எழுதிக்கிழிப்பதோடு என் வேலை முடிவதில்லை
சில வாரயிறுதிகள் வாசிப்புக்கு உகந்தவையாய் அமைந்துவிடுவது மகிழ்ச்சியானது. அப்படி வாசிப்பவைகளிலும் யோசிக்கவைப்பவையாய், தொடர்ந்து அதன் அர்த்தங்களை உள்ளளவிலேனும் புரிந்துகொள்ளவும் வைப்பவையாய்க் கிடைப்பவை சிலவே.
அமைதியாய், ஆழமாய்த் தன் பாணியில், மொழியில் பேசிக்கொண்டிருக்கிறார் ஆதவன் தீட்சண்யா. இப்படிப்பட்டவர்களுக்கு எழுத்து ஒரு கிரீடம் இல்லை, இன்னொருவனைக் கிழிப்பதற்காகவே வைத்திருக்கும் ஆயுதமும் இல்லை. தான் பிறந்து, வாழும் சமூகத்துடனான இடைவிடாத போராட்டமே அது. ஒரு தனிமனிதனை எதிர்ப்பதற்கு அவனின் கடந்தகாலங்கள் எதையுமே பரிசீலிக்காமல் சாதியைச் சொல்லித் திட்டுவதும், சமூகத்தின் சாதி அடுக்குமுறைகளையும், அதன் நாற்றங்களையும் பேசினாலே அது தன் குறிப்பிட்ட சாதியை வேண்டுமென்றே இழிவுபடுத்தும் கூட்டம்தான் என்று சுயசாதி காக்கப் போராடுவதும் ஒரேமாதிரி இயல்பாக நடந்துவிடும் சூழல்களில் ஆதவன் தீட்சண்யா போன்றவர்களின் கருத்து வெளிப்பாடுகளைப் புரிந்துகொள்ள முடிகிற பொறுமையுடையவர்கள் வாசிக்கலாம்.
அவரின் சமீபத்திய மிக நீளமான செவ்வி அதுவென்றாலும் சிலவற்றை மட்டும் இங்கு பதிப்பிக்கிறேன். "கீற்று"க்கு நன்றி.
பெண்ணடிமைத்தனம், சாதி அடக்குமுறைகளைத் தக்க வைப்பதில் நமது சமூக, குடும்ப அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது?
நம் சமூக அமைப்பில் நாம் என்னவாக வளர்க்கப்படுகிறோம்? ‘இந்தியன் என்ற உணர்வோடு’ என்றால் அது மிகவும் செயற்கையானது. வேறு ஏதாவது நாட்டுக்குச் சென்றால் ஒருவேளை இந்தியன் என்ற உணர்வு நமக்கு வரலாம். அதுவும் தங்கியுள்ள அந்த நாட்டை சேர்ந்தவர் அல்ல என்பதால் இந்தியன் என்று சொல்லிக்கொள்ள வேண்டியிருக்கிறது. இது தேவையை ஒட்டி உருவானது.
ஆனால் பிறப்பிலிருந்தே குறிப்பிட்ட சாதியின் நம்பிக்கைகளுக்கும், வளமைக்கும் ஏற்றவாறு தான் வளர்க்கப்படுகிறோம். இதிலும் பெண் கூடுதல் கவனத்தோடு வளர்க்கப்படுகிறாள். ஒவ்வொரு கணமும் சாதியாக வளர்க்கப்பட்டு சாதியாகத் தான் வாழ்கிறோம். முதலில் நான் இந்தியன் பிறகு தமிழன் என்பதெல்லாம் மிகமிக அயோக்கியத்தனமான வார்த்தைகள்.
நான் சைவம், நான் அசைவம் என்று உணவில் வேறுபடுவதில் தொடங்கி உடை, உணர்வுகள் அனைத்தையும் சாதிதான் தீர்மானிக்கிறது. நல்ல குடும்பம் என்கிற நம் வரையறையே அப்படித்தானே இருக்கிறது. ‘அப்பா, அம்மாவிற்கு பிடித்த பையனாக, அல்லது அவர்கள் சொல்கிறவனை திருமணம் செய்துகொண்டு குனிந்த தலை நிமிராத பெண்கள் இருந்தால் அது நல்ல குடும்பம். ஆச்சாரம் கெடாத குடும்பம். நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்.’ அதாவது பல்கலைக்கழகம் எப்படி ஒரு மோசமான தயாரிப்பை வெளியே அனுப்புகிறதோ அப்படித்தான் குடும்பமும் அனுப்புகிறது.
