நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Wednesday, May 13, 2009

ஈழம்.....வெறும் சத்தமிட்டுப் பின் சாகப்பிறந்தவர்களா நாம்?ஈழம்..... ஏதோ ஒரு பழம் கூவி விற்கும் வியாபாரம் போல் திரும்பும் திசையெல்லாம்
எதிரொலிக்கிறது இந்தச் சொல். ஆனால் அங்கே மக்கள் இன்னமும் காலில் நசுங்கும்
பழங்களாய் சதைகள் தெறிக்கச் செத்துக்கொண்டிருக்கிறார்கள். பலநாட்களாய் மனதில்
மோதும் உணர்வுகளுக்கு ஒரு வடிவம் கொடுக்கும் முயற்சி வெற்றியைத் தந்ததில்லை.
ஆனால் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்த நண்பர்களின் இடுகைகளை வாசித்தே வந்தேன்.
எங்கும் பின்னூட்டம் இடக்கூடத் தெம்பு இல்லாமலே இருந்திருக்கிறது. அதுமட்டுமல்ல
பசிக்கிறதோ இல்லையோ மூன்று வேளை உணவு, இடைக்கிடை தேநீர் அதற்கும் ஒரு தீனி
என உண்டு உறங்கிப் பின் தின்றவை செரிக்க என்னைச் சுற்றிய சாலைகளில்
ஓடிக்கொண்டிருக்கும் தமிழர்களின், (மனிதர்களின் என்றும் போட்டுக்கொள்ளலாம்)
கூட்டத்தில் முழுக்க அப்படியில்லாவிட்டாலும், முக்கால் வீதம் அந்த அடையாளங்களில்
எதும் குறைச்சலில்லாமல் அனுபவித்துத் திரிகிற நாம் அவர்களின் அவலங்களுக்கு மருந்து
சொல்வது அருகதையுடையதுதானா என்று எழும்பும் கேள்வியும் என்னை எழுதவிடாமல்
அடக்கியே வைத்திருந்தது.

நேற்றுத் தமிழ்சசியின் பதிவில் பின்னூட்டமிட்டது எல்லாவற்றையும் தாண்டி உந்தித் தள்ளிய
ஏதோவொரு காரனம்தான். ஈழம் குறித்த தொடர் இடுகைகளை தமிழ்வலைப்பரப்பில்
தொடர்ந்து எழுதிய சிலரில் அவரும் ஒருவர். அது எனக்கெல்லாம் தந்த புரிதல்களும்
அதிகம். அப்படியானவர்தான் நேற்று 'போதுமடா ஈழப்போராட்டம்" என்று ஈழவிடுதலைக்கான
போர் இனியும் சாத்தியமில்லை, அங்கிருக்கிற மக்கள் அமைதியாக வாழ மட்டும் ஏதேனும்
செய்யவேண்டும் என்கிற பொருளில் அதற்கான காரணங்களை விளக்கிப் பதிவு
செய்திருந்தார். அவ்விடுகைக்கு வந்த விமர்சனங்கள் பலவும் அவரை, உண்மை நிலையைப்
புரிந்துகொள்ளாததால் வந்தவை என்று இன்று தன் நிலையை மீண்டும் விளக்கி ஒரு இடுகை
இட்டிருக்கிறார். தான் எப்படி எந்த ஒரு உணர்வின் மிகுதியிலும் இன்றித் தெளிவாகவே
அப்பதிவை இட்டதாய்ச் சொல்கிறாரோ அதேபோல் அங்கே அவரை
விமர்சித்திருப்பவர்களும்கூட(ஒருசில உணர்ச்சிக் குவியல்கள் தவிர்த்து) அப்படியான ஒரு
நிலையிலேதான் பின்னூட்டங்களை எழுதியிருக்க வேண்டும் என்பதையும் சசி
ஏற்றுக்கொள்ள வேண்டும். வானதி உள்ளிட்டவர்களின் மறுமொழியில் உள்ள குறிப்புகள்
சசியின் ஈழக்காதலைக் கேள்விக்கு உட்படுத்துபவை அல்ல, இப்போதைய அவரின்
நிலைப்பாட்டின் மீதான ஆதங்கமே என்றே நான் புரிந்து கொண்டிருக்கிறேன்.

