நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Tuesday, April 28, 2009

தொண்டர்களை என்ன செய்வது?



குற்ற உணர்வு, கையறுநிலை இவற்றிலிருந்து விடுபட இயலாநிலைகளும்
கூடவே அன்றாடப் பிழைப்புகள் பிடரி அழுத்த சுயநலமிகளாகச்
செயலாற்றத் தள்ளப்படுகிற வாழ்வென்னும் அவலமும் கூடி உருவாக்கும்
மன உணர்வுச் சிக்கல்களோடே அவற்றிலிருந்து விலக எத்தனிப்பதாய்,
மீண்டும் அதிலேயே வீழ்வதுமாய் நகர்ந்துகொண்டிருக்கிறது நிகழ்காலம்.
ஈழம் நம்மில் பலருக்குள்ளும் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் அப்படியானது.
இது சம்பந்தமான எண்ணங்களையும், அவதானிப்பிலிருந்து தோன்றுகிற
புரிதல்களையும் எழுதுவதென்பது ரோசாவசந்த் சொல்லியிருப்பதுபோல்
பலமுறைகள் முயன்றாலும் எனக்கும் முடியாததாகவே போயிருக்கிறது.
இதிலிருந்து தப்பித்துக்கொள்ளவே சொலவடை என்றும்
இன்னபிறவென்றும் எதையாவது வெட்கமில்லாமல் இடையில்
எழுதிக்கொண்டு திரிந்திருக்கிறேன் என்பதே என்மீதான
சுயவிமர்சனமும்கூட.

இதோ கண்ணுக்கு முன்னே கற்றவை, கேட்டவை, நம்பியவை எல்லாமே
பொய்த்துப்போய்க் கொண்டிருக்கின்றன. மனிதன் ஒரு நாகரீகமடைந்த
சமூகஉயிரி என்று படித்ததே எவ்வளவு பொய்? வன்முறையைத் தடுக்க
ஒவ்வொரு நாட்டிலும் எத்தனை சட்டங்கள்? பேச்சில், எழுத்தில், வீட்டில்,
வேலையிடத்தில் எல்லாம் வன்முறையைத் தடுப்பது பற்றிச் சர்வதேச
அளவில் சட்டங்கள் செய்யப்பட்டாயிற்று. இத்தனையும் நடந்திருக்கிற
இதே நூற்றாண்டில்தான் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான
மனிதர்களைத் திட்டமிட்டுக் கொன்றுகொண்டிருக்கும் ஒரு நாட்டின்
பாதுகாப்புச் செயலர் சொல்கிறார் "அமெரிக்கா, இங்கிலாந்து எல்லாம்
தேவையில்லாமல் எங்கள் நாட்டுப் பிரச்சினையில் தலையிடவேண்டாம்"
என்று. தன் கழுத்துவரைக்கும் குடித்து நிரப்பியிருக்கும் மக்களின்
இரத்தவாடையோடு அதன் அதிபர் விளக்குகிறார்,"நாங்கள் செய்திருப்பது
போர் நிறுத்தம் அல்ல, குண்டுகளைப் பயன்படுத்த மாட்டோம்
அவ்வளவுதான்" என்று.

