மக்கள்குறைதீர்க்குமா இம்மன்றம்?
ஒரு சமூகத்தின் பிரச்சினைகள் என்பவை பலவகைப்பட்டவை. எல்லாப்பிரிவு மக்களுக்கும்
அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாவது, ஒரு நலமான வாழ்வுக்கு உரிய உரிமைகளை
எல்லோரும் சமத்துவமாக அடையவேண்டியது, அவற்றின் மூலமாக மானுடச் சிறப்பின்
மேன்மைகளை எட்டுவது எனச் சுருக்கமாக வகைப்படுத்தினால் உலகின் பல சமூகங்களின்
போராட்டங்களும் இவற்றின் அடிப்படையிலேயே அமையலாம். ஒவ்வொரு நாட்டு
அரசாங்கத்தின் கொள்கை, திட்ட, நடைமுறைகள் என்பவை தனக்குட்பட்ட சமூகத்தைத்
தன் நல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளும் வலிமையுடையதாக ஆக்குவதாகவே
இருக்கவேண்டும். காலணி ஆதிக்கத்திலிருந்து முயன்று விடுபட்ட இந்தியாவுக்குத் தன்
சொந்த உள்சமூகக் கட்டமைப்பு, விரிவாக்க வேலைகளைத் துரிதப்படுத்துவதில் 60
ஆண்டுகால சுதந்திரமான ஆட்சியில் இன்னும் தொடரும் தடைகள் உண்டு. வரலாற்றுக்
காரணிகளும், சாதீய அடக்குமுறைகளும் சிறிய, பெரிய அளவிலான போராட்டங்களை
அன்றாடம் வேண்டிநிற்பது ஒருபுறமென்றாலும் "அறியாமை" எனும் நோயே எந்தவொரு
முன்னேற்றத்தின் வடிவத்தையும் காணத்தடுக்கும் மிகப்பெரும் மறைப்பாக உள்ளது.
அறியாமை அகற்றுவதற்காய் எத்தனையோ திட்டங்களைச் செயல்படுத்துவது
அரசாங்கத்தின் முயற்சிகளாய்த் தொடர்ந்த வண்ணம் உள்ளதென்றாலும் அப்படி ஏற்றப்பட்ட
அறிவின் ஒளி ஒரு தனிமனிதனைக் குறைந்தபட்சத் தன்னொழுங்கு உள்ள,
நேர்மையுடன்கூடிய ஒரு சமூகப் பிரதியாக உருவாக்குவதில் மகிழத்தக்கதொரு வெற்றியை
இன்னும் ஈட்டியிருக்கவில்லை. இந்தியாவுக்குச் சவாலாக உள்ள முக்கியமான
விடயங்களைப் பட்டியலிடச்சொன்னால் அதில் அடிமட்டத்திலிருந்து மேல்மட்டம்வரை
ஊறிக்கிடக்கும் லஞ்சம் மேலெழும்பி நிற்கும். தருமத்தை, நீதிபோதனைகளை வழங்குவதில்
மாபெரும் இதிகாசங்களை, புராணங்களைக் கொண்டவர்கள் நாம் எனப் பீறிட்டுக் கிளம்பும்
பெருமை முழக்கங்களை ஒரு கையால் எழுதிக்கொண்டே, ஒரு காவல் நிலையத்தில்
உள்நுழைந்து நியாயம் பெறக்கூட அங்கு தொங்கும் பூட்டுக்களைப் பணத்தால்
திறக்கவேண்டியுள்ள நிலையை இன்னொரு கையால் மறைத்துக்கொள்ளும் நிகழ்வுகள்
நம்முடையவை.