ஈழத்தை எழுதும்போதெல்லாம் சிங்களப் பேரினவாதத்தை அதற்குத் துணைபோனோரை
எதிர்த்துக் கேள்வி கேட்டதோடு மட்டுமே நிறுத்திக்கொண்டிருக்கிறோம். எல்லாவற்றையும்
விழுங்கி அங்கே விடுதலைக்கென்று போராடிக்கொண்டிருந்த ஒற்றை இயக்கமான
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தவறுகளை, தலைமையின் தவறுகளையும்
அப்போதைக்கப்போதே சுட்டிக்காட்டவும், அந்தப்பாதை எப்படியானதொரு அழிவில்
கொண்டுபோய் நிறுத்தும் என்பதை எச்சரிக்கவும் நம்மில் எத்தனை பேர் தயாராக
இருந்தோம்? அப்படி எச்சரித்த சிலரைக்கூட நாம் எப்படி எதிர்கொண்டோம்?
உள்நோக்கத்தோடு விடுதலைப்புலிகளை குற்றம்சாட்டி தமிழின உணர்வுக்கு எதிராகச்
சதிராடியவர்களை விடுவோம், நம்மைப்போலவே ஈழவிடுதலை விரும்புபவர்களேயானாலும்
அவர்கள் புலிகளை விமர்சித்தால் அதை முன்னெடுத்து அலசத்தான் நாம் எவ்வளவுதூரம்
ஆர்வம் கொண்டிருந்தோம்? அப்படியான நேரங்களில் எல்லாம் ஒரு புள்ளியைத் தெரிந்தே
விவாதிப்பது தவிர்த்து வந்துவிட்டு இன்று சாவின் விளிம்பில், கால்நூற்றாண்டு காலம்
எதற்காகக் கனவு கண்டோமோ அவையே தகர்கின்றனவே என்ற கவலையில், தூக்கி
வளர்த்தவர்கள், துணையாய் இருப்பதாய்ச் சொன்னவர்கள் எனப் பலராலும் கைவிடப்பட்டுத்
தன் காயங்களோடும், கடைசி மூச்சோடும்கூட, விடாது துரத்தும் இராணுவத்தை எதிர்த்துத்
துவளத் துவளப் போராடிக்கொண்டிருப்பவனைப் பார்த்து "போதும், உன்னாலும்தான் மக்கள்
சாகிறார்கள். உன் போராட்டத்தை மூட்டை கட்டு, விடுதலையும் வேண்டாம், ஒன்றும்
வேண்டாம்" என நாம் ஏதோ ஒரு சலிப்பில் சொல்லிக் கடப்பது எவ்வளவு தவறானது?
இப்படிச் சொல்வதற்குப் பதிலாய் சர்வதேச சமூகத்தை, ஐ.நா சபையை, மனித உரிமை
அமைப்புகளைப் போர்ப் பகுதிக்குள் அனுமதித்து மக்களை அவர்கள் விடுதலைப்புலிகளின்
கட்டுப்பாட்டிலிருந்தாலும் மீட்டுக்கொண்டு வரச்சொல்லி முடிந்தவாறெல்லாம் நாமும்
வீதிகளில் இறங்கிப் போராடலாம். மாபெரும் மக்கள் துணையோடு அதைத் தீவிரமாகச்
சாத்தியப்படும் இடங்களில் எல்லாம் செய்து பார்க்கலாம். விடுதலைப்புலிகள் இயக்க
அரசியல் பொறுப்பாளர் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறார் சர்வதேசப்
பார்வையாளர்களை வந்து பார்க்குமாறு. ஆனால் தன் பரிவாரம் தவிர ஒரு ஈ, எறும்பைக்கூட உள்ளே விடாமல் மக்களையும் புலிகள் என்றே வேட்டையாடி வருகிறது ஒரு கொடும் அரசாங்கம். இதில் எந்த நம்பத் தகுந்த வட்டாரங்களைச் சசி மேற்கோள் காட்டுகிறார்
என்பது புரியவில்லை.

