நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Wednesday, January 31, 2007

பின்னூட்டம் ஏன் பிரசுரிக்கப்படவில்லை?

ஒரு நபரின் பின்னூட்டத்தைப் பிரசுரிக்க நிராகரித்துவிட்டு, அதற்கான காரணங்களை

"என் இடுகைகளில் இனிமேல் உங்களின் பின்னூட்டங்கள் பிரசுரிக்கப்படாது. இதற்குக் கடைசியாக நீங்கள் இப்போது இட்டிருக்கிற பின்னூட்டம் காரணமல்ல. செய்வதையெல்லாம் செய்துவிட்டு ஒரு அப்பாவியைப்போல் வந்து கேள்விகேட்டுக்கொண்டிருப்பது தவிர அந்தப்பின்னூட்டத்தின் மொழியில் வேறொன்றுமில்லை பிரசுரிக்க முடியாமல் போகும் அளவு. ஆனால் இந்த முடிவை நான் எடுத்ததற்கு எனக்கு வேறு சில காரணங்கள் உண்டு. அவற்றையெல்லாம் இங்கு விளக்கிச் சொல்லிக்கொண்டிருப்பது ஒரு தெருச்சண்டைக்கு வேண்டுமானால் வழிவகுக்குமே தவிர வேறொரு உருப்படியான பயனும் விளையாதென்பதாலும், அதிலெல்லாம் இயல்பிலேயே எனக்கு ஆர்வமில்லையென்பதாலும் தவிர்க்கிறேன். இதுகுறித்து(ம்) உங்களுக்குத் தெரிந்த மொழியில், முடிந்த இடங்களில் விமர்சனமாகவோ, கதையாகவோ, கதைத்தலைப்பாகவோ, பின்னூட்டமாகவோ, எதிர்வினையாகவோ ஏதாவது எழுத விருப்பமும், நேரமும் இருந்து நீங்கள் எழுதினாலும் எழுதி மகிழவும்"

என்று நான் நாகரீகமாகச் சொன்னதைவிட,

"உங்க கான்செப்டையெல்லாம் புரிந்துகொள்ளமுடியாதபடி எனக்கு மேல்மாடி காலி என்று உங்களுக்குத் தெரியும். இதற்கு கற்றதனால் ஆன பயனென்ன என்று தலைப்பு வைத்ததற்கு ஏதும் ஸ்பெஷல் காரணம் உண்டா? சொன்னால் புரிந்துகொள்ள முயற்சிப்பேன், just curious."

என்ற அந்த நபரின் இந்தப் பின்னூட்டத்தைப் பிரசுரித்தும்விட்டு,

"புரியாமல்தான் என்தொடரை வரிக்குவரி விடாமல் படித்துவிட்டு அதில் நான் சொல்லியிருக்கும் கருத்தை நக்கலடித்து "பெண்ணியமும் சில புடலங்காய்களும்" என்று தலைப்பு வைத்துக் கதை ஏழுத முடிந்ததா? என்தொடர்பான தனிப்பட்டவிடயங்கள் முழுதையும் என் தனி வலைப்பக்கமான நிறங்களில் என்குறித்தான இடுகைகளில் நான்
சொல்லியிருப்பதிலிருந்து எடுத்துக்கொண்டுபோய், கதையில் ஒருபாத்திரத்திற்குப் பொருத்தி அதன்கணவர் ஒரு தண்ணீர்பார்ட்டியில் அந்தமனைவியோடு குடும்பம் நடத்துவது கடினம் என்று சொல்லிப்புலம்புவதாக எழுதி ஒரு பெண்பதிவருக்கு எதிராகக் கீழ்த்தரமான அரசியல் செய்யமுடிந்ததா? ஒரு பொதுவெளியில் எழுதவந்தால் தன்னைப்போலவே எழுதும் இன்னொரு சகபெண்பதிவரிடம் ஒரு மனிதனாக நடந்துகொள்ளக் கற்றுக்கொண்டு வரவும். பிறகு என் தலைப்பான "கற்றதனால் ஆன பயன் என்ன?" என்பதன் பொருளை ஒரு பதிவராகக் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கலாம்"


என்று நான் அவரின் பின்னூட்டத்திற்குப் பதிலும் எழுதியிருக்கலாம்தான். ஆனால் செய்யவில்லை. ஏனெனில் இதுவரை அப்படி எதுவும் எழுதி எனக்குப் பழக்கமில்லாதது ஒரு காரணம். கிட்டத்தட்ட மூன்றுவருடங்களாக இணையத்தில் அங்கங்கு எழுதிவந்திருக்கும் எனக்குப் பெண் நண்பர்களைப்போலவே ஆண் நண்பர்களும் என் எழுத்துக்களை விமர்சித்தும்,
கருத்துச்சொல்லியும் ஊக்கப்படுத்தியே வந்திருக்கிறார்கள். அப்படியிருக்கத் தரமற்ற தாக்குதல் தொடுத்த இந்த ஒரு நபருக்காக இதெல்லாம் எழுதத்தேவையில்லை, புறக்கணிப்பு மட்டுமே போதும் என்று நினைத்தது இன்னொரு காரணம்.


என் நட்சத்திரவாரத்தில் "கொழுகொம்பாகும் கொடிகள்" எனும் இடுகையிலிருந்து ஆரம்பித்தன இவரின் பின்னூட்டங்கள் என் இடுகையில். வெறும் நக்கலாகத்தான் இவரின் பின்னூட்டம் தொடங்கியது என்றாலும் கருத்துரிமை என்ற அளவில் அனுமதிக்கப்பட்டே இருக்கிறது அங்கு. எழுத்துசுதந்திரம் என்ற பெயரில் தான் நினைக்கும் எதையும்
எழுதமுடியும் என்று நினைக்கிற இந்த நபருக்கு அவரின் கருத்தின்மீது இன்னொருவர் அதுவும் ஒரு பெண்பதிவர் காரமான விமர்சனம்வைத்தால் பொங்கிஎழுவார். என் "கொழுகொம்பாகும் கொடிகள்" இடுகையில் இன்னொரு ஆணைத் தனிப்பட்டமுறையில் கிண்டலடித்த இவரின் செய்கையைத் தவறென்று நான் சுட்டியபோது அதை ஒத்துக்கொள்ளும் நேர்மையின்றி எனக்குப் புத்திமதி சொல்வதிலேயே குறியாகவும் இருந்தார். அந்தப்பதிவை இப்போது படிக்கும் யாரும்கூட அங்கிருக்கும் இவருடனான என்
உரையாடல்களில் உள்ள இவரின் மொழியை உணரமுடியும். அந்தமொழியையும், அதற்குப்பின்னிருந்த வெறும் திமிரையும் நான் பல்லைக்கடித்துக்கொண்டோ அல்லது பல்லை இளித்துக்கொண்டோ பொறுத்துப்போகவேண்டும் என அவர் நினைத்திருக்கலாம். அப்படிச் செய்யாமல் எதிர்க்கருத்துக்களை வைத்தபோது, திருப்பி அவற்றிற்குப் பதிலைக் கருத்துக்களாகவே வைக்காமல் என் தனிப்பட்ட விடயமொன்றை இழுத்துக் கடைசியாக ஒற்றைவரிப் பின்னூட்டமிட்டபோது அதை நிராகரிக்கவேண்டிவந்தது எனக்கு. http://selvanayaki.blogspot.com/2006_07_01_archive.html


இப்போது சக்தியில் நான் எழுதிய தொடரில் இறுதியாகத் தான் இட்ட பின்னூட்டத்தை நான் பிரசுரிக்கவில்லை என நீதி பேசித் தன்பக்கத்தில் ஒரு பதிவெழுதி அந்தப் பின்னூட்டத்தையும் பிரசுரித்துக்கொள்ளும் நேர்மை ஏனோ அன்று என் 'கொழுகொம்பாகும் கொடிகள்" இடுகையில் இவருக்கு இருக்கவில்லை. அது இப்படி நீதிபேசுவதற்கான தகுதியுள்ள பின்னூட்டமாக இல்லாதிருந்ததை ஒருவேளை இவர் உணர்ந்திருக்கலாம். ஆனாலும் சும்மாயிருக்கவில்லை. என் பதிவில், வேறொரு நண்பருக்கான பதிலில் ஒட்டுமொத்த சமூகம்சார்ந்தவிடயங்களையும் முன்னிறுத்தி நான் பயன்படுத்திய "கட்டுடைத்தல்" என்கிற ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு, என் இடுகையில் நான் காட்டியிருந்த ஆணையும் என்
நட்சத்திரவாரத்தையும் எள்ளி நகையாடி ஒரு பதிவு எழுதினார். அதில் ஒன்றும் எனக்கு இப்போதும் பிரச்சினையில்லை. ஏளனங்களும் எழுத்துக்கள்மீதான விமர்சனமாக வரும் என்பது புரிந்தேயிருக்கிறேன். ஆனால் எழுத்துக்கள்மீதான தாக்குதல்களுக்கும், எழுதுபவர்மீதான தாக்குதல்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அதை நேர்மையும்,
தரமும் உள்ள யாரும் செய்யவிரும்புவதில்லை. இந்த நபருக்குப் பிரச்சினை என் எழுத்துக்கள் என்பதைவிட இவரை வெற்றிலைபாக்குவைத்து அழைத்துக்கொள்ளாத நான்தான் என்பதை அடுத்த பதிவில் நிரூபித்தார். அதற்கு அடுத்து உடனடியாக அதே சூட்டில் ஒரு கதையெழுதி அதில் ஒரு ஆணோடு முறையற்ற பாலுறவு வைத்திருக்கிற ஒரு
பெண்பாத்திரத்தைப் படைத்து, அதற்குத் தெய்வநாயகி எனப் பெயரிட்டு, "தெய்வநாயகி என்றொரு ஆட்டக்காரி" எனத் தலைப்பிட்டுத் தமிழ்மணமுகப்பில் உலவவிடவேண்டிய தேவையும்
இவருக்கு ஏற்பட்டது. அந்தப் பெண்பாத்திரத்தை இங்கு பலரும் என்னை செல்வா என அழைப்பதை நினைவூட்டும் வகையில் தெய்வா என்று அழைக்கும் ஆர்வமும் ஏற்பட்டது. இதன் பின்னுள்ள கீழ்நிலை வன்மத்தை நான் உணர்ந்தே இருந்தேன். யாரும் கேள்வி கேட்கமுடியாதபடி கேட்டாலும் கதைதானே இது, கதைக்கு நான் எப்படியும் தலைப்பிடுவது என்
உரிமை, அதுவும்கூட அதேபெயரா என்ன? வேறுபெயர்தானே?" என்று கேட்டு நீதிமானாகிவிடும் தந்திரமும் இவருக்குத் தெரிந்திருக்கிறதென்பதையும் அறியமுடிந்தது.


