நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Monday, January 28, 2008

இரத்தம் மலர்த்திய பூக்கள்பனிக்குடத்திற்குள் நீந்தும் சிசுவைப்போலத்தான் முன்பகலில் காற்றுக்கு அசைந்து அசைந்து
மென்மையாகத் தூவிக்கொண்டிருந்தது. வாகனங்கள் ஏதும் தீண்டும்வரை ஒரு மூதாட்டியின்
தலை நரையை நினைவுபடுத்திக்கொண்டு பின்பகலில் எங்கும் வெண்மையாய்ப்
படர்ந்திருந்தது. அலுவலகங்கள் மனிதர்களை மீண்டும் வீட்டிற்குத் துப்பிக்கொண்டிருக்கும்
மாலையில் விரைந்த வாகனங்களின் புகைகளில், சக்கரச் சுழற்சிகளில் மெல்ல மெல்லத் தன்
நிறமிழந்து சாம்பலைப் பூசியபடி சகதியாகிக்கொண்டிருக்கிறது வெளியில் கொட்டிய பனி.

பனி சகதியாகிக் கொண்டிருப்பதில் பனியின் தவறெதுவும் இல்லையெனத் தெரிந்தாலும்
அதைப் பார்த்துக்கொண்டிருப்பதில் இருந்த ஈர்ப்பு அது தன் நிறமிழந்தபின்
தொடர்வதில்லை. மனிதர்களின் வேகங்களுக்கேற்ப இறையும் பனிச்சேற்றிலிருந்து
பார்வையைத் திருப்பி வேறேதாவது செய்ய எத்தனிக்கையில் தொலைக்காட்சி
செய்திகளைச் சொல்லிக்கொண்டிருந்தது. பருகிக்கொண்டிருந்த தேநீர் தீரும்வரை
பார்க்கலாமென நினைத்ததுதான், ஆனால் குடித்த தேநீர்க்கோப்பை வறண்டு போனபிறகும்
இரண்டுமணிநேரங்கள் அந்த நிகழ்ச்சி கட்டிப்போட்டது. தொலைக்காட்சியில் தவமிருப்பது
இப்படி எப்போதாவது நிகழ்வதுதான்.

அமெரிக்காவில் அறுபதுகளில் நிறவெறிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தவரும் ஆப்பிரிக்கஅமெரிக்கர்களின் உரிமைகளைப் பெற்றுத்தருவதில் பங்கெடுத்துக்கொண்ட முக்கியமான போராளியுமான மார்ட்டின் லூதர் கிங் தினம் ஜவவரி 21. அத்தினத்துக்கான சிறப்பு நிகழ்ச்சிதான் போய்க்கொண்டிருந்தது. wisconsin public television இல் ஓடிக்கொண்டிருந்த அந்நிகழ்ச்சி விஸ்கான்சின் மாநில ஆளுநரின் முன்னிலையில் ஆப்பிரிக்க அமெரிக்கரும் university of wisconsin வேந்தருமான டேவிட் வில்சன் தலைமை வகிக்க, மார்ட்டின் லூதர் கிங் விருதினைப் பெற்ற ஆளுமைகள் முதல் ஒரு உயர்நிலைப்பள்ளி மாணவி வரை ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் கடந்த, நிகழ், எதிர்காலங்களைப் பேசுவதாக இருந்தது.

நல்ல எழுத்தைப் போலவே நல்ல மேடைப் பேச்சுக்கும் உயிரும், உள்ளொளியும்
இருக்கிறது. விற்றுப் பிழைக்கும் மனமும், ஈக்களைப் போல் தன் சுகத்திற்கு எங்கும்
பறந்தரிக்கும் இயல்பும் கொண்டவர்க்கு மேற்சொன்ன திறமைகள் அமைந்தாலும்கூட அவை
வெறுமனே அவர்தம் கல்லா நிரப்பக் கிடைத்த கையாயுதங்களே. இந்த ஆயுததாரிகளைத்
தாண்டியும் தன் ஆயுளைத் தக்கவைத்துக்கொள்ளும் வலிமை உயிர்ப்புள்ள எழுத்துக்கும்,
பேச்சுக்கும் இருக்கவே செய்கின்றன. காரணம் அவை மக்களை, வாழ்வை இயல்பான
சுருதி மாற்றாமல் அப்படியே முன்வைக்கின்றன. மார்ட்டின் லூதர்கிங் தின சிறப்பு
நிகழ்ச்சியில் இடம்பெற்ற சொற்பொழிவுகளும் சரி, அதில் காட்டப்பட்ட 50 ஆண்டுகளுக்கு
முந்தைய பதிவு செய்யப்பட்ட மார்ட்டின் லூதர் கிங்கின் பேச்சும்சரி எழவிடாமல் கட்டிப்
போட்டன.

ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் உரிமை அரைநூற்றாண்டுக்கு முன்பு இருந்த நிலைமை
கடினமானது. ஏறுகிற பேருந்தில் முன்பகுதி இருக்கைகளில் அமெரிக்கர்கள் மட்டுமே
அமரமுடியுமென்றும், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் பின்பகுதியில் மட்டுமே பயணிக்க
முடியுமென்றும், தப்பித்தவறி முன்பகுதி இருக்கைகள் காலியாக இருந்து போய்
அமர்ந்துவிட்டாலும் அமெரிக்கர்கள் அடுத்த நிறுத்தத்தில் ஏறிவிட்டால் அவர்களுக்கு எழுந்து
இடம் கொடுத்து இவர்கள் நிற்க வேண்டுமென்றும் இருந்த நிறவெறி நடைமுறைகளில்
தொடங்கி பல்வேறு இடங்களிலும் உரிமைகளற்ற நிலை.

இந்தப் பேருந்துப் பிரச்சினையைக் கையிலெடுத்து ஆப்பிரிக்க அமெரிக்கர்களின்
உரிமைகளுக்கான போராட்டங்களில் தன்னை இணைத்துக்கொண்டவர் மார்ட்டின் லூதர்
கிங். குறிப்பிட்டநிறவெறிக்கு எதிரான கலகமாக நாடெங்கிலும் உள்ள ஆப்பிரிக்க
அமெரிக்கர்கள் எந்த இக்கட்டிலும் பேருந்துகளில் ஏறுவதையே தவிர்த்து தம் எதிர்ப்பைக்
காட்டவேண்டுமென மார்ட்டின் அறிமுகப்படுத்திய போராட்டம் ஆதிக்க இனத்தின்
செருக்கில் அறைந்தது. பேருந்துகளில் இருந்த நிறவெறி ஒழிந்து அனைவரும் சமமாக
நடத்தப்படச் சட்டம் வந்தது. ஒரு பிரச்சினை ஓய்ந்ததென்றாலும் மார்ட்டினின் மனித
உரிமைப் போராட்டங்கள் ஓயவில்லை. கிறித்துவ மதபோதகராகத் தன் வாழ்வைத்
துவக்கியிருந்தாலும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்கான போராட்டங்களில் தன்னை
இடைவிடாது ஈடுபடுத்திக்கொண்டார். விழிப்புணர்வுக் கூட்டங்கள், உரிமகளற்றவர்களின்
நியாயங்களை அவர்களின் பிரதிநிதியாக ஆண்டு வந்தோருக்கு எடுத்தியம்புதல், மக்கள்
கூட்டங்களில் மனித இன அநீதிகளைச் சோர்ந்திடாத முயற்சியோடு
அறிவித்துக்கொண்டேயிருத்தல், இந்தியாவுக்குப் போய் பிரிட்டிஷ்
ஏகாதிபத்தியத்திற்கெதிராக ஒத்துழையாமைப் போராட்டங்களை நடத்தியிருந்த
காந்தியடிகளின் உத்திகளை அறிந்து வந்தது என மார்ட்டினின் பணிகள் நீண்டு
வந்திருக்கின்றன.