சாதியை வலுவாக, மிக நுட்பமாக பாதுகாக்கக்கூடிய இடம்தான் குடும்பம். என் பையன் அமெரிக்கா போனாலும் இங்க வந்து நான் பார்க்கிற பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணுவான் என்று உறுதியாக சொல்ல முடிவது சாதியால் தானே? உண்பது, வாழ்வது, உணர்வது தொடங்கி நான் இன்று உண்டதை நாளை ஒருவன் அள்ளுவான் என்பது வரைக்கும் சாதிதானே தீர்மானிக்கிறது? ‘இறந்தபிறகு எரிப்பதா, புதைப்பதா? எந்த சாதிக்காரன் குழிவெட்டுவது?’ என்பதையும் அதே சாதிதான் தீர்மானிக்கிறது.
‘நான் ஒடுக்குகிற சாதியில் பிறந்திருக்கிறேன், நான் பெண்ணை ஒடுக்குகிற ஆணாக இருக்கிறேன். இதுகுறித்து நான் குற்றவுணர்ச்சி கொள்கிறேன்’ என்பது மாதிரியான எந்த எழுத்தும் இதுவரை வரவில்லை. சுஜாதா ‘சிவாஜி’ திரைப்படத்தில், ‘அங்கவை, சங்கவை இருவரும் கறுப்பு’ என்று எழுதுகிறார். அவர் பார்த்த பெண்கள் வெள்ளைத்தோல் உடையவர்கள். எனவே கறுப்பாக இருப்பவர்களை அவரால் எளிதாக அவமானப்படுத்த முடிகிறது.
இதைச் சொல்கிற அதிகாரத்தை சுஜாதாவிற்கு அவரது ஜாதிதானே தந்தது? எங்கள் ஜாதிப்பெண்கள் வெள்ளைத்தோல் உடையவர்கள் என்று அவர் சொன்னால் அதுவும் ஜாதித்திமிர் தானே? அவர் பார்வையில் பெண்கள் வெறும் தோல் சம்பந்தப்பட்டவர்கள் என்றுதானே அர்த்தம்?
திப்புசுல்தான் மலபார் கவர்னருக்கு எழுதிய கடிதம் ஒன்றை சமீபத்தில் வாசித்தேன். “உங்கள் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் மேலாடை அணியாமல் இருக்கிறார்கள் என்று படித்தேன். அதற்குக் காரணம் வறுமையா, வேறு ஏதாவதா? வறுமை எனில் அதைக் களைய வேண்டியது உங்கள் பொறுப்பு. மத நம்பிக்கை தான் காரணம் எனில் அந்த நம்பிக்கையின் வேர் பாதிக்காமல் பக்குவமாக எடுத்துச் சொல்லி ஆடை அணிய வைக்க வேண்டும்.”
மேலாடை அணியும் உரிமை மறுக்கப்பட்டிருந்தது நாடார், பறையர் போன்ற தாழ்த்தப்பட்ட பெண்களுக்குத் தான். ஒருவேளை தங்கள் மதப்பெண்களைப் போல இவர்களும் குப்பாயம் அணிய வேண்டும் என்றுகூட திப்புசுல்தான் விரும்பியிருக்கலாம். அது எல்லாமே இரண்டாம்பட்சம். ஆனால் இங்குள்ளவர்கள் வேறு ஒருவன் சுட்டிக்காட்டியும் திருந்தாதவர்களாய்த் தானே இருந்திருக்கிறார்கள் என்பதே முக்கியம்.
