நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Thursday, April 03, 2008

சுவர்கள்இருந்தபடிதான் இருந்துகொண்டிருக்கின்றன
அந்தச்சுவர்கள் தன் தடிமன்களோடும் உயரங்களோடும்
இப்போதைக்கு இழந்தவை என்னவோ
வடித்துக்கொண்டிருந்த வண்ணங்களோடு
இன்னும் கொஞ்சம் பூச்சுக்கள் மட்டுமே
சுவர்கள்பற்றிய கனவுகள் சரிவது
சுவர்கள் சொர்க்கமென மதிப்பீடுகளை வளர்த்தவர்
சொந்தத்தவறன்றி சுவர்களின் பிழையில்லை

பெரும்மழை கடும்புயல் அல்லது இயற்கையோ செயற்கையோ
தாக்காதவரைக்கும் கூரைகளுண்டு கவசங்களாக
சுவர்களின் பிம்பங்கள் கலையாதபடிக்கு
கூடங்களாய் அறைகளாய் நீட்டியும் வளைத்தும்
அலங்காரங்களாய் அவை விரிந்தபடியிருக்கும்
வண்ணத்திரைச்சீலைகள் காற்றுக்கு வருட
வார்ப்போவியங்களையும் சுமந்தபடியாக
சுவர்களுக்கிருக்கும் மவுசே மவுசுதான்

சிறுதீப்பொறிகள் செயலிழந்தவை
சுவர்களின் மினுக்கும் கம்பீரங்களோடு
பட்டகரியோ, படரும்கறையோ மறைத்தவிட உண்டு
எசமானரோடு பணியாட்படையும்
சுவர்களின் பொலிப்புக்கும் குறையேதுமில்லை

கவசங்கள் மீறிய கணைகள் சிலவும்
காலத்திடமிருப்பது சுவர்களின் துரதிர்ஷ்டம்
தாமதமாகவேனும் தெரியத்தொடங்கும்
சிலசுவர்களின் சுயங்கள் அப்பட்டமாக
கூரைகள் பிய்யுமொரு கோரப்பொழுதில்
தன் வண்ணங்கள் அழியப் பூச்சுக்கள் கரைய
கூரைகள் இழந்தவை குட்டிச்சுவராகும்

கூரைகள் அழியக் காத்திருப்போருக்குச்
சுவர்களை அறியும் லாவகம் கூடலாம்
இருந்துமென்ன
கூரைகளே அழியாச்சுவர்களுமுண்டு
அவற்றின் சுயங்கள் அறிவது அபூர்வம்

ஒன்றேயொன்று சாத்தியமுண்டு
சுவர்களின் கதைகளில் குழம்பாதிருக்க
மதிப்பீடுகளின்றிச் சுவர்களைப் பார்க்க
அவரவர் மனதைப் பழக்கப் பார்க்கலாம்
சில அதிகாலை நேரத்து ஆகாயப்பரப்பில்
எம்மேகத்துணுக்கும் சேரா நீலம்போல்

13 Comments:

At 12:43 AM, April 17, 2008, Blogger OSAI Chella said...

அன்புத்தோழிக்கு செல்லாவின் காலை வணக்கம். தங்கள் தளத்தின் இணைப்பை “பூவாசம்” பக்கத்தில் வெளியிட்டுள்ளேன். தங்கள் வரவை விரும்பும் - ஓசை செல்லா

 
At 5:54 AM, April 20, 2008, Blogger நொந்தகுமாரன் said...

கட்டுரையாய் எழுதிய வரை, என் இதயத்தோடு உரையாடி, நெருக்கமாய் இருந்தீர்கள்.

இப்பொழுது, நீங்கள் தூரமாய், தூரமாய் போய்விட்டீர்கள்.

நான் நிறைய படித்து, விவாதிக்க வேண்டியிருக்கிறது

உங்களுடைய கவிதை நடையையும், உள்ளடக்கத்தையும் புரிந்து கொள்ள.

 
At 11:59 AM, April 20, 2008, Blogger தருமி said...

attendance போட்டுக்கிறேன்.
:)

 
At 12:34 PM, April 20, 2008, Blogger செல்வநாயகி said...

செல்லா,

உங்களின் "பூவாசம்" தளத்தைப் பார்வையிட்டேன். முன்பு நீங்கள் அறிமுகப்படுத்தியிருந்த "பூவையர்" போன்ற ஒன்றேதான் என நினைக்கிறேன். பெருகும் திரட்டிகள் பற்றியும், பதிவுகளின் உள்ளடக்கம் பற்றியும் எனக்குத் தனிப்பட்ட முறையில் சில கருத்துக்கள் உண்டென்றாலும், இதற்குப் பின் ஒரு முயற்சியும், உழைப்பும் இருக்கிறதென்ற முறையில் அதற்கு எனது வாழ்த்துக்கள்!

