நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Friday, April 20, 2007

ஒரு கிறுக்கியாக வாழும் ஆசை

அரவமில்லாத மௌனங்களில்
புல்வெளியில் உலவும் சுதந்திரமான முயல்குட்டியைப்போல்
மனதில் அலைந்துகொண்டிருக்கிறது
ஒரு கிறுக்கியாக வாழும் ஆசை

மனிதர்களை இரைச்சலுக்குள் புதைத்துவைத்திருக்கும்
இக்கொடும்நகரில்
சிறுதெருவின் முனையொன்றில்
பேரானந்தப் பெருவாழ்வு சுகிப்பவளாய்
புன்னகைத்து நடந்தபடியிருக்கும்
அக்கிறுக்கிதான் விதைத்திருக்கவேண்டும்
எனக்குள்ளும் அப்படியான ஆசையை

பேருந்து நிறுத்தம் அவள் படுக்கையறை
கைப்பைசுமந்தோடும் காரியதரிசிகளும்
நகரும் வாகனங்களின் அலறும் ஒலிப்பான்களும்
ஒன்றும் செய்யமுடியாத அவள் தூக்கத்தை
புத்தகப்பையுடன் கட்டப்பட்ட சிணுங்கும்சிறுவன்
கடக்கும் சிறுநொடியில் கலைத்துவிட்டுப்போகிறான்
அவன் அழுகுரல் கேட்டுணரும்
கிறுக்கியின் காதுகள் கூர்மையானவை

சாக்கடை அவள் ஓய்வறை
முடப்பட்ட நாற்றங்களாய்
ஒளித்துவைத்துக்கொண்ட மனங்களை
சுமந்துதிரியும் மானுடரோடொப்பிடுகையில்
இத்திறந்த சாக்கடை
பெரும்நாற்றமில்லையெனச் சிரித்திருக்கிறாள்
கிறுக்கியின் நாசிகள் பலமானவை

சிரிப்பதற்கு அவள் சலிப்பதில்லை
வீட்டிற்கு வருவோரை
'வீதிமுனையில் பைத்தியம் இருக்கிறது
பார்த்துப்போங்கள்' என தவறாது சொல்லும்
வைரமூக்குத்திக்காரி வழியில் பட்டாலும்
தலையாட்டிச் சிரிக்கிறாள் கிறுக்கி
அவளுக்கு யாருடனும் உடன்பாடில்லாததைப்போல்
முரண்பாடுகளுமில்லை
கிறுக்கி ஒரு ஞானி

அவளுக்கும் உண்டு நண்பர்கள்
பக்கத்துப் பள்ளிக்கூடத்தின்
மீந்த சத்துணவு கிறுக்கியின் வட்டலில்
அதையும் பங்கிட்டுக்கொள்கிறாள்
எசமானர்கள் இல்லாத
எலும்புதுருத்திய நாய்களுக்கும்
கூரைமேல் புதுப்படையல் வாய்க்காத
இறக்கை இளைத்த காக்கைகளுக்கும்
கிறுக்கி ஒரு உயிர்நேசி

அவளுக்கென உண்டு ஒரு மொழி
சாம்பலைக்கிளறி கரித்துண்டுகளெடுத்துவந்து
அதட்டும் குரல்களற்ற ஆதரவான நாட்களில்
தெருவோரச் சுவரொன்றில்
எழுதிக்கொண்டிருக்கிறாள் கிறுக்கி
வாழ்வு ஒரு சமுத்திரம் என்றோ
அது ஒரு காட்டாறு என்றோ
அல்லது அது ஒரு பனித்துளி என்றோ
எழுதியிருக்கலாம் அவள்
அதற்கான காரணங்களையும் சேர்த்து

பைத்தியம் கிறுக்கியிருக்கிறதென
மனிதர் சுண்ணாம்புகொண்டு அழிப்பதற்குமுன்
அவசரமாய்ப் படித்துக்கொண்டிருக்கின்றன
நிலவும் நட்சத்திரங்களும்
இரவில் நெடுநேரம் கண்விழித்து

யார் கண்டது
அவற்றின் நாளைய ஒளியில்
கிறுக்கியின் மொழி கசிந்தாலும் கசியும்.


நண்பர் ஆழியூரான் கிறுக்கு ஆட்டத்துக்கு அழைத்ததோடு தனிமடலிட்டும் எழுதியே ஆகவேண்டுமென அன்புக் கட்டளை இட்டிருந்தார். சட்டென எழுதமுடியாமல் மனம் சண்டித்தனம் செய்தபோது அவரிடம் வாய்தா வாங்கிக்கொண்டே காலம் கடத்திவந்தேன். ஆனால் அவ்வப்போது உள்ளே கிறுக்கலாய் இதுகுறித்த எண்ணங்கள் வந்தபடியுமிருந்தன. சமீபமாகத்தான் கண்ணுற்றேன் விஎஸ்கேவின் பதிவிலும் எனக்கு ஒரு அழைப்பு இருந்தது. இருவருக்குமாய் சேர்த்து இன்று அரங்கேற்றம்:)

கிறுக்கா, கிறுக்கா நான் கிறுக்கேதானா......
காலா, அரையா, இல்லை முழுசேதானா......
இளசா, நடுவா, இல்லை முத்தலேதானா......

இன்னும் பதிலறியாத தேடல்கள் பல இருப்பதுபோல் இதுவும் உண்டு. குணங்களையும், அன்றாட நடவடிக்கைகளையும் வைத்துத்தான் இது முடிவுசெய்யப்படும் எனில் நீங்கள் என்னை எப்படியும் முடிவுசெய்துகொள்ளுங்கள் என்று பெரும்பொறுப்பை(!!!) உங்களுக்கே கொடுத்து நான் உதவியாகச் சில குணங்களை எழுதிவிட்டு நகர்ந்துகொள்கிறேன்:))

1. பேரொலி மழையின் முடிவொன்றில் பெரும்வெள்ளம் கரைபுரண்டு ஓடப் பள்ளிக்கூடம் சென்றிருந்த பிள்ளைகளைத் தாவிப் பிடித்தும், தட்டுத் தடுமாறியும் கரைதாண்டி வீடுகொண்டுவந்துசேர்க்கும் முயற்சியில் பெரியவர்கள். ஒவ்வொருவராய்க் கரைதாண்டிக் கொண்டுவந்துவிட்டு நாங்கள் பத்திரமாய் வீடுபோய்ச் சேர்வோமென்ற நம்பிக்கையில் திரும்பிப் போனார்கள். எல்லோருடனும்தான் இருந்தேன். எப்போது
விலகினேன் எனத் தெரியாது. ஓரமாய் உடைந்திருந்த ஒரு சிறுபாலம் மீது உட்கார்ந்தபடியே செங்கலரில் சினந்தோடிய வெள்ளத்தில் மூழ்கிய பார்வையைத் திருப்பி எடுக்கமுடியவில்லை. அப்படியே மணிக்கணக்கில் அந்தப் பெருவெள்ளத்தின் பேரொலியில் என்ன கண்டிட்டேன்? தெரியாது. வீட்டிலிருந்து வீதிக்குவந்து பிள்ளையைக் காணாத அதிர்ச்சியிலும், ஓடிய வெள்ளத்தில் மிதந்துபோன கருப்புநிற உருண்டையான
பொருளையெல்லாம் அது என் தலையாக இருக்குமோ என்ற பீதியிலும் சேர்ந்திருந்த துக்கத்தை என்னைக் கண்டுபிடித்தவுடன் அழுது கரைத்தார் அம்மா. அப்போதும் இப்போதும் அம்மாவின் அந்த அழுகை எதுவும் செய்யவில்லை. ஆனால் அந்த வெள்ளம் இன்னும் உள்ளே ஓடியபடி இருக்கிறது.

தண்ணீர் அருவியாய்க் கொட்டுகிற இடத்தில் யார் உடனிருந்தாலும் அவர் தெரிவதில்லை. மழையாய்ப் பெய்கையில் குடைவிரிக்கும் பழக்கம் பிடிப்பதில்லை. பனியாய் உறைகையிலும் உயிர்குடிக்கும் குளிரென்றாலும் அதில் உலாவவே பிரியம். நான் தள்ளியிருந்தாலும் எனக்குள்ளிருந்து எழும் ஒருத்தி தான் சலிக்கும்வரை இங்கெல்லாம் கூத்தாடியே திரும்புவாள். அவளின் கூத்தாட்டப் பொழுதுகளில் மற்றவர்களுக்கு நான் ஒரு செவிடி, குருடி, ஊமையும்கூட.

