நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Wednesday, March 25, 2009

ஒரு மாலைக்குறிப்பு
இதை ஒரு நாட்குறிப்புன்னு எழுதிவைக்கமுடியாது. ஒரு நாளின் மாலையின் ஒரு சம்பவங்கறதால ஒரு மாலைக்குறிப்புன்னு போட்டுக்கறேன். இன்னைக்கு மனசு லேசா ஆனமாதிரி இருக்கு. லேசா ஆவறதுன்னா கனமில்லாம இருக்கறதுதானே? அதாவது வேறெதையும் சுமக்காம காலியா, இண்டு இடுக்குன்னு அங்கங்க எதையும் சொருகி வெச்சுக்காம ஒரு சொட்டு நீர் விழுந்தாக்கூட அது பரவற வட்டத்தையும் உற்றுக் கவனிக்க முடிகிற சுத்தமான வெளி போல.

ஏன் இப்படி இருக்கு? நான் அங்க போய் வந்ததுதான் காரணமா இருக்கும். அங்க போறது எனக்குப் பிடிச்சிருக்கு. இந்தச் சின்ன ஊர்ல எனக்குத் திரும்பத் திரும்பப் போகத் தோன்றும் சில இடங்கள்ல அதுவும் ஒன்னு. அங்க எது என்னைய ஈர்க்குது? சொல்லத் தெரியலை. பாவாடை சட்டை போட்டுக்கிட்டு அம்மாவோடு இடுப்பு உசரம் இருந்தப்ப ஊர்ல அடிக்கடி
நான் போய் உட்கார்ந்து அனுபவிச்ச மொட்டப்பாறையும், சும்மா வெறுமனே போய் நின்னுட்டு வரத் தோணுமே அந்தப் பெரிய புளியமரத்து நெழலும் ஏன் என்னை ஈர்த்துதோ அது போலத்தான் இந்த ஊர்ல அந்த மியூசியமும் போறப்பெல்லாம் எனக்குள்ள ஒரு பிடிபடாத அமைதியை, நெகிழ்வைத் தருது.

நல்லா அண்ணாந்து பாக்கவைக்கிற அந்தக் கட்டடத்தோட உசரம் என்னைய ஒன்னும் செய்யறதில்லை. அதுக்கு எதுத்தாப்போல நிலத்தோட நிலமா படுத்துக் கிடக்கற ஆறுதான் என் மனசைக் கழுவிக்கிட்டு ஓடறது மாதிரி இருக்கு. ஒரு பெரிய பனைமரத்தோட அவ்வளவு உயரத்துக்கும் மேல சலசலக்கற அதோட ஓலைகள் என்ன சொல்லிவிடப் போகின்றன
கீழே உழுதுபோட்ட புழுதிமேல தலைவெச்சுக் கண்ணை மூடிக் காலை மடக்கிக் காதை ஆட்டிக்கிட்டே படுத்திருக்கிற அந்தப் புதிதாய்ப் பிறந்த செம்மறிக் குட்டியைவிட? இந்த ஆறும் எனக்குக் கதை சொல்லிய செம்மறிக் குட்டி போலப் பாத்துக்கிட்டே இருக்கலாம். இந்தச் சின்ன ஊருக்கு எந்தப் பக்கமும் சுத்திச் சுத்தி ஓடுது இந்த ஆறு. நரி ஆறுன்னு பேர் சொல்றாங்க (fox river) நம்ம ஆற்றுப் பேர்கள் மாதிரி பவானி, காவிரி, அமராவதின்னு பேர்ல ஒரு அழகில்லை. ஆனாலுமென்ன? ஆறு ஆறாத்தான் இருக்கு.


