நீ நிரப்பிய இடங்கள்
எப்போதும்போலத்தான் இருக்கிறேன் நான் எதையாவது செய்துகொண்டோ அல்லது எதுவும் செய்யாமலோ. ஒரு நட்சத்திரத்தின் இயல்போடு இருந்துவிடுவது சுலபமாகுமா மனதுக்கும்? அப்போதுதான் மணந்திருந்த தன் துணையோடு வாழ்வை மணக்க மணக்கச் சுவைக்குமொரு மனிதச்சோடி நடந்துபோகிறபோது மேலே முளைத்துச் சிறிது நேரமாகியிருந்த அந்த நட்சத்திரம் பார்த்தேன். சிரித்தபடியிருந்தது. காட்டில் ஒரு
கட்டுத்தாரையில் உடனிருந்த விலங்குகள் பார்த்திருக்கப் பசுவொன்று வேதனையில் படுப்பதும், எழுவதுமாய்ப் போராடி ஈன்றெடுக்கிறது ஒரு கன்றை. தன் நிலையில் அப்படியே தெரிகிறது நட்சத்திரம். எங்கோ இரைதேடப்பறந்துவிட்டுத் திரும்புகையில் வழிதொலைந்த குஞ்சுக்குருவி ஒன்று கூடுகூடாய் அலைந்து தன் தாயைத் தேடுகிறது. அதன் அவஸ்தையிலும் கிழிபடவில்லை நட்சத்திர அமைதி. காலையில் ஊரே
வாய்பிளக்கத் தன் தகுதிகளைச் சொல்லியபடி உயரத்தில் ஒய்யாரமாய் ஒரு இருக்கையிட்டு அமர்பவன் ஒருவன்தான் முன்னிரவு கழிந்தபின் காசுகொடுத்துக் கவசமிட்டுக் கன்னியொருவளை அணைத்தபடியிருக்கிறான் பூவொன்றைக் கோடாரி பிளக்கும் பாவனையில். மூடிய கதவுகளுக்கு வெளியே நட்சத்திரம் அப்படியேதான். விடிந்தபின் அவள் விபச்சாரியாய்ப் போவதும், அவன் உபசாராங்களோடு ஊர்வலமாய்ப்போவதும் நடக்குமெனத் தெரிந்தாலும் காலையில் வரும் சூரியனுக்கும்கூட எதையும் சொல்லப்போவதில்லை நட்சத்திரம்.
நாம் நட்சத்திரங்களைப்போல் இருக்கமுடியாதென்பது உண்மைதான். ஆனால் அதற்காக உன்னை இப்படி அடிக்கடி உற்சாகமிழந்த சொற்களோடு பார்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை. நீயும் நானும் பூமிக்கு வந்தபோது இருந்த ஆர்வம் இத்தனை வருடங்களிலும் எத்தனைமுறை துளிர்த்திருக்கவேண்டும்? சொட்டுச்சொட்டாய்க் குறையவிடலாமா அதை? கட்டிப்போட்டிருந்த கருப்பையை உதைத்து இரத்தத்தில் துவைந்தே வெளிவந்தோம். வெளிவருவதற்காய் நமக்கும், வெளித்தள்ளுவதற்காய் அன்னையருக்கும் நிகழ்ந்த
போராட்டங்களோடுதானே பூமிக்கு வந்தோம்? தொடர்வதும் அதுதான். துவள்வது எதற்கு?
எனக்குப் புரிகிறது உன்னை. உணவுக்காய்த் தலைநீட்டி, கிடைக்கும்வரை அத்திசையில் ஊர்ந்திருந்து, ஒரு ஆபத்தென்றாலும் அபயம்தேடி உள்ளே சுருங்கும் ஓடுகொண்ட நத்தையின் போராட்டமும் உன்னுடையதும் ஒன்றேயல்ல என்பதை உணர்ந்தேயிருக்கிறேன். ஓட்டையும் சுமக்காத சுதந்திரத்தேடல் உடையவள் நீ. அதற்கான விலைகள்தான் உன் இழப்புகள். நீ உன்னை இழக்காதவரைக்கும் எல்லாம் உடையவள். நீ என்பது
உன் பெயரல்ல, உடலல்ல, மனமுமல்ல. அது உயிரைப்போலவே இன்னொருவருக்கு இதுதான் எனக் காட்டமுடியாதது. வடிவங்களற்றது. வேண்டுமானால் உன் சொற்களிலும், செயல்களிலும் உன்னைக் கொஞ்சமாய்ச் சிதறவிடுவாய் எனலாம். அதுகூட முழுமையாகாது. ஏனென்றால் பேசுகிறபோது மட்டுமல்ல, பேசாதபோதும் அதில் ஒரு நீ இருக்கிறாய். ஒன்றைச் செய்கிறபோது மட்டுமல்ல, இன்னொன்றைச்
செய்யாதபோதும் அதில் ஒரு நீ இருக்கிறாய். என் கணக்கில் இன்றுவரை நீ எல்லாம் உடையவள்தான்.
நாம் எங்கும் தனித்துவமாயில்லை. அப்படியிருக்கவும் இயலாது. பொழுதுவிடிந்தால் கலகலவென இரைச்சல் தொடங்கிவிடும் சந்தைகளில்தான் இருக்கிறோம். நீ வியாபாரம் நடத்த விரும்பவில்லையென்றாலும் சந்தைகளில் இருக்க வாங்குபவராகவோ, விற்பவராகவோ ஒரு அடையாளத்தோடுதான் இருந்தாகவேண்டும். எதுவுமற்ற பார்வையாளராகவும் இருந்துபார்க்கலாம். ஆனால் அது ஒரு மேகம் மேலே மிதந்து செல்வது
மாதிரி இலகுவானது. அதுவே பொழிந்து செல்கையில் அதன் அனுபவம் வேறானது. நீ பொழிந்து செல்வதில் ஆர்வமுடையவள். எனவே சந்தைகளில் வாங்குவதும் விற்பதும் தவிர்க்க இயலாதது. என்ன வாங்கினாய்? என்ன விற்றாய்? எப்படி வாங்கினாய்? எப்படி விற்றாய்? இதன் பதில்களில் இருக்கிறாய் நீ.
