்தான். மிகச்சமீபத்தின் ஈராக் போரில் இதுபோன்று நடந்தவைகளையோ, இராணுவத்தின் தொடரும் அத்துமீறல்களாய் இலங்கையில் நடந்ததை, நடப்பதை சமீபத்தில் தன் பதிவில் தமிழ்நதி எழுதியதையோ நான் இங்கு மீள்பதிப்புச் செய்யாமலே தினம் உலகச்செய்திகள் படிக்கிற யாரும் அறியமுடியும். வீரப்பனைப் பிடிக்கப் போகையில் வழியில் அகப்பட்ட சின்னாம்பதி கிராமத்துப் பெண்களைச் சின்னாபின்னம் செய்தவர்களின் கதையைத் தமிழகச் செய்திகளை நினைவில் வைத்திருக்கும் யாரும் மறக்க முடியாது.
இந்தப் பெண்கள் செய்த குற்றமென்ன? உறங்கிக்கொண்டிருப்பவர்களையும், உணவருந்திக்கொண்டிருப்பவர்களையும் வீடுபுகுந்துஇழுத்துக்கொண்டுபோய் வன்புணர்ந்த ஆண்களின் கண்களுக்கு முன்னால் தங்களை மூடிக்கொள்ளாமல் வந்து மோகினி ஆட்டம் ஆடியா அந்த ஆண்களின் காம உணர்வை எழுப்பிவிட்டார்கள்? மூடிக்கொண்டிருப்பது பெண்களுக்கு நல்லதாம், பேசுகிறார்கள் எம் கற்றறிந்த நண்பர்கள்.
பேசுங்கள்...பேசிக்கொண்டேயிருங்கள். மடமையோ, மாற்றமோ அது மதங்களில் இருந்து உருவானதில்லை, உருவாகப்போவதுமில்லை. மதங்களையும் உருவாக்கிய மனித மனங்களில் இருந்தே அவை உருவாயின, உருவாகவும் இருக்கின்றன. பெண்களூக்கு வஞ்சனையில்லாமல் அநீதி வழங்கியதில் எந்த மதமும் சளைத்ததல்ல. ஏனென்றால் வழிபடும் கடவுள்களில் வேற்றுமையிருந்தாலும் பெண்களைப் பற்றிய கருத்தாக்கத்தில்
மதங்களுக்கிடையே மட்டுமில்லை சாதிகளுக்கிடையேகூட வேற்றுமை இல்லை அவ்வளவாக. விருப்பமிருப்பவர்கள் அவற்றைக் கடந்து போகிறார்கள். இல்லாதவர்கள் அங்கேயே நிற்கிறார்கள்.
சுற்றியெழுப்பப்பட்ட சுவரும்
சாத்தப்பட்ட கதவுசன்னல்களுமே
பாதுகாப்பெனும் பார்வையில்
எதுவுமே விழப்போவதில்லை
அறைகவிழ்ந்திருக்கும் இருளும்
அங்கு ஏற்றப்பட்டிருக்கும்
ஒன்றிரண்டு மெழுகுவர்த்திகளையும் தவிர
பின்குறிப்பு:-
தமிழ்மணம் விவாதக்களத்தில் பெண்களின் உடை விடயம் மதவிவாதமாய்த் திசைதிரும்பியிருந்தபோதும் இடையில் புகுந்து இதைச் சரியான கோணத்தில் அணுகியிருந்த, எனக்குச் சில புரிதல்களைத் தந்த பின்னூட்டங்களை எழுதியிருந்த நண்பர்களுக்கும், தோழியர்க்கும் நன்றி.
45 Comments:
//சுற்றியெழுப்பப்பட்ட சுவரும்
சாத்தப்பட்ட கதவுசன்னல்களுமே
பாதுகாப்பெனும் பார்வையில்
எதுவுமே விழப்போவதில்லை
அறைகவிழ்ந்திருக்கும் இருளும்
அங்கு ஏற்றப்பட்டிருக்கும்
ஒன்றிரண்டு மெழுகுவர்த்திகளையும் தவிர//
அருமையான வரிகள்.
பர்தா பற்றிய உங்களது கோபம் நியாயமானதே.
//"ஆண் தனக்குள் எழுந்தாடும் காமப் பரதேசியை அடக்கமுடியாத கையாலாகத்தனமோ அல்லது உடல்திமிரோ கொண்டு அலையும்போதெல்லாம் எந்தப் பெண்ணென்றாலும் உறவாடுவான். அதை அடக்கவேண்டிய ஒழுக்கமோ, கட்டுப்பாடோ, நியாயமோ இல்லை. ஆனால் பெண்கள்தான் அந்த ஆண்களுக்குள் அப்படியொரு காமப்பரதேசி எழுந்தாடாவண்ணம் தம்மை அமைத்துக்கொள்ளவேண்டும்". //
இதைவிட மோசமாக முகத்திலறையற மாதிரி சொன்னாலும் திருந்த மாட்டோம்னு சொல்றவங்களை என்ன பண்றதுங்க?
சமீபத்தில் வாஞ்சூர் என்பவர் பர்தாவை சரி என்று சொல்லி ஒரு பதிவிட்டிருந்தார் படித்தீர்களா? அதற்கு பின்னூட்டமிட்டால் தேவை இல்லாமல் அது கவனம் பெற்று விடும் என்ற ஒரே காரணத்திற்காகவே அதற்கு மறு மொழி கூற வில்லை.
ஆகம விதிகளின் பெயராலும், மதங்களின் பெயராலும் பெண்களை அடிமைப் படுத்த துடிக்கும் கூட்டத்தை யார்தான் திருத்துவது?
//மதங்களையும் உருவாக்கிய மனித மனங்களில் இருந்தே அவை உருவாயின, உருவாகவும் இருக்கின்றன//
ஹ்ம்ம் உருவாகவும் இருக்கின்றன.. ஆண்களின் வக்கிரங்களை தீர்த்துக்கொள்ள அமைந்து மடம் என்ற ஆயுதம்... படித்தவர்கள் பல இடங்களுக்கு சென்று பல தரப்பட்ட மக்களை பார்த்தவர்கள், படிக்காத பாமரனை விட விழிப்புணர்வுமிக்கவர்கள் என்று நினைத்துக்கொண்டு இருப்பவர்ளே இப்படியென்றால், என்ன சொல்ல..
இப்பொழுதெல்லாம் இது போல வாதங்களில் பின்னூட்டம் இடுவதற்கு கூட சலிப்பு தான் வருகிறது செல்வநாயகி.. வாதத்தை திசை திருப்பி நம்மையே இப்படி நினைக்க வைத்து விட்டார்கள்...
ஒவ்வொரு சொல்லிலும் உங்கள் கோப முத்திரை ...
தலைப்பே சம்மடி அடியா?
//மடமையோ, மாற்றமோ அது மதங்களில் இருந்து உருவானதில்லை, உருவாகப்போவதுமில்லை. மதங்களையும் உருவாக்கிய மனித மனங்களில் இருந்தே அவை உருவாயின, உருவாகவும் இருக்கின்றன.
//
அருமையான கருத்து, செல்வநாயகி..
நம் மனங்கள் அந்தளவுக்கு இன்னும் முதிர்ச்சி அடையவில்லைதான்.
ஒருமுறை, என் தோழியிடம் பெண்களின் உடை விடயத்தை பற்றி பேசும்பொழுது, அவள் சாதாரணமாக எடுத்துக்கொண்டாள். பின், அவள் ஆண்களின் உடை விடயத்தை பற்றி சொன்ன பொழுது அவளை நான் ஆச்சியத்துடன் பார்க்க....
அவள் கேட்டாள், 'என்ன இவ மோசமானவளா இருக்ககாளே-னு யோசிக்கிறியா?'. அவள் கேள்வி கன்னத்தில் அறைந்துபோல் இருந்தது.
இந்த வகையிலாவது எல்லா மதங்களும் ஒன்றாக இருக்கிறார்கள். யூத மதத்தில் மாதம் ஒரு வாரம் மட்டுமே பெண் புனிதமுடையவளாக கருதப்படுகிறாள். தூங்குகிறவர்களிடையே அல்லது அவ்வாறாக பாவனை செய்பவர்களை பேசி எழுப்ப முடியாது. மங்கை சொன்னதேதான்.
//அடித்துப்பிடித்து ஆண்கள் ஓடிவருகிறார்கள் பெண்கள் பற்றி முடிவெடுப்பதற்கு.//
இந்த காரணத்துக்காகத் தான் அங்கே பேசும் எண்ணமே இல்லாமல் போயிற்று செல்வா.. பெண்கள் மூடுவதையும் மூடாமல் இருப்பதையும் பற்றி கேள்வி எழுப்புகிறவர்கள், பதில் சொல்பவர்கள், சொன்னதை மறுப்பவர்கள் என்று யாருமே பெண்ணில்லை..
சமீபத்தில், "சாதாரண, தினப்படி சமையலை ஆண்கள் செய்யலாமே!" என்ற பதிவிற்கு, "செய்யலாமே! அப்படியே உங்களைப் போல் புடவை ரவிக்கையும் கட்டலாமே!" என்ற பின்னூட்டம் வந்ததை இங்கே குறிப்பிட ஆசையாக இருக்கிறது.
தமிழ்மணம் விவாதக்களத்தின் தொடர்புடைய இடுகையின் சுட்டியை இணைக்க விட்டுப்போனது. அது இங்கே.
http://vivaatham.thamizmanam.com/archives/29
பிறகு வருகிறேன் நண்பர்களே.
சில சிந்தனைகள்
1. டேட்டிங் என்ற முறையில் ஆண்களும் பெண்களும் தமது துணையைத் தாமே தேர்ந்தெடுக்கும் மேற்கத்திய முறையில் திருமணமாகத ஆண்களுக்கு என்ன வரையறை? எது வரை நட்பு, எது வரை காமம்? எல்லோருமே சகோதரிகள், தாய்/தந்தை பார்த்து வைக்கும் பெண் மட்டுமே மனைவி வாழ்நாள் முழுவதும் என்ற நம்ம ஊர் நடைமுறை அந்த மனக் கோணலுக்கு சரியான மருந்தாகயிருந்திருக்குமோ!
2. 'உன்னைத் தவிர இருமாதரை மனதாலும் தொடேன்' என்று ராமன் சீதைக்கு உறுதி மொழி கூறியது போன்று வாழ ஆண்களுக்கு முன்மாதிரிகள் எங்கே? ஊடகங்களிலும், கலைப்படைப்புகளிலும் எல்லாப் பெண்களுமே இலக்குகள்தான் என்று புனையப்படும் மாதிரிகள் / விலங்கு உணர்ச்சிகள் அடிப்படையிலான தூண்டுதல்களுக்கு கொடுக்கும் விலை என்ன?