இதில் கொலைகாரர்களையாவது கொலைகாரர்கள் என்று அடையாளம்
கண்டுகொள்ளும் வண்ணம் தங்கள் கோரப்பற்கள் தெரியவே நிற்கிறார்கள்.
மற்றவர்களின் நாடகங்கள் இன்னும் கொடுமையானவையாக
இருக்கின்றன. மூன்று மாதங்களுக்கு முன் போரில் மக்கள் சாவது
இயல்பென இருந்துவிட்டு இப்போது "நாளைக்கு எனக்கு ஓட்டுப்
போட்டால் நாளை மறுநாளே தனி ஈழத்தை அமைத்து விடுவேன்" என்று
புரட்சியை முழங்கும் தலைவிகள், இந்தத் தலைவியருக்குப் பிரதமராகும்
தகுதி நிச்சயம் உண்டென்று திடீர்ச்சான்றிதழ் வழங்கும் டாக்டர்கள்,
தொலைதூரம்வரை சமத்துவக் கனவு காண்பதாய்ச் சொல்லிவிட்டு
தொடும்தூரத்து இனக்கொலையில் கட்சியைத் தாண்டிப்
பேசமுடியாதவர்கள், ஒரு இனத்தின் உரிமைக்கான கால்நூற்றாண்டுப்
போரை மிகச் சுலபமாக அது "அதிகாரத்திற்கான போர்" என்று
சொல்லிவிட்டு மற்றநேரங்களில் மனிதநேயம் பேசுபவர்கள் என இங்கே
தினம் தினம் புதிய காட்சிகள். அதில் ஒன்றுதான் இன்று(ம்) கலைஞர்
நிகழ்த்திக் காட்டியிருக்கும் உண்ணாவிரத நாடகம். தன் தமிழ் இன
உணர்வென்னும் முகமூடி கழன்று விழ ஈழ விடயத்தில் கலைஞர்
செய்ததுரோகத்திற்குத் தண்டனையாக மக்கள் அவர்கட்சியைக்
குறைந்தபட்சம் வரும் தேர்தலில் தோற்றுப்போகவைக்கலாம். ஆனால்
காலத்திற்கும் இப்படியான தலைவர்களின் பின்னால் சிந்திக்க மறந்தோ
மறுத்தோ அணிவகுத்து நிற்கும் தொண்டர்களை என்ன செய்வது?

3 Comments:

At 4:09 AM, April 28, 2009, Blogger பதி said...

எனது எண்ணமும் இதே தான்...

//மனிதன் ஒரு நாகரீகமடைந்த
சமூகஉயிரி என்று படித்ததே எவ்வளவு பொய்? //

மனிதன் ஒரு நாகரீகமடைந்த
சமூகஉயிரி என்பது இந்திய ஒரு சுதந்திர நாடு என்பதனைப் போலக் கூட இல்லை... அதைவிட கீழ்த்தரமானது. மனிதன் என்னும் இந்த சமூகத்தை பாதிக்கும் கொடூர விலங்கு அந்த நிலையை அடையுமா என்பது சந்தேகத்துக்குறியதே..

//கலைஞர் செய்த துரோகத்திற்குத் தண்டனையாக மக்கள் அவர்கட்சியைக்
குறைந்தபட்சம் வரும் தேர்தலில் தோற்றுப்போகவைக்கலாம்.//

ஆம்.. ஆனால், அப்படி சொல்பவர்கள் யோசிப்பவர்கள் எல்லாம் தமிழ், தமிழினம் பற்றி பேச எந்த தகுதியுமில்லை என அவரது தொண்டரடிப் பொடியார்கள் அறிவித்துள்ளனர்..

//ஆனால் காலத்திற்கும் இப்படியான தலைவர்களின் பின்னால் சிந்திக்க மறந்தோ மறுத்தோ அணிவகுத்து நிற்கும் தொண்டர்களை என்ன செய்வது?//

இவர்களுக்கும் சங்கராச்சாரி பக்தர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை..

 
At 8:15 AM, April 28, 2009, Blogger தமிழன்-கறுப்பி... said...

மனிதம் புரிதல் என்பதை இழந்து போய் வெகு நாட்களாகிற்று அதே தொண்டர்களின் நிலமைதான் இலங்கையின் இளைய(மாணவர்கள்) சமுதாயத்திற்கும் மாற்றுச்சிந்தனை என்பதே இல்லாமல் இருக்கிறவர்களை யார் வந்து திருத்துவது அதுவரையும் கொலை காரர்கள் இருக்கத்தான் செய்வார்கள் திருந்தினால் இலங்கை திருந்த வேண்டும்.

உணர்வுகளின் பகிர்வுக்கு நன்றி...

 
At 3:55 PM, April 28, 2009, Blogger செல்வநாயகி said...

நன்றி நண்பர்களே.

 

Post a Comment

<< Home