2. ஒரு பெரியம்மா தூக்கு மாட்டிச் செத்துப்போனார். அடுத்த வீட்டில் கிடத்தியிருந்தார்கள் சவத்தை. சன்னல் வழியாய் நிகழ்வுகள் பார்த்தேன். அங்கே அழுதவர்களில் எத்தனைபேர் உண்மையாய் அழுதார்கள், எத்தனைபேர் ஒப்புக்கு அழுதார்கள் என்று பகுத்தாயும் வயதில்லை. எதற்கு அழுகிறார்கள் என்ற கேள்வியுமில்லை. வெறுமனே பர்த்துக்கொண்டிருந்தேன். சுடுகாட்டில் வைத்துத் தீமூட்டிவிட்டு எல்லோரும்
வீடுவந்துசேர்ந்தபிறகு நான்மட்டும் தனியாகப் போய்ச் சுடுகாட்டுக்குக் கொஞ்சம் தள்ளியிருந்த
பாறையொன்றின் மேல் நின்று அந்தப் பெரியம்மா இன்னும் எரிந்துகொண்டிருக்கிறாரா எனப்
பார்க்கத்துவங்கி தீச்சுவாலை முழுதுமாய் அணையும்வரை நின்றுகொண்டிருந்தேன். ஏன் செய்தேன் தெரியாது.

இப்போதும் இப்படியான அனிச்சை அவதானிப்புகள் நிறைய உண்டு. குழந்தை, பறவை, என சில கடந்துபோகும்போது நினைவு ஒருங்குவித்த கவனிப்புகளில் இருப்பேன். எந்த அவசரமும் இந்த நேரச் செலவழிப்புகளைப் பறித்துக்கொள்ள அனுமதிப்பதில்லை. சோறு, தண்ணி எல்லாம் இரண்டாம்பட்சம்தான்.

3. 100 சதவீத ஆசை. ஒரு வேலை, ஒரு நட்பு, ஒரு உறவு அதில் எதுவென்றாலும் ஏற்றுக்கொண்டபின் அதில் என் பங்களிப்பை 100 சதவீதம் செய்யாவிட்டால் அல்லது செய்யமுடியாத எதிர்பாராத் தடைகள் வந்தால் மண்டைகுறுகுறுக்க, மனசு உறுத்தி, சித்தம் சிதறி ஒரு ஒழுங்கில்லா மொழியில் உளறிக்கொண்டிருப்பேன்.

4. தண்ணி அடிப்பதில்லை என்றாலும் நிறையக் குடித்துவிட்டு சாலையில் நினைவிழந்துகிடப்பவனுக்கான மயக்கம் வருவதுண்டு ஒரு நல்ல புத்தகம் படித்து முடிக்கும்போது. ஒரு மாலையில் சந்திக்கும் நபர் தன் குரல்கிழித்து, வியர்வை துடைத்துப் பேசிக்கொண்டிருந்தாலும் நான் "நீ என்ன பேசினாலும் என்னை ஒன்னும்
செய்யமுடியாது" என்ற பாவனையில் அமர்ந்திருந்தால் மனதுக்குள் அன்று படித்துத் தொலைந்த புத்தகம் பேசிக்கொண்டிருக்கிறது என்று பொருள். அடிக்கும் தொலைபேசியில் உயிர்நண்பன் அழைத்தாலும் அது அவனுக்குரிய எண்ணென்று தெரிந்தாலும் எடுக்காமல் அதேபோல் பார்த்துக்கொண்டிருப்பேன். "இன்று குடித்திருக்கிறாயா எனக் கேட்டுவிட்டு ஒருவரிடம் சிலவிடயங்களைப் பேசும் அல்லது பேசாத முடிவெடுப்பதுபோல், உன்னிடம் படித்திருக்கிறாயா எனக் கேட்டுவிட்டு எதையும் செய்யவேண்டியிருக்கிறது"
என்பது என்மேலான நானும் ஒப்புக்கொண்ட குற்றச்சாட்டு.

5. யோகா படிக்கிறேன் என்றெல்லாம் ஆரம்பித்து முடித்து இப்போது யாராவது தனிப்பட்ட சுயநலம்சார்ந்த பிரச்சினைகளைச் சொல்ல ஆரம்பித்தால் "இதுக்கு ஏன் கவலைப் படறீங்க? எதையுமே நடந்தா நல்லது, நடக்காட்டி ரொம்ப நல்லதுன்னு இருந்து பாருங்க வாழ்வில் எதற்கும் கவலை வராது" என்று எடுத்துவிடுவது, தங்கம் பணம் பொருள் என எது தொலைந்தாலும் நானும் சிறுதுளியும் கவலையின்றி இருக்கத் துவங்கியிருப்பது இதெல்லாம் வீட்டிலுள்ளவர்களுக்கு எப்போதாவது கவலை தந்தவண்ணம் உள்ளது "எங்கே இவளே ஒருநாள் தொலைந்து போவாளோ?" என்று. "ஏற்கனவே எங்கோ தொலைந்துபோய்த்தான் வேறு வேறு இடங்களில் தேடிக்கொண்டிருக்கிறேனாக்கும்" என்று பதிலுக்கும் நான் எதையாவது எடுத்துவிடுவது அதைவிடக் கொடுமையாக இருக்கும் அவர்களுக்கு:))

6. இருபத்தைந்து கிலோவைத் தலையில் வைத்து இருபதுமைல் நடக்கச் சொன்னாலும் சுமையாய் இருக்காது. இரண்டு அல்லது மூன்று வாண்டுகளை ஒரேசமயம் தூக்கிக்கொண்டு ஒன்று அல்லது இரண்டு மாடிகள்கூட ஏறினாலும் சுமையாய் இருக்காது. இந்தநாள், இந்த நேரத்திற்குள் இந்த வேலையைச் செய்து முடிக்கவேண்டும் என்று கொடுக்கப்பட்டாலும் சுமை அழுத்தாது. இவ்வளவு பளுவானாலும் தூக்கிவிட முடியும் என்ற திமிர் உண்டு. ஆனால் இரண்டு சொற்களைச் சொல்லப்படவேண்டிய இடத்தில் சொல்லாது விட்டுவிட்டால் அது மனதில் பெரும்சுமையாக இருந்து அழுத்தும். ஒருவருக்கு அதைச் சொல்லாது விட்டதை
ஒரு பத்துப் பேருக்காவது சொல்லிப் பாரம் குறைக்க முயன்றாலும் விடாது கனக்கும் அவை. அவை மன்னிப்பு, நன்றி என்ற இரண்டும்தான். அறியாமையாலோ, விளங்காமையாலோ ஒரு தவறு செய்துவிட்டேன் என்றால் அது யாரென்றாலும் பிறகு யோசித்து உணர்கையில், அல்லது நான் பொறுப்பான ஒன்றிற்கு நான் சரியாகப் பங்காற்றவில்லை என்று வந்தால் சம்பந்தப்பட்ட இடத்தில் மன்னிப்புக் கேட்டே ஆகவேண்டும். அதேபோல் நன்றி. இந்த வார்த்தை படுத்தியபாட்டுக்கு ஒரு கதை சொல்லலாம்:))

பத்து மாதங்களாய் உள்ளே சாகசங்கள் நிகழ்த்தியவண்ணம் ஒட்டிக்கொண்டிருந்தவர் வெளியேவரத் துடித்தார். வலிவந்து மருத்துவமனை போய், கொண்டவர் கூட இருக்க, கூட இருந்தும் வாங்கமுடியாத வலியைப் பார்த்ததில் அவர் துவண்டு போயிருக்க, 16 மணிநேரங்கள் சுகப்பிரசவத்திற்குக் காத்திருந்த மருத்துவர் இனியும் தாமதிக்க முடியாதென அவசரகதியில் அறுவைசிகிச்சை முடித்து மாதக்கணக்காய் மறைந்திருந்து மகிழ்வித்த உயிரை நேரில் எடுத்துக் காண்பித்தார். இரண்டு மூன்று முறை மயக்கமருந்து கொடுக்கப்பட்டும்
அந்த முகம் பார்க்கும் நிமிடம்வரை ஒரு வைராக்கியத்தில் பிடித்துவைத்திருந்த நினைவு அதற்கொரு முத்தம் பதித்த அடுத்த நொடி காணாமல் போனது. அதற்குப் பிறகு எதுவும் தெரியாது. கிழிக்கப்பட்ட வயிறு ஒட்டப்பட்டதோ, வெறும் மயக்கம்தானா? வேறேதும் நிகழ்ந்துவிட்டதா எனத் துணையான நண்பன் துடித்துக்கொண்டிருந்ததோ, செவிலிகள் எல்லாம் சேர்ந்து அள்ளிக்கொண்டுவந்து அறையில் போட்டதோ, விடாத குளிரில் வெடவெடத்த உடம்பை அவர்கள் என் உள்ளங்கால் தேய்த்து உஷ்ணப்படுத்தியதோ எதுவும்
அறியாத உணர்வற்ற நிலையில் கட்டிலில் கிடந்திருக்கிறேன். எல்லாம் சரியே என சோதித்த மருத்துவர், வலிவந்த நொடிமுதல் என் இன்னொரு தாயாக உடனிருந்த களைப்பில் "காலையில் பார்க்கிறேன். அவள் சரியாக இருக்கிறாள்" எனச் சொல்லி நகர்ந்து நள்ளிரவுதாண்டிய இருளில் மருத்துவமனை வாசல்வரை போயிருப்பார். உடல் அசையாத மயக்கத்திலும் என் உதடுகள் அசைத்துக் கேட்கிறேன் "where is Bonnie?"
"அவர் ஓய்வுகொள்ளப் போயிருக்கிறார், காலை மறுபடியும் உன்னைப் பார்ப்பார், உறங்கு" என்று உடனிருந்தவர்களின் குரல்கள் காதுகளை எட்டவில்லை. தொடர்ந்து அதே பல்லவியை அழுத்தமாகவும் பாடத் தொடங்குகையில் பயந்துபோன செவிலிகள் ஓடிப்போய்ப் பிடித்தே வந்துவிட்டார்கள் தன் வாகனம் கிளப்பிக்கொண்டிருந்த மருத்துவரை. "Yes dear I am here" அது Bonnie யின் குரலாக வந்ததும் மூளைக்கு எட்டுகிறது. "Thank you doctor, you saved me and my child" அவ்வளவுதான். அதன்பின் அவர் தலைதடவிக்
கொடுத்ததோ இந்த நன்றியைக் காலைவரை சுமந்திருக்க முடியாத அவசரக்காரியா இவள் என்று அவர் நகையாடிச் சென்றதோ எதுவும் தெரியாத உணர்வற்ற நிலைக்கே மீண்டும் பலமணி நேரங்கள் பயணம்.