பர்தா என்ன, இரும்புத் திரை போட்டு மறைத்தாலும் விலங்குகளாக்கத் துரத்தும் கலாச்சார சிதைவுகளிடையே இத்தகைய விவாதங்கள் வீண்தானோ என்று சலிப்பு தோன்றுகிறது.
யாருக்கு என்ன லாபம் கிடைத்ததோ, என்னைப் பொறுத்த வரை பல புரிதல்களைக் கொடுத்த விவாதம் இது.
அன்புடன்,
மா சிவகுமார்
செல்வநாயகி!
தொடர் சிந்தனையின் ஒரு பகுதியாக இப்பதிவு அமைந்திருக்கிறது. எட்டப்பட வேண்டிய தூரம் எட்டவாகவே இருக்கிறது.
நன்றி.
செல்வநாயகி!களைப்பாக இருக்கிறது. நாம் எழுதுகிறோம். பேசுகிறோம். உள்ளுக்குள் குமுறுகிறோம். ஆனால்,மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பது பொய். சமூகத்தில் பெரும்பாலானவர்களின் பெண்கள் பற்றிய சிந்தனைகளும் மாறாதவையே. பர்தாவினூடாகத் தெரியும் அந்தக் கண்களைப் பார்க்கும்போதெல்லாம் உள்ளிருந்து எதுவோ வலிக்கும். அதனுள்ளிருக்கும் அழகிய அந்த முகத்தை,விழிகளைப் பார்க்க முடியாதது உறுத்தும். எத்தனை வண்ணங்களில் நாம் உடைகளைத் தேர்ந்தெடுக்கிறோம்... அவர்களது ஒரே தேர்வாக இருக்கக்கூடியது கறுப்பு நிறம் மட்டுமே இல்லையா... அதாவது இருட்டின் நிறம்.
எல்லா போர்களும் வன்புணர்வின் குரூரத்திற்க்காக மட்டும்தான் நிகழ்த்தப்படுகிறதோ என எண்ணுமளவிற்க்கு வரலாற்றின் பக்கங்களில் மலிந்து போயிருக்கிறது வன்புணர்வு.நாடு, மதம்,கொள்கை.வீரம் என எல்லாவற்றையும் கடந்து எல்லாரும் இதில் மட்டும் ஒன்றுபடுகிறார்கள்.
பாதுகாப்பு எனும் பெயரில் கதவுகளை சாத்திக் கொள்வது இந்த குரூரத்தை நீட்டிக்க கூடிய ஒரு விழைவாகவே இருக்க முடியும்.
கவிதையும் பதிவும் சிறப்பாக வந்திருக்கிறது.வாழ்த்துக்கள்
நந்தா, மங்கை, தருமி, தென்றல், பத்மா, பொன்ஸ், மா.சிவக்குமார், மலைநாடான், தமிழ்நதி, அய்யனார்,
உங்களின் வருகைக்கும் கருத்துவெளிப்பாட்டுக்கும் நன்றி.
நந்தா,
///ஆகம விதிகளின் பெயராலும், மதங்களின் பெயராலும் பெண்களை அடிமைப் படுத்த துடிக்கும் கூட்டத்தை யார்தான் திருத்துவது?///
ஒவ்வொருவருக்கும் அவரவர் சுயஆய்வுகளும், பரிசோதனைகளுமே வாழ்வு, சமூகம், மதம்சார்ந்த புரிதல்களை ஏற்படுத்துகிறது. காலத்தால் நெடிதுநாள் முந்தைய தலைமுறைகளால் கடைப்பிடிக்கப்பட்டுவந்த ஒன்றே எனினும் அது குறையுடையதெனில் குறைந்தபட்சம் தன்னையாவது அதிலிருந்து விடுவித்துக்கொள்ள முடிகிறது. தன் மூதாதையர் மேல் எழும் விமர்சனங்களை நேர்மையுடன் ஏற்றுக்கொள்ளவும், தானே அப்படியான விமர்சனங்களை வைக்கவும்கூட முடிவதும் அப்போதுதான். இது பர்தா விடயம் மட்டுமல்ல மற்ற இந்துமதக் குப்பை, குறைபாடான நடைமுறைகளுக்கும் பொருந்தும்.
மங்கை,
///இப்பொழுதெல்லாம் இது போல வாதங்களில் பின்னூட்டம் இடுவதற்கு கூட சலிப்பு தான் வருகிறது செல்வநாயகி.. வாதத்தை திசை திருப்பி நம்மையே இப்படி நினைக்க வைத்து விட்டார்கள்... ///
நீங்கள் சொல்வது சரி. அப்படியான இடங்களில் எழுதி நேரத்தை வீணடிப்பதற்குப் பதிலாய் வேறு ஆக்கப்பூர்வ எழுத்துக்களைப் படிப்பதிலும், நமக்குத் தெரிந்த ஒன்றை நம் பக்கத்தில் பகிர்ந்து வைப்பதிலும் செலவிடலாம். அதேசமயம் நாம் எழுதி விவாதிக்கப் போகாவிடினும் அத்தகைய இடங்களில் நடக்கும் திசைதிரும்பிய விவாதங்களையும், எழுதப்பட்ட பதிவை அவரவர் நினைத்த இடத்திற்கெல்லாம் இழுத்துக்கொண்டு திரிகிற வேடிக்கையையும் நேரமிருந்தால் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கலாம். அவை தரும் புரிதல்களும் நமக்குத் தனிப்பட்டமுறையில் சிலசமயங்களில் பயனுள்ளவையே:))
பொன்ஸ்,
///"சாதாரண, தினப்படி சமையலை ஆண்கள் செய்யலாமே!" என்ற பதிவிற்கு, "செய்யலாமே! அப்படியே உங்களைப் போல் புடவை ரவிக்கையும் கட்டலாமே!" என்ற பின்னூட்டம் வந்ததை இங்கே குறிப்பிட ஆசையாக இருக்கிறது////
உங்களின் அந்தப் பதிவைப் படித்தேன். எல்லாப் பினூட்டங்களையும்கூட. ஒருவகையில் இங்கு சிலருக்கு நாம் நன்றிகூறலாம் நம் அகண்ட சமூகத்தின் நிதர்சன நிலையை, அவர்களை அப்படியே வெளிப்படுத்தி நமக்கு அடிக்கடி அடையாளம் காட்டுவதற்காக.
தருமி,
///ஒவ்வொரு சொல்லிலும் உங்கள் கோப முத்திரை ///
கோபமான முத்திரை மட்டும்தானா? நியாயமான முத்திரை இல்லையா:))
தென்றல்,
///அவள் கேள்வி கன்னத்தில் அறைந்துபோல் இருந்தது///
இது எல்லோராலும் முடிந்துவிட்டால் பிரச்சினையே இல்லையே! ஒத்த எண்ணங்களுக்கு மகிழ்ச்சி.
நானும் உங்களைப்போல
கவிதை எழுத பயிற்சி எடுப்பது
வழக்கம்:)
வரிகள் மிகவும் அழகாகவும்
அசலாகவும் இருக்கிறது.
விவாதக்களத்தில் எதையும் சொல்லாமல் மௌனமாக பார்த்துவிட்டு
போய்கொண்டிருக்கிறோம்.
பேசிப்பயனில்லை எனத்
தெரிந்தே இருந்தாலும் உங்களின்
இந்த பதிவு எங்களின் கருத்தை பதிவு செய்து வைக்க இடமாயிற்று நன்றி.
பத்மா,
///யூத மதத்தில் மாதம் ஒரு வாரம் மட்டுமே பெண் புனிதமுடையவளாக கருதப்படுகிறாள்///
இது எனக்குப் புதிய செய்தி. கொஞ்சம் விளக்கமாக நேரமிருக்கும்போது எழுதுங்கள்.
மலைநாடான்,
//எட்டப்பட வேண்டிய தூரம் எட்டவாகவே இருக்கிறது.//
ஆம்.
தமிழ்நதி,
///எத்தனை வண்ணங்களில் நாம் உடைகளைத் தேர்ந்தெடுக்கிறோம்... அவர்களது ஒரே தேர்வாக இருக்கக்கூடியது கறுப்பு நிறம் மட்டுமே இல்லையா///
இஸ்லாம் மதத்துக்குள்ளேயே இதிலிருந்து மனதளவில் வேறுபட்டவர்களும் இருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். சில இடங்களில் பர்தா இல்லை. வெறுமனே புடவைத் தலைப்பால் தலையை மூடிக்கொள்ளூம் பெண்களைப் பார்த்திருக்கிறேன். இங்கு என் தோழி ஒருவர்கூட அப்படித்தான். கேரளாவைச் சேர்ந்த இன்னொரு தோழி மற்ற எல்லோரையும்போல் சாதாரணமாகவே இருக்கிறார். என் கல்லூரித்தோழியர் சிலரும் அப்படியே இருந்த நினைவுண்டு. எனக்கு இந்த விவாதக்களத்தில் நண்பர்கள் "ஆண்கள் மனது கெட்டுப்போகாமல் இருக்கப் பெண்கள் இப்படி மூடியிருக்க வேண்டும்" என்றும் அதை மீறுவது மதத்திற்குப் புறம்பானதெனவுமே பேசிக்கொண்டிருந்ததே வருத்தமளித்தது. உடனே தங்கள் மதம் எல்லா உரிமைகளையும் பெண்களுக்கு வாரிவழங்கிவிட்ட பாவனையில் இஸ்லாமின் பர்தாவை மட்டும் பழிக்க வந்துவிட்ட இந்துமதக்காரர்கள்.
அய்யனார்,
//எல்லா போர்களும் வன்புணர்வின் குரூரத்திற்க்காக மட்டும்தான் நிகழ்த்தப்படுகிறதோ என எண்ணுமளவிற்க்கு வரலாற்றின் பக்கங்களில் மலிந்து போயிருக்கிறது வன்புணர்வு.நாடு, மதம்,கொள்கை.வீரம் என எல்லாவற்றையும் கடந்து எல்லாரும் இதில் மட்டும் ஒன்றுபடுகிறார்கள்///
உண்மை. நேரமிருக்கும்போது நான் சுட்டியுள்ள போரின் விளைவுகள் பற்றிய தளத்தைப் பார்வையிடுங்கள். அது சொல்லும் உண்மைகள் இன்னும் ஏராளம். நீங்கள், தென்றல் போன்ற நண்பர்களின் புதிய வரவுகளும், மாறுபட்ட நல்ல கருத்துக்களும் உற்சாகமளிக்கின்றன.