நூறு வருடங்களுக்கு முன்பு நாடார் பெண்ணுக்கு மேலாடை அணியும் உரிமை தேவைப்பட்டது. இன்றைக்கு அவளுக்கு வேறு உரிமைகள் தேவைப்படுகின்றன. கேரளாவில் ஈ.கே.நாயனார் முதல்வராயிருந்தபோது, நிதியை கிராமங்களுக்கு ஒதுக்கி அந்தந்த கிராம மக்களே தங்கள் தேவைகளை முடிவுசெய்து நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. மாநில அளவிலான இந்த திட்டத்துக்கு வழிகாட்டியவர் தோழர் இ.எம்.எஸ். ஒரு கிராமத்தில் ஆண்கள் அனைவரும் கூடிப்பேசி தெருவிளக்குகள் அமைத்தார்கள். அன்றிரவே அந்தக் கிராமத்து பெண்கள் அந்த விளக்குகளை உடைத்தெறிந்தார்கள்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் இரவில் வெளிச்சம் அதிகம் இருந்தால் பெண்களால் தங்களின் இயற்கைத் தேவைகளுக்காக வெளியில் செல்ல முடியாதென்பதால்தான் தெருவிளக்குகளை உடைத்துவிட்டதாக தெரிவித்தார்கள். இதைத் தெரிந்து கொண்ட இ.எம்.எஸ். அந்தக் கிராம சபைக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘உங்கள் கிராமத்தில் முதலில் கட்டப்பட வேண்டியது கழிப்பிடம்தான். சபையில் ஆண்கள் மட்டுமே எல்லா முடிவுகளையும் எடுப்பதால் நம்மால் பெண்களின் பிரச்சனைகளை புரிந்துகொள்ள முடியவில்லை. நாம் ஆண்களின் சபையாக சமூகத்தை வைத்திருக்கிறோம். எனவே அடுத்தக் கூட்டத்தில் இருந்து பெண்களையும் கலந்து பேசுங்கள். அவளால் தான் அவளது தேவைகளைப் பேச முடியும்’ என்று எழுதினார்.
குடும்பத்தை எடுத்துக்கொண்டால் அங்கும் கணவன் தான் முடிவெடுக்கிறான். பெண்ணுக்குப் பங்கில்லாத அந்த முடிவை குடும்பத்தின் முடிவாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்தப் பெண்களின் நிலையைப்போல் தான் தலித்துகளின் நிலையும். இந்தியச் சமூகத்தில் இதுவரை முடிவெடுக்கும் இடத்தில் தலித்துகள் இருந்ததில்லை. அதிகாரத்திலும் அவர்கள் இல்லை. அப்படியானால் ஆதிக்க சக்திகள் எடுக்கும் முடிவுகள் தங்கள் ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொள்வதாகத் தானே இருக்கும்? நம் சமூகம் சாதியால் மட்டுமே பின்னப்பட்டிருக்கிறது என்பதைத் தான் மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது.
எழுத்தாளர்களில் சிலர் எழுதுவதையே பெரிய புரட்சி என்றும், ‘நான் உங்களுக்காக எழுதுகிறேன், உங்களுக்காக நான் என்னையே தியாகம் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் என்னைப்பற்றி இந்த சமூகத்திற்கு எந்த அக்கறையும் இல்லை. குடிப்பதற்குக் கூட காசில்லை. வேறுநாட்டில் எழுத்தாளர்களை எப்படியெல்லாம் மதிக்கிறார்கள். தமிழ்நாட்டில் தான் இந்த நிலைமை’ என்றும் தொடர்ந்து புலம்பி வருகிறார்களே?
புலம்புபவர்கள் தங்கள் எழுத்தையே இலக்கியச் சேவையாக கருதினால் நான் ஒன்றும் செய்ய முடியாது. இந்த சமூகத்தில் எந்த ஒரு விஷயம் என்னை சுலபமாக கடந்து செல்ல அனுமதிக்கவில்லையோ அதைத்தான் அந்த இடத்தில் நின்று எதிர்கொண்டு ஒரு எழுத்தாளனாக நான் எழுதுகிறேன்.
