நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Saturday, February 07, 2009

உன்னோடு பகிர்ந்துகொள்ள முடியாதவை



ஏறத்தாழ ஏழெட்டு மாதங்கள் உருண்டோடிவிட்டன நான் இப்பக்கத்தில் எழுதி.
உண்ணுதல், உறங்குதல், உடுத்துதல்போல் பகிர்தலும் வாழ்வின் பாகம்தான். வாழ்வென்னும்
குளத்தில் பூத்த தாமரைகள், பிரதிபலித்த வெளிச்சம், விழுந்த கற்கள், அடித்த அலைகள்
என எல்லாவற்றின் வாசனைகளும் எழுத்தில் தெறிக்கப் பதிவெழுதிப் பகிர்தல் ஆறுதல்தான்.
ஆனாலும் பகிர்தல் எப்போதும் சாத்தியமானதுமல்ல. எங்கெங்கோ விழுந்த துளிகளைச்
சேகரித்துப் பெருக்கெடுத்து மண் நனைத்தும், செடிவேர்நனைத்தும், சில உயிர்நனைத்தும்
நதியாய் ஓடிய பாதைக்கருகில் வெறும் பாறையாய் மௌனித்தே இருக்கவும்
பழக்கப்படுத்துகிறது வாழ்க்கை. இதோ என் பாறை மௌனத்தைக் கலைத்துப்போடுகின்றன
உன் கேள்விகள்.

ஒரு குறிப்பிட்டகாலம்வரை உன்னிடமிருந்து இப்படிக் கேள்விகளை எதிர்கொள்ளத்
தேவையிருக்கவ்ல்லை எனக்கு. வெறும் பட்டாம்பூச்சிக்கதைகளையும், வானவில்
வண்ணங்களையும், மழைநேரத்து மணத்தையும் மட்டுமே காட்டி வாழ்வும், வையமும்
அழகானதென்று நம்பவைத்து உன்னை ஒரு வனவாசத்த்¢ல் வைத்திருக்கவும் முடிந்தது
எனக்கு. என் சிறகுகளுக்குள் நீ பதுங்கியிருந்தவரை உன் கனவுகளில் வர நான்
பர்னியையும், எல்மோவையும் மட்டுமே அனுமதித்திருந்தேன்.

இப்போது அப்படியல்ல, என் சிறகுகளுக்கு வெளியேயும் உலகம் உண்டென உணரத்
தொடங்கியிருக்கிறாய். நானின்றித் தனித்தியங்கவும் நாளின் பலமணிநேரங்களைப்
பெற்றுவிட்டாய் நீ. விளைவு? கேள்விகள், ஒப்பீடுகள், கருத்துக்கள், விமர்சனங்கள் என
உனக்கான சுதந்திரத்தை உருவாக்க விரும்புகிறாய். நல்லதுதான். உனக்கான பாதையை
நீயாய்க் கண்டடையும்வரை உன் கேள்விகளுக்கான விடைகளை எனக்குத் தெரிந்த
மொழியில் சொல்லவும் முயலால்தான். ஆனால் தாங்குவாயா நீ?

வீட்டில் உன் கண்கள் உன் அலமாரிகளோடு திறந்து மூடிக்கொள்வதில்லை. அவை என்னை
இப்போது நிறையக் கவனிப்பதிலும் நிலைகுத்துகின்றன. செய்தித்தாள் படிக்கையில்
படங்களைக் காட்டித் தெரிந்துகொள்ள விரும்புகிறாய். இவர் ஒபாமா....அமெரிக்கவின்
புதிய அதிபர் என்றால் முன்பொருநாள் சொல்லித்தந்திருந்த மார்ட்டின் லூதர் கிங்கை
நினைவில் வைத்து ஒபாமா அவரைப்போல் இருக்கிறார் என ஒப்பீடு செய்கிறாய். ஒரு
உணர்ச்சிவேகத்தில் "ஆமாம் அவர் கனவை இவர் நனவாக்கியிருப்பதால் நீ சொல்வதும்
சரிதான்" எனச் சொல்லிவிடுகிறேன். பிறகு பிறக்கின்றன உனக்கான கேள்விகள்
முடிவுறாமல்......