முத்துலட்சுமி,
கவிதை எழுதுவது முயற்சி, பயிற்சியால் கைகூடிவரும் ஒன்றே. அப்படீன்னா உங்களுக்கு சரியா கைகூடி வந்துருச்சான்னு என்னையத் திருப்பிக் கேட்றாதீங்க:)) நானும் வருசக்கணக்குல முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கேன் ஒருநாளைக்காவது சரியா எழுதிரமாட்டமான்னு:))
மா.சிவக்குமார்,
ஒன்றுக்குள் ஒன்று வலையாகப் பின்னிய பல விடயங்களை இரண்டு கருத்துக்களிலும் சொல்லியிருக்கிறீர்கள்
என்று கருதுகிறேன். அமெரிக்க கலாசாரம், இராமனின் ஏகபத்தினிவிரதத்தன்மை இவையெல்லாம் என் இந்த இடுகையின் பேசுபொருளைவிட்ட வேறுதளங்கள் என்றும் கருதுகிறேன். இதில் பேச நிறைய உள்ளன. நீங்கள் இராமனைச் சிலாகித்து எழுதியிருக்க, நான் சீதையைத் தீக்குளிக்கச் சொன்ன, சூர்ப்பநகை என்ற பெண்ணைத் தன் தம்பியைவிட்டு மானபங்கம் செய்த வன்முறையாளனாய் இராமனைத் திட்ட ஆரம்பித்து, எதற்கு அந்த இராமனை இழுத்துக்கொண்டுவந்து கணவன் மனைவி உறவைப் பேணிக்கொண்டிருக்க வேண்டும்? ஒரு ஆணுக்கும், பெண்ணுக்குமிடைப்பட்ட அன்பில், நேர்மையில் மட்டும் இதைப் பார்க்க முடியாதா? அந்த அளவுகோலில் இராமனைச் சேர்க்க முடியுமா? என்றெல்லாம் நான் கேட்டும் தொலைத்து அது வேறுவிவாதமாய் விரிந்துகொண்டு போகும். உங்களின் அமெரிக்க, இந்திய கலாசார ஒப்பீடுகளிலும் இருபக்கம் பற்றியும் ஆழ்ந்து பேச அதிகம் இருக்கின்றன. மேலோட்டமாக நம் கலாசாரக்காவல் அளவுகோல் கொண்டு அமெரிக்கர்களை அளந்து அவர்களின் வாழ்வியல்முறை பற்றித் தீர்ப்புச் சொல்வதும் சரியாக இருக்காது. பிறகொருமுறை நேரம், ஆர்வம் சாத்தியப்படும்போது இதுகுறித்து எனக்குத் தெரிந்ததை எழுத முயற்சிக்கிறேன்.
ஆனால் முக்கியமாக உங்களுக்கு ஒன்று சொல்லவேண்டும். விவாதக்களத்தின் மட்டுறுத்தனராக இருந்து இம்மாதிரித் தலைப்புகளையும் கொடுத்து, "என் பின்னூட்டம் எங்கே போனது? அவர் பின்னூட்டத்தை ஏன் போட்டீர்கள்?" என்ற இடிகளையும் தாங்கி நிதானமாக உங்களின் பதில்களையும், கருத்துக்களையும் சொல்லி நேரம் செலவழித்துப் பணியாற்றும் உங்களுக்கு நன்றி.
செல்வநாயகி:
பெண்கள்=கலாச்சாரம் என்ற சமன்பாடு எவ்வளவு அபத்தமோ அதற்கும் குறையாத அபத்தம் கலாச்சாரம் என்பதை ஒவ்வொரு நாடு, மொழி இவற்றோடு பொருத்திப்பார்ப்பதும் என்று நினைக்கிறேன்.
வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் பார்வை என்பதும் வாழ்க்கையைப் போலவே பல வகைப்பட்டது; அது சொந்த அனுபவம் சார்ந்தது. ஏனெனில் வாழ்க்கை என்பதை ஒருபோதும் நகல் செய்ய முடியாதல்லவா! ஆனால் இட்லியும், வேட்டியும், இராமனும், பர்தாவும் தான் கலாச்சாரம் என்றால் என்னைப்பொருத்தவரையில் அவைதான் வாழ்க்கை என்பதாகவும் ஆகும். இவைதான் வாழ்க்கை என்பது மிகவும் பரிதாபத்துக்குரியது!
இந்தப்பதிவுக்கு நன்றி!
//"ஆண் தனக்குள் எழுந்தாடும் காமப் பரதேசியை அடக்கமுடியாத கையாலாகத்தனமோ அல்லது உடல்திமிரோ கொண்டு அலையும்போதெல்லாம் எந்தப் பெண்ணென்றாலும் உறவாடுவான். அதை அடக்கவேண்டிய ஒழுக்கமோ, கட்டுப்பாடோ, நியாயமோ இல்லை. ஆனால் பெண்கள்தான் அந்த ஆண்களுக்குள் அப்படியொரு காமப்பரதேசி எழுந்தாடாவண்ணம் தம்மை அமைத்துக்கொள்ளவேண்டும்". //
குறிப்பிட மறந்து விட்டேன்...
நன்றாக எழுதியிருக்கிறீர்கள் இதை.
இன்னும் சேர்க்கலாம்..அப்படியான ஒரு காமப்பரதேசி எழுந்தாடினால் அதற்கான முழு தண்டனையையும் பெண்களுக்கு வழங்கப்படும்..
செல்வநாயகி நான் சொன்னது இந்த விவாதத்துக்குப் பொருத்தம் என்றே நினைக்கிறேன்.
ராமனின் கதையை விட்டு விடுவோம். தான் கைப்பிடித்த மனைவியைத் தவிர பிற பெண்களை சகோதரியாக / தோழியாக - பாலுணர்வு ஒதுக்கிப் பார்க்கும் - ஒழுக்கமும் வழி காட்டலும் வேண்டாமா? அதுதானே உடலளவில் பலம் குறைந்த பெண்களுக்கு உண்மையான பாதுகாப்பு!
நமக்குப் பழக்கம் இல்லாததால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லையோ என்னவோ! டேட்டிங் என்பதை அமெரிக்க ஆண்களும் பெண்களும் எப்படிக் கையாளுகிறார்கள்? யார் யார் நியாயமான டேட்டிங் இலக்குகள்? ஒரே ஒரு பெண் மட்டும்தான் வாழ்க்கைத் துணை என்று விலங்கு நிலை தூண்டுதல்களை ஒதுக்கி வகுத்த மனித நெறியை உடைத்து விடும் ஓட்டைகள் அல்லவா இந்த முறைகள்?
திருமணம் ஆன ஆண் மனைவியின் தோளைத் தாண்டி இன்னொரு பெண்ணை சைட் அடிப்பதை நகைச்சுவையாகக் காட்டும் விளம்பரங்கள் இந்தியாவில் கூட ஏற்றுக் கொள்ளப்படத்தான் செய்கின்றன, இப்போதெல்லாம்.
பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணம் என்றால் மீண்டும் பெண்களுக்கு அடிமைத்தனம் என்று வரும். ஒருவருக்கு ஒரு துணை என்று வகுத்தால் அதிலும் மோசமான திருமணங்களில் பெண்ணின் நிலை என்ன என்று கேள்விகள் வரும். விவாகரத்து என்றால் மீண்டும் சிக்கல். ஏதாவது ஒரு நிலையில் கோடு போடத்தானே வேண்டும்?
ஆணின் விலங்கு இயல்பு தறிகெட்டுத் திரிவது என்றால் தொல்லை. அதை ஒழுங்கு படுத்தும் நெறிகளுக்குக் கொடுக்கும் விலைகளும் ஏற்கக் கூடியதாக இல்லை. நாகரீக வாழ்க்கைக்கு சில விலைகள் கொடுத்துதான் தீர வேண்டும். பர்தா இல்லை என்றால், பெற்றோர் நடத்தி வைக்கும் திருமணம், ஒருவனுக்கு ஒருத்தி (ஒருத்திக்கு ஒருவன்) என்ற வாழ்க்கை நெறியை் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அன்புடன்,
மா சிவகுமார்
சொல்ல வந்த கருத்தை ஆழமாகச் சொல்லியிருக்கிறீர்கள். உரைவீச்சை இன்னும் இறுக்க முடியும். பழக்கத்தில் அது வரும்.
பலரும் படிக்க வேண்டிய பதிவு.
எந்த உடையைத் தான் அணிவேன் என்று சொல்ல, பெண்ணுக்கு மட்டுமே முழு உரிமை உண்டு. இதில் ஆணுக்கோ, பொதுவான குமுகத்திற்கோ, யோசனை சொல்ல மட்டுமே, வாய்ப்பு உண்டு.
அன்புடன்,
இராம.கி.
இராம.கி ஐயா,
உங்களின் பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி.
உங்களைப் போன்றவர்களின் விமர்சனங்கள் என் எழுத்தைச் செழுமையாக்கிக்கொள்ள உரம்போன்றவை. தவறுகள், குறைகளையும் நீங்கள் கண்ணுறுகிறபோது சுட்டிக்காட்டுங்கள். திருத்திக்கொள்ள முயல்வேன். நன்றி.
தங்கமணி,
///இன்னும் சேர்க்கலாம்..அப்படியான ஒரு காமப்பரதேசி எழுந்தாடினால் அதற்கான முழு தண்டனையையும் பெண்களுக்கு வழங்கப்படும்///
ஆமாம். சேர்த்திருக்க வேண்டும். சுட்டிக்காட்டியமைக்கும், உங்கள் முதல் பின்னூட்டத்தில் கூறியிருக்கும் மேலும் தெளிவுதரும் கருத்துக்களுக்கும் நன்றி.
சிவக்குமார்,
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. உறங்கச் செல்லும் நேரம் இப்போது. வாரயிறுதிகளில் அவகாசம் கிடைத்தால் எழுதுகிறேன், இல்லாவிட்டால் திங்களன்று.
சிவக்குமார்,
நான் என் இந்த இடுகையில் பேச எடுத்துக்கொண்ட பொருள்கள்:-
1. பெண்களின் உடை எப்படியிருக்கவேண்டுமென்பதில் ஆண்கள் முடிவுகட்டவரும் ஆர்வமும், அதன் பின்னணியில் உள்ள அவர்களின் மதம்சார்ந்த பற்றுதல்களும், அந்தப் பற்றுதல்களில் பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பாரபட்சமான விதிமுறைகளும்.