சொல்லப்படவேண்டியவர்க்கு இந்த நன்றியை ஒரு மடலிட்டோ, தொலைபேசி அழைப்பிலோ, ஒரு செய்கையிலோ செலுத்திவிடும்வரை மற்ற நிகழ்வுகளிலும் மேற்சொன்ன அவஸ்தை வாட்டி எடுத்துவிடும் என் வலியை யாரிடம் சொல்வது:)) பிரசவ வலி தவிர வேறெதற்கும் வைத்தியம் செய்யாத Bonnie க்குப் புரியுமா என்னுடைய இந்த ரகசிய வலி:)) Bonnei க்குப் பிரச்சினையில்லை ஒருவருட உறவுதான். மற்றவர்கள் என்ன செய்வது? எனவே 50 மைல்கள்தாண்டி இந்திய மளிகைசாமான்கள் வாங்கப்போனாலும் அங்கிருந்து
கிளம்பும்போது மறக்காமல் கேட்டுக்கொள்கிறார் "நீ எதும் மறக்கலையே?". "இல்லையே,
எழுதிக்கொண்டுவந்த சாமான்கள் எல்லாம் வாங்கி விட்டேன்" இது நான். "அதில்லை. இங்கு யாருக்காவது நன்றி, மன்னிப்பு எல்லாம் சொல்லவேண்டியிருந்தால் மறக்கலையே?". இப்படித்தான் ஓடிக்கொண்டிருக்கிறது வாழ்க்கை:))


இத்தனை குணங்கள் போதும் இப்போதைக்கு. சீரியசாக எழுதக்கூடாதென நீங்கள் சொல்லியிருந்தும் இப்படித்தான் எனக்கு எழுதமுடிந்தது ஆழியூரான். பொறுத்துக்கொள்ளுங்கள்:))

தென்றல், லட்சுமி இருவரிடமும் இங்கு அழகுக்காகவும் ஒரு வாய்தா வாங்கிக்கொள்கிறேன்.

60 Comments:

At 2:35 AM, April 20, 2007, Blogger Thangamani said...

நல்ல பதிவு செல்வநாயகி! சொல்ல நிறைய இருக்கிறது. என் மனதால் சுமக்கமுடியாத விதயம் என்றால் என்னவாயிருக்கும் என்று ஒரு நாள் பார்த்துக்கொண்டு (ஆமாம் பார்த்துக்கொண்டு) இருந்த போது நன்றி என்பதுதான் அத்தனை கனத்து மூச்சை இறுக்கியது.

நன்றி, இந்தப்பதிவுக்கும், எழுதுவதற்கும்.

 
At 11:47 AM, April 20, 2007, Blogger தென்றல் said...

மிகவும் இரசித்தேன், செல்வநாயகி!

குறிப்பாக...
/அம்மாவின் அந்த அழுகை எதுவும் செய்யவில்லை. ஆனால் அந்த வெள்ளம் இன்னும் உள்ளே ஓடியபடி இருக்கிறது.
/
/ஒரு வேலை, ஒரு நட்பு, ஒரு உறவு அதில் எதுவென்றாலும் ஏற்றுக்கொண்டபின் அதில் என் பங்களிப்பை 100 சதவீதம் செய்யாவிட்டால்/
/... என்ற பாவனையில் அமர்ந்திருந்தால் மனதுக்குள் அன்று படித்துத் தொலைந்த புத்தகம் பேசிக்கொண்டிருக்கிறது என்று பொருள்./
/விடாது கனக்கும் அவை. அவை மன்னிப்பு, நன்றி என்ற இரண்டும்தான். /

/அதேபோல் நன்றி. இந்த வார்த்தை படுத்தியபாட்டுக்கு ஒரு கதை சொல்லலாம்:))
/
நெகிழ்ச்சியான சம்பவம்...!
சமீபத்தில் அருகிலிருந்து என் மனைவின் 'வலி'யை அனுபவிக்க முடிந்ததால் இன்னும் பசுமையாக நெஞ்சில் நிற்(வலி)கிறது.

கவிதைப்பத்திலாம் சொல்ல நம்ம தமிழ்நதி மற்றும் சில 'பெரியவங்க' இருக்காங்க... ;)

 
At 12:01 PM, April 20, 2007, Blogger பாரதி தம்பி said...

//மனிதர்களை இரைச்சலுக்குள் புதைத்துவைத்திருக்கும்
இக்கொடும்நகரில்
சிறுதெருவின் முனையொன்றில்
பேரானந்தப் பெருவாழ்வு சுகிப்பவளாய்
புன்னகைத்து நடந்தபடியிருக்கும்
அக்கிறுக்கிதான் விதைத்திருக்கவேண்டும்
எனக்குள்ளும் அப்படியான ஆசையை//

அழகான மெல்லிய உணர்வு.('நான் கிறுக்கா திரியுறது உங்களுக்கு அழகா இருக்கா..? உங்களையெல்லாம் மாயக்கண்ணாடி படத்தை செகண்ட் ஷோ பார்க்க விடனும்..' என்று கிறுக்கி திட்டுவது காதில் விழுகிறதா..?)

//"இன்று குடித்திருக்கிறாயா எனக் கேட்டுவிட்டு ஒருவரிடம் சிலவிடயங்களைப் பேசும் அல்லது பேசாத முடிவெடுப்பதுபோல், உன்னிடம் படித்திருக்கிறாயா எனக் கேட்டுவிட்டு எதையும் செய்யவேண்டியிருக்கிறது"
என்பது என்மேலான நானும் ஒப்புக்கொண்ட குற்றச்சாட்டு.//

நல்லாயிருக்கு இந்த குற்றச்சாட்டு..புன்னகைப்பூக்க வைத்த வரிகள்..

//இப்போதும் இப்படியான அனிச்சை அவதானிப்புகள் நிறைய உண்டு. குழந்தை, பறவை, என சில கடந்துபோகும்போது நினைவு ஒருங்குவித்த கவனிப்புகளில் இருப்பேன். எந்த அவசரமும் இந்த நேரச் செலவழிப்புகளைப் பறித்துக்கொள்ள அனுமதிப்பதில்லை. சோறு, தண்ணி எல்லாம் இரண்டாம்பட்சம்தான்.//

கிறுக்கி ஒரு ஞானி...?

//தண்ணீர் அருவியாய்க் கொட்டுகிற இடத்தில் யார் உடனிருந்தாலும் அவர் தெரிவதில்லை. மழையாய்ப் பெய்கையில் குடைவிரிக்கும் பழக்கம் பிடிப்பதில்லை. பனியாய் உறைகையிலும் உயிர்குடிக்கும் குளிரென்றாலும் அதில் உலாவவே பிரியம். நான் தள்ளியிருந்தாலும் எனக்குள்ளிருந்து எழும் ஒருத்தி தான் சலிக்கும்வரை இங்கெல்லாம் கூத்தாடியே திரும்புவாள். அவளின் கூத்தாட்டப் பொழுதுகளில் மற்றவர்களுக்கு நான் ஒரு செவிடி, குருடி, ஊமையும்கூட.//

கிறுக்கி ஒரு நீர்நேசி..?

