நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Tuesday, July 03, 2007

பெய்யாத மழை

வெக்கையால் தகிக்கும்
அந்தப்பாலைவனத் திசையிலிருந்துதான்
வெண்பஞ்சின் வண்ணமொத்த மேகங்கள் சில
வந்துபோகின்றன ஒவ்வொருநாளும்

காக்கைகளும் கரையாத மத்தியானப்பகற்பொழுதில்
மழைவந்தால் ஒழுகும் தன் ஓட்டுவீட்டின்
காரைபெயர்ந்த திண்ணையிலமர்ந்து
தடியூன்றி நடக்கும் பெருங்கிழவி
குதப்பித்துப்பிய வெற்றிலைச்சாற்றின் காய்ந்த நிறத்தில்
சிவந்துகிடக்கிறது பாலைமணல்தரை

காற்றுவெளியின் உயரழுத்தங்கள் உந்தித்தள்ள
மரங்களடர்ந்த பிரதேசத்திற்கு நகர்ந்துநகர்ந்து
நடுவே ஒரு மைதானத்தில் குத்திட்டு நிற்கின்றன அம்மேகங்கள்
தாம் மழையாய்ப் பெய்யத் தோதாகுமாவென

வரிசையாய் வெற்றிக்கோப்பைகள் அடுக்கிவைக்கப்பட்டிருக்க
செயிப்பதற்கானதொரு ஆடுகளமாய் மனிதர்களைத் தாங்கிநிற்கிறது மைதானம்
போட்டி துவங்கும் முன்பே பரிசைக்குறிவைத்து
திரைமறைவில் நகரும் காய்கள்
தான் ஓடிச் செயிக்கத் தடையாய் இருப்பவனை
இழுத்துத் தள்ளும் தந்திரங்கள்
எங்கென்று தெரியாதபடி ஒவ்வொருவனுக்குள்ளும்
ஒளிந்துகொண்டிருக்கும் கத்திகள்
பீத்துளி கிளப்பிப் பயமுறுத்துவதிலிருந்து
உயிர்பறித்து உண்ணும் உள்வெறிவரையான உண்மைகள்
எல்லாம் செரித்துப் பெருமூச்சுக்களாய் வெளிப்படும் பரப்பில்
காற்றில் கலக்கும் அவ்வதிர்வுகள் தாக்கக்
கறுத்துக்கனக்கும் மேகங்கள்
வந்த திசையிலேயே திரும்பச் செல்கின்றன
இன்னும் பெய்யாத மழையைச் சுமந்தபடி

மனிதர்களின் மைதானங்களில்
மழையாய்ப் பெய்யமுடியாத தம் துக்கத்தை
வெற்றிலை எச்சிலின் காய்ந்த நிறம்கொண்ட
பாலைவனத் தரையில்தான் யாருமற்ற இரவுகளில்
இரத்தமாய் அழுது தீர்க்கின்றன அம்மேகங்களெனக்
கூவிக் கடக்கிறது
இன்று எதற்கோ
இவ்வழியாகப் பறந்த வால்நீண்ட கருங்குருவி

6 Comments:

At 10:43 PM, July 03, 2007, Blogger Vaa.Manikandan said...

//குதப்பித்துப்பிய வெற்றிலைச்சாற்றின் காய்ந்த நிறத்தில்
சிவந்துகிடக்கிறது பாலைமணல்தரை//

இந்த வரி எனக்கு மிகப் பிடித்திருக்கிறது

 
At 10:53 PM, July 03, 2007, Blogger Ayyanar Viswanath said...

/இன்று எதற்கோ
இவ்வழியாகப் பறந்த வால்நீண்ட கருங்குருவி /

நல்ல கவிதை.இந்த கடைசி வரி யுக்தி அற்புதம்

 
At 2:50 AM, July 04, 2007, Blogger கதிரவன் said...

நல்லதோர் கவிதை.

நான் ரசித்த வரிகள் :
//தான் ஓடிச் செயிக்கத் தடையாய் இருப்பவனை
இழுத்துத் தள்ளும் தந்திரங்கள்
எங்கென்று தெரியாதபடி ஒவ்வொருவனுக்குள்ளும்
ஒளிந்துகொண்டிருக்கும் கத்திகள்//


இதில் 'செயிக்க' என்பதற்குப்பதிலாக 'வெல்ல'எனத் தமிழ் வார்த்தை இட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்

 
At 12:23 PM, July 04, 2007, Blogger முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா எழுதி இருக்க்கீங்க...

கதிரவனுக்கு பிடித்த வரிகளே எனக்கும் பிடித்தது.

 
At 9:44 AM, July 05, 2007, Blogger செல்வநாயகி said...

மணிகண்டன், அய்யனார், கதிரவன், முத்து,

உங்கள் வாசிப்புக்கும் மறுமொழிகளுக்கும் நன்றி.

கதிரவன்,
முடிந்தவரை தமிழ்ச்சொற்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்ற முனைப்பும், ஆர்வமும் உண்டு. ஆனால் சிலசமயங்களில் அந்த நேரத்தில் சொல்ல முயலும் பொருளிலேயே கவனம் குவித்துக்கொண்டு கற்பிக்கப்பட்ட சொற்களையே போட்டு நிரப்பிவிடுவது நேர்ந்துவிடுகிறது எனக்கு. சுட்டிக்காட்டியமைக்கு மகிழ்ச்சி.

முத்து,
நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களுடனே இங்கிருந்து எடுத்துச்சென்றுவிட்ட கலகலப்பை மீண்டும் கொண்டுவந்து எழுதத் துவங்கியிருக்கிறீர்கள்:)) தொடருங்கள்.

 
At 12:00 AM, July 09, 2008, Blogger srithar said...

last five lines i like very much.
very nice.please leave another one poem about this feel.

thank u

s,srithar))

 

Post a Comment

<< Home