ஆனாலும் இவற்றாலெல்லாம் பாதிப்படையும் மனநிலைஉடையவள் அல்ல என்பதாலும், என்மீது குறிவைத்துத் தந்திரங்களோடு நிகழ்த்தப்படும் தாக்குதல் பொதுவில் எழுதிச்சொல்லவேண்டிய அளவு தேவையில்லாதது என்பதாலும் என் பதில் புறக்கணிப்பாகமட்டுமே இருந்துவந்திருக்கிறது. என்பார்வைகளை என்நோக்கில் நான் தொடர்ந்து எழுதியும் வந்திருக்கிறேன். எல்லாம்தாண்டி நீண்டநாட்களுக்குப்பின் நான் சக்தியில் தொடர் எழுத ஆரம்பித்ததேன். "வேலைக்குப்போதல், வீட்டிலிருப்பது போன்ற பிரச்சினைகளில்,
குழந்தைகளுக்காக ஒருவர் வீட்டிலிருக்கவேண்டிய தேவை வரும்போது அது எப்போதும் பெண்ணாக இருப்பதையே நம் சமூகம் விருபுகிறது அல்லது திணிக்கிறது. பொருளாதார ரீதியாக மனைவியின் பணி குடும்பத்திற்குப் பயன் தருமென்ரால் தம்பதியருக்குள் முடிவுசெய்து ஆண் வீட்டிலிருப்பதில் என்ன தவறு? அப்படித் தாங்கள் விரும்பியே முடிவெடுத்து வாழும்
மனநிலை சில தனிப்பட்ட ஆண்களுக்கு இருந்தாலும் அவர்களைக் கிண்டலடிக்கவும், எள்ளிநகையாடவும் சமூகத்திற்கு என்ன உரிமை இருக்கிறது?" என்ற கேள்வியை முன்வைத்து
என் கொழுகொம்பாகும் கொடிகள் இடுகையைச் சுட்டினேன். அந்தக் கொழுகொம்பாகும் கொடிகள் பதிவில் மோகன் தாஸ் என்கிற இந்த நபர் மட்டுமில்லை, உதயகுமார், மாயா போன்ற நண்பர்கள்கூட என்கருத்தை விமர்சித்து மாற்றுக்கருத்தை எழுதியே இருக்கிறார்கள். ஆனால் இந்தநபரைப்போல் ஒரு தனிப்பட்ட ஆணைக் கிண்டலடித்து அல்ல.


நான் அவ்விடுகையைச் சுட்டியவுடன் என் தொடரின் இரண்டாம்பாகத்தில்,
இவர் பின்னூட்டமிட்டார். அதைப் பிரசுரித்தே இருக்கிறேன். அதிலும் கருத்தென்று எதுவும் எழுதாமல் வேறெதற்கோ அலைகிற ஆர்வம் மட்டுமே தெரிந்தது. . மாற்றுக்கருத்தெழுதிய மற்ற நண்பர்களுக்கு மதித்துப் பதில் எழுதியபோல இவருக்கு நான் எதுவும் செய்யவில்லை. எனக்குமட்டும் புரியும்படி என்பெயரைச் சிறிதுமாற்றிக் கதைக்குத் தலைப்பாக வைத்து அரசியல்நடத்தும் ஒருவரை மதிக்கத் தேவையில்லாதது என் தனிப்பட்ட உரிமை என்றாலும், கருத்துரிமை என்ற அளவில் இவரின் பின்னூட்டத்தைப் பிரசுரித்தே இருக்கிறேன் அங்கு.

இந்தத் தொடரில் நான் முன்வைத்த சிலவிடயங்களுக்குக் கடுமையான மாற்றுக்கருத்துக்களை செந்தில்குமரன், சிவக்குமார், ஆசாத் போன்ற நண்பர்கள் என் பதிவிலேயே வந்து எழுதினார்கள். நானும் முடிந்தவரை என்தரப்பை அவர்களுக்கு எழுதினேன். என் கோணம் முற்றிலும் அவர்களின் கோணமில்லாதபோதும், நான் அவர்களின் கருத்துக்களை
நகைச்சுவையாகவும், கடுமையாகவும் மறுத்தே இருந்தபோதும் அவர்கள் யாரும் உடனே "பெண்ணியமும் சில புடலங்காய்களும்" என்று இந்த மோகன்தாசைப்போல் கதை எழுத நினைக்கவில்லை. அந்தக்கதைக்குள், என் சமீபத்திய "தோழிமார் கதை" பதிவில் என்னைப்பற்றி நான் சொல்லியிருப்பவையிலிருந்து, இதற்குமுன்பு எங்கோ சொல்லியிருந்த நான்
வீட்டிற்கு ஒரே பெண் என்ற தகவல்வரை சேகரித்து, அதேவிடயங்களுடன் ஒருபாத்திரத்தைப் படைத்து அதன் கணவன் தண்ணீர்பார்ட்டியில் அந்த மனவியைப் பற்றிப் புலம்பியதாக ஒரு காட்சி வைக்கவேண்டிய தேவையும் என்னோடு கருத்துக்களால் முரண்பாடுகொண்ட மற்ற எந்த நண்பருக்கும் ஏற்படவில்லை. அவர்களின் கண்ணியம் அப்படி.


என் இடுகைகளிலேயே நான் விமர்சித்திருந்த கருத்துக்களைச் சொன்னவர்களான நண்பர் ஓகை, சந்தோஷ் போன்றவர்களும் இங்கிருக்கிறார்கள். என் இடுகைகளுக்கு வராதபோதும்,
வேறு இடுகைகளில் சொல்லியிருந்த அவர்களின் கருத்துக்களுக்காக நான் என்பதிவில் விமர்சனம் சொல்லியிருந்தபோதும் அவர்கள் யாரும் இப்படி ஒரு தரம்தாழ்ந்த தாக்குதல் என்மீது நடத்தவில்லை. இவர்கள் மட்டுமின்றி என் தொடர் போய்க்கொண்டிருந்தபோதே போட்டித்தொடர் எழுதித் தன்பார்வைகளை முற்றிலும் வேறுதளத்தில் வைத்திருந்த நண்பர்
அரைபிளேடும் எங்களின் கருத்துக்களைத் தாக்கியிருந்தாரே தவிர எங்களைத் தனிப்பட்டமுறையில் எந்த இடத்திலும் தாக்கியிருக்கவில்லை. அவர்பதிவிலேயே போய் தங்கள் விமர்சனங்களைச் சொல்லியிருந்த மற்ற பெண்பதிவர்களான உஷா, பொன்ஸ் போன்றவர்களிடம் மரியாதையுடனும், கன்ணியத்துடனும் தன் கருத்துக்களை எழுதியிருந்தார். இன்னும்
சொல்லப்போனால் அவர் வைத்த கருத்துக்கள் எனக்குத் துளியும் பிடிக்காதவையெனினும், அவரின் நகைச்சுவைநடைக்காக அத்தொடர் முழுதையும் நானும் ஆர்வத்துடனே படித்து வந்தேன். கடைசியாக அவர் நிறைவு செய்தபோது, தன் மனைவி ஊரிலிருந்து வந்துவிட்டதால் தன்தொடரைப் பயந்துகொண்டு நிறுத்துவதாக அவர் எழுதியிருந்தபோது வாய்விட்டுச் சிரித்து ரசித்தேன். பூரிக்கட்டை வரப்போகிறது என்று ஒரு நண்பர் அவரைப் பின்னூட்டத்தில் நகையாடியபோது "நானெல்லாம் பூரிக்கட்டையில் அடிவாங்கமாட்டேன், ஏனென்றால் பூரிக்கட்டையை ஒளித்துவைக்க எனக்குத்தெரியும்" என்று அரைபிளேடு பதில் சொன்னபோது அந்த டைமிங் நகைச்சுவைக்காக மட்டும் அவருக்கு ஒரு பாராட்டு எழுதக்கூட நினைத்தது உண்டு.


