நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Wednesday, March 07, 2007

சுடரோடு நான்.....பாகம் 3

3. பெண்ணீயம் பற்றி நிறைய எழுதியுள்ளீர்கள்.... அனுபவங்களும் அதை வலியுறுத்தியே வந்துள்ளதென அறிவேன். பெண் - ஆண்., தலித் பெண் - தலித் ஆண், மேல் சாதி பெண் மற்றும் மேல் சாதி ஆண் என நசுக்கும் கரங்கள் விளிம்பு நிலை மக்களை நோக்கி வரும்போது அதிக அழுத்ததுடனும், பரவிய நிலையிலும் வருகிறது.... ஆனால் அவ்வளவு கொடுமைகளை அனுபவித்த பெண்கள் மிக இயல்பாக ஆர்ப்பாட்டமில்லாது தங்கள் எதிர்ப்புணர்வை ஏதேனும் ஒரு வடிவத்தில் காட்டிக்கொண்டிருக்கிறார்கள் (ஒரு புரிதலுக்காக கருக்கு பாமா போன்றோர்). இன்னும் ஒரு பிரிவோ அனைத்தையும் மாற்றிப்போட்டு பின் நவீனப்பார்வை கொண்டு உடலே முதலில் ஆண்களிடமிருந்து விடுவிக்கப்பட வேண்டியவை எனப் பேசுகிறது ( ஒரு புரிதலுக்காக சுகிர்தராணி போன்றோர்). இரண்டும் பெண் விடுதலையை நோக்கிய தளங்கள் என்றாலும்.... பாலியல் தொல்லைகள் மட்டுமேதான் முன்னிருத்தப்படுகிறது. பெண் விடுதலை என்பது வெறும் பாலியல் விடுதலை மட்டும்தானா?.

ஹிஹி... பெண்கள், அவர்களின் பிரச்சினைகள் என்று வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து எது நடந்ததோ இல்லையோ நான் இப்ப ஒரு பெண்ணீயவாதின்னு பேரு வாங்கியாச்சு. என் பதிவை இண்டிபிளாக்கீசில் பரிந்துரைத்த நண்பர்களில் ஒருவர்கூட feminist blogனு சொல்லீருந்தாங்க:)) கூகிள்ல வெளையாட்டாய் என் பேரைப் போட்டுப் பார்த்தாலும் feminism னு போட்டு பக்கத்துல எம்பேரோட இடுகைகள் வந்து விழுது:))

நண்பர் செல்லாகூட பெண்ணியம் பத்தியும், ஆணீயம்(??) பத்தியும் கேள்விகள் கேட்டிருந்தார். அவருக்குப் பதில் சொல்லலாம்னு கொஞ்சம் எழுதியதை இங்கே இணைத்துவிட நினைக்கிறேன். அது நான் பெண்கள் பிரச்சினை எழுதவந்த கதையைக் கொஞ்சம் சொல்லலாம். எப்படியான பார்வையும், நோக்கமும் அதற்குப் பின்னணி என்பதையும் சொல்லலாம்.

எந்த இடத்திலும் எனக்கொரு பெண்ணீயவாதி என்ற அடையாளத்தை நான் விரும்பி முன்மொழிந்துகொண்டதில்லை. காரணம் என் விருப்பங்களை, தேடலை அப்படியொரு புட்டிக்குள் மட்டுமே அடைத்துக்கொள்ள நான் விரும்பவில்லை.

பூமிக்குவந்து கண்விழித்துப்பார்க்கும் குழந்தையொன்று தன் ஒவ்வொரு அசைவையும் அல்லது தன்மீது நிகழ்த்தப்படும் அசைவுகள் ஒவ்வொன்றையும் அதியசத்தோடு பார்ப்பதுமாதிரித்தான் நானும் இருந்திருக்கிறேன். என்னைச்சுற்றிய நிகழ்வுகளுக்கு என் எதிர்வினைகள் என்ன என்பதைப் பார்க்கிறேன். எப்போது எதிர்வினைகள் புரிகிறேன்? எப்போது புரியவில்லை? அப்படிப் புரிவதும், புரியாததும் என்விருப்பத்தால் என்னால் சுதந்திரமாக எடுக்கப்படும் முடிவா அல்லது வேறேதும் புறக்காரணிகளால் நான் தடைபடுகிறேனா? அப்படித்தடைபடும்போது அதன் பின்னணியிலான காரணங்கள் என்ன? இது எனக்கு மட்டுமே ஏற்படுகிறதா இல்லை பலருக்கும் ஏற்பட்டிருக்கிறதா? ஏன் ஏற்படுகிறது? என்று மூட்டை மூட்டையாகக் கேள்விகளைச் சுமந்து திரிந்த, திரியும் ஒரு பாமரள் நான்.


