நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Wednesday, March 07, 2007

சுடரோடு நான்.....பாகம் 1

தேன்கூடு சாகரன் ஏற்றிவைத்துப் பின் பல்வேறு நண்பர்களின் கரங்களில் பலநிறங்களில் ஒளிர்ந்துகொண்டிருந்த சுடரை இப்போது கற்பகம் என் கைகளில் தந்திருக்கிறார். ஆசையோடு வாங்கிக்கொண்டேன் என்றாலும் கேள்விகள் கொஞ்சம் பயமுறுத்தவே செய்தன. மூன்று கேள்விகள், அதிலும் முக்கியமாக முதலும் கடைசியும் முழுக்க முழுக்க என்னை இங்கு சொந்தக்கதை எழுதவைப்பவை. எதோ நம்ம பாட்டுக்கு ஒரு மாட்டுவண்டியில
போனமா, நண்பர்களிடம் கொஞ்சம் பின்னவீனத்துவம் படிச்சமான்னு இருக்கற பொழப்பு நன்றாக இருக்கிறது. இதில் என் பேச்சு அனுபவம், கருப்பு கவுன் அனுபவம் என்றெல்லாம் பராக்கிரமங்களை அள்ளிவிட்டு அப்புறம் "மவளே அங்கெயெல்லாம் இப்படியிப்படி இத்தனை பேர வதைச்சு முடிச்சிட்டுத்தான் இப்ப வலைப்பதிவுல எங்களை வதைக்க வந்திருக்கியா?" ன்னு யாரும் வந்தால் என்ன செய்வதென்ற திகில் சிறிது இருக்கவே செய்கிறது. இருந்தாலும் எனைநோக்கி வரும் பூவெல்லாம் (அப்படி எதுவும் வந்தா...) எனக்கு, கல்லெல்லாம் கற்பகத்துக்கு(ஹிஹி) என்று ஒரு உடன்படிக்கை செய்துகொண்டு என் சுயபுராண மூட்டைகளை இன்று உங்கள் தலையில் கட்டுவதற்கு ஆயத்தமாகிறேன்:))

1. நீங்கள் சிறந்த பேச்சாளர் என்பது தெரியும். உங்களுடைய எழுத்துப் பணி மற்றும் மேடைப் பேச்சுகள் பற்றி பகிர்ந்துகொள்ள முடியுமா?.

இதுல எழுத்துப்பணின்னு ஒரு வார்த்தை போட்டுருக்காங்க பாருங்க சும்மா புல்லரிச்சுப் போச்சு எனக்கு. உன்னையெல்லாம் இப்படி யாராவது சொன்னாத்தான் உண்டு, கெடைக்கும்போது கமுக்கமா வாங்கிக்க புள்ளைன்னு மனசாட்சியின் ஓரத்தில் படுத்திருக்கும் சுயநலவாதி சொல்லிக்கொண்டிருக்கிறார். ஆனாலும் அதே மனசாட்சிக்கிடங்குல இன்னொரு ஓரமா கிடக்குற நேர்மைன்னு ஒன்னு இருக்குது பாருங்க, அது உண்மையச்
சொல்லவைக்குது. எழுத்துப்பணி என்பது அமெரிக்கா வந்தபிறகு சிலவருடங்களாய் நான் இணையத்திலும், மிகச்சில அச்சு இதழ்களிலும் எழுதிக்கொண்டிருப்பவைதான். கவிதைகளாகத்தான் எழுதிப்பழக ஆரம்பித்தது. அப்படி எழுதிய கவிதைகள் மற்றும் எழுதி எங்கும் வெளியிடாத சில கவிதைகள் சேர்த்து இந்தியா போனபோது அங்கிருக்கும் இலக்கிய மற்றும் என் பேச்சு ஈடுபாடுடைய நண்பர்களால் கடந்த ஆண்டு "பனிப்பொம்மைகள்"
எனும் தலைப்பில் தொகுப்பாகப் போடப்பட்டது. ஊரில் ஒரு வழக்கறிஞராகவும், பேச்சாளராகவும் இருந்த காலகட்டத்தில் எழுதச்சொல்லிப் பல நண்பர்களும் வற்புறுத்தியே வந்திருந்தாலும் நான் அந்த முயற்சி எதுவும் எடுக்கவில்லை கவியரங்கங்கள் சிலவற்றில் எழுதியிருந்ததைத் தவிர. (இப்ப நீ எழுதவேண்டாம்னு யாரும் கதறுனாலும் கண்டுகொள்ளவா போற நீ --இதுவும் மனசாட்சி)