லாப நட்டக் கணக்குகளில்தான் மனம் சோர்கிறதா? எல்லோருக்குமான பொதுக்கணக்கில் உன் பெயரையும் எழுதியே இருப்பார்கள். எல்லோருடையதும் இலக்கங்களால் நிறையக் காலியாய் இருக்கும் உன் இடத்தில் எட்டிப்பார்த்துச் சிரித்துமிருப்பார்கள். பிறகொரு நீளத்தாளெடுத்து நீ தேறவில்லையெனச் சான்றிதழும் தந்தேயிருப்பார்கள். கைகளில் வாங்கிக் கிழித்துப்போடு. பைகள் நிரப்பும் கனவுகளுக்கே லாபநட்டக் கணக்குகள் அவசியம். வாழ்வை நிரப்புவது என்ன வெறுமனே பைகளை நிரப்புவதா?
பள்ளங்களோடுதான் பயணம். தாண்டத்தாண்ட முடிவுறாதவை. விழுதல் நிகழ்ந்த பொழுதென்றாலும் நீ நிரப்பிய இடங்களைத் திரும்பிப் பார்த்திரேன். பிரகாசமான வெளிச்சம் ஒன்றை இருளின் தேசத்தில் கண்டெடுத்தபின்னும் அதில் ஈசல்களாய் மோதி இறந்தவர்கள் கூட்டத்தில் ஒரு கூரையின் கீழே சிறுவனொருவனுக்குப் படிப்பதற்குதவும் மண்விளக்கொன்றாய் எண்ணெய் தீர்ந்து திரியும் கருகக் கடைசிவரைக்கும் நீ எரிந்துகொண்டிருந்ததை, அழுக்குகள் கிடைக்கும் சாத்தியமறிந்து நீரில்
மீன்களாயிருக்கச் சம்மதியாமல், தேனைத்தேடி திசைதிசையாக நீ சிறகுகள் வலிக்கப் பறந்தே திரிந்ததை, இருத்தல் என்பதை வசப்படுத்துவதற்காய் நரிகளாய் மாறும் வித்தைகள் மறுத்துக் கடிவாளமிட்டோ, கட்டறுத்துக்கொண்டோ நீ ஓடியே வாழும் பரியான கதையை இந்தக் களைத்த தினத்தில் நினைத்துப் பாரேன்.
வெயிலுக்குக் காய்ந்து சிவப்பாகவும், மழைக்குப் பாசியேறிக் கறுப்பாகவும் மாறும் என் ஓட்டை ஓட்டு வீட்டில் நான் கற்றுக்கொண்ட பாடங்களைவிடச் சிறப்பாக நான் இப்போதும் வேறெங்கும் கற்றுக்கொள்வதில்லை. மணிக்கணக்காய் மழைகொட்டும் நாட்களில் உள்ளே ஒழுகும் இடங்களுக்குப் பாத்திரம் வைத்துக்கொண்டே வெளியே எட்டிப் பார்த்திருக்கிறேன். பெரும் இரைச்சலோடு ஊற்றிய மழை கூரையில் அடித்து நிலத்தில் தெறித்தபோது அந்த மண்வாசலில் குழிகளைத் தோண்டிக்கொண்டிருந்தது. பெரும்மழை நின்றபிறகு,
வாங்கிய நீரைக் கூரை எங்கோ வைத்திருந்து சொட்டிக்கொண்டிருந்தபோது அந்தக் குழிகளையும் நிறைத்தது. பெரும்மழை ஒன்றில் நீ குழியாகலாம், பிறகு கூரையில் தேங்கிய நீராய்ச் சொட்டிக் குழிநிரப்பும் மழையுமாகலாம்.
நாம் காலியான இடங்களும், நிரம்பிய இடங்களும், நிரப்பிய இடங்களுமாய்க் கழிகிறது வாழ்வு. இதை அப்படியே ஏற்றபடி, ஏற்கமுடியாததை எதிர்த்தபடி வாழ்ந்துவிட்டுச் சாகலாம். முளைத்த செடி கருகினால் முடித்துக்கொள்வதல்ல போராட்டம். மரம் உருவாகிக் கனியீனும்வரை விதைத்துக்கொண்டும் இருப்பதே போராட்டம். விதைகள் மாறலாம். விதைத்தல்கள் முடியும் வாழ்வேது? உன் கைகளை விசங்களின் விதைகளுக்குத் தந்துவிடாதவரை அல்லது எல்லோருமறிய நல்விதையும், யாருமறியாதபோது புறங்கையால் நீ விசவிதையும் தூவாதவரை உன் விதைப்பில் பூமி குளிர்கிறது.
.........அந்த மண்வாசலில் மழைநிரம்பிய குழிகளுக்குக் கிணறென்று பெயரிட்டுத் தேங்காய்த்தொட்டியில் என்னோடு நீரிறைத்து விளையாடிக்கொண்டிருந்த, இன்று ஊரிலிருந்து தொலைபேசிய உனக்கு...........
29 Comments:
செல்வநயகி
வாழ்வை நிரப்புவதென்ன வெறுமனே பைகளை நிரப்புவதா?..பொட்டில் அடித்த கேள்வி..
பால்யத்தின் சிறகுகளில் ஒளிந்திருந்த மழைத்துளியை நினைவுபடுத்தும் சுகம் நெடுநாள் தொடர்பிலில்லாத தோழமைக்கு எழுதப்படும் கடிதங்களிலோ பேசப்படும் சொற்களிலோ தங்கிவிகிறது.
இந்த பதிவிலும் அந்த குளுமையும்,ஈர்ப்பும்,லயிப்பும்..
வேறொரு பதிவருக்குப் பின்னூட்டமாக உங்கள் முதலிரு பத்தியைப் பயன்படுத்த - உங்கள் அனுமதியோடு - விழைகிறேன். ஒரு முயற்சிதான். என்னால் ..இல்லை .. பலரால் முடியாததை உங்கள் தமிழ் செய்துவிடாத என்ற ஆதங்கம்.
