நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Saturday, March 14, 2009

இப்போதும்....



வழியெங்கும் பனைமரங்கள் சாட்சிகளான
அச்செம்மண்சாலையில்
உன்வாழ்வை ஒரு துணிமூட்டையில் சுமந்தபடி
நீ நிற்கும் நிழல்படம் சொல்லாமலில்லை
வேட்டைவெறி அடங்காத ஓநாய்கள்
உன் கண்களில் கவிழ்த்திருக்கும் மருட்சியை

நிச்சயமில்லாத விடியலுக்கு முந்தைய இரவில்
துளித்துளியாய்க் கழிகிறது உன் இருப்பு
அந்தத் தடித்த அடிமரங்களின் இடைவெளியில்
உன்னைமறந்து நீ கண்ணயரும் நொடிகளிலும்
துலாவும் உன் விரல்கள் உணர்த்தாமலில்லை
முன்பொருபொழுதில் நீ கொண்டாடிமகிழ்ந்திருந்து
இன்றொரு துப்பாக்கி தின்று செரித்திருக்கும் உனக்குரிய அன்பை

நீ நகரமிழந்தாய் வீடிழந்தாய்
வீதிகளை உறவுகளை உற்றதுணைகளையும்
இங்கே தமது பிட்டங்களில் ஒட்டிக்கொண்ட
நாற்காலிகளின் கால்களுக்கிடையில்
பொருத்தி இசைக்கிறார்கள் உனது ராகத்தை
தமது விருந்து செரிமானத்திற்காய் மேதாவிகள்
குதப்பித் துப்பிய வெற்றிலைச்சாறில்
மறைக்கப்படுகிறது நீ சிந்திய ரத்தம்

உனதறிவும் புலமையும் ஆழ்மொழிக்காதலும்
தீயில் எரிகையிலும் இருளைக்கிழித்தென்ன
எமது இனமானப் போர்வாள்கள்
எதிரிகளை அழித்தல் விட்டு
பூனைகளின் முதுகிலிருந்து புனுகெடுத்து வாழுதல் காண்

இவ்வுயிர் கருகும் நாட்களிலும்
உன்னை உண்மையாய் நேசிப்பவர்களின் சொற்கள்
இக்கடும் தந்திர உலகத்தில்
அந்தரத்தில் அலைபாய்கின்றன
திக்கற்றுப் பறக்கும் சின்னக்கருங்குருவிக்கூட்டமென

ஒரு பேரவலத்தைக் கண்கொண்டுபார்த்தபடியும்
சுழல்கிறது காலம் எப்போதும்போலவே இப்போதும்....

8 Comments:

At 6:38 AM, March 14, 2009, Blogger raki said...

மனம் கனக்கிறது இயலாமையை நொந்து

மனம் வெறுக்கிறது மெத்தனத்தை

எங்கோ போயிற்று மஹா கவியின் தீர்க்க தரிசனம் - தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்

விடியலுக்காக காத்து கொண்டு இருக்கின்றோமா என்ன?

ராதாகிருஷ்ணன்

 
At 8:11 AM, March 14, 2009, Blogger ஷைலஜா said...

\\உனதறிவும் புலமையும் ஆழ்மொழிக்காதலும்
தீயில் எரிகையிலும் இருளைக்கிழித்தென்ன
எமது இனமானப் போர்வாள்கள்
எதிரிகளை அழித்தல் விட்டு
பூனைகளின் முதுகிலிருந்து புனுகெடுத்து வாழுதல் காண்
\\\


செல்வநாயகி.. எல்லாவரிகளுமே வலியை நம்மீது ஏற்றினாலும்இந்த ஒருபாரா படிக்கும்போது என் கண்பனிப்பதைத்தடுக்கமுடியவில்லை.
இந்தக்காலத்திற்கு இதயமே இல்லை அதான் இத்தனைஅக்கிரமங்களை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறது.

 
At 8:59 AM, March 14, 2009, Blogger இளங்கோ-டிசே said...

:-(

 
At 2:18 PM, March 14, 2009, Blogger பதி said...

இயலாமையை கொட்டும் வரிகள்....

இணையம் வழியாக செய்திகளை படிக்குù நமக்கே மனப்பிறழ்வை ஏற்படுத்தும் நிகழ்வுகளை, அவர்கள் எப்படித்தான் தாங்குகின்றனரோ?

 
At 11:08 PM, March 16, 2009, Blogger ச.ஜெ.ரவி said...

ஈழ தமிழ் மக்கள் துயரை பதிவு செய்த உங்கள் கருத்துகளுக்கு நன்றி.
நித்தம் கொடுமையை அனுபவிக்கும் ஈழ மக்கள் . . .
துயர் துடைக்க முன்வராத இந்திய அரசுகள் . . .
குரல் கொடுத்தும் பலன் நோக்காமல் நாம் . . .
ஈழ பிரச்னையை அனைத்து வடிவங்களிலும் அழுத்தமாக உணர்த்துகிறது உங்கள் கவிதை.
ஈழம் குறித்த உங்கள் பார்வையையும், கவிதையும் தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்.
தமிழக மக்கள் இனி என்ன செய்ய போகிறோம்?
என்ற தலைப்பில் நீங்கள் உங்கள் கருத்துக்களை வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் என கருதுகிறேன்.

 
At 10:03 AM, March 17, 2009, Blogger செல்வநாயகி said...

மறுமொழியிட்ட நண்பர்களுக்கு,
ஈழம் குறித்த சோகங்களில் நாம் ஒருவருக்கொருவர் நம் இயலாமைகளை, கையறுநிலைகளைப் பகிர்ந்துகொள்வதுதவிர வேறு வக்கற்றவர்களாக நின்றுகொண்டிருக்கிறோம் என்பது இன்னும் வேதனை.

ரவி,
நீங்கள் கேட்டுக்கொண்டபடி எழுத முயல்வேன்.

 
At 3:48 AM, March 23, 2009, Blogger Ravishna said...

அன்புள்ள செல்வநாயகி,

உங்கள் கவிதையை படித்தேன். நன்றாக இருக்கிறது...
உங்கள் கவிதையின் பின்னோர்ந்த வருத்தங்களும்
தெரிகிறது.....

நன் உங்கள் நண்பனாக கேட்கிறேன்... விரைவில் ஒரு நல்ல
மகிழ்ச்சியான கவிதை ஒன்றை எழுதவும்....

எனக்கு தோன்றியதை கூறினேன். ஏதும் தவறு இருப்பின் என்னை
மன்னிக்கவும்...

நன்றி.

நட்புடன்,
ரவிஷ்னா

 
At 12:47 PM, March 24, 2009, Blogger செல்வநாயகி said...

ரவிஷ்னா,
இது அவலத்தைப் பேசவிரும்புகிற கவிதை. இதில் அழகியல் தேடினால் கிடைக்காதுதான்.

மற்றபடி மகிழ்ச்சியான கவிதை எழுதச்சொல்லிக் கேட்டிருக்கிறீர்கள். மகிழ்ச்சியோ, வேறு உணர்வோ நான் பெரும்பாலும் எழுத்தைத் திட்டமிட்டுக்கொண்டு எழுத உட்காருவதில்லை. மனம் எதைப் பற்றி யோசித்துக்கிடக்கிறதோ அதுதான் எழுத்திலும் தானாகவே தோன்றிவிடுகிறது. வலிந்து ஒன்றை எழுதமுயற்சிப்பதில்லை. அப்படியே முயற்சித்தாலும் அதில் நான் தோற்றே போகிறேன். உங்களின் நட்புணர்வுக்கு நன்றி.

 

Post a Comment

<< Home