விடுதலையை விட்டுவிட்டு மக்களின் அமைதிக்கான அரசியல் போராட்டம் நடத்தலாம்
என்கிறார் சசி. விடுதலையற்ற அமைதியான வாழ்வென்ற ஒன்றைச் சிங்கள அரசாங்கம்
அங்கே தமிழனுக்கு வழங்கப்போகிறதா இனிமேலேனும்? விலங்குகளைவிடக் கேவலமாக
மனிதர்களை முகாம்களுக்குள் அடைத்து வைத்துக்கொண்டு சோறோ, தண்ணியோ,
மருந்தோகூட ஒழுங்காகத் தராமல் வெளியிலும் விடாமல் சித்ரவதை செய்துவரும் ஒரு
அரசாங்கம், இதற்கு முந்தைய ஆயுதம் தவிர்த்த, விடுதலைப்புலிகள் தவிர்த்த வேறெந்த
அரசியல் முன்னெடுப்புகளிலும்கூடத் தமிழர்கள் என்னும் தம் குடிமக்கள் நலன் குறித்து
எந்தவொரு அக்கறையும் காட்டாத ஒரு அரசாங்கம், அவர்களின் ரத்தம் குடித்தும், அவர்தம்
பெண்களைச் சிதைத்தும் தன் பசியாறிய ஒரு அரசாங்கம் அவர்களுக்கு அமைதிக்கான
வாழ்வை நாளை ஒரு அரசியல் போராட்டத்தின் மூலம் வழங்கிவிடுமா?

தொடர்ந்த கடிதச் சங்கிலியில் ஒரு தோழி அனுப்பிய கடிதத்தில் இலக்குவன் என்பவர்
எழுதிய "வழிதவறிய மீன்கள் சந்தித்துக்கொண்டன மணல்வெளியில், இரண்டிடமும் கடல்
பற்றிய கதைகள் இருந்தன, கடல் இல்லை" இதுதான் எங்கள் நிலை எனத் தன்
சோகத்தைச் சுட்டியிருந்தார். உலகம் முழுவதுமாய் திசைக்கொன்றாய் துரத்தப்பட்டுத் தன்
உறவுகள் இழந்து, நாடிழந்து நிற்கும் அத்தனை ஈழத் தமிழ் அகதிகளைப் பற்றியும்
போர்நிறுத்தக் காலத்தில்கூட கவலைப்பட்டோ, விசனப்பட்டோ இராத ஒரு திமிரான
அரசாங்கம், தானே ஒருபக்கமாய் உடன்படிக்கையை மீறி இராணுவ நடவடிக்கையை
அவிழ்த்துவிட்ட ஒரு அரசாங்கம் விடுதலை தவிர்த்த வழியில் எந்த ஒரு அமைதியை
வழங்கிவிடும்?

இ¢து சம்பந்தமான விளக்கமான கோர்வையான கட்டுரையை எழுதும் மனநிலை இப்போது
இல்லையென்பதால் இதைச் சரியாகத் தொடங்கிச் சொல்லவிரும்பியதை முறையாக
வெளிப்படுத்தியிருக்கிறேனா எனத் தெரியவில்லை. என்றாலும் இதில் முடிவாகச் சொல்ல
நினைப்பது இதுதான்.

ஈழத் தமிழினத்திற்கான அமைதியான வாழ்வென்பது விடுதலையாக மட்டுமே இருக்க
முடியும். அதற்கான பாதையைத் தொடங்கி வைத்தவர்கள், பயணித்தவர்கள் பலியாகிப்
போயிருக்கலாம். இதோ தம்மைத் தவிர்த்த வேறெந்த போராளிக்குழுக்களையும்
துப்பாக்கிக்குத் தின்னக்கொடுத்து தன் பாதையை அமைத்துக்கொண்ட இன்றுவரை
விடுதலைக்காகவே போராடியும்வருகிற விடுதலைப்புலிகளே அழிந்தாலும் சரி, நாளையோ
பிறகோ அங்கே மீண்டும் விடுதலைக்கான குரல் ஒலிக்கத்தான் போகிறது. சிங்கள அரசின்
தோட்டா நீளமுடியாத இடமொன்றில் இன்று தம் உயிரைச் சேமித்து வைத்திருக்கிற ஈழத்
தமிழ்ப்பெண்களின் கருப்பைகள் அக்குரலைப் பிரசவிக்கும். அந்த விடுதலையின் மீது
உண்மையான நேசம் கொண்ட நாம் செய்யவேண்டியது அதைச் சரியான முறையில்
முன்னெடுத்துச் செல்வது. இன்று சொல்கிறோமே, செத்துக்கொண்டிருப்பவனைப் பார்த்து
"அவன் தவறுகளாலே அவன் சாகிறான்" என்று. அதை அவனின் இறுதிச்சடங்கு வரை
அடைகாத்து வைக்காமல் அவன் செய்வது தவறென்றவுடனே அப்போதே தயக்கமின்றிச்
சொல்வது. அதன் மூலம் அந்த விடுதலையின் குரல் சரியான பாதையில் பயணிக்கச்
செய்வது. அது மட்டுமல்ல கருணாநிதிகளின் ஊர்வலங்களில் நெடுமாறன்கள்
தூக்கிவீசப்படுவதையெல்லாம் மௌனமாகச் சீரணித்திருந்துவிட்டுக் கடைசியில்
கருணாநிதிகளைத் துரோகிகள் எனக் கண்டுகொண்டதாய்க் காலம் கடந்து யோசிக்காமல்
ஆரம்பத்திலிருந்தே எழுத்திலோ, பேச்சிலோ நெடுமாறன்களைச் சுமந்து சென்று மக்களிடம்
அடையாளப்படுத்துவது. அதன் மூலமெல்லாமும் தமிழ் மொழி, இன இருப்பைக் காப்பது.
இவைதான் நமக்கான கடமைகள்.