2. பெண்களைப் பற்றிய கவலைகளைவிட அவரவர் மதத்தை உயர்த்தி மற்றவர் மதத்தை இழிவாக்கி அதன்மூலம் அறுவடைசெய்துகொள்ள விரும்பிய தனிப்பட்ட ஆதாயங்களைச் சுட்டுவதும், உண்மையில் பெண்களின் சமத்துவநிலையை விரும்புகிறவர்கள் மதங்களின்மீது விமர்சனம் வைக்கத் தயங்குவதில்லை அது அவரவர் சார்ந்த மதங்கள் என்றாலும் என்பதை வலியுறுத்துவதும்.
3. பெண்களுக்கெதிரான அடக்குமுறையில் சர்வதேச அளவில் பலநாடுகளும் சட்டங்களைக் கொண்டிருந்தாலும் அவற்றால் எல்லாம் கட்டுப்படுத்த முடியாவண்ணம் உலகெங்கும் நிகழும் வன்புணர்வுக் குற்றங்களும், அது கூட்டமாகப் பெண்களைக் குறிவைத்து நடக்கும் போர்ச்சூழலும் பற்றிய செய்திகளை விவாதிப்பது.
இந்த மூன்றையும் சுற்றியே மற்றவர்களும் மறுமொழிகளை இட்டிருக்கிறார்கள்.
நீங்கள் மேற்கத்திய வாழ்க்கை, இந்திய வாழ்க்கை என்ற ஒப்பீட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதில் மேற்கத்தியர்களைக் குற்றம்சுமத்தும் ஒலிப்பில் அவர்களின் தனிப்பட்ட வாழ்வியல்முறைக்குள் சரியானது எது, சரியில்லாதது எது என்று பேச ஆரம்பித்தீர்கள். எனவேதான் அதை இந்த விவாதத்தோடு ஒட்டிப் பேசவேண்டாம் என நினைத்தேன். இப்போதும் நான் அப்படியே நினைக்கிறேன். ஏனென்றால் ஒரு பேசுபொருளைவிட்டு வேறு கிளைவிவாதங்களை நுழைத்தால் பேசுபொருள் மறக்கப்படுகிறது அல்லது மறக்கடிக்கப்படுகிறது அந்நேரத்தில். இருந்தாலும் நீங்கள் மீண்டும் அதே ஒழுக்கவிதிகளை வலியுறுத்தி வந்திருப்பதால் சில குறிப்புகளை மட்டும் எழுத நினைக்கிறேன். இப்போது நீங்கள் இராமனை விட்டுவிட்டு வந்துவிட்டிர்கள்:)) அதுவே கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்கிறது.
மேற்கத்தியர்களின் டேட்டிங் முறைத் திருமணத்தால்தான் பெண்களுக்கெதிரான குற்றங்கள் நடக்கின்றன, அவர்கள் எல்லாம் நம் ஊரைப்போல் திருமணங்கள் செய்துகொண்டால் எதுவும் நடக்காது என்பதுபோல் உள்ளது உங்கள் வாதம். பிறகேன் நம் ஊரில் திருமணமாகித் துணை இருக்கும்போதே முறையற்ற பாலுறுவுகள் இருப்பதிலிருந்து வரதட்சணையில் பலியாகும் மனைவியர்வரை அன்றாடம் ஒரு செய்தி படிக்க வேண்டியிருக்கிறது நமக்கு? இது ஒரு உலகளாவிய பிரச்சினையாக இருக்கையில் மேற்கத்தியமுறையை மட்டும் குறியீடாகக் கொள்ள முடியாது. அப்படியே விவாதித்தாலும் அங்கே மனிதர்கள் விலங்குகளைப் போல் திரிகிறார்கள், காமம் மட்டுமே உண்டு வாழ்கிறார்கள், கண்டவர்களோடு உறவுகொள்வதே அவர்களின் அடையாளம் என்ற வகையில் தவறான முன்முடிவுகளோடு மட்டும் அணுகுவது எப்படி சரியாகும்?
அவர்களுக்கும் அழகான குடும்பங்கள் இருக்கின்றன. நீங்கள் சொல்லும் சகோதர சகோதரி உறவுகளும் இருக்கின்றன. குழந்தைக்கு உடல்நலமில்லாது போனால் அலுவலகத்தில் இருப்புக்கொள்ளாது மணிக்கொருதரம் மனைவிக்குத் தொலைபேசி விசாரித்துக்கொண்டேயிருக்கிற கணவன்கள் இருக்கிறார்கள். கல்லூரிக் கனவையெல்லாம் நினைத்தேபார்க்க முடியாது தான் இருந்தபோதும், தனக்குப் பிறந்த மகன் ஒரு முதுகலைப் பட்டதாரியாய்ப் பட்டம் பெறுகிறபோது சபைக்கு நடுவே தன் மகனைக் கட்டிக்கொண்டு மகிழ்ச்சியில் அழுகிற அம்மா இருக்கிறார். அன்றாட வயிற்றுப் பாட்டுக்கு தினம் இரண்டு அல்லது மூன்றுவேலைகள்கூட செய்து அல்லல்படுகிற ஒரு கூட்டம் இருக்கிறது. இப்படி நம்மைப்போன்ற மனிதர்களுக்குரிய எல்லா உணர்வுகளும், பிரச்சினைகளும்தான் அவர்களுக்கும் இருக்கின்றன.
பாலுறவிலும் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்குமிடையே உண்மையாயிருத்தல் அல்லது நேர்மை இவர்களுக்கும் உண்டு. . உறவுச் சிக்கல்களைச் சரியாக்க ஆலோசனை வழிமுறைகள் உண்டு. சரிசெய்யமுடியாதபோது பிரிந்துகொள்ள வசதிகள் உண்டு. இவைதாண்டி இங்கும் பெண்களுக்கெதிரான குற்றங்கள் நடப்பதும். அவற்றிற்குச் சட்டங்களும் உண்டு. இன்னும் சொல்லப்போனால் நம்முடையதைவிடவும் கடுமையான சட்டங்கள்.
///பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணம் என்றால் மீண்டும் பெண்களுக்கு அடிமைத்தனம் என்று வரும். ஒருவருக்கு ஒரு துணை என்று வகுத்தால் அதிலும் மோசமான திருமணங்களில் பெண்ணின் நிலை என்ன என்று கேள்விகள் வரும். விவாகரத்து என்றால் மீண்டும் சிக்கல். ஏதாவது ஒரு நிலையில் கோடு போடத்தானே வேண்டும்?
ஆணின் விலங்கு இயல்பு தறிகெட்டுத் திரிவது என்றால் தொல்லை. அதை ஒழுங்கு படுத்தும் நெறிகளுக்குக் கொடுக்கும் விலைகளும் ஏற்கக் கூடியதாக இல்லை. நாகரீக வாழ்க்கைக்கு சில விலைகள் கொடுத்துதான் தீர வேண்டும். பர்தா இல்லை என்றால், பெற்றோர் நடத்தி வைக்கும் திருமணம், ஒருவனுக்கு ஒருத்தி (ஒருத்திக்கு ஒருவன்) என்ற வாழ்க்கை நெறியை் ஏற்றுக் கொள்ள வேண்டும். /////
சிவக்குமார் மீண்டும் மீண்டும் நீங்கள் ஒரு பொருந்தாத புள்ளிக்கு இழுத்துப் போகிறீர்கள். ஒருவனுக்கு ஒருத்தி எனும் நிலைப்பாடு வேண்டாம் இவையெல்லாம் பெண்ணடிமைக்கு வித்திடுபவை என்கிற வாதத்தை இங்கு யார் முன்வைத்தார்கள்?
எதிர்க்கப்படுவது ஆண்டாண்டுகாலமாய் ஆணுக்குச் சேவகியாய் மட்டும் இருக்கவேண்டியவள் பெண் என்று நினைக்கும், நினைக்கவைக்கப் பயன்படும் அமைப்புகள், அவற்றின் ஆயுதங்கள், அவளின் உடலை, மனதைச் சிதைக்கும் அத்துமீறல்கள் இவைகள்தான். இதன் கூர்முனைகளைத் தங்களுக்குள் ஒளித்துவைத்திருக்கும் வடிவங்கள் எதுவாயினும் அவை கண்டுணரப்பட்டு உருமாற்றம் பெறவேண்டும். அது குடும்பம் எனும் அமைப்பில் அவளைக் கட்டிவைத்த சூட்சுமங்களை, கலாசாரம் என்ற பெயரில் அவளுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளைக் கொண்டிருக்கிறது. இதன்மீதான விமர்சனங்களை அதுவைக்கப்படும் தளங்களில் இருந்து புரிந்துகொள்ளாமல் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளும்போதும், அந்த விமர்சனத்தை அதற்குரிய தளத்திலிருந்து பார்க்காமல் இன்னொன்றோடு முடிச்சுப்போட்டுக்கொள்ளும்போதும் நாம் தெளிவைநோக்கிப் பயணிப்பதில்லை.
கட்டுரையும், விமர்சனங்களும் நல்ல திசையில் விவாதத்தை கொண்டு செல்கின்றன. முக்கியமாக சிவக்குமார் முன்வைத்திருக்கும் சந்தேகங்கள், கவனிக்கபட வேண்டியவை. ஏனெனில் அவை, அவரது தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல. ஒரு பெரிய கூட்டத்தின் குரலாக ஒலிக்கிறார். அம்மாதிரியான கருத்தாளர்களை எதிர்கொள்ள இதுவெல்லாம் மிகச்சரியான வாய்ப்பு..அதை சிறப்பாக செய்கிறீர்கள்..
ஆனால் பண்பாட்டின் பெயரால், தர்க்கம் பேசுகிற பலபேர், முன் முடிவுகளோடு பேசுவதாலும், சொன்னதையே வெவ்வேறு வார்த்தைகளில் திரும்ப, திரும்ப சொல்வதாலும் ஒரு கட்டத்தில் நமக்கு அயற்சி வந்துவிடுகிறது.
செல்வநாயகி,
நான் சொல்ல வந்ததை சரியாக எடுத்துக் கொள்ளவில்லை, அதனால்தான் திசைதிருப்பல் என்று புரிந்து கொண்டீர்கள். மேற்கத்திய நாகரீகத்தை மட்டம் தட்டவோ, நம்முடைய பழக்கங்களை உயர்த்திப் பிடிக்கவோ முயற்சிக்கவில்லை.