இலக்குகளை நிர்ணயிக்கச் சொல்லிக்கொடுக்கும் கல்வி, அவற்றைச் சேர்வதற்குரிய
பாதைகள் முழுக்க அயோக்கியத்தனமான சுயநலங்களின் வேர்களில் இருந்து
அரும்பிவிடுவதிலிருந்து காப்பாற்றுவதில்லை. எனவேதான் மெத்தப்படித்த இரு
மருத்துவர்கள் பெற்று வளர்க்கும் ஒரு சிறுவனை மிக இளம் வயது அறுவை சிகிச்சையாளனாய் கின்னசில் இடம்பிடிக்கவைக்கத் தூண்டும் ஆவல் ஏதோ ஒரு ஏழைப் பெண்ணின் வயிறு கிழிக்க எந்த அடிப்படையுமில்லாமல் அவன் கைகளில் கத்தி கொடுக்கிறது. விதிகளின்படி அமைக்கப்படாத தனியார் பள்ளி பல குழந்தைகளின் உயிர்களைப் பணயம் வைக்கிறது. வறுமையின் காரனமாய்க் கடன்வாங்கிப் படிக்க வங்கிக்குப் போகும் ஒரு இளைஞனுக்கு அது "எந்த அதிகாரவரம்புடைய வங்கியில் அவனுக்குக் கிடைக்கும்?" என்று பார்த்துச்சொல்வதில் காட்டப்படும் தாமதங்களும் அலட்சியங்களும் அவன் தற்கொலை வரைக்கும் போகிறது.
பிறந்தால் பிறந்த குழந்தைக்குப் பிறப்புப் பதிவுச்சான்றிதழ் வாங்குவதிலிருந்து ஒரு நபர் இறந்தால் அவரின் வாரிசுகள் அவருக்கு இறப்புச்சான்றிதழ் வாங்குவதுவரை ஒரு காரியமாய் அரசுத்துறை நாடும்போது அங்கும் லஞ்சத்தின் அவலங்கள். இதை வாங்கும் படித்தவர்களுக்குத் தன் பெட்டி நிறைவது தவிர வேறு கனவில்லை. கொடுக்கும், கொடுக்கமுடியும் நடுத்தர மேல்வர்க்க மனிதர்களுக்குத் தன்னைப்போல் குறுக்குவழி வரவியலாதவருக்குத் தான் எவ்வித அநீதியிழைக்கிறோம் என்கிற எண்ணங்களுமில்லை. தொடரும் இச்சீரழிவு ஆட்டங்களில் பங்குபெற முடியாதவர்களாய், அப்படியே பங்குபெற்றாலும் செயிக்கமுடியாதவர்களாய் ஒரு பெரும்பிரிவு மக்களையும், அவர்களின் அன்றாட அல்லல்களையும் உள்ளடக்கித்தான் இயங்குகின்றன நம் அரசுகளும், அவற்றின் இயந்திரங்களும்.
நிகழ்கால நிலைகடப்பதில் இத்தொய்வுகள் இறுகியிருக்கின்றபோதிலும் அடுத்த நகர்வுகளை
அடையாளப்படுத்துவதிலும் ஒரு அரசாங்கம் தேங்கிவிடாமல் தொடரவேண்டியிருக்கிறது.
அப்படியொரு நகர்வாய்ச் சொல்லலாம் இந்திய அரசு ஏற்படுத்தியிருக்கும்
http://darpg-grievance.nic.in/ என்ற இவ்விணையத்தளத்தை. நெடுநாட்களாய்த்
தொடர்பற்றுப் போயிருந்த நண்பர் ஒருவரிடமிருந்து வந்த மின்னஞ்சல் என ஆவலுடன்
திறந்தபோது இச்செய்தியையும், சுட்டியையும் அனுப்பித் தன் மகிழ்வைப் பகிர்ந்திருந்தார்.
அரசுத்துறைசார்ந்த தம் பாதிப்புகளை நேரடியாக அரசின் பார்வைக்குக் கொண்டுவர
மக்களுக்கு உதவும் நோக்கில் இந்த forum உருவாக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்த
முறையும் நோக்கமும் பாராட்டப்படவேண்டியவை. அன்றாட வயிற்றுப்பாட்டில்
ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ஒண்டிக்குடித்தனக்காரன் தனக்கு மின்வாரியத்தால் ஏற்படும்
பாதிப்பொன்றுக்குப் பேர்தேடித் தெருத்தேடி ஒரு வழக்கறிஞர் அமர்த்திக்கொண்டு
நீதிமன்றப்படியேறி வாதாடிக்கொண்டிருப்பதிலிருந்து இங்கு தன் பிரச்சினையைப் பதிந்து
தீர்வுதேடிக்கொள்ளமுடிந்தால் அவனுக்கு மிகப்பெரிய நேரச் சேமிப்புக் கிடைக்க முடியும்.