எதன் பெயராலும் என்னைக் கட்டிப்போடுகிற ஒரு கயிறையோ, இன்னொருவரைக் கட்டிப்போட என் கைகளால் திரிக்கப்படும் ஒரு கயிறையோ ஏற்க மறுக்கும் மனதோடு இந்த வாழ்வைப் பொருத்திப்பார்த்து அதிலிருந்து தோன்றும் உடன்பாடுகளையும், முரண்பாடுகளையும் விளங்கிக்கொள்ள நினைக்கும் ஒரு சாதாராண மனுசி. அப்படி விளங்கிக்கொண்டதில் ஏற்பட்ட வெற்றிகளையும், தோல்விகளையும் சேமித்துக்கொள்ள நினைக்கிறேன். அது வேறு யாருக்காகவும் இன்றி எனக்காகவே செய்கிறேன்.

ஒவ்வொருநாளும் ஒவ்வொரு அனுபவமாக மிளிரும் வாழ்வில் ஒவ்வொருவருக்கும் இப்படி எத்தனையோ சேமித்துக்கொள்ள இருப்பதுபோல்தான் எனக்கும். கிளம்பும் சூரியன், செடியின் துளிர், இலைகளின் இடுக்கில் முளைக்கும் பூ, பனியாய், நதியாய், மழையாய் ஆச்சரியப்படுத்தும் நீர் என்று இன்னபல தீராத ரகசியங்களையெல்லாம் தன்னுள் தேக்கிவைத்திருக்கும் இயற்கையிலிருந்து, நான் சந்திக்கும் மனிதர்கள், சமூகம், மதங்கள் வரைக்கும் எனக்குள் ஏற்படுத்தும் அதிர்வுகளைச் சேமித்துக்கொள்வதிலான ஆர்வம்தான் நேரம் கிடைக்கிறபோது எதையாவது எழுதச்சொல்கிறது. அப்படி எழுதுகிறபோது அதிலொரு பாகமாய்ப் பெண்ணுக்கும் மற்றவற்றிற்கும் உள்ள தொடர்பையும் பார்க்க முயற்சிக்கிறேன். அதன் விளைவாய்த்தான் "தவமாய்த் தவமிருந்து" படம் பற்றிப் பலரும் வலையுலகில் பாராட்டி எழுதிக்கொண்டிருந்தபோது என்பார்வையில் நான் சில மாற்றுக்கருத்துக்களை எழுதிவைத்திருந்தேன். அங்குதான் தொடங்கியது நண்பர்களின் கேள்விகளும் அதற்குப் பதில்சொல்ல முனைந்து தொடர்ந்தெழுந்த என் பெண்சம்பந்தமான பதிவுகளும். இப்போது பெண்ணீயவாதி ஆயாச்சு:)) நிற்க. இப்போது கற்பகம் என்னிடம் கேட்டிருக்கும் கேள்வி எனக்குள்ளும் அடிக்கடி தோன்றியதுண்டு.

இதுகுறித்தான என் புரிதலை இதுவரை பெண்கள் குறித்த எப்பதிவிலும் நான் சொல்ல முயற்சித்ததுமில்லை. காரணம் அந்தப் பார்வை என்னளவிலேயே இரண்டுநிலைகளைக் கொண்டது.