".என்ன கனவு?"

"எல்லோருக்கும் எல்லா வய்ப்பும் சமாமாக் கிடைக்கனும் என்ற கனவு"

"ஏன் எல்லோரும் சமமாயில்லை?"

"சமமா நடத்தப்படாம இங்க தப்பு நடந்தது."

"தப்பு செஞ்சவங்க எல்லாரையும் போலீஸ் பிடிச்சிருந்தா எல்லாம் சீக்கிரம்
சரியாயிருக்குமே?........."

இந்த இடத்தில் உன் கவனம் திருப்பி உனக்கு விருப்பமான பொம்மையைக் கைகாட்டி
அனுப்பிவிட்டேன். காரணம் இதற்கு மேலான இதன் பதில்கள் உன்னோடு பகிர்ந்துகொள்ள
முடியாதவை.

பிறிதொருநாள் நான் சேர்த்து வைத்திருக்கும் எனக்கான திரைப்படங்களின்
அட்டைப்படங்கள் காட்டிப் பெயர் கேட்கிறாய். காந்தி, பாரதி, பெரியார்.....பெயர்களைக்
கேட்டுப் பின் நகர்வாய் என நினைத்தால் உன் அடம் என்னோடு சேர்ந்து அவற்றை
ஒவ்வொன்றாய்ப் பார்க்க வேண்டும் என்பதில் போய் முடிகிறது.

உன் வயது கருதியும், என் மனது கருதியும் மரணக் காட்சிகளை வேகமாய் நகர்த்த
எத்தனித்தேன். நீ மறுத்துப் பார்த்தே முடிக்கிறாய்.

"காந்தி யார்?"

"இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முக்கியமான தலைவர்."

"இந்தியாவுக்கு நல்லது பண்ணாரா?"

"ஆமாம்."

"அப்பறம் ஏன் சுடறாங்க? நல்லது பண்ணா சுட்டுருவாங்களா?"
........
மெல்ல உன் சிந்தனையை வெளியே வந்தமர்ந்திருந்த புறாவின் மேல் திருப்பிவிட்டேன்.
காரணம் இதற்கு மேலான இதன் பதில்கள் உன்னோடு பகிர்ந்துகொள்ள முடியாதவை.


பாரதியில் "மயில்போல பொண்ணு ஒண்ணு" வையும், தன்னை உளவு பார்க்க வந்து
மரத்திற்குப் பின்னே மறைந்திருந்த மாறுவேடக் காவலரைப் பாரதி தண்ணீர் வீசித்
துரத்துவதையும் பார்த்து விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தாய். அன்று
கேள்விகளின்றித் தூங்கலாமென இருந்தேன். ஆனாலும் பாரதியின் குடுமி உனக்குப்
பாரமாய் இருந்திருக்கிறது.

"பாரதி சின்னப்பயனா இருந்தப்ப ஏன் முடியெல்லாம் அப்படி இருக்குது?"

"அது நம்மூர்ல சிலசாதிகள்ல அப்படிப் பழக்கமிருந்தது."

"அப்பறம் பெரிய பயனாகி பாரதி ஏன் எல்லாத்தையும் வெட்டிட்டார்?"

"அவருக்கு அது பிடிக்கலை வெட்டிட்டார்."

"ஆனா அவர்கூடவே இருந்த சிலபேரு வெட்டலையே?"

"ஆமா, பாரதி சாதிவேறுபாடெல்லாம் ஒழியணும்னு பாட்டெழுதினாரு, ஆனா எல்லாரும்
அப்படியில்லை"

"சாதின்னா என்ன?"

"இந்து மதத்துல சாதிங்கற பேரால மக்களைப் பிரிச்சு ஒருத்தர் உயர்வென்றும்
இன்னொருவர் தாழ்வென்றும் சொல்லி வைக்கப்பட்டிருக்கிறது."

"ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......."

அடுத்து நீ "காந்தியையெல்லாம் சுட்டுட்டாங்களே........இதையெல்லாம் சுடமுடியாதா?"
என்று கேட்டாலும் கேட்பாய் என எண்ணிய மாத்திரத்தில்
உனக்குத் தூக்கத்திற்கான நேரம் தாண்டிவிட்டதை நினைவூட்டி உன்னை
மௌனமாக்கினேன். காரணம் இதற்கு மேலான இதன் பதில்கள் உன்னோடு
பகிர்ந்துகொள்ள முடியாதவை.