//இந்த நன்றியைக் காலைவரை சுமந்திருக்க முடியாத அவசரக்காரியா இவள்..?//

அதானே...(ஆனாலும் நெகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.)

-----இப்படி மொத்தக்கட்டுரையிலும் சின்னச்சின்னதாக ரசிக்க வைத்தவை நிறைய உண்டு. ஆனாலும் அந்த காமெடி மட்டும் மிஸ்ஸிங்.

என் வார்த்தைகளை ஏற்று, கிறுக்கியாக மாறியதற்கு நன்றி...:::)))

 
At 2:11 PM, April 20, 2007, Blogger ilavanji said...

செல்வநாயகி,

அருமை! இதைத்தவிர வேறென்ன சொல்வதென தெரியவில்லை!

 
At 11:05 PM, April 20, 2007, Blogger Ayyanar Viswanath said...

சொல்லப்படாத வார்த்தைகளின் துயரம் நெருடலாய் கொல்லும் தவறவிட்ட சந்தர்ப்பத்தின் சாயல்களை சந்திக்கும் போதெல்லாம்..உணர்வழிந்தும் உள்ளுனர்வின் விழிப்பில் சொல்லிய அந்த நன்றி விலை மதிக்கமுடியாதது..
அட இந்த சாயல்களிலும் மனிதர்களான்னு ஆச்சர்யப்படத்தான் முடியுது..:)

'ஆளரவமற்ற தனிமை'
'புல்வெளியில் உலவும் முயல்'

மனசோட அழகின் துல்லிய வெளிப்பாடு

ஒரு உரைநடைக் கவிதை படித்த உணர்வுதான் மேலோங்கியது
:)

 
At 11:51 PM, April 20, 2007, Blogger Ayyanar Viswanath said...

/ஒரு உரைநடைக் கவிதை படித்த உணர்வுதான் மேலோங்கியது/

இந்த முழுப்பதிவும் ஒரு உரைநடை கவிதை படித்த உணர்வை ஏற்படுத்தியதுன்னு சொல்ல வந்தேன்
:)

 
At 12:35 AM, April 21, 2007, Blogger தருமி said...

இப்பதிவைப் படித்தபின் தொடர்ந்து உங்கள் பதிவுகளைப் படிக்கலாமா கூடாதா என்று தோன்ற ஆரம்பித்து விட்டது. என் வயதிற்கு மனசை ரொம்பவே லேசாகவே வைத்திருக்க வேண்டுமாமே .. மனசை கனக்க வைக்கும் விஷயங்களைப் பற்றி வாசிக்க வேண்டாமென்கிறார்களே ...

அந்த dr. bonnie ... wow...

 
At 1:30 AM, April 21, 2007, Blogger செல்வநாயகி said...

தங்கமணி,

///என்று ஒரு நாள் பார்த்துக்கொண்டு (ஆமாம் பார்த்துக்கொண்டு) இருந்த போது ////

இதில் நீங்கள் சொல்லவரும் ஆழ்பொருளை உள்வாங்கமுடிகிறது. நாமே தள்ளிநின்று பார்த்துக்கொண்டிருக்க முடிகிற விழிப்புநிலை கூடுவது அழகானது. அதை அவ்வப்போது தவறவிடுவதும், கூடுவதுமாய் இருக்கிறது எனக்கு:))

தென்றல்,
மீண்டும் ஒருமுறை சொல்லிக்கொள்கிறேன்:)) ரசனைகளில் ஒத்துப்போவது உவப்பாக இருக்கிறது.

///சமீபத்தில் அருகிலிருந்து என் மனைவின் 'வலி'யை அனுபவிக்க முடிந்ததால் இன்னும் பசுமையாக நெஞ்சில் நிற்(வலி)கிறது. ////


உங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்கிறேன். மனைவியின் பிரசவங்கள் பெரும்பாலும் அவரின் தாய்வீட்டில் நடந்துவிடும் பழக்கத்தில் இருந்துவிட்ட நம் பழம்தலைமுறை ஆண்களிலிருந்து மாறுபட்டு இத்தலைமுறை ஆண்கள் அதுவும் இம்மாதிரி அந்நியதேசங்களில் வாழநேரும்போது மனைவியின் பிரசவத்தில் மேலும் தன் பொறுப்புக்கள்கூடி ஒரு புதிய அனுபவத்தினூடாகப் போய்வருகிறார்கள் என்பது உண்மை.

வாழ்த்துக்கள் உங்களுக்கும், உங்கள் மனைவிக்கும்.

///கவிதைப்பத்திலாம் சொல்ல நம்ம தமிழ்நதி மற்றும் சில 'பெரியவங்க' இருக்காங்க///

அப்ப நம் தமிழ்நதி, அய்யனாரையெல்லாம் வயசானவங்கன்னு சொல்றீங்களா:))

ஆழியூரான்,

இந்த விளையாட்டுக்கு அழைத்து என்னை நான் பார்த்துக்கொள்ள ஒரு வாய்ப்பு வழங்கினீர்கள்:))
ஒவ்வொரு பத்தியா எடுத்துப்போட்டு உபவிளக்கமெல்லாம் கொடுத்திருப்பதையும் ரசித்தேன்.

நீங்க எழுதச்சொன்ன பிறகு நான் கிறுக்கியா இல்லையான்னு சீரியசா யோசனை பண்ண ஆரம்பிச்சிட்டேன். இதுல உங்களுக்கு காமெடி இல்லைன்னு கவலை வேற வருதா:))

இளவஞ்சி,
நீங்கள் தலைகாட்டியது நன்று. அத்துவானக் காட்டுல ஒரு சிட்டு தேன் தேடி அலையலாம். ஆனா அந்தச் சிட்டையே காணாம்னு தேட வேண்டியிருக்கு இங்கு:)) ஏன் அடிக்கடி எழுதுவதில்லை?

அய்யனார்,
தென்றல் கவிதை பத்திப் பேசப் பெரியவங்க எல்லாம் வருவாங்கன்னு சொன்னப்ப அந்தப் பட்டியல்ல உங்க பேரையும் நினைச்சுக்கிட்டேன் நான். தவறாமல் வந்தமைக்கு மகிழ்ச்சி.

தருமி,
ரொம்ப வன்முறை பண்றனுங்களா? ஆனா அதுக்காக நீங்க படிக்காமையெல்லாம் இருக்காதீங்க. நீங்கெல்லாமே படிக்கலைன்னா எங்க எழுத்துப் பரிசோதனைய என்ன பண்றது:)) கடவுளத் தவிர வேற எதுமேலயாவது பாரத்தைப் போட்டுட்டுத் தைரியமாப் படிக்கனும் நீங்க:)) என்னவோ தெரியலை உங்ககிட்ட எப்பவுமே நிறைய உரிமை எடுத்துக்கிட்டு இப்படி எதாவது வாயாடச் சொல்லுது எனக்கு:))

நன்றி அனைவருக்கும்.

 
At 1:30 AM, April 21, 2007, Blogger முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம்...படித்தேன்..அது எப்படிங்க இப்படி எல்லாம் எழுதறீங்க...நேரம் இல்லன்னு ஒக்கார்றது இல்ல ஒக்காந்தா ஒரேடியா எழுதி அசத்திடறீங்க.

நான் பகுதி பகுதியாப் பிரிச்சு கொஞ்சம் கொஞ்சமாத்தான் படிக்க்றேன் உங்க பதிவுகளை. :)

 
At 1:45 AM, April 21, 2007, Blogger செல்வநாயகி said...

முத்து,

வாங்க வாங்க. நீங்களெல்லாம் தரும் உற்சாகமன்றி வேறென்ன இருக்கிறது இவற்றிற்குத் துணையாய்....நன்றி உங்கள் மறுமொழிக்கு.

 
At 2:31 AM, April 21, 2007, Blogger தருமி said...

I am greatly honoured. thank you.

உங்களோடு சேர்ந்து நானும் இளவஞ்சியிடம் கேட்கிறேன்: "ஏன் அடிக்கடி எழுதுவதில்லை? "

 
At 5:56 AM, April 21, 2007, Blogger Ayyanar Viswanath said...

/அந்தப் பட்டியல்ல உங்க பேரையும் நினைச்சுக்கிட்டேன் நான்./

இந்த நம்பிக்கைகள் பயம், மகிழ்ச்சி என இருவேறு உணர்வுகளை ஒரே நேரத்தில் ஏற்படுத்துகிறது

:)

 
At 10:10 AM, April 21, 2007, Blogger பத்மா அர்விந்த் said...

You took me back in memory lane by 12 years. I shared this one post with arvind.
I am sorry to post my comments in english(no tamil fonts).
enjoyed reading it.

 
At 11:26 AM, April 21, 2007, Blogger சாலிசம்பர் said...

அற்புதம்!!!

 
At 12:06 PM, April 21, 2007, Blogger செல்வநாயகி said...