போராட்டங்களின் பலன்களாலும், உரிமை இழந்தவர்கள் விழித்துக்கொண்டதன்
விளைவாகவும் பேருந்துகள் தாண்டி பல்வேறு இடங்களிலும் நிறத்தால் ஒதுக்கிவைக்கப்பட்ட
ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் சமமாக நடத்தப்படவும், முக்கியமான ஓட்டுரிமைச் சட்டம்
போன்றவைகள் நிறைவேற்றப்படவும் வாய்ப்புகள் ஏற்பட்டன. அமெரிக்க அரசாங்கம்
மார்ட்டின் லூதர் கிங் தினமாக ஆண்டின் ஒருநாளைக் கொண்டாடும் அளவு தீர்க்கமான,
அமைதியான அதேசமயம் பலமான குரலாக ஒடுக்கப்பட்டவர்களுக்காக அமெரிக்காவில்
ஒலித்த மார்ட்டின் லூதர் கிங் ஒரு துப்பாக்கியின் குண்டு துளைத்து இரத்தம் சிந்தி
இவ்வாழ்வை நீத்தவர்.

பல பத்தாண்டுகள் கழித்து அவரைக் கொண்டாடும் நிகழ்ச்சியில் ஆப்பிரிக்க அமெரிக்கரும்
ஒரு மாபெரும் பல்கலைக்கழகத்தின் பேராசிரியையுமான பெண்மணி
பேசிக்கொண்டிருக்கிறார்,
........."மனிதர்களுக்கிடையிலான சமத்துவத்தை நாம் வாழும்
காலத்தில் உருவாக்கிவிடுவோம் என்று சூளுரைத்தபடி அத்தகைய உயரிய நோக்கங்களுக்கு
இரத்தம் சிந்திய மார்ட்டின் லூதர் கிங் தினத்தன்று ஒருநாள் மெய்சிலிர்க்க 'yes we can'
சொல்லிவிடுகிறோம். ஆனால் மற்ற 364 நாட்களிலும் எத்தனையோ இடங்களில்
எத்தனையோ பேருக்கு அவரவர்களுக்குரிய உரிமைகளையும், வாய்ப்புகளையும் மறுத்தபடி
'No you can`t' சொல்லிவிட்டும் சலனமற்று உலகம் நகர்ந்தபடியே இருக்கிறது. பல
போராட்டங்களைத் தாண்டி இன்று பல உரிமைகளைப் பெற்றிருக்கிறோம் என்றாலும்,
கல்வியில் மிகச்சிறந்த பேராசிரியர்களாய், பல்கலைக்கழக வேந்தர்களாய் நாம்
இடம்பிடித்திருக்கும் இதே விஸ்கான்சின் மாநிலத்திலேயே பொதுவான அடிப்படைக்கல்வி
அறிவின் விகிதாச்சாரத்தில் பின்தங்கி இருப்பது யாரென்று பார்த்தால் ஆப்பிரிக்க
அமெரிக்கர்களே! அவற்றின் பின்னணி என்ன? அவர்களின் சமூக, பொருளாதாரப்
பிரச்சினைகள் என்ன என்பதை ஆராய்ந்து களையும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது........"


இப்படியாக இன்னும் நீளும் அப்பேராசிரியையின் அப்பட்டமான கேள்விகளும், ஆழமான
பார்வைகளும் நேரிடையாக வைக்கப்படுகின்றன. அவர் பேசி அமர்ந்தபின் மாநில ஆளுநர்
உட்பட சபை ஒரு நிமிடம் எழுந்து நின்று அவர் பேச்சை அங்கீகரித்துக் கைதட்டிக்
கொண்டிருந்தது. இந்நிகழ்ச்சியை அரசாங்கம் செலவுசெய்து நடத்திக்கொடுக்கிறது.
அதை ஒரு பொதுத் தொலைக்காட்சி அப்படியே ஒளிபரப்பி மக்களுக்குக் கொண்டுசேர்க்க
விரும்புகிறது.