முதலிலிருந்து ஆரம்பிக்கிறேன்.
1. "பெண்கள் மூடிக் கொள்ள வேண்டும். ஏன்? இல்லையென்றால் அவர்களை ஆண்களிடமிருந்து பாதுகாக்க முடியாது". இதுதான் வாதத்தின் சாரம்.
2. ஆண்களிடமிருந்து பாதுகாப்பு இல்லை என்ற நிலைக்கு என்ன காரணம்? ஒரு ஆண் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பெண்ணையும் சகோதரி போல் பாவித்து பழகினால் பெண் என்ன உடை எடுத்தாலும் பாதுகாப்பு முழுமையாகத்தானே இருக்கும்?
3. இணையத்திலோ, பொது இடத்திலோ என்ன நடைமுறை? 'ஒவ்வொரு இளம் பெண்ணும் பையனும் தனது வாழ்க்கைத் துணையை தானே தேடிக் கொள்ள வேண்டும்' என்று ஊக்குவிக்கிறோம் (சாதி முறைகளை ஒழிக்க உதவும் என்ற வகையில் இது நல்லதும் செய்கிறது, அது வேறு ஒரு விவாதம்).
4. பெண்கள் ஆணை அணுகும் முறையும் ஆண்கள் பெண்ணை அணுகும் முறையும் ஒரே மாதிரி இருக்கப் போவதில்லை. பெண்ணுக்கு நீண்டகால உறவு, பாதுகாப்பு உணர்வு போன்றவைதான் முதல் படிகள். ஆண்களுக்கு மிருக உணர்ச்சிகள் முதல் படிகள் என்று வைத்துக் கொள்வோம்.
5. ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தனது துணையைத் தேர்ந்தெடுக்கும் முன் எத்தனை பேரை கருத்தில் எடுத்துக் கொண்டு நிராகரிப்பார்கள். கடைசியில் ஒருவரை திருமணம் செய்து கொள்ளும் முன் எத்தனை பேருக்கு மனதில் இடம் கொடுத்துக் குழப்பிக் கொள்ள வேண்டும். திருமணமான பிறகும் சின்னச் சின்னச் சச்சரவுகளிலேயே மணமுறிவுக்குத் திட்டம் தீட்டுவது வந்து விட்டால், அதன் பிறகுக்கான துணை தேடல் அதே குழப்பத்தை விளைவிக்காதா!
அமெரிக்க நாகரீகத்தைக் குறை சொல்வதை இன்னொரு விவாதத்தில் வைத்துக் கொள்வோம். குறைந்த பட்சம் அவர்களுக்கு பல நூறு ஆண்டுகளாக இருந்து வரும் சமூகப் பழக்க வழக்கங்களும், துணை தேட வகுக்கப்பட்ட வழிகாட்டல்களும் உள்ளன.
நம்முடைய இளைஞர்கள் இதை எப்படிக் கையாளுவார்கள்? பெற்றோர் சொல்லிக் கொடுக்க முன்வரப் போவதில்லை, ஒன்று, அவர்களுக்குத் தெரியாது இரண்டாவது, தாம் பார்த்து வைக்கும் துணையைத்தான் குழந்தை திருமணம் செய்து கொள்ளும் என்று நம்பிக்கை.
மாற்று வழியை நினைத்துப் பாருங்கள். ஆண்களும் பெண்களும் தமது துணை தேடும் இலக்குகளை ஒதுக்கி வைத்து விட்டுப் பழக ஆரம்பித்து விட்டால் பெண்கள் இது போன்ற விவாதங்களே தேவைப்படாமல் போய் விடலாம். திருமணம் செய்து கொள்ளும் ஒருவன்/ஒருத்தி மட்டும்தான் வாழ்க்கை முழுவதும் பாலியல் துணை, மீதி அனைவரும் அதற்கு அப்பாற்பட்டவர்கள் என்ற செயற்கையான ஒழுக்கம்தான் பெண்களுக்கு (ஆண்களுக்கும்) பெரும் பாதுகாப்பு.
கற்பு நிலையை இரு பாலருக்கும் பொதுவில் வைத்து, ஒழுக்க நெறிகளை வளர்க்க வேண்டியது தேவையே தவிர, ஆண் தறிகெட்டு அலைகிறான், அதனால் பெண்களும் அப்படிப் போய்க் கொள்ளலாம் என்று இல்லாமல், ஆண்களுக்கும் ஒழுக்கத்தைப் போதிக்க வேண்டும் என்பதுதான் என் வாதம்.
அன்புடன்,
மா சிவகுமார்
ஆழியூரான்,
உங்கள் மறுமொழிக்கு நன்றி.
///ஒரு கட்டத்தில் நமக்கு அயற்சி வந்துவிடுகிறது///
ஆம். அதுதான் நடக்கிறது பலசமயங்களில்:))
சிவக்குமார்,
தவறாகச் சொல்லப்பட்டதாலேயோ அல்லது தவறான உதாரணங்களோ, ஒப்பீடுகளோ செய்யப்பட்டதாலேயோதான் அப்படி(யே) புரிந்துகொள்ளப்பட்டது:))
நீங்கள் இப்போதும் இப்பிரச்சினையை வெறும் காமம்சார்ந்த ஒழுக்கமாக மட்டுமே அணுகுகிறீர்கள். ஆனால் நான் அப்படி அணுகவில்லை. மாறாக இது புரையோடிப்போன ஆணாதிக்க சிந்தனைகளின் ஒரு வடிவம் என்று பார்க்கிறேன். பெண்ணின் வாழ்வு மட்டுமல்ல, உடலும் அதற்கொரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது.
அவளை வெறும் சதையும், பிண்டமுமாகப் பார்ப்பதும், அதுமட்டும்தான் அவளுக்கு அடையாளம் என்று கருதப்பட்டு அதனடிப்படையிலேயே அவளுக்கான இடங்களை ஒதுக்கிவைத்து அடிமைப்படுத்தியதன் சுவடுகள் ஏராளம். நீங்கள் இப்போதுவரும் புனைவுகளில் பெண்கள் அப்படிக் காட்டப்படுவதாகச் சொல்கிறீர்கள். யுகம்யுகமான வரலாறுகளைக்கொண்ட மதங்களில் இருந்து(ம்) துவங்கியிருக்கிறது இவற்றிற்கான ஆணிவேர் என்கிறேன் நான். அவற்றையெல்லாம் அப்படியே மூடிவைத்துக்கொண்டு அதே மதப் புனைவுகளையும், இராமன் போன்ற மதநாயகர்களையும் கொண்டு வளர்த்தெடுக்க நினைக்கும் ஒழுக்கம் நீங்கள் சொல்லியிருப்பதுபோல் ஒரு செயற்கையான ஒழுக்கமாகவே இருக்கும்.
பெண்கள் பலவீனமானவர்கள் உடலளவில், எனவே ஆண்கள் ஒழுக்கமாக இருப்பதுதான் பெண்களுக்குப் பாதுகாப்பு எனும் உங்கள் வாதத்தின் மேல் எனக்கு ஆழியூரான் சொன்னதுபோல் அயற்சியாக உள்ளது.
உங்களால் இதை ஏன் பெண்களுக்கான உரிமைப்பிரச்சினையாக அணுகமுடியாது போகிறது?
குழந்தைகளுக்கெதிரான வன்முறை என்பது பள்ளிகளில் ஆசிரியர்கள், வீட்டில் பெற்றோர்கள் அடிப்பதையும் உள்ளடக்கியிருக்கிறது. மேற்கத்திய நாடுகளில் தீவிரமாகத் தடுக்கப்பட்டு வரும் இந்த வன்முறைக்கு எதிராக நம் ஊரிலும் இப்போது விழிப்புணர்வுகள் துளிர்விட ஆர்ம்பித்ததன் அடையாளமாய் சமீபத்தில் அரசு கொண்டுவந்துள்ள சட்டத்திருத்தங்களைச் சொல்லலாம். இது அவர்கள் பலவீனமானவர்கள் என்பதால் நாம் அடிக்காமல் அகிம்சைவாதிகளாக நம் ஒழுக்கத்தை அமைத்துக்கொள்ளவேண்டும் என்று பொருள் அல்ல. குழந்தைகள் என்றாலும் அவர்களுக்கென்று சுயம் இருக்கிறது. விருப்பங்கள் இருக்கின்றன. நமக்கான உணர்வுகள் அவர்களுக்கும் இருக்கின்றன. அவற்றின் மீது நம் ஆதிக்கத்தைச் செலுத்த நமக்கு அனுமதியில்லை. உரிமையுமில்லை. அன்பும், வழிகாட்டல்களும் வேறு. அவர்கள்மீது நாம் திணிக்கின்ற தீர்மானங்கள் வேறு. பின்னது வன்முறை.
இதை அப்படியே பெண்களுக்கும் பொருத்திப்பாருங்கள். பெண்களுக்கெதிரான வன்முறை என்று என்போன்றவர்கள் சொல்லும் கோணம் புரிபடும். பெண்ணுக்கான வரையறைகளை மதங்களும், நம் கலாசாரப் புனைவுகளும், சமூகமும் ஏற்படுத்திவைத்திருப்பதையும், அவற்றை மீறுகிறவர்களுக்கெதிரான வசைவுகள், தாக்குதல்கள், முத்திரைகள் எல்லாம் என்ன? ஓடுகாலி, வாழாவெட்டி, விதவை போன்ற சொற்களையும் அவற்றின் பின்னணிகளையும் எண்ணிப்பாருங்கள். இந்த நிலைமைகளுக்குத் தள்ளப்படும் பெண்களுக்கு நேரும் சிரமங்கள் எத்தனை? மீண்டுவருவதில் அவர்களுக்குள்ள தடைகள் எதன் காரணமாய் எழுந்தவை?
இவற்றை அடையாளம் காண்பதும், ஒரு பெண்ணுக்கான சுதந்திரத்தை அவள் தீர்மானித்துக்கொள்வதுமான வாய்ப்புகளை உருவாக்குவதும் முக்கியம். மிகச்சமீபத்திலே ஒரு பார்ட்டியில் பிடிபட்ட இளைஞர்களில் பெண்களும் இருந்தார்கள் என்று செய்தி படித்தோம். அதைப்பற்றிய மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி செகதீசனின் கருத்துத் தொடர்பான விவாதங்கள்கூட வெகுசன ஊடகத்தில் வந்திருந்து வலைப்பதிவில் லட்சுமி தொடங்கிவைத்திருந்தார்.