இதன் இயங்குதன்மைகள் எளிமையானவையாகத் தெரிவதால் "என்வீடு எரியும்வரை எதற்குச் சத்தமிடவேண்டும்? பிறகு சாட்சி சொல்ல அலையவேண்டும்" என்ற பொதுவான மக்கள் மனோபாவத்தை அசைத்து 'என்ன சொல்லப்போகிறார்கள் எனக் கேட்டுத்தான் பார்ப்போமே" என்ற விழிப்புணர்வுக்குச் சிறிதாவது தூண்டலாம் இது. இதன்மூலம் எப்பிரச்சினையும் யார் பார்வைக்கும் எளிமையாக எடுத்துச்செல்லப்படலாம் என்கிறபட்சத்தில் துறைசார்ந்த பணியிடங்களில் அலட்சியங்கள் குறையலாம். தத்தம் கடமைகளில் அக்கறை வளரலாம். நண்பர் அனுப்பியிருந்த மடலில் ஒருவரின் சொந்த அனுபவத்தையும் குறிப்பிட்டிருந்தார். பாரிதாபாத்தில் வசிக்கும் ஒருவர் இம்மன்றத்தை அணுகியதாகவும் அதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டியிருக்கும் செய்தி இது.
"பாரிதாபாத் முனிசபல் கார்ப்பரேசன் சிலகாலம் முன்பு குறிப்பிட்ட குடியிருப்புப் பகுதிகளில்
புதுச் சாலைகள் அமைத்தது. அவை அப்பகுதிவாழ் மக்களுக்கு உதவியாகவும்,
நன்மையாகவும் மாறியிருந்தபோது இரண்டேவாரத்தில் பிஎஸ்என்எல் தன் கேபிள்
இழுப்புக்களுக்காக புத்தம்புதுச் சாலைகளைத் தோண்டி மீண்டும் குழிகளை உருவாக்கியது.
இது அப்பகுதிவாழ் மக்களுக்கு ஏற்படுத்திய அசௌகரியங்களைச் சொல்லி அங்கே
குடியிருக்கும் ஒருவர் இம்மன்றத்தில் பிரச்சினையைப் பதிந்தபோது விரைவிலேயே
பாரிதாபாத் முனிசபல் கார்ப்பரேசன் மற்றும் பி எஸ் என் எல் என இரு அமைப்புகளுக்கும்
விசாரணை நோட்டீஸ் அரசு மூலம் அனுப்பப்பட்டதோடு நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு
ஆதாரமாக அதன் நகல்ஒன்று பிரச்சினையைப் பதிந்தவருக்கும் அனுப்பிவைக்கப்பட்டது."
இச்செய்தி உண்மையாக இருக்குமானால் இம்மன்றம் குறித்த எதிர்பார்ப்புகள்
அதிகரிக்கலாம். அறிவியலின் வளர்ச்சி என்பது அக்னி ஏவுகணை அனுப்பி
அண்டைநாட்டுக்குத் தன் பலத்தை நிரூபிப்பதோடு முடிந்துவிடக்கூடியதல்ல.