பேச்சு அனுபவங்கள் பற்றிச் சொல்ல நிறையவே இருக்கிறது (ஆரம்பிச்சுட்டா ஆரம்பிச்சுட்டா). எந்த ஒரு பேச்சு, எழுத்து, இலக்கியத்துறை ஆர்வமும் இல்லாத பிண்ணனிதான் எனக்கு. விளையாட்டாய்ப் பள்ளியில் தமிழாசிரியையின் தூண்டுதலால் பேச்சுப்போட்டிகளில் பங்கெடுக்க ஆரம்பித்து அது பள்ளிதாண்டி வட்ட, மாவட்ட, மாநில அளவுகளில் விரிந்தது. கொஞ்சம் நன்றாகப் படித்துக்கொண்டிருந்த அல்லது படிப்பதுபோல்
பாவ்லா காட்டிக்கொண்டிருந்த நான் இப்படி இதில் முழுமூச்சாய் இறங்கியது என் தலைமையாசிரியருக்கு மட்டும் வருத்தமளித்தது. காரணம் ஒரு கிராமப்புறப் பள்ளியான அதன் மாணவ மாணவிகள் கல்வியில் நிறைய மதிப்பெண்கள் பெற்று விருதுகள் வாங்கிக்காட்டவேண்டுமென ஆர்வமிருந்தது அவருக்கு. அப்படியான தகுதியுள்ளவர்களில் ஒருவராக அவர் என்னையும் கருதிக்கொண்டிருந்தார். அவர் கனவைக் கருக்கிவிட்டு நான்
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய பேச்சுப்போட்டியில் கீழிருந்து பல நிலைகளில் வென்று கடைசியாக மாநில அளவில் முதல்பரிசாகச் சில காசோலைகளையும், சான்றிதழ்களையும், கோப்பைகளையும் வாங்கிக்கொண்டுவந்து காட்டியபோது அவற்றை வருத்தம்பாதி, மகிழ்ச்சிபாதி கலந்துசெய்த மனநிலையோடு வாங்கிப்பார்த்தார். அடுத்த சிலமாதங்களில் பள்ளியிறுதித்தேர்வு முடிவுகள் வந்தபோது நான் பள்ளி அளவில்கூட
இரண்டாவதாகவே வந்தேன். அப்போதும் அவரின் வருத்தத்தை உணரமுடிந்தது.

கல்லூரி வந்தபிறகும் ஊரில் ஒரு போட்டி விடுவதில்லை. அப்போதுதான் கம்பன் கழகங்கள் அறிமுகம். அதில் என் பேச்சால் கவரப்பட்டவர்கள் தமிழகத்தின் பல கம்பன்விழாக்களிலும் பேச அழைப்பு விடுத்தார்கள். வயதாலும் அனுபவத்தாலும் என்னைவிட முதிர்ந்த சீனியர் ஆட்கள் இலக்கியப் பாத்திரங்களை எடுத்துக்கொண்டு பேசுகையில், விவாதிக்கையில் அதற்கு நடுவில் நானும் ஒரு ஆளாக சிட்டுக்குருவியைப்போல் (உருவத்தில்) அமர்ந்திருப்பேன். சீதையத் தீக்குளிக்கச் சொன்ன ராமன் மீதான குற்றச்சாட்டுக்களை வைப்பது, பாஞ்சாலியை
அடகுவைத்த தருமனிடம் என்ன தருமம் இருந்தது என்று கேட்பது, மன்னனிடம் "என் கணவனை நீதிதவறி நீ கொன்றது நியாயமா" என்று கேட்டுப் போராடும் துணிவு இருந்தும், தவறு செய்துவிட்டு வந்த கணவனை ஒருவார்த்தையும் தட்டிக் கேட்காத மனைவியாக இளங்கோவடிகள் படைத்தது ஏன்? என்கிற ரீதியில் பேசும்படியாகப் பெரும்பாலும் எனக்கான தலைப்புகள் அமையும். இவைதவிர இராமாயாணத்தில் தனிப்பட்ட பாத்திரங்கள் என்று
வந்தால் கும்பகர்ணன், குகன், தாரை, மண்டோதரி, ஊர்மிளை என்று தொடரும்.