ஒரு கோழி முட்டையிடுகிறது. எல்லா முட்டைகளும் அடைகாக்க அதற்கு வந்து
சேர்ந்துவிடுவதில்லை. எடுத்தவன் வறுத்துவிடுகிறான், மறைவாக எங்கேனும் புதர்களில்
வைக்கையில் பாம்புக்குப் போகும் முட்டைகளும் உண்டு. இழந்தவை போகக்
கிடைத்தவைகளின் மேல்தான் அது அடைகாக்கிறது. இரை, தண்ணி மறந்து
அடைகாத்தாலும் எல்லாம் குஞ்சுகளாகவும் கிடைத்துவிடுவதில்லை. பொரிக்காமல்
அழுகியவை, வெளிவருகையிலே செத்தவை எனத் தாண்டித் தன்னோடு கால் ஊன்றி
நடக்கும் குஞ்சுகள் சிலதான். பாம்புகளின் தொல்லை முட்டைகளோடு மட்டுமில்லை,
குஞ்சுகளோடும்தான். பாம்புகளைப் போலவே பூனைகளும் சிலசமயம், நாய்கள் சிலசமயம்
என எல்லாம்கூடக் குஞ்சுகளுக்கு எமந்தான். தரையில் மட்டுமில்லை ஆபத்து குஞ்சுகளுக்கு.
அவை வான் வழியாகவும் வந்தே தீரும். வட்டமிடும் கழுகளின் கண்களில் புதைந்திருக்கிறது
குஞ்சுகளின் கொடுமையான சாவு. இழந்தவை போகத் தங்கியிருப்பது ஒற்றைக்
குஞ்சென்றாலும் கழுகுகள் வந்து அதைக் கவ்விக்கொள்ள அமைதியாய் வெறும்
தண்ணிக்கும், இரைக்குமாய் தன்னை அடக்கிக் கொள்வதில்லை கோழி பறக்கத்
துணைசெய்யாத சிறகை வைத்தும் கழுகுக்கு எதிராய் எம்பிக் குதிக்கிறது கோழி. தன்
இருப்பு உள்ளவரை மீண்டும் தன் குஞ்சுகளுக்காய்த் தவமிருக்கவும் செய்யும். அதிகாரங்கள்
கழுகென்றால் நாம் கோழிகள்தான். நம் போராட்டங்கள் முடிவதில்லை.

"மக்களைவிடப் புலிகள் பெரிதல்ல, புலிகளிடமிருந்து மக்கள் விடுபடட்டும்" என்கிறார்
தமிழ்சசி. புலிகள் யாரும் புலிகளாகப் பிறந்தவர்களில்லை, ஆயிரமாயிரமாய் எம் மக்களே
புலியானார்கள், ஆக்கவும் பட்டார்கள். அவர்களில் இருக்கும் பிழைகளையும் தாண்டி நான்
அவர்களுக்கு இப்போதும் என் வணக்கத்தைச் செலுத்தவே செய்கிறேன். ஏனெனில் அவர்கள்
இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிற போரில் மக்கள் மாண்டதற்குக் காரணம் மட்டுமல்ல,
கால் நூற்றாண்டாய் மக்களுக்காகவே மாண்டவர்கள். இப்போதும் மாண்டுகொண்டிருப்பவர்கள்.

15 Comments:

At 3:02 AM, May 13, 2009, Blogger மலைநாடான் said...