நொந்தகுமாரன்,

நெடுநாளின்பின் உங்களை என் பதிவில் பார்த்ததில் மகிழ்ச்சி. மற்றபடி உங்களின் விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறேன்:))

தருமி,
என்ன சொல்லவருகிறீகள் எனப் புரிந்துகொண்டேன்:))

அனைவருக்கும் நன்றி.

 
At 7:33 AM, April 21, 2008, Anonymous Anonymous said...

செல்வநாயகி

Gone tro'..Good

 
At 10:56 AM, April 21, 2008, Blogger செல்வநாயகி said...

நன்றி ரவி,

 
At 4:55 PM, May 11, 2008, Blogger రాధిక said...

hi selvi.this is radhika.nice 2 see ur blog.[ofc i dont know tamil :)]

 
At 3:16 PM, May 12, 2008, Blogger செல்வநாயகி said...

thank you radhika. Me too have the same pleasure to see ur blog and your regular writings:)) I saw pranuthi`s also. It`s nice that our girls are being interested in these things.

 
At 4:06 PM, May 12, 2008, Blogger Thekkikattan|தெகா said...

யம்மா... :-)).

 
At 8:01 PM, May 12, 2008, Blogger செல்வநாயகி said...

தெக்கிக்காட்டான்,

ஒன்னும் புரியலை:))

 
At 8:19 AM, May 13, 2008, Blogger ஜமாலன் said...

இந்த கவிதை மிகவும் நிதான வாசிப்பைக் கோருகிறது. இந்த சுவர்கள் தொடர்ந்து காலத்தில் பயணிப்பதாக தோன்றுகிறது. பல குறியீட்டுத் தளங்களில் செல்கிறது.

முதல் கவிதை பத்தியில் சுவர் மதத்தின் குறியீடாக வைத்துப் பார்க்க முடிகிறது. தொடர்ந்து வரலாற்றின் வளர்ச்சியில் இரண்டாவது பத்தி சுவர்கள் பலமற்ற கூரைகளைக் கொண்ட தத்துவங்களின் குறியீடாகிறது.

இப்படியாக பல குறியீட்டுச் சாத்தியங்களைக் கொண்டிருக்கிறது.
நீங்கள் கவிதைகளும் சிறப்பாக எழுதுகிறீர்கள்.

வாழ்த்துக்கள்.

 
At 8:49 AM, May 13, 2008, Blogger டி.அருள் எழிலன் said...

"கவசங்கள் மீறிய கணைகள் சிலவும்
காலத்திடமிருப்பது சுவர்களின் துரதிர்ஷ்டம்
தாமதமாகவேனும் தெரியத்தொடங்கும்
சிலசுவர்களின் சுயங்கள் அப்பட்டமாக
கூரைகள் பிய்யுமொரு கோரப்பொழுதில்
தன் வண்ணங்கள் அழியப் பூச்சுக்கள் கரைய
கூரைகள் இழந்தவை குட்டிச்சுவராகும்"
nice....
சுவருக்கு பின்னே நிற்கும் நான் ஒன்றிலோ அதை கடந்து போக விரும்புகிறேன்.அல்லது உடைக்க...என்ன செய்ய வாழ்க்கை இப்படித்தான் கழிகிறது.

 
At 10:04 PM, May 13, 2008, Blogger செல்வநாயகி said...

ஜமாலன்,

வாழ்த்துக்களுக்கு நன்றி. நீங்கள் வலைப்பக்கம் வந்தது முதல் உங்களைத் தவறவிடாது வாசிக்க முடிவெடுத்ததுண்டு. காரணம் வலை எழுத்துக்கள் பலதளங்களில் பயணிப்பதும், அதேபோல சில இடங்களில் சரிவதுமாக நகர்ந்துகொண்டிருக்கும் வேளையில் அவற்றின்மீதும் பொழுதுபோக்காக இன்றித் தீவிரமாகத் தன் வாசிப்பை நிகழ்த்துவதும், அக்கறையான விமர்சனங்களை முன்வைப்பதும், நல்ல உரையாடல்களை முன்னெடுப்பதுமாய் இயங்குகிற மிகச்சிலரில் நீங்களும் ஒருவராக உள்ளீர்கள்.

முக்கியமாய்க் கவிதைகள் இங்கு கவனிப்பாரற்ற நிராதரவு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் ஒரு பொழுதில் உங்கள் வலைச்சர வாரத்தில் ஈழம், தமிழகம் சார்ந்த இருவகைப் பதிவர்களின் கவிதைகளையும் எடுத்துக்கொண்டு நல்லதொரு கட்டுரை எழுதியிருந்தீர்கள். அதிலும் காயத்ரியின் "மழை" கவிதை மீதான உங்கள் வாசிப்பும் அதன் கோணங்களும் எனது வாசிப்பிலும் புதிய கதவுகளைத் திறப்பதாக இருந்தது. தவிர நேற்று நீங்கள் என்னைப்பார்க்கச்சொல்லி அனுப்பியிருந்த சுட்டியையும் படித்தேன். நன்றி அதற்கும்.

அருள் எழிலன்,
உங்கள் வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.

 

Post a Comment

<< Home