கைகளில் பெரும்பாலும் குறிப்புகள் இல்லாமல் பேசுவது என் நடைமுறை. அதை சிறுவயதிலிருந்தே கடைப்பிடித்தேன். தொடர்புடைய நூல்களைப் படிப்பது, மனதில் சிந்திப்பது, அதை வெளிப்படுத்துவது இதுவே பழக்கமானது. ஒரு பேச்சுக்கான தயாரிப்பிலும் யாரும் எழுதித் தந்து பேசுவதிலோ, இன்னொருவரின் பார்வையைக் கேட்டு அதை அப்படியே பேசுவதோ ஆர்வம் இருந்ததில்லை. பேச்சுப்போட்டிக்கென்று முதன்முதலாகப் பள்ளியில் மேடையேறியதுமுதல் சுயமான தயாரிப்புத்தான். ஆரம்பகாலத்தில் இது கடினமாக, நிறைய உழைப்பு வேண்டியதாக இருந்தாலும் பொதுமேடைகளுக்கு வந்தபோது இத்துறையில் தொடர் வாய்ப்புகளையும், வெற்றிகளையும் பெற அது பெரிதும் உதவியது. இம்மாதிரி இலக்கிய நிகழ்வுகளில் ஆரம்பத்தில் செய்த பட்டிமன்ற, வழக்காடுமன்ற முறைகள்கூட
எனக்குச் சிலவருடங்களில் அலுப்பைத்தந்தபோது தனிச்சொற்பொழிவாக உரைநிகழ்த்த வந்த வாய்ப்புக்களையே பெரும்பாலும் தேர்ந்தெடுத்தேன். கல்லூரிகள், பள்ளிகள், அரிமா, ரோட்டரி, தமிழ்ச்சங்கங்கள் என்று இந்தப்பட்டியல் நீண்டது. நல்ல கருத்துக்களை மக்களிடம் கொண்டுசேர்க்க ஒரு அருமையான ஆயுதமாகப் பயன்படக்கூடிய பட்டிமன்றங்கள் பலசமயங்களில் வெற்றுக் கேலி கிண்டல் பாணி நகச்சுவைகளால் நிறைக்கப்பட்டு வீணாய்ப் போவதில் எனக்கு விமர்சனங்கள் உண்டு. அப்படி அவை ஆகிவிடாமல் முழுக்க
முழுக்கத் தரமான நடையில் அழகான விவாதம் சார்ந்த மேடையாக மட்டுமே வைத்திருக்கும் நடுவர்கள் என் விருப்பமாக இருந்தது. திரு. தமிழருவி மனியன், திருமதி இள்ம்பிறை மணிமாறன் இருவரும் எனக்கு இதில் ஆதர்சங்கள்.


நீங்கள் பேசியவற்றில், நீங்கள் மிகவும் ஈடுபாட்டுடன் பேசிய ஒரு நிகழ்வு பற்றி சொல்லுங்களேன்.