இன்னைக்கும் ரொம்பநேரம் ஆற்றையேதான் பாத்துக்கிட்டு இருந்தேன். எனக்கு ரொம்பப் பக்கத்துல ஒரு சோடி மனிதர்கள் சிரிச்சுச் சிரிச்சு எதையோ பேசிக்கிட்டே இருந்தாங்க. ஒரு வயசான அம்மா ஒரு குழந்தையின் கைபிடிச்சு நடந்தாங்க. ஆனா ஆறு பாக்கறப்ப எனக்கு யாரும் வேண்டாம் நான்கூட(நன்றி நகுலன் உங்களைக் கொஞ்சம் காப்பியடிச்சுக்கிட்டேன்) எந்த இசையமைப்பாளரும் தேவையில்லாம ஒரு அழகான இசையைப் பிரசவிச்சுக்கிட்டே இருக்குது ஆறு. களுக் களுக்னு தாளம் பிசகாத அதோட இசையோட, மேலே வெள்ளை நுரை போர்த்திக் கிட்டு, போறப்பவே உடைஞ்சிக்கிட்டுப் போற அதோட மொட்டிலிகளை(நீர்க்குமிழ்னு சொல்லணுமோ) கண்டு கேட்டு உண்டு உயிர்த்து நின்றேன். போதும்னு தோன்றினப்ப மியூசித்துக்குள்ள போயாச்சு. அதோட கதவுகளுக்கு என் விரல்களும், அங்கிருக்கிற பொருள்களுக்கு என் கண்களும் பரிச்சயமானவை. அடிக்கடி போயிக்கிட்டே இருக்கமே!


ஆனா அதோட கலை அறை (ஆர்ட் ஸ்டுடியோ) எனக்கு ஒவ்வொரு முறையும் புதுசுதான். காரணம் அங்க மாட்டி(மாற்றி) வைக்கப்பட்டிருக்கற புதிதான ஓவியங்கள், கலை வேலைப்பாடுகள் மட்டுமல்ல, ஒவ்வொரு முறையும் புதிது புதிதாச் சந்திக்கற அங்கே வேலை செய்யும் கலைஞர்களும்தான். விதவிதமான கலைவேலைப்பாடுகளை மக்கள் அறிந்துகொள்ளும் வண்ணம் அதைச் செய்து காட்டுவதும், அதைப் பற்றிப் பேசுவதும்தான் அங்கிருக்கிற கலைஞர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற பணின்னு நினைக்கிறேன். ஒவ்வொரு முறை ஒவ்வொருத்தர்கிட்டப் பேசும்போதும் ஒவ்வொரு அனுபவம். இன்னிக்கு அங்கே லீ (Lee) இருந்தாங்க. ஒரு spinning wheel (நம்ம ராட்டை மாதிரி) வெச்சு பட்டுப்
பொதியை நூலா மாத்திக்கிட்டு இருந்தாங்க. பிறகு அந்த நூலைத் தன்னோட கலை வேலைப்பாட்டுக்குப் பயன்படுத்துவாங்களாம். அங்கேயே அவங்க செஞ்சிருந்த fiber மரம் ஒன்னு இருந்தது. கிளைகள் நூலாலையும், தொங்குன சில இலைகள் தாமிரத் தகட்டாலையும் செய்யப்பட்டு ஒரு பறவையும் மரத்துல இருந்தது.

லீ பேச ஆரம்பிச்சாங்க. ஆனா மத்தவங்கள்ல இருந்து முழுக்க வேறுபட்டு இருந்தது அவங்க பேச்சு. தன்னோட கலை வேலைக்கு வேண்டிய சில பொருள்களை இந்தியாவிலிருந்தும் வாங்குவதாகச் சொன்னதோடு அதுக்குப் பிறகு அவங்க கலை தாண்டித்தான் பேசிக்கிட்டிருந்தாங்க. ரொம்பநாள் முன்னாடி ஜெர்மனிலிருந்து தன் தாத்தாவோடு இங்கே
குடியேறியது, இரண்டாம் உலக்ப் போரில் வேலை செய்யத் தன் தாத்தா போனது, அதுக்குப் பிரதிபலனா நிரந்தரக் குடியுரிமை விரைவாக் கிடைச்சது எல்லாம் சொல்லிப் பூர்வீகம் பேசுனாங்க. பிறகு எந்தப் புள்ளியில் தலைப்பு மாறியதெனத் தெரியவில்லை, பள்ளிக்கூடங்களையும் அரசியல் விட்டுவைக்கவில்லை, அங்கே இருக்கிற அதிகாரப் போக்குகளுக்கு நடுவே ஒரு கலைஞர் சுதந்திரமா வேலை பாக்கறது
சுலபமில்லைன்னாங்க. அவங்க ஒரு விசயத்தைப் பேசிக்கிட்டிருக்கும்போதே இன்னொரு விசயத்துக்குத் தாவுன மாதிரி இருந்தது. ஆனாலும் ஒரு தொடர்பும் இருந்தது. மதங்களும் ஒரு கட்டமைக்கப்பட்ட அதிகாரம் போலத்தான்ன்னு சொன்னாங்க. அதுனாலதான் அவங்கவங்க எல்லைய விரிவாக்கறதுக்காக இன்னொருத்தர் மேல அதைத் திணித்தல்
நடக்குதுன்னாங்க. இந்த ஊருக்கு வரதுக்கு முன்னால இருந்த இன்னொரு ஊருல அவங்களுக்கு ஓவியம் வரைய நிறைய விசயம் கிடைச்சுதுன்னாங்க. இங்கே ஏனோ தனது ஓவிய மனது தேடுவது எதுவும் கிடைப்பதில்லைன்னாங்க. ஆறு இருக்கேன்னு சொல்லத் தோணிச்சு. ஆனா ஆறே என்றாலும் லீயின் ஆறு வேறாக இருக்கலாமெனத் தோன்றியபோதில் சொல்வது தவிர்த்தேன்.