தெருவில் ஒரு சண்டை நடக்கிறது. அந்தப் பக்கமாக செல்லும் ஒருவர் அதை விலக்கி விட்டு விட்டு செல்கிறார். அதை அவர் பிரகடனப்படுத்திக் கொண்டிருப்பதில்லை. அதே வேலையை ஒரு எழுத்தாளன் செய்தால் அதை அவன் எழுத வேறு செய்கிறான். அதற்காக எழுத்தாளனை கொண்டாட வேண்டும் என்றும் அவன் நினைத்தால் அது அவனுடைய தவறு தான். தங்களுக்கு ஏற்படும் மனக்கிளர்ச்சியை, அனுபவங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதற்காகத் தான் எல்லோரும் எழுதுகிறார்கள். அப்படி எழுதுவதை எழுத்தாளன் தியாகம் என்று நினைத்தால், அதைப் படிக்கிற நானும் தியாகி தான் என்று வாசகர்களும் சொல்லலாமே. எழுதுவது என்பது தியாகம் சம்பந்தப்பட்ட விஷயமே கிடையாது.
சமூகத்தோடு தொடர்ந்து இணைவதும், முரண்படுவதுமாகத் தான் நாம் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறோம். இதை நாம் எழுத்து வழியாகத் தெரிவிக்கிறோம். மற்றவர்கள் ஏதோ ஒரு மீடியம் வழியாகத் தெரிவிக்கிறார்கள். தன்னைப் பற்றிய பெருமையிலோ, கழிவிரக்கத்திலோ தம்பட்டம் அடிக்கும் செயல்தான் இது.
ஒரு புத்தகத்தையோ, நாடகத்தையோ படிக்கும் அல்லது பார்க்கும் வாசகனோ, நேயரோ அதனால் பாதிப்பு அடைந்தால் அவனது மனதில் சிறு கீறலோ, அசைவோ ஏற்பட்டால் அவன் வேண்டுமானால் எழுதியவனைப் பாராட்டலாம். அதை விடுத்து தன்னைத் தானே பாராட்டிக் கொள்வதற்காக, ஷீல்டு வாங்கி ஜோல்னாப் பையில் வைத்துக்கொண்டு அலைவது தேவையற்ற விஷயம். சமூக அக்கறையுள்ள படைப்பாளி இந்த சமூகத்தோடு உரையாடுவதற்காக எழுதுகிறான். அதைப் படித்துவிட்டுத்தான் உலகம் விடிகிறது என்று சொல்வதோ, தன்னைக் கொண்டாட வேண்டும் என்று எதிர்பார்ப்பதோ அபத்தமான காரியம்.
வேதம் படிப்பதற்கு குறிப்பிட்ட சாதியில் பிறக்கவேண்டும் என்பதைப் போலவே இலக்கியம் படைப்பதற்கு தனி ஆளுமை வேண்டும், அறிவு வேண்டும், தேஜஸ் வேண்டும், இன்னும் என்னென்னமோ வேண்டும் என்று கூறுகிறார்கள். இதன்மூலம் எழுத்தாளர்களைப் புனிதப்படுத்தும் வேலை நடந்துகொண்டிருக்கிறது. இதனால் எழுத்தாளனை இந்த சமூகம் கொண்டாடுவதற்குப் பதிலாக தன் எழுத்தின்மீது அதீத நம்பிக்கை கொண்டு எழுத்தாளன் தன்னைத் தானே கொண்டாடிக் கொண்டிருக்கிறான்.
கலைஞனைக் கொண்டாடாத சமூகம் உருப்படாது என்று சொன்னால் உழவனையோ, தொழிலாளியையோ கொண்டாடாத சமூகம் மட்டும் உருப்பட்டு விடுமா? நீ எழுதும் கவிதைகளைத் தூக்கி வைத்து கொஞ்சிக் கொண்டிருக்கும் எந்த அவசியமும் இந்த சமூகத்துக்குக் கிடையாது. இந்த சமூகத்தைப் பதிவு செய்கிறவனாக, உன் கருத்தைத் தெரிவிப்பவனாக இருக்கும் பட்சத்தில் உனக்கான அளவில் இந்த சமூகம் உன்னை கொண்டாடத் தான் செய்கிறது. உனக்கு குடிப்பதற்குக் காசில்லை என்பதெல்லாம் இந்த சமூகத்தின் பிரச்சனையும் கிடையாது.
இவர்களைப் பற்றி நாம் பேச வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகிறேன்.
