நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Wednesday, July 18, 2007

அறிவுசீவிகளும் சாகக்கொடுக்கும் உயிர்களும்

ஆழத்தில் இருந்து உயிர்த்தெழுந்து மெல்லமெல்ல வேகம்கூட்டி வரும்வழியெங்கும் சேமித்த கோபத்தைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு ஆக்ரோசமாய் ஆடிவந்து அடித்து காலுக்கடியில் பிடிமணலைக்கரைத்து நம்மை நிலைதடுமாறச் செய்து பிறகு சுதாரிக்கவைக்கும் ஆழியலைகள் உண்டு. அதே ஆழியில் மொட்டொன்று விரியும் மென்மையோடு மெல்லமெல்ல ஊர்ந்துவந்து பாதம் ஈரமாக்கித் திரும்பும் அலைகளும் உண்டு. மனித
மனமும் அப்படியே ஒரு ஆழியைப் போன்றதுதான். எப்போதும் ஒரேமாதிரியான அலைகள் அங்கும் அடிப்பதில்லை. கடந்த பதிவில் எழுந்து ஆடிய வேக அலைகளுக்குப் பின் சிறிது இடைவெளிவிட்டு எழுதுகிறேன் இதை. "மக்கள் பங்குபெறாத புரட்சியால் பயனில்லை" இடுகையில் ஆரம்பித்த முரண்பாடுகள் வெறும் முரண்பாடுகளாகவே நின்றுவிடாமல் தமிழ்க்கணிமை வரலாறு பற்றிய விரிவான அலசல்கள்வரை போய் விருப்பமுள்ள வாசகர்களுக்கு அறியப் பல தகவல்களைக் கொண்டுவந்து குவித்திருக்கும் இந்நிலையில் நான் மீண்டும் திரும்பிப்போய் இதை எழுதாமல்கூட இருக்கலாம். ஆனால்....உணவு இல்லாமலும் வாழலாம் தண்ணீரைக்குடித்துக்கொண்டுகூட சிலகாலம். உறுத்தல்களோடு எப்படி?

அரை நூற்றாண்டுக்கும் ஆறுவருடங்கள் கூடுதலாகக் கொண்ட வயதை உடையவர், இந்தியாடுடே எனும் தமிழ்பதிப்புக்குத் தான் ஆசிரியராக இருந்த காலக்கட்டத்தில் என் மாணவப்பருவத்து மதிப்பில் இருந்தவர், "என் சன்னலுக்கு வெளியே" மூலம் என்னுள்ளூம் சில சன்னல்களைத் திறந்தவர், இணையத்தில் தமிழ் எழுத வந்தபோது இங்கே வரிசையாக நின்று வரவேற்றுக்கொண்டிருந்தவர்களில் நான் வந்தபோது ஒருவராகவும் இருந்தவர் என்மீதான வருத்தம் என்று என்பதிவில் இட்ட பின்னூட்டத்திற்கு எல்லாருக்கும் சமாதானமாகும் விளக்கமாக அது இருக்காதென்றாலும் எனக்குச் சரியென்று பட்டதற்கான காரணங்களையாவது சொல்லிவிடவேண்டுமென்றே இப்பதிவு.


மாலன், "அறிவுஜீவிகள் அதிகார அமைப்புக்கு எதிராகவேதான் நடந்துகொள்ள வேண்டுமா? அவர்கள் அந்தந்தப் பிரச்சினைகளுக்கேற்ப ஏன் நடந்துகொள்ளக்கூடாது?" என்ற உங்களின் கேள்விகளில் தொடங்கி உங்களோடு உரையாட நிறையவே மனதில் சுமந்திருந்தேன் அன்று அந்த இடுகையில். நேரத்திற்குக் காத்திருந்ததில் அவையெல்லாம் முடியாமல்போய் இப்போது முக்கியமானதொன்றை மட்டுமே தொட்டுச் செல்கிறேன். இந்துராமைப் பெயரிலி விமர்சித்ததும், விமர்சித்த விதமும் வருத்தம் உங்களுக்கு. அதை என் போன்றவர்களும் அனுமதித்தது வியப்பாயிருக்கிறதென்றும் சொல்லியிருந்தீர்கள். அதை ஒரு தனிப்பட்ட
தாக்குதல் என்ற அளவிலே(மட்டும்) நீங்கள் பார்க்கிறீர்கள். நான் பார்த்த விதம் வேறு.

நீங்கள் சிலகாலம் இங்கு இல்லாத இடைவெளியில் இங்கு தனிமனிதத் தாக்குதல்கள் எங்கேயோ போய்விட்டன. என்ன எழுதியிருந்தாலும் பதிவைப் படித்துவிட்டு (படிக்காமலேகூட) "பா......ப் பன்னாடை எப்படி எழுதும்?" என்று கேட்கும், பதிவிற்கு எதைப் பற்றி என்ன சொல்லவந்தாலும் "வாங்கய்யா ......'விடப்' பெத்தடின்களா?" என்று வரவேற்கும் அளவுவரை மட்டுமல்ல, "பெரியார்" என்ற ஒருவார்த்தை ஒரு பதிவில்
எங்காவது வந்திருந்தாலே "பாத்துக்கிட்டே இருங்கடா எல்லாம் கூண்டோட செயிலுக்குப் போகத்தான் போறீங்க" என்று நல்வாக்கு அருளும், "பெரியார் எதிர்ப்பு" என்பது எங்காவது தென்பட்டால் அதற்கு அங்கே ஓடிப்போய் இங்கிருக்கும் துளசிகோபாலை நாலு திட்டுத்திட்டி ஒரு பின்னூட்டம் போட்டுவிடும், இவையெல்லாம் பிரசுரமுமாகிவிடும் நிலைவரை போய்விட்டது மாலன். அப்படியான குறிவைத்த தாக்குதல்கள் பட்டியலில் பெயரிலியின் இந்துராம் எதிர்ப்பை என்னால் சேர்க்க முடியவில்லை.

காரணம் நான் இந்த இடுகையைப் போட்டவுடன் "ஆகா குறிப்பிட்ட சாதியைத் திட்ட அருமையான வாய்ப்பு" என்று ஓடிவந்த பின்னூட்டமாக அது இல்லை. பதிவர் சந்திப்பு வந்து என் இடுகையிலே "புரட்சிக்குப் பொறுமை வேண்டும், அது புரட்சிகரத் திண்ணைக் கத்துக்குட்டிக் கம்யூனிஸ்டுகளால் நடக்காது. பொறுமையோடு காத்திருக்கச் சொல்லுகிற இயக்கங்கள்தான் அவற்றை முன்னெடுக்க முடியும்" என்றவுடன் பெயரிலி வந்தார். அந்தப் பொறுமை இயக்கங்கள் யாரை முன்னிறுத்துகின்றன? அவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதைக் காரமாக விமர்சித்து எழுதினார். அதிலே இந்துராமும் ஒருவர். சாதரணமக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைச் சிறுகுழுக்கள் முன்னெடுத்து நகர்த்தும் வேளையிலே, அடித்தட்டு மக்களுக்காகப் போராடுகிறோம் என்றுசொல்லிக்கொள்ளும் இயக்கங்கள் அச்சாதாரண மக்களைத் தம் இயக்கத்திற்குள்ளேயே பொறுப்புக்களில்கூட கொண்டுவரமுடியாமல் இன்னும் மேல்சாதிக்காரர்களின் தலைமைகளிலும், ஆலோசனைகளிலுமே அண்டிக்கிடந்துகொண்டிருக்கும் போக்கைச்
சுட்டினார். இந்த மேல்சாதிக்காரர்களில் பொதுவாகப் பிற உயர்சாதியினரும் அடக்கம். பிரச்சினைகளினால் நொந்துவாழ்பவன் செத்துமடிந்தபின்னும் "பொறுமையாய்ப் புரட்சியைக் கொண்டுவரலாம்" எனப் போதிப்பது எந்தவிதத்தில் நியாயமெனக் கேள்வி எழுப்பினார். "பொறுமையாய் இருங்கள்" என மக்களுக்குப் போதித்துவிட்டு இந்த இயக்கங்களின் மானசீக ஆதரவாளர்கள் இலங்காரத்னாக்களாகவும், அவர்களின்
வாரிசுகள் சுகமானதொரு வாழ்வை அனுபவிப்பவர்களாகவுமே இருப்பதன் ரகசியம் என்னவென்றும் கேட்டார்.

இது முழுக்க முழுக்க சந்திப்புக்குப் பெயரிலி வைத்த வாதம். அதற்குப் பதிலாக சந்திப்பும் திருப்பி "பெயரிலி போன்றவர்களுக்கு இப்படித்தான் வாதம் செய்யத் தோன்றும். உடனே மேல்சாதி விசயங்களை இழுத்துவந்துவிடுவார்கள்" எனப் பதிலிட்டார். "எல்லோரையும் சாதிப் பாரம்பரியம் சொல்லிப் பேசவேண்டிய தேவை எனக்கில்லை. எங்கள் இனத்துக்கு யார் தலைமை என்று முடிவெடுக்கிற, அதுவும் ஆனந்தசங்கரி, டக்ளஸ் போன்றவர்களே தலைமையேற்கத் தகுதியுடையவர்கள் எனத் தீர்ப்பெழுதும் ஆட்களை இப்படித்தான்
பேசுவோம்" என்பது அதில் பெயரிலியின் இறுதியான பதிலாக வந்த பின்னூட்டத்திலே இருந்தது. அதைப் பிரசுரித்துவிட்டு அதற்கான பதிலாக சந்திப்பு ஏதும் வைத்தாலும் அனுமதிக்கத் தயாராகவேயிருந்தேன். நானேகூட விவாதத்தின் இறுதியில் "உங்களின் எல்லாக்கோபங்களும் புரிந்தேயிருந்தாலும் இந்துராமின் மகளையும், தந்தையையும் இதிலே தவிர்த்திருக்கமுடியாதா பெயரிலி?" எனக்கேட்கவும்கூட எண்ணிக்கொண்டிருந்தேன். சந்திப்பின் புத்தகம்மீதான பெயரிலியின் கருத்துக்கு நட்போடு அவரோடு
சண்டைக்குப்போக முடிந்திருந்த எனக்கு இந்துராம் விசயத்தில் இப்படிக் கேட்பதிலேமட்டும் என்ன தயக்கம் இருந்துவிடமுடியும்? ஆனால் பெயரிலி இப்படியொரு கருத்தை வைத்தவுடன் அதன் பின்னான எல்லா வலிகளும் மறந்துபோய் இந்துராமுக்கு வலிக்குமே என்ற கவலை மட்டும் நம்போன்றவர்களுக்கும் துருத்திக்கொண்டு வந்துவிடுவதுதான் எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது மாலன்.