உன் கேள்விகளுக்கான நேரம் எதுவாகவுமிருக்கிறது. கேட்க நினைத்துவிட்டால்
கூட்டைவிட்டு அனைவரும் வெளியில் பறக்க ஆயத்தமாகிக்கொண்டிருக்கும் காலைநேரத்து
அவசரத்திலும் கழிவறையிலிருந்து கத்தி அழைப்பாய். அப்படித்தான் ஒரு மாலையில் நான்
எனதான பணியொன்றில் மன்றாடிக்கொண்டிருக்கும்போது வந்து கேட்டாய்,

"பெரியார் wife இறந்ததா வருதில்லையா படத்துல?"

"ஆமா"

"அப்பறம் மறுபடியும் அவர்கூட wife இருக்கறாங்களே?"

"அதுவா, பெரியார் தன்னோட மனைவி இறந்தப்பறம் இன்னொரு கல்யாணம்
பண்ணிக்கிட்டார். அதனால இன்னொரு wife "

"அப்படின்னா பாரதி எறந்தப்பறம் அவரோட wife ம் இன்னொரு கல்யாணம் பண்ணி
இன்னொரு husband வர்றாங்களா?"

"இல்ல, அவங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலை."

"ஏன்?"

"நம்மூர்ல ஒரு ஆண் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கற மாதிரி ஒரு பெண் அவங்க
husband எறந்தா இனொரு கல்யாணம் பண்ணிக்கறது சுலபமில்லை."

"whaaaaaaaaaaaaat? ஏன் பண்ணிக்க முடியாது?"

நீ எப்போதோ ஆரம்பித்து முடிக்காது வைத்திருந்த படம் ஒன்றை நினைவூட்டி அதை
வரையுமாறு திசைதிருப்பினேன். காரணம் இதற்கு மேலான இதன் பதில்கள் உன்னோடு
பகிர்ந்துகொள்ள முடியாதவை.


இப்போது இலங்கைப் போர் குறித்த உன் கேள்விகள்.உலகம் முழுதும் எத்தனையோ இதயங்களில் எதிரொலிக்கும் இலங்கை அரசின் பேரினவாதம் மீதான கோபத்தோடும், அங்கே அன்றாடம் கொல்லப்படுகிற தமிழினம் மீதான வருத்தத்தோடும், வெள்ளை மாளிகை, செனட் உறுப்பினர், ஐ. நாவின் மனித உரிமைப்பிரிவென நண்பர்கள் அனுப்பித்தருகிற கடிதச் சங்கிலியில் பங்கெடுத்துக்கொள்வதன்றி வேறேதும் செய்யத் திராணியற்ற சாமான்யளாய் நிகழ்வுகள் அறிவதற்காய் இணையம் திறக்கிறேன் ஒவ்வொருநாளும். நீ என் பின்னால் நிற்கிறாய்.

"இதெல்லாம் என்ன படங்கள்?"

"இலங்கையில் போர் நடக்கிறது. அதிலே இறந்த, காயமடைந்தவர்களின் படங்கள்."

"இலங்கை எங்கே இருக்குது?"

"இந்தியாவுக்குப் பக்கத்தில்"

"ஏன் போர் நடக்குது?"

"இரு இனக்களுக்கிடையான போர்"

"அப்டீன்னா?"

"சிங்களம், தமிழ் என இரு இனங்கள். சிங்கள அரசாங்கம் தமிழர்களுக்கான உரிமைகளை,
அங்கீகாரத்தை, பாதுகாப்பை வழங்கவில்லை. அதனால தமிழர்கள் அவர்களின்
உரிமைகளுக்காகப் போராடறாங்க."

"அரசாங்கம்னா எல்லாரையும் பாதுகாக்கும்னு அன்னிக்கி சொன்னியே?"

"ஆனா எல்லா நேரத்துலயும் அப்படியில்லை. அரசாங்கத்தாலயும் பிரச்சினைகள் நடக்குது."