நன்றி
மதிப்பிற்குரிய தோழி! இந்தப் பதிவை நீங்கள் வேறொருவருக்காக எழுதியிருந்தாலும், எனக்கான வார்த்தைகளும் அதிலிருக்கக் கண்டேன். எழுத்திலும் சகமனிதர்களிலும் நம்பிக்கை இழந்துகொண்டிருக்கும் இந்நாட்களில், உங்களது இந்தப் பதிவைப் போல சில ஒளித் தடங்களைக் காண்கிறேன். நிறைய எழுதுங்கள். முந்தைய பதிவின் பின்னூட்டத்தில், எனக்கு மடல் எழுத எண்ணி சோம்பல் காரணமாக ஒத்திப்போட்டுவிட்டதாக எழுதியிருந்தீர்கள். எனது வீட்டின் யன்னலுக்குள்ளால் எட்டிப்பார்க்காமலே கடலில் அலையடித்துக்கொண்டிருப்பதை என்னால் பார்க்கமுடிகிறது செல்வநாயகி.
கீழ்க்கண்ட வரிகள் மிகப் பிடித்தன.
"விடிந்தபின் அவள் விபச்சாரியாய்ப் போவதும், அவன் உபசாரங்களோடு ஊர்வலமாய்ப்போவதும் நடக்குமெனத் தெரிந்தாலும் காலையில் வரும் சூரியனுக்கும்கூட எதையும் சொல்லப்போவதில்லை நட்சத்திரம்."
//கட்டிப்போட்டிருந்த கருப்பையை உதைத்து இரத்தத்தில் துவைந்தே வெளிவந்தோம். வெளிவருவதற்காய் நமக்கும், வெளித்தள்ளுவதற்காய் அன்னையருக்கும் நிகழ்ந்த
போராட்டங்களோடுதானே பூமிக்கு வந்தோம்? தொடர்வதும் அதுதான். துவள்வது எதற்கு?// உங்கள் தோழி இதை படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். காரணம் எதுவாயினும் கலையும் மேகம் போல நிலைமாறி உற்சாகம் மீண்டு வர என் வாழ்த்துக்கள் அவருக்கு
அய்யனார், தருமி, தமிழ்நதி, பத்மா,
பின்னூட்டங்களுக்கு நன்றி.
தருமி,
இதன் இருபத்திகளை நீங்கள் பின்னூட்டமாக இட்டிருப்பதைப் பார்த்தேன். வலையுலகின் சமீபத்திய நிகழ்வுகள்சார்ந்த என் கருத்துக்கள் இங்கு பதியப்பட்டிருக்கின்ற அதுகுறித்த அனேகமான எண்ணங்களிலிருந்தும் வேறு கோணங்கள் கொண்டவை. பல கேள்விகளும் உடையவை அவை. ஆனால் உங்களுக்கு உங்கள் எண்ணங்களைச் சொல்ல என் இவ்விடுகையின் பத்திகள் பொருத்தமாகத் தெரிந்திருந்தால் அதை மேற்கோளிட்டுக்கொள்வதில் எப்பிரச்சினையுமில்லை எனக்கு. அனுமதி கேட்பது ஒரு அடிப்படை என்றளவிலே உங்கள் இயல்பின் நேர்மையை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். கற்றுக்கொள்ள விரும்புகிறேன் நானும் இப்பண்பையெல்லாம் எப்போதும் விட்டுவிடாதிருப்பதற்கு:))
தமிழ்நதி,
உங்கள் நேசத்திற்கு நன்றி. ஆமாம் இது அவளுக்கு எழுதப்பட்டதென்றாலும் அவளுக்கு மட்டுமே எழுதப்பட்டதுமல்ல. எழுத்துக்களில், சகமனிதரில் ஏற்படும் நம்பிக்கையிழப்புகள் என்பதைப் புரிந்துகொள்கிறேன். எழுதுவதோ, செயல்படுவதோ, பொதுவாழ்வோ என்று வந்துவிட்டால் இப்போதெல்லாம் பொதுநேர்மை, பொது ஒழுங்குகள் பற்றியெல்லாம் பேசப்படுமளவிற்குத் தனிமனித நேர்மைகளும், ஒழுங்குகளும் கவனிக்கப்படுவதில்லையோ எனத் தோன்றுகிறது. அதனாலேயே அவற்றின்மீதும் மதிப்புகள் உடையவர்க்கு அவற்றைத் துச்சமாக்கியோரைக் கண்டால் அயற்சிகள் ஏற்படலாம். அதை அவர்கள் செயித்துத் தொடர்வது அவர்களுக்கு மட்டுமல்ல இச்சமூகத்துக்கும் அவசியமானது. புத்தகங்களே என்றாலும் கரையான்களிடம் இருந்து என்ன பயன்? அவற்றிற்கு அவை உணவாவதைத் தவிர?
விரைவில் மடலிடுகிறேன் தமிழ் உங்கள் நூல் குறித்துப் பேச.
செல்வா,
நிதர்சனமான உண்மை வலிக்கத் தான் செய்யும்.
//இச்சமூகத்துக்கும் அவசியமானது. புத்தகங்களே என்றாலும் கரையான்களிடம் இருந்து என்ன பயன்? அவற்றிற்கு அவை உணவாவதைத் தவிர?//
வீணாகிப் போன ஒரு வாழ்க்கையாக எழுத்துகள் சில சமயங்களில் ஆகும் கொடுமையைப் பார்க்கிறோம்.
நீங்கள், தமிழ்நதி, தருமி அய்யா எல்லோரும் கையாளும் தமிழ் கரையானிடமிருந்து தப்பிவிடும் என்றே நம்புகிறேன்.
மிக்க நன்றி.
விடிவு உண்டு என்றே நம்புகிறேன்.
நல்ல இடுகை ;-)
ஏதாவது விளங்கினால் அப்புறமா வந்து பின்னூட்டம் போடுறேன்.
ஏகப்பட்ட நினைவுகளைக் கிளப்பிவிட்டது உங்கள் பதிவு.