அறிவுசீவிகள் இந்துராமைப் போல் இருக்கவேண்டுமா மாலன்? அல்லது நீங்கள் மதிக்கும் அறிவுசீவிகளிலே இந்துராம் அத்துனை முக்கியமானவரா? நெடுங்காலமாக அறிவுசார் உலகத்திலே தானுமொரு அங்கமாய் இயங்கிவரும் உங்களின் 'அறிவுசீவிகள்" பற்றிய பார்வையோடு என்னால் ஒத்துப்போகமுடியவில்லை. எந்தவொரு மனிதவடிவ உயிருக்குள்ளும் ஒரு அறிவுசீவி இருக்கிறானா என்று பார்க்கும்முன்பே ஒரு மனிதன்
இருக்கிறானா என்று பார்க்கவே என்னால் முடிகிறது. பலநேரங்களில் எல்லா இசங்களையும் "மனிதநேயம்" எனும் ஒற்றைச்சொல்லுக்குள் புதைத்து மூடிவிட்டு அதன்மீது வாழமுடிந்தாலே வாழ்வு இலகுவாய் ஆகிவிடும் எனத் தோன்றியிருக்கிறது. நம் இதயம் வெறும் நான்கு அறைகளால் பிரிக்கப்பட்ட இரத்தப்பிண்டம் அல்லவென்றும் அது இன்னொருவன் கண்களால் எவ்வளவு பெரியதென்று கணக்கிட்டுச் சொல்லமுடியாத
கருணையினைக் கொண்டிருக்கமுடியக்கூடியதும் என்றும் நம்புகிறேன். அப்படி உண்மையிலேயே கொண்டிருக்க இயலுபவனே மனிதனாக வாழத் தகுதியுடையவனும். அது நீங்களானாலும், நானானாலும் யாரானாலும்.

இந்துராம் எனும் அறிவுசீவியின் தேசியவாத, மனித உரிமை நிலைப்பாடு என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும் மாலன். அந்தநிலைப்பாட்டிலே உங்களுக்கு உடன்பாடு இருக்கலாம், இன்னும்சிலருக்கு இல்லாமல் போகலாம். ஆனால் காலச்சக்கரத்தின் சுழலும் ஆரங்கள் அத்துனையிலும் மனிதர்களைத் (தமிழர்களைக்) கதறக் கதறக் கொன்றழிக்கும் ஒரு அரசின் இரத்தம் தோய்ந்த கரங்களால் கட்டியணைத்துக் கொடுக்கப்பட்ட "இலங்காரத்னா" வைப் பணிந்து பெற்றுக்கொள்ளும் ஒருவரை
மனிதநேயமுள்ள யாரும் மரியாதையோடு பார்க்கமுடியுமா தெரியவில்லை. இந்துராம் எனும் தமிழருக்கு அவர் தமிழர்களுக்கு ஆற்றிய எத்தகைய சேவைக்காக இலங்கை அரசு இதை வழங்கிச் சிறப்பித்தது?

புலிகளை விமர்சிக்கலாம், அவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டலாம். இன்னும் எத்தனையோ லாம்களையும் அவரவருக்கு ஏற்றபடி செய்துகொண்டும் இருக்கலாம். ஆனால் இலங்கையின் கண்ணீர் ஒரு இனத்தினுடைய கண்ணீரென்பது மறுக்கப்படமுடியாத உண்மை. குருத்துக்களைத் தீக்கிரையாக்குவதுபோல் குழந்தைகளை, ஒரு மாலையைப் பிரித்தெறிவதுபோல் பெண்களை, இன்று இவன் வீடுவந்துசேர்வான் என்பதற்கு எந்த
உத்தரவாதமும் இல்லாது மனிதர்களைத் தன் இராணுவம் கொண்டும் கிள்ளியெறிந்துவிட்டுக் கிஞ்சித்தும் குற்றவுணர்வு இல்லாது இயங்கிவரும் ஒரு அதிகார அமைப்பிடமிருந்து ஒரு மானமுள்ள அறிவுசீவியாக அல்லது தமிழராக இந்துராம் இலங்காரத்னாவைப் பெற்றுக்கொள்ளாமல் மறுத்திருந்தால் நீங்கள் சொல்வதுபோல் அவரை devalue செய்ய யாரும் முனையும்போது கவலைப்படலாம். எப்போதே தன்னைத்தானே தன் செயல்மூலம் devalue செய்துகொண்டுவிட்ட ஒருவரை இனிப் புதிதாக devalue செய்ய என்ன இருக்கிறது?

நீங்களும் வலியைத்தான் நினைக்கிறீர்கள் மாலன். இந்துராம் எனும் அறிவுசீவியை இப்படியெல்லாம் திட்டினால் அவருக்கு வலிக்காதா என்று அவரின் வலியை நினைக்கிறீர்கள். நானும் வலியைத்தான் நினைக்கிறேன். குழந்தையின் உயிரைமட்டுமாவது காப்பாற்றிக்கொள்ளலாம் எனப் படகில் ஏறியும் இந்தப்புறம் கொண்டுவந்து சேர்ப்பதற்குள்ளாகவே அதையும் பறிகொடுத்த அவலத்தின் வலியை, ஏழுகடல்தாண்டி எங்கோ ஒரு புலம்பெயர்ந்தநாட்டில் இருந்தபடியே தன்னோடுவராமல் தாய்மண்ணிலேயே தங்கியிருந்த தமையன் செத்த செய்திகேட்டும் "இன்று இவன், நாளை எவனோ" என்ற பயத்துடனேயே வாழநேருகின்ற தலைமுறைகளின் வலியை , பாலுக்கழுகிறதா, போர்முடியாப் பூமியிலே பிறந்ததற்கு அழுகிறதாவெனத் தெரியாமல் பிறந்த குழந்தையையும் அழுதுகொண்டே அணைக்கவேண்டிய தாய்களின் வலியை, மக்களைக் காக்கவெண்டிய அரசின் இராணுவத்தாலேயே வன்புணரப்பட்டுத் தூக்கிவீசப்பட்ட பெண்களின் வலியை
எல்லாம் நினைத்தால் இந்துராம்களுக்கு அவர்களின் செயல்பாடுகள்மீதான ஆற்றாமையை வெளிப்படுத்திய வார்த்தைகளே வலிக்குமென்று நான் நினைக்கவில்லை.

கன்னத்தில் முத்தமிட்டாலாகவும், தெனாலியாகவும் அவர்களின் வாழ்வு நமக்கொரு மூன்றுமணிநேரப் பொழுதுபோக்கோடு முடிந்துவிடும். அவை ஒழுங்கான உண்மைகளைச் சொல்பவைதானாவென்ற யோசனைகள்கூட வராது. ஆனால் அவர்களுக்கோ தாம் சாகக்கொடுத்த, கொடுக்கும் உயிர்களின் வலிகளாகத் தலைமுறைகள் கடந்தும் கூடவரும். நம் அறிவுசீவிப் பார்வைகளோடு நாம்; அரைநுறு ஆண்டுகளாகத் தினம்தினம் எல்லோருக்கும் சூரியன் விடிந்தும் தமக்கொரு விடியல் கிடைக்காத வேதனைகளோடு அவர்கள். நாம் அவர்களாக இல்லாமல்போனது சுயநலம்சார்ந்தபார்வையில் அதிர்ஷ்டவசமாய்த் தெரியலாம். அதனாலேயே அவர்களின் மொழிகூட நமக்குப் புரியாதுபோய்விடுவது
துரதிஷ்டவசமானது. "யாதும் ஊரே; யாவரும் கேளிர்" என்று கூசாமல் பொய் சொல்லியிருக்கிறான் கணியன் பூங்குன்றன். தமிழனுக்கு இன்னொரு தமிழனே அப்படியிருக்காதபோது இது பொய்யன்றி வேறென்ன?


கடைசியாகப் பெயரிலிக்கு:-

பெண்கள், பாலியல் தொழிலாளர்கள் பிரச்சினைகளையெல்லாம் பேசவிரும்பாததன் காரணங்களாக நீங்கள் என் கடந்த இடுகையின் பின்னூட்டத்திலே குறிப்பிட்டிருந்தவை பெரும்பாலானவற்றையும் விரிவாக விமர்சித்து உரையாடவே திட்டமிட்டேன். அதில் குறிப்பிட்ட சில இடங்களில் எங்கெங்கோ நடந்த சண்டைகளின் சாயல்கள் தெரிந்தபோதும் பேசுவதற்கொரு சூழலைக் கனியத் தந்த உங்களோடு எல்லாவற்றையும் உரையாட
முடியுமென்ற பேராவலை நானும் கொண்டிருந்ததாலேயே அவற்றைப் பிரசுரிக்கவும் செய்தேன். குடும்பத்துக்குக் கெட்டநேரமென்று உறுப்பினர்கள் எல்லார் பேரிலும் குலதெய்வத்துக்கு அர்ச்சனை செய்துவிடும் ஒரு பக்தனைப்போல் வலையுலகில் யாரேனும் எதுசெய்தாலும் மொத்தமாய் ஒரு லட்சார்ச்சனை (நன்றி மூக்குசுந்தர்) நிகழ்த்த உங்களுக்கு வேகம் வந்துவிடும் பொழுதுகளில் உங்களோடு உரையாட எனக்குத் தெம்பு வந்ததில்லை:)) ஆனால் போன இடுகையில் சூழல் கனிந்த ஒரு சமயத்தில் பேசும் ஆவல் வந்தது. அதையும்
ஒரு பெருமழை வந்து அடித்துக்கொண்டே போய்விட்டது. இனிஒரு மழைவராத நாளில் முடிந்தால் பார்க்கலாம்:))

27 Comments:

At 3:52 AM, July 18, 2007, Blogger முத்துகுமரன் said...

//ஒரு மானமுள்ள அறிவுசீவியாக அல்லது தமிழராக இந்துராம் இலங்காரத்னாவைப் பெற்றுக்கொள்ளாமல் மறுத்திருந்தால் நீங்கள் சொல்வதுபோல் அவரை devalue செய்ய யாரும் முனையும்போது கவலைப்படலாம். எப்போதே தன்னைத்தானே தன் செயல்மூலம் devalue செய்துகொண்டுவிட்ட ஒருவரை இனிப் புதிதாக devalue செய்ய என்ன இருக்கிறது?//

சரியான புரிதல் செல்வநாயகி. இவர்களைப் போன்ற அறிவுசீவிகளின் மனித நேயம் என்பது செலக்டீவ் மனித நேயமே. லங்கரத்னாவை தமிழன் விமர்ச்சித்தால் இன்னொரு தமிழருக்கு வருத்தம் வருகிறது எனும் போது கனியனின் வார்த்தைகள் பொய்யாகித்தானே போகிறது. அங்கு சாவுக்கும் வாழ்வுக்கும் இடையே தலைமுறைகளை கழித்து வரும் அவர்களுக்கான போராட்டத்தை முன்னெடுப்பவர்களை எடை போட அம்மக்களுக்கு மட்டுமே உரிமை உண்டு. அறிவுசீவிகள் புரிந்து கொண்டால் நல்லது. தனது வெறுப்பை மறைத்துக்கொள்ள இவர்களுக்கு இடதுசாரி முகம் வேறு

 
At 4:10 AM, July 18, 2007, Blogger அய்யனார் said...

செல்வநாயகி

மனதை தொடுகிறது உங்கள் விளக்கங்கள்..இந்துராமை எப்போது அறிவுசீவிகள் பட்டியலில் சேர்த்தார்கள்?
பெயரிலி இன்னும் வன்மமாக தன் கோபத்தை வெளிப்படுத்தியிருந்தாலும் அதில் தவறெதுவும் இல்லை.

 
At 5:08 AM, July 18, 2007, Blogger நந்தா said...

செல்வ நாயகி,

என்னைப் பொறுத்தவரை இது மிகச் சரியான புரிதல். லங்காரத்னா வெகு நிச்சயமாய் விமர்சனத்திற்குட் பட்டவரே.


