நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Wednesday, March 07, 2007

சுடரோடு நான்...பாகம் 2

2. கவிதை, கதை மற்றும் பதிவுகளில் இயல்பான, சீறான எழுத்தோட்டம், உங்களின் பரந்துபட்ட ரசனைகளை கவணமாக ஆவணப்படுத்தும் பாங்கென உங்களின் ஒவ்வொரு பதிவைப் படிக்கும்போதும் வியக்க வைக்கிறீர்கள். பிறரின் படைப்பில் உங்களைக் கவர்ந்த ஒன்று


காசா பணமா? வஞ்சனையில்லாமப் புகழுவோம்னு நிறையச் சொல்லீட்டாங்க அம்மணி:))

எனக்குப் பிடித்த பிறரின் படைப்புகள் என்றால் இங்கு வலைப்பதிவில் கேட்கிறீர்களா? அல்லது வெளியில் பிற எழுத்தாளர்கள் என்று கேட்கிறீர்களா எனத் தெரியவில்லை. எனவே நான் இரண்டையும் சொல்லப்போகிறேன்:)) "அடப்பாவி மவளே! இப்படி ஆரம்பிச்சு இனி இதுக்கு ஒம்பது பத்தி எழுதிக் கொல்றதுக்குப் பதிலா கற்பகத்துக்கு ஒருவரி பின்னூட்டம்போட்டு அங்கயே கேட்டுத் தெளிஞ்சிட்டு எதச் சொல்றாங்களோ அத ஒரு பத்தில சொல்ல முடியாதா உன்னால???" அப்படீன்னு நீங்க கேட்க நெனச்சாலும் பிரயோசனமில்ல. எதுவும் காதுல விழுகாது இப்ப எனக்கு. அந்தளவுக்கு ஐம்புலன்களையும் ஒன்றுகுவித்து எழுத்துல கவனமா எழுதிக்கிட்டிருக்கேனுக்கும்:))

பிடித்தது என்பதை படித்தபோது அல்லது கேட்டபோது என்னை அதிகம் பாதித்தது, சுற்றியிருக்கும் சுவர்கள், மனிதர்கள், சூழ்நிலைகள் மறந்து அதற்குள் நான் கரைந்தது என்று எடுத்துக்கொள்கிறேன். அதில் ஒரு கதை உங்களுக்குச் சொல்லவேண்டும். அது நான் படித்ததுகூட அல்ல. நானும் பங்குகொண்டிருந்த ஒரு கூட்டத்தில் எழுத்தாளர் பிரபஞ்சன் சொல்லி நான் கேட்டது. ரஷ்ய எழுத்தாளர் ஆண்டன் செகாவின் சிறுகதை அது.

ரஷ்ய ராணுவவீரன் ஒருவன். அவன் பெயர் கிரிகோ. அவன் முகாமிட்டிருந்த இடத்தில் எதிரிநாட்டுப் படையுடன் போரிட்டதில் குண்டுபாய்ந்து முகம் மிகப்பாதிப்புக்குள்ளாகிப்போனது. எவ்வளவோ சிகிச்சைக்குப் பின்னும் அவன் சிதைந்த முகம் முந்தைய அழகுக்கோ வடிவுக்கோ வரவேயில்லை. அவனைப் பார்க்கும் யாரும் அவன் பழைய கிரிகோ என்று சொல்லவே முடியாது. அடையாளம் மாறிப்போனான். இத்துயரச் செய்தி எங்கோ ஒரு கிராமத்திலிருக்கும் அவன் பெற்றோருக்குத் தெரியாது. இந்நிலையில் விடுமுறை வருகிறது. தன் வயதான தாய் தந்தையைப் பார்க்க ஊருக்கு வருகிறான். வரும்வழியெல்லாம் யோசனை. தன்னை அடையாளம் தெரியப்போவதில்லை தன் தாய்க்கும். அப்படியே அவன் சொன்னாலும் அவள் அடையப்போகும் வேதனையைப் பார்க்கமுடியாது இவனால். குழந்தையிலிருந்து நிலா என்றும், சூரியன் என்றும் கொஞ்சிக் கொஞ்சித் தடவி மகிழ்ந்த தன் மகனின் முகம் கோரமான நிலையைப் பார்த்தால் எத்தாய்தான் குமுறாதிருப்பாள்?