வேறு பலவிடயங்களிலும் எனக்கு நேர் எதிர் கருத்துநிலைகள் கொண்டவர்களாக நான் கருதுகிற எஸ்கே, செல்வன் கால்கரிசிவா போன்றவர்களும்கூட என்னுடைய வேறுசில இடுகைகளுக்கு வந்து தன் கருத்துக்களை எழுதியே போயிருக்கிறார்கள். இவைதவிர என்னைத் தொடர்ந்துவாசித்து தம் கருத்துக்களை வழங்கி உற்சாகப்படுத்துகிற பிற
நண்பர்களும் உண்டு. நான் போய் அவர்களுக்கும், எனக்கு அவர்களும் பின்னூட்டமிட்டிருக்காத இன்னும் பலரையும்கூட நான் விரும்பிப் படித்தேவருகிறேன். என்னினும் இளையவர்களானாலும் சிலவிடயங்களில் என்னை ஆச்சரியப்படுத்துகிறவண்ணம் எழுதும் ஜி. ராகவன், கண்ணபிரான் போன்றவர்களுக்கெல்லாம் சொல்லப்படாத நட்பு ஒன்றும் என்
மனதில் உண்டு. இப்படியானதுதான் பதிவுலகில் என் அணுகுமுறை. இதுவரை மட்டுறுத்தப்படவேண்டிய அளவில் தேவையில்லாத பின்னூட்டங்களை நான் யாருக்கும் எழுதியதில்லை. நானும் யாருடையதையும் தேவையில்லாமல் மட்டுறுத்தியதும் இல்லை. மூன்றுவருடங்களாய் இங்கிருப்பினும், அந்த இருப்பை என்னோடு உரையாடியும், ஊக்கப்படுத்தியும் எனக்குச்
சுகமானதாக்கிய மற்ற பதிவர்களுக்கு பொதுவில் நன்றிசொல்வதற்கென்று ஒருஇடுகையும் இதுவரை நான் எழுதியதில்லை. இச்சந்தர்ப்பத்தில் அந்த நன்றியை மற்றவர்களுக்குச் சேர்த்துவிடவும் ஆசைப்படுகிறேன்.


இப்படியிருக்க மோகன்தாஸ் என்கிற இந்த ஒரு பதிவருக்கு மட்டும் "இனிமேல் ஒட்டுமொத்தமாக உங்கள் பின்னூட்டம் என் இடுகைகளில் புறக்கணிக்கப்படும்" என்று நான் சொன்னதற்குக்காரணம் என்னளவில் நான் கீழ்த்தரமானதென்று கருதும் அவரின் செயல்களே. ஒரு பெண்பதிவர் வெளியில் தைரியமாகச் சொல்லி நிரூபிக்கமுடியாதவகையில் கதை
என்று தந்திரமாக அதற்குப் பெயரிட்டு அவர்மீதான ஏளனங்களை எடுத்துவிட்டுக்கொண்டிருப்பதைத் தொடர்ந்து செய்யமுடியும் ஒரு பதிவரை என்னளவில் ஒரு மனிதராகக்கூட நான் மதிக்காததாலேயே அவருக்கு அப்படியொரு முடிவெடுத்தேன். அத்தனையையும் செய்துவிட்டு என் தொடரின் கடைசிப் பாகத்தில் அது எழுதப்பட்டு நிறையநாட்களுக்குப்பிறகு வல்லி என்பவர் படித்துப் பாராட்டி ஒருபின்னூட்டமிட்டவுடன், இவர் வந்து என் கான்செப்ட் தனக்குப் புரியாதது எனவும், ஆனால் என் தலைப்பை நான் அப்படி வைத்ததற்கு என்ன காரணம் என்றும் கேட்டு எழுதியபோதுதான் நான் அப்படி முடிவெடுத்தேன். எல்லோருடைய கருத்து சுதந்திரத்தையும் மதிப்பது தேவையானது என்பதை உணர்ந்தவள்தான் நான். அதேசமயம்
தன்னை மதிக்காத ஒரு பெண்பதிவரைக் கீழ்த்தரமாகத் தாக்கிக் கதை என்ற போர்வையில் ஒளிந்து எழுதமுடியும் ஒருவரின் மனநிலையைக் குட்டிச்சுவரில் உட்கார்ந்துகொண்டு போகிறவருகிற பெண்களை விசிலடித்தும், இளக்காரமாக எதாவது பேசியும் மகிழும் ஒருமனநிலையாக மட்டுமே பார்க்கமுடிந்தது என்னால். அவ்விதத்தில் ஒருமனிதனாகக்கூட
என்னால் மதிக்கப்படமுடியாத ஒருவரின் பின்னூட்டத்தை என் இடுகைகளில் பிரசுரித்து அவரின் கருத்துரிமையைக் காப்பாற்றிக்கொண்டிருக்கத்தேவையில்லை என்று முடிவுசெய்தேன்.


இந்த எரிச்சலில் அவர்பாணியில் வழக்கம்போல் கதை எழுதித் தன் அரிப்பைத்தீர்த்துக்கொண்டாலும் எனக்கு அதுபற்றிக் கவலை இல்லை என்றும் சொல்லியிருந்தேன். ஆனால் கதைவழித்தாக்குதல் அலுப்பைத்தந்திருக்கவேண்டும் இவருக்கு. எனவே வழக்கமான தன் பாணியைவிட்டுத் திடீரென நியாயம் பேசும் நீதிமானாக என் தொடரின் பெயரையே வைத்து ஒரு பதிவெழுதி நான் பிரசுரிக்காத பின்னூட்டத்தைப் பிரசுரித்தும்கொண்டார். அதில் அவர் எழுதியிருப்பவைதான் மிகப்பெரிய காமெடி. நான் ஏதோ புத்தகத்தைப் படித்துவிட்டுப்
பெண்ணீயம் எழுதுவதாகவும், இவரையெல்லாம் மூடன் என்று சொல்லிக்கொண்டு என்னை ஒரு அறிவாளியாகக் காண்பித்துக்கொள்வதாகவும் எழுதியிருக்கிறார். அதுமட்டுமில்லை
படிமமாகவும் கோர்வையாகவும் எழுதுவதால் நான் அறிவாளி கிடையாது என்று ஒரு தீர்ப்பும் வழங்கியிருக்கிறார். போயும்போயும் இந்த மோகன்தாஸ் என்கிற பதிவர் என்னை அறிவாளி என்று ஒத்துக்கொள்வதால் எனக்கொரு லாபமோ, அவர் ஒத்துக்கொள்ளாததால் எனக்கொரு நட்டமோ வரப்போவதில்லை, அதைவிடுங்கள்.


அடுத்த காமெடி என்னவென்றால் தான் நக்கலாக எழுதினாலும்கூட அது ஸ்ட்ரிங்க் தியரிப்படி பெண்ணீயத்தின் இன்னொரு பரிமாணம் என்றும், தான் ஒன்றும் அறிவில்லாதவன் கிடையாது என்றும் தனக்குத்தானே சொல்லிக்கொண்டிருக்கிறார். இவர் அறிவாளியாகவும், நான் அறிவில்லாதவளாகவுமே இருந்துவிட்டுப் போகட்டும் அதனாலென்ன? ஆனால் அவரின் அறிவிலிருந்து பெண்ணீயத்தின்
இன்னொரு பரிமாணத்தையாவது கற்றுக்கொள்ளலாம் என்று என்னை மாதிரி அறிவிலிகள் அவர் எழுத்துக்களை நோண்டிப்பார்த்தால் அங்கு பெண்ணீயம் என்ற தலைப்பில் அவர் எழுதிவைத்திருப்பவை செல்வநாயகி என்கிற பதிவரை மட்டம் தட்டியவை மட்டுமே. ஒருவேளை ஸ்ட்ரிங்க் தியரிப்படி 2007 ஆம்வருடம் இணையத்தில் பெண்களைப் பற்றி எழுதும்
செல்வநாயகி என்கிற பதிவரை மட்டம் தட்டிக்கொண்டிருப்பதுமட்டும்தான் பெண்ணீயத்தின் இன்னொரு பரிமாணமா? ஸ்ட்ரிங்க் தியரி படித்த என் நண்பர்கள் உதவவும்:))


இன்னுமொரு காமெடி அவர் அந்தப்பதிவில் எழுதியிருப்பது. "முகமூடிகளை எல்லோரும் அணிந்துகொண்டிருக்கும் இந்தப் பதிவுலகில் தான் மட்டும் முகமூடியில்லாதிருப்பது தவறாக இருக்கிறது" என்கிற சுயசோகம். அது உண்மைதான். முகமூடி இல்லாதவர்தான் அவர். முகமூடி யாருக்குத் தேவைப்படும்? ஒருமுகம் உள்ளவருக்கு. வேறேதேனும் செய்யும்போது
தன்னை யாரும் கண்டுபிடிக்கமுடியாதபடி முகமூடி தேவைப்படும் ஒரு முகமுள்ளவருக்கு. ஆனால் கைவசம் முகங்களே பல உள்ள ஒரு நபர் நேரத்திற்குத் தகுந்தபடி மாட்டிக்கொள்ள முகமூடி எதற்கு? முகத்தையே ஒன்றைக் கழற்றிவிட்டு, இன்னொரு முகத்தை அணிந்துகொண்டால் ஆயிற்று. தாக்குதல் நடத்தக் கதாசிரியர் முகம். நியாயம் கேட்க நீதிமான் முகம் இப்படி...... தான் எழுதுவதை எல்லாம் இந்த அவசர வாசிப்பில் யார் நினைவில் வைத்திருக்கப்போகிறார்கள் என்கிற நினைப்பிலோ அல்லது தானே நினைவில் வைத்துக்கொள்ளமுடியாத மறதியிலோ இவர் பேசுவதில் எத்தனை முரண்பாடுகள்?


