ஒரு மரணமும் சிலகுறிப்புகளும்
எப்போதும் கால்களில் சக்கரங்களோடு ஓடுகிற வாழ்க்கை ஆகிப்போய்விட்டது நமக்கு. ஏதோ ஒரு கதையில் யாரோ சொன்னதுபோல் "சாலையில் அடிபட்ட குழந்தை இறந்தசெய்தி கேட்டதும், எல்லாத் தாய்மார்களும் பதறிப்போனார்கள், ஓடிப்பார்த்தார்கள், அவரவரும் அது தன் பிள்ளையாய் இருந்துவிடக்கூடாதென்று நினைத்துப் பயந்தார்கள். அப்படியில்லை என்று உறுதி செய்துகொண்டபின்தான் அடிபட்ட குழந்தைக்காய்க் கவலைப்படத் தொடங்கினார்கள்" என்கிற வரிகளில் பொதிந்துள்ள உண்மை வலியது. பெரும்பாலான நேரங்களில் ஒரு சுயநல நதியாய்ச் சுழித்துக்கொண்டோடும் வாழ்வில் நுரைகளிலிருந்து மீண்டு கரைக்கு வரும் நேரங்களும், அங்கிருந்து அதே நதிகுறித்துச் சிந்திக்கச் சொல்லித்தருகிற தருணங்களும் சொற்பமானவை. அப்படியொரு தருணத்தை வழங்கியிருக்கிறது தேன்கூடு சாகரனின் மரண நிகழ்வு. ஒரு நல்ல மனிதரின் அகாலமரணம் தந்த அதிர்ச்சியிலிருந்து அதை எழுதிஎழுதியேனும் மீண்டுவர முயலும் முனைப்புக்களாகப் பல நண்பர்களின் இடுகைகளைப் பார்க்கிறேன்.
எனக்குத் தேன்கூட்டையோ, சாகரனையோ பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் ஒவ்வொரு பூவாய் உட்கார்ந்து எழும் பட்டாம்பூச்சியின் உறிஞ்சுகுழலில் ஒட்டிக்கொண்டு கூடவரும் மகரந்தத்துகள்கள் மாதிரி இங்கு பலரும் இட்டிருக்கும் அவர் குறித்த
செய்திகளைப் படிக்கப்படிக்க அவர் மரணத்தின் பாதிப்பு எனக்குள்ளும் பரவத் தொடங்குகிறது. சிரிக்கிற அம்மாவை மட்டுமே பார்க்கப் பிடித்திருந்த நாட்களில், எந்த இழவுவீட்டிலும் அழும் அம்மாவைச் சகிக்க முடியாமல் முந்தானை பிடித்து இழுத்துக்கொண்டு வெளியேகூட்டிவந்த செயலைச் செய்தபோது அந்த மழலையின் அறியாமையில் எனக்கு இருந்த வயது 3 ஆகத்தானிருக்கும். இதோ அதே வயதில் சாகரன் மகள் வருணிகா. எப்படி எடுத்துக்கொள்வாள் அவள் இதை? அப்பா வாங்கித் தந்த பொம்மைகள், துணிமணிகள்
எல்லாம் இருக்க அந்தப் பொம்மைகளோடு விளையாடி முடித்த களைப்பில் உட்கார விரும்பி அப்பாமடி தேடிப் பின் அது கிடைக்காத சோகத்தைச் சொல்லக்கூடத் தெரியாத வயதில் இருக்கும் அக்குழந்தையின் உணர்வுகளை எப்படி மொழிபெயர்ப்பது? அடுத்தநாள்,
அடுத்தவாரம், அடுத்த மாதம், வருடம் எனத் தன் கணவருடன் சேர்ந்து எத்தனை காலத்திற்கான கனவுகளைச் சுமந்தபடி இருந்தாரோ அந்த மனைவி!