//முன்னிரவு கழிந்தபின் காசுகொடுத்துக் கவசமிட்டுக் கன்னியொருவளை அணைத்தபடியிருக்கிறான் பூவொன்றைக் கோடாரி பிளக்கும் பாவனையில். //
லாஜிக்கலாக கன்னொயொருவள் என்கிற வார்த்தை சரிவருமா?
வல்லிம்மா,
உங்களின் நம்பிக்கைக்கு நன்றி.
பாரி அரசு,
///ஏதாவது விளங்கினால் அப்புறமா வந்து பின்னூட்டம் போடுறேன்///
:)) என் தமிழ் அவ்வளவு கொடுமையாய் இருக்குதுங்கறீங்களா?
பெரும்காதல்கொண்டவன்,
நான் அந்த இடத்தில் சொல்லவந்த பொருளுக்கு அச்சொல் பொருத்தமென்றே கருதிப்போட்டிருக்கிறேன்.
\\:)) என் தமிழ் அவ்வளவு கொடுமையாய் இருக்குதுங்கறீங்களா?
\\
என்னோட மரமண்மடைக்கு இந்த படிம எழுத்துகள் விளங்கமாட்டேன்ங்கிறது :))
//நான் அந்த இடத்தில் சொல்லவந்த பொருளுக்கு அச்சொல் பொருத்தமென்றே கருதிப்போட்டிருக்கிறேன். //
நீங்கள் என்ன சொல்லவந்தீங்கன்னு கேட்டால் சரியா இருக்காது என்பதால், நீங்கள் கன்னியொருவள் என்று உபயோகித்திருப்பதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம் என்று நான் ஊகிப்பதால் கேட்கிறேன்.
எல்லாவற்றிற்கும் பிறகும் அவள் கன்னி தான் என்று சொல்ல வருகிறீர்களா? ஏனென்றால் காசுகொடுத்து கவசமணிந்து கடைசியில் விடிந்தபின் விபச்சாரியாய் போகிறாள் என்று வேறு சொல்கிறீர்களே அதனால் கேட்டேன்.(இல்லை அவன் தான் அவளை விபச்சாரி ஆக்குகிறான் என்றா?)
இன்னொன்று அவள் உண்மையிலேயே கன்னியாக(In all means) இருக்கலாம். ஆனால் அப்பவும் உதைக்குதே அவள் விடிந்தபின் விபச்சாரி ஆவது எப்படி?
நாம் எழுதிய கவிதைக்கு விளக்கம் அளிப்பது என்பது எவ்வளவு கொடுமையான விஷயம் என்று தெரியும்; நீங்கள் கவிதை மாதிரி எழுதிய விஷயத்திற்கு இப்படி ஒரு விளக்கம் கேட்க வேண்டி இருக்கிறது...
(இது எல்லாவற்றிலும் ஒருவள் என்கிற உபயோகம் தவறென்பதை நான் சொல்லவில்லை. அது தவறென்று உங்களுக்கும் தெரிந்திருக்கும். அது சொல்லவரும் கருத்தைப் பற்றிய கேள்விகளே...)
//நாம் எங்கும் தனித்துவமாயில்லை. அப்படியிருக்கவும் இயலாது. பொழுதுவிடிந்தால் கலகலவென இரைச்சல் தொடங்கிவிடும் சந்தைகளில்தான் இருக்கிறோம்//
இப்படிப்பட்ட ஒரு இடத்திற்கு தகுந்தாற்போல என் நிறங்களை வெளிப் படுத்தும் தருணத்தில் ஆழமான உங்கள் பதிவுகள் பொதிந்த தமிழ்நடை சற்றே என்னை கேலியாகப் பார்க்கிறது நீயும் விற்பனைக்கு வந்து விட்டாயாவென்று. வேறென்ன சொல்ல
பாரி.அரசு, உங்கள் மீள்வருகைக்கும், கண்மணி, உங்கள் முதல் வருகைக்கும் நன்றி. கொஞ்சம் நேரப்பற்றாக்குறை இன்று. நாளையோ, பிறகோ சாவகாசமாகப் பேசுகிறேன். இருவரும் தாமதம் பொறுத்தருள்க:))
yemma , thaaye piriyaramathiri
eluthungkammaa.padikirappa
manda mudi nattama nikkithu.
///yemma , thaaye piriyaramathiri
eluthungkammaa.padikirappa
manda mudi nattama nikkithu///
இதற்கு மூன்று தீர்வுகள்:-
1.ஒரு பின்னூட்டத்தைக்கூடத் தமிழில் தட்டச்சி இடமுடியாமலும், தமிங்கிலீசிலும் புரியறமாதிரியைப் பிரியறமாதிரின்னு கேவலமா எழுதிச்சொல்லவேண்டிய நிலைமையில் தானிருப்பதையோ, இதெல்லாம் புரிந்துகொள்கிற வளர்ச்சிக்கு இன்னும் வந்துசேராததையோ ஒரு சுய ஆய்வு செய்துகொண்டு அப்படியே கைசூப்பிக்கொண்டு கடந்துபோகலாம்.
2. இல்ல எல்லாம் தெரிஞ்ச வல்லவரு, இதெல்லாம் என்ன பிசுகோத்து, எல்லோருக்கும் புரியற தமிழில் எழுத்தக் கொட்டோகொட்டுன்னு அந்த "ஆறுக்கு மூணு" ல கொட்டித் தமிழ்மணத்துல பிரமாதமான மணத்தைப் பரப்பமுடியும்னா அதைச் செய்யலாம். இந்தப் பிரியாத தமிழிலிருந்தெல்லாம் இன்னும் பலரைக் காத்தமாதிரியும் இருக்கும்.
3. இதுல எதுவுமே கையாலாகாது, ஆனா இதப்படிச்சுத்தான் தன் மண்டையில மயிறு நட்டமா எந்திரிச்சுதுன்னு சொல்ல மட்டும்தான் தெரியும்னா, எங்காவது முட்டிக்கொண்டு சாகலாம். அதற்குப்பிறகு மயிர் மட்டுமல்ல, வேறு எதுவுமே எந்திரிக்காது.