உங்களைப்போன்றவர்கள் "பெண்விடுதலை" அல்லது "சமத்துவம்" என்று நாங்கள் இதைத்தான் சொல்லவருவதாகக் கற்பனைசெய்ய ஆரமிபிக்கிறீர்களோ என்ற ஐயம் எனக்கு உண்டு. எங்களின் பதிவுகளில் பொருத்தப்பாடு கருதி நாங்கள் பாவிக்கிற சில வார்த்தைகளை மட்டும் பிடித்துக்கொண்டு ஏதோ கனகாலமாய் கயிறுகிடைக்கக் காத்திருந்த சிறுவர்களைப்போய் அவற்றைச் சுருட்டிக்கொண்டுபோய்த் தாங்கள் ஆசைப்படும் திசையிலெல்லாம் பட்டம் விடும் ஆட்றா ராமா, போட்றா ராமா வித்தைக்காரர்களுக்கு நான் விளக்கங்கள் எழுதிப் புரியவைக்கும் முயற்சிகளை எடுப்பதில்லை. ஆனால் உங்களைப் போன்ற நண்பர்களுக்கு மிகுந்த விருப்பத்துடனும், பொறுமையுடனும் அதைச் செய்கிறேன். சக்தியில் நீங்கள் முன்வைத்த குறிப்புகளுக்கு விவரணையான பதில் எழுதியதும், விவாதக்களத்தில் ஆணீயம், பென்ணீயம் தலைப்பில் பின்னூட்டம் எழுதியதும் அந்த ஆர்வத்தினால்தான்.
சரி. குறிப்பிட்ட விடயத்திற்கு வருகிறேன். அந்தப் பார்ட்டியில் இளைஞர்கள் பிடிபட்டது குறித்த வருத்தங்கள் (கவனிக்க பிடிபட்டது மட்டுமல்ல, கலந்துகொண்டதும்) சமூக அக்கறை உள்ள யாருக்கும் வரவேண்டியதே. ஆனால் அதை நீங்கள் எப்படி வெளிப்படுத்துகிறீர்கள்? (இக்கேள்வி உங்களுக்கானதல்ல) என் சமூகத்திற்கானது. அளவுகடந்த சுதந்திரம் அல்லது சம்பளம் பெண்களையும் இப்படி சீரழித்துவிட்டது என்று. அல்லது உங்கள் பாணியில் சொன்னால் ஆணின் இயல்பு இப்படியெல்லாம் போகக்கூடியது. அதுதான் இயல்பு. அதையே பெண்களும் செய்யத்தானா சமத்துவம்?
இந்தப் பிரச்சினையை மட்டுமல்ல எந்தப் பிரச்சினையையும் இப்படி பெண்களுக்கான அளவுகோல் ஒன்றுகொண்டே அளவிடுவதுதான் நம் நடைமுறை. இந்தக் குறிப்பிட்ட பிரச்சினை இந்தக் காலகட்டம் சமபந்தப்பட்டது. நுகர்வுக் கலாசாரம், உலகமயமாக்கல், பெருகிவரும் பன்னாட்டு நிறுவனங்களில் சுலபாமான வேலைவாய்ப்புகள், கைகளில் புரளும் ஆயிரங்கள் இவற்றால் ஏற்படும் விளைவுகளில் ஒன்று இந்தக் கேளிக்கை விருந்துகள், பங்கேற்புகள். இதில் ஆர்வமேற்பட்டு நுழைந்துவிடும் குறிப்பிட்ட இளையதலைமுறை மேல் அக்கறைகொண்டவர்கள் இவற்றிற்கெதிரான பிரச்சாரங்களை, விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். நூறுகோடி பேர் கொண்ட நம்நாட்டில் இந்த மேல்த்தட்டு வாழ்க்கை வாழும் மிகக்குறைந்த சமூகத்தையும், ஒருவேளை சோற்றுக்கும் ஓடாய் உழைக்கும் பரவலான பாமர வாழ்க்கையையும் அவர்களுக்கு எடுத்துச்சொல்லவும், அப்பாமரவாழ்க்கைகளின் பிரச்சினைகளைப் புரியவைக்கவும், அதற்கான காரணங்களை அலசுவதில் ஆர்வம் வரவைக்கவும் முயற்சி எடுக்க வேண்டும். அவர்களுக்குக் கிடைத்த வாய்ப்பு மூலம் அவர்கள் பெற்றோருக்கு மட்டுமின்றி சமூகத்துக்கும் ஆற்றவேண்டிய கடமைகளைப் புரிய வைக்கவேண்டும். அது ஆண் பெண் என்ற பேத அளவுகோலில் இன்றி இருபாலருக்கும் செய்யப்படவேண்டியது. ஆனால் அப்படியொரு பார்வையை முன்வைக்காமல் "பார்த்தீர்களா பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்து என்ன ஆனது?" என்று பேசுவது நமக்கு பழகிப்போனது. இதைத்தான் எதிர்க்கவேண்டியுள்ளது. எதிர்க்கிறோம். ஆனால் அதைப் புரிந்துகொள்வதில் உங்களைப்போன்றவர்களும்கூட சரியான புள்ளிக்கு வராமல் "சுதந்திரத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்தினால் என்ன செய்வது?" "வீட்டில் சண்டைபோட்டு பெண்களை வெளியே வரச்சொல்லவே இப்போதைய குரல்கள் ஆர்வம் காட்டுகின்றன" என்பதான கருத்துக்களை முன்வைக்கிறீர்கள்.
///கற்பு நிலையை இரு பாலருக்கும் பொதுவில் வைத்து, ஒழுக்க நெறிகளை வளர்க்க வேண்டியது தேவையே தவிர, ஆண் தறிகெட்டு அலைகிறான், அதனால் பெண்களும் அப்படிப் போய்க் கொள்ளலாம் என்று இல்லாமல், ஆண்களுக்கும் ஒழுக்கத்தைப் போதிக்க வேண்டும் ////
எப்போதும்போல் உங்களின் தப்பாத ஆயுதத்தை இடையில் சொருகிவிட்டீர்கள்:)) ஆணின் தவறைப் பெண்களையும் செய்யவைப்பதற்கான முயற்சிகளை ஆண்-பெண் சமத்துவத்தைத் தீவிரமாக வலியுறுத்திய யாரும் எடுத்ததாக நான் கருதவில்லை. ஒரு சமூகத்தின் தவறிலிருந்து மனிதர்களை விடுவிப்பதறகான முயற்சிகளையே அவர்கள் எடுத்தார்கள் என்றே எண்ணுகிறேன். பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது வெறும் காமம் சார்ந்த ஒழுக்கத்தில் மட்டுமில்லை. அது ஒரு சமூகத்தின் மனோபாவத்தில் இருக்கிறது. பெண்களுக்கு அப்படியான பாதுகாப்பு ஒன்றுமட்டுமே போதுமானதாகவும் இல்லை. அவர்கள் விரும்புவது மனித உரிமைகளின் வரையறைப்படி அவர்களால் அமைத்துக்கொள்ளமுடியும் ஒரு சுதந்திரமான வாழ்வையும். இந்தச் சுதந்திரமான வாழ்வை "தண்ணியடிப்பது, புகைப்பது, ஆண்களைத் திருப்பிக் கிண்டல் செய்வது" என்கிற பொருளில் நீங்கள் புரிந்துகொண்டால் அது என் பிழையல்ல:))
முன்பெல்லாம் ஒரு பதிவு எழுதினால் பின்னூட்டங்களில் நான் இவ்வளவு வாதம் செய்துகொண்டிருந்ததில்லை என நினைக்கிறேன். அவ்வப்போது கவிதை எழுதுகிறேன் என்று கவிதைக்குத் தீங்கிழைத்துக்கொண்டிருந்ததே அதிகம். இப்போது திரும்பத்திரும்ப இவ்வளவு பின்னூட்டங்களை எழுதும்படி வலையுலகில் என்னை ஒரு வாயாடியாக்கியதில் இங்கு பலருக்குப் பங்குண்டு. நிச்சயமாக உங்களுக்கும் ஒரு பங்குண்டு சிவக்குமார்:))
நன்றி.
நன்றி செல்வநாயகி.
பெண்ணடிமை/ஆணாதிக்கம் என்பது ஆண்கள் பெண்களுக்கு எதிராக உருவாக்கிய சதி என்பது சரியில்லை என்று முந்தைய விவாதங்களிலும் என்னுடைய கருத்தைச் சொல்லியிருக்கிறேன்.
மீண்டும் ஆரம்பத்திலிருந்து சொல்கிறேன். காட்டில் விலங்குகளாக வாழ்ந்த காலத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கிருந்து நாகரீகம் உருவான போது ஆண்களும் பெண்களும் ஒரு நடைமுறை அமைப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த அமைப்பு ஆண் பெண்ணை அடிமைப்படுத்த வேண்டும், வேலைக்காரி போல நடத்த வேண்டும் என்று ஏற்பட்டதில்லை, இரண்டு தரப்புக்கும் நன்மை தருவதாக ஒன்றை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதை மதம், சமூகம், பண்பாடு என்று பெயரிட்டு அவரவருக்கு ஏற்றவாறு வளர்த்து வந்திருக்கிறோம்.
அடிப்படையில் பார்த்தால் ஆணுக்கு இருக்கும் விலங்கு வலிமை பெண்ணுக்கு இல்லை என்பது உண்மை. இதனால் ஆணுக்குப் பெருமையோ பெண்ணுக்குச் சிறுமையோ இல்லை. இது உடலின் ஹார்மோன்களின் மாறுபாடுகளால் ஏற்பட்ட இயற்கை விளைவு. அதே போல பெண்ணுக்கு இருக்கும் குழந்தை பெறும் பெருமை ஆணுக்கு இல்லை. இதுவும் இயற்கையின் உண்மை.
மேலே சொன்ன குடும்ப/சமூக அமைப்பை தவறாகப் பயன்படுத்தி தனது துணையை துன்புறுத்துவது ஆண்களால் பல இடங்களில் நடந்திருக்கலாம். அதே போல அமைப்பைத் தவறாகப் பயன்படுத்தும் பெண்களும் இருந்திருக்கிறார்கள். இந்த நூற்றாண்டில் பெண்ணீயம் என்ற பெயரில் அந்த நெறிகளை மாற்றும் முயற்சிகள் பல நடக்கின்றன.