இந்த வலைத்திரட்டிகளை உருவாக்கி நிர்வகிப்பதெல்லாம் எவ்வளவு பெரிய வேலை என்று நினைத்துக்கொள்வதுண்டு. அதை உருவாக்குவதற்காகச் செய்யவேண்டிய உழைப்பும், பிறகு பயன்பாட்டில் விடுகிறபோது ஏர்படுகிற குறைகளைக் கண்காணித்தும் களைந்தும், பாராட்டுகள் வருகிறபோது புன்னகைத்தும், பழிகள் வந்தாலும் பொறுமைகாத்தும் மிகக் கவனமாகச் செயல்படவேண்டிய வேலை இது. அப்படி ஒரு வேலையை விரும்பி எடுத்துக்கொண்ட இந்த 28 வயது இளைஞர் அதோடு நிற்காமல் வேறுபல முயற்சிகளில்
நண்பர்களுக்காகத் தம் உழைப்பைக் கொடுத்தும், ஊக்கப்படுத்தியும் வந்திருக்கிறார் என்பதைப் பரஞ்சோதி, நண்பன் எல்லாம் சொல்வதைக் கேட்க அவர்மீதான மதிப்பு கூடுகிறது. வெறும் திறமையாளராக மட்டுமின்றி மற்றவர்களைப் புரிந்துகொள்கிற, நேசம் பாராட்டுகிற சிறந்த
மானுடப் பண்புகளுக்கும் உரியவராக இருந்திருக்கிறார் என்பதைக் காசி போன்றவர்களின் பின்னூட்டங்கள் எடுத்துக்காட்டுவதைப் பார்க்கும்போது சாகரனின் மரணம் தரும் வலி இன்னுமொரு இனம்தெரியாத ஆழத்துக்குள் இழுத்துப்போகிறது.
வீடுகட்டி முடித்ததன் பின்னால் மீந்த கற்களை மனதில் அடுக்கிக்கொண்டவர்களாய் அடுத்தவீட்டுடனும் அந்நியமாய் வாழப்பழகிக்கொண்ட காலகட்டத்தில், நான் இருக்கும் வெளியொன்றில் எனக்கு மிகஅருகில் சத்தமில்லாது தன் சுவடுகளைப் பதித்துக்கொண்டிருந்த ஒரு சகமனிதரை அவரின் சாவிற்குப்பின்னால்தான் அறிந்துகொண்டிருக்கிறேன். செய்யஒன்றுமற்று வெறுமனே வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்த நாளொன்றிலோ, சில மணித்திலாயங்கள் சுளையாய்க் கையிலிருந்த போது அவற்றைச் செலவழிக்கத் தெரியாது தூக்கத்திற்குக் கொடுத்திருந்த பகலொன்றிலோ சாகரன் பற்றித் தெரிந்துகொண்டிருக்கலாம். மொழிக்கான அவர் உழைப்புக்கும், ஆர்வத்துக்கும் அதே மொழிபேசுபவள் என்னும் முறையில் ஒரு வணக்கம் சொல்லியிருக்கலாம். குறைந்தபட்சம் ஒரு வாழ்த்து அல்லது நன்றியாவது. இப்போது சொல்லத் தோன்றுகிறது, ஆனால் சாகரன் இல்லை.
புன்னகைபுரிந்துவிடமுடியும் தூரத்தில் இன்னொருவர் இருந்தும் நம் உதடுகளைத் திறக்காத மௌனத்திலும், இன்னொருவரிடம் சேர்க்கச் செய்திகள் இருந்தும் உள்ளங்கைதொட்டு உணர்த்திட நீளாத விரல்களின் சோம்பலிலும் நாம் தவறவிடும் தருணங்களில் நமக்குத்
தெரியாமலே தீர்ந்துகொண்டிருக்கிறதா வாழ்க்கை???
இன்று அடக்கம் செய்யப்பட இருக்கும் தேன்கூடு சாகரனுக்கு என் அஞ்சலி.
8 Comments:
//புன்னகைபுரிந்துவிடமுடியும் தூரத்தில் இன்னொருவர் இருந்தும் நம் உதடுகளைத் திறக்காத மௌனத்திலும், இன்னொருவரிடம் சேர்க்கச் செய்திகள் இருந்தும் உள்ளங்கைதொட்டு உணர்த்திட நீளாத விரல்களின் சோம்பலிலும் நாம் தவறவிடும் தருணங்களில் நமக்குத்
தெரியாமலே தீர்ந்துகொண்டிருக்கிறதா வாழ்க்கை???