இன்னொரு முக்கியமான சிறப்பம்சம் நிகழ்ச்சியில் இடையிடையே ஆப்பிரிக்க அமெரிக்க
இனத்தின் பாரம்பரிய இசை, பாடல், நடனங்கள் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருந்தன.
அவர்களின் இசை நிகழ்ச்சியில் நம் ஊர் கோயில் திருவிழாக்களில், குறிப்பாக நம்
நாட்டுப்புற அடித்தட்டு மக்களின் இன்ப, துன்ப நிகழ்ச்சிகளில் ஒலிக்கும் "தப்பட்டை"
அடித்து ஆடும் நிகழ்வு இருந்தது. இந்த ஒற்றுமை அந்நிகழ்ச்சியில் மேலும் மனதை
ஒன்றவைத்தது. உரிமைகளின் குரல்கள் விடியலை நோக்கிக் கூவி விரிந்தவண்ணம்
இருக்கின்றன போராளிகளின் இரத்தம் பட்டுத் தெறித்து விழித்த அரும்புகளாய்.


எங்கள் சந்தைகள் சமத்துவமாகிவிட்டதான
துண்டுப்பிரசுர அறிக்கைகள், சுவரொட்டிகள் ஏராளம்
கண்கூசச்செய்யும் விளக்கொளிகளில்
மினுமினுக்கும் தாள்களில்
சமத்துவச்சந்தைகளுக்கு விளம்பரம் எழுதிப்பிழைக்கும்
விற்பனைத் தரகர்களும் அதிகம்

விளம்பரச்சாராயம் அருந்தாத ஒருத்தன்
தரகர்களைத்தாண்டிச் சந்தைக்குப் போனான்
யார்வந்தாலும் ஒருபொருள் ஒருவிலை
உரக்கக்கூவிய ஒலிகளைக்கடந்து
சந்தையின் சமத்துவம் நிறுத்துப் பார்த்தான்

வாசனைத்திரவியம் முன்னேநகர
கனவாட்டியோடு கைகோர்த்துவந்த
கனவானொருவன் பூவாங்கிக்கொண்டிருந்தான்
லில்லி, ட்யூலிப், டேபோடில்ஸ், ஹியாசந்த்
காகிதப் பூக்கள்தான் விற்கிறானெனினும்
கடைக்காரன் சொன்ன பெயர்கள் இத்தனை.
கடைக்காரனுக்குக் கல்லாவை நிரப்பவும்
கனவானுக்குக் கனவாட்டியை மலர்த்தவும்
காகிதப்பூக்களில் பேரம் தொடர்ந்தது

கனவானோடு விற்பனைமுடித்த
கடைக்காரனிடம் பேசிக்கொண்டிருந்தாள்
தன் காய்ந்த தலைமயிர் காற்றிலாட
செருப்பற்ற கால்களோடு சிறுமியொருத்தி பின்
வெறுங்கையோடுதான் வெளியேவந்தாள்
சிறுமியின் உருவம்பார்த்தே முடிவெடுத்தவனாய்
காட்டுப்பூக்கள் இருக்குமிடம் நோக்கி
கைகாட்டிப்போய்ப் பார்க்கச் சொன்னானாம்
கனவான்களுக்குக் காகிதப்பூ விற்பவன்

பூக்கள் விற்பதாய்ப் பொய்களைப் பரப்பி
வண்ணக்காகிதங்களில் வயிறுவளர்ப்பவன்
அறிந்திருப்பானா வாசனையிலேனும்
காட்டுப்பூக்கள் சொல்லும் கதைகளை

காட்டுப்பூக்களின் நிறங்கள் பலவிதம்
மழைக்கு மலர்ந்த பூக்களோடின்றி
யாருமற்ற வனாந்தரங்களில்
எங்கோ எதற்கோ பட்டுத் தெறித்த
இரத்தம் மலர்த்திய அரும்புகளும் இருக்கலாம்

வெறுங்கைச்சிறுமி நடந்தபடியிருக்கிறாள்
கனவான்களுக்கு விற்பதே இங்கு
வியாபாரமெனும் விதியைக் கடந்து
சந்தைக்குவராத பூக்களைத் தேடி.

விளம்பரச்சாராயம் அருந்தாத ஒருத்தன்
சிறுமியைத் தொடர்ந்தால் சிலசெய்திகள் கிடைக்கலாம்.

16 Comments:

At 7:14 AM, January 30, 2008, Anonymous Anonymous said...