லீயின் சொற்கள் கோடுகளைப் பொருட்படுத்தாமல் தனக்குரிய பாதைகளில் ஒரு நவீன ஓவியத்தின் புள்ளிகளெனச் சுற்றிக்கொண்டிருந்தன. திடீரெனக் கடிகாரம் பார்த்ததும் லீ அம்மாவா மறியிருந்தார். தன் மகன் வந்து காத்திருப்பான்னு சொல்லிக் கிளம்ப ஆயத்தமானாங்க. அவர் வீட்டுக்குப் போவதாய்ச் சொன்னார். நான் வெளியில் வந்துவிட்டேன். அவர் என்னோடும் வந்துகொண்டிருப்பது அவருக்குத் தெரியுமா?

21 Comments:

At 1:46 AM, March 26, 2009, Blogger மிஸஸ்.டவுட் said...

அழகான நீரோட்டம் போன்ற எளிமையான நடை, இன்னைக்கு தான் முதல் முறை கண்ல படறீங்க செல்வா நாயகி ,ரொம்ப நல்லா ஆழ்ந்து உணர்ந்ததை ஈசியா எழுதிட்டு போய்ட்டீங்க,அருமையா இருக்கு வாசிக்க.
//அவர் என்னோடும் வந்துகொண்டிருப்பது அவருக்குத் தெரியுமா?//
லீ பத்தி நீங்க சொன்ன வரிகள் தான் ,இப்போ நானும் சொல்லிக்கறேன் .நான் சுமாரா எழுதுவேன் என் வலைப் பக்கமும் வந்து பாருங்க .

 
At 8:31 AM, March 26, 2009, Blogger பதி said...

தெளிந்த நதி போல் செல்லும் உங்கள் எழுத்து நடை மிக அழகாயுள்ளது...

//பேர்ல ஒரு அழகில்லை. ஆனாலுமென்ன? ஆறு ஆறாத்தான் இருக்கு. //

:)

//மதங்களும் ஒரு கட்டமைக்கப்பட்ட அதிகாரம் போலத்தான்ன்னு சொன்னாங்க.//

கட்டமைக்கப்பட்ட (நிறுவனமயாமாக்கப்பட்ட) அதிகார மையங்கள் தான் மதங்கள் என்பது என் எண்ணம் !!!!

//அவர் என்னோடும் வந்துகொண்டிருப்பது அவருக்குத் தெரியுமா?//

இது சமயங்களில் சிலரின் எழுத்துக்கும் பொருந்துகிறது.... :)

 
At 9:04 AM, March 26, 2009, Blogger நொந்தகுமாரன் said...

நல்லாத்தான் எழுதுறீக?

நீங்க வெளிநாட்டு காரங்களா? நரி ஆறு சிக்காக்கோ பக்கமாமே?

இங்க பக்கத்துல இருக்கிற, ஓகெனக்கல் கூட பார்க்க முடியலங்க!

ம்! அனுபவிங்க!

 
At 1:51 PM, March 26, 2009, Blogger செல்வநாயகி said...

மறுமொழிகளுக்கு நன்றி நண்பர்களே.

மிஸஸ். டவுட்,
நானும் உங்களை முதன்முறையாகச் சந்திக்கிறேன். உங்கள் பக்கத்தைப் பார்த்தேன். பிடித்திருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

பதி,
மதம் குறித்த உங்கள் கருத்தே என் கருத்தும். ஒத்த புள்ளிகளில் சந்திக்கிறோம் எனக் கருதுகிறேன்.