//நீங்கள் சிலகாலம் இங்கு இல்லாத இடைவெளியில் இங்கு தனிமனிதத் தாக்குதல்கள் எங்கேயோ போய்விட்டன. //

சத்தம் போட்டுச் சொல்லாதீங்க. வலைப்பதிவுல இருந்துக்கிட்டு நீங்க எப்படி இப்படி ஆதங்கப்படலாம் என்று யராவது ஓடி வரலாம்.

//புலிகளை விமர்சிக்கலாம், அவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டலாம். இன்னும் எத்தனையோ லாம்களையும் அவரவருக்கு ஏற்றபடி செய்துகொண்டும் இருக்கலாம். ஆனால் இலங்கையின் கண்ணீர் ஒரு இனத்தினுடைய கண்ணீரென்பது மறுக்கப்படமுடியாத உண்மை. குருத்துக்களைத் தீக்கிரையாக்குவதுபோல் குழந்தைகளை, ஒரு மாலையைப் பிரித்தெறிவதுபோல் பெண்களை, இன்று இவன் வீடுவந்துசேர்வான் என்பதற்கு எந்த
உத்தரவாதமும் இல்லாது மனிதர்களைத் தன் இராணுவம் கொண்டும் கிள்ளியெறிந்துவிட்டுக் கிஞ்சித்தும் குற்றவுணர்வு இல்லாது இயங்கிவரும் ஒரு அதிகார அமைப்பிடமிருந்து//

படிக்கும் போதே மனசு வலிக்கிறது.

//நீங்களும் வலியைத்தான் நினைக்கிறீர்கள் மாலன். இந்துராம் எனும் அறிவுசீவியை இப்படியெல்லாம் திட்டினால் அவருக்கு வலிக்காதா என்று அவரின் வலியை நினைக்கிறீர்கள். நானும் வலியைத்தான் நினைக்கிறேன். குழந்தையின் உயிரைமட்டுமாவது காப்பாற்றிக்கொள்ளலாம் எனப் படகில் ஏறியும் இந்தப்புறம் கொண்டுவந்து சேர்ப்பதற்குள்ளாகவே அதையும் பறிகொடுத்த அவலத்தின் வலியை, ஏழுகடல்தாண்டி எங்கோ ஒரு புலம்பெயர்ந்தநாட்டில் இருந்தபடியே தன்னோடுவராமல் தாய்மண்ணிலேயே தங்கியிருந்த தமையன் செத்த செய்திகேட்டும் "இன்று இவன், நாளை எவனோ" என்ற பயத்துடனேயே வாழநேருகின்ற தலைமுறைகளின் வலியை , பாலுக்கழுகிறதா, போர்முடியாப் பூமியிலே பிறந்ததற்கு அழுகிறதாவெனத் தெரியாமல் பிறந்த குழந்தையையும் அழுதுகொண்டே அணைக்கவேண்டிய தாய்களின் வலியை, மக்களைக் காக்கவெண்டிய அரசின் இராணுவத்தாலேயே வன்புணரப்பட்டுத் தூக்கிவீசப்பட்ட பெண்களின் வலியை
எல்லாம் நினைத்தால் இந்துராம்களுக்கு அவர்களின் செயல்பாடுகள்மீதான ஆற்றாமையை வெளிப்படுத்திய வார்த்தைகளே வலிக்குமென்று நான் நினைக்கவில்லை. //

இதைப் படிக்கயில் லங்காரத்னாவிற்கு வலித்தால் வலித்து விட்டுப்போகட்டுமே என்ற இயலாமையின் கோபம்தான் வருகிறது.

http://blog.nandhaonline.com

(Wordpress bloggers option வரவில்லையே.)

 
At 5:44 AM, July 18, 2007, Blogger மலைநாடான் said...

செல்வநாயகி!

மிக நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறீர்கள். இந்த வாதப்பிரதிவாதங்களைக் கவனித்த போது, நினைவுக்கு வந்த ஒருவிதயம்.

ஒரு காலத்தில் "ஏ" ஒன்பது நெடுஞ்சாலையிலுள்ள, முறிகண்டி எனும் இடத்திலுள்ள சாலையோரக் கோவிலின் முன் ஒரு ஊனமுற்ற வயோதிபர் பிச்சை எடுத்துக்கொண்டிருப்பார். அப்படிப் பிச்சை எடுத்துச்சேர்த்த பணத்தில், ஆறுகோவில்களுக்கு திருப்பணி செய்தார் என பின்னர் கேள்விப்பட்டபோது ஆச்சரியமடைந்தேன்.

பின் போர் மூண்ட நாட்களில், யாழ். வைத்தியசாலைச் சூழலில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ஒரு வயோதிபப் பெண்மணி, தனது வருமானத்தில், இக்கட்டான ஒரு சூழலில் சிக்கிக் கொண்ட மூன்று போராளிகளுக்கு சாப்பாடு போட்டு வளர்த்திருக்கிறாள். இந்த உண்மை அந்தப் போராளிகளுக்குத் தெரிந்த போது, அதிர்ந்து போனார்கள். பின்னர் போராளிக்கலைஞன் ஒருவனால் இலக்கியமாக இது பதிவு செய்யப்பட்டது.

எங்கள் நிலத்திலுள்ள ஒரு தட்டு மக்களின் மனவுணர்வு மாற்றத்திற்கு இது நல்ல எடுத்துக்காட்டு. இந்த உணர்வை அவர்கள் எட்டியதற்கு அறிவுஜீவிகள் எவரது கட்டுரையோ கவிதையோ காரணமல்ல. அவலம்..அவலம்.. அவலம்.. மட்டுமே. இதுவொன்றல்ல, இன்னும் பல கதைகளுண்டு எங்களிடத்தில்..
அதையுணர்ந்துகொள்ளத் தேவை, அறிவு அல்ல ஆத்மார்த்தமான நேயம். அது இல்லாதவர்களிடத்தில் ....

இதை எழுதிக் கொண்டிருக்கும் போது, பிள்ளைகள் டைட்டானிக் படத்தை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலே வயதான றோஸ் விபத்தைப் பற்றி விவரித்தவருக்கு " உங்கள் ஆய்வுக்கும் விபரிப்புக்கும் நன்றி. ஆனால் எங்கள் அனுபவம் வேறுவிதமானது " எனக் கூறுகின்றாள். அந்த வசனம் இந்த அறிவுஜீவிகளுக்கும் பொருந்தும் போல..

உங்கள் புரிதலுக்கும், பதிவுக்கும் நன்றி.

இனி, உங்கள் பெயரும் முத்திரைப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படலாம்.

 
At 11:23 AM, July 18, 2007, Blogger -/பெயரிலி. said...

செல்வநாயகி
/அதையும்
ஒரு பெருமழை வந்து அடித்துக்கொண்டே போய்விட்டது. இனிஒரு மழைவராத நாளில் முடிந்தால் பார்க்கலாம்:))/
நிச்சயமாக.

நாங்களெல்லாம் வானம் பார்த்த பூமிகள்.
மேலே,
பொழிந்தால், ஓட்டம்;
பொய்த்தால், வாட்டம் :-)

 
At 9:38 AM, July 19, 2007, Blogger செல்வநாயகி said...

முத்துக்குமரன்,

///இவர்களைப் போன்ற அறிவுசீவிகளின் மனித நேயம் என்பது செலக்டீவ் மனித நேயமே///

இதுதான் வருத்தம்தரும் விசயம். சமீபகாலமாக சில விசயங்களில் உங்களின் பின்னூட்டங்கள் என் எண்ணங்களையும் பிரதிபலிப்பதாகவே இருந்துவருகிறது. வேறு நண்பர்களின் இடுகைகளில் உங்கள் பின்னூட்டம் பார்த்தபோதும் இதுவே தோன்றியது.

அய்யனார்,
இதுமாதிரி விசயங்களைத் தொட்டுப் பேசுவதேகூட பலர் நம்மை ஒதுக்கிச்செல்லக் காரணமாகிவிடுவதுண்டு:))
ஆனால் நான் எழுதும் எல்லாவற்றையும் தவறாமல் படித்துச் சொல்லும் உங்களைப் போன்றவர்களும் உண்டு. அது நிறைவு.

நந்தா,
வேர்ட்பிரஸ்ஸ¤க்கு மாறிட்டீங்களா? சுட்டி தந்தமை நல்லது.

மலைநாடான்,
உங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்கிறேன், போராட்டங்களைப் புரிந்துகொள்கிறேன் என்பவையன்றி வேறு சொல்ல என்ன சொற்கள் இருந்துவிடமுடியும் என் போன்றவர்களிடம்?

///" உங்கள் ஆய்வுக்கும் விபரிப்புக்கும் நன்றி. ஆனால் எங்கள் அனுபவம் வேறுவிதமானது " எனக் கூறுகின்றாள்.///

இது பல விசயங்களுக்கும் பொருந்திவருகிறது.

பெயரிலி,
:))

வருகைக்கும், மறுமொழிகளுக்கும் நன்றி நண்பர்களே!

 
At 9:42 AM, July 19, 2007, Blogger செல்வநாயகி said...

தென்றல்,

என் "மக்கள் பங்குபெறாத புரட்சியால் பயனில்லை" இடுகைமீதான வாதங்களைப் படித்துப் பாராட்டியிருந்த உங்களின் நேற்றைய பின்னூட்டத்தை இப்போதுதான் கவனித்தேன். அந்த இடுகையில் பின்னூட்டப் பிரசுரிப்பை நிறுத்திவிட்டதால் உங்களுக்கு இங்கே நன்றி சொல்லிக்கொள்கிறேன். தாமதமானாலும் நீங்கள் பல இடுகைகளைப் படித்துவிடுகிறீர்கள். நானும் அதை உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்:))

 
At 2:19 PM, July 20, 2007, Blogger Thangamani said...

செல்வநாயகி, இன்றுதான் படித்தேன். நல்ல இடுகை. பலருக்கு பயனுள்ள, சிலருக்கு பயனற்ற இடுகை. படித்தவுடன் தோன்றியது இரண்டு.

1. முன்பு சோகமித்திரனின் கதையொன்றை ஒருவர் விமர்சனம் செய்திருந்தார். கதை அடுத்தநாள் திவசத்துக்கு தன்னுடைய துவைத்துப்போட்ட வேட்டி காய்ந்துவிடுமா என்று மழை நாளில் கவலைப்படும் ஒருவரின் கவலை பற்றியது. அதுவும் கவலைதான். ஆனால் இங்கு ஆற்ற இயலா சோகங்கள் அடுத்தடுத்து வந்து ஆளை மூடும் போது தன்னுடைய வேட்டி காயாத சோகங்களை சொல்லிக்கொள்ள வெட்கமாக இருக்கும். ஆனால் தமிழ் சூழலில் சோகங்கள், சுகங்கள், வெற்றிகள், துக்கங்கள் எல்லாவற்றையும் கொண்டாட ஒரு தகுதியும், ஒரு பிறப்பும் இருக்கவேண்டும். (பாரதியே சிறையில் இருக்க நேர்ந்த வலி தனக்கு தன்னுடைய ஆரோக்கியக்குறைவினாலும், பிறப்பினாலும் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது என்று மனு போடும் போது, இத்தகைய மனுக்கள் அதிசயமானவை அல்ல போலும்)

2. எருது நோய் காக்கைக்குத் தெரியுமா என்ற பழமொழி. எருதின் காயத்தை நோண்டித் தின்று பசியாறும் வேளைகளில் காக்கைக்கு வேண்டியதெல்லாம் அநாகரீகமாக தொந்தரவு செய்யும் எருதின் வாலை யாராவது பிடித்துக்கொள்ள மாட்டார்களா என்ற எரிச்சலும், சாப்பாட்டுக்கு உலைவைக்குதே சனியன் என்ற கவலையும், இன்னும் கொஞ்சநேரம் இழுத்துப் பறிச்சுக்கொண்டு கிடந்தால் இன்னும் கொஞ்சம் சாப்பாடு என்ற ஆதங்கமும் தான்.