தலித் இலக்கியத்தை தலித்கள் தான் எழுத வேண்டும் என்ற கருத்தும், அதற்கு எதிராக ‘அவர்கள் மேல் அக்கறை கொண்ட யார் வேண்டுமானாலும் எழுதலாம்’ என்ற கருத்தும் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. இதில் உங்களது நிலைப்பாடு என்ன?
தீண்டாமையின் கொடுமையை அனுபவிக்காதவர்களால் தீண்டாமை குறித்து எழுத முடியாது. ஒரு பெண்ணின் துயரங்களை எப்படி ஆணால் உணர முடியாதோ, அதேபோல் ஒரு தீண்டத்தகாதவனின் பிரச்சனைகளை தீண்டத்தக்க சாதியை சேர்ந்தவனால் ஒருபோதும் உணர முடியாது. சமீபத்தில் ஒரு பத்திரிகையில் கோபிச்செட்டிபாளையத்தின் முன்னாள் நகராட்சித் தலைவர் லட்சுமண ஐயரின் பேட்டி வெளியானது. இந்தியாவில் கையால் மலம் அள்ளும் முறையை முதன்முதலில் கோபி நகராட்சியில் ஒழித்தவர் இவர்தான்.
அந்த முறையை ஒழித்ததற்கான காரணம் குறித்து கேட்டபோது, சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றபோது அங்கே நாங்கள் கையால் மலம் அள்ள வேண்டியிருந்தது. அந்த ஒன்று போதாதா இதை ஒழிப்பதற்கு என்று குறிப்பிட்டிருந்தார். அப்படியானால் உன்னை அள்ள வைத்தால் தான், இந்த வேலை எவ்வளவு துயரமானது, அவமானகரமானது என்று புரிகிறது. அந்த அவமானங்களை சந்திக்காத ஒருவனால் அது குறித்து எப்படி எழுத முடியும். மற்றவர்கள் எழுதுவதை சாதி ஒழிப்பு எழுத்து, தலித் ஆதரவு எழுத்து என்றுதான் பார்க்க முடியும்.
வேடிக்கை பார்த்து எழுதுவது என்பது வேறு. அனுபவித்து எழுதுவது என்பது வேறு. அதாவது பாவனைக்கும் உண்மைக்குமான இடைவெளி அதில் இருக்கும்.
போராட்ட முடிவுகளைக் கூட ஆண்களே எடுப்பதாகப் பேசினீர்கள். சமூகம் சார்ந்த விஷயங்களில் பெண்களின் பங்கு அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?
அவர்கள் படிப்பு, வேலை என்று வெளியில் வரத் தொடங்கிவிட்டார்கள். சமூக நிகழ்வுகளில் அவர்கள் அதிகம் பங்கு பெறுவது இன்னும் நடைபெறவில்லை. 123 ஒப்பந்தம் மாதிரியான பிரச்சினை தொடர்பான கருத்தரங்குகளில் ஆண்கள் அதிகம் கலந்து கொள்கிறார்கள். அந்த ஆண் வீட்டுக்குப் போகும்போது இந்த ஒப்பந்தம் குறித்து என் குடும்பத்தில் எனக்கு மட்டுமே தெரியும் என்ற அகங்காரத்தில் செல்கிறான். அதனால் அவன் தன் மனைவியை இரண்டாம் பட்சமாகக் கருதுகிறான்.
ஆண்களின் தகவல் அறிவை நாம் அதிகரிப்பது அவனுடைய அதிகாரத்தை உறுதிப்படுத்துவதாக அமைந்து விடுகிறது. ஆண்களின் சபையாக சமூகத்தை மாற்றிக் கொண்டிருப்பதை அனுமதிக்கக் கூடாது. தலித்துகளுக்கு என்று கட்சி உருவாக்கப்பட்டு எங்களது ஓட்டுகளை நாங்களே வாங்கிக் கொள்கிறோம் என்ற நிலை வந்தபோது, மற்ற கட்சியினர் தலித் பிரச்சினைகளைப் பேச முன்வந்தார்கள். அதுபோல பெண்களுக்கென்று தனிக்கட்சி வரும்போது பிற கட்சிகளும் பெண்களின் பிரச்சனைகள் குறித்து பேச முன்வருவார்கள்.