அறிவியலின்மூலமான ஆயுதங்களை மூளையோடு இதயமும் கொண்டு சிந்தித்துத் தன் மக்கள் நலன்காக்கும் அத்தனை உள்நாட்டுத் தேவைகளிலும் பயன்படுத்தி வெற்றிகாண்பதிலேயே அது நிறைவுபெறுகிறது. அப்படியொரு பயணமும், திட்டமும் என்றால் இம்மன்றத்தை வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறோம். அதேசமயம் இடறுகிற இன்னொரு சிந்தனையும் வந்தே தீருகிறது. ஒரு கணினியும், அதில் இயங்குவதற்கான அறிவும், வசதியும் உள்ள மேல்தட்டு, நடுத்தட்டு மக்களுக்கே இது மீண்டும் பயன்படும் ஒன்றாகப் போகுமே தவிர அடித்தட்டு, கீழ்நிலை மக்களுக்கு நம்நாட்டில் பலதைப்போலவே இதன்பயன்பாடும் எட்டாக்கனியாகவேதான் போகுமில்லையா? இருக்கும் மன்றங்கள் எல்லாவற்றிலும் கைவிடப்பட்டவர்கள் இம்மன்றத்தாலும் கைவிடப்படுவார்கள் எனில் எங்கள் மன்றங்கள் காலகாலத்துக்கும் யாருக்காக? இக்கேள்வியொன்றைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் இதில் நிறைகள் அதிகம் எனச் சொல்லலாம்.
5 Comments:
பதிவை படிக்கத் துவங்கி இறுதியை அடைவதற்குள் மூளையில் மின்வெட்டாய் வந்துபொன கேள்விகள இறுதியில் நிங்கள் வைத்ததை பார்த்தபோது ஆறுதலாக இருந்தது.
//அறிவியலின் வளர்ச்சி என்பது அக்னி ஏவுகணை அனுப்பி
அண்டைநாட்டுக்குத் தன் பலத்தை நிரூபிப்பதோடு முடிந்துவிடக்கூடியதல்ல.
அறிவியலின்மூலமான ஆயுதங்களை மூளையோடு இதயமும் கொண்டு சிந்தித்துத் தன் மக்கள் நலன்காக்கும் அத்தனை உள்நாட்டுத் தேவைகளிலும் பயன்படுத்தி வெற்றிகாண்பதிலேயே அது நிறைவுபெறுகிறது//
இவ்வரிகள் அருமை. ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய கேள்விகள்.
பாராட்டுக்கள்
வருகைக்கு நன்றி ஜமாலன்.
//ஒரு கணினியும், அதில் இயங்குவதற்கான அறிவும், வசதியும் உள்ள மேல்தட்டு, நடுத்தட்டு மக்களுக்கே இது மீண்டும் பயன்படும் ஒன்றாகப் போகுமே தவிர அடித்தட்டு, கீழ்நிலை மக்களுக்கு நம்நாட்டில் பலதைப்போலவே இதன்பயன்பாடும் எட்டாக்கனியாகவேதான் போகுமில்லையா? இருக்கும் மன்றங்கள் எல்லாவற்றிலும் கைவிடப்பட்டவர்கள் இம்மன்றத்தாலும் கைவிடப்படுவார்கள் எனில் எங்கள் மன்றங்கள் காலகாலத்துக்கும் யாருக்காக?//
Very valid question indeed! There are lot of very useful programs brought by Govt - just one example I came to know recently: an insurance program is available for unorganized sector workers - but how many deserving people know about it and use it?
செல்வநாயகி, நலமா?
//ஒரு கணினியும், அதில் இயங்குவதற்கான அறிவும், வசதியும் உள்ள மேல்தட்டு, நடுத்தட்டு மக்களுக்கே இது மீண்டும் பயன்படும் ஒன்றாகப் போகுமே தவிர அடித்தட்டு, கீழ்நிலை மக்களுக்கு நம்நாட்டில் பலதைப்போலவே இதன்பயன்பாடும் எட்டாக்கனியாகவேதான் போகுமில்லையா? //
உண்மைதான்! பள்ளிகள், கல்லூரிகள் மூலமாக இந்த விழிப்புணர்வை ஆரம்பிக்கலாம்.
எங்கள் (தூய வளனார், திருச்சி) கல்லூரியில் ஷெப்பர்ட் புரோக்ராம்(Shepherd Programme) என்று கட்டாய பாடத்திட்டம் இருக்கிறது.