டில்லிக்குக் குடிபெயர்ந்திருக்கும் மங்கை என்கிற பதிவர் அங்கு ஒரு தமிழர் இன்னொரு தமிழரைப் பார்த்தாலும் தமிழில் பேசாமல் இந்தியில் பேசுவதாக ஆதங்கப்பட்டபோது அங்கே ஆஜராகும் மோகன்தாஸ் "உங்க மெண்டாலிட்டியை மாத்திக்கிட்டு வாழப்பழகவும்" என்று புத்திமதிகளை மங்கைக்கு அல்ளிவீசுகிறார். வீசிவிட்டு ஓடிவந்து மெண்டாலிட்டி மாற்றப்படுமா என்று ஒரு பதிவு எழுதினார். அதில் திருச்சியிலிருந்து புனேவுக்கு ரயிலேறிப்போனதில் தன் பழைய மெண்டாலிட்டி மாறிப்போய்த் தான் எதையும் சரியாகப் பார்க்கக் கற்றுக்கொண்டதகவும், பார்வைகள் திருந்திப்போனதாகவும் சொல்லிவிட்டு மங்கையெல்லாம் டில்லியிலிருந்துகொண்டு தமிழ்நாட்டு மெண்டாலிட்டியிலேயே இருப்பதால்தான் அப்படிப் புலம்புகிரார் என்கிற மறைபொருளிலும் எழுதியிருந்தார். அதே மோகன்தாஸ் இப்போது அமெரிக்காவில் இருக்கும் நான் என் மெண்டாலிட்டி மாறிப்போய் அமெரிக்கப் பார்வையில்
பெண்கள் பிரச்சினையை எழுதுவதாக ஒரு சான்றிதழை அவரே கொடுத்துவிட்டு அதைத் தவறு என்கிறார். இந்திப் பிரச்சினையில் திருச்சியிலிருந்து புனே அல்லது டில்லிக்குப் போவதால் இவரின் மெண்டாலிட்டி மாறிப்போகிறது. எனவே டில்லியிலிருக்கும் தமிழர்கள் பிற தமிழர்களுடனும் இந்தி பேசுவது சரி என வாதிடுவார். வாதிடுவது மட்டுமில்லை. அதுகுறித்துத் தம் ஆதங்கத்தைத் தம் பதிவில் எழுதுபவர்களுக்கும் ஓடிப்போய் போதனையை ஆரம்பிப்பார். ஆனால் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு வந்தாலும் பெண்கள்
பிரச்சினைகள் மீதான பார்வையில் மெண்டாலிட்டி மாறக்கூடாது என்று எனக்குப் புத்திமதி சொல்லிக்கொண்டிருக்கிரார் இப்போது. இங்கு வீட்டிலிருக்கும் மனைவி, வீட்டிலிருக்கும் கணவன் என்ற பேதமின்றி மக்கள் இயங்குவதைக் குறிப்பிட்டு நான் எழுதினால் "அமெரிக்க மெண்டாலிட்டியில் எழுதுவது" என்று முத்திரை குத்தி அது சரியான பார்வையல்ல என
எடுத்தியம்புவார். இங்கு எல்லோரும் குருடர்களாயிருப்பதால் இப்படியெல்லாம் எழுதி ஒற்றைக்கண் உடைய நான் அரசாள்வதாக உதாரணம் சொல்வார். அதுவும்கூட இந்த நியாயம் பேசும் நீதிமான் வேடத்தில்தான். மற்ற நேரங்களில்தான் இருக்கிறதே கதாசிரியர் வேடம்.


சரி , மற்றவர்கள் குருடர்கள். ஒற்றைக்கண் உள்ள நான் கண்டதையும் எழுதி அரசாள்கிறேன். இரண்டு கண்களும் உடைய இவர் என்ன செய்கிறார் என்பதைப் பதிவுலகின் பல இடங்களிலும் தேடிப்பார்த்தால் எந்தப் பதிவரின் முக்கியமான விடயம் குறித்த இடுகையிலும் தர்க்கரீதியான வாதங்களை இவர் வைத்ததற்கான தடயங்களைக் கண்ணுக்கெட்டியதூரம்வரை காணவில்லை. முடிந்தவரை அடுத்த பெண்பதிவர்களை மட்டம் தட்டுவது. முடிகிறபோதெல்லாம் தான் மேதாவி என்று சொல்லிக்கொள்வது. மட்டம் தட்ட இவர் அதிகம் தேர்ந்தெடுப்பது பெண்பதிவர்கள்தான் என்றாலும், பாலபாரதிக்கும் ஒரு நீதிபோதனை வகுப்பு எடுத்தேயிருக்கிறார். மங்கையைப்போலவே மும்பையில் உதவிகேட்டபோது
இன்னொரு தமிழர் தன்னிடம் இந்தியில் பதில்சொன்னதாகவும், அது புரியாமல் தான் அவரைத் தமிழில் கெட்டவார்த்தையில் திட்டியபிறகு அதே தமிழர் தமிழில் பதில்சொன்னார் என்றும் தன் அனுபவத்தைப் பதிவுசெய்திருந்த பாலபாரதிக்கு "கெட்டவார்த்தையில் திட்டினீர்களா? நீங்களெல்லாம் ஒரு பத்திரிக்கையாளரா?" என்கிற ரீதியில் புத்திமதி இவரிடமிருந்து. ஆனால் கதாசிரியர் வேடம் பூண்டு சகபெண்பதிவரை முடிந்தவரை இழிவுபடுத்தி எழுதுகிற இந்த நியாயவான், நேர்மையான முறையில் தான் செய்ததை எழுதி, தவற்றைத் தவறு என்று
ஒப்புக்கொள்ளமுடியும் துணிச்சலும்கொண்ட ஒரு பத்திரிக்கையாளருக்குக் கண்ணியமொழியைக் கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்ததுதான் காமெடி. இப்படியெல்லாம் மங்கை, பாலபாரதியை இந்திவிடயத்தில் புத்திமதி சொல்லித் திருத்த முயன்ற இதே பதிவருக்கு, " இந்தி எதிர்ப்பு என்பது என்ன? அது ஏன் முன்னெடுக்கப்பட்டது? அதற்கான காரணங்களாகத்
தமிழ்சமூகத்துக்கு ஏற்பட்டவை என்ன?" என்பதுபோன்ற பல கருத்தாழமான விடயங்கள் கொண்ட கட்டுரையைப் பரிந்துரைத்துப் படிக்கச்சொல்லி நண்பர் சங்கரபாண்டி கொடுத்தபோது, "படித்தேன்" என்கிற ஒற்றைச் சொல்லோடு சரி. வேறேதாவது அதைப்பற்றி மூச்சு விடவேண்டுமே. குருடனாயில்லாதவர், ஒற்றைக்கண்ணாக இல்லாமல், இரண்டு கண்களும் கொண்டவர் இதுமாதிரியான நேரங்களில், தனக்குத்தெரியும் என தான் அடிக்கடி பீற்றிக்கொள்ளும் ஸ்ட்ரிங்க் தியரிப்படி இன்னொரு பரிமானத்தையோ, கேம்தியரிப்படி இன்னொரு தீர்வையோ யாருக்கும் காட்டாமல் கண்களை இறுக்க மூடிக்கொள்வார்.


சரி, தெரிந்ததையெல்லாம் எழுதிக்கொள்ளட்டும் என்று அவரின் நீதிபேசும் இடுகைக்கும் அமைதியாகவே இருந்தால் மீண்டும் "தமிழ்மணவிவாதக்களமும் பெண்ணீயமும்" என்று தலைப்பிட்டு ஒரு பதிவெழுதியிருக்கிறார். அதில் விவாதக்களத்தில் மட்டுறுத்தப்பட்டதென்று சொல்லி இவர் எழுதியிருக்கும் பின்னூட்டத்தில் மீண்டும் என்மீதான தாக்குதலும், இவரின் பின்னூட்டம் என் இடுகையில் பிரசுரிக்கபடாததையும் சொல்லும்விதத்தில் நீதிப்பேச்சும். தொடர்ந்து என்னைச்சுட்டித் தன் பின்னூட்டங்கள் பிரசுரிக்கபடாததையும் சொல்லி நீதி
ஓலமிடும் இந்த நபருக்காக இல்லையெனினும், பார்க்கிறவர்கள் இந்த ஓலம் மட்டுமே உண்மையென நம்பிவிடாமல் இருப்பதற்காகவேனும் இத்தனையையும் சொல்ல நினைத்தே இப்பதிவு எழுத நேரிட்டது.