முதலாவது, பாலியல் விடுதலை மட்டும்தான் பெண்விடுதலை என்று நான் நினைக்கவில்லை. பாலியல் உரிமைகள் பெண்விடுதலையில் முக்கியமான ஒன்று எனினும் அதையே முதலாவதான ஒன்று என்று நான் கருதவில்லை. ஒரு பெண்ணின் மனமொழி புரிந்துகொள்ளப்படுவது எல்லாவற்றிற்கும் அடிப்படையானது. அவளின் சிந்தனை, சுதந்திரம், கல்வி, வேலை, திருமணம் என்று அவள்குறித்தான விடயங்களில் அவளின் முடிவெடுக்கும் உரிமை மதிக்கப்படுதல், ஒவ்வொரு அதிர்விலும், நிகழ்விலும் ஒரு ஆணுக்குத் தோன்றும் உணர்வுகள் அவளுக்கும் தோன்றும் என்பவை புரிந்துகொள்ளப்படுதல், அவற்றைத் தடுப்பது எக்கூறுகளில் எப்படிப் பொதிந்துள்ளது என்பவை அடையாளம் காணப்படுதல், அவை ஒரு வளரும் மானுடத்திற்குத் தேவையற்ற குப்பைகள் என்று கண்டுணரப்படுதல், களையப்படுதல் ஆகிய வாதங்கள் திரும்பத் திரும்ப அதற்கான தேவைகளோடு முன்னெடுக்கப்படும்போது அவளின் பாலியல் உரிமைகள், தெரிவுகள் பற்றிய புரிதல்களையும் செவிமடுப்பதற்கான தயாரிப்பை இச்சமூகத்திற்குத் தரமுடியும்.

நம் லட்சிய எல்லைகள் உச்சியில் இருக்கவேண்டியதும், இருப்பதும் அவசியமானதே. ஆனால் அதை அடைவதற்குப் பல படிகளையும் கடக்க வேண்டியிருக்கிறது. எடுத்தவுடன் அதன் உச்சிக்குப் போய்விடமுடியும் வலிமையுள்ளவர்கள் "என்னைப்போல் தாவி வா" என்று சொல்வதை முதல்படியிலேயே தடவிக்கொண்டிருப்பவர்களால் இயல்பாகப் பார்க்க முடிவதில்லை. அங்குபோய் நின்றுகொண்டிருப்பவர்களை அண்ணாந்து பார்க்கையிலேயே இவர்களுக்குத் தலைசுற்றல் வந்துவிடுகிறது.

பாலியல், உடல்மொழியை அதிகமாக முன்னெடுக்கும் பெண் படைப்பாளிகளுக்கும் நம் தமிழ்ச்சமூகத்திற்கும் உள்ள உறவை நான் மேற்சொன்ன உதாரணத்தோடு பொருத்திப் பார்க்கிறேன். இதில் அந்தப் படைப்பாளிகளைக் குற்றவாளிகள் என்று சொல்லமுடியுமா? இன்னும் 50 ஆண்டுகள் கழித்து வரும் இன்னும் முதிர்ச்சியான தலைமுறைக்கு இப்போது உடல்மொழியை முன்னெடுக்கும் இப்படைப்பாளிகள் ஆதர்சங்களாகத் தோன்றலாம். ஏனென்றால் அப்போது இதன் புரிதலில் இன்னும் சிலபடிகளாவது மேலேறிவிடும் மனநிலை அந்தத் தலைமுறைக்கு வந்திருக்கலாம்.

இரண்டாவது, இப்படி எழுதும் பெண்கள் மீதான தாக்குதல். உடல்மொழி மட்டுமே பெண்விடுதலையாக முன்னிறுத்தப்படுவதில் மாற்றுக்கருத்துக்கள், அதற்கான நியாயங்கள் இருப்பவர்கள் இன்னொருபுறம் எழுதிச்சொல்லவும், பெண்விடுதலையை அவர்கள் பார்வையில் எப்படியான வழிகளில் வளர்த்தெடுக்க முடியும் என்பதை சரியான தர்க்கங்கள் இருந்தால் அவற்றுடனும் முன்வைக்கவும் முடியும் சாத்தியக்கூறுகள் இருக்கையில் அவற்றைப் புறக்கணித்து நேரடியாக உடல்மொழி பேசும் பெண்ணின் ஒழுக்கம்வரை ஆராயப் புகுந்துவிடும், தொலைபேசி, மடல் வழியாக மிரட்டக் கிளம்பிவிடும், அண்ணாசாலையில் எரித்துவிட ஆசைப்படும் மனநிலைகள் கண்டிக்கப்படவேண்டியவை. இந்தமாதிரிக் காலத்தால் பின்னோக்கி நகர்ந்துவிடும் ஆட்கள் இப்பெண்களை அவர்களின் எழுத்துரிமையையே முடக்கிவிட்டு அவர்கள் எதை எழுதவேண்டுமெனத் தாம் தீர்மானிக்கக் கிளம்பிவிடுகிறார்கள். இது அப்பெண்களை அதற்குத் தம் தார்மீக எதிர்ப்பைக் காட்டும் வண்ணமாகவே மீண்டும் மீண்டும் அதையே எழுதவைக்கிறது. இத்தகைய அடக்குமுறைகளை எதிர்க்கவும் அவர்களுக்குத் தெரிந்த மொழியோ வழியோ வேறென்ன இருக்கமுடியும் இந்த எழுத்தைத் தவிர?