வீடுவந்து சேர்கிறான். தட்டிய கதவைத் திறக்கும் தாய் கேட்கிறாள், "யாரப்பா நீ?"

"நான் உங்கள் மகனின் நண்பன், அவனுக்கு விடுப்புக் கிடைக்கவில்லை. இந்தப்பக்கமாக வந்த என்னை உங்களைப் பார்த்துவிட்டு இருநாட்கள் தங்கிவிட்டு வரச்சொன்னான், வந்திருக்கிறேன்"

இப்படிச்சொல்லி இருந்துவிட்டுக் கிளம்புகையில் கேட்கிறான் "உங்கள் மகனுக்குச் சொல்ல ஏதும் செய்தியிருக்கிறதா அம்மா?"

"இல்லை, நான் அவனுக்குக் கடிதம் எழுதுவதாகப் போய்ச்சொல்"

மீண்டும் முகாம் வந்து சேரும் கிரிகோவுக்குச் சில நாட்களில் அவன் அம்மாவிடமிருந்து கடிதம் வருகிறது. அது பேசுகிறது:-

"அன்புள்ள க்ரிகோ, நீ நலமாயிருப்பாயென நம்புகிறேன். சிலநாட்கள் முன்பு உன் நண்பன் என்று சொல்லிக்கொண்டு ஒருவன் நம் வீட்டிற்கு வந்திருந்தான். உன்னைப்போலவே எங்களிடம் பாசமாக இருந்தான். மரியாதையாகப் பேசினான். நான் சமைத்ததை ஆசையாகச் சாப்பிட்டான். ஆனால் எனக்கு ஏனோ அவன் உன் நண்பனல்ல என்கிற என்ணம் வந்துகொண்டே இருந்தது. சொன்னபோது உன் தந்தை அதைப் பொருட்படுத்தவில்லை. இருந்தாலும் எனக்குத் தெரியுமடா. வந்திருந்தது என் மகனின் நண்பன் அல்ல. என் மகந்தான் என்று. ஏனென்றால் எங்களோடு தங்கியிருந்த நாட்களில் அவன் உடுப்புக்களைத் துவைத்துப்போட்டது நான். துவைக்கையில் அந்த உடுப்புகளில் இருந்து வந்தது என் மகனின் நண்பனின் வாசனை அல்ல. என் மகனின் வாசனை. நீ ஏனடா பொய் சொன்னாய்? உன் முகம் அழிந்துவிட்டதென்பதற்காக நான் சிதறுவேன் என எப்படியடா நினைத்தாய்? அதை நீ இழந்தது ஒரு வீரப்போரில் உன் மண்ணுக்காக என்பதை அறியும் போது நான் முன்பைவிடவும் உன்னை அதிகம் நேசிக்கிறேன்"

இப்படித் தொடரும் ஒரு தாயின் பாத்திரத்தைச் சித்தரிக்கும் அந்தக்கதை எனக்குள் ஒரு அழியாத சித்திரமாய் ஆக்கிரமித்திருக்கிறது.

இதுதவிர எனக்குப் பிடித்த இன்னொரு கவிதை சொல்வேன் உங்களுக்கு. மரபின்மைந்தன் எனப்பெயர்சூடிக்கொண்ட முத்தையா எழுதின கவிதை. நெருங்கிய மனிதர்களானாலும் சில துயரங்களைத் துடைத்தெடுப்பதற்கு வார்த்தைகள் உதவுவதில்லை. எப்படித்தொடங்கி எப்படி முடிப்பதெனத்தெரியாமல் சொல்லப்படாத அன்பை நாம் சுமந்துகொண்டே திரியவேண்டியிருக்கிறது சிலவேளைகளில். அது தாயானாலும், தனயனானாலும், நண்பனானாலும், தோழியானாலும். அப்படியொரு சூழலில் அவர் தன் அன்பைக் கவிதைகளில் வடிக்கிறார்:-