///இன்னொன்று அவள் உண்மையிலேயே கன்னியாக(In all means) இருக்கலாம். ஆனால் அப்பவும் உதைக்குதே அவள் விடிந்தபின் விபச்சாரி ஆவது எப்படி?
நாம் எழுதிய கவிதைக்கு விளக்கம் அளிப்பது என்பது எவ்வளவு கொடுமையான விஷயம் என்று தெரியும்; நீங்கள் கவிதை மாதிரி எழுதிய விஷயத்திற்கு இப்படி ஒரு விளக்கம் கேட்க வேண்டி இருக்கிறது...
(இது எல்லாவற்றிலும் ஒருவள் என்கிற உபயோகம் தவறென்பதை நான் சொல்லவில்லை. அது தவறென்று உங்களுக்கும் தெரிந்திருக்கும். அது சொல்லவரும் கருத்தைப் பற்றிய கேள்விகளே...) ////
அடடா, முந்தைய பின்னூட்டத்துல ஒத்தவரி பதிலா "நான் அந்த இடத்துல சொல்லவந்த பொருளுக்கு லாஜிக் தெரிஞ்சுதான் அந்தச்சொல்லைப் பிரயோகித்தேன்" அப்படின்னு எழுதுனதல என்ன பொருள்னு ஒரு அருஞ்சொற்பொருள் விளக்கம் போடாமப் போயிட்டேன்னு நினைக்கிறேன் அந்தப் பின்னூட்டத்துலயே.
சரி இப்ப சொல்றேன், அதுக்கு என்ன பொருள்னா "என்னோட லாஜிக் எனக்கு, அதுப்படிதான் நான் எழுதுவேன். அடுத்தவங்க லாஜிக் வேறமாதிரி இருந்துதுன்னா அத அத அவங்கவங்க பத்திரமா பாதுகாத்துக்கொள்ளலாம். அதனால வந்தமா வேலை முடிஞ்சுதான்னு போயிட்டேயிருக்கலாம்"னு அர்த்தம் என்னோட அந்த ஒத்தவரிப் பதிலுக்கு.
ஆகையால் இப்பத் திரும்ப வந்துருக்கற "விளக்கம் கேட்க வேண்டி இருக்கிறது. வெங்காயம் கேட்க வேண்டியிருக்கிறது" என்ற பின்னூட்டத்துக்கு என் பதில் என்னன்னா... "எதுவானாலும் விளக்கம் யாருக்குத் தரவேண்டும்? யாருக்குத் தரவேண்டிய தேவையில்லை? என்பதெல்லாம் முழுக்க என்னுடைய விருப்பம்" என்பதே.
என்னை இதுவரை வாசித்துவரும் நானறிந்த, என்னையுமறிந்த நண்பர்களுக்கு,
என் பதிவுக்குச் சில புதிய விருந்தாளிகள்(புதிய பெயர்களில் என்றும் எடுத்துக்கொள்ளலாம்) வரத்தொடங்கியிருக்கிறார்கள். காட்டாற்று வெள்ளமாய்க் கட்டற்ற சுதந்திரம் இரவும் பகலுமாகப் பாதுகாக்கப்படும் இணையத்தில் திரட்டிக்கு வெளியே இருந்துதான் போலிகள் வரவேண்டுமென்பதில்லை. அவர்கள் மட்டுமே ஆபத்தானவர்கள் என்றும் இல்லை. உள்ளுக்குள்ளேயே ஒவ்வொருவருக்குள்ளும் எத்தனை போலிகள் என்று யாருக்குத் தெரியும்?
அதுமட்டுமல்ல சிலரின் ஆராய்ச்சிகளுக்கும், ஆர்வங்களுக்கும் சிலரின் கூடங்கள் ஒத்துப்போகாதுபோது கையசைத்து விடைபெற்றுக்கொண்டாலும், பிறகொருநாள் கண்ணுக்கும் தெரியாமல், காலுக்கும் தெரியாமல் காலணிக்கடியிலாவது மலமாய் ஒட்டிக்கொண்டு வரும் மனநிலைக்கான வாய்ப்புகளும் உண்டல்லவா இணையத் தொழில்நுட்பத்தில்? கொண்டையோ, தண்டையோ எங்கே மறைக்கப்பட்டாலும் அவரவர் எழுத்துக்கும் ஒரு கொண்டை இருந்தே தீரும். வலைப்பதிவுகளைக் கொஞ்சமே கொஞ்சம் கூர்மையாய்
வாசிக்கிறபோது ஒருவர் ஒரு விசயத்தைச் சொல்வதற்கு என்ன சொற்களை எந்த இடத்தில் எப்படி உபயோகிப்பார் என்பதெல்லாம் அறிந்துவிடமுடியக்கூடியதே. தம் வாசலை இழுத்துப்பூட்டிவிட்டுப் புழக்கடைவழியாகப்போய்க்கூட அடுத்தவர் வீடு நுழையும் அறிவாளிகளும் உண்டு.