ஒரு நாவலுக்கான விஷயத்தை ஒரு கவிதையாக எழுதுகிறீர்கள். மற்றவர்கள் கட்டுரையாக எழுதிக் கொண்டிருக்கும் உலகமயமாக்கல், சதாம் கொலை போன்ற சமகாலப் பிரச்சினைகளை, செய்திகளை நீங்கள் சிறுகதையாக எழுதுகிறீர்கள். ஒன்றை எழுத ஆரம்பிக்கும்போது, இது கதைக்கானது, இது கவிதைக்கானது என்பதை எப்படி தீர்மானிக்கிறீர்கள்?
இப்படித்தான் எழுதவேண்டும் என்று எதையும் திட்டமிட்டு எழுதுவதில்லை. நாம் பார்க்கிற, நமக்குள் தோன்றுகிற விஷயங்கள் ஒரு கட்டத்தில் எழுத்தாக வெளிவருகிறது. அது எந்த வடிவத்தில் வரவேண்டும் என்பதை அதுதான் தீர்மானிப்பதாக நான் நினைக்கிறேன். நான் எந்த மாதிரியான எழுத்தாளன், என்னுடைய பாடுபொருள் என்ன, கதைமாந்தர்கள் யார் என்று ஏற்கனவே ஒரு தீர்மானம் இருக்கிறது. அந்த நோக்கத்திற்கு இசைவாகத்தான் நமது மனம் இயங்கிக் கொண்டிருக்கும். முடிவற்ற அந்த இயக்கத்தின் ஒரு கட்டமாகத்தான் எழுதத் தொடங்குகிறோம்.
சமகால பிரச்சனைகளை கதைக்குள் கொண்டு வருவதாகக் குறிப்பிட்டீர்கள். சங்க இலக்கியத்தை வைத்துக்கொண்டு அந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கை முறைகள், இயற்கை, அரசு அமைப்பு, ஆண் பெண் உறவு என எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள முடியும். அவற்றைப் படிக்கும்போது, ‘இன்னும் ஐம்பது ஆண்டுகள் கழித்து, நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த 2007ம் வருடத்தை பற்றித் தெரிந்து கொள்ள விரும்புவார்களே, இதை நாம் பதிவு செய்திருக்கிறோமா’ என்ற கேள்வி எனக்குள் வருகிறது.
வாழும் காலத்தை என்னவாக எதிர்கொண்டோம் என்ற கேள்வி மிக முக்கியமானது. சதாம் உசேன் கொல்லப்பட்டார் என்பது எல்லாருக்கும் தெரியும். ஏன் கொல்லப்பட்டார் என்ற கேள்விக்கான பதிலை நான் நம் சந்ததியினருக்கு சொல்லிச் செல்ல வேண்டியிருக்கிறது. சதாம் உசேன் கொலை குறித்து இங்கு என்ன பதிவு இருக்கிறது? அஞ்சலிக் கவிதை, ‘வருந்துகிறோம்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை போன்றவற்றை எழுதுவதில் எனக்கிருந்த அலுப்புதான் என்னை சதாம் உசேன் குறித்து சிறுகதை எழுதத் தூண்டியது.
அதேபோல் தான் உலகமயமாக்கலும். உலகமயமாக்கல் ஏதோ நேற்று தோன்றிய ஒரு விஷயமல்ல. ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்பதே உலகமயமாக்கல்தானே. தமிழ்நாட்டில் ரோமானிய நாணயங்கள் கண்டெடுக்கப்படுவது முந்தைய உலகமயமாக்கலின் அடையாளம் தானே. உலகம் தனக்குள் பரிவர்த்தனைகளை நிகழ்த்திக் கொண்டு ஒரு சமூகமாய் இணங்கி வாழ கடந்த காலத்தில் செய்த இப்படியான முயற்சிகளுக்கு மாறானது இப்போது நாம் பேசுகிற உலகமயம்.