"ஏ இப்பிடியெல்லாம் நெறைய நெறைய நடக்குது?"

வழக்கம்போல் உன்னை வேறு கவனம் நோக்கித் திருப்பிவிடுகிறேன். காரணம் இதற்கு
மேலான இதன் பதில்கள் உன்னோடு பகிர்ந்துகொள்ள முடியாதவை. பேசித்தீர்த்தால் என்
மனது காலியாகுமென்றாலும் வாங்கிக்கொள்ளும் கொள்கலன் நீயல்ல.
எதைச் சொல்வது? எப்படிச் சொல்வது?

ஆண்டுகள் பலவாக ஒரு தீர்வு கிடைக்காமல் அவதியுறும் ஒரு இனத்தின் அல்லல்களைச்
சொல்லவேண்டும். திலீபன் தொடங்கி முத்துக்குமார் வரை அதன் ஒரு விடியலுக்காகப் பலர்
தம் இன்னுயிர் தந்த வரலாறுகளைச் சொல்லவேண்டும். சனநாயகம் என்றும், சமத்துவங்கள்
என்றும் காகிதங்கள் தீர எழுதுந் திருவுலகில் அதிகாரவர்க்கத்தின் அகராதியில்
அவையெல்லாம் வெறும் கதைகளானதைக் காட்டிச் சொல்லவேண்டும். முல்லைக்குத்
தேரீந்த பாரி, மயிலுக்குப் போர்வை தந்த பேகன், நீதி தவறியதால் பசுவுக்காகவும் மகனைத்
தேர்க்காலில் இட்ட சோழன் எனப் பாய்ந்தோடிய கருணைமொழிக் கதைகள் நீ
ஏட்டில்படித்தாலும் பாதி உயிர் இழந்து மருத்துவமனையில் படுத்திருக்கும் மனிதர்களையும்
ஒரு அரசாங்கமே குண்டெறிந்து மீதி உயிர் புடுங்கும் நிசக்கதைகளை நிறையச்
சொல்லவேண்டும்.

நீ மட்டுமல்ல, உன் வயதொத்த நீங்கள் பலருமே நாளை இவ்வையத்தில் நடக்க நடக்க
இதன் நாடகங்கள் அறியலாம். அப்போது உலகம் பற்றிய உங்களின் நம்பிக்கைகளில் பல
இப்போது நீங்கள் ஊதி உடைக்கும் சோப்புக்குமிழிகளைப்போல் கரைந்தும் மறையலாம்.
அல்லது நீங்கள் அங்கங்கே நல்விதைகள் ஊன்றி நம்பிக்கைவிருட்சங்களையும் வளர்க்கலாம்.

என்றாலும் எல்லாம் இப்போதே சொல்ல என் சின்னஞ்சிறிய நண்பனே உன் கொள்கலன்
பெரிதல்ல. மன்னித்துவிடு.

17 Comments:

At 12:50 AM, February 07, 2009, Blogger Muthusamy Palaniappan said...

உணர்வுகள் அழகு...நன்றி

 
At 7:57 AM, February 07, 2009, Blogger ஆதவா said...

உணர்வோட்டங்கள் தெளித்த அருமையான நடையிது... எந்த படைப்புப் பிரிவுகளுக்கும் அடங்காமல் தனித்து இருக்கிறது.,..

ஒவ்வொரு கேள்விக்களுக்குள்ளும் பதில் தெரியாமல் தொலைந்து போகிறவரும், பதிலுக்காக தேடுபவரும் உண்டு....

 
At 7:59 AM, February 07, 2009, Blogger ஆதவா said...

சில இடங்களில் சிலாகித்தேன்.. விபரிக்கும் விதத்தில் நன்கு நுணுக்கமாக விபரித்திருக்கிறீர்கள்..


வாழ்த்துக்கள்....

 
At 12:14 PM, February 07, 2009, Blogger முத்துலெட்சுமி/muthuletchumi said...

இப்ப ரொம்ப ராத்திரியாகிடுச்சு..அப்பறம் வந்து படிக்கிறேன்.. நீங்க ரொம்ப நாள் கழிச்சு எழுதியிருக்கீங்கங்கறதே எனக்கு மகிழ்ச்சி.. :)

 
At 4:08 AM, February 08, 2009, Blogger வாசகன் said...