பெரும்பாலான அத்தகைய முயற்சிகள் சரியான திசையிலேயே இருக்கின்றன என்பது என்னுடைய கருத்து. பெண்ணடிமைத்தனம் என்பது ஆண்கள் சதி செய்து ஏற்படுத்திய அமைப்பு என்ற வாதத்தில் மட்டும் எனக்கு உடன்பாடில்லை. ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க ஏற்படுத்திய அமைப்பு, இப்போது மாற்றப்பட வேண்டும், அவ்வளவே.
இதில் பெண்களின் பங்கு மறு வரையறை செய்யப்படும் போது ஆண்களுக்கும் சரியான வழிகாட்டுதல், சரியான பங்களிப்பு வரையறுக்கப்பட வேண்டும். அது இல்லாததால்தான இன்றைக்கு இணையத்தில் ஒரு பெண் தனது புகைப்படத்தை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பது எனது புரிதல்.
நீங்கள் சொல்வது போல மக்களின் மனப் போக்கு மாற வேண்டும். அதற்கு சரியான வழிகளை அடையாளம் கண்டு கொள்வதுதான் சரியான மாற்றங்களுக்கு வித்திடும் என்பது எனது நம்பிக்கை. பழையன கழியும் போது புதியன உருவாக்கவும் நேரம் செலவழிக்க வேண்டும். பழைய நெறிகளை எல்லாம் உடைத்து விட்டு, அதன் இடத்தில் வேறு எதையும் உருவாக்கா விட்டால் சமூகம் சிதைந்து விடும் என்பது என்னுடைய கவலை.
உங்கள் கருத்துக்களை விளக்கி தெளிவுபடுத்துவதற்கு மீண்டும் நன்றி :-)
அன்புடன்,
மா சிவகுமார்
சிவக்குமார்,
உண்மையில் உங்களுக்கான மேலிடப்பட்ட என் கடைசிப் பின்னூட்டம் எழுத எனக்கு மிகுந்த சோம்பலாக இருந்தது (இன்னொரு வார்த்தையில் சொன்னால் ஏற்கனவே எழுதப்பட்ட இதே கருத்தை எத்தனைமுறை எழுதிக்கொண்டிருப்பதென்ற தளர்வு) ஆனாலும் சொல்லப்படாது விடப்படவேண்டாம் என்று கருதியே இன்று இட்டேன். இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்த பின்னூட்டங்களால் சிலபுள்ளிகளிலாவது நம் எண்ணங்கள் சந்திக்க முடிந்தது பார்த்து அம்மகிழ்ச்சி.
ஆண்கள் கூட்டம்போட்டு திட்டம்தீட்டி உருவாக்கினார்களா அல்லது அறியாமையால் உருவாக்கினார்களா என்கிற வாதம் இப்போது அவசியமில்லை. ஆனால் ஏற்படுத்தப்பட்ட அமைப்புகள் அனைத்திலும் ஆண் முன்னிறுத்தப்பட்டு பெண் இரண்டாம் பிரஜை ஆக்கப்பட்டிருக்கிறாள். இதில் உள்ள சௌகரியங்கள் கருதி அவை மேலும் மேலும் கட்டிக்காக்கப்பட்டன. அதற்கான காரணங்கள் புனையப்பட்டன. அந்த வாழ்வில் கல்வி மறுக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு, வசைகளால் துன்புறுத்தப்பட்டுப் பெண் பின்னுக்குத் தள்ளப்பட்டாள். காலம் மாறும்போது, பழையவற்றில் மாற்றங்கள் தேவைப்படும்போது அதுகுறித்துச் சிந்திக்கவேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் அப்படியான சிந்தனைகளுக்கு காதுகொடுக்கக்கூட நாம் கற்ற கல்வியும் கைகொடுக்காத ஒரு கேவல நிலையில் இருக்கிறோம் என்பது உண்மையா இல்லையா?
எவனோ ஒரு ஆண் கற்காலத்தில் என் முன்னோராக இருந்தபோது ஏற்படுத்தப்பட்டதில் சதியெல்லாம் இருக்கமுடியாது எனலாம். ஆனால் தலைக்குமேல் செயற்கைக்கோள்களைச் சுழலவிட்டுக்கொண்டும் கணினியால் உலகையே கட்டுப்படுத்திக்கொண்டும் இருக்கிற இந்நூற்றாண்டு ஆண் ஒருவன் "பொம்பளைங்க பொம்பளைங்க மாதிரியா இருக்காங்க?" என்று கேட்பதிலும், "ஆம்பளை அப்படித்தானிருப்பான் நீ பொம்பளையா ஓரமா இருந்துக்கோ" எனும்ரீதியில் நடந்துகொள்வதிலும் சதி மட்டுமில்லை, ஆதிக்கத்திமிரும் அத்திமிரில் எந்தப் பெண்ணையும் தன்னை எதிர்க்கமுடியாது செய்துவிடமுடியுமென்ற கொழுப்பும் இருக்கிறது.
அதைக்கொடுத்ததில் காலம்காலமான நம் சமூக ஆயுதங்கள் பலதுக்கும் பங்கிருக்கிறது. அவற்றை விமர்சிக்காமல், யோசிக்காமல் நீங்கள்( நீங்கள் என்பது இங்கு நீங்களே அல்ல) உங்களுக்குத் தேவையான மாற்று எது என்பதையும் கண்டுகொள்ளமுடியாது. குறைகளை அடையாளம் காண்பதே அதை நிவர்த்தி செய்வதற்கான் முதல்வழி. அது குறையென உணரும்போதே நீங்கள் மாற்றைத் தேடவும் ஆரம்பிப்பீர்கள். ஆனால் நமக்குத்தான் உணர்வதே பெரும்பிரச்சினையாக உள்ளதே! கட்டமைக்கப்பட்ட கருத்தாக்கங்களை உடைக்கிறவர்கள் கலாசாரத்திற்கு, மதத்துக்கு, சமூகத்துக்கு, தேசத்துக்கே விரோதிகளாகச் சித்தரிக்கப்பட்டுவிடும் நிலையில்தான் நாம் இன்றும் இருக்கிறோம். எனவேதான் அவற்றைத் திரும்பத்திரும்ப முன்னெடுப்பதும் அவசியமாகிறது. "யாரும் சதியாகவெல்லாம் இதைச் செய்யவில்லை, ஆகையால் பேசுவதை நிறுத்துங்கள்" என்று சொல்லிவிடும்போது நாம் மாற்றை நோக்கி நகர்தலுக்கான சாத்தியங்களையும் சேர்த்தே இழக்கிறோம்.
இந்தப் பேச்சுக்கள் நீங்கள் சொல்லும் புதியன புகுதலை நிச்சயம் ஏற்படுத்தும். அது எப்படியென்றால் அதற்கான நியாயங்களை இச்சமூகம் உள்வாங்குவதன் மூலமும் பின் அதுகுறித்தான விழிப்புணர்வைப் பெறுவதன் மூலமும். அதற்கான யோசனைகளை நாம்தான் முன்னெடுக்க வேண்டும். அது கல்வியின் வடிவில், கலையின் வடிவில், இலக்கியத்தின் வடிவில் எப்படிவேண்டுமானாலும் இருக்கலாம். இந்தப் புதிய சிந்தனைகளை முன்னெடுக்காமல் பதிவிரதைப் பெண்ணையும், தியாகச் செம்மல் பெண்ணையுமே காட்டுவதிலும், ஒருவனுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டதை உணர்ந்து அதற்கான காரணங்களை ஒத்துக்கொள்ளாமல் "நீயும் நானும் அண்ணன் தம்பி, ஒற்றுமையாக இருக்கோணும்" என்ற பசப்புக் கதைகளைப் பரப்புவதிலுமே குறியாயிருந்து மேற்குறிப்பிட்ட வடிவங்கள் வலியுறுத்த நேர்கையில்தான் அவற்றின்மீதான கடுமையான விமர்சனங்கள் எழுகின்றன. அப்படியான விமர்சனங்களைப் புரிந்துகொள்ளூம் ஒருவன்/ஒருத்தியே மாற்றங்களை நோக்கியும் நகரமுடியும். அந்த மாற்றம் என்பது குறைந்தபட்சம் தன்னளவில் மேற்சொன்ன அதே பொதுவான கருத்தாக்கத்தை முன்னெடுப்பதிலிருந்தாவது தடுத்தாட்கொள்ளும்.
நல்லது சிவக்குமார். நிறையப் பேசியாகிவிட்டது. இனி நான் இந்த இடுகையில் மௌனவிரதம் இருக்கப்போகிறேன். அப்படியே எங்கள் காதுகளின்(படிப்பதால் கண்களின் என்று சொல்லவேண்டுமோ) நலனைக் கருத்தில்கொண்டு இனிமேலே மொத்தமாக மௌனவிரதம் இருந்துவிடு என்று யாரும் அங்கிருந்து குரல்விட்டால் மன்னிக்கவும்:)) தற்சமயம் அப்படி முடிவேதும் என்னிடம் இல்லை:))
பின்குறிப்பு:-
///மேலே சொன்ன குடும்ப/சமூக அமைப்பை தவறாகப் பயன்படுத்தி தனது துணையை துன்புறுத்துவது ஆண்களால் பல இடங்களில் நடந்திருக்கலாம். அதே போல அமைப்பைத் தவறாகப் பயன்படுத்தும் பெண்களும் இருந்திருக்கிறார்கள்///
இந்த ஒரு முடிச்சை விரிவாகவும், நிதானமாகவும் முடிந்தால் பிறகொருநாள் பேசி அவிழ்க்கலாம் சிவக்குமார். இப்போதைக்கு உங்களால் வழமையாக முன்வைக்கப்படும் முடிச்சாக அப்படியே இருக்கட்டும் அது:)) ஆனால் அதிலும் எனக்கு வேறு பார்வைகள் உண்டென்பதைமட்டும் சொல்லிக்கொள்கிறேன்.
நன்றி,
இன்னொரு நல்ல நாளாகப் பார்த்துத் தொடரலாம் :-)
அன்புடன்,
மா சிவகுமார்
ஆகா முடிந்துவிட்டதா... :( நான் அருமையானதொரு வாதத்தைக் கேட்டுக்கொண்டிருந்தேன். படித்து என்று வரவேண்டுமோ?
முத்து,
"அறுவை"யை "அருமை" ன்னு எழுத்துப்பிழையோட எழுதீட்டீங்களா:))
இல்லங்க நிஜமாவே மிகவும் ஆச்சரியப்பட்டேன் நிதானமா பொறுமையா அடுத்தவர் மனசு நோகாம
வாதத்தை எடுத்து வச்சீங்க..ரொம்ப
பெருமையா இருந்தது.