சில காக்கைகளுக்கு இதுபோன்ற எருதுதானே அன்றொருநாள் நம்மை அதன் முதுகில் உட்காரப்போனது கொம்பைச் சிலுப்பி விரட்டி விட்டது என்ற கோபமும் இருக்கலாம்.

பதிவுக்கு நன்றி!
(இதை பிரசுரிப்பதில் பிரச்சனை இருந்தால் இதை தனிப்பட்ட குறிப்பாகக் கருதிக்கொள்ளலாம்)

 
At 11:35 PM, July 20, 2007, Blogger செல்வநாயகி said...

தங்கமணி, வருகைக்கு நன்றி.

குமார்குமரப்பன்,
தனிமடலாக இடப்பட்ட உங்களின் பின்னூட்டம் கண்டேன். அதில் உங்களின் மின்னஞ்சல் எனக்குக் கிடைக்க வகையிருக்காததால் இங்கே எழுதுகிறேன். சிறகுகளசைத்துத் தன் உணவுக்காகப் பறத்தலைத் தொடரும் பட்டாம்பூச்சியொன்றினைப் போல்தான் நானும் வாழ்வை, சமூகத்தை யாரிடமிருந்தும் அறிந்துகொள்ளும் ஆவலில்தான் கிடைக்கும் நேரத்தில் இங்கு வந்துபோய்க்கொண்டிருக்கிறேன். அதையும் தேடிப்படிப்பதாகவும், தொடருமாறும் கேட்கும், நான் பதிவுகளில்கூடச் சந்தித்திராத உங்களைப்போன்றவர்களின் ஊக்கம் நெகிழ்வைத் தருகிறது. நன்றி. நீங்கள் மடலில் குறிப்பிட்டிருக்கும் இன்னபிறவிசயங்களோடு முழுமையாக ஒத்துப்போகிறேன். என்பார்வையும் அதேதான்.

 
At 1:52 AM, July 21, 2007, Blogger தருமி said...

இதற்குத் தொடர்பான பின்னூட்டங்களை இனிதான் படிக்க வேண்டும்; வந்த கணத்தில் பற்றிப் பிடித்து படிக்க வைத்துவிட்டது வழக்கம்போல் உங்கள் மொழி. வாழி!

// எல்லா இசங்களையும் "மனிதநேயம்" எனும் ஒற்றைச்சொல்லுக்குள் புதைத்து மூடிவிட்டு அதன்மீது வாழமுடிந்தாலே வாழ்வு இலகுவாய் ஆகிவிடும் //

இசங்கள்தானே பலருக்கு வாழ்வாகவே ஆகிவிட்டன. பாவம்! அவர்கள் எங்கு போய் மனிதநேயத்தை (விலைக்கு) வாங்குவார்கள்.

 
At 3:36 AM, July 21, 2007, Blogger -/சுடலை மாடன்/- said...

செல்வநாயகி,

ஈழத்தமிழர் பிரச்சனையில் இந்துப் பத்திரிகை மற்றும் இராமின் கயமைத்தனத்தை திரு. மாலனுக்கு சுட்டிக்காட்ட மிகப் பக்குவமாக ஆனால் தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள். முன்பொரு முறை பத்ரியின் பதிவிலும் இந்துவின் கயமைத்தனத்தைப் பற்றிய ஒரு விவாதம் நடந்தது. அப்பொழுதும் இராம் மீது வைக்கப் பட்ட விமர்சனத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் அவரைக் காப்பாற்ற வந்த மாலன், இறுதியில் ஈழப்பிரச்சனையில் இந்து நடுனிலையுடன் செயல்படுவதில்லை என்று ஒப்புக் கொண்டார்.
இப்பொழுது மறுபடியும் மாலனுக்காக இராம் பரிந்து கொண்டு வருவது ஆச்சரியமளிக்கவில்லை. மாலனின் நிலைப்பாடும், இராமின் நிலைப்பாடும் ஒன்றாகவே இருக்கிறது என்று தெளிவாகிறது.

"இலங்கைத் தமிழர்கள் அனைவரும் விடுதலைப்புலிகளின் எல்லாச் செயல்கலையும் ஆதரிக்கிறார்கள், ஒருமித்து அவர்கள் தலைமையை ஏற்கிறார்கள் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒரு பிம்பம்.Myth." என்று இப்பொழுது சொல்லும் மாலன் முன்பு பத்ரியின் பதிவில் "அதே நேரம் பல்வேறு பிரசினைகளில் முரண்பட்ட நிலைகளைக் கொண்ட இந்திய/தமிழ் ஊடகங்கள் இந்த விஷயத்தில் ஏன் ஏறத்தாழ ஒரே நிலையைக் கொண்டிருக்கின்றன" என்று சொன்னார்.

உண்மையென்னவென்றால், இந்துவும், துக்ளக்கும், தினமலரும் மட்டுமே பத்திரிகை தர்மம் என்ற பெயரளவிலான பம்மாத்துக்காகக் கூட ஈழத்தமிழர்கள் பக்கமுள்ள நியாயத்தையோ, துயரத்தையோ எழுதுவதில்லை. ஆனால் வட இந்தியப் பத்திரிகைகளான 'தெகல்க்கா' போன்ற பத்திரிகைகள் ஈழத்துக்குச் சென்று தகவல்களை சேகரித்து வெளியிடுகின்றன. மாலனோ எல்லா இந்தியப் பத்திரிகைகளுமே ஒரே நிலையைக் கொண்டிருக்கின்றன என்கிறார். போலிக்கம்யூனிஸ்டு இராம், ஆர்.எஸ்.எஸ். சோ, காங்கிரஸ் மணி சங்கர் ஐயர், குழப்பம் செய்யும் ஜனதாக் கோமாளி சுப்பிரமணியசாமி போன்றவர்கள் என்ன காரணத்துக்காக ஈழத்தமிழர்களுக்கெதிராக ஒரே நிலைப்பாடு கொண்டிருக்கிறார்களோ அதே காரணத்துக்காகத்தான் இந்து, துக்ளக், தினமலர் பத்திரிகைகளும் இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்டிருக்கின்றன. இதை வைத்து இந்தியத்தமிழர்கள் = புலியெதிர்ப்பாளர்கள் என்று புனைகதை செய்ய முயல்கின்றனர்.

மாலனது இப்போதைய வாக்கியம், "இலங்கைப் பிரசினையில். எல்லாத் தரப்புக்களும் தவறு செய்திருக்கின்றன. எனவே தவறுகளைப் பற்றி விமர்சிப்பது என்று ஆரம்பித்தால் எல்லோரையும் சமநிலையில் நின்று விமர்சிக்க வேண்டும். அப்படி இல்லாமல் இந்தியாவை மட்டும் விமர்சிப்பது என்பது ஒரு தலைப்பட்ட்சமானது. அந்த மாதிரியான சூழலில் நான் ஒரு இந்தியனாக, இந்தியநிலையை ஆதரித்துப் பேசுவேன் என்பதுதான் என் நிலை. அது என் உரிமை மட்டுமல்ல, கடமையும் கூட." ஒரு உண்மையான பத்திரிகையாளன் சமனிலையில் இருந்து ஒரு பிரச்சனையை அணுகுவதற்கு முதல் அடிப்படை தேசக்கடமை, மதநம்பிக்கை, சாதிக்கடமை என்ற சமனற்ற நிலையிலிருந்து வெளிவருவது. இந்த வாதத்தின் மூலம் மாலன் ஒரு பத்திரிகையாளன் என்ற அடையாளத்தைத் துறந்து இராம்-சோ-சுப்பிரமணியசாமி ஏற்றுள்ள அடையாளத்தையே விரும்புகிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது.

பெரும்பாலான பிரச்சனைகளில் உண்மை போன்று வெளிப்படும் காந்தியம் மற்றும் இடதுசாரி கொள்கைகள் கூட ஈழத்தமிழர் பிரச்சனையில் தமிழர் எதிர் நிலைப்பாட்டை தயக்கமில்லாமல் ஏற்றுக் கொள்ள தயார் படுத்திக்கொள்ளும் வேடங்கள் தானோ என்னவோ!

நன்றி - சொ. சங்கரபாண்டி

 
At 4:53 AM, July 21, 2007, Blogger ரவிசங்கர் said...

//ஒரு மானமுள்ள அறிவுசீவியாக அல்லது தமிழராக இந்துராம் இலங்காரத்னாவைப் பெற்றுக்கொள்ளாமல் மறுத்திருந்தால் நீங்கள் சொல்வதுபோல் அவரை devalue செய்ய யாரும் முனையும்போது கவலைப்படலாம். எப்போதே தன்னைத்தானே தன் செயல்மூலம் devalue செய்துகொண்டுவிட்ட ஒருவரை இனிப் புதிதாக devalue செய்ய என்ன இருக்கிறது?//

சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள்

 
At 8:41 AM, July 21, 2007, Blogger செல்வநாயகி said...

தருமி, ரவிசங்கர், சங்கரபாண்டி,

வருகைக்கு நன்றி.

சங்கரபாண்டி,

///இப்பொழுது மறுபடியும் மாலனுக்காக இராம் பரிந்து கொண்டு வருவது ஆச்சரியமளிக்கவில்லை///

இந்த இடத்தில் அவசரத்தில் சொற்பிழை வதுவிட்டதோ என நினைக்கிறேன்.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பழைய பதிவுகளோ, விவாதங்களோ எதையும் நான் படித்திருக்கவில்லை. இப்போது படிக்க முயல்வேன். மாலனும் இலங்கைப்பிரச்சினை குறித்து விரைவில் விரிவாக எழுதுவதாகக் கூறியுள்ளார். அதையும் படிக்க விருப்பமாக உள்ளேன்.

////மாலனின் நிலைப்பாடும், இராமின் நிலைப்பாடும் ஒன்றாகவே இருக்கிறது என்று தெளிவாகிறது. ////


என்னால் இன்னும் இப்படியான முடிவுக்கோ, ஒப்பீட்டுக்கோ வரமுடியாமல் மாலனிடமான எதிர்பார்ப்புகளும், நம்பிக்கைகளும் (இவ்விசயத்தில் மட்டுமல்ல பொதுவாக) அதிகமுண்டு. அதற்கு வேறு நிகழ்வுகளில் அவரிடமிருந்த(இருக்கும்) அணுகுமுறையும், எளிவந்ததன்மையும், ஒரு பத்திரிக்கையாளருக்குரிய சமமான தன்மையும், அக்கறையும் எனக்குள் அவர்மீது ஏற்படுத்தியிருக்கும் மரியாதை காரணமாகவிருக்கலாம். இப்போதும்கூட மாலனைக் குற்றம்சுமத்தி அதற்கு ஆதரவாக அவர்மீது குத்தப்படும் முத்திரைகளோடு வரும் பின்னூட்டங்களோடு முடிந்துபோகும் அபாயம் நேர்ந்துவிடக்கூடாது என்கிற கவனுத்துடனே எழுதினேன் இந்த இடுகையை.