//"மக்களைவிடப் புலிகள் பெரிதல்ல, புலிகளிடமிருந்து மக்கள் விடுபடட்டும்" என்கிறார்
தமிழ்சசி. புலிகள் யாரும் புலிகளாகப் பிறந்தவர்களில்லை, ஆயிரமாயிரமாய் எம் மக்களே
புலியானார்கள், ஆக்கவும் பட்டார்கள். அவர்களில் இருக்கும் பிழைகளையும் தாண்டி நான்
அவர்களுக்கு இப்போதும் என் வணக்கத்தைச் செலுத்தவே செய்கிறேன். ஏனெனில் அவர்கள்
இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிற போரில் மக்கள் மாண்டதற்குக் காரணம் மட்டுமல்ல,
கால் நூற்றாண்டாய் மக்களுக்காகவே மாண்டவர்கள். இப்போதும் மாண்டுகொண்டிருப்பவர்கள்.//

இதைச் சொன்னால் கூட, நீ புலி என்கிறார்கள்.
விரிவாக எழுதும் நிலையில் இல்லை. எனினும் இங்குள்ள கருத்துக்கள் பலவோடு உடன்பட முடிகிறது.
நன்றி

 
At 5:09 AM, May 13, 2009, Blogger மகிழ்நன் said...

உண்மை!

 
At 10:31 AM, May 13, 2009, Blogger nt said...

உங்களது இந்தப் பார்வைக்கும் இதை வெளிப்படையாகச் சொன்னதற்கும் நன்றி செல்வநாயகி.

-தங்கமணி

 
At 11:00 AM, May 13, 2009, Blogger vanathy said...

Thank you.
I agree with your comments.
The tigers may be loosing the war,they may have made mistakes
but we can't forget the immense sacrifice they made for the eelam cause.
They confronted almost the whole world and fought bravely and still fighting.
we should leave the criticism for later.
-vanathy

 
At 11:08 AM, May 13, 2009, Blogger பாரதி.சு said...

உண்மை தான்....
உங்கள் திசையில் தான் நானும் உள்ளது போல் உள்ளது.
இதற்கு தமிழ்சசியின் "போதுமடா இந்த ஈழப் போராட்டம்" பதிவிற்கு நான் வழங்கிய பின்னூட்டத்தையும் இங்கு மீள இணைத்துள்ளேன்...

//வணக்கம் சசி,
உணர்வுகள் பொங்கிப் பிராவகிக்கும் போது சரியானதென தோன்றும் கருத்துகள் எல்லாம் சரியானதல்ல...ஆனாலும் உங்கள் கருத்துகள் பலவற்றில் நானும் உடன்படுகிறேன்.
உங்களைப்போலவே நானும் சிந்தித்த நேரத்தில் நான் பதிவெழுத முனையவில்லை, காரணம் அப்பதிவு நிச்சயம் சரியான விதத்தில் எமது போராட்டத்தினை முன்னெடுக்கும் மிகச்சொற்பமான மக்கள் நம்பிக்கைகளுக்கு "எதிர்மறையான" திசையில் பயணித்து அவர்கள் ஓர்மத்தினை மழுங்கடித்துவிடும் என்பதனாலேயே.

//ஆனால் இன்றைக்கு வன்னிக் காடுகளிலும், வவுனியா தடுப்பு முகாம்களிலும் தமிழர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் இன்னல்களுக்கு காரணம் விடுதலைப் புலிகளும் தான். //

நிச்சயம் ஒத்துக்கொள்கிறேன். காரணமாக நீங்கள் சொன்ன விடயமும் சரியானதே.

//எந்தப் போராட்டமும் ஒரு குறிப்பிட்ட இலக்கு வரை தான் இரணுவப் பாதையில் செல்ல முடியும். இராணுவப் பாதையில் பெற்ற வெற்றியை அரசியல் பாதைக்கு திருப்புவதே அந்தப் போராட்டத்தினை முழுமை அடைய வைக்கும்.//
அருமையாக கிடைத்த சந்தர்ப்பங்களையெல்லாம் தொலைத்ததன் பயனை இன்று அனுபவிக்கின்றோம். அதற்காக சிங்கள அரசு தமிழரிற்கு எல்லாம் தாம்பாளத்தில் வைத்து தரும் என்று சொல்லவில்லை. அரசியல் ரீதியாக அவர்களினை சர்வதேச நாடுகளின் முன் அம்பலப்படுத்தி எமது உரிமைப்போராட்டத்தினை ச்ர்வதேச அதரவுடன் தொடர்ந்திருக்கலாம். எனது அறிவுக்கெட்டியவரை ராணுவ ரீதியாக" விட்டுப்பிடிக்க" நினைத்ததை அரசியல் ரீதியாக விட்டுப் பிடித்திருக்கலாமோ??? என்றே என் மனம் அங்கலாய்க்கிறது.