தருமி,
நல்லது, இனிமேல் நிறையவே உங்ககூட சண்டை போடலாம்னு தோணுது:))

அய்யனார்,
பயமெல்லாம் தேவையில்லை. உங்களின் அனைத்துப் பதிவுகளையும் படித்துவிட்டேன். நன்றாக எழுதுகிறீர்கள்.
உண்மையைச் சொன்னால் நந்தா, நீங்கள், மகா, தென்றல், லட்சுமி, வித்யாசாகரன், இந்த வரிசையில் இன்னும் சில புதியவர்கள் வலையுலகில் ஒரு ஆரோக்கியமான புது இழையை உற்சாகத்தோடு உருவாக்கி நகர்த்தி வருகிறீர்கள். கவிதை எழுதும் ஆசையை இடைக்காலமாகப் பரணில் போட்டு வைத்திருந்தேன். தமிழ்நதி, முத்துலட்சுமி துவங்கி இப்போது நீங்களெல்லாம் வந்து அதை மீண்டும் தூசுதட்டி எழுப்பவைத்திருக்கிறீர்கள் எனக்கு. எழுதத் துவங்கியிருக்கிறேன். அதற்காக எப்போதும் சகித்துக்கொண்டிருக்கவேண்டாம். பாடாய்ப்படுத்தும்போது உங்களில் யாராவது ஒரு குரல்விட்டாலும் மீண்டும் கவிதையைப் பரணில் தூங்கவைத்துவிடுவேன்:))

பத்மா,
உங்களின் பழைய இனிமையான நினைவுகளைக் கிளறியது இது என்பதில் நிறைவு. எனக்கும்கூட நான் மீண்டும் அவ்வனுபவத்தை நினைத்துச் சுகிக்க இந்த இடுகை ஒரு வாய்ப்பானது.

ஜாலிஜம்பர்,
வருகைக்கு மகிழ்ச்சி. உங்களிடமும் எனக்கு ஒரு வேண்டுகோள் உண்டு. ரஷ்ய இலக்கியத்தில் ஆழ்ந்த ஈடுபாடும், அனுபவமும் உள்ள நீங்கள் எங்களைப் போன்றோருக்காக அவற்றை விரிவாக அறிமுகப்படுத்தவேண்டும் நேரமிருக்கும்போது.

நன்றி.

 
At 12:54 PM, April 21, 2007, Blogger தருமி said...

//நிறையவே உங்ககூட சண்டை போடலாம்னு தோணுது...//

எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயமாச்சே...!

 
At 1:36 PM, April 21, 2007, Blogger  வல்லிசிம்ஹன் said...

செல்வநாயகி,
சில சமயங்களில் துக்கம் அழுத்த முடியாத தூரத்துக்குப் போய் விடுகிறோமே என்று நான் பதைத்ததுண்டு.
என்னையே வேடிக்கை பார்த்த தருணங்களையும் யோசிக்க வைத்துவிட்டீர்கள்.
அருமை.
தமிழ் அருமை.
உண்மை அருமை.
சொன்னவிதமும் அருமை.
நன்றி.
இதைப் படிக்க வாய்ப்பு கிடைத்ததும் அருமை.

 
At 3:21 PM, April 21, 2007, Blogger செல்வநாயகி said...

///சில சமயங்களில் துக்கம் அழுத்த முடியாத தூரத்துக்குப் போய் விடுகிறோமே என்று நான் பதைத்ததுண்டு///

இது முடிகிறபோது வாழ்வு இலகுவாகிவிடுகிறதெனத் தோன்றுகிறது வல்லி.

உங்களின் அன்புக்கும் பாராட்டுக்கும் நன்றி.

 
At 12:28 AM, April 22, 2007, Blogger செல்வநாயகி said...

தருமி,

உங்க பின்னூட்டம் எங்கோ சிக்கியிருந்து பிறகுதான் பார்த்தேன்.

///எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயமாச்சே.///
ஆனா என்ன பிரச்சினைன்னா கருத்துரீதியா உங்ககூட சண்டைபோட ஒரு வாய்ப்பும் இல்லைன்னு நினைக்கிறேன். பலசமயங்களில் உங்களை வழிமொழிவதே என்னுடைய நிலைப்பாடாக் கிடக்குது:((
மதுரைக்கு வந்து வேற எதுக்காவது போடலாம்னு இருக்கிறேன்:))

 
At 12:55 AM, April 22, 2007, Blogger பாலராஜன்கீதா said...

// செல்வநாயகி said...
தருமி,
ஆனா என்ன பிரச்சினைன்னா கருத்துரீதியா உங்ககூட சண்டைபோட ஒரு வாய்ப்பும் இல்லைன்னு நினைக்கிறேன். //

சண்டை போட ஏன் வாய்ப்பே கொடுப்பதில்லை என்று சண்டை போடலாமே :-)))

 
At 5:09 AM, April 22, 2007, Blogger Sankar said...

very very nice post! as usual :) reading your posts give me an unexplainable joy and peace.
- Sankar

 
At 7:06 AM, April 22, 2007, Blogger Chellamuthu Kuppusamy said...

பதிவி நல்லா இருந்துச்சுங்க.

ஆமா..நீங்க தாராபுரம்னு சொல்றாங்க. உண்மையா? 'ஆம்' எனில் மகிழ்ச்சி!

 
At 7:22 AM, April 22, 2007, Blogger Jazeela said...

படிச்சிருக்கீங்களா? இல்ல, இப்படி எழுதியிருக்கீங்களே
//"இன்று குடித்திருக்கிறாயா எனக் கேட்டுவிட்டு ஒருவரிடம் சிலவிடயங்களைப் பேசும் அல்லது பேசாத முடிவெடுப்பதுபோல், உன்னிடம் படித்திருக்கிறாயா எனக் கேட்டுவிட்டு எதையும் செய்யவேண்டியிருக்கிறது"
// அதான். வாழ்த்துவதற்கு முன்பு ஒரு தெளிவுக்கு கொண்டு வரவேக் கேட்டேன். ;-)

எப்படி இப்படியெல்லாம் எழுதுறீங்க. அந்த கவிதையிலேயே கரைந்துவிட்டேன். உரைநடை படித்த பிறகு இனி உங்களின் ஒரு பதிவையும் விட்டு வைக்கக் கூடாது என்று தோன்றியது.

 
At 7:27 AM, April 22, 2007, Blogger தென்றல் said...

/மீண்டும் ஒருமுறை சொல்லிக்கொள்கிறேன்:)) ரசனைகளில் ஒத்துப்போவது உவப்பாக இருக்கிறது.
/
எண்ணங்களை நேர்த்தியாக எழுத்தில் கொண்டுவருவது ஒரு வரம். நிறைய எழுதுங்கள், செல்வநாயகி! உங்களின் 'கற்றதும், இழந்ததும்' பதிவை இப்பொழுதுதான் பார்த்தேன். படித்துவிட்டு பேசுவோம்...

/...வாழநேரும்போது மனைவியின் பிரசவத்தில் மேலும் தன் பொறுப்புக்கள்கூடி ஒரு புதிய அனுபவத்தினூடாகப்...../
நம் 'பழயதலைமுறை' ஆண்களுக்கும் இப்படி வாய்ப்பிருந்தால் நம் நாடு சீனாவுடன் 'போட்டிபோட' தேவையிருந்திருக்காதோ? என்ற எண்ணம் என்க்குண்டு.

/வாழ்த்துக்கள் உங்களுக்கும், உங்கள் மனைவிக்கும்.
/
நன்றி!

/அப்ப நம் தமிழ்நதி, அய்யனாரையெல்லாம் வயசானவங்கன்னு சொல்றீங்களா:))
/
நீங்க சொன்ன சரியாதான் இருக்கும் ;)

 
At 4:17 PM, April 22, 2007, Blogger இளங்கோ-டிசே said...

உங்கள் வார்த்தைகளினுடாக பல்வேறு பின்னணியில் சம்பவங்கள் விரிகின்றன. அவ்விரியும் உலகில் மனிதர்கள் மிக நேசமாக உயிர்தெழுகின்றார்கள், உங்கள் எழுத்துக்களைப் போலவே. நன்றி.

 
At 10:31 PM, April 22, 2007, Blogger Ayyanar Viswanath said...

அப்ப நம் தமிழ்நதி, அய்யனாரையெல்லாம் வயசானவங்கன்னு சொல்றீங்களா:))
/
/நீங்க சொன்ன சரியாதான் இருக்கும் ;) /

@@@@ ( angry smilie )

தமிழ்நதி வயசானவங்க..ஆனா நான் இல்ல தென்றல் :)

 
At 12:47 AM, April 23, 2007, Blogger செல்வநாயகி said...