எனவே சிலசந்தேகங்களின் அடிப்படையில், வரும் பின்னூட்டங்களுக்குக் கொஞ்சம் கண்காணிப்புப் போட்டிருக்கிறேன். அதுமட்டுமல்ல, பிரசுரிக்கும் சில பின்னூட்டங்களுக்கும்கூடப் பதில்சொல்லும் என் மொழிகூட என் நண்பர்கள் சிலருக்கு முகம் சுளிக்கவைக்கலாம். அதற்காக மன்னிக்க. எங்கிருந்து என்ன மொழி வருகிறதோ அங்கே அந்த மொழியையே வடிவம் மாற்றியேனும் திருப்பியனுப்ப வேண்டியிருக்கிறது சிலசமயங்களில்:)) புரிந்துகொள்ள வேண்டுகிறேன். பலசமயங்களில் புறக்கணிப்பே போதுமானதாகவும் உள்ளது:))
பாரி.அரசு,
///என்னோட மரமண்மடைக்கு இந்த படிம எழுத்துகள் விளங்கமாட்டேன்ங்கிறது :)) /////
இப்படியெல்லாம் சொல்லி என்னைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தாதீர்கள்:))
உங்களை மரமண்டை என்று நீங்கள் தன்னடக்கம் மிகுந்து சொல்லிக்கொண்டாலும், அதென்னவோ தெரியவில்லை, " எல்லாம் கரைத்துக்குடித்துப் போகுமிடமெல்லாம் தரவுகளைக் கட்டி மாலையிட்டுக்கொண்டே எப்போதுமே தான் இப்படித்தனாக்கும் என்று தாளம்தட்டிக்கொண்டும் போகும் பெருமகனார்கள் எல்லாம் வாழும் திருநாட்டில்..சேச்சே....ஆளும் வலைநாட்டிலும், ஏதோ எனக்குத் தெரிந்த
என் ஏழைத்தமிழ் கொண்டு காம்புகளாய்க் கிள்ளிப்போட்டோ அல்லது முறுக்காக உடைத்துப்போட்டோ தெரிந்ததை உளறிவரும் என்போன்ற சிறுமண்டைகளின் மதிப்பிற்குரியீராய் இருப்பவர் உம்போன்றோரே:))
"இந்த வைரமுத்து என்ன கிழித்தார்? வாலி என்ன கிழித்தார்? 'முத்தமென்பார், சத்தமென்பார், பிறகு யுத்தமென்றே முடிப்பார் இவர் போன்ற எல்லோரும். அதைவேறு மூன்றுவரிகளிலே உடைத்துத்தான் போடுவார்'. இதனாலெல்லாம் மனம் மகிழ்வாளா தமிழ்த்தாய்? என்று வித்தக விமர்சனம் செய்து, இந்தியாவிலிருந்து இத்தாலி நீளத்துக்கு "ஈசானி மூலையிலே மாசானி ஆடுகிறாள் சில பேர் லேசாகி வந்தோமென்கிறார் எல்லோர் வாயிலிருந்தும் மோ ச ஆ வியே வருகிறது. கண்றாவியப்பா இப்படித்தான் இன்றுகாலை நான் பேசாமல் இருந்தபோதும் காக்காய் கக்கா போச்சு பிறகு காய் இத்தும் போச்சு இங்கு வந்தால் மா போ சா வெல்லாம் ஆட்டம் போடுகிறது இங்கு யாரும் பிதாவில்லை எல்லோரும் பித்தரே எத்தரே" என்று பசியாலே தவமிருக்கும் தமிழ்த்தாய்க்கு அவள் மட்டுமே புரிந்துகொள்ளும் தரமான, உரமான சொல்லெடுத்துப் பானைபானையாகப் பலகாரங்கள் செய்துவைக்கும்
பாவலர்களே ஏற்றட்டும் தமிழுக்கு இறவாப் புகழ்விளக்கை இந்நாளும், எந்நாளும்.
மரமண்டையோ, சிறுமண்டையோ நீங்கள், நான் இதுபோன்ற இன்னும் பலர்சேர்ந்த நாமெல்லாம் ஏதோ நமக்குள்ளே நாமெழுதிப் பேசத்தானே வலைப்பதிவு திறந்து வந்தோம்? கனமண்டையாய் இருப்போரெல்லாம் கர்வமுற்று செயிக்கட்டும், காலத்தால் அழியாது தமிழையும் செயிக்கவைக்கட்டும். நாம் கனமொன்றும் இல்லாத காய்ந்த விறகுமண்டையாய் ஆனால்தான் என்ன? அதனாலும் அடுத்தவர் அடுப்பெரித்துச் சமைப்பார் என்றால் அடைந்தோம் பிறவிப்பெரும்பயனை என்று புண் ஈயம் தேடியல்ல, எந்தப் புண்ணிலும் ஈயாக அரிக்காமல் போய்ச்சேர்வோம். அதுபோதும் என்று இப்போது "தந்தானத் தனதான தான்னன்னத் தனதான" என்று பாடியும் களித்திருப்போம் பாரி. அரசு:))
நிசமாகவே உங்களின் எழுத்துக்களை விரும்பிப் படித்துவருகிறேன். சீனப்பெண்களின் மகப்பேறு பற்றியும் இன்னும் நம் பெண்களுக்குப் பிரசவத்தைக்கூட ஒரு நோயைப்போல் பாவிக்கிற மனநிலையில் நாமிருக்கிறோம் என்பதையும் அழகாக விவரித்த உங்களின் இடுகை எனக்கு நிறையப் பிடித்தது. அதுபோன்ற விழிப்புணர்வுப் பதிவுகளை இன்னும் எழுதுங்கள். "மரமண்டை" என்றெல்லாம் தன்னடக்கம் வேண்டாம் குறைந்தபட்சம் என்போன்ற சிறுமண்டைகளிடம்:))
கண்மணி,
நீங்கள் சொல்வதுபோலெல்லாம் ஒன்றும் பெரிதாக இல்லை என்னிடம்:)) தமிழிலே 247 எழுத்துக்கள் என்கிறார்கள். எனக்குத் தெரிந்ததுகூட ஒரு 247 சொற்களாய்த்தான் இருக்கும். அவற்றைத்தான் மாற்றி மாற்றிப் போட்டு பம்மாத்து நடத்திவருகிறேன்:))
பலநாட்களாகவே எங்காவது சொல்லநினைத்தும் நான் சொல்லியிருக்காத ஒன்று.....உங்களின், வவாசங்கத்தின், அபிஅப்பாவின் நகைச்சுவைகளெல்லாம் நான் படித்துப் படித்துக் கண்ணில் நீர்வரச் சிரிப்பவையே. சிலநாட்கள் இப்போதெல்லாம் தமிழ்மணம் வந்தால் இவற்றை மட்டுமேகூடப் படித்ததும் சென்றுவிடுவதுமுண்டு. நன்றி உங்களுக்கெல்லாம்.
உங்கள் விளக்கங்களுக்கு நன்றி செல்வநாயகி
செல்வநாயகி,
பலநாள் கழித்து இங்கே ஒரு பயணம் வந்தேன். தெளிவான உங்கள் எழுத்து இன்னும் கொஞ்சம் கனமேறியிருக்கிறது. பல சொற்றொடர்கள் இரண்டாம் முறை படித்தே புரிந்துகொண்டேன். உங்கள் தோழிக்குச் சொன்ன சொற்கள் எல்லாருக்குமே நெஞ்சுரமும் உறுதியும் அளிக்கின்றன.
