நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Monday, June 22, 2009

மயானம்

அந்த பூமி பளிங்கு போல் சுத்தமாகிவிடவில்லை
ஆனால் இங்கிருந்த பெரிய குப்பைத்தொட்டிகளின் தேவை அங்கு குறைந்திருந்தன
சிந்திக்கிடந்த இரத்தங்களிலிருந்து இனிய மணம் கமழ்ந்துகொண்டிருந்தது

இங்கத்தைய வாசனைதிரவியங்களும் அவற்றின் வியாபாரங்களும்
பார்க்கக்கிடைக்கவில்லை என்றாலும்
அந்தச் சுடுகாட்டில் செடிகள் பூத்துக்குலுங்கின
உண்மையின் கானம் ஒலித்துக்கொண்டிருந்தது
அன்பானவர்கள் உள்ளம் உருக்கி முத்தமிட்டுக்கொண்டார்கள்

அங்கங்கு கத்திகள், ஈட்டிகள், கொடும்வாள்கள்
இறைந்து கிடந்தன
அவற்றிலிருந்து இங்கில்லாத அதிசயமாய் இரக்கம் கசிந்துகொண்டிருந்தது
வீழந்துகிடந்த பிணங்கள் எதுவும் மறைக்கப்படவில்லை
பாதுகாக்கப்படவில்லை, அவை அழுகவுமில்லை
தங்கள் மரணத்தின் மகிழ்ச்சியை அவை
கொண்டாடுவதாகத் தோன்றின
பெண்ணை வரைந்துகொண்டிருந்த தூரிகை ஒன்றுகூட
அவள் கண்களிலிருந்து ஒளியை உமிழ்ந்துகொண்டிருந்தது


நான் கடவுள்கள் மட்டும் கொலைசெய்யப்பட்ட பூமிக்குப் போய்வந்தேன்.

0 Comments:

Post a Comment

<< Home