பாலராஜன்கீதா,
:))

சங்கர்,

உங்கள் வருகை இனிய ஆச்சரியம் எனக்கு. நீங்கள் ஆங்கில வலைப்பதிவர் என்றும் அதன்மூலம் பொருளாதாரத்தால் திறமையிருந்தும் மேற்செல்ல முடியாத மாணவ மாணவியருக்குக் கூட்டாக நண்பர்களுடன் இயங்கி உதவும் நல்ல பணியும் செய்துவருகிறீர்கள் எனவும் அறிகிறேன். தொடரட்டும் உங்கள் பணி. உங்கள் வருகைமூலம்தான் உங்கள் பக்கத்தை அறிந்துகொண்டேன். அதற்கும், உங்கள் மறுமொழிக்கும் மகிழ்ச்சி.

செல்லமுத்து குப்புசாமி,

உங்கள் மகிழ்ச்சி தொடரலாம்:))

ஜெசிலா,
உங்கள் குறும்பை ரசித்தேன்.

தொடர்ந்து படிக்கப் போறீங்களா? அப்புறமா எப்பவாவது திட்டனும்னு தோன்றினாலும் திட்டிருங்க இப்ப வாழ்த்துச் சொன்ன மாதிரியே:))

தென்றல்,

//நம் 'பழயதலைமுறை' ஆண்களுக்கும் இப்படி வாய்ப்பிருந்தால் நம் நாடு சீனாவுடன் 'போட்டிபோட' தேவையிருந்திருக்காதோ? என்ற எண்ணம் என்க்குண்டு///

ஆமாம், இந்தக் கோணத்திலும் சிந்திக்கலாம்.

டிசே,
என் எழுத்துக்களுக்கான மையில் ஒருதுளி உங்கள் படைப்புக்களில் இருந்தும் பெற்றேன், பெற்றுக்கொண்டும் இருக்கிறேன்.

அய்யனார்,
தமிழ்நதி எதோ வேலையா இருக்காங்கன்னு நினைக்கிறேன். வந்தால் தீந்தோம்:))

நன்றி நண்பர்கள் எல்லோருக்கும்.

 
At 2:14 AM, April 23, 2007, Blogger நந்தா said...

//100 சதவீத ஆசை. ஒரு வேலை, ஒரு நட்பு, ஒரு உறவு அதில் எதுவென்றாலும் ஏற்றுக்கொண்டபின் அதில் என் பங்களிப்பை 100 சதவீதம் செய்யாவிட்டால்//

//"நீ என்ன பேசினாலும் என்னை ஒன்னும் செய்யமுடியாது" என்ற பாவனையில் அமர்ந்திருந்தால் மனதுக்குள் அன்று படித்துத் தொலைந்த புத்தகம் பேசிக் கொண்டிருக்கிறது என்று பொருள். //

//இவ்வளவு பளுவானாலும் தூக்கிவிட முடியும் என்ற திமிர் உண்டு. ஆனால் இரண்டு சொற்களைச் சொல்லப்படவேண்டிய இடத்தில் சொல்லாது விட்டுவிட்டால் அது மனதில் பெரும்சுமையாக இருந்து அழுத்தும். //

//இரண்டு மூன்று முறை மயக்கமருந்து கொடுக்கப்பட்டும்
அந்த முகம் பார்க்கும் நிமிடம்வரை ஒரு வைராக்கியத்தில் பிடித்துவைத்திருந்த நினைவு அதற்கொரு முத்தம் பதித்த அடுத்த நொடி காணாமல் போனது. //

//"Thank you doctor, you saved me and my child" அவ்வளவுதான். அதன்பின் அவர் தலைதடவிக்
கொடுத்ததோ இந்த நன்றியைக் காலைவரை சுமந்திருக்க முடியாத அவசரக்காரியா இவள் என்று அவர் நகையாடிச் சென்றதோ எதுவும் தெரியாத உணர்வற்ற நிலைக்கே மீண்டும் பலமணி நேரங்கள் பயணம். //

அப்பா என்னங்க இது. தருமி சரியாதான் சொல்லி இருக்காரு. எனக்கே இது ஒரு உணர்ச்சிக் குவியல் மாதிரிதான் இருக்கு.

கவிதையைப் படிச்சு முடிச்சவுடனே நல்ல கவிதைன்னு நினைச்சேன். ஆனா உரை நடையைப் படிச்சவுடனே நானே கிறுக்கு மாதிரி வெறிச்சு உக்காந்துட்டிருக்கேன்.

உங்களோட இந்த எழுத்து நடையைப் பாராட்டறதா இல்லை அந்த வைராக்கிய உணர்வுகளை பாராட்டறதான்னு தெரியலை.

 
At 3:50 AM, April 23, 2007, Blogger அமிர்தா said...

'ஒரு கிறுக்கியாக வாழும் ஆசை' - சில காலம் கிறுக்கியாக வாழ்ந்துவிட்டு எழுதுவீர்கள் போலிருக்கிறதே! மிரள வைக்கிறீர்கள்.

படித்துவிட்டு மிரண்டு ஓடி, கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு வருவதற்குள், சில நாள்களாகிவிட்டன.

 
At 11:11 AM, April 23, 2007, Blogger சாலிசம்பர் said...

பாராட்டுக்கு மிக்க நன்றி செல்வநாயகி.ஆனால் என் மனம் குறுகுறுக்கிறது,ஏனென்றால் அந்தப் பாராட்டுக்குத் தகுதியில்லாதவன் நான் என்பது எனக்குத்தெரியும்.நான் ஒரு நுனிப்புல் மேய்பவன் மட்டுமே.

ஒரு உயர் ரசனை உள்ளவன் என்று வேண்டுமானால் என்னையே நான் சொல்லிக்கொள்ளலாம்.அந்த ரசனை தான் வலையுலகில் உங்களையும்,தருமி,தங்கமணி,கல்வெட்டு,காசி போன்றோரையும் தேடி அடைய வைத்தது.

ரஷ்ய இலக்கியவாதிகளில் IVAN TURGENEV , ANTON CHEKOV , FYODOR DOSTOYEVSKY , MAKSIM GORKY , ALEKSANDER PUSHKIN , LEO TOLSTOY போன்றவர்கள் உலகப்புகழ் பெற்றவர்கள்.

சேகோவின் ருஷ்ய இயல்பு,தஸ்தயேவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள்,கார்க்கியின் என் வழித்துணைவன்,முதல் காதலைப் பற்றி ,டால்ஸ்டாயின் அன்னா காரினினா,கிரேய்ஸர் சொனாட்டா போன்றவை என்னை மிகவும் பாதித்தவை.

தஸ்தயேவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள்,தமிழில் "இயற்கை" என்ற பெயரில் சினிமாவாக வந்துள்ளது.

நான் காதலித்த பெண்ணிடம் என் காதலைச் சொல்ல அவள் மிகுந்த குழப்பத்தில் வேண்டாம் என்று மறுத்த போது சிரித்துக்கொண்டே திரும்பிச்செல்ல இந்த 'வெண்ணிற இரவுகள்" தான் என்னைத் தயார்படுத்தியது.

மேலே உள்ள மேதைகளின் பெரும்பாலான படைப்புகள் gutenberg.org தளத்தில் கிடைக்கின்றன.

தமிழில் படிப்பதையே பெரிதும் விரும்புவீர்கள் என்றால் தெரியப்படுத்துங்கள்.உடனே அனுப்பி வைக்கிறேன்.

 
At 4:08 PM, April 23, 2007, Blogger துளசி கோபால் said...

பிரமிப்புதான்!

 
At 7:30 PM, April 23, 2007, Blogger Radha Sriram said...

அப்பப்பா என்னங்க இப்படி எழுதரீங்க?? என்ன சொல்லுவது?? அப்படியே ஆள கட்டிபோடுது உங்க எழுத்து.....இரண்டு தடவ படிச்சிட்டேன்........

நான் இங்க கோட் (quote!)எல்லாம் பண்ண போரது இல்ல, பண்ணனும்னா முழு பதிவையும்தான் செய்யணும் :):)

அட்டகாசம்!!
கிறுக்குதனமும் கொஞ்சம் ஜாஸ்திதான்!!!:):)

 
At 12:27 AM, April 24, 2007, Blogger தருமி said...

அப்போ .. எப்போ மதுரைக்கு வர்ரீங்க ... சண்ட போட்டுற வேண்டியதுதான் ..

 
At 1:09 AM, April 24, 2007, Blogger செல்வநாயகி said...