நன்றி முத்து.
முத்துலெட்சுமி சொன்னத நானும் சொல்லுறேன்.
//நிஜமாவே மிகவும் ஆச்சரியப்பட்டேன் நிதானமா பொறுமையா அடுத்தவர் மனசு நோகாம
வாதத்தை எடுத்து வச்சீங்க..ரொம்ப
பெருமையா இருந்தது.
//
முன்மொழியிறேன்னு சொல்லியிருக்கனுமோ? சில நாட்களுக்கு முன் தான் படிக்க ஆரம்பித்தேன். சிவக்குமாரின் வாதமும் பல இடங்களில் பளிச்சிட்டன என்பது மறுக்க முடியாத உண்மை. ஒவ்வொரு கேள்வியையும் நீங்கள் கையாண்ட விதம் மிகவும் அருமை.
///சிவக்குமாரின் வாதமும் பல இடங்களில் பளிச்சிட்டன என்பது மறுக்க முடியாத உண்மை.///
ஆம். பதில் சொல்லத் தடைதராத மொழியிலமைந்த அவரின் பின்னூட்டங்கள் எனக்கும் ஆர்வத்தைத் தந்தன.
உங்கள் மறுமொழிக்கு நன்றி காட்டாறு.
நியாயமான கோபங்கள்... நிறைவேறட்டும் உங்கள் ஆசைகள்...
நன்றி உதயகுமார்.
நல்ல பதிவு.
பின்னூட்டமிடாது போகிற என் வழக்கத்தையும், இதே போன்ற வாதங்களில் (இணையத்திலும், பிறவற்றிலும்) ஈடுபட்ட சலிப்பையும் மீற வைத்தவை இப் பதிவும், அதைத் தொடர்ந்து நடந்த வாதமும்.
பெண்ணைத் தனி மனுஷியாகப் பார்க்க யாராலும் முடிவதில்லை. என் தாயார், பாட்டியுடன் நடந்த விவாதங்களிலும் அவர்களது நிலை, பெண் என்பவள் இப்படி இருக்க வேண்டும், அதுதான் உலகத்துக்கு நல்லது என்பதில்தான் இருக்கிறது.
'பாட்டி, நீங்கள் ஓர் இருபது வருடங்களுக்கு முன் நினைத்ததை விட இப்போது நிலைமை மாறி விடவில்லையா, அது போலத்தான் இதுவும் மாறும் நீங்கள் என்ன சொல்லிக்கொண்டிருந்தாலும் சரி' என்று (வெற்றிப்) புன்னகையுடன் விவாதத்தை முடித்தேன்.
நிகழ்ந்த, நிகழப்போகிற மாற்றங்களுக்கு விதை இது போன்ற பதிவுகளும், வாதங்களும்தாம்.
மகிழ்ச்சி!
நன்றி வித்யாசாகரன்.
செல்வநாயகி!'கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும்' என்று சொல்வார்கள். இங்கு கலகம் நடக்கவில்லையென்றாலும், நீங்களும் சிவகுமாரும் பேசிக்கொண்டது சில தெளிவுகளைத் தந்தது.
என்னிடமும் சில கேள்விகள் உண்டு. அதாவது, இங்கு பேசப்பட்ட கற்பு, செயற்கை ஒழுக்கம் மற்றும் காதலும் காமமும் ஓரிடத்தில் மட்டுந்தான் உருவாகுமா? இன்னபிற கேள்விகள். ஆனால், நீங்கள் சொன்னபடி ஒரு படைப்பு தான் சொல்ல வரும் விடயங்களுக்கேற்ற வார்த்தைகளாலேயே கட்டமைக்கப்படுகிறது. அதைத் தாண்டி அது சென்றால் மையப்புள்ளியின் மீதான கவனம் சிதறிவிடுகிறது என்ற உங்கள் கருத்துக்கிணங்க, இந்தக் கேள்விகளைப் பிறிதொரு சமயம் கேட்டு என்னைத் தெளிவுபடுத்திக்கொள்கிறேன். உங்கள் எழுத்தின் வீச்சு அருமையாக இருக்கிறது தோழி!
தமிழ்நதி,
இந்தமாதிரி விவாதங்கள் ஒரு ஒழுங்குமுறையிலும், பேசுபவர்களின் உண்மையான ஈடுபாட்டுடனும் நடக்கும்போது நன்றாகத்தானிருக்கின்றன. அது நம்மிடம் நிறைய நேரத்தையும், பொறுமையையும் வாங்கிவிடுகிறது:)) இந்தமுறை சிவக்குமாருக்கும், எனக்கும் ஒருங்கே அவ்விரண்டும் எப்படியோ அமைந்துவிட்டதென நினைக்கிறேன்:))
உங்களுக்குள் எழும்பியிருக்கும் அதே கேள்விகளை சிவக்குமாரிடம் முன்வைத்து அதற்கும் ஒருபிடி சண்டை பிடிக்கலாமென்று நானும் நினைத்தேன்:)) ஆனால் அது பிறகு எங்கெங்கோ சுற்ற ஆரம்பித்துச் சுழன்றுகொண்டே இருக்குமெனக் கருதியே தவிர்த்தது. அதுமட்டுமல்ல, இங்கு சில சொற்பிரயோகங்கள் சிவக்குமார் முன்வைத்ததை அப்படியே நான் திருப்பிக் கையாண்டிருப்பது அவர் எழுதிய அதே பார்வையில் என் எண்ணத்தைப் புரியவைக்கும் முயற்சியே. எனவே அவற்றில் அங்கங்கு நானில்லை என்பது எனக்கே தெரிகிறது:)) கற்பு போன்ற சொல்லை உபயோகிப்பதில் இப்போது மனதளவில் ஏற்பட்டுவரும் தடையைக் கருதித் தவிர்த்தும் உள்ளேன். இந்தக் "கற்பு' எனும் சொல்லின் வரலாற்றை இராம.கி ஐயாவிடம் கேட்டு அறியவும் வேண்டும் ஒருநாள்.
நீங்கள் இப்போது கேட்க நினைத்தவைகளாய் வெளிப்படுத்தியிருக்கும் குறிப்புகளின் மீதான எண்ணங்களை உங்களுக்கேயான மொழியில் கட்டியெழுப்புங்கள் உங்கள் பக்கத்தில் ஒருசமயம். நானும் அதிலிருந்து புதியதாய் ஏதும் அறிய அல்லது என் கருத்தொன்றின்மீது ஒட்டியிருக்கும் துருவை உதற வாய்ப்பாகலாம் அது.
நன்றி.
தருமி,
///ஒவ்வொரு சொல்லிலும் உங்கள் கோப முத்திரை ///
கோபமான முத்திரை மட்டும்தானா? நியாயமான முத்திரை இல்லையா://
வெறும் ரெளத்திரம் யாருக்குப் பிடிக்கும்; அது வெறும் முரட்டுக் கோபமாகத்தானே போகும். உங்கள் கோபத்தில் இருக்கும் நியாயத்தால்தான் அவைகள் பிடித்தன; பிடித்ததனால்தான் இப்பின்னூட்டமே..
நன்றி தருமி.
உங்களையும் இந்த 'அழகு' ஆட்டத்தில் கலந்துகொள்ள அழைத்திருக்கிறேன். [http://thendral2007.blogspot.com/]
ஆட்டத்தின் விதிமுறைகளுக்கு இங்கே சொடுக்கவும்...
http://elavasam.blogspot.com/2007/04/blog-post.html
முடிந்தால், உங்கள் மின்னஞ்சல் முகவரியை தெரிவிக்கவும்.
சிரமத்திற்கு மன்னிக்கவும்.
உங்களை அழகு விளையாட்டுக்கு அழைத்திருக்கிறேன். முடிந்த போது எழுதவும்.
//பேசுங்கள்...பேசிக்கொண்டேயிருங்கள். மடமையோ, மாற்றமோ அது மதங்களில் இருந்து உருவானதில்லை, உருவாகப்போவதுமில்லை. மதங்களையும் உருவாக்கிய மனித மனங்களில் இருந்தே அவை உருவாயின, உருவாகவும் இருக்கின்றன. பெண்களூக்கு வஞ்சனையில்லாமல் அநீதி வழங்கியதில் எந்த மதமும் சளைத்ததல்ல. ஏனென்றால் வழிபடும் கடவுள்களில் வேற்றுமையிருந்தாலும் பெண்களைப் பற்றிய கருத்தாக்கத்தில்
மதங்களுக்கிடையே மட்டுமில்லை சாதிகளுக்கிடையேகூட வேற்றுமை இல்லை அவ்வளவாக. விருப்பமிருப்பவர்கள் அவற்றைக் கடந்து போகிறார்கள். இல்லாதவர்கள் அங்கேயே நிற்கிறார்கள். ///
பெண்கள் மீதான வன்முறையையும், மத பிற்போக்காளர்களின் பெண் உடல் குறித்தான கருத்துக்களையும் சாட்டையடியாய் அடித்துள்ளன இந்த வரிகள். இந்தியாவில் பெண்களின் மீதான் வன்மூறை என்பது குறிப்பாக தாழ்த்தப்பட்ட பெண்களின் மீதான் வன்மூறை என்பது இரட்டை தாக்குதலாய் வருகிறது.
அசுரன்
அசுரன்,
உங்கள் வருகைக்கு நன்றி.
///தாழ்த்தப்பட்ட பெண்களின் மீதான் வன்மூறை என்பது இரட்டை தாக்குதலாய் வருகிறது///
ஆம். சாதித் திமிரில் மற்றவர்களால் அவர்கள் மீது செலுத்தப்படும் ஆதிக்கம் ஒருபுறம். ஆண் என்கிற அளவுகோளோடு அவர்களின் உடன்வாழ் உறவுகள் செலுத்தும் ஆதிக்கம் எனப் பலவழிகளில் நசுக்கப்படுகிறார்கள் அவர்கள். மகளிர் நலன் பேணும் அமைப்புகள்கூட மேல்தட்டு, நடுத்தரவர்க்கம் தாண்டி இம்மக்களைச் சென்றடையும் நோக்கங்களைப் பெரும்பாலும் கொண்டிருப்பதில்லை என்பது வேதனைக்குரியது. கடந்த மகளிர்தினத்தில் இதை விளக்கும்வண்ணம் நீங்கள் இட்டிருந்த படம்தான் இவ்விடயத்தில் அடிக்கடி எனக்கு நினைவுக்கு வருகிறது.
Post a Comment
<< Home