கடைசியாக இவர் எடுத்துப்போட்டு எழுதியிருக்கும் என் கருத்துக்கள் இரண்டும் நான் மனிதராகக்கூட மதிக்காத இவரையெல்லாம் கணக்கில்கொண்டோ, அல்லது பொதுவாகவோகூட சொல்லப்படவை அல்ல. நான் மதிக்கும் மற்ற பதிவர்களில் இரண்டு பேருக்கு அவர்கள் என்னைப்பார்த்து வைத்த கேள்விகளுக்குப் பதிலாக அவர்களைப் பெயர்
சொல்லி அழைத்து எழுதியவை. அதிலும் ஒன்று தமிழ்மண விவாதக்களத்தில் எழுதப்பட்டதுகூட அல்ல. சக்தியில் என் தொடரில் "இக்காலப் பெண்கள் சமையல் செய்வதைக்கூட இழிவாகக் கருதிக்கொண்டு வேலைக்குப்போவதை மட்டும் பெண்விடுதலை என்கிறார்கள்" என்ற பொருளில் சொன்ன செந்தில்குமரனுக்கு நான் வைத்த பதிலில் "அப்படியெல்லாம்
சொல்லவேண்டியதில்லை, சமையலில் அதுவும் கணவனுக்குச் செய்து பரிமாறுவதில் சங்கத் தமிழச்சி ஒருவருக்கு இருந்த காதல் எங்களுக்கும் உண்டு" என்று சொல்லிக்கொண்டது. அங்கு எழுதப்பட்ட ஒன்றை இங்கு எடுத்துப்போட்டு அதைத் தன்போன்ற ஒரு நபருக்கும் சேர்த்து நான் சொன்னதாகத் தானே நினைத்துப் பதில்சொல்லவேண்டிய அளவுக்கு இருக்கிறது ஏதோ ஒரு அரிப்பு.

இன்னொரு கருத்தும், "வீட்டில் சண்டைபோடு, வெளியில் வா" என்று வெறுப்பை வளர்க்கும்விதமாகவே இங்குபலர் பெண்களுக்கு எழுதுவதாக வருத்தப்பட்ட சிவக்குமாருக்கு "அப்படியெல்லாம் இல்லை சிவக்குமார், அன்பான தாம்பத்தியம் கண்டு கரைகிற மனதும் எங்களுக்கு உண்டு" எனும் பொருளில் எழுதியது. அதையும் சம்பந்தமில்லாது எடுத்துப்போட்டு
நான் இப்படி ஜல்லியடிப்பதை என் வாடிக்கையாக வைத்திருக்கிறேன் என்று சொல்லும் இவரைப்பார்த்தால் எனக்குச் சிலவேளைகளில் பாவமாகவும் இருக்கிறது. சரி, என் ஜல்லிகளையெல்லாம் புறம்தள்ளிவிட்டுத் தன் காமம் மற்றும் காதல் கதைகளிலெல்லாம் தனக்குத் தெரிந்த கேம் தியரி, ஸ்டிர்ங்க் தியரி எல்லாம் புகுத்திப் புதியபரிமாணம் காட்டும் கருங்கல் (ஜல்லிக்கு எதிர்ப்பதம் இதுதானே மக்களே) பதிவராக இவர் இருக்க வாழ்த்துக்கள். ஜல்லிகளை ஒதுக்கிவிட்டுக் கருங்கல் போடும் இவர் கூடவே கிரிப்டோகிராபி, ஆர்ட்டிபீசியல் இண்டலிஜென்ஸ் போன்ற அறிவியல் சிமெண்டும் போட்டு நாளைக்கு நம் சுஜாதாவைப்போல் (இதில் உள்குத்து என்று யாரும் சிரிக்கக்கூடாது, அறிவியல் கதைன்ன்னா என்னைமாதிரி ஒற்றைக்கண் ஆளுகளுக்கெல்லாம் தெரிஞ்ச உதாரணம்) ஒரு அறிஞராகவும் வாழ்த்துக்கள்! கூடவே இன்னும் ஏதாவது தார் ஊற்றி உலகுக்கு ஒரு புதிய
சாலை அமைக்கவும் வாழ்த்துக்கள். யார் அமைச்சா என்ன சாலை அமைஞ்சா சரி.


"நீங்கள் உங்களுக்கு முதலில் நேர்மையாயிருக்கவும்" என்று சொல்லி என்னைமாதிரி நேர்மையற்ற பாவிகளைக்காக்க அவதாரம் எடுத்திருக்கிறார் இந்தப் பின்நவீனத்துவ புத்தர். தான் பொழுதுபோகாமல் பார்த்த படங்களுக்கெல்லாம் விமர்சனமென்றும், இன்னபிறவுமாக ஒரு நாளைக்கு 20 பதிவுகள் எழுதி வலையேற்றிவிட்டு, மீதிநேரத்தில் செல்வநாயகி என்கிற பதிவர் தனக்கு நேர்மையாக இருக்கிறாரா, அடுத்தவருக்கு நேர்மையாக இருக்கிறாரா என்று கண்காணிப்பும் செய்கிற இந்தப் புத்தர், மாதம் பிறந்தால் சம்பளம் தந்து தனக்கு மூன்றுவேளை சோறுபோடும் தன் முதலாளிக்காவது நேர்மையாக இருக்கிறாரா என்று கொஞ்சம் சுயநேர்மையையும் சோதித்துக்கொண்டால் நல்லது.

எனக்குத் தோன்றிய ஒரே ஆதங்கம், அடுத்தவர்களுக்கு ஒழுக்கத்தையும், நேர்மையையும் சொல்லிக்கொடுத்துக்கொண்டும் அப்படியில்லாத என்போன்றவர்களையெல்லாம் கண்டுபிடித்து உலகுக்குக் காட்டிச் சேவையும் செய்யும் இவ்வளவு ஒழுக்கமும், நேர்மையும் கொண்ட இந்த நபர் தன் படத்தைப் போட்டுக்கொண்டு ஆற்றிவரும் இம்மாபெரும் பணியைப் பார்த்துப்
புளகாங்கிதம் அடைய அவர் உயிரோடு இல்லை. பாவம் சேகுவரா!

32 Comments:

At 3:51 PM, January 31, 2007, Blogger வெற்றி said...

என்ன சொல்வது என்றே தெரியவில்லை.(:.

எதிர்க் கருத்துக்களைச் சொல்வதில் தப்பில்லை. எப்படிச் சொல்வது என்கின்ற பண்பு தெரிந்திருக்க வேண்டும்.

 
At 6:08 PM, January 31, 2007, Blogger துளசி கோபால் said...

செல்வா,

மனசுக்குச் சங்கடமாப் போச்சு(-:

 
At 6:17 PM, January 31, 2007, Blogger பத்மா அர்விந்த் said...

செல்வநாயகி
பேச தொடங்கும் முன்னேயே நீ பேசுவது தவறு என்றும் கேலியும் கிண்டலும் சேர்த்து பேசக்கற்றுக்கொள்ளுவதையே தடை செய்ய முயலும் சமூகம் இது. அறிவியலாகட்டும் மனிதாபிமானமாகட்டும் ஆணுக்கு இங்கே பெண் ஈடாக முடியுமா என்ன?

 
At 9:29 PM, January 31, 2007, Blogger தமிழ்நதி said...

செல்வநாயகி,
ஆழமான,சிந்தனையைத் தூண்டும் படைப்பாற்றல் மிக்க நீங்கள், இவ்வளவு நீளமான எதிர்வாதத்தை முன்வைத்துப் பேசவேண்டியதன் பின்னாலுள்ள வலி,நிர்ப்பந்தம் எத்தகையதாக இருக்குமென்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

பெண்கள் என்றால் எதையும் சகித்துக்கொள்ள வேண்டும் என்றுதான் எமது சமூகத்தில் சொல்லித் தரப்பட்டிருக்கிறது. அவ்வாறு சகித்துக்கொள்ளாதவர்களை இழிவுபடுத்துவதுதான் மேலாதிக்கவாதிகளின் மனோநிலை. வீதியில் தன்னை முந்திப் போகும் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்செல்லுவது ஒரு ஆணாக இருந்தால் அதைக் கண்டுகொள்ளாதிருப்பதும், அதுவே ஒரு பெண்ணாக இருந்துவிட்டால் அது தனக்கு நேர்ந்த இழுக்கு எனக் கருதி சீறிப் புறப்பட்டு அவளை முந்தியபின் ஆசுவாசம் கொள்வதும்தான் 'ஆண் மனோபாவம்'.(ஆண்களின் மனோபாவம் அல்ல)
இவ்வாறான தன்னிலை விளக்கங்கள் சிலசமயங்களில் தேவைப்படவே செய்கின்றன. எமது ஆசுவாசத்திற்காக எனினும். சக மனிதர் மீதான மனவுளைச்சலுக்கு 'கவலைப்படாதீர்கள்'என்ற சொல் மட்டும் போதாது.ஆனால் அதைத்தான் இப்போது சொல்லவேண்டியிருக்கிறது சகோதரி.

 
At 10:02 PM, January 31, 2007, Blogger இரா. செல்வராசு (R.Selvaraj) said...

செல்வநாயகி, அண்மையில் அதிகமாக வலையுலகில் உலாவ முடியாத காரணத்தால் இந்தப் பதிவின் பின்னணியை முழுதும் உணரமுடியவில்லை. ஆயினும் உங்கள் எழுத்தும் அதன் நிதானத்தின் அழகும் உணர்ந்தவன் என்னும் முறையில் இப்படியான ஒரு பதிவை நீங்கள் இடவேண்டிய சூழலுக்காக வருந்துகிறேன்.