உடன்பாடில்லாத தலைப்புகளைத் தவிர்த்துவிடுவது, தேர்ந்தெடுத்து நிகழ்ச்சிகளை ஒத்துக்கொள்வது, அம்முறையில் பிடித்து ஒத்துக்கொண்டு பேசும் நிகழ்வுகளை 100 சதவீத அர்ப்பணிப்போடு செய்வது என்று நானே வகுத்துவைத்திருந்த காரணத்தாலும், அப்படிச் செய்கிறபோது அது நல்ல வரவேற்பைப் பெற்றதாலும் நான் பேசிய ஒவ்வொரு நிகழ்ச்சியுமே எனக்கு இனிமையான நினைவாகவே மாறியது. ஆனால் நீங்கள் கேட்பதற்காகச் சொல்லவேண்டுமென்றால் நான் 3 நிகழ்வுகளைச் சொல்ல விரும்புகிறேன்.

1. மண்டல அளவிலான அரிமா அமைப்பாளர்களுக்காகப் பேச்சாளர் பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் மருத்துவர்கள், பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள் உட்பட ஒரு 100 பேருக்கு அப்போதுதான் வழக்கறிஞராகியிருந்த நான் வகுப்பு எடுத்தது.

2. ஒரு பள்ளியின் ஆண்டுவிழாவில் பேசிமுடித்துக் கிளம்பியபோது ஓடிவந்த ஒரு மாணவி எனக்குத் தன் பேனாவைப் பரிசளித்து "அக்கா நீங்க பேசுனது புடிச்சுது" என்று ஒற்றை வாக்கியம் உதிர்த்துப் போனது.

3. பாரதி பற்றி நிறைய ஆய்வு நூல்கள் எழுதியவரும், செக்கோசுலோவோக்கியா மொழியில்
மொழிபெயர்க்கப்பட்டுப் பல ஆயிரம் பிரதிகள் விற்றுத்தீர்ந்த ஒரு நூலை எழுதியவருமான திரு. தொ. மு.சி. ரகுநாதன் இறப்பதற்கு இரண்டு மாதங்கள் முன் அவருக்கு "பாரதி விருது" வழங்கப்பட்ட நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றியவர்களில் நானும் ஒருத்தி. அந்த முதிர்ந்த வயதில் ஏற்புரையாற்றியபோது அவர் பேசியதில் ஒரு பகுதி இது:-

"இங்கு விருதெல்லாம் கொடுக்கறாங்க, எல்லாம் பண்றாங்க. ஆனா நீங்க என் ஊரான திருநெல்வேலிக்கு வந்து என் பகுதியில ஒரு மனிதரை பாத்திரக்காரர் எங்க இருக்காருன்னு கேட்டாச் சொல்லுவாங்க, துணிக்கடைக்காரர் எங்க இருக்காருன்னு கேட்டாச் சரியாச் சொல்லுவாங்க. ஆனா எழுத்தாளர் வீடு எங்கன்னு கேட்டா அது யாருன்னு உங்களக் கேப்பாங்க."

வேட்டியைக்கூட இரண்டுநுனிகளும் சரியாக இருக்குமாறு கட்டாமல் ஒருபக்கம் தூக்கியும், இன்னொரு பக்கம் இறக்கியும் கட்டிக்கொண்டு முதுமையில் ஒட்டிப்போன கன்னங்களுடனும், கண்ணாடிக்குள் உள்ளே தேடவேண்டிய சுருங்கிய கண்களுடனும் அந்தப் பெரியவர் இப்படிப் பேசக் கேட்டது மறக்கமுடியாதது. இப்போதும் நான் பேசிய நிகழ்ச்சிகள் என்று நினைக்க ஆரம்பித்தால் இதைத் தவிர்த்து விட்டு மற்றவை பற்றி யோசிக்க முடியாது.

காசுக்குத் தன்னை விற்றுக்கொள்ளாமல் தன் சமூகத்தின் நிகழ்காலத் தொய்வுக்கு வருந்தி அதன் எதிர்கால வளத்திற்கு ஏங்கும் நல்ல ஆக்கங்களை எழுதுகிற ஒரு படைப்பாளி நம் தமிழ்ச்சமூகத்தில் சரியாக அடையாளம் காணப்பட்டு அவரின் எழுத்துக்கள் உடனுக்குடன் கொண்டாடப்ப்டாமல் போவது நம் சாபம். உயிரோடு வாழ்ந்தபோது பாரதிக்கும் அதே, பாரதியை ஆய்வுசெய்த தொ.மு. சி க்கும் அதே. நாளை ஒரு தொ.மு.சி யை
ஆய்வு செய்யும் மனிதருக்கும் இதே என்று தொடர்வது புரையோடிப்போன நம் அறியாமைப் புண்களின் அடையாளம்:((

9 Comments:

At 11:46 AM, March 07, 2007, Blogger தென்றல் said...