சில மறுமொழிகளுடனான உங்கள் சினத்தையும் காண வியப்படைந்தாலும் அவற்றின் நியாயங்களை உணர்ந்தே இருப்பதால் புரிந்துகொள்கிறேன். ரௌத்திரம் தேவைதான் நண்பரே! என்னைக்கேட்டால் உங்கள் வெளி படைப்புவெளி, விவாதவெளியல்ல, வீணான சச்சரவுகளுக்குள் இறங்கி மனம் இறுகிப் போய்விடுவது உங்களுக்கும் வரவேண்டாம். இது உங்கள் இடம். தேவையற்றவை என்று கருதுபவற்றை நீங்கள் தள்ளிவிடுவதுதான் சரி. அவற்றுடன் மல்லுக்கட்டுவதேகூட நேரவிரயம், சக்திவிரயம்.
(உரையாடுவோம் என்று சொல்லிவிட்டு நிறுத்தி வைப்பதே நான் வேறு ஒரு தருணத்தில், வேறு ஒரு இடத்தில் எதிர்த்தது. இது வேறுகளம்.)
அன்புடன்,
-காசி
என் "செடி " மண்டைக்கும் புரியவில்லை.. :((((
செல்வநாயகி,
பின்னவீனத்துவ எழுத்துக்களால் தமிழ் வலையுலகம் பயந்து போய் உள்ளது.இந்தப் பதிவையும் அந்த வகையான எழுத்து என்றெண்ணி சிலர் அய்யனார்,சுகுணா திவாகர் போன்றவர்களை கலாய்ப்பது போன்றே இங்கும் பின்னூட்டமிட்டுள்ளனர்.
உங்கள் நடையில் பின்னவீனத்துவம் இல்லை,ஏனென்றால் எனக்கு இந்தப்பதிவு மிகத் தெளிவாகவே புரிகிறது.
பதிவு மிகவும் அருமை.அதைவிட விஞ்ஞானி,பெ.கா.கொண்டவன்,பாரி.அரசு இவர்களுக்கு அளித்த பதில்கள் சுவையாரமாக அமைந்துவிட்டன.
(ஓசை செல்லா வலையுலகை விட்டு விலக நினைத்த போது,தருமி அய்யா இந்தக் கவிதையை துணைக்கழைத்துக் கொண்டு ஓசையை மீட்டு வந்தார்.)
இந்தப்பதிவை வாசிக்க வேண்டுமென்றெண்ணி, ஏதேதோ காரணங்களால் தள்ளிப்போய் இன்றுதான் வாசித்தேன். முன்பை விட உங்கள் மொழிநடை செறிவடைந்திருக்கிறது-என்னளவில். ஆனால், புரியாமல் போக என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.
/வெயிலுக்குக் காய்ந்து சிவப்பாகவும், மழைக்குப் பாசியேறிக் கறுப்பாகவும் மாறும் என் ஓட்டை ஓட்டு வீட்டில் நான் கற்றுக்கொண்ட பாடங்களைவிடச் சிறப்பாக நான் இப்போதும் வேறெங்கும் கற்றுக்கொள்வதில்லை. மணிக்கணக்காய் மழைகொட்டும் நாட்களில் உள்ளே ஒழுகும் இடங்களுக்குப் பாத்திரம் வைத்துக்கொண்டே வெளியே எட்டிப் பார்த்திருக்கிறேன். /
எனக்கும் சேர்த்தே இதை எழுதியிருக்கிறீர்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. ஓட்டுக்குப் பதில் கூரை என்பதைத் தவிர, வேறொரு வித்தியாசமும் உண்டு எனக்கு.
நானும் பொழிந்து தெறிக்கும் மழையை எட்டிப்பார்த்திருக்கிறேன். அது மழையை ரசிக்க அல்ல. நீரிரைத்து வலிக்கும் கைக்கு எப்போது ஓய்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பிலும், ஈரமேறிய தரை இரவுக்குள் காயவில்லையெனில் தூங்குவதற்கு பத்து வீடு தள்ளிப்போக வேண்டியிருக்குமே என்ற கவலையும், அடுப்பு நனைந்துவிட்டால் அடுத்த வேளை சோற்றுக்கு தாமதமாகுமே என்ற சோகமும், இதற்குமேல் ஒழுகினால் அடுப்புச்சுவர் இடிந்து விழுமே என்ற பயமும்.. என்னை மழையை எட்டிப் பார்க்க வைத்தன.
இப்போதும் கிராமம்/நகரம் அனைத்திலும் எனக்கான அதே காரணங்களோடு யாரோ ஒரு சிறுவன் சோறுண்ணும் ஏனத்தால் மழை நீர் இரைத்துக்கொண்டிருக்கக்கூடும் என்பதை எண்ணுகையில் ரசணை எல்லையிலிருந்து விலகிப்போய்விடுகிறது மழை.
ஒரே மழைதான். சிலருக்கு ரசணையாக.. சிலருக்கு ரணமாக. ஒரே வாழ்க்கைதான். சிலருக்கு பூவாக..சிலருக்கு தீயாக. அனுபவங்களும், அவற்றினூடாக வாழ்வை எதிர்கொள்ளும் முறைகளுமே ரசனை, வெறுப்பு உள்பட எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றன போலும்.
சில நினைவுகளை மீட்டெடுத்துக்கொள்ள உதவியது உங்கள் பின்னூட்டம் ஆழியூரான்.