This comment has been removed by the author.

 
At 9:32 AM, February 08, 2009, Blogger thiru said...

நல்ல பதிவு செல்வநாயகி!

குழந்தைகளின் கேள்விகளுக்கு பதில்களை விவரிக்க முடியாத அரசியல் உள்ளடக்கிய சூழல்களை உருவாக்குகிறது உலகம்.

வளர, வளர காலம் உண்மைகளை உடைத்துப் போடுகிறது. ஒவ்வொன்றிலும் உள்ளிருக்கும் அரசியலை அறிந்து கொள்ளும் நிமிடங்களில் நம்பிக்கைகளும், எண்ணங்களும் மாறிப்போகின்றன.

 
At 10:03 AM, February 08, 2009, Blogger பத்மா அர்விந்த் said...

இங்கே உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியாய் இருக்கிறது.
வாசகன்: குழந்தைகள் நிறையவே கேள்விகள் கேட்க கூடும். பெற்றோர்கள் எந்த மாதிரி விதயங்களை பேசுகிறார்கள், வளர்கிற சூழல் இது பொறுத்து.என் மகன் 8 வயதாக இருக்கும் போதே என்னோடு சிறுவர் விடுதிகளுக்கெல்லாம் (children sheltor)அழைத்து சென்றிருக்கிறேன். எனவே பொதுப்படையாக இது மிகைப்படுத்தல் என்று ஏன் நீங்களாகவே தீர்மானிக்கிறீர்கள்?

 
At 11:07 AM, February 08, 2009, Blogger செல்வநாயகி said...

நண்பர்கள் முத்துசாமி, ஆதவா,

வலையுலகிலிருந்து ஒரு நீண்ட விடுப்பில் போயிருந்த நான் உங்களையெல்லாம் முதன்முதலாகச் சந்திக்கிறேன். வாசிப்புக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

முத்து,
எழுதவரவேண்டும் என மடலிலும் எச்சரித்திருந்தீர்களே:))

திரு,

////குழந்தைகளின் கேள்விகளுக்கு பதில்களை விவரிக்க முடியாத அரசியல் உள்ளடக்கிய சூழல்களை உருவாக்குகிறது உலகம்.///


மிகச்சரி. நன்றி

வாசகன்,

////எந்தக் குழந்தை இப்படிக் கேள்வியெழுப்புகிறது?

ஏனிந்த மிகைப்படுத்தல்கள்?/////



நல்ல கேள்வி. காலையில் எழுந்ததும் சன் டிவி அல்லது இன்னபிற இரைச்சல் கருமம் ஒன்றில் கண்விழித்துப் பின் மாலையில் ஒரு மாசால்படத்துத் தமிழ்க்கதாநாயகனின் ஸ்டைல் ஒன்றைச் செய்துகாட்டித் தன் நாளை முடித்துக்கொள்ளப் பணிக்கப்பட்டிருக்கும் எந்தக்குழந்தையும் இந்தக் கேள்விகளைக் கேட்கமுடியாதுதான்.

அதுமட்டுமல்ல, பூமியில் குழந்தைகள் உலகம் என்பது பலகோடிகளைக் கொண்டிருக்கிறது. இதில் தான்பார்த்த கேள்விகேட்காத குழந்தைகள்தாண்டி வேறு குழந்தைகள் உலகமே கிடையாதென முடிவுகட்டி மூடிக்கொள்கிற மூளைகளுக்கு முகம் மறைத்துக்கொண்டாவது இங்கேவந்து இந்தக்கட்டுரைக்கு இப்படிக் கருத்துச்சொல்லவேண்டும் எனத்தோன்றுவதும்கூட சகசம்தான்.

பத்மா,

வாங்க, நன்றி.

 
At 11:27 AM, February 08, 2009, Blogger Ayyanar Viswanath said...

நல்வரவு..

 
At 7:53 PM, February 08, 2009, Blogger முத்துலெட்சுமி/muthuletchumi said...