 
At 6:57 PM, March 26, 2009, Blogger பதி said...

//பதி,
மதம் குறித்த உங்கள் கருத்தே என் கருத்தும். ஒத்த புள்ளிகளில் சந்திக்கிறோம் எனக் கருதுகிறேன்.//

:)

இது உங்கள் கருத்தோ அல்லது நான் தொடர்ந்து வாசிக்கும் வேறு யாரேனும் ஒரு பதிவரின் கருத்தாகவே இருக்கும். சிந்திக்க தூண்டும் அல்லது மாற்றுச் சிந்தனையுடைய வேறு கருத்துகளை ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு ஏற்றுக் கொள்வேன். அவ்வளவே...

மதம், மொழி, தேசியம், இடஒதுக்கீடு, பெரியார் என எண்ணுடை பல கருத்தியல்களை தலைகீழாக புரட்டியதில் பதிவுலகத்தின் பங்கே முதன்மையானது. ஏனெனில் ஊருக்கு சென்றால் வாங்கும் புத்தகத்திலிருந்து, இணையம் வழியாக பார்க்கும் சினிமா வரை என் தனியுலகத்தை ஆக்கிரமிக்கும் பெரும்பாலனவற்றை பதிவுலகத்தின் கருத்துக்களே தீர்மானிக்கின்றன !!! :)

தமிழ்மணத்தின் சேவையை நான் அதிகமாக பயன்படுத்தாத காலத்தில், தனியாக yahoo notepad வசதியை பயன்படுத்தி சில வலைப்பூக்களின் முகவரியை சேமித்துவைத்து வாரக்கடைசியிலோ அல்லது நேரம்கிடைக்கும் போது படித்துவிடுவேன் (அப்பொழுது google reader அறிமுகமாகவில்லை). இன்று எனது வலைப்பக்கத்தில் பிடித்தமான பதிவுகளில் பெரும்பான்மையாக அப்பதிவுகளே இடம்பெற்றுள்ளன. !!! அப்படி இணைக்கப்பட்டுள்ள பதிவுகளில் அனைத்து இடுகைகளையும் வாசித்த சிலவற்றில் உங்களது வலைப்பூவும் ஒன்று !!

இது போன்ற சிலரின் எழுத்தை குறிப்பிட்டுத் தான், //இது சமயங்களில் சிலரின் எழுத்துக்கும் பொருந்துகிறது.... :)// என முன்பு இட்ட பின்னூட்டத்தில் குறிப்பிட்டேன் !!!! அதாவது சில நபர்களின் நினைவுகளைப் போலவே அவர்களின் எழுத்தும் வாசிப்பவருடன் வருகின்றது. :)

நான் நீண்ட நாட்களாய் பதிவுலக வாசகனாய் இருந்தாலும் பின்னூட்டமிடக் கூட தோன்றியதில்லை எனக்கென ஒரு வலைப்பக்கம் உருவாக்கும் வரைக்கும் !!! ஏனெனில், தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் பின்னூட்டங்கள் திரட்ட ஆரம்பிக்கும் வரை (அல்லது ஆரம்பித்து சிறிது காலம் வரைக்கும்), ஒரு பதிவிற்கு வரும் பின்னூட்டங்களில் பாரட்ட வேண்டியதிற்கு பாரட்டி விவாதிக்க வேண்டிய விசயங்களை நிறைவாக விவாதித்திருப்பர் !!!! ஒரு சில தப்பியும் இருக்கலாம்... அதனால் என்னைப் போன்ற வாசகர்கள் விவாதகளத்தில் கூட வேடிக்கை பார்த்தால் போதும் என்ற மன நிலையில் தான் இருந்தனர் !!! ஏனெனில், எனக்கு பிடித்தமான பதிவுகள் பட்டியலில் இருந்து ஏராளமான இடுகைகளை ஓர்குட்டிலும் மின்னஞ்சலிலும் (தகுந்த இணைப்புகளுடன் தான்) நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்.. ஆனாலும் பின்னூட்டமிட தோன்றியதில்லை...