9 Comments:

At 9:59 PM, March 07, 2007, Blogger செல்வநாயகி said...

//

இந்தமாதிரிக் காலத்தால் பின்னோக்கி நகர்ந்துவிடும் ஆட்கள் இப்பெண்களை அவர்களின் எழுத்துரிமையையே முடக்கிவிட்டு அவர்கள் எதை எழுதவேண்டுமெனத் தாம் தீர்மானிக்கக் கிளம்பிவிடுகிறார்கள்.//
யேசிக்க வேண்டிய வரிகள்

.....
மீண்டும் நன்றிங்க

....
வாழ்த்துக்கள் முத்துலட்சுமி அவர்களுக்கு
******************************

இதுவும் கற்பகம்/அப்பிடிப்போடு அவர்களின் மின்னஞ்சல்வழி வந்த பின்னூட்டம். மன்னிக்கவும் கற்பகம், உங்கள் நீளமான பின்னூட்டத்தைப் பகுதி பகுதியாகப் பிரித்து அந்தந்த இடுகையில் போட எண்ணினேன். கொஞ்சம் சொதப்பியும் விட்டேன்.

உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

 
At 11:50 PM, March 07, 2007, Blogger பொன்ஸ்~~Poorna said...

நல்ல பதில் செல்வா. நீங்கள் பெண்ணியவாதியாக உருவெடுத்த வரலாறு இனிமை. ஒவ்வொருவருமே இதே மாதிரி தான் பெண்ணியவாதியாகிறார்கள் என்று நினைக்கிறேன் :)

'தவமாய் தவமிருந்து' தொடங்கி தான் நானும் உங்கள் இடுகைகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன். இதுவரை எழுதியதிலேயே எனக்கு மிகவும் பிடித்ததும் அந்த இடுகை தான் :)

 
At 2:47 AM, March 08, 2007, Blogger செல்வநாயகி said...

//நீங்கள் பெண்ணியவாதியாக உருவெடுத்த வரலாறு இனிமை//

:))

 
At 6:10 AM, March 21, 2007, Blogger கார்த்திக் பிரபு said...

ஹாய் உங்க ப்ளாக் சிறந்த ப்ளாகாக தேர்வு பெற்றதை கேள்வி ப் பட்டேன் ..வாழ்த்துக்கள்

நேரம் இருந்தா என் பக்கம் வந்து உங்கள் கருத்துக்க்ளை சொல்லவும்

 
At 9:14 AM, March 21, 2007, Blogger செல்வநாயகி said...

கார்த்திக் பிரபு,

/// உங்க ப்ளாக் சிறந்த ப்ளாகாக தேர்வு பெற்றதை கேள்வி ப் பட்டேன் ///

அப்படியெல்லாம் எந்த அசம்பாவிதமும் நடக்கலையே:))

நீங்கள் கவிதைகளின் பிரியர் என நினைக்கிறேன். நிச்சயம் நேரம் கிடைக்கையில் உங்கள் பக்கத்தை வாசித்துவிட்டு எழுதுகிறேன்.

 
At 9:45 AM, March 21, 2007, Blogger heritage said...