நான் கேட்டுக்கொள்வதெல்லாம் "பாரத ரத்னா" ஆகியிருந்தால்கூட ஆகிவிட்டுப் போகட்டும். ஆனால் "இலங்காரத்னாவாகவே" ஆகிவிட்ட இந்துராம்மீது கொட்டப்படும் கோபங்களிலெல்லாம் தெறிக்கும் நியாயங்களை மறந்து அவற்றை வெறும் தாக்குதல் என்ற அளவிலே மாலனும் எடுத்துக்கொண்டு பேசிவிடக்கூடாது என்பதைத்தான். ஏனென்றால் இப்படியான பார்வை வைக்கப்பட்ட மறுநொடியே(அதுவும் மாலனைப் போன்ற ஊடகவெளிச்சமுள்ளவர்களாலும்) அதுவரை பேசிக்கொண்டிருந்த எல்லாப் பிற பொருள்களும், குரல்களும்கூட இங்கு பேசாமல் கவனித்துக்கொண்டிருக்கின்ற நம் மக்களுக்கும் மறந்துபோகின்றன, அல்லது மறக்கடிக்கப்பட்டுவிடுகின்றன. பிறகு இந்த விவாதமெல்லாம் எதற்கு நடைபெறவேண்டும்? இதற்கு ஒரு வேட்டு வைக்கலாம் எனக் கருணையுடன் காத்திருக்கும் கண்கள் இரண்டு விழித்து "பாத்தீங்களா அரோகரா, ராமைத் தாக்கீட்டாங்க அரோகரா, நாங்க சொன்னா நம்பமாட்டீங்க அரோகரா, மாலன்கூட சொல்லீட்டாரு அரோகரா இதுதான் இணையம் அரோகரா, இதுக்குத்தான் இந்தக்கூட்டம் அரோகரா" எனப் பல்லவி எடுத்துக்கொடுக்க, அதுவரை இந்தப்பக்கமாகக் காதுகளை வைத்திருந்த அப்பாவிப் (நடுநிலை) பார்வையாளர்கூட்டமும் அப்படித்தான்போல என நினைத்து "ஆமாமாம் அரோகரா, அதேதான் அரோகரா" எனப் பின்னாலேயே சரணம் பாடிக்கொண்டு போய்விடும் அபாயங்களைக் கண்டிருக்கிறோம். மைதானங்கள் காலியான பிறகு என்ன உண்மைகள் சொன்னாலும் அங்கே காதுகளற்ற வெறுமை. உண்மைகளைப் பேசுவதற்கல்ல, அவற்றைக் கேட்பதற்குச் சிலகாதுகளையேனும் சேமிக்கவேண்டிய ஆயத்தங்களுக்கே இங்கு பெரும் பிரயத்தனங்கள் எடுக்கவேண்டியுள்ளது. அந்தப் பிரயத்தனங்களோடுதான் இந்துராம்மீதான விமர்சனங்கள்கூட வைக்கப்படவேண்டும் என்பது என் கருத்து.

உங்கள் சுட்டிகளுக்கு நன்றி சங்கரபாண்டி.

 
At 8:44 AM, July 21, 2007, Blogger செல்வநாயகி said...

சொல்ல விட்டுப்போனது.

இனி ஏதும் பின்னூட்டங்கள் வந்தால் அவற்றைப் பிரசுரிப்பதில் தாமதங்கள் நேரலாம். பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

 
At 8:58 AM, July 21, 2007, Blogger மாலன் said...

அன்புள்ள செல்வநாயகி,
இன்றுதான் உங்களது இந்தப் பதிவைப் பார்த்தேன்.தாமதமான எதிர்வினைக்கு மன்னிக்கவும்.
பெயரிலி உங்கள் பதிவில் எழுதி நீங்கள் வெளியிட்டிருந்த ராம் பற்றிய வரிகளில் என்னுடைய ஆட்சேபம் அவர் அவர்து குடும்பத்தினரையும் இழுத்திருந்ததுதான். ஒரு பிரசினையில் என்னுடைய நிலைப்பாடு பிஅழையாக அல்லது மனிதாபிமானமற்றதாக இருப்பதாக ஒருவர் கருதினால், அதற்காக என்னை விமர்சிக்கலாம், வசை கூடப்பாடலாம், ஆனால் என் குடும்பத்தையே சந்திக்கு இழுத்துச் ஜாடையாக இடிப்பேன் என்கிற நடத்தை நல்ல பண்பாகுமா என்பதே என் கேள்வி.

ராமிர்கு வலிக்குமே என்பதல்ல என் கவலை.அவர் வைக்கும் கருத்துக்களுக்காக, அவற்றையும் அவரையும் தற்காத்துக் கொள்ள வேண்டியது அவர் பொறுப்பு.அதில் எனக்கு வேலை இல்லை.

அவர்க்கு வலிக்குமா என்பதே கேள்வி. ஏனெனில் அவர் வலைப்பதிவுகளை, அதுவும் தமிழ் வலைப்பதிவுகளை வாசிக்கிறாரா என்று எனக்குத் தெரியாது.இங்கு வந்து பதிலளிக்க வாய்ப்பில்லாத ஒருவரை, அவரது செயல்களுக்காக, அவர் குடும்பத்தை இழுத்து எள்ளுவது நியாயமல்ல.

ராம் என் நண்பர். ஆனால் அதற்காக அவரது எல்லாக் கருத்துக்களையும் எல்லாச் செயல்களையும் நான் ஏற்றுக் கொள்கிறவன் அல்ல. வாய்ப்புக் கிடைத்த நேரங்களில் அது குறித்து அவரிடமே விவாதித்திருக்கிறேன்.

நான் பழகிய அளவில்,அவருமே கூட, மற்ற பத்திரிகையாளர்களைவிட, பல விஷயங்களைவிட முற்போக்கானவர். இலங்கை விஷயத்தில் அவரது நடத்தை உங்களுக்கு உவப்பாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அது ஒன்றை மட்டும் வைத்து அவரை முழுவதுமாக எடை போட்டுவிட முடியாது.

இலங்கையில் இன்னலுக்குள்ளான தமிழர்களைப் பற்றி உருக்கமாக எழுதியிருக்கிறீர்கள்.அது நமக்கு 3 மணிநேர சினிமாப் படமல்ல. அங்கிருந்து படகேறி வருகிற ஏழைத் தமிழர்களை இந்தியாதான் அரவணைத்துக் கொண்டிருக்கிறது. ஐரோப்பாவிற்குப் போகிற தமிழர்கள் விமானச் செலவிற்கு வசதியோ, ஆதரவோ கொண்ட நடுத்தர அல்லது செழிப்புற்ற குடும்பத்தினர் என்ற கருதுகோளில் ஏழைத் தமிழர்கள் என்று சொல்கிறேன்.

இலங்கையில் மட்டுமல்ல, எங்கெல்லாம் வன்முறை மூலமாக பிரசினைக்குத் தீர்வு தேடப்படுகிறதோ அங்கெல்லாம் அப்பாவி மக்கள் இன்னலுக்கு ஆளாகி வருகிறார்கள்.குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் பால்பவுடர் கூட இராக்கிற்கு அனுப்பப்படக்கூடாது என்று அமெரிக்கா தடைவிதித்திருந்தது தெரியுமா உங்களுக்கு?

இராக் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய போது அதற்க்கெதிராக ஒரு இயக்கம் நடத்தினோம். அதற்கான கைப்பிரசுரங்களை நான்தான் எழுதினேன். அதில் எழுதிய ஒரு வரி: 'யுத்தம் எந்த நாட்டிலும் அமைதியை நிலை நிறுத்தியதில்லை; யுத்தம் எந்த நாட்டிலும் உரிமைகளை பேணியதில்லை. யுத்தம் எந்தக் கலாசாரத்தையும் காப்பாற்றியதில்லை. யுத்தம், யுத்தம் கொள்ளும்.

அதுதான் இலங்கையின் பிரசினை. அங்கு அமைதிதிரும்பினால் ஒழிய நீங்கள் சொல்கிற மனிதத் துயர்கள் முடிவுக்கு வராது.
ஆனால் அப்படி அமைதி திரும்ப விடுதலைப்புலிகள் ஒரு போதும் சம்மதிக்க மாட்டார்கள்.

இலங்கை அரசும்தான்.

ஏனெனில் இருவரும் போரிடுவது மக்களுக்காக அல்ல. அவரவர் அதிகாரங்களைத் தக்க வைத்துக் கொள்ள.
For this purpose, both the sides have invested heavily in war.
அன்புடன்,
மாலன்

 
At 9:12 AM, July 21, 2007, Blogger மாலன் said...

அன்புள்ள சங்கரபாண்டி

>>"அதே நேரம் பல்வேறு பிரசினைகளில் முரண்பட்ட நிலைகளைக் கொண்ட இந்திய/தமிழ் ஊடகங்கள் இந்த விஷயத்தில் ஏன் ஏறத்தாழ ஒரே நிலையைக் கொண்டிருக்கின்றன" என்று சொன்னார்.

உண்மையென்னவென்றால், இந்துவும், துக்ளக்கும், தினமலரும் மட்டுமே பத்திரிகை தர்மம் என்ற பெயரளவிலான பம்மாத்துக்காகக் கூட ஈழத்தமிழர்கள் பக்கமுள்ள நியாயத்தையோ, துயரத்தையோ எழுதுவதில்லை,<<

சென்னையிலிருந்து வெளியாகும் தினமணியின் நிலை என்ன?இந்தியன் எக்ஸ்பிரசின் நிலை என்ன? டெக்கான் கிரானிகளின் நிலை என்ன? இந்தியா டுடேயின் நிலை என்ன? கல்கியின் நிலை என்ன? குமுதம் குழுமத்தின் நிலை என்ன? ஆனந்தவிகடனின் நிலை என்ன? தினத்தந்தியின் நிலை என்ன?ஜனசக்தியின் நிலை என்ன? தீக்கதிரின் நிலை என்ன?

இவைகளில் ஒன்றேனும் விடுதலைப் புலிகளின் நிலையை ஆதரிக்கிறோம் என்று சொல்லுமா?

>>ஆனால் வட இந்தியப் பத்திரிகைகளான 'தெகல்க்கா' போன்ற பத்திரிகைகள் ஈழத்துக்குச் சென்று தகவல்களை சேகரித்து வெளியிடுகின்றன. மாலனோ எல்லா இந்தியப் பத்திரிகைகளுமே ஒரே நிலையைக் கொண்டிருக்கின்றன என்கிறார்.<<

நான் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தில்லியில் வசிக்கிறேன். தில்லியில் காலையில் 12 நாளிதழ்களாவது வருகின்றன. அவற்றில் 7 அல்லது 8 நாளிதழ்களை நான் பார்த்துவிடுகிறேன். நானறிந்த வரையில், Times of India, Hindustan times, Indian express, asian age, bussiness standard, pioneer போன்ற எந்தப்பத்திரிகையிலுமே விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான நிலை கிடையாது
மாலன்

செல்வநாயகி,
இது சங்கரபாண்டிக்கான பதில். அனுமதிப்பதும் அனுமதிக்காததும் உங்கள் விருப்பம்.

 
At 11:13 AM, July 21, 2007, Blogger -/பெயரிலி. said...

