துகள்களின் வெளி
கடந்த ஒருவாரமாக வலைப்பதிவுகளில் பின்னவீனத்துவ வகுப்புகளுக்கு விடாமல் போய்வந்தேன் என்பதையும் வசந்தனின் அறிவியல்பூர்வவகுப்பில் அவரால் நாந்தான் முதல்மாணவியாக அறிவிக்கப்ட்டேன் என்பதையும் பெருமையுடன் அனைவருக்கும் தெரிவித்துக்கொண்டு எனக்குப் பின்னவீனத்துவத்தைப் புரியவைக்கும் வகையில்
அழகாகவும் அருமையாகவும் வகுப்புகள் எடுத்த டிசே, அற்புதன், சுசிந்தன், கும்பரோ பூஜே, வகுப்புகளிலேயே மிகப் பின் நவீனமாக ஒலிப்பதிவு மூலம் சொல்லிக்கொடுத்த வசந்தன், எனக்கு வாழ்த்துச்சொல்லிப் பெருமைப்படுத்திய சயந்தன் எல்லோருக்கும் என் நன்றியைக் கீழேகாணும் கவிதை எழுதித் தெரிவித்துக்கொள்கிறேன்:)) இது எல்லாம் ஒரு கவிதையா என்று யாரும் திட்டவந்தால் அந்தப்பழி பாவமெல்லாம் என் ஆசான்களையே சேரும்:))
பறத்தலும் இருத்தலும் இயல்பாயில்லை
வடிவங்களுக்குள் அடைபட்டுக்கிடக்கிறது சுதந்திரம்
வட்டமாய் சதுரமாய் செவ்வகமாய் நாற்கரமாய்
பலமாதிரிகளுக்குள் திணிக்கப்பட்டிருக்கிறதென்றாலும்
வட்டமே பிரதானப்படுத்தப்படுகிறது இங்கு
ஒருசுடுகாட்டுப் பாடகனின் ராகலயிப்புக்களாய்
தனிமையில் கரைகின்றன விளிம்புகளின் விருப்பங்கள்
குற்ற உணர்வு எதுவுமின்றி
தம்மைத் தக்கவைக்கும் எத்தனங்களோடு
வட்டங்களை ஆள்கின்றன மையங்கள்
வருடங்கள் சுருட்டி யுகங்கள் முடிகின்றன
மையங்களின் நிறங்கள் மாறுகின்றன
விளிம்புகள் மட்டும் விளிம்புகளாகவே
ஒரு தவசியின் மௌனத்தோடு தம் விடுதலைவிண்ணப்பங்களை
மையங்களுக்கு நீட்டி அவை நகரும் திசையெங்கும்
இழுபடும் வஸ்துக்களாய் இருந்ததுபோதும் விளிம்புகள்
நூற்றாண்டுகளின் அடிமைத்தகிப்பை வெளியே துப்பட்டும் அவை
வெம்மையின் எரிப்பு மையங்களைக் கருக்கும்வரை
படரும் நெருப்பில் வட்டங்கள் மறைந்து வடிவங்கள் இழந்து பின்
துகள்களால் நிறையும் இப்பூமி
நீரில்மிதந்தும் காற்றில் அலைந்தும்
பிரபஞ்சத்தின் எத்திசையில் நகரவும்
இலகுவாகலாம் துகள்களின் சுதந்திரம்
ஆனால் வாழ்க்கையை வட்டங்களாகவே வாழ்ந்துகொண்டிருந்த
நீங்கள்
துகள்களின் வெளியைச் சூனியம் என்பீர்கள்.
14 Comments:
வகுப்புக்கள் பிரயோசனமாய்த்தான் இருந்திருக்கின்றது :-).
//வாழ்க்கையை வட்டங்களாகவே வாழ்ந்துகொண்டிருந்த
நீங்கள்
துகள்களின் வெளியைச் சூனியம் என்பீர்கள்//
அசத்தல்.
மற்றொரு சின்ன சந்தேகம்..எனக்கு நேரக்குறைவாகவிருப்பதால் பின் நவீனத்துவம் குறித்து, தபாலல்லது கொரியர் முறையில் பாடமெடுக்க யாராவது வாத்தியாரிருக்கிறார்களா...?
இந்தக் கவிதையின் தலைப்பும், வரிகளும் என் பழைய கைவிடப்பட்ட வலைபதிவை நினைவுபடுத்துகிறது !!
மன்னிக்கவும் அந்த வலைப்பதிவை குறிக்க மறந்துவிட்டேன், அது- http://gtamil.blogspot.com
/நேரக்குறைவாகவிருப்பதால் பின் நவீனத்துவம் குறித்து, தபாலல்லது கொரியர் முறையில் பாடமெடுக்க யாராவது வாத்தியாரிருக்கிறார்களா...?