உடைந்துபோன உன் கனவுகளெல்லாம்
சில்லுகளாக சிதறிக்கிடக்கும்
தகவல் தெரிந்துதான் வந்திருக்கிறேன்.
ரணமாய் உறுத்தும் ரகசிய வலிகளைக்
காட்டிவிடுகிற கண்கள் உனக்கு.
பத்திய உணவு பிடிக்காத குழந்தையாய்
அழுகையை அழுத்தும் உதடுகள் மீது
இருத்தி வைக்கிற புன்னகைகூட
வருத்தத்தைத்தான் வெளிச்சொல்கிறது.
பளபளக்கிற கண்ணீர்த்திவலையை
படபடக்கிற இமைகள் மறைக்க,
சிலந்திவலையில் சிக்கிய ஈசலாய்
துயரக்குளிரில் துடிக்குமுன் நாசிகள்.

சரிந்துவிழுகிற மணல்வீடென்பது
சமுத்திரக்கரையில் சகஜமென்றாலும்
சிரமப்பட்டுக் கட்டிய பிள்ளைக்கு
சமாதானங்கள் சொல்லவா முடியும்?
தயக்கத்தோடு நான் தொட்டு நிமிர்த்தினால்
விசும்பல்களுடன் நீ வெடித்துச் சிதறலாம்.
பாரம் முழுவதும் இறங்க இறங்க..நீ
ஓயும்வரை என் தோள்களைத்தரலாம்.
நேரம்பார்த்து மெல்லிய குரலில்
தேறுதலாக ஏதும் சொல்லலாம்.
தொடங்கத் தெரியாத தர்மசங்கடத்தில்-என்
ஆறுதல் மொழிகள் காத்திருக்கின்றன..
ஆரம்பமாகாத உன் அழுகைக்காக!


இந்தக் கவிதையின் தலைப்பு "அழுதுவிடேன்!" என்னைச்சுற்றிய மனிதர்களின் சோகநிகழ்வுகள் சிலதில் சொல்ல வார்த்தைகளற்று இப்படி நின்ற நிமிடங்கள் எனக்கும் உண்டென்பதால் இது பிடிக்கும்.

மேலே சொன்னவை தவிர வலைப்பதிவில் எனக்குப் பிடித்த படைப்பு பற்றிச் சொல்லவேண்டுமென்றால் அதையே ஒரு தொடராக எழுதி வருடத்தையே ஓட்டிவிடலாம்:)) நான் வந்த காலம்தொட்டு இப்போதுவரை இருக்கும் பல பதிவர்களின் சில இடுகைகளை எனக்குப் பிடித்தவைகள் பட்டியலில் ஒரு பூச்சரம்போல் சேமித்துவைத்திருக்கிறேன். நான் விரும்பிப் பறித்தெடுத்து ஒவ்வொன்றாய் எடுத்துத் தொடுத்து வைத்திருக்கும் அதில் உனக்குப் பிடித்த ஒரு பூவைச் சொல் என்றால் எப்படி முடியும்? ஆனால் பள்ளியில் முதல்நாள், கல்லூரியில் முதல்நாள், புது ஊரில், புதுவீட்டில் முதல்நாள் மாதிரி எனக்கு வலைப்பதிவுக்கு வந்த முதல் தருணங்களில் நான் படித்ததை, எனக்குப் பிடித்ததைச் சொல்லலாம்.