செல்வநாயகி,
மாலன் சந்திப்புக்கான என் பதிலிலே இந்து ராம் ஐயங்காரின் மகள் குறித்து எதற்காகச் சுட்டியிருக்கின்றேன் என்பதைக் கவனிக்கவில்லை (என்றே இப்போதைக்குக் கருதிக்கொள்கிறேன்). அது சீனச்சார்பு கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொண்டு, சீன அரசின் விருந்தினராக திபெத் போய் வந்து கட்டுரை எழுதியவர், மகளைமட்டும் முதலாளித்துவத்தினை முன்வைக்கும் கொலம்பியா பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிய முரணைச் சுட்டுவதற்கு. மாலன் வசதியாக இதனைத் தவிர்த்துவிட்டுத் தன் வாதத்தினை வைக்கின்றார். இதே தனிப்பட்டவர்களின் வாழ்க்கைமீதான எள்ளல் (வசை?/அவதூறு) இனை சன் தொலைக்காட்சியின் செய்திகள் எதிர்க்கட்சிகளிலோ, குமுதம் நடிகைகள் வாழ்க்கை பற்றி எழுதும்போதோ பயன்படுத்தாதிருப்பினுங்கூட, நான் இங்கே முரணையும் ராமின் பொய்த்தன்மையையும்சுட்டச் சொன்னதைத் தவறென்று வைத்துக்கொண்டு விமர்சித்திருக்கலாம்.

டெல்கியிலிருந்து மாலன் சுட்ட வரும் பத்திரிகைகளின் ஆசிரியர்களெல்லாம், யாழ்ப்பாணத்தினைப் புலிகள் கைப்பற்றப்போகப்போகின்றார்கள் என்றவுடன் ஆயுதத்துக்கு இந்தியா ஓடிவரும் இலங்கை அமைச்சு, இராணுவப்பெருந்தலைகளை, சாயிபாபா, இந்திய அமைச்சர்கள், (பின்னால் தம்மைப் பெங்களூருக்கு துரத்தப்போகும்) தமிழ்நாட்டு முதலமைச்சர்களிடம் அழைத்துப்போவதில்லை. தனது தென்னாசியப்பத்திரிகைக்கல்விநிறுவனங்களிலே விசேட விருந்துரையாற்ற அழைப்பதில்லை. டெல்கியிலே ஈழத்தமிழர்களின் ஆதரவில்லாத ஆனந்தசங்கரி, மஹிந்த ராஜபக்ஸவுடன் விஜயம் செய்யும் டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களினை அழைத்து இந்தியத்தமிழரின் ஆதரவில்லாத சுப்பிரமணியசுவாமிகளோடு சேர்ந்துகொண்டு ஈழத்தமிழருக்கு என்ன வேண்டும் என்ற மகாநாடு நடத்திக் "காட்டுவதில்லை.' எல்லாவற்றுக்கும் மேலாக, லங்கா ரத்னா பெற்றதில்லை.

இவை பற்றி மேலும் இங்கே இனிமேல் வரப்போகும் எப்பின்னூட்டம் மீதும் எழுதப்போவதில்லை. விபரமாக, இந்த "தேர்ந்தெடுத்துச்சுட்டும் எள்ளல்" என்ற குற்றச்சாட்டு ஆயுதத்தைப் பற்றி, "இந்து - ராம் ஐயங்கார்" என்ற தனிமனிதரும் இலங்கை அரசியலும் பற்றி என் பதிவிலே எழுதுகிறேன்.

 
At 5:39 PM, July 21, 2007, Blogger செல்வநாயகி said...

மாலன், பெயரிலி,

உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி. நான் சொல்ல நினைப்பதை இரவு எழுதுவேன் மாலன்.

பெயரிலி,
உங்கள் விளக்கத்தை இட்டமை நன்று. அது வெளியிலிருந்து வாசிப்பவர்களுக்கு இவ்விசயத்தில் புரிதலுக்கு இன்றியமையாதது. ஈழப்பிரச்சினை, இந்துராம்கள் பற்றியெல்லாம் நிதானமாகவும், ஆழமாகவும் நீங்கள் பதியவேண்டுமென்பதே என் எதிர்பார்ப்பும். அம்மாதிரி முயற்சிகள் வீண்போவதில்லை என்பதை என் இவ்விரு இடுகைகளிலும் நீங்கள், மாலன் பேசிய விசயங்கள்மீதான புரிதல்களாக எனக்குத் தனிமடல்களாக அனுப்பப்பட்ட சில பின்னூட்டங்கள்மூலம் அறிந்துகொண்டேன்.

 
At 8:14 PM, July 21, 2007, Blogger Chellamuthu Kuppusamy said...

இந்தப் பதிவிற்காக நன்றி செல்வநாயகி. இதை எழுதத் தூண்டிய சூழ்நிலையை உணர்ந்து கொள்ள சற்று பின்னணியை ஆராய வேண்டும். ஆனால், உங்களது கருத்தை தார்மீகமாக ஆதரிக்க வேண்டியது கடமையாகிறது.

//ஏனெனில் இருவரும் போரிடுவது மக்களுக்காக அல்ல. அவரவர் அதிகாரங்களைத் தக்க வைத்துக் கொள்ள.
For this purpose, both the sides have invested heavily in war.// மாலன் கருத்தோடு உடன்பட எனக்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை. அதே நேரம் அநேக இந்திய ஊடகங்கள் இந்தப் பிரச்சினையை அணுகுவதில் ஒரு தலைப் பட்சமானவை என்பதை உணர்வதற்கு ஆதாரம் தேவையில்லை.

 
At 11:26 PM, July 21, 2007, Blogger செல்வநாயகி said...

குப்புசாமி,

உங்கள் மறுமொழிக்கு நன்றி.

///மாலன் கருத்தோடு உடன்பட எனக்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை. அதே நேரம் அநேக இந்திய ஊடகங்கள் இந்தப் பிரச்சினையை அணுகுவதில் ஒரு தலைப் பட்சமானவை என்பதை உணர்வதற்கு ஆதாரம் தேவையில்லை. ////


இந்தப் புரிதலுக்கும்.

இந்த இடுகை எழுதப்பட்டதன் நோக்கத்தை எட்டிப்பிடித்தும் இருக்கிறது என்பதை உங்களைப் போன்றவர்களின் மறுமொழிகள் எனக்கு உணர்த்துகின்றன.

 
At 12:34 AM, July 22, 2007, Blogger இராம.கி said...

"சென்னையிலிருந்து வெளியாகும் தினமணியின் நிலை என்ன?இந்தியன் எக்ஸ்பிரசின் நிலை என்ன? டெக்கான் கிரானிகளின் நிலை என்ன? இந்தியா டுடேயின் நிலை என்ன? கல்கியின் நிலை என்ன? குமுதம் குழுமத்தின் நிலை என்ன? ஆனந்தவிகடனின் நிலை என்ன? தினத்தந்தியின் நிலை என்ன? ஜனசக்தியின் நிலை என்ன? தீக்கதிரின் நிலை என்ன?

இவைகளில் ஒன்றேனும் விடுதலைப் புலிகளின் நிலையை ஆதரிக்கிறோம் என்று சொல்லுமா?"
-------------------------------------------
என்று மேலே எழுதி இந்து நாளிதழின் சார்புத் தன்மைக்கு ஒரு ஏற்புத் தருவது போல, திரு.மாலன் எழுதியிருக்கிறார். நாளிதழ்கள், தாளிகைகள் மட்டுமல்ல, முகனோட்டத்தில் (mainstream) இருக்கும் அரசியல் கட்சிகள் கூட (மாநிலக் கட்சிகளும் இந்தக் கூட்டத்தில் சேர்ந்தவையே) இன்றைய நிலையில் "விடுதலைப் புலிகளின் நிலையை ஆதரிக்கிறோம்" என்று சொல்லாமல் போகும் தான்.

ஈழச் செய்திகளை, தமிழர் பக்கத்தில் இருந்து சொல்லவும், பதிப்பிக்கவும், தயங்கும் போக்கு 20/25 ஆண்டுகளாய்த் தொடர்ந்து இருப்பதும், இந்தப் போக்கை உறுதி செய்யும் வகையில் இந்தியநாட்டில் சட்டங்களும் நடைமுறைகளும் இருப்பதும் உண்மையல்லவா? ஈழத்தில் நடப்பதில் எதை வெளிப்படையாக இங்கு இந்தியாவில் பேசமுடிகிறது? உடனே தான் பல்வேறு "டா"ச் சட்டங்கள் ஓடிவந்து விடுமே? கதவுகளை முற்றிலும் அடைத்து, கிட்டத் தட்ட எம் வீட்டை இந்தப் புலனத்தில் ஒரு சிறையாக்கி விட்டுப் "பின் உள்ளிருந்து ஓடிவந்து வெளியில் உள்ள தெருப் பேரணியில் கலந்து கொள்ள வில்லையே?" என்று வெற்றுக் கதை பேசுவது எந்தவகையில் சேர்த்தி?

இங்கு "இந்திய தேசியம்" என்ற ஒற்றைத் தேசியமே உயர்த்திப் பிடிக்கப் படும் வரை, வண்டிக் குதிரைக்கு இரண்டு பக்கமும் கண்ணடைப்புப் போட்டது போல, ஈழம் பற்றி அறியவிடாமல், தமிழ்நாட்டவரின் கண்கள் கட்டுப்படுத்தப் படும். :-) அந்த நிலையில், தமிழ்த் தேசியம், நடுவணில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி, அடுத்த வீட்டில் உள்ளவர்கள் நம் சித்தப்பா மக்கள், பெரியப்பா மக்கள் - எனவே அவர்கள் துன்புறுகையில் கொஞ்சம் உதவி செய்யத் தான் வேண்டும், என்பதெல்லாம் வெறும் முயற் கொம்பே.

இந்தப் போக்குகளின் அடிப்படை "இந்திய ஒரு பல்தேசிய நாடா?" என்ற கேள்விக்குள்ளே அடங்கியிருக்கிறது. 1947ல் இருந்து விடை காண முடியாமல், தேச அரசியல் சுற்றிச் சுற்றிச் சுழட்டுகிறது. "இந்தியா ஒரு பல்தேசிய நாடு இல்லை; அது ஒரு தேசம்" என்று சாதிக்கும் வலது சாரிப் போக்கே 60 ஆண்டுகளாய் இன்றும் ஆளுகையில், அதிகாரத்தில், இருக்கிறது. பெரும்பாலான இடது சாரிக் காரர்கள் இதைப் புரிந்து கொள்ளக் கூட அணியமாக இல்லை. மாறாக, ஐந்து குருடர்கள் யானையை தடவுவது போல் தடவிக் கொண்டு இருக்கிறார்கள்.

அன்புடன்,
இராம.கி.

பி.கு. செல்வநாயகி, அறிவு சீவிகள் என்று சொல்லுதற்கு மாறாய் "அறிவுய்திகள்" என்று சொல்லக் கூடாதோ? உய்தல் = சீவித்தல். உய்தலில் இருந்து எழுந்த பெயர்ச்சொல் தான் உயிர். அறிவால் உய்பவர்கள் அறிவுய்திகள்.

நல்ல தமிழைப் பழகுவோம். பழகும் சொற்களும், வாசகங்களும் நம்மை அறியாமல் ஒருவிதச் சிந்தனைக்கு இட்டுச் செல்லும். We get influenced by the words we use. இதையெல்லாம் கவனியாமல் இருந்துதான் நாம் பிறழ்ந்து யோசிக்கத் தலைப்படுகிறோம்.

