நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Saturday, June 20, 2009

சந்திப்புகளற்ற வருகை




நேற்று நீ வந்திருந்தாய்.
உன் முன்னே முழுக்க நானிருந்தும்
சுவற்றில், கதவுகளில்,
மேலே கூரையில் ஓடிக்கொண்டிருந்த சிலந்தியில்
நான் துடைக்க மறந்திருந்த பூச்சாடியில்
எதையோ தேடிக்கொண்டிருந்தாய்.

நீ ஒரு எழுத்துக்காரன்
பிரம்மா தேவதைப் பெண்களுக்கு
பொருத்தமான அவயங்கள் படைக்க எடுத்துக்கொள்ளும்
மெனக்கெடல்களைவிடவும் உன் படைப்புகளில்
சொற்களைச் செருக நீ பிரயத்தனப்படுவதாகவும்
அதனால்தான் உன் படைப்புகள் தேவதைகளைவிடவும்
வனப்புடையவையென்றும்
உன் துதிபாடி ஒருவன் எங்கோ ஒரு மேடையில்
எதையோ குடித்தவனாய் உளறிக்கொண்டிருந்தான்
என் எழுத்துக்களை என் மனம்திறந்து
எப்போதேனும் வாசித்திருக்கிறாயா நீ?
அல்லது எனக்கும் எழுதவரும் என்பதை யோசித்தாவது?

நீ பயனங்கள் போயிருந்த எனக்கான நாட்களில்
உலகம் சந்தித்த துக்கங்கள், மகிழ்ச்சிகள்
நானும் அறிந்தேன்தான் ஆனாலுமென்ன
ஆயிரம் மைல்கள் தாண்டிய உன் நண்பனோடே நீ விவாதி
பிறகு
"மனிதர்கள் கற்களாய் மிதிபட்டிருந்த பரப்பொன்றில்
அவன் ஒரு சிற்பியாய் சனித்திருந்தான்
கற்களுக்குள் சிற்பக்கனவுகள் குடிபுகுந்தன
சிற்பியை இழந்த பிறகோ
சிற்பங்களும் கற்களாகின"
கவிதையும் எழுதி எங்கேனும் பிரசுரிக்கப்பார்
அதைப்படித்தழுத கண்ணீரால் தன் விழிகள் சிவந்ததென
இன்னொருவன் வியந்தோதுவான் வீணாக்காதே
அதிலிருந்தும் மை எடுத்துக்கொள் மீண்டும் எழுத

பிள்ளைகளின் நலம் விசாரித்து
உண்டு உறங்கியாயிற்று
உட்காராதே தோய்த்த உடுப்பணிந்து உடனே கிளம்பு
கூட்டம் காத்திருக்கும்
உனக்கான பட்டமொன்றும்

கையசைத்து நீ வெளிக்கிளம்பிய பின்பே
வெளிப்பட முடியும்
ஒவ்வொருமுறை வீட்டிற்குவந்தும்
நீ சந்திக்காது விட்டுச்செல்கிற
என்னிலிருந்து நானும்

8 Comments:

At 1:16 AM, June 20, 2009, Blogger சென்ஷி said...

இன்னொரு கவிதை.. வெகு இயல்பாக வலியை ஏற்றுக்கொள்ளுதல், அதனுடன் வாழ்ந்து கொண்டாடுதல் இதெல்லாம் எல்லோருக்கும் பொருந்தும். பெண்கள் பார்வையில் இதை படிக்கும்போது அதிகம் நெருடுகிறது. சோகம் பெண்களுக்கு மாத்திரம்தான் இயல்பாய் சேர்ந்தும் சொந்தமாகியும் விடுகிறது என்று.

//"மனிதர்கள் கற்களாய் மிதிபட்டிருந்த பரப்பொன்றில்
அவன் ஒரு சிற்பியாய் சனித்திருந்தான்
கற்களுக்குள் சிற்பக்கனவுகள் குடிபுகுந்தன
சிற்பியை இழந்த பிறகோ
சிற்பங்களும் கற்களாகின"//

உங்கள் கவிதைகளில் மாத்திரம் கவித்துவத்தில் வலியை பிரித்து பார்க்க தெரியவில்லை! வரிகள் மனதை அழுத்தி நிற்கின்றது.