ஒரு 10 வயதிருக்கும்போது தோட்டத்தில் கம்பு பயிரிட்டிருந்தார்கள். அவை முற்றியிருந்த காலத்தில் அறுவடை ஆரம்பித்தது. அறுத்துக்குவித்திருந்த கம்பங்கருதுகளை வெட்டிக் குவித்திருந்தார்கள். இன்னொரு பகுதியில் வெட்டாத கருதுகளும் நின்றுகொண்டிருந்தன. நான் ஒரு மாலைவேளையில் அந்தப்பக்கமாய்ப் புத்தகம் தூக்கிக்கொண்டுபோய்ப் படித்துக்கொண்டிருந்தேன். வெட்டிப்போட்ட கருதுகளை தென்னந்தடுக்குக் கொண்டு மூடிவைத்திருந்தும் பல சிட்டுக்குருவிகள் ஓரங்களில் அதை இழுத்துக் கம்பு தின்றன. கீச்கீச்சென ஒரே சத்தம். சரி சாப்பிடட்டும் என நகர்ந்தபோது அங்கேயே அருகில் வெட்டாமல் கருதுடன் நின்ற ஒரு கம்பந்தட்டில் கிளைபோலிருந்த தோகைமேல் அமர்ந்திருந்தது ஒற்றைச் சிட்டுக்குருவி. ஆனால் அதிலியே இருந்த கருதில் கம்பு கொத்தித் திங்கவில்லை. எந்த அசைவுமில்லை. அது அசையவில்லையே தவிர காற்றுக்கு அது அமர்ந்திருந்த அந்தக் கம்பந்தட்டு அசைந்தது. மெதுவாக கீழே மேலே..கீழே மேலே என அதன் இயல்பான அசைவில் என்ன சுகம் கண்டதோ அந்தக் குருவி. எழுந்தே போகவில்லை. அருகில் கீச்ச்கீச்சென போட்டிபோட்டுக்கொண்டு கீழே கம்பு தின்றுகொண்டிருந்த குருவிகள் அதன் தியானத்தைக் கலைக்கவில்லை. சிறிது தொலைவில் நின்றுகொண்டு படிப்பதை நிறுத்தி அதையே பார்த்துக்கொண்டிருந்த என்னை என் இருப்பை அது உணர்ந்ததாகவும் தெரியவில்லை. காற்று, கம்பந்தட்டு அசைவு, அதை அப்படியே அனுபவிக்கும் அமைதி என இருந்த ஒற்றைக்குருவியைப் பார்த்துக்கொண்டிருப்பதே என் யோகமானது. ச்சே.. நான் அதாக இல்லையே என்றும் ஏக்கம்...

என்னைத்தேடிக்கொண்டு அங்கு வந்த அம்மாவின் எதிர்பாராத அழைப்பில் கலைந்தது குருவியின் தவமும், என் தவமும். இப்படித்தான் இன்றும் குருவி, அருவி, சிறுமி, இங்கு எழுதும் தருமி(என்றால் அவரின் எழுத்துக்கள்) என்று என் ஒவ்வொரு நாளிலும் சிறுசிறு யோகம் அல்லது தியானம் பெறும் இடங்கள் நிறைய. வாழ்வு இப்படி அவ்வப்போது தவம் கூட்டும் கணங்களாகவும், கலைக்கும் கணங்களாகவும் கண்ணாமூச்சி காட்டிக்கொண்டே நம்மை அதோடு ஒட்டவைத்திருக்கிறது.

இந்தத் தவங்களை அல்லது மென்மையான தருணங்களை எழுத்துக்களிலும் சிதறாமல் வடித்தெடுப்பது ஒரு கலை. நான் முயன்று தோற்றதே அதிகம். ஆனால் வலைப்பதிவுக்கு வந்த முதல் மாதங்களில் தோண்டித்துருவி மேய்ந்துகொண்டிருந்தபோது தங்கமணியின் பதிவில் இம்மாதிரி இயற்கைசார்ந்த அவதானிப்புகளும், அவை தந்த அனுபவங்களுமாக நிறையக் கண்டேன். அது முதன்முறையாக நான் சென்று பின் திரும்பிவராமல் அவரின் எல்லா இடுகைகளையும் ஒரே மூச்சில் படித்துமுடித்த பதிவு. இப்போது எழுதாமல் வனவாசத்திலிருக்கிற (இப்படி நெறையப்பேரு போயிருக்காங்க) அவரின் அந்தப் பழைய பக்கத்தின் முகவரி www. ntmani.blogspot.com. இப்போதைக்கு உதாரணத்திற்கு ஒன்று கீழே:-