//
நிச்சயமாக தீர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
ஒவ்வொரு நிமிடத்தின் முக்கியமும் இன்று புரிகிறது.
ஆனால், நாட்கள் பத்து நகர்ந்தால், சோம்பலும் தொற்றிக் கொள்கிறது, உதடுகளும் மூடிவிடுகிறது. இதுவும் உண்மை.
செல்வநாயகி,இருக்கும்போது உணர்ந்துகொள்ளாத மனிதரை அவர் இறந்தபின்னர் தெரிந்துகொண்டதை உங்கள் வார்த்தைகளில் வாசிக்கும்போது எனக்கும் உறுத்தலாக இருக்கிறது.
உங்கள் கடைசிப் பந்தியை வாசித்தபிறகு நாம் இருவரும் ஒரே தடத்தில் சிந்திக்கிறவர்களோ என்று எனக்குத் தோன்றியது. அந்த வரிகள்...
“இந்த ஆறுதல் வார்த்தைகளை நான் பேசவேண்டுமா வேண்டாமா…?” என உங்களில் எவருக்கும் தோன்றினால், தயவுசெய்து பேசுங்கள். இல்லையெனில், பேசவேண்டிய சமயத்தில் பேசாமற் தங்கிவிட்ட வார்த்தைகள் முள்ளாக உள்ளிருந்து கிழிக்கும். மலமாக நாற்றமடிக்கும். யார் கண்டது…? ஒரு புன்னகையில், ஒரு சொல்லில், ஒரு கையின் வெப்பத்தில், ஒரு ஆழமான பார்வையில், ஒரு தலை தடவலில் ஒரு மரணம் தவிர்க்கப்படலாம்."
முழுவதும் வாசிக்க...
http://tamilnathy.blogspot.com/2007/01/blog-post_05.html
http://chella.info/webgypsy/archives/309
//புன்னகைபுரிந்துவிடமுடியும் தூரத்தில் இன்னொருவர் இருந்தும் நம் உதடுகளைத் திறக்காத மௌனத்திலும், இன்னொருவரிடம் சேர்க்கச் செய்திகள் இருந்தும் உள்ளங்கைதொட்டு உணர்த்திட நீளாத விரல்களின் சோம்பலிலும் நாம் தவறவிடும் தருணங்களில் நமக்குத்
தெரியாமலே தீர்ந்துகொண்டிருக்கிறதா வாழ்க்கை???//
இன்னுமொருதடவை எண்ணங்களில் ஒன்றித்திருக்கிறீர்கள்.
//உள்ளங்கைதொட்டு உணர்த்திட நீளாத விரல்களின் சோம்பலிலும் நாம் தவறவிடும் தருணங்களில் நமக்குத்
தெரியாமலே தீர்ந்துகொண்டிருக்கிறதா வாழ்க்கை???//
ம்ம்ம்..உண்மை...அவரது இழப்பில் இது வரை இல்லாத எண்ணங்கள் எனக்குள்ளும் வருவதுண்டு..
உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பர்களே. நேற்று டிபிஆர் ஜோசப்பின் சாகரன் இறுதிப்பயணம் குறித்த இடுகை படித்தபோது மேலும் வருத்தமாக இருந்தது.
//நான் இருக்கும் வெளியொன்றில் எனக்கு மிகஅருகில் சத்தமில்லாது தன் சுவடுகளைப் பதித்துக்கொண்டிருந்த ஒரு சகமனிதரை அவரின் சாவிற்குப்பின்னால்தான் அறிந்துகொண்டிருக்கிறேன். //
I share the same feelings...
நீங்கள் சொல்வது போல் இப்படியொரு நிகழ்வுக்குப் பிந்தான் அவரைத் தெரிந்துகொள்ளும்படி ஆனது மனதுக்கு மிகச் சங்கடமாக இருந்தது தேவ்.
Post a Comment
<< Home