//எதன் பெயராலும் என்னைக் கட்டிப்போடுகிற ஒரு கயிறையோ, இன்னொருவரைக் கட்டிப்போட என் கைகளால் திரிக்கப்படும் ஒரு கயிறையோ ஏற்க மறுக்கும் மனதோடு இந்த வாழ்வைப் பொருத்திப்பார்த்து அதிலிருந்து தோன்றும் உடன்பாடுகளையும், முரண்பாடுகளையும் விளங்கிக்கொள்ள நினைக்கும் ஒரு சாதாராண மனுசி. அப்படி விளங்கிக்கொண்டதில் ஏற்பட்ட வெற்றிகளையும், தோல்விகளையும் சேமித்துக்கொள்ள நினைக்கிறேன். அது வேறு யாருக்காகவும் இன்றி எனக்காகவே செய்கிறேன்.

//

ஒரு பெண், தன் சுதந்திரத்தை, அதன் இயல்பை, அதன் எல்லையற்ற பரப்பை உணர்ந்திருந்தாலே, அது ( அந்தச் சுதந்திர மனப்பான்மை) அந்தப் பெண்ணை இந்த மாதிரிக் கட்டுக்குள் ( பாலினம், இன்னபிற) கொண்டுவராமல் தன்னை ஒரு உயிருள்ள, சக மனிதனிலிருந்து எந்த விதத்திலும் குறவுபடாத அல்லது குறைவு, நிறை என்ற வார்த்தைகளுக்குள் அடங்காத இயல்பு வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க முடியும் என்பது எனது சொந்த அனுபவங்களினாலும், எனது புரிதல்களினாலும் நான் கண்டது. ஆனால், இதற்கான விலை ( அதாவது தன் சுதந்திரம் என்ன என்பதை உணர்தல்) ரொம்ப அதிகம். அதைக் கொடுக்க எப்பொழுதும் தயங்காமல் ( சமூகம், குடும்பச் சூழல், புரிதல் தொடர்பான தன்னார்வமற்ற சோம்பேரித்தனம், இன்னபிற) செய்யும் ஆர்வம் அப்பெண்ணுக்கு இருந்தாலே பாதி வன்கொடுமைகள் ( சமூகத்தின் வாயிலாக நடக்கும் ) தீர்க்கப் படலாம் என்பது என் கருத்து.

சரி.


உங்களைப் பெண்ணியவாதியாக நினைத்துப் பார்க்கிறேன்.
மனத்திற்கு அவ்வளவு இனிமையானதாக இல்லை.


நன்றி செல்வநாயகி.

சாரா

 
At 10:42 AM, March 21, 2007, Blogger செல்வநாயகி said...

அவசரத்தில் நீங்கள் ஆங்கிலத்தில் இட்டுச்செல்லும் பின்னூட்டங்களைவிட இப்படி அழகாகவும், எனக்குச் சொல்லத்தெரியாத பளிச்சென்ற வரிகளிலும் இடும் பின்னூட்டங்கள் எனக்குப் பிடித்திருக்கின்றன சாரா.

///ஒரு பெண், தன் சுதந்திரத்தை, அதன் இயல்பை, அதன் எல்லையற்ற பரப்பை உணர்ந்திருந்தாலே, அது ( அந்தச் சுதந்திர மனப்பான்மை) அந்தப் பெண்ணை இந்த மாதிரிக் கட்டுக்குள் ( பாலினம், இன்னபிற) கொண்டுவராமல் தன்னை ஒரு உயிருள்ள, சக மனிதனிலிருந்து எந்த விதத்திலும் குறவுபடாத அல்லது குறைவு, நிறை என்ற வார்த்தைகளுக்குள் அடங்காத இயல்பு வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க முடியும் என்பது எனது சொந்த அனுபவங்களினாலும், எனது புரிதல்களினாலும் நான் கண்டது. ஆனால், இதற்கான விலை ( அதாவது தன் சுதந்திரம் என்ன என்பதை உணர்தல்) ரொம்ப அதிகம். அதைக் கொடுக்க எப்பொழுதும் தயங்காமல் ( சமூகம், குடும்பச் சூழல், புரிதல் தொடர்பான தன்னார்வமற்ற சோம்பேரித்தனம், இன்னபிற) செய்யும் ஆர்வம் அப்பெண்ணுக்கு இருந்தாலே பாதி வன்கொடுமைகள் ( சமூகத்தின் வாயிலாக நடக்கும் ) தீர்க்கப் படலாம் என்பது என் கருத்து. ///