/
அதற்குத்தான் எம்.ஜி.சுரேஷ் என்று ஒருமனிதர் இருக்கிறாரே.
கவிதை நல்லாயிருந்தது தோழர்!
டிசே,
ஆமாம். உண்மையில் எனக்குப் பயனுள்ளனவாக இருந்தன அவ்விடுகைகள்.
ஆழியூரான்,
விளிம்புநிலை மக்களையும் கருத்தில்கொண்டு வலையுலகில் பின்னவீனத்துவத்தை இலவசமாக சொல்லித்தந்தனர் அறிஞர் பெருமக்கள். தபால் வழியெல்லாம் கட்டணச்செலவு ஆனாலும் ஆகலாம்:)) திவாகர் எதோ ஆலோசனை சொல்றார் பாருங்க:))
பிரபு,
உங்கள் பக்கத்தைப் பார்த்தேன். ஏன் எழுதறதை நிறுத்தீட்டீங்க?
திவாகர்,
உங்களின் பாராட்டுக்கு மகிழ்ச்சி. இனி நான் இதுமாதிரி நிறையப் பின்னவீனத்துவக்கவிதைகளை முயலுவேன்:))
/இனி நான் இதுமாதிரி நிறையப் பின்னவீனத்துவக்கவிதைகளை முயலுவேன்/
போச்சுடா
அங்கே கேள்விகள் கேட்கும் அப்பாவிச் சுயிந்தனாக பாத்திரமேற்று நடித்தவன் என்ற வகையில் உங்கள் வளர்ச்சி கண்டு பாராட்டுக்கள்.
திவாகர்,
"ஒரு பேச்சுக்குக் கவிதை நல்லாருக்குன்னு சொன்னா உடனே இப்படிக் கிளம்பிடுவீங்களா?" ன்னு கேக்கறீங்களா? அதுவும் சரிதான்:))
சயந்தன்,
நீங்கள்தான் சுசிந்தனா? அப்ப கும்பரோ பூஜே வசந்தனேதான்:)) மிக இயல்பாய் நன்றாக இருந்தது அந்த உரையாடல். இருவருமே நன்கு செய்திருந்தீர்கள்.
ithayum padicheengala thozhi?
கவிதையை ரசித்தேன்.
துகள்களை என்றேனும் தனிமைத் துயர் தாக்குமோ என்று பயந்தால், அது பின்னவீனத்துவம் பற்றிய தவறான புரிதலோ?
என் பதிவில் உங்களுக்குப் பதிலிறுத்தது. உங்கள் பார்வைக்கு வரவேணுமென்பதற்காய் இங்கே!
செல்வநாயகி!
வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்களுடைய பதிவுகளை நீண்ட நாட்களாக நான் ரொம்பவும் ரசித்துப் படித்திருக்கிறேன், ஆனால் பின்னூட்டமிட்டதில்லை. நான் வளர்ந்தது கோவை மாவட்டத்தில் என்பதால், உங்களுடைய மலரும் நினைவுப் பதிவுகளை மிகவும் நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது. நீங்கள் ஒவ்வொரு விடயத்திலும் ஆழச் சிந்தித்து எழுதுவது மிகவும் பிடிக்கும்.
நான் எழுதியவை உங்களுக்குப் பிடித்திருந்தது கூடுதல் மகிழ்ச்சி. :)
செல்லா,
சுட்டிக்கு நன்றி. உங்களின் அந்த இடுகை தமிழ்மண முகப்பில் இருந்தபோது பார்த்தேன். உள்ளே சென்றபோது கொஞ்சம் நீளமாக இருக்கவே பிறகு படிக்கலாமென வந்துவிட்டேன். நிச்சயம் படிப்பேன்.
வித்யாசாகரன்,
உங்களின் வருகைக்கும் என் எழுத்துக்கள் பற்றிய கருத்துக்களுக்கும் நன்றி. நீங்களும் கோவைப்பக்கம் இருந்தது அறிந்தும் மகிழ்ச்சி.
கவிதை துகள்கள் தனிமைத்துயருறும் நிலை ஏற்படும் என்று எண்ணும்படி அமைந்துவிடவில்லை என்றே நம்புகிறேன்:))
பின்னவீனத்துவப் புரிதல்களில் உங்களின் ஐயத்தை இன்னும் சரியான ஆட்களிடம் கேட்கலாம். நான் ஒரு கத்துக்குட்டியே:))
Post a Comment
<< Home