//இந்தப் போரில் ஈடுபட்ட ஒவ்வொரு விடுதலைப் புலி வீரரையும் வியந்து பார்க்கிறேன்.//

100% உண்மையான கூற்று...தோல்வியின் விளிம்பில் நின்றுங்கூட அவர்களின் அடிபணிய மறுக்கும் நெஞ்சுரம்...
இந்த ஒன்று தான் இன்று வரை அரசுடன் சேர்ந்தியங்கும் முன்னாள் போராளிகளினை (??) நான் கேவலமாகப் பார்ப்பதன் காரணம். அதுமட்டுமல்ல இவர்கள் தமிழ்மக்களின் ஆதரவினை பெற முயற்சிக்காமல் "தங்களுக்கென" என ஒரு வட்டத்தினை போட்டுக்கொண்டு அதற்குள்ளிருந்து சிங்கியடித்தது தான். (மன்னிக்கோனும் எங்கோ போறன் போல இருக்கு...ஆனாலும் இதயும் மனசில வைக்கவேணும் என்டதால தான் )
சிங்கள அரச இயந்திரங்களை எதிர்த்து மண்டியிடாது போரிட்ட அனைவருமே என்னப்பொறுத்தவரை இலட்சிய வீரர்கள் தான். அவர்கள் கனவுகளுக்ககவும் போரில் அநியாயமாக இறந்த அப்பாவி மக்களுக்காகவும் மட்டுமே இன்றும் ஈழப்போரை ஆதரிக்கிறேன்....கைவிடுதலினை ஆதரிக்கவும் மனம் ஒப்புதில்லை.

போராட்டத்தின் போக்கைக் கூட களத்தில் இருக்கும் மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். தப்பியோடி வந்து பதிவெழுதுற நாமல்ல...என்பது என் தாழ்மையான எண்ணம்.

//விமர்சனம் என்பது தனிப்பட்ட விடுதலைப் புலிகளை அல்லாமல் அந்த அமைப்பின் தலைமையை நோக்கியே முன்வைக்கிறேன்.///

மிகவும் சரியாகச் சொன்னீர்கள்...அவர்கள் அணுகுமுறையில் மாற்றம் வேண்டும்...அரசியல் பலவீனம் தொடர்ந்தும் அவர்களை வேட்டையாடிக்கொண்டு வருகிறது.

// இனி ஈழப் போராட்டம் என்பது தனி நாட்டிற்கான போராட்டமாக இல்லாமல் மக்களின் அமைதியான வாழ்விற்கு வழி ஏற்படுத்தும் ஒரு அரசியல் போராட்டமாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.//

தனிஈழப் போராட்டத்தினை கூட அரசியல் ரீதியிலான போராட்டமாக மாற்றியமைக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
பி.கு: இதை வாசிக்கும் போதே தெரிந்திருக்கும் நான் ஒன்றும் புத்திஜீவியல்ல என்பது....சாதாரனமாக எனக்குத் தோன்றியதையே எழுதினேன்...

நன்றி. ////

 
At 11:53 AM, May 13, 2009, Blogger ராஜ நடராஜன் said...

ராணுவ பலத்துடன் அரசியல் முகமாகவும் ஈழக் கனவை முன்னெடுத்துச் செல்லாதது விமர்சனத்துக்குட்பட்டதே. ஆனாலும் இப்போதைய புதிய அரசியல் பரிணாமங்களை முன்னெடுத்துச் செல்வதில் மட்டுமே வெற்றிக்கான வழிகள் உள்ளது.

 
At 12:26 PM, May 13, 2009, Blogger aathirai said...

//இப்படிச் சொல்வதற்குப் பதிலாய் சர்வதேச சமூகத்தை, ஐ.நா சபையை, மனித உரிமை
அமைப்புகளைப் போர்ப் பகுதிக்குள் அனுமதித்து மக்களை அவர்கள் விடுதலைப்புலிகளின்
கட்டுப்பாட்டிலிருந்தாலும் மீட்டுக்கொண்டு வரச்சொல்லி முடிந்தவாறெல்லாம் நாமும்
வீதிகளில் இறங்கிப் போராடலாம். //

International community is not really brave. they can do aerial attacks very well. they are bad at ground wars (for example in iraq). especially,they cannot face tigers at all . they are only talking about post-conflict. not sure what they are waiting for.
right now, it is stale mate situation. how long can they keep the people in camps? they cannot eliminate the tigers without killing all the people. they are trying to break the willpower of the people by this shelling.

best option is to put pressur eo n both parties and bring them to the table.

it is so painful, one needs to think hard bfor taking weapons.