ஆனால், முன்பிருந்ததை விட பக்கச் சார்பான பின்னூட்டங்களும் வாக்களிப்புகளும் பெருகிவிட்டதாக நான் எண்ணுகிறேன் (இது எனது அனுமானமே, தவறாக கூட இருக்கலாம்). அதாவது , எழுதுபவரின் கருத்துகளை பார்க்காமல் யார் எழுதுகின்றனர் என்பதனைப் பொறுத்து பின்னூட்டமிடுவதும், வாக்களிப்பதும் முன்பைவிட சற்று அதிகமாகவே உள்ளதாக நான் எண்ணுகிறேன். 1st, 13th என்றெல்லாம் வரும் பின்னூட்டங்கள் எதற்கென்றே புரியவில்லை. :( (மொக்கைச் சாமிகள் தயவு செய்து மன்னிக்கவும்) பின்னூட்டவிவாதக் களங்கள் குறைந்துவிட்டதாகவே எனக்கு தோன்றுகிறது. அதனால், குறைந்தபட்சம் பிடித்த பதிவுகளுக்கு ஒரு வரி பாரட்டி பின்னூட்டம் இடத்தான் இந்த வலைபக்கத்தையே துவக்கினேன் !!!!

இந்த பின்னூட்டத்தை நான் பிற்காலத்தில் எழுதப்போகும் பதிவில் உபயோகப் படுத்துவேன்... ஏனெனில் நான் ரொம்ப சுறுசுறுப்பு !!!! :)

 
At 9:15 PM, March 26, 2009, Blogger செல்வராஜ் (R.Selvaraj) said...

செல்வநாயகி, ஊர்வாசத்துல நனச்சு எடுத்த மனசோட எழுதியிருப்பீங்க போல. ரொம்ப எளிமையா இயல்பா இருக்கு. ஆறு, காத்துன்னு சிலதெல்லாம் தரும் இதம் தனிதான். ஆனா இன்னிக்கு எங்க ஊருல மழை. கொஞ்ச மேகமூட்டம். பொண்ணோட பள்ளிக்கூடத்துக்குப் போய்ச் சிலதெல்லாம் பாத்துட்டு வந்தாலும், மனசுக்குள்ள மூடாப்பாவே இருந்தது. உங்க பதிவ படிச்சதுல கொஞ்சம் நல்லா இருக்கு. நல்லா இருங்க. சின்னவங்கள்ளாம் கூட வந்தாங்களா?

பதி சொல்லி இருக்கறதும் உண்மை தான். பின்னூட்டங்கள் கருத்துக்கள் பரிமாற்றங்கள்னு இருந்தது இப்போ கொஞ்சம் மாறித்தான் போயிருச்சு. ஆனா, இங்க கொஞ்சம் வேற மாதிரி இருக்கறதும் நல்லா இருக்கு. சரிங்க. அப்புறம் பாக்கலாம்.

 
At 10:27 PM, March 26, 2009, Blogger செல்வநாயகி said...

பதி,
நேரமெடுத்து ஒரு விரிவான, உண்மையைச் சொல்லும் பின்னூட்டத்தை எழுதியிருக்கிறீர்கள். நீங்களெல்லாமும் இருப்பதால்தான் என்போன்றவர்களுக்கும் இங்கே எழுதும் ஆர்வம் விட்டுப்போகாதிருக்கிறதெனக் கருதுகிறேன். மீண்டும் நன்றி.

செல்வராஜ்,
நீங்க இங்க வந்துவிட்டுப் போனப்புறம் மனசு இன்னும் அதிகமா ஊர்ப்பக்கம் போகுது. ஆமா, எல்லோருந்தான் கூட வந்தாங்க. நன்றி.

 
At 1:26 AM, March 27, 2009, Blogger முத்துலெட்சுமி-கயல்விழி said...

அவங்க உங்க கூட வந்தாங்க.. இப்ப நீங்களும் அவங்களும் நாங்களூம் சேந்து ஒரு ஈவினிங் வாக் ..:)

இப்படி தொடர்பு படுத்தி நிறுத்தாம பேசறது ஒரு சுகம்.. கேட்க உங்களைபோல ஆள் இருந்தால்..

 
At 1:28 AM, March 27, 2009, Blogger சென்ஷி said...

அருமையான மாலைக்குறிப்பாக மலர்ந்துள்ளது. கோர்க்கப்பட்ட எழுத்துக்கள் மாத்திரம்தான் வார்த்தைகள் என்ற அர்த்தம் உங்களைப் போன்ற சிலரின் எழுத்துக்களை பார்க்கும்போது அடிபட்டு போகிறது.