WOW...
Excellent observation.
I also seen his speech in TV somewhere, but I can't write like you.
My comment on your posting read thro'Mr.Vadivelu Slang >>>>
Immm.....yappadithan yoocippagalow...Immm...Erukattum.

S. RAVI
Kuwait

 
At 10:12 PM, January 30, 2008, Blogger Vassan said...

நல்லதொரு பதிவு.

//பின்தங்கி இருப்பது யாரென்று பார்த்தால் ஆப்பிரிக்க
அமெரிக்கர்களே! அவற்றின் பின்னணி என்ன? அவர்களின் சமூக, பொருளாதாரப்
பிரச்சினைகள் என்ன என்பதை ஆராய்ந்து களையும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது........"//


மிகவும் களைப்பு தரும் கூற்று இது. எதற்கெடுத்தாலும் அரசு இயந்திரத்தை சார்ந்திருக்க பழகிவிட்ட மனத்தின் இயலாமை கூற்று. இன்று முனைவர்.கிங் இருந்திருந்தால், கருப்பு அமேரிக்கர்கள் பலருடைய உளப்பாங்குகளை எண்ணி மனதுடைந்திருப்பார். 68% கருப்பு குழந்தைகள் ஒரு பெற்றோர் மட்டும் இருக்கும் குடும்பத்தில் பிறப்பது யார் தவறு..? சொல்லிக் கொண்டே போகலாம்.

உலகின் பலநாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து பலரும் பொருளாதார ரீதியில் அமேரிக்காவில் வெற்றியடையும் போது, ஏன் கருப்பு அமேரிக்காவின் முன்னேற்றம் நத்தை வேகத்தில் ஊருகிறது என்பது நினைத்து பார்க்கப்பட வேண்டும்.

 
At 10:23 PM, January 30, 2008, Blogger தருமி said...

இறுக்கிப் பிடித்து உட்கார வைத்தது நிகழ்ச்சியின் தரத்தால் மட்டுமாயிருக்காது; உங்கள் நெஞ்சின் ஈரத்தாலும் இருக்க வேண்டும்.


வெறுங்கைச் சிறுமியின்
கையும் விரைவில்
பூக்களால் நிரம்பணும்.

 
At 10:30 PM, January 30, 2008, Blogger OSAI Chella said...

நெடுநாள் வாசகனின் சிறு நன்றிகள்...

 
At 10:40 PM, January 30, 2008, Blogger செல்வநாயகி said...

நன்றி ரவி வாசித்தமைக்கும், கருத்துக்கும்.

மார்ட்டினைப் பற்றி எழுத விரிவான வரலாறுகள் பல உண்டு. அப்படியொரு செறிவான இடுகையாக இதை நான் எழுதவில்லை என்பதை அறிவேன். இது இங்கு எலும்பு நெருக்கும் குளிரின் பனிகொட்டும் ஒரு பொழுதில் எதேச்சையாகத் தொலைக்காட்சி பார்க்கையில் என்னைப் பாதித்த ஒரு நிகழ்ச்சியும் அது எனக்குள் ஏற்படுத்திய அதிர்வுகளும் மட்டுமே.

வாசன்,
வருகைக்கு நன்றி. மேலும் சில விவாதங்களையும், அலசல்களையும் கோரும் ஒரு கோணத்தை முன்வைத்திருக்கிறீர்கள். இப்போதைய சூழலிலும் சமூக, பொருளாதார வாழ்வில் பின்தங்கியிருக்கும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் பிரச்சினைகளை விரிவாக அறிந்தும் அலசியும் எழுதும்போது மட்டுமே நாம் ஒரு முடிவுக்கு வரவியலுமெனவும் கருதுகிறேன். ஆனால் ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் கோடிட்டிருக்கும் வரிகளை முன்வைத்த பேராசிரியை அவற்றை வெறுமனே அரசைக் குறைசொல்லும் நோக்கிலோ, அல்லது பிரச்சினைகளுக்கு அரசையே சார்ந்திருக்கும் ஒரு மனநிலைப் பார்வையிலோ சொன்னதாக நான் நினைக்கவில்லை. பல்வேறு தரவுகளை எடுத்துக்காட்டியே பேசிக்கொண்டிருந்தார். இணையத்தில் தேடினேன் அந்நிகழ்ச்சியின் சுட்டி எங்காவது இருக்குமா என்று. கிடைக்கவில்லை. கிடைத்தால் இணைக்கிறேன்.