நந்தா,

நான் எதோ கண்ணிலகப்பட்டவைகளைப் பார்த்து, கைக்ககப்பட்ட சொற்களால் எனக்குத் தெரிந்த எதோ ஒன்றை எழுதிவைக்கிறேன். அது ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் அதை வாசித்து இப்படிப் பத்தி பத்தியாக எடுத்துப் போட்டு என் மழையில் நீங்களும் இங்கு மறுமொழியிட்டிருக்கிற மற்ற நண்பர்களும் நனைந்து நெகிழ்வதுதான் எனக்குப் பெரிதாகத் தெரிகிறது. நான் சொதப்பியும் எழுதுவேன், அதிலெதுவும் இதுவரை உங்கள் கண்ணில்படவில்லை போலிருக்கிறது:)) அப்படியே இருக்கட்டும்:))

மகா,

//படித்துவிட்டு மிரண்டு ஓடி, கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு வருவதற்குள், சில நாள்களாகிவிட்டன///

:))
உங்கள் பின்னூட்டம் எப்போதுமொரு துடுக்குத்தனத்தைக் கூடவே கொண்டுவருகிறது. அது பிடித்திருக்கிறது.

ஜாலிஜம்பர்,

ரஷ்ய எழுத்துக்களைக் குறிப்பிட்ட உங்கள் விரிவான மறுமொழியும் அந்தத் தளத்தின் சுட்டியும் எனக்கு மிகவும் பயனுடையது. இதில் செகாவ், டால்ட்ஸ்டாய், கார்க்கி எல்லாம் கொஞ்சம் அறிமுகம். மற்றவர்களைப் பெயர்களால் மட்டுமே அறிந்திருந்தேன். நீங்கள்தான் அவர்களின் படைப்புகளையும் அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். நிச்சயம் அந்தத் தளத்திற்குப் போய்ப் படிக்கிறேன். தமிழில் படிக்கவும் இயன்றால் ஆவண செய்யுங்கள். ஆவல் இருக்கிறது. "இயற்கை" படம் பற்றிக் கேள்வியுற்றேன். இன்னும் பார்க்கவில்லை.

///நான் காதலித்த பெண்ணிடம் என் காதலைச் சொல்ல அவள் மிகுந்த குழப்பத்தில் வேண்டாம் என்று மறுத்த போது சிரித்துக்கொண்டே திரும்பிச்செல்ல இந்த 'வெண்ணிற இரவுகள்" தான் என்னைத் தயார்படுத்தியது///

ரசித்தேன். இதற்கு எப்படியான மனநிலை வேண்டும் என்பதையும் நினைத்துப் பார்க்கிறேன்.

துளசிம்மா,
உங்களுக்குப் பொறுமை அதிகம், நாலு வருசத்துக்கு முந்தி நான் கவிதைன்னு கிறுக்க ஆரம்பிச்சதிலிருந்து இன்னும் விடாம அதே அன்போட வாசிச்சுக்கிட்டிருக்கீங்களே:))

ராதா,
அதெல்லாம் பெரிசா ஒண்ணுமில்லீங்க. நந்தாவுக்குச் சொன்னதுதான் உங்களுக்கும், சொதப்புனதெல்லாம் நீங்க இன்னும் பாக்கலை:))

//கிறுக்குதனமும் கொஞ்சம் ஜாஸ்திதான்///

"கொஞ்சம்" ங்கறதுக்குப் பதில் "நிறைய" ன்னு போட்டாலும் ஒன்றும் சொல்லமாட்டேன்:))

தருமி,
:))

நன்றி அனைவர்க்கும்.

 
At 4:57 PM, April 24, 2007, Blogger மலைநாடான் said...

பொறுமையாக இருந்து வாசிக்கனும் என்றெண்ணியே தள்ளிப்போயிற்று. அப்பாடா! ஒருவாறு இன்று வாசித்தாயிற்று. எனக்கு முன்னாடி சொன்னவங்கள விட நான் என்ன புதுசா சொல்லப்போகிறேன். இரண்டு நாளுக்கு நான் கிறுக்காத் திரிவேன் என்பது என்னவோ நெசம்..செல்வநாயகி! பாராட்டுக்கள்.

//'நான் கிறுக்கா திரியுறது உங்களுக்கு அழகா இருக்கா..? உங்களையெல்லாம் மாயக்கண்ணாடி படத்தை செகண்ட் ஷோ பார்க்க விடனும்..' என்று கிறுக்கி திட்டுவது காதில் விழுகிறதா..?//

இதுதான் கடலோரக் குசும்புன்னுறது.

 
At 10:18 AM, April 25, 2007, Blogger செல்வநாயகி said...

நன்றி மலைநாடான். நெடுநேரம் உங்கள் பின்னூட்டம் காத்திருந்தமைக்கு வருந்துகிறேன்.

 
At 2:29 AM, April 26, 2007, Anonymous Anonymous said...

கவிதையினை மிகவும் இரசித்தேன்.
மீண்டும் மீண்டும் வந்து படித்துப் பார்த்து இரசித்தேன். அடுத்த பதிவிற்கு ஆவலுடன் காத்திருக்க தொடங்கி விட்டேன் ...

 
At 3:33 AM, April 26, 2007, Blogger தமிழ்நதி said...

hi, i'm out of the country for a while. so you can talk whatever you want to :). sorry i could not type in tamil. selvanayaki! i will read this article tomorrow morning and comment. personally i will send one photo of mine. so you can decide whether i'm old or young. okay irunka ayyanare vanthu thalikkiren.

 
At 11:12 PM, April 26, 2007, Blogger செல்வநாயகி said...

மதுரா,

நிறைய எதிர்பார்க்கவேண்டாம், பிறகொருமுறை நீங்கள் ஏமாந்தால் நான் பொறுப்பல்ல:)) ஏன் தலைமறைவாய் இருக்கிறீர்கள்? நீங்கள் இல்லாத உங்கள் பதிவு ஒரு வெற்றிடமாய்:((

தமிழ்நதி,
முடிகிறபோது வாங்க, அவசரமில்லை, திட்டுத்தானே? கொஞ்சம் தாமதமாகவே வரலாம்:))

 
At 12:51 AM, April 27, 2007, Blogger தமிழ்நதி said...

மதிப்புக்குரிய தோழி,

இருந்திருந்து எழுதினாலும் மனசில் நீடித்து இருக்கும்படியாக எழுதுகிறீர்கள். அவசரமாக இருக்கும்பொழுதுகளில் உங்கள் பதிவுகளை நான் வாசிப்பதில்லை. உங்கள் எழுத்துக்களில் ஆழ்ந்து அமிழ்ந்து அனுபவித்துத் திளைப்பதில் அப்படியொரு விருப்பம்.

நான் உங்கள் ஊரில் இல்லாத சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு எனது பெயரை இழுத்துவிட்டிருக்கிறார் தென்றல். உண்மையைச் சொன்னால் ‘தமிழ்நதிக்குக் கவிதை எழுதத் தெரியும்’என்று பொய் சொல்லியிருக்கிறார். பாருங்கள் நான் நகைப்பான் போடவில்லை. அய்யனாரை இந்த ஆட்டத்திற்குள் இழுத்தது சரிதான்… என்னை ஏன்…? சரி! ஏதோ நான் ‘பெரியவராக’இருப்பதில் உங்களுக்கு மகிழ்ச்சி எனில் எனக்கும் மகிழ்ச்சியே.:)

செல்வநாயகி!உங்கள் கவிதை என்னைக் கரைத்துவிட்டது.

\\தெருவோரச் சுவரொன்றில்
எழுதிக்கொண்டிருக்கிறாள் கிறுக்கி
வாழ்வு ஒரு சமுத்திரம் என்றோ
அது ஒரு காட்டாறு என்றோ
அல்லது அது ஒரு பனித்துளி என்றோ
எழுதியிருக்கலாம் அவள்
அதற்கான காரணங்களையும் சேர்த்து\\

ஏதோ ஒரு பதிவில் காட்டுக்குள் நீலியாக வாழ ஆசை என்று எழுதினேன். அந்த ஆசை வளர்ந்துகொண்டே வருகிறது. உங்கள் கவிதையைப் படித்தபிறகு பைத்தியமாய் இருப்பதுகூட நல்லதே என்றெண்ணத் தோன்றுகிறது. (இதைப் பைத்தியக்காரத்தனம் என்பார்கள்)

\\100 சதவீத ஆசை. ஒரு வேலை, ஒரு நட்பு, ஒரு உறவு அதில் எதுவென்றாலும் ஏற்றுக்கொண்டபின் அதில் என் பங்களிப்பை 100 சதவீதம் செய்யாவிட்டால் \\

என்ற உங்கள் வரிகளைப் படித்தபிறகு உங்கள் தோழியாகும் ஆசையும் தோன்றியது. ஆனால், நெருங்கும்போது மனிதர்கள் நிறமிழந்துபோகிறார்கள் என்பதன் அடிப்படையில் விலகியிருந்து நேசிக்கவே விளைகிறேன். உங்கள் எழுத்துக்களை உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தவறவிட மாட்டேன். நன்றி சொல்லத் தவறினால் பதறுகிற மனதுக்கு நன்றி.

 
At 10:44 AM, April 27, 2007, Blogger செல்வநாயகி said...