பெண்ணியம் குறித்து நீங்கள் வைக்கும் கருத்துக்களின் கோணங்கள் சிலசமயம் கண்திறக்க வைப்பனவாக இருக்கின்றன என்பது தான் உண்மை. சாதாரணமாகத் தான் இருக்கும் சிந்தனையின் ஊடே அடியில் ஊறிக் கிடக்கும் ஆதிக்க அழுக்கை உணர வைப்பதில் இருக்கிறது உங்கள் எழுத்தின் சக்தி.

தொடர்ந்து ஒலிக்கட்டும் உங்கள் குரல்.

 
At 10:21 PM, January 31, 2007, Blogger VSK said...

இவ்வளவு விவரணையாக எழுத வேண்டுமானால், எந்த அளவுக்கு காயம் பாட்டிருக்க வேண்டும் மனது, எனப் புரிந்து கொள்ள முடிகிறது.

சில சமயங்களில்,, இது போன்ற பதிவுகளும் அவசியமாகித்தான் போகிறது!

மனம் அமைதி பெற வேண்டுகிறேன்.

 
At 11:44 PM, January 31, 2007, Blogger - யெஸ்.பாலபாரதி said...

:((((

 
At 1:43 AM, February 01, 2007, Blogger Thangamani said...

செல்வநாயகி,

தனக்கு நேர்மையாகவும், வாழ்க்கைக்கு உண்மையாகவும் இருக்கவிழைவது என்பது ஒரு தெரிவு. அந்த தெரிவை தேர்ந்தெடுப்பவர்கள் தங்களது சொந்த விருப்பத்துக்காகவும், தேவைக்காகவுமே செய்கிறார்கள். அதில் சமூக அங்கீகாரம், உயர்வு நிலை (?) கோரும் ஏக்கம், தன்னைத் தானே பெருமிதப்படுத்திக்கொள்ளுதல் போன்றவற்றுக்கு இடமிருப்பதில்லை. இப்படியான நோக்கங்கள் இருக்குமிடத்து நேர்மை என்பது ஒரு ஆடம்பரமாக, ஒப்பனையாக, ஒரு வார்த்தையாக, ஒரு செலவாணியாக வெளிப்படுகிறது. நேர்மையென்பது என்ன? எனது கால்கள் வலிக்காமல், எனது நடைக்கு உதவக்கூடிய செருப்பைத் தேர்ந்தெடுப்பதுதான். ஆனால் நடைமுறை பழக்கங்கள், விளம்பரங்கள், நவீன மாடல்கள், குதியுயர்ந்த உயரம் கூட்டும் செருப்புகள், பக்கத்து வீட்டுக்காரர், அலுவலகத்தோழர் இப்படி பல(ர்) செருப்புகள் மனதில் கிடக்க ஆயிரம் செருப்புகள் அடுக்கப்பட்டிருக்கும் கடையில் நேர்மை என்பது கருத்துத்தாகவே இருக்க அதிகம் சாத்தியமுள்ளது.

உங்களது பதிவுகளில் மிக எளிய, நேரடியான மொழியில் உங்கள் நேர்மையைப் பிரதிபலிக்கிறீர்கள். காற்றோட்டம் இலைகளை அசைப்பதைபோல அது எங்களை அசைக்கிறது. அது புதிய காற்றோட்டத்தைப் பிரசவிக்கிறது. உங்கள் கருத்துகளில் புதுமை மிளிர்வதாக நாங்கள் நினைக்கவேண்டும் என்பதற்காக அதை நீங்கள் எழுதுவதில்லை; வாழ்க்கையைப்பற்றிய தரிசனம் புதிதானதாக அல்லாமல் பழையதைச் சுமந்து வருவதில்லை என்ற அனுபவமாக அதை உணர்கிறோம். அதற்காக நன்றி பாராட்டுகிறோம்.

பலசமயங்களில் ஏரிக்கரையோரச் சாலையைக் கடக்கும் அட்டைப்பூச்சிகளை, நத்தைகளைப் பார்க்கும் போது நான் வியப்படைகிறேன். அவைகளில் பல சாலையோடு சாலையாய்த் தேய்ந்து இறந்துபோகின்றன. ஆயினும் அவற்றை மறுபடியும் மறுபடியும் சாலையைக் கடக்கச் செய்வது எது? அதை சகலபாதுகாப்பு பட்டைகளையும் இறுகக்கட்டிக்கொண்டு, தலைக்கவசமணிந்து, நாம் செய்யும் ஜயண்ட் வீல் ஹார்மோன் விளையாட்டுகளோடு யாராவது ஒப்பிட்டால் என்ன செய்வது? இன்றைய நிலையில் பெண்கள் தமிழ்ச் சூழலில் பேசுவதும் எழுதுவதும் பெரும் குற்றச்செயல் தான். நத்தைகள் சாலையைக் கடப்பது போன்ற குற்றச்செயல். ரோசாவசந்த், எழுத்து என்பது என்பது ஒரு குற்றச்செயல் என்று ஒரு மேற்கொள் ஒன்றைக் காட்டியிருந்தார். ஆம் பெண்களுக்கும், மற்றைய ஒடுக்கப்பட்டச் சாதியினருக்கும் எழுத்து என்பது குற்றச்செயல்தான். விடுதலையுணர்வும், நேர்மையும், வாழ்க்கையைப்பற்றிய தரிசனமும் இத்தகைய குற்றச்செயலைத் தூண்டுவதைக் கண்டு வியப்படையவே செய்கிறேன். உங்கள் விடுதலை உணர்வும், நேர்மையும் உங்களைக் காப்பாற்றும்; அதைத் தவிர ஒருவரை காப்பாற்ற வேறு எவை இருக்கின்றன?

உங்களுக்கு என் நன்றிகள்.

 
At 3:23 AM, February 01, 2007, Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

செல்வா,

ஒரு ஆவணமாகப் பதிவு செய்து வைத்தது நல்ல விதயம். இப்போது நீங்கள் எழுதியிருப்பதையும் புலம்பல் என்றோ புண்பட்ட மனம் இடுகையிட்டு ஆற்றிக்கொள்கிறது என்றோ சொல்வதையும் எதிர்பார்த்தேன். கூடவே, சால்ஜாப்பு சொல்வதையும் எதிர்பார்த்தேன். எதிர்பார்ப்புகள் பொய்க்கவில்லை. :)

பேசுவதே பெரிய விதயமென்று சொல்லும் சமூகமில்லையா..

-மதி

 
At 3:54 AM, February 01, 2007, Blogger மெளலி (மதுரையம்பதி) said...

நான் தங்களது பதிவுகளை அவ்வளவாக படித்ததில்லை என்றாலும்...உங்களது எழுத்திலிருந்து தங்களது வலி தெரிகிறது.....

 
At 7:06 AM, February 01, 2007, Blogger சுந்தரவடிவேல் said...

எந்த வலையுலகிற்கு வந்தபின்னர் மாற்றுத் தோற்றங்களைக் கண்டுகொண்டு வியப்படைந்து வருகிறேனோ அதே வலையுலகில்தான் ஆதிக்க வன்மத்தையும் அதன் பரிகசிப்பையும் காண்கிறேன். உயிர்ப்பான கருத்துத் தளங்கள் அத்தனையும் ஒரு தொடர்ந்த மாறுதலில் இயங்கிக்கொண்டேயிருக்கும். நம்புவோம்!

 
At 8:24 AM, February 01, 2007, Blogger -/சுடலை மாடன்/- said...

//என் இடுகைகளிலேயே நான் விமர்சித்திருந்த கருத்துக்களைச் சொன்னவர்களான நண்பர் ஓகை, சந்தோஷ் போன்றவர்களும் இங்கிருக்கிறார்கள். என் இடுகைகளுக்கு வராதபோதும்,
வேறு இடுகைகளில் சொல்லியிருந்த அவர்களின் கருத்துக்களுக்காக நான் என்பதிவில் விமர்சனம் சொல்லியிருந்தபோதும் அவர்கள் யாரும் இப்படி ஒரு தரம்தாழ்ந்த தாக்குதல் என்மீது நடத்தவில்லை. இவர்கள் மட்டுமின்றி என் தொடர் போய்க்கொண்டிருந்தபோதே போட்டித்தொடர் எழுதித் தன்பார்வைகளை முற்றிலும் வேறுதளத்தில் வைத்திருந்த நண்பர்
அரைபிளேடும் எங்களின் கருத்துக்களைத் தாக்கியிருந்தாரே தவிர எங்களைத் தனிப்பட்டமுறையில் எந்த இடத்திலும் தாக்கியிருக்கவில்லை. அவர்பதிவிலேயே போய் தங்கள் விமர்சனங்களைச் சொல்லியிருந்த மற்ற பெண்பதிவர்களான உஷா, பொன்ஸ் போன்றவர்களிடம் மரியாதையுடனும், கன்ணியத்துடனும் தன் கருத்துக்களை எழுதியிருந்தார். இன்னும்
சொல்லப்போனால் அவர் வைத்த கருத்துக்கள் எனக்குத் துளியும் பிடிக்காதவையெனினும், அவரின் நகைச்சுவைநடைக்காக அத்தொடர் முழுதையும் நானும் ஆர்வத்துடனே படித்து வந்தேன். கடைசியாக அவர் நிறைவு செய்தபோது, தன் மனைவி ஊரிலிருந்து வந்துவிட்டதால் தன்தொடரைப் பயந்துகொண்டு நிறுத்துவதாக அவர் எழுதியிருந்தபோது வாய்விட்டுச் சிரித்து ரசித்தேன். பூரிக்கட்டை வரப்போகிறது என்று ஒரு நண்பர் அவரைப் பின்னூட்டத்தில் நகையாடியபோது "நானெல்லாம் பூரிக்கட்டையில் அடிவாங்கமாட்டேன், ஏனென்றால் பூரிக்கட்டையை ஒளித்துவைக்க எனக்குத்தெரியும்" என்று அரைபிளேடு பதில் சொன்னபோது அந்த டைமிங் நகைச்சுவைக்காக மட்டும் அவருக்கு ஒரு பாராட்டு எழுதக்கூட நினைத்தது உண்டு.//

இதைவிட தெளிந்த மனமுதிர்ச்சியுடனும், பக்குவத்துடனும் வலைப்பதிவில் இயங்கும் ஒருவரை நான் பார்த்ததில்லை. இப்படிப் பட்ட உங்களை தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தி வருபவர்களை எந்த வகையில் சேர்ப்பது என்று தெரியவில்லை.