 
At 3:27 PM, May 13, 2009, Blogger பதி said...

மனதில் பட்டதை தெளிவாக சொன்னதிற்கு நன்றி... இந்தப் பதிவுடனும் வந்திருக்கும் சில பின்னூட்டங்களுடனும் உடன்படுகின்றேன்...

 
At 3:05 AM, May 14, 2009, Blogger Chellamuthu Kuppusamy said...

நல்லது செல்வநாயகி.

Please look at this as well.

http://karaiyoram.blogspot.com/2009/05/blog-post_13.html (போருக்குப் பிந்தைய அரசியல் தீர்வு)

 
At 6:33 AM, May 14, 2009, Blogger முத்துகுமரன் said...

//இப்போதும் என் வணக்கத்தைச் செலுத்தவே செய்கிறேன். ஏனெனில் அவர்கள்
இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிற போரில் மக்கள் மாண்டதற்குக் காரணம் மட்டுமல்ல,
கால் நூற்றாண்டாய் மக்களுக்காகவே மாண்டவர்கள். இப்போதும் மாண்டுகொண்டிருப்பவர்கள்.//

மிக மிகத் துல்லியமாக சொல்லியிருக்கிறீர்கள். எப்போதும் அவர்கள் வணக்கத்திற்குரியவர்களே. இழப்புகளைத் தாண்டி இன்றும் சரணடையாது போரிட்டுக்கொண்டிருக்கின்றனர். மரணமில்லா விடுதலை எங்கும் சாத்தியம் இல்லை. அதே போல் மனிதம் செத்துக்கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் நாம் மாறப்போவது என்னாளோ??

சசியின் பதிவிலிருக்கும் மாந்த நேயம் உயரியது, மாந்த நேயம் கூட என்று பகடைக்காய்களாக, ஆயுதங்களாக பிரயோகிக்கப்படும் சூழலிலே நாம் வாழ்ந்து வருகிறோம். உலக அளவில் கவனிப்புக்குரியதாகி இருக்கும் இப்போராட்டத்தின் நியாயங்களை வெளிக்கொணருவதோடு அம்மக்களின் கருத்தை அறியும் முயற்ச்சிக்கு உலகை நிர்பந்திக்க வேண்டியது நமது அவசியமான முக்கியக்கடமையாகும். அதே சமயம் இத்தகைய பேரழிவுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் காரணமாக இருக்கும், உலக நாடுகளை இவ்விடயத்தில் பங்கேற்க இயலாது தடுக்கும் திரைமறை வேலைகளில் ஈடுபடும் இந்திய தேசியத்தையும் அம்பலப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமானது. திமுக தாண்டியும், கருணாநிதியை தாண்டியும் நமக்கான தலைமையை நாம் உருவாக்க வேண்டிய தருணமிது.

 
At 11:46 AM, May 14, 2009, Blogger வெண்காட்டான் said...

anaivarukum poothuvaana kellvikal

makkal sakirarkal. poorattam vendam. makkaluku amaithi venum ithil evitha maatru karuthukalum kidayaahtu.
aanal
ippadithane 2003 samathanam vantha poothu arasaangathai yaarum sandai thodanga vendam endu kekkavillai.

ippothu niruthnaal tamilmakkaluku ella pirachanaiyum theerthu viduma

atleast sivarathiriyai public holiday aaka mudiyuma sinhalavanai nakki pilaikkum tamil talaivarkalal. mudiyaathu.
inge mukkiyamana ondai kavaniika vendum. samathaanm pesum athikamanavarkal emmaku ethiravaarkale. yaar yaar unmayaaka SL poorai aarambikkum poothu sandai pidikka vendam endu unmayaaka sonnarkalo avarkala nallavarkal.

india viduthalai poorattahil juliyan valabag kolai nadathavudan india viduthalai pooratam niruthapadavillai. ippadi niruthapadavenum ennpatharkakave ivvalavu kolaiyum nadakuthu.

 
At 9:43 PM, May 14, 2009, Blogger செல்வநாயகி said...

