நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Friday, October 12, 2007

ஊர்க்குளம்

காற்றலையும் அந்தரத்தில்
அசைத்தலும்நீக்கிச் சிறகுவிரித்தபடி நகருமொருபறவையின்
நிழலையும் பிரதிபலிக்கும் தெளிவுடன் திகழ்ந்தது அச்சிறுகுளம்

சிற்றாழம் இறங்குகையில் காலின்நகக்கிழிப்போ பற்களைப் பலிகேட்பதோ
வன்மம் உள்ளொளித்த மென்பாசிகளுக்குத் தன்னைக்கொடுத்திராத
கற்களின் சூழலில் இரத்தத் தெறிப்புகள் இல்லை தேரைகளின் முதுகுகளில்கூட

"ஆணுக்குப் பெண்ணிங்கே இளைப்பில்லை காணென்று கும்மியடி"
புத்தகம் விரித்து உருப்போட்டு நடந்தேகிய சிறுமனிதக் குரலுக்கு
தலையாட்டி மிதந்துகொண்டிருந்தன தாமரை மொட்டுக்கள்

விடுதலையின் நிறமென்பது அந்நீர்த்தெளிவின் நிறமேயென்றுகூட
கைகளைப் பறித்தாலும் சொற்களை ஊதிக் காற்றிலே எழுதுவேனெனும்
ஊர்க்கவிஞன் ஒருவன் உரத்துக் கூவியிருந்தான்

காலக்கருக்கலில் சில மேகங்களே கடந்திருக்கும்.
அச்சிறுகுளத்தில் நீரள்ளிப் பருகக் கோர்த்த கைகளுக்குள்
எத்திசையிலோ தனித்து மிதந்திருந்த பறிக்கப்பட்ட இருவெளிர்கண்கள்
வந்துவிழுந்ததான திகில் கதைகள் இப்போது

உரக்கப்பாடிய ஊர்க்கவிஞனின் மகன்தான் இன்று
இந்நீரின் வண்ணம்போலவே வாழ்வு
கருமையான தெளிவற்ற தன்மையில்
மிதப்பதாய்ச் சொல்கிறான்

மண் துளைகளடைக்கும் எலும்புகளுக்கே இடம்விட்டு
தாமரை வேர்களும் இறந்தன போலும்
இயலாமையைப் பாடிப்பறக்கின்றன வண்டுகள்

ஒரு ஊர்க்குளம் உருமாறிவருவதற்கு
என்ன விமர்சனங்கள் சொல்லிவிடமுடியும்?
இதற்கடியில் ஒரு சுடுகாடு இருந்திருக்கலாம்
அல்லது
நாளை இது முழுக்க ஒரு சுடுகாடும் ஆகலாம்
என்பதைத் தவிர?

6 Comments:

At 9:11 AM, October 12, 2007, Blogger தமிழ்நதி said...

ஊர்க்குளம் மெல்ல மெல்ல தூய்மையின் உருவழிந்ததை காட்சியாகக் காணமுடிந்தது. நல்ல கவிதை செல்வநாயகி. நீண்டநாட்களாகக் காணவில்லை உங்களை.

 
At 9:42 AM, October 12, 2007, Blogger செல்வநாயகி said...

நன்றி தமிழ்நதி. எழுத நேரம் அமைந்திருக்கவில்லை என்றாலும் வந்துபோய்க்கொண்டுதானிருந்தேன் அவ்வப்போது வாசிக்க. பறவையின் குணம் அமைந்துவிட்டால் நதிகளின் பக்க(மு)ம் தரையிறங்குதல் தவிர்க்க இயலாதன்றோ:)))

 
At 9:46 AM, October 12, 2007, Blogger திரு said...

மீண்டும் மீண்டும் வாசிக்க வைக்கிறது கவிதை செல்வநாயகி! தத்துவமான வரிகள்.

//மண் துளைகளடைக்கும் எலும்புகளுக்கே இடம்விட்டு
தாமரை வேர்களும் இறந்தன போலும்
இயலாமையைப் பாடிப்பறக்கின்றன வண்டுகள்//

ம்ம்...

 
At 11:29 PM, October 12, 2007, Blogger செல்வநாயகி said...

நன்றி திரு.

 
At 12:39 AM, November 27, 2007, Blogger மிதக்கும்வெளி said...

நல்ல கவிதை. விகடனில் உங்கள் வலைப்பூ குறித்து வந்திருந்தது. என்ன ஒரு கொடுமையென்றால் நான் இதுவரை உங்கள் வலைப்பக்கத்திற்கே வந்ததில்லை. இத்தனைக்கும் நீங்கள் என் சில பதிவுகளுக்குப் பின்னூட்டங்கள் இட்டிருக்கிறீர்கள். ஏதோ ஒன்றை நான் தவறவிட்டிருக்கிறேன் என்று புரிந்தது. வாழ்த்துக்கள்.

 
At 8:59 PM, November 27, 2007, Blogger செல்வநாயகி said...

நீங்கள் தவறவிட்டதாக நினைக்கும் அளவு இந்தப் பக்கத்திலே பெரிதாக எதுவுமில்லை திவாகர்:))
வருகைக்கு நன்றி.

 

Post a Comment

<< Home