தமிழ்நதி,

திட்டு நான் எதிர்பார்த்த அளவு பலமாக இல்லை:)) உங்கள் மறுமொழி வழக்கமான எனக்கான நேசத்துடன்.
நன்றியும் மகிழ்வும்.

 
At 3:49 PM, May 01, 2007, Blogger ஜெயஸ்ரீ said...

இந்தப் பதிவே ஒரு அழகான கவிதை போலத்தான் இருக்கிறது.

அருமை, அற்புதம் என்பதைத்தவிர வேறு என்ன சொல்ல?

 
At 3:53 PM, May 01, 2007, Blogger செல்வநாயகி said...

நன்றி ஜெயஸ்ரீ. முன்புபோல் உங்களை வலைப்பக்கம் பார்க்க முடிவதில்லை. ஒரு ஓய்வுக்குப்பின் வந்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

 
At 10:55 PM, May 01, 2007, Blogger Udhayakumar said...

அப்போவ்... தவணை முறையில் கொஞ்சம் கொஞ்சமா இன்னைக்கு முடிச்சே முடிச்சாச்சு.

?!

 
At 7:02 AM, June 07, 2007, Blogger குமரன் said...

இப்பொழுது தான், பூங்காவில், தமிழ்மண பதிவாளர்கள் பற்றி நீங்கள் எழுதியதை, என் நண்பன் சொல்லிப் படித்தேன்.

நான் தமிழ்மணத்தில் வருகின்ற பல பதிவுகளைப் படித்துவிட்டு நொந்து நூலான ஒருவன்.

உங்களிடம் அறிமுகப்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இந்த பின்னூட்டம். பாருங்கள் என் பிளாக்

கொஞ்சம் முன்னாடியே வந்திருந்தா, என்னைப் பத்தியும் கண்டிப்பா ஒரு குறிப்பு எழுதியிருப்பீங்க! ம்.

 
At 9:21 AM, June 07, 2007, Blogger செல்வநாயகி said...

நொந்தகுமாரன்,

உங்கள் மறுமொழிக்கு நன்றி. உங்கள் வருத்தத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அதேசமயம் இங்கு வெளியாகின்ற எழுத்துக்களின் தன்மையை, அந்த எழுத்துக்களை வெளியிடுபவர் தொடர்ந்து இயங்கும் தளங்களை எல்லாம் மௌனமாகப் பின்தொடர்கிற, நல்ல எழுத்துக்களை அடையாளம் கண்டுகொள்கிற பதிவர்கள், வாசகர்களும் இன்னும் இருக்கிறார்கள் என்பது என்னளவில் நான் கண்டுகொண்டது. எனவே நீங்கள் மனம் தளராமல் தொடர்ந்து எழுதிவாருங்கள். நன்றி.

 
At 4:31 PM, July 03, 2007, Blogger Thekkikattan|தெகா said...

நாயகி,

என்னமோ எட்டாம் அதில உங்களை என் பதிவின் மூலமாக இணைத்துள்ளேன். வந்து என்னான்னு பார்த்துட்டு நேரம் கிடைச்ச நீங்களும் கொஞ்சம் உங்க பதிவின் மூலமாக சொல்லி வைங்க...


இந்தாங்க என் சுட்டி : http://thekkikattan.blogspot.com/2007/07/ii.html

 
At 6:07 PM, July 03, 2007, Blogger செல்வநாயகி said...

தெக்கிக்காட்டான், நீங்கள் மீண்டும் எழுத வந்திருப்பதற்கும், என்மேலான உங்கள் வழமையான அன்பிற்கும் நன்றி. இந்த எட்டு விளையாட்டுப் பற்றி அறிந்தேன். ஏற்கனவே பத்மாவும் அழைத்திருந்தார். இந்தமுறை விளையாட்டுக்குவர மனம் மிகுந்த சண்டித்தனம் செய்கிறது. அதைக் கடிவாளமிட்டு இழுத்துவர முடிந்தால் நிச்சயம் எழுதிவிடுகிறேன்:))

 
At 5:30 AM, July 20, 2007, Blogger லக்ஷ்மி said...

எட்டு ஆட்டத்துக்கு உங்களை இழுத்து விட்டிருக்கேன். என்னைய மனசுக்குள்ள திட்டிகிட்டேவாச்சும் பதிவை போட்டுடுங்க சீக்கிரமா.

 
At 11:02 AM, October 22, 2007, Blogger Raji said...

nadanthal nallathu, nadaka vittal romba nallathu :-)
Isha yoga?

 
At 9:14 PM, October 22, 2007, Blogger செல்வநாயகி said...

ராஜி,

நெருங்கி வருவீர்கள் போலிருக்கிறதே:)) ஆமாம் அந்த வாக்கியம் அங்கிருந்து பிடித்ததே. தொடர் தொடர்புகள் இல்லையென்றாலும் தனிமனித வாழ்வின் பலகூறுகளை எளிமையாகக் கையாள அந்தப் பயிற்சிமுறைகள் கைகொடுக்கவே செய்கின்றன அவ்வப்போது:))

 
At 3:05 PM, November 05, 2007, Blogger Raji said...

antha vakkiam enakku romba pidithathu.I have a vib to attaract people with Isha roots. I meet them where ever I go in this world :-) yeah they are there everywhere these days.
Staring at running water...being in a dream world after reading Thee. janakiraman, kalki, agilan during my school days are some of the symptoms I have too. I am always a kirukki, here in Canada all my colleagues do agree with that.ahahah
keep writing and make people happy. will continue contacting you.Love.Raji

 
At 10:58 AM, December 26, 2007, Blogger Ayyanar Viswanath said...

வணக்கம் செல்வநாயகி

உங்களின் இபபதிவிலிருந்து சில வரிகளை சுட்டுக்கொள்கிறேன்..
அனுமதிப்பீர்கள் என்ற முந்தீர்மானங்களுடன்..:)

 
At 1:15 PM, December 26, 2007, Blogger செல்வநாயகி said...

No problem ayyanaar, go ahead:))

 
At 3:09 AM, February 21, 2008, Blogger tamilachi said...

iniya vanakkangal.

THANGALIN 'ORU KIRUKIYAGA VALUM ASAI ' PADITHEN..ENAKKUL PALA ADHIRVUGALAI UNDAKI VITTATHU ANDA PADIVU....
MANA NALAM KURAINTHAVARGAL ENDRU NAM NIRNAYITHIRUPAVARGALAI PATRI NAM SAMUTHAYATHIN ENNANGALAI ADHIGAM THOTTIRUKIRATHU THANGAL ELUTHUKKAL.

VALKAYIN ANAITHU URIMAIGALUM MARUKKA PATTIRUKUM INDA KULANDAI MANATHAVARKALUKANA KURALGAL INNUM ONGI OLIKKA VENDUM INDA SAMUTHAYATHILUM , NAM VETRU VATHANGALILUM..

PADITHU MUDITHA PODU MANAM KANATHATHU,..NAM ARPA SEYALGALAI MUGAMOODI KILITHU KATTIYADHU THANGAL ELUTHUKKAL...

NANDRI INTHA NENJAM THODUM PATHIVIRKKU..
VALTHUKKALUDAN,
KA.SELVANAYKI.

 
At 10:09 PM, February 21, 2008, Blogger செல்வநாயகி said...

ka.selvanayaki,

thank you again:))

 
At 1:37 AM, September 15, 2009, Blogger அமிர்தவர்ஷினி அம்மா said...

இந்தப் பதிவு முழுதும் ஒரு உலுக்கி உலுக்கி எடுத்துவிட்டது.

படித்துமுடித்த பின் மிகவும் நெகிழ்ச்சியாக உணருகிறேன்.

கண்மூடி சில நேரங்கள் மவுனம் சுமந்த பின்னரே இந்தப் பின்னூட்டம்.

வியந்து கொண்டே இருக்கிறேன் உங்கள் எழுத்தில்.

 
At 10:07 PM, September 15, 2009, Blogger செல்வநாயகி said...

அமித்து அம்மா,

இது ஒரு காலத்தில் எழுதியது, இப்போது உங்கள் உதவியால் நானும் படித்துக்கொண்டேன். நன்றி.

 
At 11:18 PM, September 15, 2009, Anonymous Anonymous said...

செல்வநாயகி, நேரம் கிடைக்குதேன்னு யதேச்சையா உங்க பழைய பதிவுகள் படிச்சு கிட்டு இருந்தேன். யப்பா. என்னமா எழுதியிருக்கீங்க.அடர்த்தியான வார்த்தைகள். இந்த மாதிரி நிறையா எழுதுங்க. படிக்க நாங்க இருக்கோம். அட அமித்து அம்மாவும் சமீபத்துல படிச்சிருக்காங்க போல இருக்கு.

 
At 12:26 AM, September 16, 2009, Blogger செல்வநாயகி said...

சின்ன அம்மிணி,

நன்றி.

 

Post a Comment

<< Home