அருமையான பகிர்விர்ற்கு நன்றி...

 
At 1:33 AM, March 27, 2009, Blogger சென்ஷி said...

//அதாவது , எழுதுபவரின் கருத்துகளை பார்க்காமல் யார் எழுதுகின்றனர் என்பதனைப் பொறுத்து பின்னூட்டமிடுவதும், வாக்களிப்பதும் முன்பைவிட சற்று அதிகமாகவே உள்ளதாக நான் எண்ணுகிறேன்.//

மறுபேச்சின்றி ஒத்துக்கொள்கின்றேன்.

1st, 13th என்றெல்லாம் வரும் பின்னூட்டங்கள் எதற்கென்றே புரியவில்லை. :( (மொக்கைச் சாமிகள் தயவு செய்து மன்னிக்கவும்)//

அதான் நீங்களே மொக்கைச்சாமிகள்ன்னு சொல்லிட்டீங்களே அப்புறம் எதுக்கு மன்னிப்பெல்லாம். :-).

இருப்பினும் மொக்கைச்சாமிகளில் ஒரு உறுப்பினர் என்ற முறையில் உங்கள் மன்னிப்பு ஏற்கப்படுகிறது. :-))

ஆனாலும் அந்த மீ த ஃபர்ஸ்ட்டு, மீ த தர்ட்டிந்த் போடுற இடத்துல எந்த கருத்துப்பரிமாற்றத்த நீங்க எதிர்பார்க்கறீங்க. போடுற மொக்கைப்பதிவுக்கு கொடுக்குற பதில் மொக்கைங்கற கருத்துப்பரிமாற்றமாத்தான் எனக்கு அது தெரியுது... :-)

 
At 5:18 AM, March 27, 2009, Blogger தமிழ்நதி said...

செல்வநாயகி,

"ஆறு இருக்கேன்னு சொல்லத் தோணிச்சு. ஆனா ஆறே என்றாலும் லீயின் ஆறு வேறாக இருக்கலாமெனத் தோன்றியபோதில் சொல்வது தவிர்த்தேன். "

என்ற வரிகள் மிகப் பிடித்தன. இடைவெளியின் பின் எழுத வந்திருக்கிறீர்கள். நீங்கள் இல்லாத இடம் என்னளவில் பெரிய வெற்றிடம்.
நான் சிலருடைய பெயரைப் பார்த்தாலே வாசிக்காமல் விலகமாட்டேன். உங்கள் இடம்.. நான் உங்கள் இல்லாமையை உணர்ந்தேன். நிறைய எழுதுங்கள்.

 
At 8:25 AM, March 27, 2009, Blogger பதி said...

//இடைவெளியின் பின் எழுத வந்திருக்கிறீர்கள். நீங்கள் இல்லாத இடம் என்னளவில் பெரிய வெற்றிடம்.
நான் சிலருடைய பெயரைப் பார்த்தாலே வாசிக்காமல் விலகமாட்டேன். உங்கள் இடம்.. நான் உங்கள் இல்லாமையை உணர்ந்தேன். நிறைய எழுதுங்கள்.//

ம்ம்ம்ம்ம்.. நானும் இதைத் தான் சொல்ல வந்தேன் !!!! ஆனால், இப்படி 4 வரியில சொல்லிட்டு போக வேண்டியதை பதிவை விட பெருசா ஒரு பின்னூட்டம் போட்டு சொல்லியிருக்கேன் !!!! கொஞ்சம் நேரம் கழிச்சு வந்திருந்த தமிழ்நதி அவர்களின் வரிகளையே மேற்கோள் காட்டி இருக்கலாம் !!! :)

இது தான் பதிவர்களுக்கும், பின்னூட்ட பதிவர்களுக்கும் இருக்கும் வேறுபாடு !! :)

 
At 8:29 AM, March 27, 2009, Blogger பதி said...

//பதி,
நேரமெடுத்து ஒரு விரிவான, உண்மையைச் சொல்லும் பின்னூட்டத்தை எழுதியிருக்கிறீர்கள்.//


அது ஒரு சமயம், மொட்டுலி, கொசுவம், அப்பத்தா, வெள்ளாடு, மூடாப்பு, மொட்டப்பாறை'ன்னு நம்ம ஊர் பாசம் இங்க இழுத்துட்டு வந்திருக்கும்னு நினைக்குறேன் !!! :)

 
At 10:39 AM, March 27, 2009, Blogger செல்வநாயகி said...