தருமி, செல்லா,

மீண்டும் என் இடுகை வழியாக உங்களையெல்லாம் பார்க்கமுடிந்தது. நன்றி.

 
At 1:25 AM, January 31, 2008, Blogger ஹாரி said...

Great!!!

 
At 4:36 PM, January 31, 2008, Blogger செல்வநாயகி said...

நன்றி ஹாரி.

 
At 11:22 PM, January 31, 2008, Blogger பாரி.அரசு said...

யாரை பற்றி சிந்திக்கிறோம்? எதை கவனிக்கிறோம்? - மீண்டும் உங்கள் ஆழமான எழுத்துக்களில் ஒடுக்கப்படுகின்ற மனிதத்தின் தேடல் ஒலிக்கிறது...

 
At 11:40 PM, January 31, 2008, Blogger -/சுடலை மாடன்/- said...

உங்கள் மனதைத் தொட்டதொரு தருணத்தை/தொலைக் காட்சி நிகழ்ச்சியை அழகாக வரிகளில் விவரித்திருக்கிறீர்கள். இது போன்ற சந்தர்ப்பங்களை நானும் எழுத்தில் பதிய நினைத்தும் நடப்பதில்லை. உங்களைப் போலெல்லாம் எழுத வரவில்லை என்பதே உண்மையான காரணம்.

//
இப்படியாக இன்னும் நீளும் அப்பேராசிரியையின் அப்பட்டமான கேள்விகளும், ஆழமான
பார்வைகளும் நேரிடையாக வைக்கப்படுகின்றன. அவர் பேசி அமர்ந்தபின் மாநில ஆளுநர்
உட்பட சபை ஒரு நிமிடம் எழுந்து நின்று அவர் பேச்சை அங்கீகரித்துக் கைதட்டிக்
கொண்டிருந்தது. இந்நிகழ்ச்சியை அரசாங்கம் செலவுசெய்து நடத்திக்கொடுக்கிறது.
அதை ஒரு பொதுத் தொலைக்காட்சி அப்படியே ஒளிபரப்பி மக்களுக்குக் கொண்டுசேர்க்க
விரும்புகிறது.

இன்னொரு முக்கியமான சிறப்பம்சம் நிகழ்ச்சியில் இடையிடையே ஆப்பிரிக்க அமெரிக்க
இனத்தின் பாரம்பரிய இசை, பாடல், நடனங்கள் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருந்தன.
அவர்களின் இசை நிகழ்ச்சியில் நம் ஊர் கோயில் திருவிழாக்களில், குறிப்பாக நம்
நாட்டுப்புற அடித்தட்டு மக்களின் இன்ப, துன்ப நிகழ்ச்சிகளில் ஒலிக்கும் "தப்பட்டை"
அடித்து ஆடும் நிகழ்வு இருந்தது. இந்த ஒற்றுமை அந்நிகழ்ச்சியில் மேலும் மனதை
ஒன்றவைத்தது.
//