இங்கு சொல்லப் பட்டுள்ள எத்தனையோ பதிவுகளை நான் படித்ததில்லை. ஆனால் நீங்கள் எழுதியுள்ள இந்த இடுகையில் தொனிக்கும் நேர்மையை வைத்து என்ன நடந்தது என்று புரிந்து கொள்கிறேன். நீங்கள் பதிவை எழுதியதற்காகவே உங்களைப் பாராட்டுகிறேன். இது பெண்ணியம் மட்டுமல்லாமல் மற்ற எல்லாக் கருத்துக்களுக்கும் பொருந்தும்.

தொடர்ந்து துணிச்சலுடன் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். அவை வெற்றியடைகின்றன, மனமாற்றங்களை நிகழ்த்துகின்றன என்பதுதான் உண்மை.

நன்றி - சொ. சங்கரபாண்டி

 
At 9:40 AM, February 01, 2007, Blogger இளங்கோ-டிசே said...

செல்வநாயகி, வலைப்பதிவுகளில் -எவரும் ஒவ்வாத கருத்துக்களை வைக்கும்போதுகூட- மிகுந்த நிதானத்துடனும், பிறரைக் காயப்படுத்தாதும் பதிலளிப்பவர்கள் என்று நான் யோசித்துப்பார்க்கும்போது நீங்கள், தங்கமணி என்று சில நண்பர்கள்தான் உடனே நினைவுக்கு வருவார்கள். அவ்வாறான ஒருவரே விரிவாக ஒரு தன்னிலை விளக்கம் எழுதவரச்செய்கின்ற தமிழ்ச்சூழலை நினைக்கும்போது வலைப்பதியும் சகவலைப்பதிவர் என்ற முறையில் வெட்கித்துத்தான் நிறகவேண்டியிருக்கிறது. மேலே பின்னூட்டத்தில் தஙகமணி தெளிவாய்ச் சொல்லியிருக்கின்றார்....
/இன்றைய நிலையில் பெண்கள் தமிழ்ச் சூழலில் பேசுவதும் எழுதுவதும் பெரும் குற்றச்செயல் தான். நத்தைகள் சாலையைக் கடப்பது போன்ற குற்றச்செயல். ரோசாவசந்த், எழுத்து என்பது ஒரு குற்றச்செயல் என்று ஒரு மேற்கொள் ஒன்றைக் காட்டியிருந்தார். ஆம் பெண்களுக்கும், மற்றைய ஒடுக்கப்பட்டச் சாதியினருக்கும் எழுத்து என்பது குற்றச்செயல்தான். விடுதலையுணர்வும், நேர்மையும், வாழ்க்கையைப்பற்றிய தரிசனமும் இத்தகைய குற்றச்செயலைத் தூண்டுவதைக் கண்டு வியப்படையவே செய்கிறேன். உங்கள் விடுதலை உணர்வும், நேர்மையும் உங்களைக் காப்பாற்றும்; அதைத் தவிர ஒருவரை காப்பாற்ற வேறு எவை இருக்கின்றன?/
அதைத்தான் நானும் உங்களுக்கு இந்தத் தருணத்தில் சொல்ல விழைகின்றேன். நன்றி.

 
At 10:29 AM, February 01, 2007, Blogger ரவி said...

:((((((((

 
At 10:38 AM, February 01, 2007, Blogger மங்கை said...

சமீபத்தில் சின்னப்பிள்ளை பற்றிய ஒரு பதிவில் அவரின் கருத்துக்களை படியுங்கள்...ஹ்ம்ம்ம்ம்...என்ன சொல்ல..

வருத்தமாகத்தான் இருக்கிறது...

 
At 12:55 AM, February 02, 2007, Blogger செல்வநாயகி said...

வருகை தந்து, வாசித்துக் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

ஒரு தனிப்பட்ட நபரை முன்னிறுத்தியதாயினும், அதன் பின்னணியில் அந்தத் தனிப்பட்ட நபர் தாண்டி நம் சமூகவெளியில் பெண்கள் சந்திக்கும் சங்கடங்களின் ஒரு வடிவைப் புரிந்துகொள்ளவே வேண்டி நின்றது இப்பதிவு. அது உங்களைப் போன்றவர்களால் புரிந்துகொள்ளப்பட்டது நிறைவைத் தருகிறது. இந்த விடயத்தையும் பலகோணங்களில் அளந்து புதிய கருத்துக்களை நேரம் எடுத்து எழுதி உதவியிருக்கும் நண்பர்களுக்கு இன்னொரு நன்றி.

உளைச்சல், குழப்பம் வேண்டாம் என்றும், இதன் பின்னால் நிறைய வருத்தப்பட்டிருப்பேன் என்றும், எனக்காகப் பிரார்த்திப்பதாகவும் எழுதியிருக்கிற நண்பர்களின் எனக்கான அன்பையும், அக்கறையையும் நன்கு உள்வாங்கிக்கொண்டேன். நெகிழ்தலும், நெகிழ்த்தலுமே வாழ்வின் ஆகக்கூடிய பயன்கள் எனும் பார்வையில் உங்கள் பின்னூட்டங்களால் நெகிழ்ந்தேன் என்பது சரி.

ஆனால் உண்மையில் இந்த நிகழ்வால் நான் வலி, வருத்தம், வேதனை என்று எதுவும் அடையவில்லை. வாழ்வு ஒருசாராருக்கு இயல்பாய் முளைக்கும் செடியொன்று தானாய்ப் பெய்யும் மழையில் செழித்து வளர்வது போலவும், இன்னொருசாராருக்குப் பாறைமேல் விதை ஊன்றி வளர்த்தெடுக்கப்படவேண்டியதாகவும் இருக்கிறது நம் சமூகத்தில். இந்த ஒருசாரார், இன்னொருசாரார் என்பவை பல அளவுகோல்களிலும்
இருக்கின்றன. அவற்றில் ஒன்று ஆண் பெண் என்னும் அளவுகோல். இதை மீண்டும் ஒருமுறை நான் புரிந்துகொள்ள ஒருவாய்ப்பை இந்தவெளி வழங்கியது இந்த நிகழ்வுமூலம். மற்றபடி இந்தப் பதிவு எழுதியதையும் நான் என் மற்ற பதிவுகளை எழுதியதைப் போன்ற மனநிலையிலேயே எழுதினேன். பின்னணியில் பிடித்த இசை ஒலிக்க ஒலிக்க, சன்னலுக்கு வெளியே பெய்த மழையின் சாரல் கன்னத்தில் அடிக்க அடிக்க ஒரு ரம்மியமான சூழலில்தான் இதை எழுதினேன்.

ஆனால் இந்தமாதிரிப் பிரச்சினைகளைச் சந்தித்தும், வெளியே சொல்லக்கூட வாய்ப்புகளற்று, இந்த உலகின் மாபெரும் சனவெள்ளத்தில் எங்கோ ஒருமூலையில் யாருக்கும் தெரியாமல் கசிந்தொழுகும் ஒரு கண்ணீர்த்துளியாய்த் தம் கஷ்டங்களைச் சுமந்தபடியே, வாழ்ந்து முடிந்துவிடும் பெண்களும் இருக்கிறார்கள் என்பதை நினைத்துப்பார்த்தால் ரம்மியங்கள் மறைந்து வாழ்வு கனக்கும்:((

 
At 7:04 AM, February 02, 2007, Blogger பொன்ஸ்~~Poorna said...

//ஒரு ஆவணமாகப் பதிவு செய்து வைத்தது நல்ல விதயம்.//
மதி சொல்வதை வழிமொழிகிறேன்.

"கொழுக்கொம்பாகும் கொடிகள்" பதிவின் அழகில் மயங்கி அதை தாஸுக்கு நான் பரிந்துரைத்ததில் தான் இத்தனையும் தொடங்கியது என்ற முறையில் என் வருத்தங்கள்.. :(((

 
At 10:06 AM, February 02, 2007, Blogger செல்வநாயகி said...

பொன்ஸ்,

இதில் நீங்கள் வருத்தப்பட ஒன்றுமில்லை. இடுகைகளைப் பரிந்துரை செய்வதெல்லாம் மிக இயல்பானதுதான் இங்கு. ஒவ்வொருவரின் சுயஒழுங்கும் அவரவரே முடிவுசெய்துகொள்வதுதான்.