 
At 2:32 AM, July 22, 2007, Blogger செல்வநாயகி said...

மாலன்,

உண்மையில் இந்த இடுகை எழுதியபோது இதன்மீது வேறெந்த விவாதத்தையும் நான் மேற்கொள்ளக்கூடாதென்றே இருந்தேன். முந்தைய இடுகையில் போய்க்கொண்டிருந்த விவாதங்களில் இந்துராம் devalue பற்றிய உங்கள் வருத்தம் எழுந்ததும், அப்படியான பின்னூட்டத்தை நான் எப்படி அனுமதிக்கலாம் என்று அவ்வருத்தம் என்மீதுவரை படர்ந்ததாலும் பிறகு நீங்கள் வலையுலகத்திற்குத் தேவையான கட்டுப்பாடு பற்றியெல்லாம் முன்னெடுக்க ஆரம்பித்ததாலும் என் இடுகையில் நடந்த விவாதத்தை நானே நிறுத்திவிட்டு நீங்களும், பெயரிலியும் விவாதிப்பதை அவதானிப்பதில்தான் ஆர்வமாயிருந்தேன். எனக்குள்ள தார்மீகக்கடமையாக உங்களின் வருத்தத்திற்குப் பதிலாக ஒரு தன்னிலை விளக்கமாகத்தான் இதை எழுதினேன். பெயரிலியின் பின்னூட்டத்திற்குப் பின்னாலான உண்மைகளை நான் உணர்ந்தவிதத்தையும், நம் அவசரமான குற்றச்சாட்டுகளால்(அவற்றை மட்டும் பெரிதாக முன்னெடுத்துவிட்டு) புதிய திசைநோக்கிப் போய்க்கொண்டு அந்த உண்மைகளை மறந்து விடுவது சரியல்ல என்பதை நான் நம்புவதற்கான காரணங்களையும் வைத்து என்னைத் தெளிவாகச் சொன்ன பிறகு இதன்மீது வேறெதும் விவாதங்களை நான் மேற்கொள்ளவேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் இப்போது உங்களின் இரு மறுமொழிகளையும் படித்தபின்பு கொஞ்சமே கொஞ்சம் பேசிவிட்டு நிறுத்திக்கொள்ள நினைக்கிறேன்.

எனக்கான எதிர்வினையாக நீங்கள் எழுதியிருக்கும் மறுமொழிக்கு நான் இவ்விடுகையிலே சொல்லியிருக்கும் விளக்கம் தாண்டிப் புதிதாகச் சொற்களை வேண்டுமானால் மாற்றி ஏதாவது சொல்லிக்கொண்டிருக்கலாம். ஆனால் பொருள் அதேவாகத்தான் இருக்கப்போகிறது மாலன். எனக்குத் தனிமனிதத் தாக்குதல்களில் உடன்பாடில்லை. ஒருவரின் கருத்துக்கு அவரின் குடும்பத்தை இழுப்பதில் சம்மதமுமில்லை. பொங்குகிற கோபத்தில் அவர் இராமுக்குப் பின் எழுதுகிற அய்யங்கார் மட்டுமல்ல, உங்கள் பெயருக்குப் பதிலாய் எழுதிய "பின்னூட்டிகள்" என்ற அழைப்பை மட்டுமல்ல, இங்கிருந்து போய் பெயரிலி உங்களை devalue செய்துவிட்டார் என்ற கோபத்தில் நீங்கள் எழுதிய "பெயரில்லாப் பெரியமனுசன்" என்ற அவருக்கான அழைப்பையும்கூட எனக்கு நானே கத்தரிபோட்டுக்கொண்டுதான் படித்தேன். அங்கே அந்த ஒருவார்த்தை களைந்து எப்படி உங்கள் கருத்தை உள்வாங்கிப் பின்னூட்டினேனோ, அதேபோலத்தான் அவரிலும் சிலவார்த்தைகள் களைந்து அவர் கருத்தையும் உள்வாங்கினேன். அப்படி உள்வாங்கி எழுதியதுதான் இந்த இடுகை. பெயரிலி மீதான குற்றச்சாட்டுத் தனியானது. ஆனால் அதுவே இராம் மீது புனிதத்தன்மை பூசிவிடுவதற்கும் போதுமானதாய் ஆகிவிடக்கூடதென்பதே என் பார்வை. நீங்கள் வைத்த வேகத்தில் (நீங்களே அப்படியொரு எண்ணத்தில் வைத்திருக்காதிருந்தாலும்கூட) இங்கே அது அப்படித்தான் எடுத்துக்கொள்ளப்படும்
அக, புறச்சூழல்கள் உண்டு. எனவேதான் ஈழத்தமிழர்களின் வாழ்வென்ன? இலங்காரத்னா இராமின் வழியென்ன? என்பதை இவ்விடுகைமூலம் நான் மீண்டுமொருமுறை யோசித்துப் பார்த்துக்கொண்டேன்.

அப்படியானால் இந்தச் சாதியிழுப்பு, கருத்துக்களற்ற வெறும் தாக்குதல் பின்னூட்டங்கள் பற்றியெல்லாம் மறந்துவிடலாமா என்று நீங்கள் கேட்கலாம். அவை பற்றியும் பேசலாம். ஆனால் அது எடுத்துக்கொண்ட பேசுபொருளில் இந்துராமுக்களிக்கும் பாதுகாப்புக்கவசமாக மாறிவிடாமல் தனியாக ஒரு தளத்தில். அதுவும் பெயரிலி ஒருவரை மட்டும் உரைகல்லாகக் கொண்டல்ல. மொத்தப் பதிவுலகத்தையும் சேர்த்து. இங்கில்லாத இராம் இப்படியெல்லாம் சொற்கள் போட்டு விமர்சிக்கப்படக்கூடாது என்கிற ஒரு கோணத்தில் மட்டுமல்ல, இங்கில்லாத கருணாநிதி, தயாளுஅம்மாள், இராமதாஸ், அன்புமணி, அன்புமணியின் பிள்ளைகள்,
எல்லாம் எங்கெங்கு எப்படி அர்ச்சிக்கப்படுகிறார்கள் என்பதெல்லாம்கூட எடுத்துக்கொண்டு பேசவேண்டிய தலைப்புங்க மாலன் அது. அதுபற்றிக்கூட ஒரு இடுகை எழுதும் எண்ணங்கள் எனக்குச் சில சமயங்களில் வந்துபோகும். ஆனால் நானென்ன இங்கே ஒவ்வொருத்தருக்கும் விரல்பிடித்து எழுதிவிடும் உரிமையுடையவளா என நினைக்கும் நிமிடங்களில் அவ்வெண்ணம் தொலைந்தும்போகும். இப்போதும் அது எனக்குப் பேசுபொருளில்லை. என்றாலும் ஒன்றுமட்டும் சொல்லவிரும்புகிறேன். கோபத்தில் குடும்பங்களை இழுத்து எழுதாமல் "செத்த என் மகனை எழுப்பித்தாவெனக் கேட்ட தாய்க்கு எழுப்பமுடியாது போ என்று சொல்லாமல் சாகாத வீடொன்றில் சிறுகடுகு வாங்கிவா எழுப்பித்தருகிறேன் எனச் சொல்லிச் சாவின்றி வாழ்வில்லை என்பதை அவளையே தேடிக் கண்டுகொள்ளவைத்த புத்தரின் பொறுமையோடு எழுதும் நண்பர்களுக்கும் ஏற்பட்ட அவப்பெயர்கள் உண்டு. அது சொன்னது, நம் சமூகத்துக்கு மனிதர்களில் சிலர் மட்டுமல்ல, பேசும்விசயங்களில்கூட தீண்டத்தகாதன உண்டென்பதைத்தான். நிற்க.

ஈழத்து மக்களின் வாழ்வை நான் மட்டும் உருக்கமாக எழுதவில்லை மாலன். அது ஏற்கனவே உயிருருகி ஊனில் கரைந்தும், ஊனும் உருகி மண்ணில் சிந்தியுமே இருக்கிறது. அங்கிருந்து வரும் ஏழைத்தமிழர்களுக்கு இந்தியாதான் அடைக்கலம் தருகிறது என்றுசொல்லி நமக்கொரு சான்றிதழை நாமே கொடுத்துக்கொண்டு, அப்படி அடைக்கலமாய் வந்தவர்களுக்கு மூன்றுவேளை சோறு கிடைக்கிறதா, உண்டு உறங்கியிருக்கும் இடமாவது சரியாக இருக்கிறதா என்பதைக்கூட மறந்துவிடுவோம். எல்லாவற்றையும்விட அகதியாய் வாழ்வதில் உள்ள வலியென்னவென நினைக்காமல் BBC வானொலியின் "அகதியாய் வரும் மக்களின் துயரங்கள் அதிகமானவையில்லையா?" எனும் கேள்விக்கு "ஆமாம் போர் நடந்தா அகதிக வரத்தான் செய்வாங்க" என்று ஆராய்ச்சித் தோரணையில் திருவாய் மலரும் இலங்காரத்னா இராம்களை முற்போக்காளர்கள் என்று அடையாளம்காட்ட மட்டும் மறவாதிருப்போம்.

சங்கரபாண்டிக்கு நீங்கள் பதிலாக எழுதிய மறுமொழி பார்த்து, முதன்முறையாக உங்களோடு இன்று எனக்குக் கோபம் வந்தது மாலன் (நான் கொண்டிருக்கும் மற்ற மதிப்புகள் மனதிலிருந்தாலும்). அவர் சொல்வது ஈழத்து மக்களின் துயர் பற்றி துக்ளக், தினமலர் போன்ற பத்திரிக்கைகள் ஒரு பம்மாத்துக்குக்கூட ஏன் எழுதுவதில்லை என்பதுபற்றி. நீங்கள் வைப்பது விடுதலைப்புலிகளுக்கு எந்தப்பத்திரிக்கைதான் ஆதரவுதருகின்றன? என்கிற எதிர்க்கேள்வி. ஈழத்து மக்கள் என்பவர்கள் விடுதலைப்புலிகள் மட்டும்தானா? செத்துமடியும் அப்பாவிமக்களில் எத்தனைபேர் அரசால் சாகிறார்கள் என்பதும் எடுத்துச்சொல்லப்படவேண்டியதில்லையா? அப்படிச் செத்ததுபோக மீதியிருப்பவர்களும் அவர்கள் நாடு பற்றியும் போராட்டம் பற்றியும் என்ன சொல்கிறார்கள் என்பது பத்திரிக்கைகளால் பாரபட்சமின்றி எடுத்துசொல்லப்படவேண்டிய ஒன்றல்லவா? இதில்வேறு ஆனந்தவிகடன் சொல்கிறதா? குமுதம் சொல்கிறதா என்றெல்லாம் கேல்விகளையும் சேர்த்திருக்கிறீர்கள். எனக்குத் தெரிந்தே ஆனந்தவிகடனில் இலங்கைஅரசை விமர்சித்தும் வந்த பத்திகள் உண்டு. இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும், அக்கட்சியின் பாராளுமன்றத்துணைத்தலைவருமான சேனாதிராசா தமிழகம் வந்தபோது எடுத்த செவ்வியை முக்கியமான கேள்விகளுடன் வெளியிட்டிருந்தார்கள். அதை நான் என் பதிவிலும் எடுத்துப்போட்ட சுட்டி இது.
http://selvanayaki.blogspot.com/2006_06_01_archive.html

இதில் முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியது, செவ்விக்கு முகவுரையாக விகடன் எழுதியிருந்த இந்தப்பத்தி:-

////ஒவ்வொரு ஈழத்தமிழர் வீட்டு வாசலிலும் மரணம் காத்திருக்கிறது. அரசாங்கத்தின் அனுமதியுடன் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஈவிரக்கமின்றிப் புகுந்து கொலை செய்கிறது சிங்கள இராணுவம். அந்தத் துப்பாக்கிகளைப் போலவே அவற்றை ஏந்தியிருக்கிற மனிதர்களும் உணர்ச்சியற்றவர்களாகவே இருக்கிறார்கள். இல்லாமல்போனால் 7 வயதுக்குழந்தையைக் கொடூரமாகக் கொலை செய்ய யாருக்காவது மனம் வருமா? இலங்கையில் அமைதி திரும்ப இன்னும் இப்படி எத்தனை
குழந்தைகளை நரபலி கேட்கப்போகிறார்களோ?