ஆழ்ந்த சிந்தனை, இயல்பாக வரும் உங்கள் எழுத்தோட்டம் என உங்கள் பதிவு எனக்கு பிடிக்கும்.
(இதலாம் ஒரு வரமோ ! )

வாழ்த்துக்கள், செல்வநாயகி !

//
தமிழ்ச்சமூகத்தில் சரியாக அடையாளம் காணப்பட்டு அவரின் எழுத்துக்கள் உடனுக்குடன் கொண்டாடப்ப்டாமல் போவது நம் சாபம்
//
ஆம்! வருத்தம் தரகூடிய உண்மை.

 
At 3:17 PM, March 07, 2007, Blogger செல்வநாயகி said...

வசந்தன்,
என்னதான் இருந்தாலும் உங்களை மாதிரி ஒரு பின்னவீனத்துவ வகுப்பெல்லாம் எடுக்க வராதுங்க:((

//ஆம்! வருத்தம் தரகூடிய உண்மை///

இது நடந்தநேரத்தில் அந்தப் பெரியவர் பேசுகையில் நான் உணர்ச்சிவசப்பட்டேன். அதை அச்சபையில் நா தழுதழுக்கப் பேசும் நிலையில் ஒரு முதிர்ந்த எழுத்தாளரைப் பார்த்தபோது உண்மையில் திரண்ட கண்ணீரை வெளிவிடாமல் கண்களாலேயே விழுங்கிக்கொண்டிருந்தேன்.
கருத்துக்கு நன்றி.

 
At 4:15 PM, March 07, 2007, Blogger தென்றல் said...

மன்னிக்கவும், செல்வநாயகி!

நான் தமிழ் மணத்துக்கு புதுசு!

~ வசந்தம் வசந்தம் வசந்தம்

 
At 4:45 PM, March 07, 2007, Blogger செல்வநாயகி said...

நன்றாகச் சாப்பிட்டுவிட்டு அப்படியே கொஞ்சம் கண்கள் நித்திரை நாடிய நேரத்தில் பின்னூட்டங்களை மட்டுறுத்தினேன் வசந்தம் அப்போது. அதுதான் பிழைநேர்ந்துவிட்டது. பெயரின் கடைசியை n என வாசித்துவிட்டேன். தவறுக்கு வருந்துகிறேன். நீங்கள் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

 
At 7:50 PM, March 07, 2007, Blogger மங்கை said...

//கைகளில் பெரும்பாலும் குறிப்புகள் இல்லாமல் பேசுவது என் நடைமுறை. அதை சிறுவயதிலிருந்தே கடைப்பிடித்தேன். தொடர்புடைய நூல்களைப் படிப்பது, மனதில் சிந்திப்பது, அதை வெளிப்படுத்துவது இதுவே பழக்கமானது//

செல்வநாயகி..உங்க நடை..ஹ்ம்ம்ம்... தெளிவான நீரோட்டம் மாதிரி.. படிக்க சலிப்பு தட்டாத நடை...அருமைப்பா..
(பா..சொல்லாலாம் இல்ல)

 
At 9:29 PM, March 07, 2007, Blogger தமிழ்நதி said...