இதைப்பற்றி நானும் அடிக்கடி நினைப்பதுண்டு. பள்ளி, கல்லூரிகளானாலும் சரி, பொது நூலகங்களானாலும் சரி, இங்கு குழந்தைகள் வரை பெரியவர்கள் வரை அறிந்து கொள்ளும்படியான நிகழ்ச்சிகளும், வாதங்களும் நடக்கின்றன. இனவாதமும், நிறவெறியும் இங்கும் ஒருபக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தவர்களது கடந்த கால ஒடுக்குமுறைகளையும், அவற்றுக்கெதிரான போராட்டங்களையும் நினைவுறுத்தும், கற்பிக்கும் நிகழ்ச்சிகள் அரசாங்கத்தாலேயே ஒருங்கிணைக்கப் படுகின்றன. பல்கலைக் கழகங்களில் Black Studies, African American studies போன்ற பாடங்களும், துறைகளும் முறையாக ஏற்படுத்தப் பட்டு கல்வியும், ஆராய்ச்சியும் நடக்கின்றன. அமெரிக்காவின் Affirmative Action-னையும் இந்தியாவின் இடப்பங்கீட்டையும் ஒப்பிட்டு பின்னதைக் குறைகூறும் இந்தியாவின் அரசாளும் வர்க்கம் இதைப் பற்றியெல்லாம் வாயையே திறப்பதில்லை. பிற்படுத்தப் பட்டோர், தாழ்த்தப் பட்டோரின் வரலாற்றையும், போராட்டங்களையும் பாடமாகவும், ஆராய்ச்சித் துறையாகவும், பொது நிகழ்ச்சிகளாகவும் நடத்தினால் கொழுப்பெடுத்துப் பேசும் முன்னேறிய சாதிகளில் சிலபேராவது கண் திறப்பதற்கு வழி வகுக்கும். குறைந்த பட்சம் "We will go on a war against reservation" என்று முழக்கமிடும் போலி இடதுசாரி அறிஞர்களையும், உரிமைகளைத் தாமதப் படுத்தி நீர்க்கச் செய்யும் உச்சநீதி மன்ற நீதிபதிகளையும் அடையாளம் காணவும் உதவும்.

நன்றி - சொ. சங்கரபாண்டி

 
At 12:39 AM, February 01, 2008, Blogger தருமி said...

சங்கரபாண்டி,
// பிற்படுத்தப் பட்டோர், தாழ்த்தப் பட்டோரின் வரலாற்றையும், போராட்டங்களையும் பாடமாகவும், ஆராய்ச்சித் துறையாகவும், பொது நிகழ்ச்சிகளாகவும் நடத்தினால் ..//

இங்க எல்லாமே sweeping under the carpet தான்...

 
At 5:16 PM, February 01, 2008, Blogger செல்வநாயகி said...

பாரி அரசு, சங்கரபாண்டி, தருமி,

மறுமொழிகளுக்கு நன்றி.

சங்கர்,
பலநேரங்களில் பலநிகழ்வுகள் இங்கே இவ்விதமான கலந்துரையாடல்கள் மூலம் என்னையும் ஈர்த்திருக்கின்றன.

நீங்கள் சொல்வதுபோல் நிறம், இனம் காரணமாக மேலோங்கியிருந்த சமூக ஏற்றத்தாழ்வுகளின் வரலாறுகள், போராட்டங்கள், அவை களையப்பட்ட காலங்கள் எல்லாம் இங்கே மாணவர்களும் அறிந்துகொள்ளும் வண்ணம் கற்பிக்கப்படுவது பாராட்டுக்குரியது. நாம் இன்னும் வெகுதூரம் போகவேண்டியுள்ளது.

மேலதிகமான சுட்டிகளுக்கு நன்றி உங்களுக்கு. அவை எனக்குப் பயனுடையவை.

 
At 12:49 AM, March 08, 2008, Blogger டி.அருள் எழிலன் said...

அழகான மொழி நடை நல்ல கட்டுரை...

 
At 1:36 PM, March 08, 2008, Blogger செல்வநாயகி said...

நன்றி அருள் எழிலன்.

 
At 9:37 PM, April 19, 2008, Blogger Dr.Karthik Selvaraj said...

miga arpudhadamana inspiring blog!
i read your blog regularly...tamil rasikka nalla poo...valaipoo...
aaalltha sammooga chindanaigal..
nanri

 
At 12:38 PM, April 20, 2008, Blogger செல்வநாயகி said...

டாக்டர். கார்த்திக் செல்வராஜ்,

உங்களின் வருகைக்கு நன்றி.

 
At 8:32 AM, January 29, 2009, Blogger Muthusamy said...

உரிமைகளைப் பெற்றுத்தருவதில் பங்கெடுத்துக்கொண்ட முக்கியமான போராளியுமான மார்ட்டின் லூதர் கிங் தினம் ஜவவரி (spelling in Tamil) 21...sorry i have put this earlier under another title!

Thank You!

 

Post a Comment

<< Home