நிதானமாகப் படிக்க எண்ணியே அன்று அவசரப்பின்னூட்டம்... :)
இந்தக்கதை இங்கேயும் மகளோடு அதிகம் நடக்கிறது... ஆனால் நீங்கள் தெளிவாக இருக்கிறீர்கள் அதனால் பகிரமுடியவில்லை என்று சொல்லிவிட்டீர்கள்.. நானே இன்னும் தெளியவில்லை.. அதனால் அப்போதைக்கு அப்போ ஓடிப்போய் அப்பாவுக்கு ஒரு தொலைபேசியைப்போட்டு எனக்கே விளக்கிக்கொள்வேன். :)

அடுத்து பையன் கேட்க ஆரம்பித்துவிட்டான் ஒரு நாளில் மட்டும் க்யூங்? (ஏன்) என்ற கேள்வியை 308 தடவை கேட்கிறான்.இதில் நீங்க சொன்னதுபோல டாய்லெட்டிலிருந்தபடியும் கேள்வி தான்.:)

நன்றாக எழுதி இருக்கிறீர்கள்..

 
At 9:32 PM, February 08, 2009, Blogger செல்வநாயகி said...

குழந்தைகளுக்குக் கேள்விகளுக்கான சுதந்திரத்தை வழங்கி அவர்களின் கேள்விகளை செவிமடுத்து அப்போதைக்கப்போதே தீர்த்துவைக்க முயலுகிறீர்கள் என்பதே அருமையான விடயம்தான் முத்து. நன்றி.

அய்யனார், நன்றி.

 
At 3:21 AM, February 13, 2009, Blogger sa said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட்

தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம்.

மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

http://www.newspaanai.com/easylink.php

நன்றி.

 
At 1:38 AM, February 17, 2009, Blogger raki said...

அன்பு சகோதரி
நல்ல தெளிவான சிந்தனை. நல் எண்ணங்களை நாம் விதைப்போம். பலன் வரும் என்று திடமாக எதிர் பார்ப்போம்.

ராதாகிருஷ்ணன்

 
At 12:50 PM, February 17, 2009, Blogger செல்வநாயகி said...

நன்றி ராதாகிருஷ்ணன்

விஜி,
அழைப்புக்கு நன்றி.

 
At 11:55 PM, February 20, 2009, Blogger Ravishna said...

நீண்ட நாட்களாகவே நான் இந்த வலைத்தளத்தை பார்த்துக் கொண்டிருக்கிறேன்....
"சாம்பல் பூத்த பின்னும்" இது தான் கடைசி பதிவாக இருந்தது.
கொஞ்ச நாள் (ஒரு மாதம்) நானும் சரி வர பார்க்கவில்லை. காரணம் வேலை பளு அதிகமாக இருந்தது...

இன்று தன் உங்கள் பதிவை பார்த்தேன்...
இதை படித்ததும் என் ப்ராஜெக்ட் மேனேஜர் நியாபகம் தான் வருகிறது...
அவர் எதற்க கெடுத்தாலும் நிறைய கேள்விகள் கேட்டு கொண்டிருப்பார்.

அவரை பார்த்து நானும் இப்பொழுதெல்லாம் கேள்விகளை நிறைய கேட்கிறேன்.
ஆனால் பதில் தான் எங்கும் யாரும் கொடுப்பதில்லை.

நன்றிகள் பல.

நட்புடன்,
ரவிஷ்னா

 
At 9:26 AM, April 08, 2009, Blogger செல்வநாயகி said...

வாசகன் என்னும் பெயரில் மீண்டும் வந்திருக்கும் நபருக்கு,

பின்னூட்டத்தைப் பிரசுரிக்கவில்லை. ஏனென்றால் அதற்குத் தரவேண்டிய மரியாதை அவ்வளவுதான் எனத் தோன்றியது. பிறகு உமது அழுகல் குற்றச்சாட்டுக்களுக்கு நானோ அல்லது இங்கே இப்பதிவில் பின்னூட்டமிட்டிருக்கும் மற்றவர்களோ விளக்கம் எதுவும் தரவும் தேவையில்லை. உமக்கான எனது பதில் வெறும் புறக்கணிப்பு மட்டுமே.

 
At 4:07 AM, March 20, 2010, Blogger இரசிகை said...

remba pidichurunthathu....

 

Post a Comment

<< Home