சேனாதிராசா பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் துயரம் ததும்புகிறது. இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும், அக்கட்சியின் பாராளுமன்றத் துணைத் தலைவருமான சேனாதிராசா தமிழகம் வந்திருந்தார். போர்ச்சூழலின் காரணமாக அகதிகளாகத் தமிழகம் வரும் இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான முன்னேற்பாடுகளுக்காக முகாமிட்டிருந்தவரைச் சந்தித்தோம்.////


இவைதவிர தமிழ்ச்செல்வனுடனான செவ்வி, பிரபாகரனுடன் இங்கிருந்து போன பாரதிராஜா போன்ற கலைஞர்கள் சந்திப்பும், அவர்களின் உனர்வுகளும் என்றும்கூட ஆனந்தவிகடனிலேயே படித்த நினைவுண்டு எனக்கு. எல்லாம் அறிந்தபின் மக்கள் எப்படி முடிவெடுக்கிறார்கள் என்பது வேறுவிடயம். ஆனால் இரண்டுபக்கங்களும் சொல்லப்படவேண்டியது முக்கியமில்லையா இலங்கைவிசயத்தில் ? அதை நாடுமுழுதும் எத்தனையோ வாசகர்களைக் கொண்டு இயங்கும் பாரம்பரியமுள்ள ஒரு பத்திரிக்கை உண்மையிலேயே செய்கிறதா?

இதோடு நிறுத்திக்கொள்ளவே விரும்புகிறேன் மாலன். "நேற்று எருத்து நோவு காக்கைக்குத் தெரியுமா?" எனும் பழமொழியை தங்கமணி எழுதிச்சென்றபோது அது நானறிந்த பழமொழிகளில் ஒன்றுதான் என நினைத்து உடனே மறந்துவிட்டேன். இன்று ஏனோ அந்தப் பழமொழிபற்றி நிறையநேரம் நினைத்துக்கொண்டிருந்தேன். எருத்துநோவு சாதரணமானதல்ல. நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன். நீர் நொதித்த சேற்றுவயலில் கலப்பையில் பூட்டிய நுகத்தடி இறுக்கப் புண்கள் கொண்டவை அவை. எரியும் புண்களில் நுகம் மேலும் உரச உரசவும் எரியும் புண்களோடு நிலத்தை உழுகப் பிறந்தவை அவை. புண்கள் தணலாய் எரியும்போது தகிக்கும் சோர்விலும் நடையின் வேகம் குறையும்போது தொடையில் தார்க்குச்சி தாங்கும் பிறவிகளும் அவை. உழவு முடித்து வைக்கோல் கடிக்கையில் ஏற்பட்ட புண்களைக் காக்கைகள் கொத்தும். தார்க்குச்சிக் கிழிப்பில் ஈக்களும் அரிக்கும். கொம்புகள் ஆட்டியும், வாலைச் சுழற்றியும் கண்களில் கண்ணீர் ஒழுக்கிக்கொண்டே தற்காத்துக்கொள்ளவே போரிடுகின்றன எருதுகள். கால்நடை மருத்துவமும் இல்லாத ஊரில் எருத்துப் புண்ணுக்குப் பசுந்தலைவைத்தியமே எசமானன் மருந்து. எசமானன் இடும் பசுந்தலைச் சாறு இன்னும் எரியும் எருதுகளுக்கு. வாலைச்சுழற்றும் எருதுகள் அடியில் எசமானனுக்கு வலிக்குமென்றாலும் எருதுகளின் புண்கள் கொடுமையானவை. காக்கைகளின் குரூரம் இன்னும் இன்னும். எனக்கு இருக்கிற கேள்வியெல்லாம் ஒருசோறிட்டாலும் கரைந்துகரைந்து தன் இனத்தையே கூப்பிட்டு உண்ணும் தயாளகுணத்துக்குப் பெயர்போன காக்கைகளுக்கு எருதுகள்மீது ஏன் இத்தனை குரூரம்?


இப்போது இருக்கிற வேண்டுகோள் எல்லாம் இலங்கைப்பிரச்சினையில் எருதுகளைக் கொத்தும் காக்கைகளாக இந்துராம்கள் இருக்கவேண்டாம் என்பதே. போதும் மாலன். இத்தனை பேசினாலும் உங்களின் மற்ற சில அணுகுமுறைகளில் எனக்கிருக்கும் கருத்துக்களில் மாற்றமில்லை. இந்த இடத்தில் பிரிந்துகொள்வோம். மீண்டுமொரு சந்திப்பில் நீங்களும் நானும் சாலையோரம் பூத்திருக்கும் கொன்றைமரமொன்றையோ, நீண்டு விரிந்திருக்கும் அதன் நிழலையோ பார்த்திருக்கையில் இந்த நிழல் ஓவியம்போலுள்ளது என்று ஒருவர் சொல்கையில் ஆமாம் பூக்களும் அழகானவைதான் என்று இன்னொருவரும் சொல்லி உரையாடுவதிலும் எந்தப் பிரச்சினையும் இருக்கப்போவதில்லை. அப்போதும் எருது காக்கைப் பிரச்சினையில் ஒத்துப்போகாததை நினைத்துக்கொண்டு ஒருவர் நிழலை நீளமென்று சொன்னால் அதனாலேயே இல்லை அது குட்டை என்றும், ஒருவர் மலரை அழகு என்று சொன்னால் அதனாலேயே அது குப்பை என்றும் சொல்லிவிடமாட்டோம் என்ற நம்பிக்கை உண்டு எனக்கு. நன்றி மாலன்.

மற்றும்படியாக இந்துராமுக்குப் பின்னால் அய்யங்காரை விடாத பெயரிலியின் பிடிவாதம், ஈழத்து மக்களின் பிரச்சினையை விடுதலைப்புலிகளின் ஆதரவென்றே புரிந்துகொள்ளும் உங்களின் பிடிவாதம் இரண்டையும் தாண்டியும் நீங்கள் இருவருமே இதுகுறித்து என்ன எழுதினாலும் நான் அங்கு பேசாவிட்டாலும் படித்துக்கொள்வேன் எனக்கு அவை ஏதும் புதியசெய்திகள் சொல்லும்பட்சத்தில் தெரிந்துகொள்ளும்பொருட்டு.

 
At 2:57 AM, July 22, 2007, Blogger செல்வநாயகி said...

இராம.கி ஐயா,

சொற்பயன்பாடுகளில் உங்களைப் படிப்பதோடு கற்றுக்கொள்வதைப் பயன்படுத்தவும் செய்வதில் இங்கு செல்வராஜ் கெட்டிக்காரர். நான் உங்களைப் படிப்பேன். சொற்களைக் குறிப்பெடுத்தும் வைப்பேன். எழுதும்போது வழக்கம்போலவே கைக்கு வரும் சொற்களோடே நின்றுவிடுவேன். முன்பு ஹரியண்ணாவிடம் குறிப்பெடுத்த சில சொற்களும்கூட இன்னும் சேமிப்பில் மட்டும் பத்திரமாக உள்ளன.

"அறிவுய்திகளை" அறிமுகப்படுத்தியமைக்கும் நீங்கள் இதை வாசித்துக் கருத்தைப் பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி உங்களுக்கு. பல்தேசியக் கருத்தாக்கம் பற்றி நீங்கள் எழுத இருப்பதாகவோ அல்லது உங்களை எழுதக் கேட்டோ எங்கோ ஒரு பின்னூட்டம் படித்தேன். நீங்கள் அதுகுறித்து எழுதுவதை வாசிக்க ஆர்வமுடன் நானும்.

 
At 7:57 PM, July 22, 2007, Blogger செல்வநாயகி said...

இன்னும் இரு நாட்களுக்கு வலைப்பக்கம் தலைநீட்டுவது அரிதென்பதால் ஏதும் பின்னூட்டங்கள் வந்தால் பிரசுரிப்பதில் மிகத் தாமதமாகலாம். நண்பர்கள் பொறுத்தருள்க.

 
At 11:12 PM, July 27, 2007, Blogger Peter said...

2007 ஜீலை 23-ல் வாசிங்டன் செனட் சபை முன் நடந்த ஈழத் தமிழர்களுக்கான சமாதான
போராட்டத்தில் ஏராளமான இந்திய தமிழர்களைப் பார்த்தது மனதுக்கு மிகவும்
ஆறுதலாக இருந்தது. வாசிங்டன் தமிழ்ச் சங்கத் தலைவர் தனது துணைவியாருடன்
பெரிய 'பேனர்' தூக்கி முன் நின்றது சிறப்பு.
புலம்பெயர்ந்தப் பொரும்பாலான தமிழர்கள்
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவே இருக்கிறார்கள் என்பது உண்மை.

பெரிய நாயகி உங்கள் இடுகை தமிழ் உணர்வாளர்களை ஊக்குவிக்கும் ஒரு உந்துச் சக்தியாக உள்ளது. நன்றி

இராம.கி மற்றும் சங்கரபண்டிக்கு வாழ்த்துக்கள்.

அன்புடன்
நாஞ்சில் இ. பீற்றர்.

 
At 12:06 AM, July 28, 2007, Blogger செல்வநாயகி said...

நாஞ்சில் பீட்டர்,

தமிழ் வலைப்பதிவுகளின் நிகழ்நாட்களின் சூழலில் இம்மாதிரி இடுகைகளையும் எழுதவும் அதைப்போன்ற பாதையில் தொடர்ந்து பயணிக்கவும் உங்களைப்போன்றவர்களின் வருகையும், வாசிப்பும், கருத்துப்பகிர்வுமே என்போன்றவர்களுக்கான உந்துசக்தி. நன்றி.

 
At 12:09 AM, July 28, 2007, Blogger செல்வநாயகி said...

நாஞ்சில் பீட்டர்,

தமிழ் வலைப்பதிவுகளின் நிகழ்நாட்களின் சூழலில் இம்மாதிரி இடுகைகளையும் எழுதவும் அதைப்போன்ற பாதையில் தொடர்ந்து பயணிக்கவும் உங்களைப்போன்றவர்களின் வருகையும், வாசிப்பும், கருத்துப்பகிர்வுமே என்போன்றவர்களுக்கான உந்துசக்தி. நன்றி.

 

Post a Comment

<< Home