//கையசைத்து நீ வெளிக்கிளம்பிய பின்பே
வெளிப்பட முடியும்
ஒவ்வொருமுறை வீட்டிற்குவந்தும்
நீ சந்திக்காது விட்டுச்செல்கிற
என்னிலிருந்து நானும்//

கவிதையின் தலைப்பும், வரிகளும் அருமை!

 
At 1:33 AM, June 20, 2009, Blogger நந்தா said...

செல்வநாயகி கவிதையின் முழு வீச்சை உணர முடிகிண்றது.

மிக அருமையாய் வெளிப்படுத்தி இருக்கின்றீர்கள்.

 
At 2:04 AM, June 20, 2009, Blogger தமிழன்-கறுப்பி... said...

//நீ பயணங்கள் பேயிருந்த எனக்கான நாட்கள்//

எனக்கு நெருக்கமான வரிகள்..

\\
கையசைத்து நீ வெளிக்கிளம்பிய பின்பே
வெளிப்பட முடியும்
ஒவ்வொருமுறை வீட்டிற்குவந்தும்
நீ சந்திக்காது விட்டுச்செல்கிற
என்னிலிருந்து நானும்
\\

அழகான கோர்வை
உங்கள் குரலிலேயே வாசித்து கேட்க வேண்டும் போலிருக்கிறது இந்தக்கவிதையை..

 
At 9:20 AM, June 20, 2009, Blogger செல்வநாயகி said...

சென்ஷி,
இப்போதெல்லாம் என் பதிவுகளில் உங்களை அடிக்கடி சந்திக்க முடிகிறது:)) சென்ஷி என்றால் நகைச்சுவை(மட்டும்) என்றொரு பிம்பத்தை நான் உங்களுக்கு ஏற்படுத்தி வைத்திருந்து அது அண்மையில் உடைந்து சுக்குநூறாகிப் போனது. பைத்தியக்காரனின் பதிவில் சுந்தரின் கவிதை குறித்த விளக்கத்தில் நீங்கள் விவாதித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து நான் பயந்து ஓடிவந்துவிட்டேன்:)) உங்களின் அவ்விவாதம் மிக நன்றாக இருந்தது, அன்று நினைத்துக்கொண்டதை இன்று சொல்லிமுடித்துவிட்டேன்:))

நந்தா,
நீண்ட இடைவெளியின்பின் சந்திக்கிறோமா?

தமிழன் கறுப்பி,
என் குரலில்தானே? கேட்கலாம்தான். ஆனால் என்ன பிரச்சினை என்றால் இந்தத் தொழில்நுட்பங்களினுடனான சித்துவிளையாட்டுக்களுக்கெல்லாம் வந்துசேராமல் நான் இன்னும் கற்காலத்தில் இருக்கிறேன். கற்றுக்கொள்வது சாத்தியமெனினும் ஆர்வமின்மையே என்னை அப்படி வைத்திருக்கிறது, பார்க்கலாம்.

கவிதை குறித்தான கருத்துக்களுக்கு நன்றி மூவருக்கும்.

 
At 8:14 AM, June 24, 2009, Blogger பதி said...

தலைப்பும் அதற்கான வரிகளும் அருமை... :)

ஆனால், சென்ஷியின்
//சோகம் பெண்களுக்கு மாத்திரம்தான் இயல்பாய் சேர்ந்தும் சொந்தமாகியும் விடுகிறது//

வரிகளை ஏற்றுக்கொள்ள மாட்டேன்...

இதுபோன்ற சந்திப்புகளற்ற வருகை ஆண்களுக்கும் வாய்க்கின்றது....

 
At 4:51 PM, June 25, 2009, Blogger செல்வநாயகி said...

பதி,
நன்றி.

 
At 2:25 PM, June 29, 2009, Blogger நேசமித்ரன் said...

எவ்வளவு வழியை சுமந்திருக்கின்றன உங்கள் சொற்கள்..

கைவிடப்படுதலும் புறக்கணிப்பும் பொதுதான் இருபாலருக்கும்

நேர்ந்துகொண்டுதான் இருக்கிறது சகோதரி..!

 
At 3:59 AM, March 20, 2010, Blogger இரசிகை said...

m.........nallaayirukku!

 

Post a Comment

<< Home