மலை இனிது, காடு நன்று, ஆறுகள் இனியன
இவ்வுலகம் இனியது இதிலுள்ள வான் இனிமையுடைத்து

எங்களுடைய குடகு (தேன் பள்ளத்தாக்கு) பயணத்தைப் பற்றி நான் எழுதலாம்.

அது எனக்குள் இருக்கும் வனத்தை சொல்லுமா?
ஓடிக்கொண்டிருக்கும் நதியை
வழுக்கும் பாறைகளை
வழிதவறிய பாதைகளை
சொல்லிப்பெய்யும் மழையை
சொல்லாது செல்லும் முகிலை
பாசிபடர்ந்த அந்த மழைக்காடுகளை

ஒரு பயணத்தைப் பற்றி எழுதுவது எளிது
ஒரு வனத்தை, அருவியை, நெடிதுயர்ந்த மரங்களை, கடந்து செல்லும் மேகத்தை
எழுதுவது கடினம்.

ஏனெனில் ஒரு பயணி இவைகளில் கொஞ்சத்தை சேமித்து வருகிறான்
ஒருமாலைப்பொழுதில் சொல்வதற்கு.
ஆனால் ஒரு அனுபவம் இவைகளில் மொத்தமாய்க் கரைந்துவிடுகிறது
மூங்கிலிலை மழைத்துளி அருவியில் விழுவதைபோல்.

முடிந்தால் எழுதுகிறேன்.


ஒரு அனுபவத்தை எழுதமுடியாது என்பதைக்கூட இவ்வளவு அழகாக எழுதமுடியுமா என வியந்திருக்கிறேன் இதைப் படித்தபோது.

6 Comments:

At 9:36 PM, March 07, 2007, Blogger தமிழ்நதி said...

எனது வாசிப்புக்கு மேலும் ஒரு பக்கத்தைக் (தங்கமணி) கூட்டியிருக்கிறீர்கள். நன்றி

 
At 9:51 PM, March 07, 2007, Blogger செல்வநாயகி said...

நன்றிங்க செல்வநாயகி
,
நான் ஒரு சுடரத் தந்தா நீங்க

நாலு சுடராக்கிட்டிங்க.... நாலும் நன்று . இனிமே கல்லெல்லாம் வராது... தைரியமா நான் நடமாடலாம்...


//என் பேச்சு ஈடுபாடுடைய நண்பர்களால் கடந்த ஆண்டு "பனிப்பொம்மைகள் "
எனும் தலைப்பில் தொகுப்பாகப் போடப்பட்டது .//
அப்புறம் இது எழுத்துப் பணியில்லையா

?., நாங்கெல்லாம் அரசியல்வாதிகப்பா., மதி புண்ணியத்துல...:) "அ" னா ஆவன்னான்னு யாரும் எழுதி இருந்தாக் கூட அதை நாங்க எழுத்துப் பணியாக்கிருவம்ல ? :). நல்லா இருக்கிற எழுத்த புகழக்கூடாதா?.

The above comment was sent in e-mail by karpagam

 
At 9:54 PM, March 07, 2007, Blogger செல்வநாயகி said...

ரஷ்ய வீரன் கதை நல்லா இருந்தது

... கம்பு தட்டு... குருவி... அப்படி ஏதாவது நம்ம கவனிச்சிருக்கமான்னு நினைச்சு, நினைச்சுப் பார்க்கிறேன். ஒண்ணும் நினைவுக்கு வர மாட்டேங்குது.... நினைவுக்கு வரதெல்லாம் நல்லா யாரும் அழகா போட்ட கோலத்த நான் கலைச்சது.... மலை மாதிரி குவிச்சுக் கொட்டிருந்த (நிலக்) கடலைகள் மேல் தாண்டி சருக்கி கீழ விழுறதுன்னு.... இப்படிதான் வருது.... போங்க....