எங்கள் கல்லூரியில் வந்த ஜோ அவர்கள் அதைப்பற்றி விரிவான ஒரு பதிவு எழுதியிருந்தார். நேரம் கிடைக்கும்பொழுது பாருங்கள்! விளையாட்டாக நாங்கள் செய்த சில காரியங்கள் அந்த கிராம மக்களுக்கு ஏதேனும் ஒரு விதத்தில் பயனுள்ளதாகவே இருந்தது.... இருக்கிறது.
தருமி அவர்களின் பதிவைப்
பார்த்தபொழுதே இதைப்பற்றி செப்பர்ட் துறைக்கு (பழைய மாணவன் என்ற முறையில்) தெரியப்படுத்த வேண்டும் என்று எண்ணிருந்தேன். இப்பொழுது உங்கள் பதிவைப் படித்தபொழுது அந்த எண்ணம் மேலும் வலுப்பெற்றது.
கிராமங்களுக்கு செல்லும் மாணவர்களை அந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் மூலமாக அல்லது நேரடியாக மக்களிடம் இருந்தே அந்த கிராமத்தின் பிரச்சனைகளை அறிந்து இந்திய அரசு ஏற்படுத்தியிருக்கும் http://darpg-grievance.nic.in/ என்ற இவ்விணையத்தளத்தில் பதிவு செய்ய சொல்லலாம். மேலும் அந்த கிராமத்து மக்களுக்கு (அல்லது பஞ்சாயத்து தலைவருக்கு) இதைப்பற்றி விவரங்கள் சொல்லலாம்.
முயற்சி செய்து பார்க்கிறேன்.....
பார்க்கலாம்....எந்தளவுக்கு சாத்தியமாகிறதென்று...
வழக்கம்போல...... உங்கள் பதிவு ..... சிந்திக்க வைத்ததொன்று!
சங்கர்,
பலநாளின்பின் மீண்டும் உங்களை இங்கு பார்ப்பதில் மகிழ்ச்சி. இப்பின்னூட்டம் மூலம் தொடர்ந்து வாசித்துவருகிறீர்கள் எனவும் அறிந்தேன். நன்றி.
இந்தக் காப்பீட்டு முறைகள் திட்டம் பற்றி நானும் எங்கேயோ படித்தேன். நம்முடைய திட்டங்கள் எழுத்து வடிவில் நிறைவேற்றப்படுதலைவிடவும் அவை செல்லவேண்டிய இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதில் மோசமான சூழல் நிலவுகின்றன.
தென்றல்,
நலமே.
///பள்ளிகள், கல்லூரிகள் மூலமாக இந்த விழிப்புணர்வை ஆரம்பிக்கலாம்.///
பல்வேறு ஆக்கப்பூர்வமான செயல்களுக்கும், விழிப்புணர்வு அளிப்பதற்கும் ஏற்ற இடங்கள் இவை. பாடமுறைக் கல்வியுடன், சமூகக் கல்வியும்கூட சரியான முறையில் வழங்கப்படுகிறபோது அவற்றைப் பெறுபவர்கள் நிகழ்காலச் சீரழிவிற்கு நிச்சயம் மாற்றாய் மாற வாய்ப்புகள் அதிகம். சமூக அக்கறையுள்ள அமைப்புகள், குழுக்கள், ஏன் தனிமனிதர்களுமேகூட இவற்றைக் கருத்தில் கொண்டு செயல்படுவது முக்கியமானதே. நீங்கள் சொல்வதுபோல் பள்ளி, கல்லூரி நாட்டுநலப்பணித்திட்டப் பிரிவு மூலம் கிராமங்களில், மருத்துவ, விழிப்புணர்வு முகாம்களில் சுற்றித்திரிந்த காலம் ஏதேனும் செய்யமுடிந்த நிறைவை வழங்கியே சென்றது.
நீங்கள் அளித்த சுட்டிகளுக்கும், செய்வதாய்ச் சொல்லும் பணிகளுக்கும் நன்றி.
Post a Comment
<< Home