"காசுக்குத் தன்னை விற்றுக்கொள்ளாமல் தன் சமூகத்தின் நிகழ்காலத் தொய்வுக்கு வருந்தி அதன் எதிர்கால வளத்திற்கு ஏங்கும் நல்ல ஆக்கங்களை எழுதுகிற ஒரு படைப்பாளி நம் தமிழ்ச்சமூகத்தில் சரியாக அடையாளம் காணப்பட்டு அவரின் எழுத்துக்கள் உடனுக்குடன் கொண்டாடப்ப்டாமல் போவது நம் சாபம்."
எவ்வளவு உண்மையான வார்த்தைகள் செல்வநாயகி. நீங்கள் இத்தனை பெரிய பேச்சாளர் என்பது இதுநாள்வரை எனக்குத் தெரியாமற் போய்விட்டது. இன்னும் ஒரு படி மதிப்புக் கூடியிருக்கிறது.

 
At 3:12 AM, March 08, 2007, Blogger செல்வநாயகி said...

மங்கை,
நீங்க தட்டச்ச முடியாதபோதும் படித்துவிட்டுக் கருத்து எழுதுவது நெகிழ்வாக உள்ளது.

தமிழ்நதி,

பலவருடங்கள் ஊர்தாண்டி, மாநிலம் தாண்டி, நாடுதாண்டியெல்லாம் நெறையப் பேரோட பொறுமையச் சோதிச்சு ஒருவழி பண்ணீட்டுத்தான் இருந்தோம். "நம்மூரில் மக்கள் நலம், திருக்குறள், சிலப்பதிகாரம் எல்லாம் நலம், ஏனென்றால் நீ இங்கு இல்லை" என்று அங்கத்தைய நண்பர்கள் மடலனுப்பிவருகிறார்கள்:))

ஆனா நீங்க மதிப்பையெல்லாம் கூட்டாதீங்க, அந்தளவுக்கு ஒன்றுமில்லை:))

 
At 5:24 AM, November 12, 2013, Blogger ஜோதிஜி said...

இரண்டு நாளைக்கு முன் காசி ஆறுமுகம் பெயரிலி என்ற ரமணிதரன் ஒரு பதிவை கூகுள் ப்ளஸ் ல் பகிர்ந்து இருந்தார். எனக்கு அப்போது தான் அவர் தளம் அறிமுகம் ஆனது. இரண்டு நாட்களாக அவர் தளத்தில் ஒவ்வொன்றாக நுழைந்து படித்துக் கொண்டே வர வர எனக்கு உண்மையிலேயே கிலியடித்துப் போனது.

குறிப்பாக தமிழ் எழுத்துரு விவாதங்கள் உங்கள் இடுகை என்று சுற்றிச் சுற்றி மாறி மாறி இரண்டு நாட்களாக ஒவ்வொரு பழைய பதிவுகளாக படித்துக் கொண்டு வருகின்றேன்.

நேரம்கிடைக்கும் போது உங்கள் தளத்தை கொஞ்சம் செப்பனிடலாமே?

தேடி தேடி கண்டுபிடித்து படிக்க கொஞ்சம் அலுப்பாகவே உள்ளது.

ஒழுங்ககாக எழுதபவர்கள் இதில் எல்லாம் அக்கறை காட்ட மாட்டார்கள் என்பது உண்மையோ?

 
At 9:46 AM, November 12, 2013, Blogger செல்வநாயகி said...

அன்பிற்கினிய ஜோதிஜி,

நானே மறந்துபோன என் தளத்தை நீங்கள் வாசித்துப் பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி:)) நீங்கள் சொல்வதுபோல் நான் எழுதிக் கொண்டிருந்த காலத்திலேயே என் தளம் புதுப்பிக்கப்படாமல் இப்படித்தான் கிடந்தது. ஏனென்று தெரியாது, எழுதுவதில் இருந்த ஆர்வம் ஒழுங்குபடுத்துதலில் இருக்கவில்லை. இன்னொன்று மிக்கக் குறைந்த நேரத்தையே வலைப்பதிவுகளுக்குப் பயன்படுத்தி வர முடிந்ததால் அதை எழுதவும், வாசிக்கவுமே செலவிட்டேன்.

இனி மீண்டும் எழுத வரும்போது நீங்கள் சொல்கிறபடி தளத்தைத்தான் முதலில் ஒழுங்குபடுத்த வேண்டும். நன்றி உங்களின் அன்புக்கு.

 

Post a Comment

<< Home