நான் வாழும் காலத்தில் இந்த உலகமயமாக்கலின் ஒரு புதிய வடிவத்தைப் பார்க்கிறேன். இரண்டாவது பத்தாண்டு சீர்த்திருத்தம் நடந்து கொண்டிருக்கிறது. அது சீர்திருத்தமா, சீரழிவா என்ற கேள்வி எனக்குள் எழுகிறது. அது சீர்திருத்தம் கிடையாது என்று எனக்குத் தெரிகிறது. மூன்றாம் உலகநாடுகளின் வளங்களை கொள்ளையடிக்க அந்தந்த நாட்டு அரசாங்கங்களையே உறிஞ்சுகுழல்களாகப் பயன்படுத்தும் இந்த ஏற்பாடு வெறும் அணா பைசா விசயம் அல்ல என்பது புரிகிறது. ஆனால் இந்தக் கொடுமையை தனிநபராக எதிர்க்கும் வல்லமை எனக்குக் கிடையாது. எனவே எனக்குத் தெரிந்த எழுத்தின் வழியாக என்னுடைய எதிர்ப்பை நான் பதிவு செய்யகிறேன்.
எழுத்தைத்தவிர இடதுசாரி இளைஞர்களுக்கான பயிற்சிப் பட்டறைகள், மேடைப்பேச்சு என்று பல தளங்களில் இயங்கி வருகிறீர்கள். சாதியத்துக்கு எதிரான உங்களது செயல்பாட்டுக்கு எழுத்து மட்டுமே போதாது என்று கருதுகிறீர்களா?
தனது துயரங்களைப் புரிந்துகொள்கிற ஒரு சமூகச்சூழலை உருவாக்குவதும் ஒடுக்கப்பட்டவர் சார்பாக எழுதுகிறவர்களின் வேலையாகிறது. எனவே எழுதிக் கிழித்ததோடு என் வேலை முடிந்துவிட்டது என்று நான் தூங்கப் போய்விட முடியாது. என் எழுத்துக்களோடு மக்கள் சமூகத்தின் வெவ்வேறு அடுக்குகளோடு ஊடாட்டம் கொள்ள வேண்டியிருக்கிறது. எழுத்து எப்படி தனிநபர் செயல்பாடோ அதைப்போன்றது தான் பேச்சும். பேச்சு என்பது அர்த்தமுள்ளதாய் இருக்க வேண்டியிருக்கிறது. எனவே சொற்பொழிவாக அல்லாமல் உரையாடலாகத் தான் அமைத்துக்கொள்கிறேன். சமூகத்தை மொன்னையாகப் பார்ப்பதிலிருந்து விலகுகிற, அதன்மீது கேள்விகளை எழுப்புகிற, பிரச்சனைகளை எப்படி அணுக வேண்டும் என்ற விமர்சனப்பார்வையை உருவாக்குவது தான் இந்த உரையாடலின் நோக்கம்.
4 Comments:
கருத்துச் செறிவுள்ள ஒரு செவ்வியைப் பார்வைக்குக் கொணர்ந்தமைக்கு நன்றி செல்வநாயகி!
// அவரின் சமீபத்திய மிக நீளமான செவ்வி அதுவென்றாலும் சிலவற்றை மட்டும் இங்கு பதிப்பிக்கிறேன். "கீற்று"க்கு நன்றி //
செல்வநாயகி அவர்களுக்கு நன்றி.
தமிழ்நதி, பாலராஜன்கீதா,
நான் நீளம் கருதியும், சிலபகுதிகளின் மேல் விவாதங்கள் தொடர்ந்தால் இங்கேயே இருந்துகொண்டிருக்க நேரம் கையிலில்லை என்பதாலும் தேர்ந்தெடுத்தே இங்கே இட்டிருக்கிறேன் அவரின் பதில்களை. அச்செவ்வியை முழுமையாகப் படிப்பது மேலும் ஆழமாகச் சிந்திக்க உதவும். விரும்பினால் கீற்று.காமில் படிக்கலாம் நீங்கள். முதல் பக்கத்திலேயே உள்ளது. நன்றி.
ஆதவனின் அனைத்து கவிதை, சிறுகதை, கட்டுரைகளையும் கீற்று.காம் 'இல் படிக்கலாம் இங்கே
http://www.keetru.com/literature/aadhavan/index.php
Post a Comment
<< Home