அருமையான கருத்தும் வரிகளும். நீங்கள் சொல்வதுபோல் சுதந்திர உணர்வு ஒன்றுதான் பல சிக்கல்களுக்குமான மருந்தென்றே நானும் கருதுகிறேன். அதை உணரத் தொடங்குவதும், சரியான பரிமாணங்களில் கடைப்பிடிக்கத்துவங்குவதும் ஆண், பெண் என்ற பேதமின்றி ஒவ்வொரு தனிமனிதருக்கும் இந்த வாழ்வை இனிமையான அனுபவமாக்கும். இதையெல்லாம் இப்படியே நாம் எடுத்து முன்வைக்கிறபோது "குடும்பமாக ஒருவருக்கொருவர் அனுசரித்து வாழ்தல்தானே இயல்பு? ஒவ்வொருவரும் அவரவர் சுதந்திர உணர்வைப் பெரிதென மதித்தால் என்னாவது?" என்பன போன்ற கேள்விகள் கிளம்பிவரும். நம்மைப் போன்றவர்கள் அதைத்தான் பெண்ணுரிமை என்று பேசுவதாகவும், எல்லாப் பெண்களையும் வீட்டில் சண்டை போடு, வெளியே வா என்று சொல்லிக்கொடுத்து நல்லாயிருக்கும் வீடுகளை உடைக்கக் கிளம்பும் பொல்லாதவர்களாகவும் பார்க்கப்படுவோம்:))

சமமாக உறவாடி வாழ்வதற்கும் சார்புநிலை வழ்க்கைக்கும் உள்ள வேறுபாடுகள் புரிந்துகொள்ளப்படவேண்டும். சார்புநிலைவாழ்க்கை சொல்லப்படாமலே ஒரு எசமான அடிமை உறவை விதைத்துவிடுகிறதென்பதையும், அதன் சாதகங்களை அனுபவித்தவர்கள் அப்படியே தொடரவிரும்புவதையும் உளவியல் தடைகளாகவே பார்க்கிறோம். அதைத் தாண்டுவதுதான் சுதந்திர உணர்வு என்று சொல்லலாமா? அதை உண்மையாகத் தான் அனுபவிக்கத்துவங்கும் ஒருவர் தன்னோடு வாழும் இன்னொருவருக்கும் அது தேவைப்படும் என்று உணர்வதிலும், அப்படி அவர்களுக்கு முடியவில்லையென்றால் அதற்கான காரணங்கள் எவை என யோசிக்கவும் தயங்குவதில்லை. இதுதான் வாழ்க்கை, இதுதான் வாழ்முறை என்று தனக்குப் போதிக்கப்பட்டதை அப்படியே கேள்விகளின்றி ஏற்றுக்கொண்டுவிடுகிற மனதில் சுதந்திர உணர்வு பற்றிய விவாதங்கள் பயங்கரமானவையாகத் தோன்றலாம்:))

எல்லாம்சரி.

//உங்களைப் பெண்ணியவாதியாக நினைத்துப் பார்க்கிறேன்.
மனத்திற்கு அவ்வளவு இனிமையானதாக இல்லை.///

இது என்ன பாராட்டா? இல்லை வசையா? இல்லை இரண்டுமற்ற ஒன்றா? எதுவென்றாலும் ஏற்றுக்கொள்கிறேன்:)) நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் பக்கத்திலும்.

 
At 4:56 AM, July 01, 2008, Blogger srithar said...

dear selvanayaki,

karuthalam mikka varikal.ethai solli paarattuvathu endru theriyavillai.ungal unarvugalayum eakkangalayum naan mathikkirean.
rasikkirean.
vaalthukkal.))

s.srithar

 
At 9:13 AM, July 01, 2008, Blogger செல்வநாயகி said...

ஸ்ரீதர்,

உங்களின் வாசிப்புக்கும், மறுமொழிக்கும் நன்றி.

 

Post a Comment

<< Home