மழைவருகிறதென்றால் ஓடி ஓடி அடுத்தநாள் அடுப்பெரிக்க நனையாத விறகெடுத்துப் பத்திரப்படுத்திக்கொள்ளவும், களத்தில் காயப்போட்டிருந்த தானியம் கூட்டி எடுத்து மூட்டை கட்டி வைக்கவேண்டிய தேவைகளும், இரண்டு கிலோமீட்டர் நடந்துபோய் நீர்சுமக்கும் வேலையிலிருந்து தப்பிக்க அடுத்த ரெண்டு நாளுக்கேனும் கூரையில் ஒழுகும் மழைநீர் பிடித்துச் சேமிக்க வேண்டிய கட்டாயமும், இப்படியாக இன்னபிறவும் சேர்ந்தேயிருந்த வாழ்வில் நீந்தியபோதும் அந்த வாழ்வின் ஈரம் சொட்டச்சொட்டவும், மழையும் கொஞ்சம் நனைத்தே போனது. ஆனாலும் "ஒரு மழை" என்றாலும் நனைதல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய்.....
/// புரியாமல் போக என்ன இருக்கிறது என்று தெரியவில்லை///
உங்களுக்கும் எனக்கும் இதில் புரியாதுபோக ஒன்றுமில்லை என்றாலும், அப்படிப் புரியாதுபோகவேண்டிய தேவையுள்ளவர்கள் இங்கு இல்லாமல் இல்லையே:)) தமிழ்நதி சொன்னதுபோல் "அதனாலென்ன பரவாயில்லையென" இதுவும் இணையம், இதைத் தாண்டியும் உள்ளது இணையம் என்றறிந்தபடி நகர்வோம் நாம்:))
நன்றி ஆழியூரான்.
செல்வநாயகி
உங்கள் வலைப்பக்கம் வந்து நெடுநாட்களாகிவிட்டதேவென வந்தேன் ..இதென்ன இத்தனை ரகளை இந்த பதிவில் :)
உங்கள் பதிலில் இருந்த காரம்!என்னுடைய பகிர்ந்துகொள்ளமுடியாத/வெளித்துப்ப முடியாத கோபத்தை ஒத்திருந்தது..
ஜாலிஜம்பர் சொன்னதுபோல் எங்களுக்கு வரும் பின்னூட்டங்களை வெகு சாதாரணமாய் கடந்து போய் விடுகிறோம் சொல்லப்போனால் அனானி/அடையாளமில்லாதவைகளை முற்றாய் நிராகரிப்பதை விட சிறந்தது எதுவுமில்லையெனத்தான் தோன்றுகிறது.
இருப்பினும் உங்கள் பதில்களைப் படிக்க மகிழ்ச்சியாய் இருந்தது :)
இந்த இடுகை எழுதிப் பலநாட்கள் ஆகிவிட்டனவே அய்யனார்! மீண்டும் வாசித்திருப்பீர்கள் போலிருக்கிறது. நீங்கள் சொல்வதுபோல் இங்கே பொருட்படுத்த வேண்டியவை, நிராகரிக்க வேண்டியவை பற்றித் தெரிந்துவைத்துக்கொள்ளுதல் இன்றியமையாததுதான். இப்போதெல்லாம் திரட்டிகளுக்குள்ளிருந்தோ, வெளியிலிருந்தோ பெயர் உளிகளாலோ அல்லது இலிகளாலோ எழுதப்படும் எந்த சாடை, சண்டை மொழியானாலும்கூட படித்தாலும் புன்னகைத்துக் கடந்துவிடுவதும் சுலபமாகத்தானிருக்கிறது.
இந்தப் பதில்களை அன்று கொஞ்சம் நேரம் கைவசமிருந்தும், எழுதவேண்டும் என்று தோன்றியுமிருந்ததால் எழுதியிருப்பேன் என நினைக்கிறேன். அவற்றையும் வாசித்தும், புரிந்துகொண்டும் பின்னூட்டமிட்டிருக்கிற ஜாலிஜம்பர், காசி, ஆழியூரான், நீங்கள் எல்லோருக்கும் நன்றி.
INIYA VANNAKANGAL SELVANAYAKI.........
ORU SIRU IDAIVELIKU PIRAGU THANGALIN ' NEE NIRAPIYA IDANGAL' PATHIVINAI PADITHEN....
ATHAI NEENGAL YARUKAKA VENDUMANALUM ELUTHI IRUKALAM.ANAL ATHIL ELLORUKUMANA VARTHAIGAL , AARUTHALGAL ULLANA.... ATHIL ENNAKUMANA VARTHAIGAL....
VELI VARUVATHARKAI NAMAKKUM , VELI THALLUVATHARKAI NAM ANNAIKUM NIGALNTHA PORATTANGALAI PATRIYA UNGAL SINTHANAIGAL MIGA VEERIYAMAI ENNAI THAKKI VITTANA...
"PAYANIKKUM VALI ENGUM PALLANGAL" - INDA VARIGALA ENNUL PALA SINTHANAIGALAI ELUPI VITTANA. MIGA NEARTHIYANA, IYALBANA, NETHI ADIYANA PADIVU.
TAMILNATHI AVARGALIN PINNOOTAMUM MIGA ARUMAI.....
ANGILATHIL ANUPPUVATHARKU MANNIKAVUM........
VALTHUKKALUDAN,
KA.SELVANAYAKI.
க.செல்வநாயகி,
இவ்விடுகையில் உங்கள் பின்னூட்டம் பிரசுரித்தபின் நான் பலநாட்கள் இப்பக்கம் வரவில்லை. வழமைபோல் நன்றி உங்கள் கருத்துக்கு.
ஸ்ரீதர்,
ஒரே கேள்வியைக் கேட்டு நீங்கள் இட்டிருந்த மூன்று பின்னூட்டங்களும் படித்தேன். நன்றி. தனிப்பட்ட விவரங்கள் தொடர்பானவை என்பதால் பிரசுரிக்கவில்லை. மன்னிக்கவும்.
உங்களின் கேள்விக்கு பதில் "ஆம்" என்பதே. இப்போது உங்களைப் பற்றிய தகவல்கள் தெரிந்துகொள்ளவும் ஆர்வம்:)) முடிந்தால் மீண்டுமொரு பின்னூட்டமாகவே நீங்கள் யார், எங்கு உள்ளீர்கள் என்றும் உங்கள் மின்னஞ்சல் முகவரியோடு இடுங்கள். பிரசுரிக்க மாட்டேன். ஆனால் உங்களைத் தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.
Post a Comment
<< Home