This is also a part of comment sent by karpagam

 
At 12:21 AM, March 08, 2007, Blogger சாலிசம்பர் said...

ரஷ்ய இலக்கியங்கள் எல்லாம் இலக்கியமே இல்லை என்று சாரு நிவேதிதா என்ற பிரபல எழுத்தாளர் எழுதியிருந்ததைப் பார்த்து நொந்து போயிருந்தேன்.

ஆனால் உங்களைப் பாதித்த கதையாக ஒரு ரஷ்யக் கதை இருப்பதைக் கண்டு மனம் ஆறுதல் அடைகிறது.

அந்தக் கதையைப் படித்திருக்கிறேன்.கதையின் பெயர் "ருஷ்ய இயல்பு".

 
At 12:49 AM, March 08, 2007, Blogger தருமி said...

எது எப்படியோ .. ஏன், எதுக்கு, எப்படி, என்ன காரணம் அப்டின்னு ஒண்ணுமே தெரியலைன்னாலும், 'நம்ம' பேரை உங்க பதிவில பார்த்ததும் ரொம்ப சந்தோஷமா போச்சு ..

 
At 3:01 AM, March 08, 2007, Blogger செல்வநாயகி said...

தமிழ்நதி,
இன்னும் 2004, 2005 ஆம் ஆண்டுகளில் வலைப்பதிவுகள் தோன்றிய காலகட்டத்தில் இங்கு தீவிரமாக எழுதிக்கொண்டிருந்த மேலும் சிலரின் பக்கங்கள் இருக்கின்றன. நேரம் கிடைக்கையில் தேடிப்பாருங்கள்.

கற்பகம்,
//அ" னா ஆவன்னான்னு யாரும் எழுதி இருந்தாக் கூட அதை நாங்க எழுத்துப் பணியாக்கிருவம்ல ?///

இது நல்லாருக்கு:))

///நல்லா யாரும் அழகா போட்ட கோலத்த நான் கலைச்சது.... மலை மாதிரி குவிச்சுக் கொட்டிருந்த (நிலக்) கடலைகள் மேல் தாண்டி சருக்கி கீழ விழுறதுன்னு.... இப்படிதான் வருது.... போங்க.... ///


என்ன நீங்க? இவையும் தவங்கள்தான் அந்த வயதில். இட்லிக்கு ஊறவெச்சிருந்த அரிசியில பாதிய ஆட்டி மாவாவும், மீதிய அரிசியாவும் வெச்சிருந்த நேரத்துல அந்த அரிசிய ஒவ்வொரு கரண்டியாப் பாத்துப் பாத்து எடுத்து ஆட்டிவெச்சிருந்த மாவுக்குள்ள அழகாக் கொட்டிக்கிட்டிருந்த என் தோழியோட 3 வயது மகளை நான் ரசிச்சுப் பாத்துக்கிட்டிருந்தேன் எப்படி ஒரு தவம் மாதிரிச் செய்யறான்னு. அப்பறமா அதத் தடுக்காம இருந்ததுக்கு என் தோழி என்னைய திட்டித் தீத்தது தனிக்கதை:))

ஜாலிஜம்பர்,
எனக்கு ரஷ்ய இலக்கியங்கள்மீது ஒரு ஆர்வம் இருக்கிறது. இன்னும் பெரிதாகப் படித்ததில்லை. வருங்காலத்தில் செய்யவேண்டும். கதையின் தலைப்பைத் தந்தமைக்கு மகிழ்ச்சி.

தருமி,
///ஏன், எதுக்கு, எப்படி, என்ன காரணம் அப்டின்னு ஒண்ணுமே தெரியலைன்னாலும்///

அதையும் ஒரு தொடரா எழுதிர்றேன்:))

அனைவருக்கும் நன்றி.

 

Post a Comment

<< Home