முத்து, சென்ஷி, தமிழ்நதி, பதி,

உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி.

 
At 11:29 PM, March 27, 2009, Blogger Thangamani said...

Nice to read this Selvanayaki. Thanks.

 
At 2:03 PM, March 28, 2009, Blogger செல்வநாயகி said...

நன்றி தங்கமணி.

 
At 3:01 PM, March 28, 2009, Blogger தமிழன்-கறுப்பி... said...

அதான் சொன்னேனே அடிக்கடி எழுதுங்கன்னு. பாருங்க நீங்க அறியாமலே அதுவா பதிவாகின மாதிரி இருக்கு...

சென்ஷி சொன்னது போல நானும் அதே மொக்கைச்சாமிகளில் ஒருவன் என்பதோடு இப்பொழுது பின்னூட்ட விவதங்கள் ஆரோக்கியமாய் நிகழ்வதில்லை என்பதும் உண்மை.

பாருங்க நீங்க எழுதினதுல தங்கமணியோட பின்னூட்டம் ஒன்றை பல நாட்கள் இல்லை காலத்துக்கு பிறகு பார்க்க முடிந்திருக்கிறது அவருடைய பின்னூட்டங்களே ஒரு தினுசா இருக்கும் அதற்கும் தனியாக பதிவு வைத்திருந்தார் என்று நினைக்கிறேன்

என்ன இருந்தாலும் பதிவுலகில் அவரவர் விட்டுச்சென்னற இடம் அப்படியேதான் இருக்கிறது...

 
At 11:56 PM, March 28, 2009, Blogger Firewall_Sudhan said...

நரி ஆறுன்னு பேர் சொல்றாங்க (fox river)ஆறு ஆறாக தான் இருக்கு :)

பாதி வருஷம் அது பனி ஆகத்தானே அக்கா இருக்கு :(

 
At 9:37 AM, March 29, 2009, Blogger செல்வநாயகி said...

///பாருங்க நீங்க எழுதினதுல தங்கமணியோட பின்னூட்டம் ஒன்றை பல நாட்கள் இல்லை காலத்துக்கு பிறகு பார்க்க முடிந்திருக்கிறது ///

ஆமாம். தங்கமணியின் எழுத்துக்களைத் தவறவிடாது படிக்கவிரும்புகிறவர்களில் நானும் ஒருத்தி. மறுமொழிக்கு நன்றி தமிழன் கறுப்பி.

Firewall_Sudhan,
ஆறு உறைவது கொடுங்குளிர்காலமான டிசம்பர், ஜனவரி, பிப்ரவரிகளில்தான். அதுமட்டுமல்ல என்போன்றவர்களுக்கு உறைந்தாலும், கரைந்தாலும் ஆற்றின்மீதான ஈர்ப்பு மாறுவதில்லை.

 
At 10:49 AM, March 29, 2009, Blogger தருமி said...

//நான் சிலருடைய பெயரைப் பார்த்தாலே வாசிக்காமல் விலகமாட்டேன்//

ம்ம்..ம்..

/////பாருங்க நீங்க எழுதினதுல தங்கமணியோட பின்னூட்டம் ஒன்றை பல நாட்கள் இல்லை காலத்துக்கு பிறகு பார்க்க முடிந்திருக்கிறது ///


இதில ஒரு சின்ன மாற்றம் சொல்லணுமே .. பாருங்க நீங்க எழுதினதுல என்பதை "பாருங்க நீங்க எழுதினதுனால ..

 
At 8:37 PM, March 29, 2009, Blogger செல்வநாயகி said...

தருமி,
எழுதாது பலகாலம் இருக்கும்போதும் இங்கே இந்தப் பொட்டிக்குள் ஒரு உலகம் இருக்கிறதென்பதும் அந்த உலகத்திற்கு எப்போது வந்தாலும் உரையாட, உற்சாகம் கொள்ளவைக்க உங்களைப் போன்றவர்கள் இருக்கிறீர்கள் என்பதும் நினைக்க மகிழ்ச்சிதான்.

 

Post a Comment

<< Home