மறுமொழிக்கு நன்றி.

 
At 11:55 PM, February 02, 2007, Blogger Premalatha said...

//இம்மாபெரும் பணியைப் பார்த்துப்
புளகாங்கிதம் அடைய அவர் உயிரோடு இல்லை. பாவம் சேகுவரா//

செல்வா,

யார் உயிரோட இல்லை?

(I need quite a lot of cathing up to do).

 
At 9:23 AM, February 03, 2007, Blogger செல்வநாயகி said...

பிரேமலதா,

இப்படியெல்லாம் கேள்விகேட்கிற உங்களை என்ன பண்ணலாம்னு யோசிச்சுக்கிட்டிருக்கேன் நான்:))

 
At 9:36 AM, February 03, 2007, Blogger thiru said...

செல்வா,

இன்னும் இது தொடர்புடைய பதிவை படிக்கவில்லை. காயம்பட்டிருக்கிறீர்கள் என்பது மட்டும் தெரிகிறது. தோழீ! வேதனையில் துவளாதீர். வேகமாய் எழுந்து முன்னேறுங்கள். தொடர்ந்து உங்கள் சிந்தனைகளை, வேதனைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.

தோழமையுடன்
திரு

 
At 9:56 AM, February 03, 2007, Blogger செல்வநாயகி said...

திரு, பதிவு இல்லை, அது ஒரு சங்கிலித்தொடர்:)) பதிவுகளைப் படிக்கவேண்டும்:)) பல நண்பர்களின் இடுகைகளில் பின்னூட்டங்களைப் படிக்கவேண்டும், எல்லாம் முழுமையாக அறிய:)) இங்கு சுட்டிகள் கொடுத்திருக்கலாம்தான். பிறகு சுட்டிகளே ஒரு பதிவு அளவு வந்திருக்கும்:)) எனவேதான் விடயத்தைச் சுருக்கமாகவும், இது பதியப்படவேண்டும் என்பதற்காக முடிந்தவரையும் எழுதியது.

முன்பே சொன்னதுபோல் வேதனையெல்லாம் இல்லவேயில்லை திரு. பெண்களுக்கெதிராக இன்னும் எவ்வளவோ நடந்துகொண்டிருக்கின்றனவே வேறுவேறு இடங்களில். அவற்றில் ஒரு சிறு கூறாகவே இதையும் அவதானித்தேன். ஆனாலும் உங்கள் வார்த்தைகளில் உள்ள அன்பைப் புரிந்துகொள்கிறேன். நன்றி.

 
At 10:59 AM, February 11, 2007, Blogger ஓகை said...

செல்வநாயகி அவர்களே, எனக்கு உங்கள் பதிவின் பின்புலம் பிடிபடவில்லை. இது தொடர்பான பதிவுகளை படிக்காததே அதற்குக் காரணம். இவ்விஷயத்தில் உங்களுக்கு வலியில்லை என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பது உங்கள் எழுத்தின் தெளிவிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. இதை ஆவணப்படுத்தியதும் சரியானதாகவே எனக்குத் தோன்றுகிறது.

 
At 6:43 PM, February 11, 2007, Blogger செல்வநாயகி said...

நன்றி ஓகை உங்கள் வருகைக்கும், மறுமொழிக்கும்.

 
At 2:08 AM, February 13, 2007, Blogger Osai Chella said...

இன்றுதான் உங்களின் சக்தி பதிவுகள் படித்தேன். அங்கிருந்து இங்கும் வந்திருக்கிறேன். நிறையஎழுதுகிறீர்கள் போல இருக்கிறது. மா சிவா வுக்கான பதில்களையும் பார்த்தேன். பெண்கள் ஏன் தனது புகைப்படங்களை ப்ரொபைலில் போடுவதில்லை,ஏன் அதிகம் பெண்பதிவர்கள் இல்லை என்றெல்லாம் நேற்றுதான் அப்பாவித்தனமாக பொன்ஸ் அவர்களிடம் கேட்டு அவரின் பதில்களால்,எதிர்கேள்விகளால், ஆதங்கங்களால் திணறியது நிசம்! உங்களிடம் ஒரு சில கேள்விகள்

1.எப்படி பெண்ணியம் என்பது ஆணியத்தோடு ஒத்திப்போகிறது?
2. பெண்ணிய வாதிகள் வேலைக்குப் போகும் பெண்களைப் பற்றி சிந்திக்கும் அக்கறை கீழ்த்தட்டு தொழிலாலர்களின் ( அமைப்பு சாரா ) மறுமலர்ச்சிக்கு முக்கியம் தருவதில்லை ஒரு இந்திய சனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்த ஒரு தோழி வருத்தப்பட்டார். இது உண்மையா? வர்க்க பேதங்களின் கீழ் தளத்திலுள்ளோர்களிடம் பெண்ணியம் சம்பந்தமான கருத்துக்கள் சென்றடையவில்லையா?
3. எனக்கு பெண்களை ரொம்பப் பிடிக்கும். நான் ஒரு ஆணிய வாதியாகத்தான் ( ஆனாதிக்க வாதியாகவல்ல!) பெண்ணியத்தை அணுகவேண்டுமா?!
4. Do we need really any "isms" for a personal intimate natural relationship?
5. ஆண்களில் பலர் பெண்ணிய வாதியாக இருக்கும் பொழுது ஆணியத்தின் சார்பாகச் சிந்திக்கும் பெண்களை, பெண்ணியவாதிகள் ஆதரிக்கிறீர்களா?
6. Man is more complimentary to a female than the OPPOSIT என்பது என் கருத்து! அப்படியிருக்கையில் WAR of SEXes என்ற முறையில் பெண்ணியமும் ஆணியமும் சண்டை போடுவ்து பைத்தியக்காரத் தனமாக தெரிகிறது. உங்கள் கருத்து என்ன?

 
At 12:38 AM, February 15, 2007, Blogger செல்வநாயகி said...

ஓசை செல்லா,
உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி. உங்கள் கேள்விகளுக்கான விடைகளை வழமைபோல நீட்டிச் சொல்லவேண்டியிருக்கிறது எனக்கு:)) அவகாசமில்லை. நேரம் அமைகையில் எழுதுவேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

 
At 1:24 AM, February 15, 2007, Blogger Osai Chella said...

அவசரம் ஒன்றும் இல்லை! முதலில் நானே உங்களைப் படித்து முடிக்க புயற்சித்துக் கொண்டுள்ளேன்.என்ன அழகாகஎழுதுகிறீர்கள்! உங்களுடைய ஒரு பதிவைப்பார்த்து நானும் ஒரு பதிவு போட்டாகிவிட்டது! இங்கே

 
At 3:49 AM, February 15, 2007, Blogger தருமி said...

இப்பதிவுக்கு வேதனை இல்லாவிட்டாலும் எரிச்சலாவது அடிப்படைக் காரணியாக இருந்திருக்க வேண்டும். அந்த நிலையிலும் தடுமாறாத எண்ண ஓட்டம் - 'string' -வழக்கமான உங்கள் அழகுத்தமிழில்.
வேதனைப் பட்டிருந்தால் மறந்து விடுங்கள்; எரிச்சல் மீந்து இருந்தால் துடைத்தெறிந்து விடுங்கள்.

 
At 4:25 AM, February 15, 2007, Blogger செல்வநாயகி said...

தருமி,

உங்கள் வருகைக்கும், மறுமொழிக்கும் நன்றி.

 
At 9:34 AM, February 15, 2007, Blogger Santhosh said...

செல்வா மேடம்.
உங்க கஷ்டம் புரிகிறது. இது மாதிரியான லூசுங்களை எல்லாம் அப்படியே லுஸ்ல விடுங்க. இந்த மாதிரி பிறவிங்க எல்லாம் அநாதையா (இல்ல குடும்பம் இருந்தும் அநாதையா?) என்ன இதுங்களுக்கு எல்லாம் சொந்த குடும்ப இல்லையா? ஏன் இப்படி அடுத்தவங்க குடும்பங்களை குறிவைத்து தாக்குகிறார்கள்.

 
At 11:43 AM, February 15, 2007, Blogger ஒப்பாரி said...

//ஆனால் இந்தமாதிரிப் பிரச்சினைகளைச் சந்தித்தும், வெளியே சொல்லக்கூட வாய்ப்புகளற்று, இந்த உலகின் மாபெரும் சனவெள்ளத்தில் எங்கோ ஒருமூலையில் யாருக்கும் தெரியாமல் கசிந்தொழுகும் ஒரு கண்ணீர்த்துளியாய்த் தம் கஷ்டங்களைச் சுமந்தபடியே, வாழ்ந்து முடிந்துவிடும் பெண்களும் இருக்கிறார்கள் என்பதை நினைத்துப்பார்த்தால் ரம்மியங்கள் மறைந்து வாழ்வு கனக்கும்:(( //
உண்மை தான். எனக்கு பழக்கமாகிவிட்ட ஆணாதிக்க மனோபவதிற்க்கு நாண் பலமுரை வெட்கப்பட்டதுண்டு,எல்லாம்ம் மாறவேண்டும்.

 
At 12:44 PM, February 15, 2007, Blogger செல்வநாயகி said...

சந்தோஷ், ஒப்பாரி,

உங்களின் வருகைக்கும் மறுமொழிகளுக்கும் நன்றி.

 

Post a Comment

<< Home