நண்பர்களின் கருத்துப் பகிர்வுக்கு நன்றி.

 
At 11:44 AM, June 08, 2009, Blogger Kavingan said...

தெளிவான பதிவு

நேசமித்ரன்

 
At 10:18 AM, July 17, 2009, Blogger தமிழ்நதி said...

"புலிகள் யாரும் புலிகளாகப் பிறந்தவர்களில்லை, ஆயிரமாயிரமாய் எம் மக்களே
புலியானார்கள், ஆக்கவும் பட்டார்கள். அவர்களில் இருக்கும் பிழைகளையும் தாண்டி நான்
அவர்களுக்கு இப்போதும் என் வணக்கத்தைச் செலுத்தவே செய்கிறேன். ஏனெனில் அவர்கள்
இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிற போரில் மக்கள் மாண்டதற்குக் காரணம் மட்டுமல்ல,
கால் நூற்றாண்டாய் மக்களுக்காகவே மாண்டவர்கள். இப்போதும் மாண்டுகொண்டிருப்பவர்கள்.""

இதைத்தான் நானும் சொல்லிக்கொண்டிருந்தேன் செல்வநாயகி. அவர்களது தவறுகளோடும் சேர்த்து அவர்களை ஏற்றுக்கொண்டாக வேண்டியிருந்தமைக்கு அவர்கள் செய்த தியாகங்கள்தான் காரணம் என்றேன். 'புலி'முத்திரை குத்தி, 'உலகம் உருண்டை'என்றாலும் மறுக்கிறார்கள் சிலர். என்னதான் செய்வது?

 
At 5:32 PM, July 17, 2009, Blogger செல்வநாயகி said...

தமிழ்,

வாங்க. இதை எழுதி ரெண்டு மாசத்துக்கும் மேல ஆச்சு இல்லையா? இதை எழுதி 4 நாட்கள்ல எல்லாமே முடிஞ்சுதுன்னு அல்லது முடிச்சிட்டோம்னு இலங்கை அரசு கொக்கரிக்க மனம் தன் நிலை இழந்துதான் போனது. அதற்குப் பிறகு செய்திகளை மட்டும் தவறாது படித்து வந்தாலும் ஈழ விடயத்தில் சொற்களைத் தொலைத்த சோகமே இருந்தது.

பின் மெது மெதுவாய்ப் பலரும் பல கோணத்தில் எழுதத் தொடங்கியதைப் படித்தே வருகிறேன். மதுரை கூடல் சங்கமத்தில் நீங்கள் கேட்ட கேள்வியில் தொடங்கி, இணையத்திலும் நீங்கள் தொடக்கிய விவாதங்கள் திசை மாற்றி, பாதை மாற்றி எங்கெங்கோ பயணித்து இதோ இன்றும் நீங்கள் ஒரு இடுகை எழுதச் சுழன்றுகொன்டே இருக்கிறது.

அத்தனையும் படித்தாலும் அதில் ஒன்றும் சொல்லமுடியாமலே இருந்தது. காரணம் இவ்விவாதங்களில் உங்களோடும் முதன்முறையாக நான் முரண்பட்டேன் தமிழ். உங்களின் சில அணுகுமுறைகள் கண்டு ஆதங்கமும் பட்டேன். அதைச் சொல்ல எத்தனிப்பதற்குள்ளாகவே அதன் தொடர்ச்சியாகவும் எவ்வளவோ பேசப்பட்டு விட்டன. நீங்களும் மற்றவர்களால் மோசமாகப் பாதிக்கப்பட்டீர்கள். அப்படியொரு நிலையில் நான் வலையுலகில் பார்த்ததிலிருந்து உங்களின் எழுத்துக்காகவும் அதையும் தாண்டி எதோ ஒரு உணர்விலும் நேசித்த, இப்போதும் நேசித்து வருகிற உங்களைச் சுட்டி நானும் எனது விமர்சனங்களை வைக்க மனது வரவில்லை. எனவே மௌனித்துப் போனேன்.

பார்க்கலாம் தமிழ். எனக்கும் உங்களுக்குமான நட்பு கருத்து முரண்களால் காவுகொள்ளப்பட்டு விடாது என்ற நம்பிக்கையை மூளை கொண்டிருந்தாலும், மனதும் அதுபோலவே தயாராகிற தருணத்தில் எழுதுவேன் அல்லது எழுதாமலும் இப்படியே இருந்துவிடுவேன்.

 

Post a Comment

<< Home